pallavankavithai02

pallavankavithai02
பல்லவன் கவிதை 02
தன் மாளிகைக்கு வந்தது முதல் மகேந்திர பல்லவன் மிகவும் குழப்பத்தில் இருந்தான். தனது அறையில் குறுக்கும் நெடுக்குமாக நடந்த வண்ணமே இருந்தான். பரிவாதனியைப் பற்றிய அவன் கணிப்புகள் அனைத்தும் அவனுக்கு விசித்திரமாகவே இருந்தன.
“பல்லவ குமாரா! அழைத்திருந்தீர்களா?” சட்டென்று நடையை நிறுத்திய மகேந்திரன் அறை வாசலை நோக்கினான். பல்லவ சாம்ராஜ்யத்தின் முதல் மந்திரி நின்றிருந்தார்.
“வாருங்கள் அமைச்சரே! அமருங்கள்.”
“இருக்கட்டும் இளவரசே. நீங்கள் என்னை அழைத்த காரியம்…” முதல் மந்திரி நேரடியாக பல்லவ இளவலைக் கேள்வி கேட்க முடியாமல் தயங்கினார்.
“மந்திரியாரே! ஒவ்வொரு ராஜ்ஜியத்திற்கும் அவர்களுக்கே உரித்தான முத்திரை மோதிரங்கள் இருக்கின்றதல்லவா?”
“ஆமாம் இளவரசே.”
“அதில் ‘கனக புஷ்பராகம்’ எந்த ராஜ்ஜியத்தைச் சேர்ந்தது?” முதல் மந்திரி சிறிது நேரம் யோசித்தார்.
“அந்த மஞ்சள் நிற கல் வாதாபிக்கும் வேங்கிக்கும் பொதுவானது பல்லவ குமாரா.”
“என்ன? வாதாபிக்கும் வேங்கிக்குமா?”
“ஆமாம். ஆரம்பத்தில் வாதாபி மன்னர் குல பொக்கிஷத்தில் இருந்த கனக புஷ்பராக ஆபரணங்கள் காலப்போக்கில் வேங்கி நாட்டு அரச குலத்திற்கும் சொந்தமாகி போனது.”
“அது எப்படி முதலமைச்சரே?”
“வாதாபி புலிகேசியும் வேங்கி நாட்டு விஷ்ணுவர்த்தனனும் சகோதரர்கள் அல்லவா. அதனால் அவர்களுக்குள் எந்த பிணக்கும் ஏற்படவில்லை. முத்திரை மோதிரங்கள் பரஸ்பரம் இருவருக்கும் சொந்தமானது. வாதாபி ஒற்றர்கள் வேறு வேங்கி நாட்டு ஒற்றர்கள் வேறு என்று இப்போது இல்லை இளவரசே.”
“ஓஹோ!” மகேந்திரன் சிந்தனை முகத்தோடு மீண்டும் நடைப் பயில ஆரம்பிக்க முதல் மந்திரி முகத்தில் ஆச்சரிய ரேகைப் படர்ந்தது.
“இந்த விளக்கத்திற்கு இப்போது என்ன அவசரம் இளவரசே? நான் அதை அறிந்துகொள்ளலாமா?”
“உங்களிடம் சொல்வதில் என்ன இருக்கிறது அமைச்சரே. எனக்குத் தெரிந்த ஒருவரிடம் இன்று கனக புஷ்பராக கல் பதித்த மோதிரம் ஒன்றைப் பார்த்தேன். ஆனால் அவர்கள் கிட்டத்தட்ட பதினெட்டு ஆண்டுகளாக காஞ்சியில்தான் வசிக்கிறார்கள்.”
“அப்படியா? ஆச்சரியமாக இருக்கிறதே?”
“எனக்கும் அதுதான் ஒன்றும் புரியவில்லை அமைச்சரே.”
“சந்தேகமே வேண்டாம் பல்லவ குமாரா. அவர்களுக்கும் வாதாபி, வேங்கி அரச குலத்திற்கும் ஏதோவொரு சம்பந்தம் இருக்கிறது.”
“அப்படியா சொல்கிறீர்கள்? இது உறுதியான தகவல்தானே அமைச்சரே?”
