Kandeepanin Kanavu-32

Kandeepanin Kanavu-32

                             காண்டீபனின் கனவு 32

 

விளையாட்டுத் தனமாக எதையோ தூக்கிப் போட்டுப் பிடிக்கிறான் என்று அனைவரும் நினைக்க, தாத்தா கோடாங்கியின் அழைப்பை ஏற்று அவனை கடந்து செல்கையில் வருணின் கையில் விளையாட்டுப் பொருளாய் இருப்பது தங்களின் பூஜைக்குரிய நீலக் கல் என்பதை அறிந்தார்.

பார்த்ததும் பதரியவர், “டேய் டேய்… என்ன பண்ற… அது என்னனு தெரியுமா.. குடு இப்படி..எப்படி எடுத்த இத…”கோபமாகக் கத்தி அவன் கையிலிருந்து பிடுங்க எத்தனித்தார்.

அவன் லாவகமாக கையை உயர்த்திக் கொள்ள, தாத்தாவால் அதைக் கைப் பற்ற முடியவில்லை.

“என்னனு எனக்குத் தெரியாதா…” அவன் ஏளனக் குரலைக் கேட்ட வீரா தானும் கோபம் கொண்டு

“வருண்… இது நல்லா இல்ல.. ஒழுங்கா அத என் தாத்தா கிட்ட குடு.” எச்சரித்தான்.

“முடியாதுன்னா என்ன பண்ணுவ..” சிரித்துக் கொண்டே கேட்க,

“எல்லாத்துக்கும் ஒரு எல்லை இருக்கு.” வருண் முறைத்து அவன் எதிரில் நின்றான்.

இருவரும் நண்பர்கள் என்றால் இப்போது யாரும் நம்ப மாட்டார்கள். அந்த அளவிற்கு வீராவின் கோபம் வருண் மீது வெளிப்பட்டது.

“கூல் கூல்… எதுக்கு இப்போ டென்ஷன் ஆகர.. உங்க வீட்டுக் கதைய முழுசா நான் தான் உனக்குச் சொன்னேன். அப்படி இருக்கும் போது இது நீங்க பூஜை செஞ்சுட்டு வர நீலக் கல்லுன்னு தெரியாதா? என்ன இவ்வளோ சில்லியா இருக்க..வீர்?” சிரிப்பு மாறாமல் கேட்டான்.

அவன் கூறுவது உண்மை தான் என சற்று சாந்தப்பட்டாலும், தங்களின் உரிமைப் பொருளில் அவன் விளையாடுவது எரிச்சலைத் தந்தது.

“தெரிஞ்சு ஏன் இப்படி பண்ற.?” தாத்தா சீறினார்.

“பொறுமையா நான் சொல்றத கேளுங்க. இது பூஜைக்குரிய பொருள் தான். ஆனா இப்போ இது இருக்க வேண்டிய இடமே வேற.” என்றுவிட்டு வீராவின் அருகில் சென்றான்.

“உன் சட்டைய கழட்டு.” என்றான்.

“வாட்…?” வீரா இரண்டடி தள்ளிப் போக,

“உன் நல்லதுக்குத் தான் சொல்றேன் வீர். சட்டைய கழட்டு. உன்னோட காயம் இப்போ ரணமா இருக்கும். பாரு.” என்றான்.

என்னுடைய காயம் பற்றி இவனுக்கு எப்படித் தெரிந்தது என யோசிக்க, அவன் அருகே சம்ரக்க்ஷா  வந்து நின்றாள்.

“என்ன காயம்?” தன் பங்கிற்கு அவளும் குழம்ப,

வேறு வழியின்றி வீரா தன் சட்டையைக் கழட்டினான்.

அவன் போட்டிருந்த கட்டையும் மீறி அது நெறுப்புக் கோளம் போல மின்னியது.

கட்டைப் பிரித்ததும் வலியில் துடித்தான் வீர்.

