Malar – 12

Malar – 12
அத்தியாயம் – 12
அவள் அமைதியாக இருப்பதை விநோதமாக பார்த்த ஜமுனா, “என்ன அண்ணி எதுவும் பேசாமல் அமைதியாக இருக்கீங்க?” என்றாள்.
அவளின் குரலில் இருந்து தன்னை மீட்டுக்கொண்டு நிமிர்ந்த செவ்வந்தி, “என்ன கேட்ட ஜமுனா?” என்று புரியாமல் கேட்டாள். அதில் இருந்தே அவர் மனம் ஒருநிலையில் இல்லை என்ற உண்மையை உணர்ந்து கொண்டாள்.
“உங்களுக்கு உடம்பு சரியில்லையான்னு அண்ணா பார்த்துட்டு வர சொன்னான் அண்ணி” அவள் பேச்சை மாற்றினாள். இந்த அக்கறையான பேச்சில் அவளின் மனம் நெகிழவே செய்தது.
ஆனால் இதெல்லாம் நிரந்தரம் கிடையாது என்ற நிதர்சனம் புரிந்த காரணத்தினால், “ம்ஹும் ஆமா ஜமுனா. லேசாக காய்ச்சல், தலைவலி இருக்கு. கொஞ்சம் ரெஸ்ட் எடுத்தால் நல்ல இருக்கும்” சோர்வுடன் கூறியவள் காபி டம்லாரை எடுத்துசென்று ஜிக்கில் போட்டுவிட்டு வந்து படுக்கையில் அமர்ந்தாள்.
அதே நேரத்தில், “அண்ணா கடையில் இருந்து பதட்டமாக போன் பண்ணும்போதே உங்களுக்கு உடம்பு சரியில்லையோ என்று நினைச்சேன். இப்போ பாருங்க நான் நினைத்தது சரியாகப் போச்சு” என்றவள் கையோடு கொண்டு வந்திருந்த சாப்பாட்டை வேறு பாத்திரங்களில் மாற்றி வைத்தாள்.
“இதென்ன சாப்பாடு எல்லாம் எடுத்துட்டு வந்திருக்கிற? ஏன் ஜமுனா உன் அண்ணி என்ன குழந்தை என்ற நினைப்பா உனக்கு? நான் சாப்பாடு செய்து சாப்பிட மாட்டேனா என்ன?” என்றவள் இயல்பாக கேட்டபோதும் ஜமுனாவின் அந்த பாசம் மனதை சந்தோசப்படுத்தியது.
தன் மனதில் சூழ்ந்திருந்த வெறுமை விடைபெற்று செல்ல, “ஆமா நீங்க காய்ச்சலில் எழுந்து சாப்பாடு செய்து சாப்பிட்டாலும் பொழுது விடிஞ்சிடும். ஏன் அண்ணி உடம்பு சரியில்ல என்றால் ஒரு வார்த்தை போன் பண்ணி சொன்னால் தான் என்ன? தனியாக கஷ்டப்பட்டு இருக்கீங்க.. ஆமா உங்க அப்பாவும், அம்மாவும் எங்கே இருக்காங்க” என்ற கேள்வியுடன் திரும்பி செவ்வந்தியைப் பார்த்தாள்.
தன் உதட்டைக் கடித்து உணர்வுகளை அடுக்கிய செவ்வந்தி, “இனிமேல் போன் பண்றேன்” சம்மந்தமே இல்லாத ஒரு பதிலை சொல்லும்போதே அவளின் தவிப்பை புரிந்துகொண்டு சின்னவள் மௌனமாகிவிட்டாள்.
சற்றுநேரம் அங்கே அமைதி நிலவியது..
செவ்வந்திக்கு மீண்டும் தூக்கம் கண்ணை சுழற்றிடவே, “ஜமுனா எனக்கு தூக்கம் வருதுடா” என்றவள் படுக்கையில் படுத்ததும் உறங்கிவிட்டாள். அவள் தூங்குவதற்கு எதுவாக மின் விசிறியை சுழலவிட்டு வெளியே வந்த ஜமுனா மீண்டும் தமையனுக்கு அழைத்து விவரம் சொன்னாள்.
மதிய நேரம் என்பதால் கடையில் ஆள் நடமாட்டம் குறைவாக இருக்கும் என்ற காரணத்தினால் உடனே கிளம்பிச் செவ்வந்தியின் வீட்டிற்கு சென்றான்.
அங்கே வாசலில் நின்றிருந்த தங்கையைப் பார்த்தும், “அவங்களுக்கு ரொம்பவே முடியலையா செல்லம்மா?” என்று கவலையோடு கேட்டபடி வண்டியை நிறுத்திவிட்டு இறங்கினான்.