“சந்தேகமே இல்லை இளவரசே. யார் அவர்கள்?”
“சொல்வதற்கு எனக்கு அனுமதியில்லை அமைச்சரே. என்னை மன்னியுங்கள்.”
“அதனாலென்ன பல்லவ குமாரா பாதகமில்லை. நான் விடைபெறுகிறேன்.”
“நன்றி அமைச்சரே போய் வாருங்கள்.”
முதலமைச்சர் போனபின்பு மகேந்திர வர்மன் தன் பஞ்சணையில் சாய்ந்து கொண்டான். அவன் சிந்தனை முழுவதையும் பரிவாதனியே ஆட்சி புரிந்து கொண்டிருந்தாள். இன்று அவனுக்கெதிராக அமர்ந்துகொண்டு வீணையை மீட்டிய அந்த சுந்தரி ராஜகுல பெண்ணா?
அப்படியென்றால் ஏனிப்படி தன்னந்தனியாக தன் தந்தையோடு வசிக்கிறாள்? உபாத்தியாயரிற்கும் அவளுக்கும் என்ன சம்பந்தம்? அவள் ராஜ்ஜியம் எது? அந்த ராஜ்ஜியத்தில் அவள் ஸ்தானம் என்ன?
இப்படி ஏதேதோ கேள்விகள் வண்டென குடைய கண்களை லேசாக மூடினான் பல்லவ இளவல். ஆனால் முதலமைச்சர் அப்படி ஆசுவாசமாக அமர்ந்து விடவில்லை. நேராக மகாராஜாவைச் சந்திக்க சென்றார்.
“பல்லவேந்திரா!”
“வாரும் முதலமைச்சரே. ஏதும் முக்கியமான பணியா?” சிம்ம விஷ்ணு மகாராஜாவை அவர் அந்தரங்க அறையில்தான் சந்தித்தார் முதலமைச்சர்.
“ஆமாம் மகாராஜா.”
“என்ன அமைச்சரே, ஏன் உமது முகத்தில் இத்தனைக் குழப்பம் தெரிகிறது?”
“பல்லவேந்திரா, இளவரசர் என்னை இன்று அழைத்திருந்தார்.”
“ஏதாவது ராஜ்ஜீய விவகாரமா?”
“இல்லை அரசே. கனக புஷ்பராக கல்லைப் பற்றி விசாரித்தார்.” முதலமைச்சர் சொல்லி முடித்தபோது மகாராஜாவின் முகத்தில் பலத்த சிந்தனைத் தெரிந்தது.
“ஏனென்று விசாரித்தீரா?”
“கேட்டேன். தனக்குத் தெரிந்தவர்களிடம் அந்த கல் பதித்த மோதிரம் இருப்பதாக சொன்னார்.”
“அது யாராம்?”
“அதைச் சொல்ல மறுத்துவிட்டார்.”
“உமக்கு ஏதாவது சந்தேகம் இருக்கிறதா?”
“இருக்கிறது பல்லவேந்திரா. சம்பந்தப்பட்டவர் யாரென்று சொல்லவில்லையே தவிர் அவர்கள் பதினெட்டு ஆண்டுகளாக காஞ்சியில் வசிப்பதாக இளவரசர் குறிப்பிட்டார்.”
“என்ன?” இதைக் கேட்ட போது சிம்மவிஷ்ணு மகாராஜா தனது ஆசனத்திலிருந்து எழுந்து விட்டார். முகத்தில் குழப்பம் மிதமிஞ்சி கிடந்தது.
“அமைச்சரே! இளவரசன் மேல் ஒரு கண் இருக்கட்டும். அடிகளாரையும் நான் எச்சரித்ததாக சேதி அனுப்புங்கள்.”
“ஆகட்டும் பிரபு.” முதலமைச்சர் நகர்ந்த பிற்பாடும் பல்லவ சக்கரவர்த்தியின் முகத்தில் குழப்பம் குறையவில்லை. பழைய நினைவுகள் ஏதேதோ அவர் சிந்தையில் வந்து முட்டி மோதின.