“என்ன இது.. என்ன இது ?” அனைவரும் அவனைச் சூழ்ந்து கொள்ள,

சாம் இன்னும் பதறினாள்.

“இங்க தான உனக்கு அந்த டாட்டூ மாதிரி வந்துச்சு. அது ஏன் இப்படி எரியுது.. எதாவது ஆபத்து வருமா?” பயந்தாள்.

“அதுக்கான மருந்து தான் இது. கொஞ்சம் நகரு..” வருண் அவன் அருகில் வந்து ,

“இந்த சாய்வு நாற்காலில கொஞ்சம் சாஞ்சு உட்காரு வீர்.” இப்போது அவன் முகத்தில் விளையாட்டுத் தனம் இல்லை.

அவன் சொன்னபடி வீராவும் வந்து அமர,

ஒரு மெழுவர்த்தி கொண்டுவரச் சொல்லி, அந்தக் கல்லை அதில் காட்டினான். நீலக் கல் இப்போது சிவப்பாக மாறியது.

அனைவரும் இங்கு என்ன தான் மாயஜாலம் நடக்கிறது என வாய் பிளந்து பார்க்க, அந்தக் கல்லில் ஒரு சிறு துண்டு பிளந்தது.

அந்த சமயத்தில் வருண் அதை எடுத்து வீராவின் காயத்தின் மேல் கவிழ்க்க, அதிலிருந்து திரவமாக நெருப்பு பிழம்பு வெளிவந்தது. வீராவின் காயத்தில் தீ பட,

“ஆஆ…ஆஆஆஆஆ…..” வென கத்தினான் வீரா.

வேதாவும் சாமும் அருகில் அவன் வலியைக் காண முடியாமல் கண்ணீர் விட, சுஜாதா அவன் கத்தலில் மயக்கம் வர, ஓரமாக அமர்ந்துவிட்டார்.

“ஒண்ணுமில்ல வீர்… கொஞ்சம் பொறுத்துக்கோ…” வருண் கல்லில் இருந்து வந்த திரவ நெருப்பு அனைத்தையும் ஊற்றிவிட்டு தன் கையை அவன் மார்பில் வைத்து அழுத்தினான்.

சற்று நேர பெரு வலிக்குப் பின் வீரா மயக்கமடைந்தான்.

அனைவரும் பதறிவிட,

“நத்திங் பயப்படாதீங்க..” என்று அவன் முகத்தில் தண்ணீர் தெளித்தான்.

வீரா சற்று நேரத்தில் விழித்து அனைவரையும் பார்க்க, அவனது காயமும் இப்போது ஆறி இருந்தது.

“வருண்.. என்ன இது… இங்க என்ன நடக்குது.” தாத்தா இப்போது வேறு வழி இல்லாமல் அவனை நம்ப,

“இன்னிக்கு இரவுக்குள்ள எல்லாம் ஒரு முடிவுக்கு வரப் போகுது. கவலைப் படாதீங்க. இது வீராவின் உடம்புல நிரந்தரமா தங்கணும். அப்போ தான் அவனுக்கு காண்டீபத்த எடுக்கும் சக்தி வரும்.” இப்போது தெளிவாகக் கூறியவன்,

“வீரா. காண்டீபம் எங்க இருக்குன்னு உனக்கு அன்னிக்கு நான் தண்ணீருக்குள்ள அழுத்துனப்ப தெளிவா தெரிஞ்சிருக்கும். அப்படித்தானே?” வருண் அவன் கண்களைப் பார்த்துக் கேட்க,

“ஆமா. ஆனா அதை நான் உன்கிட்ட சொல்லவேண்டிய அவசியம் என்ன..? மொதல்ல நீ யாருன்னு எங்களுக்குத் தெரிஞ்சாகனும். அதை சொல்லு.” வீராவும் மல்லுக்கு நின்றான்.