“ஆமா அண்ணா நான் வந்துதான் அவங்களை எழுப்பிவிட்டேன். இப்போ திரும்ப தூக்கம் வருதுன்னு சொல்லி தூங்கிட்டாங்க” என்றாள் ஜமுனா.
அவன் சத்தம் எழுப்பாமல் வீட்டிற்குள் நுழைய படுக்கையில் படுத்திருந்தவளின் முகம் வாடியிருந்தது. எந்தநேரமும் கவலையின்றி சிரித்த முகமாக இருப்பவள் இன்று வாடிப்போன மலராக காட்சியளித்தாள். அவள் முகம் பிரதிபலித்த சோகம் அவனுக்குள் பெரிய பிரளயத்தை உருவாக்கியது.
தன்னையும் அறியாமல் படுக்கையில் அவளின் அருகே அமர்ந்தவன், “செவ்வந்தி” என்ற அழைப்புடன் அவளின் கையைப் பற்றினான்.
ஆழ்ந்த உறக்கத்தில் அவனின் கைகளை கெட்டியாக பிடித்துகொண்ட செவ்வந்தி, “மாமா கையை எடுக்காதே. அப்புறம் தூக்கம் கலைஞ்சிடும். போன காய்ச்சல் திரும்ப வந்திரும். பிளீஸ் மாமா உன் அரளி பாவம் இல்ல” என்ற செல்ல சிணுங்கலோடு அவனின் கைகளை இறுக்கமாக பிடித்துக் கொண்டாள்.
அண்ணனின் பின்னோடு உள்ளே நுழைந்த ஜமுனா அண்ணனின் செயலைக் கண்டு அமைதியாக நின்றிருக்க செவ்வந்தி பேசியதைக் கேட்டு, “ஐயோ அண்ணி யாரையோ நினைச்சு தூக்கத்தில் புலம்பறாங்களே” என்று நினைத்து அதிர்ச்சியுடன் தமையனை நோக்கினாள்.
அவனோ திக்குபிரம்மை பிடித்ததை போல செவ்வந்தியை இமைக்க மறந்து பார்த்துக் கொண்டிருந்தான். தமையனின் முகத்தில் இருந்து அவளால் எதையும் கண்டுபிடிக்க முடியவில்லை. அவளின் ‘அரளி’ என்றதும் செவ்வந்தியை அடையாளம் கண்டுகொண்டது அவனின் மனம்.
“முதல் காதல் பூ முத்தம் ரெண்டும் மறக்குமா?
ஹோ முதல் காதல் பூமுத்தம் ரெண்டும் மறக்குமா?
நெஞ்சில் தங்கும் ஞாபங்கள் வண்ணம் இழக்குமா
நான் இல்லை என்னிடம் நெஞ்சமோ உன்னிடம்
இடம் காலம் மாறும்போதும் என் பாசம் மாறுமா தழுவிக்கொள்ளு” பாடல் வரிகள் வானொலியில் ஒலித்தது.
வெற்றியின் கண்கள் லேசாக கலங்கிட, ‘அரளி’ என்று அவளின் செல்ல பெயரை மீண்டும் ஒரு முறை உச்சரித்தான். அவனின் மனம் முழுவதும் அவளின் நினைவுகள் மட்டும் ஊர்வலம் போனது.
ஜனனி மீது தனக்கு இருப்பது ஈர்ப்பா? காதலா? என்ற கேள்விக்கு அந்த நொடி அவனுக்கு விடை கிடைத்தது. ஜனனியின் மீது தான் கொண்டது உண்மையான காதல் அல்ல என்றும் புரிந்ததும் அவனின் மனதில் விழுந்திருந்த திரை விலகியது. அவனின் செவ்வரளியின் குழந்தை முகம் பளிச்சென்று தெரிந்தது.
அண்ணனின் முகத்தில் வந்து சென்ற உணர்வுகளை படிக்க முடியாமல் குழப்பத்தில் நின்றிருந்த ஜமுனாவை பார்வையால் அருகே அழைத்தவன், செவ்வந்தியின் கரங்களில் இருந்து தன் கரத்தை விடுவித்துக்கொண்டு ஜமுனாவின் கையை வைத்தான்.
ஜமுனா கேள்வியாக நோக்கிட, “அவங்க கண்ணு முழிக்கிற வரை கையை எடுக்காதே. அப்புறம் நான் இங்கே வந்துவிட்டுப் போன விஷயம் அவங்களுக்கு தெரிய வேண்டாம்” என்று தங்கைக்கு கட்டளையிட அவளும் சரியென்று தலையாட்டினாள்.
