ISSAI,IYARKAI & IRUVAR 8.1
ISSAI,IYARKAI & IRUVAR 8.1
இசை… இயற்கை மற்றும் இருவர்
அத்தியாயம் – 8
இரண்டு நாட்கள் பயணமாக, பாண்டியன் கூர்க் கிளம்பிச் சென்றான். செல்லும் முன், ‘எதைப் பத்தியும் நினைக்காத! கரெக்டா ப்ராக்டிஸ் பண்ணு!’ என்று பாவையிடம் சொல்லிவிட்டுத்தான் சென்றான்.
அவளும், ‘கரெக்டா வந்து கூட்டிட்டுப் போங்க’ என்று, தன் எதிர்பார்ப்பை வெளிப்படுத்தியிருந்தாள்.
அதன்பிறகு,
இரண்டு நாட்களுக்கு, பனி சூழ்ந்த மலைமுகடுகள்! பால் போன்ற மலையருவிகள்! பனித்துளி உறங்கும் மலைபாறை புற்கள்! இவை மட்டுமே சிவபாண்டியனுக்கு!!
இரண்டு நாட்கள் கழித்து…
மதியும், நளினியும் தொழில் சார்ந்த பயணமாக பெங்களூர் சென்றிருந்தனர். மாலைதான் சென்னை திரும்புவார்கள்.
ஆதலால், செண்பகமும் பாவையும் மட்டும்தான் வீட்டில் இருந்தனர். செண்பகம் மகனின் வரவிற்காகக் காத்துக் கொண்டிருந்தார்.
பாவையும்தான்!
அன்று மாலை ஆறு மணியளவில் கச்சேரி என்பதாலும், மதியம் மூன்று மணிக்கே கிளம்ப வேண்டும் என்பதாலும்… பாவை தயாராகிக் கொண்டிருந்தாள்.
பாவையின் சிறு சிறு தேவைகளையெல்லாம் செய்து கொடுத்துக் கொண்டிருந்தார், செண்பகம்.
2:30 மணியளவில் சிவா வீட்டிற்கு வந்துவிட்டான். வந்ததும், “ஏதாவது சாப்பிடுறியா சிவா?” என்று செண்பகம் கேட்டார்.
“இல்லைம்மா! கிளம்பிப் போகக் கரெக்டா இருக்கும்” என்று சொல்லிவிட்டு, தன் அறைக்குள் நுழைந்தான்.
சிவாவின் அறை
இன்னும் கிளம்பிக் கொண்டிருந்தாள் பாவை.
அவன் உள்ளே நுழைந்ததும், “வந்தீட்டீங்களா?” என்று கேட்டவள், “இப்போதான் நிம்மதி” என்று சந்தோஷமாகச் சொன்னாள்.
சிரித்துக் கொண்டே, “நானும் கிளம்புறேன்” என்று சொல்லி, குளியலறை சென்றான்.
குளித்துவிட்டு வெளியே வந்தவன் கண்களில் மேடைக்காகப் பிரத்யேக அலங்காரம் செய்து கொண்டிருந்த தேன்பாவை விழுந்தாள்.
ஈரமான தலையைத் துவட்டிக்கொண்டிருந்தவன் கண்களை, இசைப் பிரியை ஈர்த்தாள்.
வண்ண வண்ண கூழாங்கற்கள் பதிக்கப்பட்ட கண்ணாடித் தரையின் மீது நின்று கொண்டிருந்தவளை, வேறு எண்ணங்கள் ஏதுமின்றி பார்த்துக் கொண்டே இருந்தான்.
சிவப்பு ஜரிகை ஓரங்கள் கொண்ட மெகந்தி பச்சை நிறத்திலான பட்டுப் புடவை! அதே நிறத்திலான நூல் வேலைப்பாடுகள் கொண்ட ஆபரணங்கள்!!
சுவரில் பதிக்கப்பட்டிருந்த வட்டவடிவ கண்ணாடியைப் பார்த்து, ஒப்பணைகள் செய்து கொள்ள ஆரம்பித்திருந்தாள்.