“வீர்.. விளையாடாத.. இப்போ அதுவா முக்கியம்.” சற்று குரலை இறக்கிப் பேச,

“நான் ஒப்பனா கேட்கறேன். இதெல்லாம் நீ எதுக்கு செய்யணும். ஆதாயம் இல்லாம இதை நீ செய்யவேண்டிய அவசியம் என்ன? உண்மைய சொல்லு. நான் அர்ஜுனன் நீ அர்ஜுனனா?” இப்போது வேறு ஒருவன் போல பேசினான் வீரா.

சம்ரக்க்ஷாவிற்குப் புரிந்தது. இது அன்று மலை அடிவாரத்தில் சென்று படுத்துக் கிடந்த வீரா என்று.

மற்றவர்கள் அவனது புதிய கோணத்தை இப்போது தான் காண்கின்றனர்.

“வீரா..கமான்..” வருண் சமரசம் பேச,

“அர்ஜுனன்…. காண்டீபன்… அந்த காண்டீப வில் என்னுடைய கனவு லட்ச்சியம். அதுக்கும் உனக்கும் சம்மந்தம் இல்ல.. வருண். நீ வருண பகவானா இருந்தா… நிச்சயம் உன்கூட சண்ட போட்டு அந்த வில்லை அடையாம நான் விடமாட்டேன்..” ஆக்ரோஷமாகப் பேசினான்.

‘இல்ல..இது சரி இல்ல…’ சாமும் தாத்தாவும் பயந்தனர்.

அதை மீண்டும் நல்ல படியாக சேர்க்க வேண்டிய இடத்தில் சேர்க்க வேண்டும் என இருவருமே மனதார வேண்டிக் கொண்டனர்.

“காண்டீபா…” தாத்தா அவனை நோக்கி வர,

“நீங்க அங்கேயே இருங்க…நீ யாருன்னு சொல்லு…” வருணிடமே பார்வை இருந்தது.

இவற்றை பார்த்துக் கொண்டிருந்த கோடங்கி, தனக்குத் தெரிந்த வற்றை இப்போது கூறுவதா வேண்டாமா என குழம்பிக் கொண்டிருந்தார்.

பிறகு அவரே முன் “ மொதல்ல இன்னிக்கு நீங்க, இரவு கண்விழிச்சு பூஜை செய்யணும். அதுக்குப் பிறகு தான் உங்களுக்குக் கிடைக்க வேண்டியது கிடைக்கும்.” குறுக்கிட்டார்.

“உண்மை தான். இப்போ நீலக் கல் எனக்குள்ளையே இருக்கு. அதுனால நான் பூஜை செஞ்சுட்டு என்னையே ஆகுதி ஆக்கிகப் போறேன்.”

“எனக்கும் அதில் பாதி பங்கு இருக்கு. நானும் அர்ஜுனன். நானும் பூஜை செய்யனும் உன்கூட.” வருண் முன்வர,

“நீ அர்ஜுனனா இருந்தா நீலக் கல் பூஜை எப்படி செய்ய முடியும்.அது இப்போ எனக்குள்ள இருக்கு.” ஏளனமாக வீரா பேச,

“செய்யறேன்.” நிதானமாகவே சொன்னான்.

“நீயும் அர்ஜுனன்னு என்னால நம்ப முடியல. அப்போ நீ வெள்ளி மானா மாறின காரணம் என்ன? அதை சொல்லு பிறகு நான் நம்பறேன்.” ஒரே கேள்வியில் வருணை கதி கலங்க வைத்தான்.

‘நான் மானாக மாறியது அவனுக்கு எப்படித் தெரிந்தது?!’ என்ற கேள்வி குடைய,

“எல்லாமே பூஜை முடிஞ்ச பிறகு நீ தெரிஞ்சுப்ப. அது வரை பொறுமையா இரு. இப்போ தெரிஞ்சுக்கறது நல்லதில்ல.” எடுத்துரைத்தான் வருண்.

“நீ என்னுடைய காண்டீபத்தை அபகரிக்க முயற்சி செஞ்சா உன் உயிர் என் கையால தான் போகும்.” கண்கள் சிவக்க கூறினான்.

