கனவு 11
கனவு 11
அத்தியாயம்-11
நிச்சயம் முடிந்த ஒரு வாரத்தில் கௌசிகா தன் தந்தையிடம் பேசினாள். “அப்பா
உண்மையாவே தான் சொல்றேன்” என்றாள் கௌசி.
“இல்லைமா நான் இதுக்கு ஒத்துக்க மாட்டேன்” என்றார் வரதராஜன் பிடிவாதமானக் குரலில்.
“ஏன் அப்பா.. நிச்சயம் ஆனோனே நான் அடுத்தவள் என்ற நினைப்பு வந்துருச்சா?” என்று வாடிய முகத்துடன்
கௌசிகா கேட்க வரதராஜன் பதறினார்.
“என்ன பாப்பா நீ… உன் கல்யாணத்துக்கு
உன்கிட்டையே பணமா.. முடியாது” என்றார்.
“அப்பா.. நான் சம்பாதித்து சேர்த்தியது தானே.. வச்சுக்கங்கப்பா.. நீங்க நம்
இடத்தை எல்லாம் விக்க வேண்டாம்” என்று அவரின் கையை ஆறுதலாகப்
பற்றி சொல்ல “உனக்கு எப்படித் தெரியும் பாப்பா” என்று வரதராஜன் கேட்க “அன்னிக்கு நான் வரும்போது
நீங்க பேசுனது என் காதுல விழுந்துச்சு அப்பா” என்றாள் கௌசிகா.
“அப்பா.. என் மேல உண்மையாவே பாசம்
இருந்தா இதை எடுத்துக்கங்க..
இல்லைன்னா வேண்டாம்” என்று மூன்று லட்சத்தை டேபிளில் வேகமாக வைத்தவள் எழுந்து சமையல் அறைக்குள் புகுந்துவிட்டாள்.
மகளின் பிடிவாதத்தை அறிந்தவர் அரை மனதுடனே அதை எடுத்தார்.
கௌசி வேலைக்குச் செல்வதை மாப்பிள்ளை வீட்டார் விரும்பவில்லை..
கல்யாணத்திற்கு ஒரு வாரம் முன் குருவின் தந்தை தேவராஜ் போன் செய்திருந்தார்.
“எங்க வீட்டு மருமகள் வேலைக்கு செல்வதா? அப்படியே வீட்டில் சும்மா
இருக்கப் பிடிக்கவிலனாலும் குருவோடு போய் பிஸ்னஸைப் பார்க்கட்டும்” என்று போன் பண்ணி சொன்னார் குருவின்
தந்தை தேவராஜன். வரதராஜன் தான் தன் மகளின் புகுந்ந வீட்டை நினைத்துப்
பெருமை கொண்டார். பெண் அடுத்த இடத்தில் வேலைக்குப்
போக வேண்டாம்.. வேண்டும் என்றால் மகனுடனே ஆபிஸிற்குச் செல்லட்டும்
என்று எத்தனை வீட்டில் சொல்லுவார்கள் என்று நினைத்தவரின் மனம் நிறைந்தது.
தேவராஜ் சொன்னதை வரதராஜன் கௌசியிடம் எடுத்துச் சொல்ல “சரிப்பா”
என்று ஒற்றை வார்த்தையில் முடித்து விட்டாள் கௌசி. கௌசி வாதம் செய்வாள் என்று எண்ணியவருக்கு
ஆச்சரியமே..
“என்னடி எதுக்கு எடுத்தாலும் ஏதாச்சும் பேசுவ… இப்போ ஒரே வார்த்தையில சரி-ன்னு சொல்ட” என்று முகவாயில் கை
வைத்துக் கேட்டார் ஜெயா.
அதற்கு ஒரு சின்ன புன்னகையை மட்டும்
உதிர்த்துவிட்டு கௌசிகா நகர்ந்து விட்டாள். அவளே இதை எதிர் பார்த்ததுதான். எப்படியும் இவ்வளவு
வசதியாக இருப்பவர்கள் வேலைக்கு அனுப்ப மாட்டார்கள் என்று அவள்
நினைத்தது தான்.
