உன்னாலே – 03

உன்னாலே – 03
ராகினி போட்ட சத்தத்தில் வீட்டில் இருந்த எல்லோரும் பதட்டத்துடன் அவளைச் சூழ்ந்து நிற்க முதலில் தன்னை நிதானப்படுத்திக் கொண்ட சகுந்தலா அவளைத் தன் தோளோடு சேர்த்து அணைத்துக் கொண்டு
“ராகினி என்னடாம்மா ஆச்சு? ஏன்டாம்மா சத்தம் போட்ட?” அவளை மேலிருந்து கீழாக ஆராய்ச்சியாக பார்த்துக் கொண்டபடியே கேட்க
தன் கலங்கிய கண்களை ஒரு முறை மூடித் திறந்து விட்டு அவரைத் திரும்பி பார்த்தவள்
“ஆன்…அத்தை நீங்க என்னை இப்போ என்னன்னு கூப்பிட்டீங்க?” என்று கார்த்திக்கை அழுத்தமாக பார்த்து கொண்டே கேட்க அவரோ அவளை குழப்பமாக பார்த்து கொண்டு நின்றார்.
“என்னம்மா ராகினி இது? நாங்க என்னவோ கேட்டால் நீ ஏதோ சொல்லுற டேய் கார்த்தி! நீ ராகினியை ஏதாவது சொன்னியா?” அவர்கள் அனைவருக்கும் முன்னால் சற்றே கலவரமான முகத்துடன் நின்று கொண்டிருந்த கார்த்திக்கை பார்த்து சகுந்தலா சிறிது அதட்டலாக வினவ
அவரருகில் நின்று கொண்டிருந்த தன் மனைவியை திரும்பி பார்த்தவன் ஏதோ சொல்ல வாய் திறக்க
“அது வந்து அத்தை நான் ஏன் சத்தம் போட்டேன்னா அது வந்து… ஒண்ணும் இல்லை அத்தை உங்க பையனை எல்லார் முன்னாடியும் பயம் காட்டுறதா சேலஞ்ச் பண்ணேன் இல்லையாங்க? அவ்வளவு தான்! சொன்ன மாதிரி செய்துட்டேன் அவ்வளவு தான் உங்க பையன் வாயடைத்து போயிட்டாங்க” அவசரமாக அவனைப் பார்த்து வேண்டாம் என்பது போல தலையசைத்து விட்டு ராகினி பதிலளித்திருக்க அவனைத் தவிர மற்ற அனைவரும் அப்போது தான் ஆசுவாசமாக மூச்சு விட்டுக் கொண்டனர்.
“இதற்கு தான் இவ்வளவு பில்டப்பா? நாங்க கூட என்னவோ ஏதோன்னு பயந்து போயிட்டோம் நல்ல பிள்ளைங்க! கல்யாணம் பண்ணிக்கிட்ட அப்புறம் கூட உன் விளையாட்டு தனம் மாறவே இல்லை ராகினி” அவர்கள் இருவரையும் பார்த்து சிரித்துக் கொண்டபடியே சகுந்தலா, மோகன் மற்றும் துளசி அங்கிருந்து சென்றுவிட
அவர்கள் சென்றதை உறுதிப்படுத்தி விட்டு கார்த்திக்கின் கையை பிடித்து இழுக்காத குறையாக அவனை அழைத்துக் கொண்டு சற்று ஆள் நடமாட்டம் இல்லாத பகுதிக்கு சென்றவள் சுற்றிலும் ஒரு முறை நோட்டம் விட்டு விட்டு
“இதோ பாருங்க மிஸ்டர். ஹஸ்பண்ட் கார்த்திக் என்னோட பேரு ராகினி பி.காம் படித்து முடித்து இருக்கேன் எனக்கு இருபத்தேழு வயது அப்பா பேரு பரசுராமன் அம்மா பேரு தனலட்சுமி இரண்டு பேரும் ரிடையர்ட் வக்கீல்! அப்புறம் எனக்கு மூணு அண்ணா இருக்காங்க எல்லோரும் கல்யாணம் பண்ணி குழந்தை, குட்டின்னு செட்டில் ஆகிட்டாங்க அவங்களைப் பற்றி விளக்கமாக சொல்ல இந்த நாள் போதாது இன்னொரு நாள் சொல்லுறேன் என்னைப் பற்றி டீடெய்ல்ஸ் போதுமா?” என்று ஒரே மூச்சில் கூறி விட்டு மூச்சு வாங்க அவனைப் பார்த்துக் கொண்டு நின்றாள்.