மெல்லிய குரலில், “கானத்திடை மோனக்குயில் ஓசைக்கிடையானத்தரம்
ஆனக் குழலிசைக் கேளும்…” என்று பாடிக்கொண்டே, கார்குழலில் பின்னலிட்டுக் கொண்டிருந்தாள்.
பின்… வேறேதோ வரிகளில் தொடங்கி, “புகழ்ச் சொல்லிச் சொல்லி இசைபாடும்” என்ற வரிகளை முணுமுணுத்தபடியே, மல்லிகைப் பூ வைத்துக் கொண்டாள்.
“பமகரி கம பமகம பமகரி
மகரிஸ ரிக மகரிக மகரிஸ” என ஸ்வர வரிசை பாடிக் கொண்டே, நெற்றில் திலகம் வைத்துக் கொண்டாள்.
கடைசியாக ஒருமுறை எல்லா ஒப்பணைகளையும் சரி செய்து கொண்டிருந்த மனைவியை நோக்கி, கணவனின் மனம் ஒட்டுமொத்தமாகச் சரிந்து விட்டிருந்தது.
இல்லை! இது பொய்!!
பாவையின் புகைப்படம் பார்த்த கணத்தில் சரிந்த மனதை, மீண்டும் இந்தக்கணம் பாண்டியனுக்கு நியாபகப்படுத்தியது!!
இதுதான் உண்மை!!
ஒரு சிறு முத்தம் இல்லாமல், இன்றைய தினத்தைக் கடந்து சென்றால்… ‘தன் காதல் கஞ்சத்தனம் பார்க்கிறது’ என்று வரலாற்றில் எழுதப்பட்டுவிடும் என்ற எண்ணம் வந்தது, பாண்டியனுக்கு!
உடனே… மெல்லிய முறுவல் உதித்தது, பாவையின் பாண்டியனுக்கு!!
அக்கணம்… அலங்காரம் முடித்து திரும்பியவள், “குளிச்சிட்டு வந்தாச்சா?” என்று கேட்டாள்.
‘அப்பவே!’ என்று சொல்லி, அவன் மனதில் குரல் அவனைக் கேலி செய்தது.
அதைத் தவிர்த்துவிட்டு, “ம்ம்” என்றவன், காய்ந்த தலைமுடிகளைத் துடைத்துக் கொண்டே, “கிளம்பிட்டியா?” என்று கேட்டான்.
‘ஆமாம்’ என்று தலையாட்டியவள், “நீங்க கிளம்புங்க! நான் செண்பாம்மா-கிட்டருந்து பிளாஸ்க் வாங்கிட்டு வந்திடுறேன்” என்று சொல்லிவிட்டு வெளியே சென்றாள்.
’எல்லாவற்றிக்கும் முதலாக, இன்று இவளது பாட்டியிடம் பேசிவிட வேண்டும்’ என்று எண்ணிக் கொண்டே, பாண்டியன் கிளம்ப ஆரம்பித்தான்.
பிளாஸ்கை வாங்கிக் கொண்டு அறையினுள் நுழைந்தவள் பார்வையில், பாண்டியன் விழுந்தான்.
இரண்டு நாட்கள் கழித்து வந்திருக்கிறான் அல்லவா? அறையின் போன்சாய் மரங்களிடம் பார்வையால் பேசிக் கொண்டிருந்தான்.
அடர் பச்சை நிற வி-நெக் ஸ்டைல் டீ-ஷர்ட் மற்றும் சிப்பி நிறத்தில் ஒரு பேன்ட்!
அவ்வளவுதான்!
மிகச் சாதாரணமாகத்தான் இருந்தது. ஆனால், காதல் கொண்ட பாவையின் மனம் சளைக்காமல் பார்த்துக் கொண்டே இருக்கலாம் என்று சொல்லியது!!
குறைந்தபட்சம் ஒரு ‘ஐ லவ் யூ’ சொல்லாமல், இந்த நாளை நகர்த்திவிட்டால், ‘தன் காதல் தன்னைப் பார்த்து நகைக்கும்’ என்ற எண்ணம் வந்தது, பாவைக்கு!
உடனே… இதழ்கள் மெல்ல விரிந்தது, பாண்டியனின் பாவைக்கு!!