அதுவும் இல்லாமல் கௌசியால் வேலையில் முழுமையாக மூழ்க
முடியவில்லை.. மனம் விக்னேஷை நினைத்தபடியே இருந்தது. “ச்சி இது தப்பு
கௌசி.. இன்னொருவனுக்கு நீ நிச்சயம் ஆனவள்.. விக்னேஷை நினைக்காதே”
என்று மூளை எச்சரிக்க “இவனை எப்படி நினைக்காமல் இருப்பது.. குழந்தையின் கையில் உள்ள பொம்மையைப் பிடுங்கியது போல இருக்கிறதே” என்று
மனம் கிடந்து அடித்தது.
மேலும் நிச்சயம் ஆனதில் இருந்து ஜீவா.. மதி.. விக்னேஷ் மூவரும் அவளை வெளியே கூப்பிடுவதே இல்லை.. அதற்கு
அவர்களே ஒரு காரணம் கற்பித்தனர்..
“கௌசிக்கு நிச்சயம் ஆயிருச்சு.. எப்படியும் குருகிட்ட பேசிட்டு இருப்பா.. அவளும் கொஞ்சம் அவனைப் பற்றி
தெரிந்து கொள்ளட்டும்” என்று ஜீவா அனைவரும் கூடியிருந்த போது தன் அன்னையிடம் சொன்னான்.
விக்னேஷும் எப்போதாவது கௌசிக்கு கூப்பிடுவான்.. அதுவும் பக்கத்தில்
நான்சியை வைத்துக்கொண்டு.. அவன்
கேட்பதற்கு மட்டும் பதிலை சொல்லிவிட்டு வைத்து விடுவாள்.
நிச்சயம் ஆன ஒன்றரை மாதத்தில் இருந்து கௌசியின் வழக்கம் இதுவே.. காலையில் வேலைக்கு செல்வது.. மாலை வந்து தன்னுடைய அறையை
சாத்திக் கொண்டு படுக்கையில் கிடந்து
எதையாவது வெறித்துக் கொண்டிருப்பது. இல்லையென்றால் ப்ரௌனியுடன் இருந்து, எங்கோ பார்வையைப் பதித்தபடி அதை நீவிக் கொண்டு இருப்பாள்.
இப்போது வேலை வேண்டாம் என்று சொல்லவே அதற்கும் சரி என்று விட்டாள்.
பட்டாம்பூச்சியாய் மூவருடன் சுற்றித் திரிந்தவளுக்கு அவர்களைப் பார்க்க
முடியாமல் மனம் அழுதது.
“பாரு ஜெயா.. எம் பொண்ணுக்கு பொறுப்பு நல்லாவே வந்திருச்சு.. எப்படி
மாறிட்டா பார் பாப்பா.. ” என்று அவர் பெருமையாகப் பேசிக்கொண்டு இருக்க
ஜெயாவிற்கு தான் உள்ளுக்குள் ஏதோ நெருடலாய் இருந்தது. ஏனோ கல்யாணப்
பெண்ணிற்கு உண்டான கலை
கௌசியிடம் இல்லாததைக் கவனித்தார் ஜெயா. கேட்கலாமா என்று நினைத்தவர் “சரி பிறந்த வீட்டை விட்டுப் போகும்
கவலையாக இருக்கும்” என்று நினைத்து அவளிடம் அப்புறம் இதைப் பற்றிப் பேசுவோம் என்று விட்டு விட்டார்.