“ஐ யம் சாரி நான் உங்களை…”
“மறுபடியும் உங்களையா?”
“சரி சரி சாரி! நான் உன்னை ஹர்ட் பண்ணணும்னு அப்படி கேட்கல எனக்கு கல்யாணம் பண்ணிக்க ஆரம்பத்தில் இருந்தே விருப்பம் இருக்கல ரொம்ப வருஷமா அம்மா, அப்பா, துளசி, பிரண்ட்ஸ் எல்லாம் சொன்னதால் தான் யாரு, என்ன, எதுவும் கேட்காமல் கல்யாணம் பண்ண சம்மதம் சொல்லிட்டேன் அது என் தப்பு தான் ஆனா இந்த ஒரு மாதத்தில் நான் உன்னை பார்க்கவோ,பேசவோ இல்லையா அதனால உன் பெயரை கூட நான் தெரிஞ்சுக்கல துளசி, அம்மா கூட அண்ணி, நம்ம வீட்டு மருமகள் அப்படின்னே அடிக்கடி பேசிட்டு இருந்ததால் அவங்ககிட்டயும் நான் எதைப்பற்றியும் கேட்க விரும்பல அது என் தப்பு தான் ஐ யம் ரியலி ரியலி சாரி! ரியலி சாரி!”
“அட பரவாயில்லை ஹஸ்பண்ட் கார்த்திக்! இதெல்லாம் ஒரு பெரிய விஷயமே இல்லை இன்னும் நீங்க பார்க்க வேண்டிய தெரிஞ்சுக்க வேண்டிய விடயங்கள் எவ்வளவோ இருக்கு அதை எல்லாம் பார்க்கும் போது இது சின்ன மேட்டர் தான்! அப்புறம் நான் ஏன் அத்தை, மாமா முன்னாடி உண்மையை சொல்லலேன்னா பெரியவங்க ரொம்ப உணர்ச்சி வசப்பட்டக்கூடியவங்க! அவசரத்தில் நாம தவறுதலாக ஏதாவது உளறி அது அவங்களை கஷ்டப்படுத்தி விடக் கூடாது அதே நேரம் இது நம்ம இரண்டு பேருக்கும் நடுவில் இருக்கும் விஷயம் இதை எல்லோருக்கும் வெளிச்சம் போட்டுக் காட்டி ஒரு பொது விடயமாக மாற்ற எனக்கு இஷ்டம் இல்லை அதற்காக அத்தை, மாமா கிட்ட எந்த ஒரு விடயத்தையும் சொல்ல மாட்டேன்னு சொல்லல இப்படி ஒரே செக்கனில் சரி பண்ணக் கூடிய சின்ன சின்ன விடயங்கள் எல்லாவற்றையும் சொல்லி அவங்களை டென்சன் பண்ண விரும்பல அவ்வளவு தான் சிம்பிள்!”
“எப்படி உன்னால இவ்வளவு நான்ஸ்டாப்பா யோசித்து பேச முடியுது? நான் உன்னை விட நான்கு வயது பெரியவனாக இருந்தாலும் எனக்கு இவ்வளவு ஆழமாக எல்லாம் யோசிக்க வரலயே ஏன்?”
“ஏன்னா யோசிக்க மூளை இருக்கணுமே!”
“என்ன சொன்ன?”
“அது..அது வந்து நான் என்ன சொல்ல வர்றேன்னா நீங்க உங்க மூளையை முழுமையாக பிசினஸில் இன்வால்வ் பண்ணிட்டீங்க இல்லையா அதைத்தான் சொன்னேன்! அத்தை கூப்பிடுற மாதிரி இருக்கு நான் வர்றேன்” என்று விட்டு ராகினி மெல்ல அங்கிருந்து நழுவிச் செல்லப் போக கார்த்திக் அவளை செல்ல விடாமல் வழி மறித்தவாறு வந்து நின்று கொண்டான்.