இத்தனை ஆண்டுகள் இல்லாத புது குழப்பம் இப்போது எங்கிருந்து வந்து முளைத்தது! அதுவும் இதற்கெல்லாம் முழு காரணம் தன் மகன்.
மகேந்திரனிற்கு ஏதாவது தெரிந்திருக்குமா? இந்த அடிகளார் இப்படி முட்டாள் போல வேலை பார்ப்பார் என்று தெரிந்திருந்தால் முன்னமே எச்சரித்து வைத்திருக்கலாம். வீணை மேல் தீராத ஆர்வம் கொண்ட தனது மகன் அந்த பெண்ணை நாதக்கூடத்தில்தான் சந்தித்திருக்க வேண்டும். பஞ்சையும் நெருப்பையும் யாராவது பக்கத்தில் வைப்பார்களா? அடிகளாருக்குத்தான் அறிவில்லை என்றால் இந்த உபாத்தியாயர் என்ன பண்ணுகிறார்? மகேந்திரனை எத்தனைத் தூரம் என்னால் கட்டுப்படுத்த முடியும்? தலையைப் பிடித்தபடி அமர்ந்துவிட்டார் சிம்மவிஷ்ணு மகாராஜா.
அத்தனைக் குழப்பங்களுக்கும் மூலகாரணமான மகேந்திர பல்லவன் இரவின் முதலாம் ஜாம முடிவில் தனது புரவியில் ஆரோகணித்த படி நகருக்குள் வலம் வந்து கொண்டிருந்தான்.
இன்றைக்கு முழுவதும் அவனைச் சுற்றி ஒற்றர்கள் நடமாட்டம் இருப்பதை அவன் கண்கள் கவனிக்க தவறவில்லை. தான் முதன் மந்திரியிடம் பேசியது தனது தந்தையின் காது வரைப் போய்விட்டது என்று பல்லவ இளவலுக்கு நன்றாக புரிந்தது. இருந்தாலும் பரிவாதனியைப் பார்க்காமல் அவனால் இருக்க முடியாது.
இவர்கள் கண்களில் மண்ணைத் தூவி விட்டு எப்படியாவது நந்தவனத்து கோவிலுக்குப் போக வேண்டும். இன்று அந்த அப்சரஸை எப்படியாவது சந்தித்து அவன் மனதில் இருப்பதைக் கொட்டிவிட வேண்டும்.
அப்பப்பா! அவளைப் பார்த்தது முதல் இந்த ஒரு வாரமும் அவனது மனது எத்தனை வேதனைப்பட்டு விட்டது. ஒருபுறம் காதல் சுகமான நினைவுகளை மனதில் விதைத்தது என்றால் இன்னொரு புறம் எத்தனை சுமையை உள்ளத்தில் ஏற்றி விடுகிறது!
மகேந்திர வர்மன் காஞ்சி மாநகரின் வணிகர் வீதியில் தன் புரவியைச் செலுத்தினான். முதலாம் ஜாம முடிவிலும் அல்லங்காடி கோலாகலமாக இயங்கி கொண்டிருந்தது. பூக்கடைகள் ஒரு புறம் வாலிப வட்டங்களால் முற்றுகை இடப்பட்டிருந்தது. தங்கள் மனைவியருக்கும் காதலியருக்கும் வகை வகையாக பூக்களை வாலிபர்கள் வாங்கிய வண்ணம் அளவளாவி கொண்டிருந்தார்கள்.
பொன்னும் பவளமும் குவிக்கப்பட்டிருந்த கடைகளில் பெண்கள் தங்களுக்குப் பிடித்தவற்றைத் தெரிவுசெய்து கொண்டிருந்தார்கள். ஆடை அணிகலன்கள் ஒரு புறமும் பாத்திரங்கள் இன்னொரு புறமுமாக கடைகளை நிரப்பி இருந்தன.
அந்த கடைகளுக்கு நடுவில் சென்ற சிறு வீதியில் தனது புரவியை ஓட்டிய மகேந்திரன் ஒரு சிறு வீட்டின் முன்பாக வந்து நின்று,
“முத்தைய்யா” என்று குரல் கொடுத்தான். சற்று நேரத்திற்கெல்லாம் மத்திய வயதிலிருந்த ஒரு மனிதர் ஓட்டமும் நடையுமாக வெளியே வந்தார்.