போன்சாயிடமிருந்து பார்வையைப் பெண்டாட்டியிடம் திரும்பியவன், “வந்திட்டியா?” என்று கேட்டான்.
‘அப்பவே!’ என்று சொல்லி, அவள் மனதின் குரல் அவளைக் கேலி செய்தது.
அதைத் தவிர்த்துவிட்டு, “கிளம்பலாமா? என்று கேட்டாள்.
‘சரி’ என்று அவன் சம்மதித்ததும், அறையின் வெளியே வந்தார்கள்.
செண்பகத்திடம் விடைபெற்றுக் கொண்டு, இருவரும் கிளம்பினார்கள். பிரவீன் வருவான் என்பதால், செண்பகம் அவர்களுடன் செல்லவில்லை!
மகிந்திரா தாரில் செல்லும் போது…
பாவை கவனம் முழுதும் கச்சேரியைப் பற்றி இருக்கும் என்பதால், பாண்டியன் எதுவும் பேசவில்லை!
சரியான நேரத்தில் சென்றுவிட வேண்டும் என்ற எண்ணத்தில் ஓட்டிக் கொண்டிருந்தவனை, “பாண்டியன்” என்ற அழைப்பு கலைத்தது.
“சொல்லு” என்றான் சாலையில் கவனம் வைத்துக் கொண்டே!
“உங்ககூட கொஞ்சம் பேசணும்”
“இப்போவா?”
“இப்போ இல்லை! கச்சேரி முடிஞ்சப்புறம்”
‘இவ என்ன பேசப் போறா?’ என்று நினைத்தாலும், “ம்ம் பேசலாம்” என்றவன், “வீட்டுக்குப் போய் பேசணுமா? இல்லை வேறெங்கேயும் போகணுமா?” என்று கேட்டான்.
“கார்ல போய்கிட்டே பேசலாமா?”
“ம்ம் ஓகே”
“மேரேஜ்க்கு முன்னாடி போனோமே, அதே மாதிரி லாங் டிரைவ் போகலாமா?” என்றவள் குரல்… அன்று இருந்த அந்நியோன்யம், இன்று இல்லை என்பதை அறிந்திருந்தது
“ஹே! என்னாச்சு ஹனி?” என்று கேட்டான், அவள் குரலின் பேதமை கண்டு!
‘ஒண்ணுமில்லை’ என்பது போல் தலையசைத்து, லேசாகச் சிரித்தாள்.
“பாவை” என்று அழைத்தான்.
திரும்பி, அவனைப் பார்த்தவளிடம்… “இப்போ கச்சேரில மட்டும் கான்சன்ட்ரேட் பண்ணு. வேறெதையும் நினைக்கக் கூடாது!” என்றான்.
“ம்ம்ம் தெரியும்! அதான் அப்புறமா பேசணும்னு சொன்னேன்” என்று சொல்லி, சன்னலின் வழியே சாலையைப் பார்க்க ஆரம்பித்தாள்.
அதன் பிறகு, அரங்கம் சென்றடையும் வரை அமைதி மட்டுமே!
ஸ்ரீ வேணு கான சபா
3:30 அளவில், சாபாவிற்கு வந்தடைந்தனர். பார்வையாளர்கள் யாரும் இல்லை. இசைக் கலைஞர்கள் மற்றும் நிகழ்ச்சி ஒருங்கனைப்பாளர்கள் மட்டுமே இருந்தனர்.
“யாருமே வரலை?” என்று கேட்டான்.
“அஞ்சு மணிக்கு மேலதான் வருவாங்க” என்று சொல்லிக் கொண்டே, அரங்கத்திற்குள் நடக்க ஆரம்பித்தனர்.
“நம்ம எங்க இருக்கணும்?”
“நீங்க இங்க இருக்கீங்களா!? கௌசி ஸ்டேஜ்-க்கு பின்னாடி இருப்பா, நான் போய் பார்த்திட்டு வந்திடட்டுமா?” என்று, கொஞ்சம் அனுமதி கேட்கும் குரலில் கேட்டாள்.
“என்னைப் பத்தி யோசிக்காத! நீ எப்போவும் எப்படி இருப்பியோ, அப்படியே இரு” என்று சொன்னதும், பாவை அங்கிருந்து நகர்ந்தாள்.