அவன் வீட்டைவிட்டு வெளியே வந்த வெற்றியின் முகம் வழக்கத்திற்கும் மாறாக பிரகாசமாக இருந்தது. அவனின் மனம் காற்றில் பறப்பது போல இருக்க தனக்கு பிடித்த பாடல் ஒன்றை ஹம்மிங் செய்தபடி பைக்கை ஸ்டார்ட் செய்து கிளம்பினான்.
அண்ணனின் மனநிலையை கணிக்க முடியாவிட்டாலும், ‘அண்ணிக்காக இவ்வளவு தூரம் யோசிக்கிறானே இதுவே பெரிய மாற்றம் தான்’ என்றவள் செவ்வந்தி கண்விழிக்க காத்திருந்தாள்.
மாலை தூக்கம் கலைந்து எழுந்த செவ்வந்தி ஜமுனாவின் கை தன் கைக்குள் இருப்பதைப் பார்த்ததும் உதட்டைக் கடித்துக்கொண்டு, “சாரிடா இது சின்ன வயசு பழக்கம். ஆசிரமத்தில் கூட காய்ச்சல் வந்தால் மைதிலியின் கையைப் பிடிச்சிட்டு தான் தூங்குவேன்” என்று அசடு வழிந்தவளை பார்த்து வாய்விட்டு சிரித்தாள் சின்னவள்.
அதன்பிறகு இருவரும் பேசியபடி இரவு உணவைத் தயாரித்துவிட்டு, “உங்க அண்ணா எப்போ வருவார்” செவ்வந்தி கேட்கும்போது வாசலில் பைக் வந்து நிற்கும் சத்தம்கேட்டு பெண்கள் இருவரும் வாசலுக்கு விரைந்தனர்.
அங்கே பைக்கை நிறுத்திவிட்டு இறங்கிய ராமைப் பார்த்ததும், ‘அண்ணா எங்கே போனான்?’ என்ற கேள்வியுடன் ஜமுனா நின்றுவிட்டாள்.
அவளின் பின்னோடு வந்த செவ்வந்தி, “மோகன் நீங்க என்ன இந்நேரத்திற்கு வந்திருக்கீங்க? ஆமா வெற்றி எங்கே?” அவனின் பின்னோடு பார்த்தபடி யோசனையோடு கேட்டாள்.
“அவர் மத்தியானம் கடையில் இருந்து கிளம்பினார். இந்நேரம் ஆனபிறகு வெற்றி வரவில்லை. அதுதான் கடையை பூட்டிட்டு சாவியைக் கொடுத்துட்டுப் போலாம்னு வந்தேன்” அவன் வந்த விஷயத்தை ஒப்பித்துவிட்டு சாவியைக் கொடுத்தான்.
“இப்போ காய்ச்சல் பரவல்ல இல்ல. நாளைக்கு கடைக்கு வந்திடுவீங்க தானே?” என்று சிந்தனையோடு கேட்க,
“ம்ஹும் நாளை வந்துவிடுவேன். நீங்க பார்த்து கவனமாக வீட்டுக்கு போங்க மோகன்” என்றவள் வீட்டிற்குள் சென்றுவிடவே அவளைப் பின் தொடர்ந்தாள் ஜமுனா.
வெற்றியின் பொறுப்பில் கடை இருக்கும் தைரியத்தில் அதுவரை இருந்தவளின் மனமோ, ‘இவரை நம்பி கடையை விட்டால் மதியத்தில் இருந்து எங்கே போனாருன்னு தெரியலன்னு சொல்றாங்க’ என்ற கோபத்தில் உடனே போனை எடுத்து வெற்றிக்கு அழைத்தாள்.
திடீரென்று செல்போன் அடித்து அவனின் சிந்தனையைக் கலைத்தபோது தான் சுற்றுப்புறத்தை உணர்ந்தான். நாமக்கலில் இருந்து துறையூர் செல்லும் பாதையின் வழியாக திருச்சி மலைக்கோட்டை வரை வந்திருப்பது புரிந்து சிரிப்புடன் பின்னதலையை தட்டிவிட்டு கடிகாரத்தில் மணியைப் பார்த்தான். மதியம் கடையிலிருந்து கிளம்பியவன் இரவானதை உணரவே இல்லை. அவன் மனது சந்தோசமாக இருந்தால் பைக்கில் பெட்ரோல் காலியாகும் வரை லாங் டிரைவ் சென்றான். அவனின் செல்போன் விடாமல் சிணுங்கியது.