அவன் திடீரென தன் முன்னால் வந்து நிற்க அதை எதிர்பாராமல் அவனின் மேல் மோதப் போனவள் உடனே தன்னை சுதாரித்துக் கொண்டு அவனை கேள்வியாக நோக்க அவளிடம் இருந்து இரண்டு எட்டுகள் பின்னால் தள்ளி நின்று கொண்டவன்
“ராகினி இதற்கு முன்னாடி நாம எப்போதாவது மீட் பண்ணி இருக்கோமா? அதாவது நிச்சயதார்த்தம் கல்யாணம் எல்லாம் ஒரு வாரத்திற்குள்ள தான் நமக்கு நடந்தது இந்த கல்யாணப் பேச்சு எடுத்து ஒரு மாதம் ஆகி இருந்தாலும் எனக்கு என்னவோ உன்னையும், இந்த ராகினி என்கிற பெயரையும் ரொம்ப நாளைக்கு முன்னாடி கேட்ட மாதிரி இருக்கு இன்னைக்கு தான் எனக்கு அந்த ஞாபகம் வருது ஆனா எங்கேன்னு தான் சரியாக ஞாபகம் வரல” என்று கூற
அவனைப் பார்த்து தனக்குள்ளேயே சிரித்துக் கொண்டவள்
“நான் முன்னாடியே சொல்லிட்டேன் மை டியர் மிஸ்டர்.ஹஸ்பண்ட் கார்த்திக் உங்களை சுற்றி இருக்கும் விடயங்களை எல்லாம் நன்றாக கவனிங்க அப்போ எல்லாம் புரியும் ஆனா இப்போதைக்கு நான் எதுவும் சொல்ல மாட்டேன் நீங்க என்ன கேட்டாலும் என் காது கேட்காது” அவனைப் பார்த்து கண்ணடித்தவாறே கூறி விட்டு அங்கிருந்து சென்றுவிட அவனோ சிறு புன்னகையுடன் தன் தலையை அழுந்தக் கோதிக் கொண்டு நின்றான்.
“சரியான வாலுப்பொண்ணு போல!” அவளது நடவடிக்கைகளைப் பார்த்து சிரித்துக் கொண்டு நின்ற கார்த்திக்கின் மனதிற்குள் சட்டென்று ஏதேதோ எண்ணங்கள் அலை மோத அவன் சந்தோஷம் கொண்ட அந்த தருணம் இப்போது அவனை வெறுமையாக சூழ்ந்து கொண்டதைப் போல இருந்தது.
அந்த வீட்டின் ஹாலின் தூணின் பின்னால் ஒளிந்து நின்று அவனது முக மாற்றத்தை எல்லாம் கவனித்துக் கொண்டிருந்த ராகினி
‘ரைட்டு வேதாளம் மறுபடியும் முருங்கை மரம் ஏறிடுச்சு போல! இது திருந்தாது!’ என்றவாறே தன் தலையில் தட்டிக் கொண்டு வழக்கம் போல அதை இயல்பாக எடுத்துக் கொண்டு மீண்டும் தன் வேலைகளை கவனிக்கத் தொடங்கினாள்.
ஒரு வார காலத்திற்குள் அவசர அவசரமாக திருமண ஏற்பாடுகளை எல்லாம் செய்து முடிந்திருந்ததால் கணக்கு வேலைகள் மற்றும் இதர வேலைகளை எல்லாம் சரி பார்ப்பதற்கே பெரியவர்கள் இருவருக்கும் நேரம் சரியாக இருக்க எப்போதும் வேலை வேலை என்று இருக்கும் கார்த்திற்கு இப்படி எந்த வேலையும் இல்லாமல் இருப்பது ஏனோ வெகு சோர்வாக இருந்தது.
வழக்கமாக தான் ஓய்வாக இருக்கும் நேரங்களில் தன் தங்கை துளசியுடன் பேசி சிரித்துக் கொண்டே தன் நேரத்தை கடத்தி விடுபவனுக்கு இப்போது அவள் ராகினியுடன் பேசிக் கொண்டிருப்பதை பார்த்து அவளோடு வழக்கம் போல சகஜமாக சென்று பேச முடியவில்லை.