“வாருங்கள் எசமான்.”
“என்ன முத்தைய்யா, நலமாக இருக்கிறாயா?”
“உங்கள் தயவு இருக்கும் போது எனக்கென்ன குறைச்சல் எசமான்?”
“சரி சரி, புரவியைப் பிடி.” முத்தைய்யனின் கைகளில் குதிரையை ஒப்படைத்த இளவரசன் அந்த சிறிய வீட்டிற்குள் நுழைந்தான்.
“ஏதாவது புது பொருட்கள் வாங்கினாயா?”
“ஆமாம் எசமான். உள்ளே சென்று பாருங்கள்.” முத்தைய்யன் சொல்வதற்கு முன்பாகவே கோடியில் இருந்த அந்த அறைக்குள் நுழைந்தான் மகேந்திரன்.
மாறுவேடம் போடுவதற்கான பல பொருட்கள் அந்த அறையில் காணப்பட்டன. அவற்றில் புதிதாக இருந்த ஒன்றிரண்டு பொருட்களைப் பார்வையிட்ட பல்லவ இளவல் முகத்தில் திருப்தி தெரிந்தது.
“நல்லது முத்தைய்யா. பின் வாசல் வழியைத் திறந்து வை. புரவி உன் பொறுப்பிலேயே இருக்கட்டும். நான் இரண்டாம் ஜாமம் முடிவதற்கு முன்பாக வந்துவிடுவேன்.”
“சரி எசமான்.”
“தேரின் சக்கரத்தைச் சரிபார்த்து விட்டாயா?”
“இன்னும் இல்லை எசமான். வேலை நடந்துகொண்டிருக்கிறது.”
“நல்லது. யாராவது நான் இங்கு எதற்காக வந்தேன் என்று கேட்டால் தேரைப் பற்றி விசாரித்ததாக கூறு.”
“ஆகட்டும் எசமான்.” முத்தைய்யன் நகர்ந்த பிறகு அங்கிருந்த நீண்ட தாடியையும் மீசையையும் முகத்தில் ஒட்டிக்கொண்டு தலையில் பெரிய தலைப்பாகையையும் அணிந்துகொண்டான் இளவரசன். தோளில் ஒரு மூட்டையையும் மாட்டிக்கொண்டான். பார்ப்பதற்கு அசல் வணிகன் போலவே இருந்த அவன் தோற்றம் அவனிற்கு திருப்தியாக இருக்கவும் தேரோட்டியின் வீட்டு பின் வாசல் வழியாக வீதிக்கு வந்தான்.
அங்கிருந்து பரிவாதனியின் மாளிகை அதிக தூரம் இல்லை என்பதால் கால்நடையாகவே வந்த இளவல் ஒற்றர்கள் யாரும் தன்னைப் பின் தொடரவில்லை என்று உறுதிப்படுத்திக்கொண்டு அந்த அடர்ந்த நந்தவனத்திற்குள் புகுந்தான்.
மாளிகை புழக்கத்தில் இருந்ததால் நந்தவனம் நல்ல பராமரிப்பிலேயே இருந்தது. மரங்கள் செறிந்து காணப்பட்டாலும் சீராக பேணப்படுகிறது என்று பார்த்தாலே புரிந்தது.
உபாத்தியாயருக்கு இவ்வளவு பெரிய நந்தவனத்தைப் பராமரிக்க சக்தி இருக்காது. அரச பொறுப்பிலேயே இந்த நந்தவனம் பராமரிக்கப்பட வேண்டும் என்று மகேந்திரன் பார்த்த மாத்திரத்திலேயே புரிந்து கொண்டான்.
நந்தவனத்தின் நடுப்பகுதியில் சின்னதாக ஒரு கோவில் இருந்தது. கோவிலில் பரிவாதனி நிற்பது தெரியவும் விரைவாக அங்கே போனான் மகேந்திரன். கூடவே ஒரு பெண்ணும் நின்றிருந்தாள்.