அருகிலிருந்த நாற்காலியில் உட்கார்ந்து கொண்டவன், கிருஷ்ணம்மாவைத் தேட ஆரம்பித்தான். கண்களில் தெரிந்தது, கலைதான்.
எழுந்து சென்று, “உங்க பாட்டி எப்போ வருவாங்க?” என்று கேட்டான்.
“ரொம்ப நேரம் உட்கார முடியதில்லையா, அதனால ஒரு அஞ்சு அஞ்சரை ஆகும்” என்றவன், “எதுக்காகக் கேட்கிறீங்க?” என்றான்.
“சும்மாதான்”
“ஓ!” என்றவன், “பர்ஸ்ட் ரோ-ல சீட் அலாட் பண்ணயிருப்பாங்க. அங்கே போய் உட்கார்ந்துக்கோங்க” என்றான்.
“ம்ம்ம்” என்றவன், கொஞ்ச நேரம் அங்கேயே சுற்றிக் கொண்டிருந்தான்.
நேரம் ஐந்தைத் தொட ஆரம்பித்ததும்…
சாபாவிற்குள் பார்வையாளர்கள் வர ஆரம்பித்தனர்.
கிரி, கிரி மனைவி, மீனாட்சி மற்றும் அவரது கணவர்… ரதி, கலை மற்றும் சங்கர்… என அனைவரும் வந்திருந்தனர்.
கிருஷ்ணாம்மாவும் இருந்தார். பாவை மற்றும் கௌசிக்கு சில விவரக்குறிப்புகள் கொடுத்துவிட்டு, முதல் வரிசையில் வந்தமர்ந்தார்.
அருகில்தான் சிவா அமர்ந்திருந்தான்.
“எப்படி இருக்கிற சிவா?” என்று கேட்டார்.
“ம்ம் நல்லாயிருக்கேன்” என்றவன், “உங்ககிட்ட கொஞ்சம் பேசணும்” என்றான்.
“இப்போவா?”
“ம்ம்”
“இப்போ முடியாது சிவா” என்றவர், “பிள்ளைங்க பாடுவாங்க. எப்படி பாடுறாங்க-ன்னு, அவங்களைக் கவனிக்கணும்!” என்று காரணம் கூறினார்.
“ஒரு பாட்டுதான?!”
“நான் பிள்ளைங்கன்னு சொன்னது, புதுசா பாடுற எல்லோரையும்! ‘எப்படிப் பாடிருக்கோம்னு?’ வந்து கேட்பாங்க! அதான்”
“ஓ! இது எனக்குத் தெரியாது” என்றவன், “பரவால்ல! இன்னொரு நாள் பேசலாம்” என்றான்.
“கச்சேரி முடிஞ்சப்புறம் பேசலாமா??”
‘பாவை பேச வேண்டும்’ என்று சொன்னது நியாபகத்திற்கு வந்தது. எனவே, “பரவால்ல பாட்டி! இன்னொருநாள் பேசிக்கலாம்” என்றான்.
‘சரி’ என்று சொல்லி பேச்சை முடித்தவர், ‘இவன் தன்னிடம் என்ன பேச வேண்டும்?’ என்று யோசிக்க ஆரம்பித்தார்.
அடுத்த ஐந்து நிமிடத்தில் கச்சேரி ஆரம்பித்தது…
ஒன்று இரண்டு மூன்று என்று ஆரம்பித்து, ஆறாவதாக பாவை மற்றும் கௌசி வந்தமர்ந்தனர்.
பாவையின் கண்கள் பாண்டியனைத் தேடின!
இல்லை! முன்வரிசையில் அவன் இல்லை!!
‘எங்கே சென்றான்?’ என்ற கேள்வி வந்து, சட்டென பாவை முகம் மாறியது.
அடுத்த நிமிடமே… ஆழ்ந்து ஒரு மூச்சு எடுத்துக் கொண்டு, முகத்தை மாற்றிக் கொண்டாள்.
இனி கச்சேரி…
இதுவரை… கௌசி, பாவை இருவரும் காணாத பிரமாண்ட அரங்கம். கீழ் மற்றும் முதல் தளம் முழுவதும் நிரம்பியிருந்தது, இசையை நேசிப்பவர்களால்!
