ninaivenisapthamai-5

ninaivenisapthamai-5
நினைவே நிசப்தமாய் – 5
‘மித்திலா…’ இந்த பெயரில், விஜய், ரவீந்தர் இருவர் முகத்திலும் வியர்வை துளிகள்.
பல கேள்விகள் மனதில் அலைமோதியது.
‘எப்படி விஷயம் கசிந்தது?’ முதல் கேள்வி துள்ளி வெளியே வந்து விழுந்தது.
அடுத்து அடுக்கடுக்கான கேள்விகள்.
‘அவளுக்குன்னு யாரும் இருக்காங்களோ?’ அடுத்த கேள்வி.
‘ஒருவேளை அருண் தப்பித்திருப்பானோ?’ அடுத்த கேள்வி.
‘மித்திலாவின் அப்பா விஷயம் பொய்யோ? அவர் குணமாகி விட்டாரோ?’ அடுத்த கேள்வி.
‘வாய்ப்பில்லை.’ அவர்கள் மனம் உறுதியாக நம்பியது.
***
மித்திலா அடைக்கப்பட்டு வைத்திருந்த இடம். சற்று அடர்ந்த காடு போல் ஓர் இடம். பல ராட்ச மரங்கள் சூழப்பட்ட தனியாக ஒரு வீடு.
கதவு திறந்து கிடந்தது. திறந்த கிடந்த கதவு உடனே அவன் முகத்தில் அச்சத்தை ஒட்ட வைத்தது.
அவன் படபடவென்று உள்ளே நுழைந்தான். அறை காலியாக இருந்தது. அவன் முகம் இன்னும் பதட்டம் கலந்த அச்சம் ஏறிக்கொண்டது. அவன் நெற்றியில் வியர்வை துளிகள்.
“எங்க போயிருப்பா?” அவன் கால்களை எட்டி உதைத்தான்.
அந்த கதவு வேகமாக அசைந்து படாரென்று சுவரில் இடித்து கொண்டு பயங்கரமான சத்தத்தை எழுப்பியது.
“மித்திலா…” அவன் கர்ஜித்தான். எந்த பயனும் இல்லை. அந்த வீட்டை சுற்றி ஓடினான். அவள் சென்றதற்கான எந்த அடையாளமும் இல்லை.
தலையை கோதி கொண்டான். ஒரு நொடி, அவன் முகம் வார்த்தைகளால் வடிக்க முடியாத உணர்ச்சியை காட்டியது. அது என்ன பாவனை என்று யாராலும் கணிக்க முடியாத பாவனையாக அமைந்தது.
அதன் பின் வண்டியை எடுத்து கொண்டு அவன் அலுவலகம் நோக்கி சென்றான்.
அலுவலகத்திற்கு சென்ற அவன் கன்னத்தில் ஒரு கை பளார் என்று இறங்கியது.
“உனக்கு ஒரு சாமர்த்தியம் கூட கிடையாது. உங்க அண்ணனுக்கு இருக்கிற அறிவு உனக்கு கொஞ்சமும் கிடையாது. எல்லா விஷயத்திலும் நீ பேக்கு மாதிரி இருக்க” அறைந்தவனின் குரல் கர்ஜனையாக வெளி வர, அறை வாங்கியவன் தன் முகத்தில் பூத்த வெற்றி புன்னகையை மர்மமாக மறைத்து கொண்டான்.
* * *
நிஷா, தன் வீட்டில் குறுக்கும் நெடுக்கும் நடந்து கொண்டிருந்தாள். அந்த வேலைப்பாடு கொண்ட கத்தியை எடுத்து பார்த்தாள். இவள் தொட்டதும், அது பேசியது.
இப்பொழுது, நிஷாவின் கவனம் அந்த கத்தியின் பேச்சில் இல்லை. ‘இதுல எங்கையாவது கேமரா இருக்கா?’ அவள் கத்தியை நோட்டமிட்டாள்.