பெண்கள் இருவரும் வீட்டின் முற்றத்தில் உள்ள மல்லிகை பந்தலின் கீழ் அமர்ந்து கொண்டு அன்று பறித்த மலர்களை எல்லாம் மாலை நேர பூஜைக்காக கோர்த்துக் கொண்டிருக்க கார்த்திக்கோ சற்று தள்ளி நின்று கொண்டு அவர்கள் இருவரையும் வேடிக்கை பார்த்துக் கொண்டு நின்றான்.
துளசியுடன் இயல்பாக கதை பேசிக் கொண்டே தற்செயலாக அவனின் புறம் ராகினி திரும்ப அவள் தன்னைப் பார்ப்பதைக் கண்டு கொண்டவன் அவசரமாக தன் தொலைபேசியை எடுத்து கொண்டு அதில் எதையோ மும்முரமாக பார்ப்பது போல பாவனை செய்ய அவனைப் பார்த்து தனக்குள்ளேயே சிரித்துக் கொண்டவள்
“துளசி உங்க அண்ணன் என்ன குட்டி போட்ட பூனை மாதிரி நம்ம இருக்குற பக்கமே உலாவிட்டு இருக்காங்க என்ன விஷயம்?” என்று அவன் நின்று கொண்டிருந்த புறம் கண்களால் ஜாடை காட்டியவாறு கேட்க
“அண்ணா இங்க இருக்காரா?” என்றவாறே ஆச்சரியமாக திரும்பி பார்த்த துளசி பின்னர் ஏதோ நினைவு வந்தவளாக
“அது வந்து அண்ணி அண்ணா பிசினஸை பொறுப்பெடுத்த அப்புறம் எப்போதாவது தானே வீட்டில் இருப்பாங்க அப்படி இருக்கும் நேரத்தில் எல்லாம் என் கூடத் தான் பேசிட்டு இருப்பாங்க அது உங்களுக்கும் தெரியும் தானே? இப்போ சாருக்கு ஒரு வாரம் லீவு புதுசா பொண்டாட்டி வந்ததும் தங்கச்சி கூட வந்து பேச வெட்கமோ என்னவோ?” என்று கூற அவளை முறைத்து பார்த்தவள் கார்த்திக்கையும் ஒரு முறை திரும்பி பார்த்து முறைத்து விட்டு தன் கையிலிருந்த பூவை சட்டென்று அங்கிருந்த முக்காலி மீது போட்டாள்.
“என்ன அண்ணி ஆச்சு? திடீர்னு பூவை போட்டுடீங்க?”
“உங்க அண்ணனுக்கு அவரோட தங்கச்சி கூட பேச நான் தடையாக இருக்கேனா?”
“அய்யோ அண்ணி நான் அப்படி சொல்லல அண்ணன் கொஞ்சம் கூச்ச சுபாவம் உள்ளவரு அதனால்தான் தயங்கி இருக்காரோன்னு சொல்ல வந்தேன்” என்ற துளசி சிறிது நேரம் யோசித்து பார்ப்பது போல பாவனை செய்து விட்டு
“ஆனாலும் நீங்க சொல்ற மாதிரியும் இருக்கலாம் போல!” ராகினியை பார்த்து நக்கலாக சிரித்துக் கொண்டே கூற
“அடிங்!” என்றவாறே அவளது தோளில் தட்டியவள்
“ஏன் துளசி ஒரு வேளை இப்படியும் இருக்கலாமே?” என்று கூறினாள்.
“எப்படி?”
“அவரு என் கூட தனியாக பேச வந்து நீ நடுவில் இருப்பதால் தயங்கி நிற்கலாம் இல்லையா?”