“பவளம் வாங்கலையோ அம்மா பவளம்.” அந்த குரலில் பெண்கள் இருவரும் திடுக்கிட்டு திரும்பினார்கள்.
“ஏனப்பா, உனக்கு அறிவேதும் இருக்கிறதா? முதலாம் ஜாமம் முடியப்போகிறது. இப்போது வந்து அதுவும் நந்தவனத்தில் இருக்கும் இந்த கோவிலில் வந்து பவளம் விற்கிறாயே. உனக்கு அல்லங்காடிக்கு வழி தெரியாதா?” பரிவாதனிக்கு பக்கத்தில் நின்றிருந்த பெண் சிடு சிடுவென்று பேசினாள்.
“அம்மா, அருமையான பவளம் இருக்கிறது.” மீண்டும் வந்த அந்த வணிகனின் குரலில் பெண் கோபமுற்று எதையோ பேச விழைய பரிவாதனி அவளைத் தடுத்தாள்.
“மகிழினி, கொஞ்சம் பொறு.” சொல்லிவிட்டு பெண் வணிகனின் முகத்தை ஊன்றி கவனிக்க பல்லவன் முகத்தில் இளநகைப் பூத்தது. தோழியின் கண்களைத் தொடர்ந்த மகிழினிக்கும் விஷயம் புரிந்துவிட தலையை லேசாக பல்லவ இளவரசனை நோக்கி குனிந்தாள்.
“இந்தாப்பா, அம்மா பவளம் வாங்க போறாங்களாம். அந்த மாளிகைக்கு வந்து சேர்.” உத்தரவிட்டவள் கோவிலில் ஏற்றியிருந்த விளக்கில் ஒற்றைத் திரியை மட்டும் விட்டுவிட்டு மற்றைய அனைத்தையும் அணைத்து விட்டாள். சுற்றுமுற்றும் அவள் கண்கள் ஒரு முறை வலம் வந்தது.
திரியின் மெல்லிய வெளிச்சத்தில் மகிழினி முன்னே நடந்துவிட பரிவாதனி அங்கிருந்த மரத்திற்குப் பக்கத்தில் போய் நின்று கொண்டாள். மகேந்திரன் அவள் பக்கத்தில் வந்து நின்றான்.
“அவள் என் தோழி மகிழினி. கோவிலுக்குப் போவதாக அப்பாவிடம் பொய் சொல்லிவிட்டு வந்திருக்கிறேன்.” அவள் குரலில் அத்தனைத் தயக்கம்.
“பொய்யில்லையே பரிவாதனி. நீ கோவிலுக்குத்தானே வந்திருக்கிறாய்?”
“வெளிப்பார்வைக்கு அது உண்மையாக இருக்கலாம். ஆனால் என் மனதில் என்ன இருக்கிறது என்று எனக்கு நன்றாகவே தெரியும்.”
“நீ யார் பரிவாதனி?” சட்டென்று பல்லவ இளவல் வீசிய கேள்வியில் பரிவாதனி குழம்பிப்போனாள்.
“நான் யாரென்று அன்றே அடிகளார் உங்களிடம் சொன்னாரே. நீங்கள் கவனிக்கவில்லையா?”
“அது ஊருக்காக சொல்லும் விபரம். நீ உண்மையைச் சொல்.” இளவரசன் குரலில் உறுதி இருந்தது.
“உண்மையா? என்ன உண்மை?”
“நீ யாரென்னும் உண்மை.”
“எனக்கு நீங்கள் சொல்வது எதுவும் புரியவில்லை இளவரசே.” அவள் முகத்தைப் பார்த்த போது பல்லவ இளவலுக்கும் சந்தேகம் தோன்றியது. இவளுக்கு எதுவும் தெரியாதா?
“உபாத்தியாயர் உன் உண்மையான தந்தையா இல்லை… வளர்ப்பு தந்தையா?” அந்த ஒற்றைக் கேள்வி அவளைப் பலமாக தாக்கி இருக்க வேண்டும். கிளையைப் பிடித்திருந்த அவள் கை நிதானமிழக்க சற்றே தடுமாறினாள் பெண்.
“பரிவாதனி!” இளவரசன் அவள் உதவிக்கு வரப்போக சட்டென்று விலகியது பெண்.
