Birunthavanam-4

Birunthaavanam-8cbf8f63

Birunthavanam-4

பிருந்தாவனம் – 4

              கிருஷின் கூட்டம் ஒரு அடி முன்னே சென்று முகுந்தனை நெருங்கி மாதங்கிக்கு எதிராக குரல் கொடுக்க, கிருஷ் தன் கைகளை குறுக்கே நீட்டினான். 

           கிருஷின் நண்பர்கள் இதை எதிர்பார்க்கவில்லை. கிருஷின் கூட்டம் மட்டுமில்லை, கல்லூரியில் உள்ள பல மாணவர்களும் தான்.

           “எனக்கு ஒரு தங்கையோ, ஃபிரெண்டோ இருந்தா எல்லாரும் இப்படி பேசினா, நான் அந்த பொண்ணை  அங்க இருந்து கூட்டிட்டு போக தானே பார்ப்பேன். முகுந்தனும், அதை தானே செய்யறான். முகுந்தன் மாதங்கியை  கூட்டிட்டு போகட்டும்.” கிருஷின் உதடு புன்னகையில் மடிந்தன.

          ‘கிருஷ்க்கும் எனக்கு ஆகாது. இவன் எனக்கு சப்போர்ட் பண்ணறானா? நம்புற மாதிரி இல்லையே?’ முகுந்தனின் எண்ணவோட்டத்தில் சந்தேகம் எழுந்து நிற்க, மற்றவர்கள் கண்களில் அதிர்ச்சி அப்பட்டமாக தெரிந்தது.

இருவரும் சிறப்பாக படிக்கும் மாணவர்கள். படிப்பை மட்டுமே மனதில் கொண்டு அதீத கோட்பாடுகளை கொண்ட முகுந்தனுக்கும், சிறப்பாக படித்தாலும் அரசியல் செல்வாக்கில் சற்று தன்போக்கில் நடந்து கொள்ளும் கிருஷ்க்கும் பல இடங்களில் சின்ன சின்ன மோதல்கள் ஏற்பட்டு, அவர்களுக்கு இடையில் உள்ள பனிப்போர் கல்லூரியே அறிந்த விஷயம்.

               “மாதங்கி சொன்ன விஷயமும் தப்பில்லையே? எத்தனை காலம் தான் நாமளே கிண்டல் பண்ணிட்டு இருப்போம்.” கிருஷ் மாதங்கியை பார்த்து கொண்டே அவன் பேச, ‘பொண்ணுங்க விஷயத்தில் இதுவரை அவன் கேலியும் கிண்டலும் எல்லை மீறியதில்லை. ஆனால் இது ரொம்ப ஓவர் நடிப்பா இருக்கே…’ முகுந்தன் கிருஷை மனதில் கணக்கிட்டு கொண்டிருந்தான்.

               கிருஷ் பேசிய விதத்தில், அதுவும் அனைவர் முன்னும் கூறியதில் மாதங்கி உச்சி குளிர்ந்து போனாள். மாதங்கி அறியாமல், அவள் கண்கள் அவன் மீது ஒரு நொடி மையல் பார்வையை செலுத்தி கொண்டு மீட்டு கொண்டது.

       யாரும் அறியாத மாதங்கியின் மையல் பார்வையை கிருஷின் மனம் அறிந்து கொண்டது. அந்த மையல் பார்வையில் கிருஷ் மயங்கவில்லை என்றாலும், அவன் மனம் பெருமிதம் பட்டுக் கொண்டதை அவனும் மறுக்கவில்லை.

                  பிருந்தாவின் கண்களோ, கிருஷின் பேச்சையும் செய்கையும் வாஞ்சையோடு பார்த்தன.

         ‘மேலும் பேச்சை வளர்க்க வேண்டாம்’ என்ற எண்ணத்தோடு, முகுந்தன் மாதங்கியை அழைத்து சென்று விட்டான்.

                     பிருந்தாவும் அவர்களோடு வெளியே சென்றுவிட்டாள்.

கிருஷின் நண்பர்களோ, “என்ன கிருஷ், அந்த பொண்ணை இப்படி விட்டுட்டே? போலீஸ்காரன் தங்கைன்னு பயந்துட்டியா?” என்று ஒருவன் கேலி போல பேச, “அப்படி என்ன பெரிய போலீஸ். ஒரு நாள், அவனையும் பார்த்திருவோம். போலீஸ் எல்லாம் நமக்கு ஜுஜுபி” கிருஷ் தன் நண்பர்கள் குழாமோடு மேடையிலிருந்து இறங்கி அங்கிருந்த நாற்காலியில் அமர்ந்தான்.

