Ninaivenispthamaai-4

NN_Pic-9de309ab

Ninaivenispthamaai-4

  • Renuka
  • October 24, 2020
  • 0 comments

நினைவே நிசப்தமாய்  – 4

நிஷா கைகள் நடுங்க அந்த பெட்டியை திறந்தாள். மிகுந்த வேலைப்பாட்டுடன் ஒரு கத்தி இருந்தது. அந்த கத்தியின் ஓரத்தில் ஈரமான ரத்தம். அந்த உதிரத்தின் ஈரத்தில், அவளை மீறி அவள் குரல்வளை அந்த சத்தத்தை எழுப்பியது.

அந்த கத்தியின் கீழே, ஒரு காகிதம். நிஷா, அவசரமாக அதை பிரித்து படிக்க ஆரம்பித்தாள்.

“காவல்துறையிடம் செல்லாமல், வேறு எங்கும் விஷயத்தை வெளியே தெரிவிக்காமல் இருந்தால் உன் கணவன் திரும்பி வருவான்”

மிரட்டல் வரி கொண்டு தட்டச்சு செய்யப்பட்ட காகிதம்.

 ‘அருண் உயிருக்கு இப்பொழுது ஆபத்து இல்லை’ அவள் மனம் இயந்திரம் போல் சிந்திக்க ஆரம்பித்தது. உணர்வுகளை ஒதுக்கி.

அந்த காகிதத்தை பார்த்தபடி, எழுத்து வடிவத்தை கூட வெளியிட விரும்பாத அவன் செயலை மனதில் குறித்து கொண்டாள் நிஷா.

கைகள் நடுங்க அந்த கத்தியை எடுத்து பார்த்தாள். அவள் இதயத்துடிப்பு எகிறியது.

‘எதுக்கு இந்த கத்தி?’ அவள் கைகளில் பிடித்து கொண்டு சிந்திக்கையில் அது பேசியது.

“நான் சொல்வது போல் நீ நடக்கவில்லை என்றால் உன் கணவனின் உயிருக்கு ஆபத்து” அந்த குரல். ஒரு ஆணின் குரல்.

அவள் கைகள் இன்னும் நடுங்கியது.  கத்தியை கீழே தவறவிட்டாள். கத்தி அதன் பேச்சை நிறுத்தி கொண்டது.

கைகள் நடுங்க, நிஷா மீண்டும் கத்தியை கையில் எடுக்க கத்தி மீண்டும் பேச தொடங்கியது.

“உயிரை எடுப்பது என்  நோக்கமில்லை. ஆனால், உன் கணவன் தேவை இல்லாமல் புலி வாலை பிடித்து விட்டான். சில விஷயங்களை நான் தீர்க்கும் வரையில் அவன் என் கட்டுப்பாட்டில் தான் இருப்பான். நான் சொல்வதை போல் நீ நடந்து கொண்டால் உன் கணவனின் உயிருக்கு ஆபத்து இருக்காது. பேசும் இந்த கத்தியை அமைதி காக்க செய்வதும், அதன் கூர்மையை சோதித்து பார்ப்பதும் உன் கையில் தான்”

கத்தி அதற்கு மேல் பேசவில்லை.

நிஷா அதை கீழே வைத்துவிட்டு மீண்டும் கைகளில் எடுத்தாள்.

இதுவரை பேசியதை மட்டுமே அது திரும்ப திரும்ப பேசியது.

‘அருண் உயிருக்கு எந்த ஆபத்தும் இல்லை.’ ஏனோ அவள் மனம் சற்று முன் இருந்த பதட்டத்தை மறைத்து கொண்டு நல்ல விதமாக சிந்தித்து கொண்டது.

‘ஆனால், நான் இந்த கத்தி சொல்வதை கேட்டுக்கொண்டு அமைதியாக இருக்க வேண்டுமா?’

‘என் அருணை நான் காப்பாற்ற வேண்டாமா? ஆனால், எப்படி?’ அவள் சிந்தனை வேகமாக ஓடியது.

அந்த கத்தியின் கூர்மையை தொட்டு பார்த்தாள்.

அவள் தொட்ட நொடியில் அவள் விரலில் ரத்தம் கசிந்தது.

‘அங்கு இருக்கும் ரத்த கரை தன் கணவனோடதோ?’ நிஷாவின் மனம் வருந்தியது.

அந்த கத்தி, ஒவ்வொரு முறையும் அவள் தொடுகையில் எச்சரிக்கை போல் பேசி கொண்டு தான் இருந்தது.

‘ஸ்பீக்கர் பொருத்தப்பட்டது போல், நான் பேசுவதை கேட்பதற்கும் கத்திக்குள் எதுவும் பொறுத்தப்பட்டிருக்குமோ?’ அவளுள் ஐயம்.