“என்னது? இல்லை இல்லை அப்படி எல்லாம் இல்லை எங்க அண்ணன் என்னை அப்படி எல்லாம் நினைக்க மாட்டாரு”
“அது நேற்று வரைக்கும் துளசி கண்ணா! இன்னைக்கு உனக்கு அண்ணியும் வந்தாச்சு இல்லை சரி நமக்கு எதற்கு வம்பு? அவரையே கூப்பிட்டு கேட்டுடலாம்” என்று விட்டு எழுந்து கொண்ட ராகினி கார்த்திக்கை நோக்கி செல்ல
அவள் தன்னை நோக்கி வருவதை ஓரக்கண்ணால் கண்டுகொண்டவன் சற்று தயக்கத்துடன் மெல்ல மெல்ல பின்வாங்க
‘எங்க ஓடப் பார்க்குறீங்க? கல்யாணம் ஆகியும் இன்னும் இந்த வெட்கப்படுவதை நிறுத்தல இதற்கு இன்னைக்கே ஒரு வழி கட்டுறேன்’ என தனக்குள்ளேயே நினைத்து கொண்டு அவனின் முன்னால் வேகமாக வந்து நின்று
“என்ன இது?” என்று கேட்டாள்.
“என்ன? ஒண்ணும் இல்லையே! நான் சும்மா தான் நின்னுட்டு இருக்கேன்”
“அது தான் என்னன்னு கேட்டேன் ஒண்ணு வீட்டுக்குள்ள இருக்கணும் இல்லையா வெளியே வந்து ஆளுங்க இருந்தா அவங்க கூட இருக்கணும் அதை விட்டுட்டு இப்படி எதோ ஆடு திருட வந்தவன் மாதிரி அங்கேயும் இங்கேயும் பார்த்துட்டு இருந்தா என்ன அர்த்தம்?”
“இல்லை சும்மா தான்!”
“அய்யோ மை டியர் மிஸ்டர் ஹஸ்பண்ட் கார்த்திக்! இது உங்க வீடு, அவ உங்க தங்கச்சி, நான் உங்க மனைவி இப்படி எல்லாம் உங்களோடது தான் அதற்கு அப்புறம் என்ன தயக்கம் உங்களுக்கு? உங்களுக்கு துளசி கூட பேசணும் அவ்வளவு தானே? வந்து பேசுங்க வாங்க!” ராகினி கார்த்திக்கின் கையை பிடித்துக் கொண்டு பந்தலை நோக்கி அழைத்துச் செல்ல போக
“இல்லை ராகிணி வேணாம் நீங்க இரண்டு பேரும் பேசிட்டு இருக்கும் போது நான் வந்து அங்கே எப்படி?” அவன் தயக்கத்துடன் தன் கையை பின்னிழுத்துக் கொண்டான்.
அவனது செய்கைகளைப் பார்த்து சிறு புன்னகையுடன் அவன் முன்னால் வந்து நின்றவள்
“உங்க தங்கச்சி கூட பேச நான் தடையாக இருக்கேனா?” கேள்வியாக அவனை நோக்க கார்த்திக்கின் தலை அவசரமாக மறுப்பாக அசைந்தது.
“அப்போ வேறு என்ன?”
“இல்லை ராகினி நான் உன்னை பற்றி சரியாக இன்னும் எதுவும் தெரிஞ்சுக்கல நான் அங்கே வந்தேன்னா எப்போதும் போல துளசி கூட பேசிட்டு இருப்பேன் உன்னோட சகஜமாக பேச வருமோ தெரியாது அதோடு எனக்கு அவ்வளவு சகஜமாக எல்லோர் கூடவும் இரண்டு, மூணு நாளிலேயே பேச வராது அப்புறம் அங்கே நீ தனியாக ஃபீல் பண்ணிடுவேன்னு தான்!”
‘யப்பா நல்லவரே! நீ இவ்வளவு தூரம் எல்லாம் யோசிப்பியா ராசா!’ தன் மனதிற்குள் அவனுக்கு கவுண்டர் கொடுத்து கொண்டவள்
“அதெல்லாம் ஒன்னும் ஆகாது மிஸ்டர் ஹஸ்பண்ட் கார்த்திக்! நீங்க தானே சொன்னீங்க என்னைப் பற்றி எதுவும் தெரியாதுன்னு அப்போ இப்படி அப்பப்பப்போ எல்லார் கூடவும் பேசும் போது வந்து பேசி என்னைப் பற்றி தெரிஞ்சுக்கோங்க வாங்க!” என்று விட்டு முன்னே நடந்து செல்ல கார்த்திக்கும் அவளைப் பின் தொடர்ந்து நடந்து சென்றான்.