அதிலிருந்த வேலைப்பாடுகளை, கூர்மையாக ஆராய்ந்து பார்த்தாள்.
‘ஒன்னும் புரியவில்லை.’ அவள் மனம் அலுத்து கொண்டது, அவள் அறிய போகும் உண்மை அறியாமல்.
அருணின் அனைத்து பொருட்களையும் தேடி தேடி பார்த்தாள். பெரிதாக ஒன்றும் கிடைக்கவில்லை.
‘அருண் நண்பர்கள் வீட்டுக்கு இயல்பு போல் போவோம்.’ நிஷாவின் மனம் கணக்கிட்டு கொண்டது.
‘விஜய் என்ற பெயர் மட்டுமே ஒரே ஒளி’ என்பது போல் நிஷாவின் பயணம் அந்த பெயரை தேடி ஆரம்பித்தது.
பல வீடுகளுக்கு சென்றாள் நிஷா. சில வீடுகளில் வரவேற்பு இருந்தது பயன் இல்லை. சில வீடுகளில், வரவேற்பும் இல்லை. பயனும் இல்லை.
‘கார்த்திக்…’ நிஷாவின் பெயர் பட்டியலில் அடுத்த பெயர். சற்று சலிப்பாகவே உணர்ந்தாள் நிஷா.
‘அருணை கண்டுபிடிக்க நான் ஏதாவது செய்ய வேண்டும். ஒரு கத்தியின் பேச்சை நம்பிக்கொண்டு நான் மௌனம் காப்பதா?’ நிஷா தன் வண்டியை கார்த்திக் வீட்டை நோக்கி செலுத்தினாள்.
‘நல்ல வேளை, அருண் எல்லார் விலாசமும் வச்சிருக்கான். எதுக்கு வச்சிருந்தானோ? இது போல் நிலைமை வரும்னு நினைச்சிருப்பானா? ஏன் அருண் என்கிட்டே சொல்லலை?’ நிஷாவின் மனதில் வாட்டம்.
அவள் காரை கார்த்திக்கின் வீட்டின் முன் நிறுத்தினாள். அப்பொழுது ஒரு குடும்பம், அவசரமாக காரில் கிளம்ப தயாராகி கொண்டிருந்தது.
குடும்பம் என்றால், ஒரு ஆண், ஒரு பெண், ஒரு சிறு குழந்தை. அவ்விளவு தான்.
நிஷா, சட்டென்று அவர்களை அளவிட ஆர்மபித்தாள். ‘காரில் அமர்ந்திருப்பவன் தான் கார்த்திக். அருண் அலைபேசியில் உள்ள ப்ரொபைல் பிக் இல், நான் பார்த்த குடும்பம் இது தான்’ நிஷா மூளை வேகவேகமாக கணக்கிட ஆரம்பித்தது.
‘இவங்களுக்கு ஒரு வேளை விஜய்ன்னு யாரையாவது தெரியுமா? இப்ப எங்க கிளம்புறாங்க, அவசரமா? இப்ப நாம ஏதாவது கேட்டா பதில் சொல்லுவாங்களா?’ நிஷாவிடம் ஏமாற்றம் கலந்த யோசனை.
நிஷா, அவர்களை நெருங்க எத்தனிக்கையில், உள்ளே இருந்து வாட்டசாட்டமாக ஒரு இளைஞன் வர நிஷா சற்று ஒதுங்கி நிற்க, “விஜய், நாங்க அவசியம் போகணுமா?” பூஜா சத்தமாக கேட்டு கொண்டே, விஜயை நெருங்கினாள்.
“ஆமா, அண்ணி. நீங்க அம்மா, அப்பா இருக்கிற இடத்துக்கு போய்டுங்க. இங்க இப்ப இருக்கிறது நல்லதில்லை. எல்லாம் சீக்கிரம் சரியாகிரும். நான் சரி பண்ணுவேன்” அவன் நம்பிக்கை கூறி அனுப்பினான்.