அவன் போனை எடுத்து காதில் வைத்ததும், “நீங்க கடையில் இருக்கீங்க என்ற தைரியத்தில் இந்நேரம் வரை நல்லா தூங்கிட்டேன். இப்போதான் வந்து ராம் கடை சாவி கொடுத்துட்டுப் போனார். மதியம் வெளியே போனவர் இன்னும் வரலன்னு சொல்றாரு இப்போ எங்கிருக்கீங்க வெற்றி?” படபடவென்று கேள்விகளை அடுக்கினாள்.
அவளின் குரல்கேட்டு மெய்மறந்து நின்றவனிடம், “வெற்றி.. வெற்றி.. லைனில் இருக்கீங்களா?” என்றாள்.
“சாரி செவ்வரளி நான் கொஞ்சம் வெளி வேலையாக திருச்சிவரை வந்திருக்கேன். நாளைக்கு கடையில் பேசிக்கலாம்” என்றவன் அவளின் பெயரை மாற்றி உச்சரித்தான்.
“ம்ஹும் சரி வெற்றி. அப்போ ஜமுனா இன்னைக்கு நைட் என்னுடன் தங்கிகொள்ளட்டும். நாளை நானே அவளை வீட்டில் கொண்டுபோய் விட்டுவிடுகிறேன்” என்றவள் அவனின் பதிலை எதிர்பார்க்காமல் வைத்துவிடவே சிரித்தபடி செல்போனை நெற்றியில் லேசாக தட்டியபடி இடது கையால் பின்னதலையை வருடிவிட்டு மீண்டும் பைக்கை ஸ்டார்ட் செய்து கிளம்பினான்.
‘இதற்குமேல் இந்த விஷயத்தை தள்ளிப்போட வேண்டாம். நாளைக்கே இதற்கொரு முடிவைக் கட்ட வேண்டும்’ என்ற எண்ணத்துடன் வீடு நோக்கி பயணித்தான்.
அவள் போன் பேசும்போது ஜமுனா அவளின் முகத்திலிருந்த கோபத்தைக் கவனித்தாள். ஆனால் அதை வெளிக்காட்டாமல் இயல்பாக பேசுவதைப்போல வந்து விழுந்த வார்த்தைகளைக் கேட்டு வியப்புடன் இமைக்க மறந்து பார்த்தாள்.
வெற்றியிடம் பேசிவிட்டு போனை வைத்த செவ்வந்தி, “உன்னைக் கேட்காமல் நானே ஒரு முடிவெடுத்துட்டேன். நீ இங்கே இருப்பாயா? இல்ல வீட்டில் கொண்டுபோய் விடவா?” என்று கேள்வியாக புருவம் உயர்த்தினாள்.
“இல்ல அண்ணி நான் இங்கேயே இருக்கேன்” என்றவள் அந்த பேச்சிற்கு முற்றிபுள்ளி வைத்துவிட இருவரும் இரவு உணவை முடித்துவிட்டு தூங்க சென்றனர்.
அதே நேரத்தில் வேலையை முடித்துவிட்டு வீடு வந்த மகளை அழைத்து அருகே அமர வைத்த திவாகர், “உன்னைப் பெண்கேட்டு பெரிய இடத்திலிருந்து வரன் வந்திருந்தது. மாப்பிள்ளை வெளிநாடு சென்று படித்துவிட்டு வந்து சென்னையில் கம்பெனி வைத்து நடத்துகிறான். அவர்களின் குடும்பம் முழுவதும் விழுப்புரத்தில் இருக்கிறது” என்றவர் பேசிக்கொண்டு இருக்கும்போதே ஜனனி இடையில் எதையோ சொல்ல வந்தாள்.
அவளை கைநீட்டி தடுத்து, “நான் முதலில் பேசி முடிச்சறேன்.இந்த காதல், கத்திரிக்காய் இதெல்லாம் இருந்த விட்டுட்டு நான் சொல்ற மாப்பிள்ளையைக் கட்டிக்கோ. இல்லன்னா நீ இந்த ஸ்டேஜ் வரதுக்குள் இளமை போயிடும். முதுமையில் சொத்து இருந்தும் ஒரு பயனும் இல்ல. சோ நல்ல யோசிச்சு ஒரு முடிவு சொல்லு” என்றவர் மகள் பேச வாய்ப்பு கொடுத்தார்.
“நான் இரண்டு நாளில் பதில் சொல்றேன் அப்பா” என்று எழுந்தவளின் கையில் ஒரு கவரைக் கொடுத்தார்.