“என்ன அண்ணி ரொம்ப நேரமா அண்ணா கூட பேசிட்டு இருந்தீங்க? உங்க கூட தான் பேச வந்தேன்னு அண்ணாவை சொல்ல கேட்டுட்டு இருந்தீங்களா?”
“அட விடுப்பா! விடுப்பா! அரசியல்ல இதெல்லாம் சகஜம் தானே! உங்க அண்ணா உன் கூட தான் பேச வந்தாராம் போதுமா?”
“நான்…” கார்த்திக் அவளது கூற்றுக்கு பதிலளிக்க போக
அவனை பார்த்து வேண்டாம் என்பது போல கண்களால் கெஞ்சியவள்
“சரி சரி உங்க அண்ணன் கூட நீயே பேசு நான் போய் எங்க அண்ணா கூட பேசுறேன் எனக்கு ஒண்ணுக்கு மூணு அண்ணாங்க இருக்காங்க” என்று விட்டு அங்கிருந்து எழுந்து கொள்ள கார்த்திக்கின் பார்வை அவளையே நோட்டம் விட்டு கொண்டிருந்தது.
“எங்க அண்ணனைப் பற்றி எனக்கு தெரியாமல் இருக்குமா? அவரு யாரு என் அண்ணன் ஆச்சே” தான் சொன்னது நடந்து விட்ட குதூகலத்தில் துளசி சந்தோஷமாக, ஆர்ப்பாட்டமாக பேசிக் கொண்டிருக்க அவளருகில் அமர்ந்திருந்தவன் பார்வையோ நடந்து சென்று கொண்டிருந்த தன் மனைவியின் மேலேயே நிலைத்திருந்தது.
‘என்னோட குடும்பத்தில் உள்ளவங்க சந்தோஷத்தை ஒவ்வொரு விடயத்திலும் யோசித்து யோசித்து செய்யுறாளே! யாரு இவ?’ கார்த்திக் சிந்தனையோடு ராகினியைப் பார்த்து கொண்டு அமர்ந்திருக்க வீட்டை நோக்கி நடந்து சென்று கொண்டிருந்தவள் சட்டென்று தன் நடையை நிறுத்தி விட்டு மீண்டும் அவனை நோக்கி நடந்து வந்தாள்.
அவள் தன்னை நோக்கி நடந்து வருவதைப் பார்த்ததும் தான் அவளை வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்ததை அவள் கண்டு கொண்டு விட்டாலோ என்ற பதட்டத்துடன் கார்த்திக் தன் பார்வையை தாழ்த்தி கொள்ள அவளை நெருங்கி வந்தவள் சட்டென்று குனிந்து அவனருகில் இருந்த தன் தொலைபேசியை எடுத்து கொண்டு
“என் போனை எடுக்க வந்தேன்” இருவருக்கும் பொதுவாக கூறுவது போல கூறி விட்டு
“சைட் அடிக்கவே இப்போ தான் ஆரம்பிச்சு இருக்கீங்களா மிஸ்டர் ஹஸ்பண்ட் கார்த்திக்? ரொம்ப கஷ்டம்!” என அவனுக்கு மாத்திரம் கேட்கும் வகையில் மெல்லிய குரலில் கூறி விட்டு சென்று விட அவனுக்கோ அவளது கேள்வி மிகவும் அதிர்ச்சியாக இருந்தது.
தான் பார்த்ததை அவள் எவ்வாறு கண்டு கொண்டால் என்ற யோசனையுடன் கார்த்திக் மீண்டும் அவளைத் திரும்பி பார்க்க வீட்டு வாயில் கதவின் மேல் சாய்ந்து நின்று அவனைப் பார்த்து கையசைத்தவள் பறக்கும் முத்தம் ஒன்றை அவனை நோக்கி கொடுத்து விட்டு செல்ல இம்முறை அதிர்ச்சியில் அவன் எழுந்தே நின்று விட்டான்.
“அண்ணா என்ன ஆச்சு?” துளசியின் கேள்விக்கு ஒன்றும் இல்லை என்பது போல தலையசைத்து விட்டு சாவி கொடுத்த பொம்மை போல கார்த்திக் வீட்டை நோக்கி சென்று விட அவளும் தன் தோளை குலுக்கி கொண்டு தன் பூக்கள் கோர்க்கும் வேலையை கவனிக்க தொடங்கினாள்.