‘நான் வீட்டில் வைத்து எதுவும் பேசக்கூடாது. அருணை கண்டுபிடிக்கும் ஒரே துருப்பு சிட்டு இந்த கத்தி தான்.’ சிந்தனையோடு அதை எடுத்து கழுவி வீட்டின் ஓரத்தில் வைத்து கொண்டாள் நிஷா.

அருண் உயிருக்கு ஆபத்து இல்லை என்ற எண்ணம் நிஷாவை நிதானிக்க செய்தது.

மெத்தையில் அமர்ந்து கொண்டு சிந்திக்க ஆரம்பித்தாள் நிஷா.

எண்ணங்கள் அவளை ஆக்ரமிக்க ஆரம்பித்து. அவள் இடையை ஒரு கை தழுவியது.

அந்த தொடுகையில் அவள் ஸ்பரிசம் புத்துணர்ச்சி பெற்றது. அவன் சுவாசக்காற்று அவள் கழுத்தை தீண்ட, அவள் முகம் வெட்கத்தில் சிவந்தது.

‘நிஷா… நீ அழகு’ அவன் கூற அவள் தேகமெங்கும், இன்பத்தில் திழைத்தது.

‘உன் அளவுக்கு நான் படிக்கலை’ அவள் வருத்தப்பட, ‘உன் பொறுமை, நிதானம் எல்லாம் எனக்கு வருமா?’ அவன் அவளை சிலாகித்து கொண்டே, அவள் இதழ்களை தனதாக்கினான்.

அவள் விலகி கொண்டு, ‘உண்மையில் நான் நிதானமா?’ அவள் கேட்க, ‘படிப்பு என்ன படிப்பு. நீ நிதானம் தான். என் பொண்டாட்டி புத்திசாலி. தைரியசாலி…’ அவன் புகழ்ந்து கொண்டே அவன் உரிமையோடு எல்லை மீற…

அந்த நினைப்பிலிருந்து தன்னை மீட்டுக்கொண்டாள் நிஷா.

அவள் கண்களில் இரு துளி கண்ணீர். ‘அருண்… அருண்…’ அவள் மனம் அரற்றியது.

“நான் நிதானம். நான் தைரியசாலி. நான் புத்திசாலி. அருண் சொல்லிருக்கான்.” தனக்கு தானே மெல்லமாக முணுமுணுத்து கொண்டாள்.

‘சத்தமாக பேச கூடாது. வீட்டில் கத்தி இருக்கு. அதில் என்ன இருக்கோ?’ சுதாரித்து கொண்டாள்.

‘அன்னைக்கு ஏன் அருண் என்னை படம் பார்க்க சொன்னான்?’ அவன் கூறிய வார்த்தைகளை அசை போட ஆரம்பித்தாள்.

இன்றைய நிதானம் அவளை சிந்திக்க வைத்தது.

‘பயப்படாத, உனக்கு பிடிச்ச படத்தை பாரு. எல்லாம் சரியாகும்’

‘பிடிச்ச படம்… அங்கு தான் விஷயம் இருக்கோ?’

‘எங்க ரெண்டு பேருக்கும் பிடித்த படம், விஜய் படம்.’ அவள் அவன் பொருட்களை தேட ஆரம்பித்தாள்.

‘விஜய்… இந்த பெயரில் அருணுக்கு நண்பர்கள் கிடையாதே.’ அவன் அலைபேசி, மடிக்கணினி எங்கும் தேடினாள். எந்த வழியும் கிடைக்கவில்லை.

‘விஜய்…’ இவன் யார் இவனை தேடி தான் நான் அலைய வேண்டும்.

‘அருணுக்கு நெருங்கிய நண்பர்களை நான் சந்திக்க வேண்டும். எதையும் சந்தேகம் வராமல் செய்ய வேண்டும்.’

‘’விஜய்…’ அவள் மனம் உருப்போட்டு கொண்டது. சத்தமாக பேசவும் பயந்து கொண்டு!

***

அதே நேரம், பழ உருவம் கொண்ட ராட்ச முகமூடியை வைத்து முகத்தை கொண்டு, “ப்பா…” என்று கத்தினான் அவன்.

“க்ளுக்… க்ளுக்…” என்று குலுங்கி குலுங்கி இரண்டு சிரித்தது குழந்தை.

“மிருதுளா குட்டிக்கு பயமே இல்லியா?”  முகமூடியை தூக்கி எறிந்துவிட்டு குழந்தையை தூக்கி கொஞ்சினான் அவன்.

“சித்தா… சித்தா…” குழந்தையின் மழலை குரல்.