அவள் கேள்வியாக நோக்கிட,“இந்த கவரில் மாப்பிள்ளை போட்டோ இருக்கு” என்பதோடு எழுந்து சென்றுவிட்டார்.
அவள் சிந்தனையோடு அறைக்கு சென்று முகத்தைக் கழுவிவிட்டு வந்தவள் படுக்கையில் அமர்ந்து போட்டோவைப் பார்த்தாள். மாப்பிள்ளை பார்க்க அழகாக இருந்தார். வெற்றியைவிட அனைத்திலும் பல படிகள் மேலே நின்றவனை வேண்டாமென்று சொல்ல மனம் வரவில்லை.
அவளின் மனம் மீண்டும் வெற்றியிடம் வந்து நின்றது. அவனும் இந்த ஆறு மாதத்தில் எவ்வளவோ தேறியிருந்தான். தன்னை எதற்கும் உதவாதவன் என்று சொன்னவர்களின் முன்னால் நல்ல நிலைக்கு சென்று கொண்டிருந்தான். ஆனால் இந்த வளர்ச்சியில் ஜனனிக்கு எள்ளளவும் சந்தோசம் இல்லை.
கல்லூரி காலத்தில் திறமையாக இருந்தவன் தொட்ட அனைத்தும் தோல்வியில் முடிந்ததில் அவள் சந்தோசமாகவே இருந்தாள். ஒருவரை மட்டம் தட்டி பேசுவது அவளுக்கு பிடித்தமான ஒரு விஷயம். தோல்வியில் இருப்பவனை குத்தி காட்டுவது அவளின் அன்றாட வழக்கமாக மாறிப்போனது.
அவனோடு வாழ்க்கையை பிணைத்துக்கொண்டு கடைசிவரை கஷ்டத்தை மட்டுமே அனுபவிக்க தன்னால் முடியாது என்ற முடிவிற்கு எப்போதோ வந்திருந்தாள் ஜனனி. ஆனால் திடீரென்று எங்கிருந்தோ வந்த ஒருத்தி அவனை வெற்றியடைய வைப்பது அவளுக்கு எரிச்சலாக வந்தது.
அந்த வெறுப்பை காட்டுவதற்கு வழி தெரியாமல் இருந்த நேரத்தில் அவளை பெண்கேட்டு வந்தனர். இதுநாள் வரை வந்த வரங்களை தன் சுயநலத்திற்காக வேண்டாமென்று தட்டிக் கழித்தாள். ஆனால் இன்றோ வெற்றிக்கு அவனின் அப்பா சொத்து கண்டிப்பாக கிடைக்காது என்று கணித்துவிட்டவள் உடனே திருமணத்திற்கு சம்மதித்தாள்.
அவள் சரியென்று சொல்ல மற்றொரு காரணம் மாப்பிள்ளை நல்ல பணக்காரன். அவனோடு வாழ்ந்தால் கண்டிப்பாக சந்தோசம் கிடைக்கும். தான் நினைத்தை செய்ய முடியும் என்ற எண்ணமே அவளுக்கு தித்திப்பாக இருந்தது.
‘எதற்கும் வெற்றியை ஒரு முறை நேரில் சந்தித்து விஷயத்தை சொல்லிடலாம். அதன்பிறகு அவனை நம்ம சந்திக்க போவதில்லை’ என்ற முடிவிற்கு வந்தாள்.
மறுநாள் காலைபொழுது அழகாக விடிந்தது.
இரவு வெகுநேரம் சென்று வீடு திரும்பிய வெற்றி காலையில் சீக்கிரம் எழுந்து ஜனனியைப் பார்க்க கிளம்பிவிட்டான். அவளுக்கு போன் செய்து பார்க்கிற்கு வர சொல்லலாம் என்று நினைக்கும்போது அவளிடமிருந்து போன் வந்தது.
“ஹலோ ஜனனி” என்றவன் தொடங்க, “நான் உனக்காக பார்க்கில் வெயிட் பண்ணிட்டு இருக்கேன். கொஞ்சம் சீக்கிரம் வருகிறாயா? உன்னிடம் ஒரு முக்கியமான விஷயம் பேசணும்” என்றவள் சொல்லவே தன் அதிர்ஷ்டத்தை நினைத்து சந்தோசப்பட்டான் வெற்றி.
அவள் தன் பதிலுக்காக காத்திருப்பது புரியவே, “பத்து நிமிஷத்தில் அங்கே இருப்பேன்” என்றவன் போனை வைத்துவிட்டு பைக் சாவியை எடுத்துகொண்டு கிளம்பியவன் குறிப்பிட்ட நேரத்திற்கு முன்னரே அந்த இடத்தை அடைந்திருந்தான்.