       “இன்னைக்கே அந்த பொண்ணை வச்சி செஞ்சிருக்கணும். அழ அழ வச்சிருக்கணும். அந்த முகுந்தனும் நம்ம டிபார்ட்மென்ட் கிட்ட வசமா தனியா சிக்கினான். நீ இதை விட்டிருக்க கூடாது கிருஷ்.” மற்றோருவன் கோபமாக கூறினான்.

             கிருஷ் தன் சட்டை மேல் பட்டனை கழட்டி தன் பூட்ஸ் காலை எதிரே இருந்த நாற்காலியில் மீது நீட்டினான்.

  ‘காலேஜில் இப்படி தான் இருப்பாங்களா?’ சில மாணவர்கள் நொந்து கொண்டு வெளியே சென்றுவிட்டனர்.

      “ப்ரோஃபெஸ்ஸர் யாரும் இல்லை தான். இருந்தாலும் நிறைய பொண்ணுங்க இருந்தாங்க கேசவ். முகுந்தன் ரொம்ப எகிறினா, அவன் ஹீரோ ஆகிருவான். ஏற்கனவே, அவனுக்கு பொண்ணுக மத்தியில் நம்மளை விட நல்ல பெயர். இன்னைக்கி, இன்னும் அதுக்கான சந்தர்ப்பத்தை நாம ஏற்படுத்தி கொடுக்கணுமா?” கிருஷ் மறுப்பாக தலை அசைத்தான்.

                    “மாதங்கி நம்ம கிட்ட தனியா சிக்குவா. பார்த்துக்கலாம்.” நிதானமாக பேசினான் கிருஷ். ‘நான் மாதங்கிக்கு சாதமாக இருக்கிறேனோ?’ கிருஷ் கண்களில் யோசனை பரவியது.

         கிருஷ் பேசிய வார்த்தைகள் அவர்களுக்கு நியாயம் போல் தெரிந்ததால், அவன் நண்பர்களும் மௌனமாக தலை அசைத்து கொண்டனர்.

   அதே நேரம் முகுந்தன், அவர்கள் வண்டி நிறுத்தியிருக்கும் இடத்தை நோக்கி வேகமாக நடந்து கொண்டிருந்தான். அவன் பின் ஓட முடியாமல் ஓடி கொண்டிந்தார்கள் மாதங்கியும், பிருந்தாவும்.

      “முகுந்தன், ஏன் இப்படி ஓடுற? என்னால நடக்க முடியலை.” சிடுசிடுத்தாள் மாதங்கி.

       “ஏன், பாடிகிட்டே ஆட மட்டும் தான் முடியுமா?” அவன் திரும்பி மாதங்கியை  பார்த்து முறைத்துவிட்டு, வேகமா நடந்தான்.

       “முகுந்தன் உனக்கு அண்ணனா?” பிருந்தா, மாதங்கியின் காதில் கிசுகிசுத்தாள்.

          “எங்க அண்ணன் அரவிந்த். பெரிய போலீஸ். இவனை என் அண்ணனும் சொல்லலாம். சொல்லாமலும் போகலாம். ஃபிரெண்டுன்னு  சொல்லலாம். திமிர் பிடிச்சவன். என்னை எங்க வீட்டில் போட்டு கொடுக்கும் எதிரின்னும் சொல்லலாம்.” மாதங்கி சினத்தில் முணுமுணுத்தாள்.

               “நீ எதையும் நேரடியா சொல்ல மாட்டியா?” பிருந்தா நடந்தபடி மாதங்கியின் காதில் கிசுகிசுக்க, “எங்க அப்பா ஃபிரெண்டு பையன். பக்கத்து பக்கத்து வீடு. சின்ன வயசிலிருந்து நாங்க ஒரே வீடு மாதிரி தான். பாட்டி, தாத்தா  ஏதோ தூரத்து சொந்தமுன்னு சொல்லுவாங்க. எனக்கு என்னனு சரியா தெரியாது.” மாதங்கி பட்டும்படாமலும் சத்தமாக  கூற, முகுந்தன் முகத்தில் புன்னகை பூத்தது.

            அவள் கூறிய உறவு முறைகளில், பிருந்தாவின் கண்களில் ஏக்கம் வந்தமர்ந்து.

             இருவரும் வண்டி இருக்கும் இடத்தை அடைந்துவிட, பிருந்தா அவள் வண்டி இருக்கும் இடத்தை நோக்கி நடந்தாள்.

            “இருட்டிருச்சு, நீங்க ஏன் தனியா போகணும்? நாங்க உங்களை ட்ரோப் பண்ணிடுறோம். நாளைக்கு நேரத்தோட, போகும் பொழுது உங்க வண்டியை எடுத்துக்கலாமே? நாங்க இன்னைக்கு கார்ல தான் வந்திருக்கோம்.” முகுந்தன் கூற, அவனை இப்பொழுது நேரடியாக பார்த்தாள் பிருந்தா.