அந்தி சாய்ந்து நிலவும் வானில் உலா வரத் தொடங்கியிருக்க எல்லோரும் தங்கள் வேலைகளை பார்த்துக் கொண்டிருக்க கார்த்திக் மாத்திரம் ராகினியைப் பற்றியே சிந்தித்துக் கொண்டிருந்தான்.
அவனது முகத்தில் இருந்த சிந்தனை ரேகைகள் எல்லாம் தனக்கானது தான் என்று ராகினிக்கு தெரிந்திருந்தாலும் அவள் அது தனக்கு தெரியும் என்பது போல காட்டிக் கொள்ளாமல் இருக்க எவ்வளவோ முயன்றும் அவள் மனம் அதற்கு ஒத்துழைக்கவில்லை.
இத்தனை வருடங்களாக அவன் முன்னால் வராமல் இருந்து இவ்வளவு காலத்தை வீணடித்து விட்டோமோ என்று கூட அவளுக்கு அப்போது யோசனை தோன்றாமல் இல்லை.
அவனிடம் தன்னைப் பற்றி எல்லா விடயங்களையும் கூறி விடலாமா என்று அவள் மூளை யோசிக்க அவள் மனமோ
‘காதல் என்ற உணர்வு அடுத்தவர் சொல்லி வருவதில்லை அது தானாக உருவாக வேண்டும் கார்த்திக் மனதிற்குள் உன் மேல் எப்போது காதல் வருகிறதோ அன்று நீ சொல்ல நினைக்கும் விடயங்களை சொல்லு! இப்போதைக்கு உன் காதலை அவனுக்கு உணர்த்து!’ என்று அவளுக்கு கட்டளையிட அவளும் இனி வரும் நாட்களில் அவனுக்கு தன் காதலை மட்டுமே உணர்த்த வேண்டும் என்று தனக்குள் உறுதியாக முடிவெடுத்துக் கொண்டாள்.
யார் என்ன தான் நினைத்தாலும் அது அது நடக்க வேண்டிய நேரத்தில் தானே நடந்ததாக வேண்டும் அது தானே கடவுளின் நியதி!
இரவுணவை முடித்து விட்டு எல்லோரும் தங்கள் அறைகளுக்கச் சென்று விட கார்த்திக் ராகினியிடம் பேச வேண்டும் என்ற எண்ணத்தோடு சமையலறையைச் சுற்றியே வலம் வந்து கொண்டிருந்தான்.
அவன் தன்னிடம் பேசத் தான் காத்திருக்கிறான் என்பதை புரிந்து கொண்ட அவளும் சிறிது நேரம் அவனோடு விளையாடிப் பார்க்கலாம் என்ற எண்ணத்தோடு தன் வேலைகளை தாமதப்படுத்த மறுபுறம் அவளது கணவன் பொறுமை இழந்து தங்கள் அறையை நோக்கி தஞ்சம் அடைந்திருந்தான்.
அவனைக் காக்க வைத்தது போதும் என்று நினைத்த படி சமையலறையை விட்டு வெளியே வந்த ராகினி வெற்றிடமாக இருந்த இடத்தைப் பார்த்து விட்டு
“அய்யய்யோ! ரொம்ப நேரம் காக்க வைத்து விட்டோமோ? பாவம் கார்த்தி!” தனக்குள்ளேயே பேசிக் கொண்டு வேகமாக தங்கள் அறையை நோக்கி செல்ல அங்கே அவளை வரவேற்க அவள் எதிர்பாராத விடயம் ஒன்று காத்திருந்தது.
“ஸாரி மிஸ்டர் ஹஸ்பண்ட் கார்த்திக் ரொம்ப நேரம் காக்க வைத்து விட்டேனா?” என்றவாறே சிரித்துக் கொண்டே ராகினி தங்கள் அறைக் கதவை திறந்து உள்ளே நுழைய அங்கே அவளது மனாளன் கையில் வைத்துக் கொண்டு நின்ற பொருளைப் பார்த்து அவளுக்கு அதிர்ச்சியில் வேர்த்துக் கொட்ட ஆரம்பித்தது…..