“சித்தா, சொல்ல கூடாது. சித்தப்பா சொல்லு” அவன் குழந்தைக்கு கற்று கொடுத்தான்.

“சித்தா…” மீண்டும் குழந்தை தவறாகவே கூறியது.

அவன் குழந்தையை கொஞ்சி கொண்டிருக்கையில் கோபமாக வெளியே வந்தாள் பூஜா.

“அண்ணி…” அவன் மென்மையாக அழைத்தான்.

“ஏன் அண்ணி இத்தனை கோபம்?” அவன் கேட்க, “உனக்கு தெரியாதா விஜய்? உங்க அண்ணன் எப்படி இருந்தார்? இப்ப பாரு… ஏதோ சொல்லா வராரு. ஆனால், பாதியில் நிறுத்திடுறாரு. கத்தி, ருசி… இதை தவிர வேற எதுவும் சொல்றதில்லை” கண்ணீர் உகுத்தாள் பூஜா.

விஜயின் கண்கள் மேஜையில் மேல் இருக்கும் கத்தியை தொட்டு தழுவியது. அத்தனை வேலைப்பாடு மிகுந்த அழகிய கத்தி.

“அண்ணி, அண்ணாவுக்கு சரியாகிரும்” விஜய் கத்தியை பார்த்தபடியே கூற, “எனக்கு என்னவோ அப்படி தோணலை. நீயும் ரொம்ப நாளா இதை தான் சொல்ற. டாக்டர்ஸ் கூட கையை விரிச்சிட்டாங்க” அவள் விசும்ப அவன் நெற்றியில் சுருக்கங்கள்.

“எப்படி புத்திசாலியா இருந்த மனுஷன் உங்க அண்ணன். எனக்கு இப்படி பார்க்கவே கஷ்டமா இருக்கு” பூஜாவிடம் இப்பொழுது புலம்பல்.

அப்பொழுது விஜயின் அலைபேசி ஒலித்தது. அதில் மின்னிய பெயரை பார்த்தான் விஜய். “ரவீந்தர்…” அவன் மெல்லமாக உச்சரித்து கொண்டான்.

“பாஸ்…” விஜய் அழைக்க, “விஜய், இன்னைக்கு வேலை ஜாஸ்தி. உங்கிட்ட வேலை வாங்கறதுக்குள்ள எனக்கு போதும் போதுமுன்னு இருக்கு. ஏதோ உங்க அண்ணன் முகத்துக்காக உன்னை வேலையில் வச்சிருக்கேன்” ரவீந்திரனின் குரலில் எரிச்சல்.

“பாஸ்… பாஸ்…. இனி சரியா சூப்பரா செய்வேன்” விஜயின் குரலில் கெஞ்சல்.

“சரி… சரி… சீக்கிரம் ஆபிஸ்க்கு வா” அவன் குரலில் மிரட்டல்.

அலைபேசியை வைத்துவிட்டு கீழே குனிந்து பார்த்தான் ரவீந்தர். அந்த பங்களாவை அவன் கண்கள் நோட்டமிட்டது. எங்கும் வேலைப்பாடு நிறைந்திருந்து. அவன் கண்களில் பெருமிதம்.

அவன் பூட்ஸில் தூசி.

“ஏய்” என்று சொடக்கிட்டான். ஒரு பணியாள் ஓடிவர, அவன் கால்களை நீட்டினான் . அந்த பணியாள் அவன் பூட்ஸை துடைக்க, “ம்… ம்…” என்று உறுமினான் அவன்.

பணியாள் எழுந்து கொள்ள, “இதை முன்னாடியே செய்ய முடியாதா?” ரவீந்தரின் கைகள் பணியாளின் கன்னத்தை பதம் பார்த்தது.

அவன் செயல்களை இரு கண்கள் நோட்டமிட்டது.

ரவீந்தர், விஜய் இருவரும் அலுவலகம் செல்ல தயாராக ஆரம்பித்தனர். அப்பொழுது, இருவரின் வீட்டிலும் செய்தி ஒளிபரப்பாகியது.

“மித்திலா என்னும் இளம் பெண்ணை நிச்சல் குளத்தில் காணவில்லை. அந்த பெண் உயிருடன் இருக்கிறாளா இல்லை ஏதேனும் அசம்பாவிதம் நடைபெற்றுவிட்டதா? என்று காவல் துறையினர் விசாரித்து கொண்டு இருக்கின்றனர்” அந்த செய்தியில் இருவரின் கைகளில் உள்ள அலைபேசியும் நழுவி கீழே விழுந்தது.

 தொடரும்…

 

Leave a Reply

error: Content is protected !!