             அவள் முகத்தில் மெல்லிய புன்னகை கீற்று. “தேங்க்ஸ், நான் என் வண்டியிலே வீட்டுக்கு போய்டுவேன்” நாசுக்காக அவனை மறுத்துவிட்டு, பிருந்தா வண்டியை எடுத்துக்கொண்டு வீட்டை நோக்கி சென்றாள்.

   “முகுந்த் அவளை ஃபாலோ பண்ணு. பிருந்தா அப்படி தான், யார் கூடவும் ரொம்ப பழக மாட்டா. அவ வீடு வரைக்கும் ஒரு பாதுகாப்புக்கு போயிட்டு நாம போவோம்.” மாதங்கி கூற, முகுந்தனின் கார் அவளை பின் தொடர்ந்தது.

        பிருந்தா, வீட்டின் முன் வண்டி நிற்கவும், “பை…” என்று மாதங்கி கூற, அவள் வீட்டுக்கு சென்றதை உறுதி செய்துவிட்டு முகுந்தனின் கார் வேகம் எடுத்தது.

             பிருந்தாவின் கண்கள் மாதங்கியை மெல்லிய பொறாமை உணர்வோடு பார்த்தது, ‘இவளுக்கு பாதுகாப்பாக எத்தனை உறவுகள்?’ என்ற கேள்வியோடு.

காரில், மாதங்கி முகுந்தனை மிரட்டி கொண்டிருந்தாள்.

 “இன்னைக்கு நடந்ததை, நீ பாட்டி, தாத்தா, அம்மா, அப்பா, ஆண்ட்டி, அங்கிள், அண்ணன் யார் கிட்டையும் சொல்ல கூடாது.” அவள் குரல் ஓங்கி ஒலிக்க, “என் மொபைலை எடு.” முகுந்தன் கண்சிமிட்டினான்.

      “அட, பாவி ரெகார்ட் பண்ணிட்டியா?” மாதங்கி கண்களை விரிக்க, “இரு இப்ப டெலீட் பண்றேன்.” அவள் வேகமாக செயல்பட, அதெல்லாம் எப்பவோ என் ஜி-டிரைவ் க்கு மூவ் பண்ணிட்டேன்.” அவன் சீட்டியடித்தான்.

“டேய், வெளிய நல்லவன் மாதிரி ஸீன் போட வேண்டியது. பண்றதெல்லாம் கேடித்தனம்.” அவள் பற்களை நறநறத்தாள்.

“ஹா… ஹா…” அவன் பெருகுரலில் சிரித்தான்.

“பாட்டு எப்படி?” மாதங்கி புருவம் உயர்த்த, “பாட்டு சூப்பர் மாதங்கி. ஆனால், இனி இப்படி பண்ணாத. அந்த பசங்க அவ்வளவு நல்ல பசங்க கிடையாது. பிரச்சனை எதுவும் வந்திற போகுது.” முகுந்தன் தணிவான குரலில் எச்சரித்தான்.

“ச்…ச்ச… அப்படிலாம் இல்லை. கிருஷ் ரொம்ப நல்ல மாதிரி. அன்னைக்கு கூட ஒரு ப்ரோஃபெஸ்ஸர் கிட்ட இருந்து என்னை காப்பற்றி ஹெல்ப் பண்ணார். இன்னைக்கும் பாரு, பக்கா ஜென்டில் மென். கூட்டத்து மத்தியில், எவ்வளவு தன்மையா பேசினார்?” மாதங்கி அவன் புகழ் பாடினாள்.

     ‘தேவை இல்லாமல் அட்வைஸ் செய்து, ஒன்னுமத்த விஷயத்தை பெருசு பண்ண கூடாது.’  முகுந்தன் தன் வாயை இறுக மூடிக்கொண்டான்.

            “நான் சொல்றது சரி தானே?” மாதங்கி சில நிமிட பேச்சுக்கு பின் கேட்க, “நீ சொன்னால் சரி தான்” என்று கூறி, அவள் பேச்சுக்கு முற்று புள்ளி வைத்தான் முகுந்தன்.

   “பிரச்சனை வந்தா பார்த்துக்கலாம். அண்ணன்னு ஒருத்தன் போலிஸ்ன்னு எதுக்கு இருக்கான்?” அவள் புன்னகைக்க, “அது சரி, அவன் போலீஸானது உன்னை பாதுகாக்கவா?” என்று முகுந்தனும் புன்னகையோடு கேட்டான்.