“பல்லவ குமாரா! சிறு வயதிலேயே தாயை இழந்தவள் நான். எனக்கிருக்கும் ஒரே சொந்தம் என் தந்தை மட்டுந்தான். அவரையும் என்னிடமிருந்து பிரிக்க நீங்கள் ஏதேதோ சூழ்ச்சி செய்கிறீர்கள். இவற்றை எல்லாம் தாங்கும் சக்தி என்னிடமில்லை. தயவு செய்து போய் விடுங்கள்.” அழுகைக் குரலில் சொன்னவளைப் பரிவோடு பார்த்தான் பல்லவ இளவல்.
“பரிவாதனி, என்னைப் பார். உனக்கு இந்த மகேந்திரன் தீங்கு நினைப்பானா? உன்னால் அப்படி நினைக்க முடிகிறதா?”
“நீங்கள் பேசும் பேச்சிற்கு வேறு என்ன அர்த்தம் இருக்க முடியும் இளவரசே? பதினெட்டு வயது வரை என்னைப் பேணி பாதுகாத்து வளர்த்த தந்தையை வளர்ப்பு தந்தையா என்று கேட்கிறீர்களே, இது நியாயமா?” அவள் கண்களில் இப்போது கண்ணீர் துளிர்த்தது.
கிளையைப் பற்றியிருந்த அவள் கரத்தைத் தொட்டு அதை லேசாக தட்டிக்கொடுத்தான் மகேந்திரன். பெண் கையை விலக்கிக்கொள்ளவில்லை. மகேந்திரன் முகத்தில் சந்தோஷ சாயல் படர்ந்தது.
“இன்றைக்கு ஒரு மோதிரம் நீ அணிந்திருந்தாயே, அதில் நிறைய விஷயங்கள் மறைந்திருக்கின்றன பரிவாதனி.”
“இளவரசே! வேண்டாம். நீங்கள் அது சம்பந்தமாக என்னிடம் எதுவும் பேச வேண்டாம். நான் எதையும் இழக்க தயாராக இல்லை.” தன் தந்தை அந்த பேழையைத் தன்னிடம் கொடுத்ததிலிருந்து அவளுக்குள்ளேயும் நிறைய கேள்விகள் எழுந்திருந்தன. இப்போது இளவரசனின் பேச்சும் அதை ஊர்ஜிதப்படுத்துவது போல இருந்தது.
மகேந்திரன் முகத்தில் இப்போது யோசனைப் படர்ந்தது. இந்த சிறு பெண்ணை நாம் தேவையில்லாமல் குழப்புகின்றோமா என்றும் அவனுக்குச் சந்தேகமாக இருந்தது. அவள் தோள்களை உரிமையோடு தொட்டு தன் புறமாக திருப்பினான்.
“சரி, நான் அது விடயமாக எதுவும் பேசவில்லை பரிவாதனி. நம்மைப்பற்றி பேசலாமா?”
“நம்மைப்பற்றியா? நம்மைப்பற்றி பேச என்ன இருக்கிறது?” பெண்ணின் அந்த கேள்வியில் மகேந்திரன் மனதிற்குள் சிரித்துக்கொண்டான்.
உலகமே அறியாமல் பதினெட்டு வருடங்கள் வளர்ந்துவிட்டு ஒரு வாரத்திற்கு முன்பாக பார்த்த வாலிபனைத் தோள் தொடவும் அனுமதித்து விட்டு நம்மைப்பற்றி பேச என்ன இருக்கிறது என்று கேட்கும் இவளை என்ன செய்வது?!
“எதுவுமே இல்லையா பரிவாதனி?”
“இளவரசே!”
“அது நாட்டிற்கு, நாட்டு மக்களிற்கு.”
“நானும் இந்த நாட்டு பெண்தானே?”
“நீ இந்த நாட்டிற்கு மட்டும் பெண்ணல்ல, என் இதய வீட்டிற்கும் நீதான் பெண்.”
“மன்னவா!”
“உன் ஆழ்மனது உண்மையை ஒத்துக்கொண்டு விட்டது பார்த்தாயா?” அவன் பேச்சில் அவள் திகைத்துப்போனாள்.