“ஹா ஹா..அப்படியா… சரி பாப்போம்.” என தன் அறைக்குச் சென்றான் வருண்.

வீராவின் அருகில் செல்லவே இப்போது யாருக்கும் பயமாக இருந்தது.

வீர் தன் அரைக்குச் சென்று கதவைத் தாழிட்டுக் கொண்டான். குளித்துவிட்டு வந்தவன் கண்ணாடியில் தன் காயத்தைப் பார்க்க , அது இருந்த இடமே தெரியவில்லை.

முன்பைப் போல டாட்டூ இல்லாத மார்பாக இருந்தது. ஆனாலும் ஒரு சிறு புள்ளியைப் போல நீல நிறத்தில் தெரிந்தது.

நெற்றியில் தனக்குப் பிடித்த வெள்ளை நிற நாமத்தை குழைத்து வளைத்து இட்டுக் கொண்டான். ஈரத் தலையை தூக்கிப் படிய வாரிக் கொண்டான்.

வேட்டியை கட்டிக் கொண்டு பரந்த வெற்று மார்புடன் , தன் புஜங்கள் புடைக்க வெளியே வந்தவனை, தாத்தா முதல் அவன் பெற்றோர் மற்றும் அவனது மனைவி அனைவரும் ஆச்சரியமாகப் பார்த்துக் கொண்டிருக்க,

அவனது இந்தத் தோற்றம் புதிதாக இருந்தது.

தாத்தாவின் அருகில் வந்து கோடங்கி அவரது காதைக் கடிக்க,

“சரி சரி…” என தாத்தா தன் பேத்தியை நோக்கி வந்தார்.

“சின்னபாப்பா.. உடனே நீயும் போய் குளிச்சுட்டு ஒரு புடவை கட்டிட்டு வா.சீக்கிரம்” அவசரப் படுத்தினார்.

அவளும் சரியென செல்ல, பிறகு தான் கோடங்கி தன்னிடம் ஏதோ கூற அழைத்தது தெரிந்தது. அதைத் தெரிந்து கொள்ள மீண்டும் கோடங்கியிடம் செல்ல,

அதற்குள் “பூஜை அறைக்கு நான் போறேன்.” என கர்ஜித்துச் சென்றான்.

அன்று இரவு என்னென்ன நடக்கக் காத்திருக்கிறதோ என அவருக்கு உள்ளம் பதைத்தது.

அனைவரும் அவனோடு பூஜையறைக்குச் செல்ல, திரும்பி

“எதுக்கு எல்லாரும் வரீங்க..” என வாசலிலேயே அவர்களை நிறுத்தினான்.

“கொஞ்சம் நகருங்க…” என வருண் அனைவரையும் விலக்கிக் கொண்டு பூஜையறைக்குள் சென்றான்.

அவனும் வீராவைப் போலவே உடை அணிந்திருக்க ஆச்சரியமாகப் பார்த்தனர்.

ஆனால் அவனது நெற்றித் திலகம் மட்டும் வேறு மாதிரியாக இருந்தது. நீளமான கோடும் அதை குறுக்கே வெட்டும் இன்னொரு கோடும் வரைந்திருந்தான்.

இதை கோடங்கி மட்டுமே கவனித்தார். அதன் அர்த்தத்தையும் உணர்ந்தார்.

உடனே அவர் தன்னறைகுச் செல்லலாம் என நினைக்க, தாத்தா அவரை அழைத்தார்.

“வல்லையா என்ன நடக்குது இங்க… எனக்கு உன்ன விட்டா வேற யாரு இருக்கா.. கண்டிப்பா உனக்கு ஏதோ தெரிஞ்சிருக்கு,” அவர் கண்களைப் பார்த்து அறிந்து கேட்க,

“ஐயா, என்கூட வாங்க.” சொல்லிவிடும் எண்ணத்தோடு தாத்தாவை அழைத்துச் சென்றார்.

தாத்தாவின் அறைக்குச் சென்றனர் இருவரும்.