நிஷாவால், அவர்கள் பேசுவதை கேட்க முடியவில்லை.
ஆனால், ‘விஜய்…’ என்ற பூஜாவின் அழைப்பு நிஷாவின் காதில் தெளிவாக விழுந்தது.
‘விஜய்…’ என்ற அந்த பெயர் அவளுக்கு சற்று ஆசுவாசத்தை கொடுத்தது.
‘இந்த விஜய் தானா?’ என்ற சந்தேகம் எழுந்தாலும், நிஷா அதை ஒதுக்கிவிட்டு கடலில் கிடைக்கும் கட்டையை பிடித்து கொண்டு நீந்தி உயிர் தப்பிக்க நினைப்பவன் போல் நிஷாவும் நம்பிக்கையை வளர்த்து கொண்டாள்.
விஜய் அந்த குடும்பத்தை கிளப்ப முயற்சிப்பதை அவளால் கணித்து கொள்ள முடிந்தது.
‘அந்த குடும்பம் கிளம்பட்டும். நமக்கு தேவை விஜய் தான்.’ நிஷா பொறுமை காத்தாள்.
அவர்கள் சில நிமிடங்களில் கிளம்ப, விஜய் உள்ளே செல்ல எத்தனிக்க, “விஜய்…” அழைத்துக் கொண்டு அவன் பின்னே நின்றாள் நிஷா.
விஜயின் கண்களில் அத்தனை பதட்டம்.
வேகமாக உள்ளே செல்ல, அவளும் அவனை பின் தொடர்ந்தாள்.
நிஷா வீட்டிற்குள் சென்றதும், விஜய் “பாடார்…” என்று கதவை அடைத்தான்.
நிஷா அந்த வீட்டில் கண்ட காட்சியில் திக் பிரமை பிடித்தவள் போல் நின்றாள்.
வேகமாக, அங்கிருந்து தெரிந்த மேஜை அருகே ஓடினாள். அந்த கத்தி. வேலைப்பாடு நிறைந்த கத்தி, அவள் அதை கைகளில் எடுத்து பார்த்தாள். அவள் கைகள் நடுங்கியது. இந்த கத்தி பேசவில்லை. ஆனால், விஜய் பேசினான்.
“நீங்க ஏன் இங்க வந்தீங்க?” அதே குரலில். நிஷா, கண்கள் தெறிக்க அவனை பார்த்தாள்.
‘அதே கத்தி… அதே குரல்…’ நிஷாவிற்கு ஒரு பக்கம் பயப்பந்து உருண்டது. ஆனால், மாற்றொரு பக்கம், அவள் மனம், ‘நான் அருணை ஏதோ ஒரு விதத்தில் நெருங்குகிறேன்.’ என அமைதி கொண்டது.
“நீங்க ஏன் இங்க வந்தீங்க?” விஜயிடம் மீண்டும் அதே கேள்வி.
“அதை நீ தான் சொல்லணும்? என் அருண் எங்கே?” அவள் கத்தியை அவன் கழுத்தருகே வைத்து கொண்டு அவன் சட்டையை பிடித்திருந்தாள் நிஷா.
நிஷாவின் இந்த தாக்குதலை விஜய் எதிர்பாக்கவில்லை. அவன் சிறிது அசைந்தாலும், நிஷா கைகளில் இருக்கும் கத்தி அவனை பதம் பார்க்க வாய்ப்பிருக்கிறது.
நிஷாவின் கைகள் கத்தியை பிடித்திருந்தாலும், அவள் கைகள் நடுங்கியது.
அவள் தைரியத்தை அவன் கணக்கிட்டு கொண்டான். ‘கைநடுங்கினாலும், உணர்ச்சிவசப்பட்டு என்ன பண்ணவும் வாய்ப்பிருக்கு. நாம ஜாக்கிரதையா இருக்கனும்’ விஜய் ஆழமான மூச்செடுத்து தன்னை நிதானித்து கொண்டான்.