“நான் இப்போது மன்னனில்லையே பரிவாதனி. ஆனாலும் உன் இதயத்திற்கு நான்தானே மன்னவன். அதை எந்த தயக்கமும் இல்லாமல் உன் மனது சொல்லிவிட்டதே.”
“…………..” அவள் பேச தெரியாமல் மௌனியாகிவிட்டாள். மகேந்திரன் முகத்தில் இப்போது கனிவு தோன்றியது.
“உன்னை இன்று நான் மிகவும் சோதித்து விட்டேனா பரிவாதனி? என்றைக்கு முதன்முதலாக நாதக்கூடத்தில் வீணையோடு உன்னை நான் பார்த்தேனோ அன்று முதல் நீக்கமற என் நெஞ்சில் நிறைந்து விட்டவள் நீ.” உணர்ச்சி பொங்க சொன்னவன் அவள் அருகில் இன்னும் நெருங்கி வந்தான்.
அவன் அன்று கொடுத்த நவரத்தின மாலையை யாரும் அறியா வண்ணம் சேலைத் தலைப்பிற்குள் மறைத்து அணிந்திருந்தது பெண். அதை ஒற்றை விரல் நீட்டி வெளியே இழுத்தான் மகேந்திர வர்மன்.
“நன்றாக நினைவில் வை பரிவாதனி. பல்லவ சாம்ராஜ்யத்தின் எந்த மூலையில் நீ இருந்தாலும், எந்த இக்கட்டான சூழ்நிலையில் இருந்தாலும் இந்த மாலையைக் காட்டும் பட்சத்தில் அது உன்னை என்னிடம் கொண்டுவந்து சேர்க்கும். மகேந்திர பல்லவனின் மாளிகைக் கதவுகள் எந்த தாமதமும் இன்றி உனக்காக திறக்கும்.” சொல்லி முடித்தவன் தன் தோளிலிருந்த மூட்டையை அவிழ்த்து அவள் கைகளில் கொடுத்தான். பெண் அவனைக் கேள்வியாக பார்த்தது.
“பல்லவ நாட்டின் விலையுயர்ந்த பவளங்கள் இதிலிருக்கின்றன பரிவாதனி. நாளை நீ என் பட்டமகிஷியாக ஆகும்போது இவற்றையெல்லாம் ஆபரணமாக தொடுத்து அணியலாம். உன் காதலன் மகேந்திரன் கொடுத்த பவளங்களை உன் கணவன் மகேந்திரனிடம் காட்டி நீ கதை பேசலாம் பரிவாதனி.”
அவன் வார்த்தைகளில் திக்பிரமைப் பிடித்தது போல நின்றிருந்தது பெண். மகேந்திரனே மீண்டும் தொடர்ந்தான்.
“அடிக்கடி இதுபோல பல வேஷங்களில் உன் மாளிகை வாசல் தேடி வருவேன். இந்த ஏழையை விரட்டிவிடாதே பரிவாதனி.”
“மன்னவா! இந்த நாட்டின் இளவரசர் நீங்கள்.” அவள் கண்களிலிருந்து கண்ணீர் பெருகியது. அவள் தனக்காக வடிக்கும் கண்ணீர் முத்துக்கள் தான் கொடுத்த பவளங்களை விட விலையுயர்ந்தது என்று புரிந்துகொண்டான் பல்லவ இளவல்.
***
அதே இரவின் முதல் ஜாம முடிவில் முதன் மந்திரி நாதக்கூடத்தினுள் அவசரமாக நுழைந்தார். அடிகளாரின் முகத்தில் சொல்லொண்ணா வியப்பு அந்த மனிதரை அங்கே அந்த நேரத்தில் காணவும் ஏற்பட்டது.
“வாருங்கள் முதலமைச்சரே!”
“அடிகளாரே, உமக்கு எதுக்கு இந்த வேண்டாத வேலை?” உள்ளே நுழைந்த முதன் மந்திரியின் முகத்தில் கோபத்தின் சாயல் நிறையவே தெரிந்தது.