    “அதை விட அவனுக்கு வேற என்ன பெரிய வேலை?” மாதங்கி நாக்கை துருத்தி, முகுந்தனிடம் வம்பு வளர்க்க தயாராகவும், வீடு வந்து சேரவும் நேரம் சரியாக இருந்தது.

  மாதங்கி துள்ளலோடு வீட்டிற்குள் நுழைய, ‘இந்த கிருஷ் அமைதியாக இருப்பானா?’ என்ற கேள்வி மண்டையை குடைய முகுந்தன் வீட்டிற்குள் நுழைந்தான்.

                 கிருஷ் தன் பைக்கை சர்ரென்று வேகமாக செலுத்தி கொண்டிருந்தான். காற்று அவனை பலமாக தீண்டி சென்றது. 

    ‘எத்தனை கார் இருந்தாலும், பைக் தனி சுகம்’ எண்ணியபடி அவன் வேகம் கூடியது.

           அப்பொழுது அந்த சாலையில் ஒரு போலீஸ் ஜீப் சென்று கொண்டிருக்க, அதை நெருக்கி வேகமாக முன்னேறினான் கிருஷ்.

காவல்துறை வாகனத்தை அவன் கடக்க,  ‘போலீஸ்காரன் தங்கச்சி…’ நண்பன் கூறியது நினைவு வந்தது.

‘எந்த போலீஸ் தங்கச்சியோ? போலீஸ்காரன் தங்கிச்சிக்கே இவ்வளவு கொழுப்பு இருந்தா எங்க அப்பா கையில் கவெர்மெண்டே இருக்கு. எனக்கு எவ்வளவு இருக்கும்.’ கிருஷ் தன் சட்டை காலரை வண்டியை செலுத்தியபடியே உயர்த்தி கொண்டான்.

    ‘அந்த கொழுப்பு கூட நல்லாத்தான் இருக்கு. ஆளும் அப்படி தான் இருக்கா கொஞ்சம் கொழுகொழுன்னு. பேச்சும் அப்படி தான் இருக்கு. இவளை வச்சி செய்ய சொல்லுறாங்க. அப்படி எல்லாம் அழுதிருவாளா என்ன இந்த மாதங்கி? ஒரு நாள் அழவைத்து பார்த்திர வேண்டியது தான்’ அவன் மனம் கேலி போல் அவளை எண்ணி கொண்டது.

    ‘கலகல கிருஷ்… அது என்ன என்னை மட்டும் அளவோடு கேலியில் நிறுத்தி கொண்டாள். பயமா இருக்குமோ?’அவன் மனம் உல்லாசமாக எண்ணி கொள்ள, “பயம் எல்லாம் இருக்காது.” அறிவு எடுத்துரைக்க, அவன் புன்னகையோடு முணுமுணுத்து கொண்டான்.

   ‘நான் மாதங்கிக்கு ரொம்ப இடம் கொடுக்கறேனோ? வேற எந்த பொண்ணும் என் கிட்ட இவ்வளவு தைரியமா பேசினதில்லை. நானும் எந்த பொண்ணை பத்தியும் இவ்வளவு யோசிச்சதில்லை. அதுவும் இவ போலீஸ்காரன் தங்கச்சி. முகுந்தனுக்கு வேற நெருக்கம். ஒதுங்கியே நிற்போம்.’ அவன் உறுதி மொழி எடுத்துக் கொண்டான்.

     அறிவு உறுதி மொழி எடுத்து கொண்டிருக்க… மனமோ, ‘இந்த மாதங்கியை எப்படி மடக்கலாம்?’ என்று கணக்கிட்டு கொண்டிருந்தது.

கிருஷ் பிருந்தாவனத்தில் நுழைய, அவன் தந்தை வேணுகோபாலன் “யார் டா நம்ம ஆளுங்க மேல கைவச்சது? எல்லாருக்கும் எவ்வளவு கொடுக்கணுமோ கொடுத்து தொலைச்சிருக்கோமில்லை.” அவர் காட்டு கத்தலாக கத்த, “அது அரவிந்த் ஏரியா சார். அவன் எதுவும் வாங்க மாட்டான். நாம சொல்றதை கேட்கவும் மாட்டான்.” எதிர் பக்கம் பம்மி கொண்டே பேசியது.

கிருஷ் தன் தந்தையை கடக்க முற்பட, அவன் காதில் விழுந்த பெயரில் பிரேக் அடித்தார் போல் நின்றான்.

இந்த நிறுத்தம், அவன் வாழ்வில் தடங்களா? இல்லை…     

பிருந்தாவனத்தில் வலம் வருவோம்…

Leave a Reply

error: Content is protected !!