“ஐயா…” குரல் உடைந்து அழ ஆரம்பித்தார்.

“என்ன ஆச்சு வல்லையா…?” தாத்தாவிற்கு உடல் விதிர்த்தது.

“ஐயா.. நான் சொல்றத கேட்டு நீங்க பதட்டப் படாதீங்க..நேத்திக்கே நான் இந்த வருண் யாருன்னு தெரிஞ்சுக்கிட்டேன். ஆனா அதை சொல்லத் தான் முடியல.”

“எதுவா இருந்தாலும் சொல்லிடு. யார் அவன்.? நம்ம குடும்பமா?” ஆர்வமாக அவரது கண்களைப் பார்க்க,

“ஆமாங்க.. அதுவும் அவர் உங்க அண்ணன் தமயந்தி யோட பையன் தான்…” அசராமல் இடியை இறக்கி விட்டார்.

“என்னது… அவன் என் அண்ணன் மகனா… எப்படி சாத்தியம்… அப்படி இருந்தா என் அண்ணன் சொன்ன எதுவும் நடக்காதே. அவருக்கு சக்தியே இருக்காதே..!” தாத்தா தலைசுற்றுவது போல இருந்தது.

“ஐயா.. அவர் சுத்தமானவரு தான். அதுல ஒன்னும் சந்தேகமில்ல…”

“அப்பறம்…அப்பறம் எப்படி இது நடக்கும். அவருக்கும் யாருக்கும் பிறந்த மகன் இவன்.?” அவரால் பொறுக்க முடியவில்லை.

“அது..அது… அவருக்கும் அவருக்குமே பிறந்த மகன் தாங்க..” மனமுடைந்து கூறினார்.

“என்ன….!? என்ன சொல்றே… எனக்குப் புரியல..”

“ஐயா.. அது எப்படின்னு என்னகுத் தெரியல. எப்படி நடந்ததுன்னு அவருக்கே கூட தெரியாதுன்னு நெனைக்கறேன். ஆனா இது தான் நிஜம். ஆனால் இதில் இன்னொரு ரகசியமும் இருக்கு. வருண் அவரால மட்டும் உருவாகல. இன்னொரு சக்தியோட துணையோட தான் அவர் பிறந்திருக்காரு. அந்த சக்தியை நான் தெரிஞ்சுக்கிட்டதுனால… என் உயிர் இனி சாஸ்வதம் இல்ல.

எப்போவேணாலும் அது என் உடலை விட்டுப் பிரியலாம். அதை நீங்களும் தெரிஞ்சுக்க நினைக்காதீங்க.” அதை மட்டும் சொல்ல மறுத்தார்.

“என் உயிரே போனாலும் பரவால்ல.. என்கிட்ட சொல்லு.” தாத்தா விடாப்படியாய் நிற்க.,

எவ்வளவோ எடுத்துக் கூறினார் வல்லையா. இறுதியில் தாத்தா ஜெயித்துவிட,

அந்த இன்னொரு சக்தியைப் பற்றி கோடங்கி கூறவேண்டியதாகி போனது.

இருவரும் கனத்த மனதுடன் இருந்தாலும், ஒரு நிம்மதி அவர்களிடம் இருந்தது.

“தமா சொன்னது போல எல்லாம் நல்லபடியாத் தான் முடியும். அது போதும் எனக்கு. நான் இனி வாழ்ந்து என்ன இருக்கு.” விரக்திப் புன்னகை உதிர்த்தார்.

அதற்குள் சம்ரக்க்ஷா குளித்து தன் தாயின் உதவியால் புடவை கட்டிக் கொண்டு வர,

தாத்தா அவளை பூஜையறைக்கு போகச் சொன்னார்.

நேரே சென்று வீராவின் பக்கத்தில் அமர, அவளுக்கு அனல் அடித்தது. அவன் தேகம் தீயாய் கொதித்தது.

 

 

Leave a Reply

error: Content is protected !!