“எதைச் சொல்கிறீர்கள் அமைச்சரே? நாதக்கூடத்தை நான் நடத்துவதில் நீங்கள் என்ன தவறு கண்டுவிட்டீர்கள்?”
“நாதக்கூடத்தை நீர் நடத்துவது தவறல்ல. ஆனால் சிவனே என்று மாளிகையில் இருந்த பெண்ணை நாதக்கூடத்திற்கு வரவழைத்திருக்கிறீரே அதுதான் தவறு.”
“ஓ… யாரைச் சொல்கிறீர்கள்? பரிவாதனியையா?” இப்போது அடிகள் முகத்தில் புன்னகை அரும்பியது.
“இதில் சிரிப்பதற்கு என்ன இருக்கிறது?” மந்திரியின் முகம் கடுகடுத்தது.
“மந்திரியாரே, அது சாதாரண பெண் அல்ல. கலைவாணி! அவள் திறமையைக் குடத்திலிட்ட தீபம் போல ஆக்கிவிட கூடாது.”
“அடிகளாரே, ராஜ்ஜிய காரணங்களுக்காக பல குடும்பங்கள் தங்கள் வாழ்க்கையைத் தியாகம் செய்த கதை உமக்குத் தெரியாதா?”
“ஏன் தெரியாது? நன்றாகவே தெரியும். அதற்கும் இதற்கும் என்ன சம்பந்தம் மந்திரியாரே?”
“சம்பந்தம் இதுவரை இருக்கவில்லை. ஆனால் இனிமேல் உருவாகி விடுமோ என்று மகாராஜா கவலைப்படுகிறார்.”
“என்ன? மகாராஜா கவலைப்படுகிறாரா? மந்திரியாரே, நீங்கள் என்ன சொல்கிறீர்கள்?”
“இன்றைக்கு இளவரசர் என்னை அவர் மாளிகைக்கு அழைத்திருந்தார்.”
“ஓ… ஏதாவது அரச விவகாரமா?”
“இல்லை.”
“வேறு என்ன?”
“கனக புஷ்பராகம் கல் பதித்த மோதிரம் எந்த நாட்டின் முத்திரை மோதிரம் என்று என்னிடம் விசாரித்தார்.”
“கெட்டது குடி! நீர் என்ன சொன்னீர்?”
“உண்மையைச் சொன்னேன்.”
“பிறகு?”
“உங்களுக்கு எதுக்கிந்த தகவல் என்று கேட்டேன்?”
“அதற்கென்ன சொன்னார்?”
“எனக்குத் தெரிந்தவர் ஒருவரிடம் இந்த கல் பதித்த மோதிரம் இருக்கிறது. ஆனால் அவர்கள் கடந்த பதினெட்டு வருடமாக காஞ்சியில்தான் வசிக்கிறார்கள் என்று சொன்னார்.” இதைக் கேட்டபோது அடிகளாரின் முகத்தில் ஈயாடவில்லை.
“என்ன அடிகளே, வயது சரியாக இருக்கிறதா?”
“இருக்கிறது மந்திரியாரே.”
“ம்… மகாராஜாவிடம் விஷயத்தைச் சொன்னேன். அடிகளை எச்சரியுங்கள் என்று சொன்னார், செய்துவிட்டேன். நேரமாகிறது… நான் வருகிறேன் அடிகளே.” முதல் மந்திரி விடைபெற்று கொள்ள தலையை ஆட்டினார் சுந்தரமூர்த்தி அடிகள். பேச அவருக்கு நா எழவில்லை.
இதனால் எத்தனைப் பெரிய குழப்பங்கள் ஏற்பட போகின்றன. பரிவாதனியின் பிறப்பு ரகசியம் வெளியே தெரிந்தால் அது அவள் உயிரிற்கே ஆபத்து அல்லவா? அடிகளார் தொப்பென்று அங்கிருந்த ஆசனத்தில் அமர்ந்துவிட்டார்.
‘அந்த குழந்தையின் வாழ்க்கையில் விதி இப்படியெல்லாமா விளையாட வேண்டும்?!’ எண்ணங்கள் எங்கெங்கோ சஞ்சரிக்க அமைதியாக அமர்ந்திருந்தார் அடிகளார்.