மிகப் பெரிய மேடை!
மேடையின் பின்புறம் முழுவதும் கருப்பு நிறத்திலான தடிமனான திரை!
திரையின் நடுவே, ‘சென்னை தர்பார் பெஸ்ட்டிவல்’ என்று பொன்னிற எழுத்துக்கள் வைக்கப்பட்டிருந்தன! அதன் ஓரங்களில், வெவ்வேறு இசைக் கருவிகள் பொன்னிறத்தால் வரையப்பட்டிருந்தன!!
மேடையின் நடுவே, பெண் குரலுக்காக கௌசி மற்றும் பாவை! இருவரும் ஒரே மாதிரியான பட்டுப்புடவையில் இருந்தனர்!! ஆண் குரலுக்காக, புகழ் பெற்ற கர்நாடக இசைப் பாடகர்! பட்டு வேஷ்டி சட்டையில் இருந்தார்!!
வீணை, வயலின், கடம் மற்றும் மிருதங்க இசைக் கலைஞர்கள்… அவர்களுக்குப் பின்னே இருந்தனர்!
மேடையின் முன் ஓரத்தில் நான்கு விளக்குகள் மட்டும்! அதன் வெளிச்சம், திரையிலிருந்த பொன்னிற எழுத்துக்கள் மற்றும் இசைக்கருவிகள் மீது பட்டதால்… அவைகள் ஜொலி ஜொலித்தன!!
கச்சேரி ஆரம்பமானது…
எப்போதும் போல்… நாட்டை ராகத்தில், ஆதி தாளத்தில்… காளிங்க நர்த்தனம் என்று கௌசி சொன்னதும்…
“தாம் தீம் தரன தாம்” என்று பாவை பல்லவியை பாடத் துவங்கினாள்.
அதன் பின், ஆண் குரலில் பாடல் வரிகள்!
அதற்கடுத்து, “தாம் தீம் தரன தாம்” என்று கௌசி பாடினாள்.
கௌசி முடித்ததும் மிருதங்கமும், வீணையும் போட்டி போட்டுக் கொண்டு இசை மழை பொழிந்தன. அதனோடே சேர்ந்து இருவரும் “தாம் தீம் தரன தாம்” என்று பாடினார்கள்.
பல்லவி முடிந்து, “தாம் தீம் தரன தாம் தித் தகிட த்ருகுதகிட த்ருகுதகிட ததிங்கினத …” என்று பாவை அனுபல்லவியை ஆரம்பித்தாள்.
அனுபல்லவி முடிந்ததும்… “தாமித தஜ்ஜம் தக தஜ்ஜம் தகதிக தஜ்ஜம் தாம்” என்று சரணம்… இருவரும் இருமுறை பாடினார்கள்.
அதன்பின், சற்று நேரத்திற்கு… அங்கிருந்தோர் அனைவரையும், பாவை -கௌசி இருவரும்… தங்களது குரலால் இசை மழையில் நனைத்தனர்!
அதிலும் குறிப்பாக…
“வ்ரஜ துரந்தரா ஜலதசோபமானதர சிகுர முகுள மகுடநீல சிகண்டக மோஹனாங்கா காளிங்க நடன” என்ற சமஸ்கிருத வரிகளைச் சங்கடம் இல்லாமல் பாடி… “தாமித தஜ்ஜம் தக தஜ்ஜம்” என்று பாவை சரணத்தைப் பிடித்த விதத்தை… அனைவரும் மெய்மறந்துக் கேட்டு ரசித்தனர்!
அதுதானே தேன்பாவை!!
பாடல் முடிந்ததும், மூன்று பேரும் எழுந்துகொண்டனர்.
கீழிறங்கி வரும் பொழுது … அந்தப் பிரபல கர்நாடக இசைப் பாடகர், இரண்டு நிமிடங்கள் பாவையிடம் பேசினார்.
பின்… வேணிம்மா அருகில் வந்து பாவை அமர்ந்துகொண்டாள். கிரியின் அருகே சென்று கௌசி அமர்ந்துகொண்டாள்.