“கத்தியை எடுங்க” அவன் நிதானமாக கூறினான். நிஷா மறுப்பாக தலை அசைத்தாள்.
“இப்படி எல்லாம் நீங்க செஞ்சா, உங்க புருஷன் உங்க கிட்ட வர மாட்டான்” விஜயின் குரல் இப்பொழுது மிரட்டலை கையில் எடுத்து கொண்டது.
அந்த மிரட்டலில், நிஷாவின் கைகள் தானாக இறங்கியது.
“அப்ப, என் அருண் உன் கிட்ட தான் இருக்கானா? அன்னைக்கு ஹோட்டலில் என் அருணை அர்ரெஸ்ட் பண்ணிட்டு போனது நீ தானா?” நிஷா கண்ணீர் மல்க கேட்டாள்.
விஜய் முன் மண்டியிட்டு, “என் அருணை விட்டரு. நாங்க எங்கயாவது போயிடுறோம்.” நிஷா கண்ணீர் விட்டு கதறினாள்.
அவன் நிஷாவுக்கு தண்ணீரை நீட்டினான். நிஷா, தண்ணீரை வாங்கவில்லை.
“அருண் சொல்லி தானே நீங்க இங்க வந்திருக்கீங்க?” விஜய் கேட்க, “அருண் உன்னை நம்பி ஏமாந்துட்டான்” நிஷா கோபமாக கத்தினாள்.
“இல்லை, சிஸ்டர். அருண் எங்க இருக்காங்கன்னு எனக்கு தெரியாது. ஆனால், நிச்சயம் பத்திரமாக இருப்பாங்க” அவன் குரலில் இருந்த உண்மையில் நிஷா அவன் யோசனையாக பார்த்தாள்.
விஜயை அளவிடும் விதமாக பார்த்தாள். நிஷாவால், அவனை தவறாக எண்ண முடியவில்லை.
‘முகத்தை வைத்து மட்டும் முடிவுக்கு வர முடியுமா?’ அவளுள் குழப்பம்.
“நான் நிச்சயம் அருணை உங்க கிட்ட கூட்டிட்டு வருவேன். நீங்க கிளம்புங்க சிஸ்டர். என்னை தேடி வராதீங்க. நீங்க இங்க வந்தா, எல்லாருக்கும் ஆபத்து” அவன் எச்சரிக்க, நிஷா வேறு வழியின்றி அங்கிருந்து கிளம்பினாள்.
நிஷா கிளம்புகையில், அவளிடம் ரகசியமாக ஏதையோ கூறிவிட்டு கிளம்பும்படி கூறினான் விஜய்.
நிஷா, படபடவென்று கிளம்பினாள்.
நிஷாவை அனுப்பிவிட்டு, அவன் கதவை மூட வீட்டிற்குள் இருள் கவ்வி இருந்தது.
அவன் வீட்டை பூட்டிவிட்டு, ‘இருந்த பதட்டத்தில் நான் லைட் கூட ஆன் பண்ணலை…’ எண்ணியபடி அவன் திரும்ப, அங்கு தெரிந்த உருவத்தில் அவன் குலை நடுங்கி மூச்சு வர திணறியது.
அவனின் அச்சத்தை அதிகரிப்பது போல், “கல கல…” என்று சிரிப்பு சத்தம் அந்த வீடெங்கும் எதிரொலித்தது.
ஒவ்வொரு முறை எதிரொலித்த அந்த சிரிப்பு சத்தத்திற்கும், அவன் நெற்றியில் வியர்வை துளிகள்.
‘இவள் எப்படி இங்கு வந்தாள்?’ அவன் கண்கள் அவளின் உருவத்தில் நிலை குத்தி நின்றது.
தொடரும்…