கல்யாணத்திற்கு ஒருவாரம் முன்பே எல்லோரும் கௌசியின் வீட்டில் தங்க
ஆரம்பித்திருந்தனர். அப்போதும் கௌசி அறையிலேயே கிடந்தாள். யாரிடமும் எதுவும் பேசாமல் அறைக்குள்ளேயே
நத்தையாய்ச் சுருங்கினாள். திருமண நாளை எல்லோரும் ஆவலுடன் எதிர்பார்க்க கௌசிகாவிற்கு “ஏதாவது
நடந்து கல்யாணம் தானாக
நின்றுவிடாதா” என்று இருந்தது. காரணம் குருவுடன் மனம் ஒன்றி வாழவே
முடியாது என்று கௌசிகாவிற்கு நன்கு
தெரிந்தது.
“அம்மா…” என்று கல்யாணத்திற்கு வாங்கி வைத்த சீர்களை பார்த்துக்
கொண்டிருந்த ஜெயாவைக் கூப்பிட்டாள் சந்தியா.
“என்னடி…” என்று கேட்டவரிடம்
“கல்யாண ப்ளவுஸ் மதி அண்ணி குடுத்துவிட்டாங்க .. ஆனா கௌசி எங்க.. அவளக் காணோம்” என்று கேட்டாள் சந்தியா.
“ஏன்டி.. நான் என்ன மடியிலா
வச்சிருக்கேன்… இங்க தான் இருப்பா.. போயிப் பாரு..” என்று வேலையில்
மூழ்கியிருந்தவர் எரிச்சல் பட “அம்மா.. நாளைக்கு எனக்கு டெஸ்ட் இருக்கு.. நான் போய் செமஸ்டர்க்கு படிக்கிறேன்.. நீங்க குடுத்திடுங்க” என்று அவள் பறந்துவிட்டாள்.
கௌசியைத் தேடி கௌசியின்
அறைக்குச் சென்ற ஜெயா அவள் அங்கு இல்லாது போகவே அந்த ப்ளவுஸை
கௌசியின் பெட்டில் வைத்துவிட்டுத் திரும்பியவர் அப்படியே நின்றார்.
யாரோ விசும்பும் சத்தம் கேட்டவர்.. அது பாத்ரூமிலிருந்து வர கௌசிதான் அழுவது என்று கண்டுபிடித்தார்.
எதற்காகவும் இல்லை… அந்த
நான்சியால் தான்.. கௌசிக்கு போன் செய்தவள் “ஹாய் கௌசி… நான் தான் நான்சி பேசறேன்.. எப்படி இருக்க?
எப்படியும் கல்யாணப் பொண்ணு ஜாலியாதான் இருப்ப…” என்று நான்சி
சிரிக்க கௌசி கண்களை எரிச்சலும் கோபமுமாக இறுக மூடித் திறந்தாள்.
“சொல்ல வந்த விஷயத்தை
சொல்லிடறேன் கௌசிகா .. இன்னிக்கு விக்னேஷ் என் வீட்டுக்கு வந்திருந்தார்..
இப்போதான் கிளம்பினார்.. ரொம்ப டயர்டா இருக்க மாதிரி தெரியறார்.. கொஞ்சம் பாத்துக்கங்க..” என்று அவள்
அக்கறையைக் காட்ட அவள் பேச்சு கௌசிக்கு நெஞ்சு வரை கசந்தது. விக்காவிற்கு அவள் வீட்டில் என்ன வேலை என்று நினைக்கவே கண்கள்
கரிக்க ஆரம்பித்தது கௌசிக்கு.
“கௌசி லைன்ல இருக்கியா?” என்று கேட்க “ம்ம்” என்று மட்டும் பதில் அளித்தாள் கௌசி.
“எல்லா வேலைகளையும் நல்லா கத்துக்கோ யாராச்சும் கிட்ட கேட்டு.. இன்னும் மேரேஜ்-க்கு ஒரு வாரம் தான் இருக்கு. உனக்கு அம்மா இருந்திருந்தா
இது எல்லாம் சொல்லிக்
குடுத்திருப்பார்கள்.. அவங்க தான்” என்று அவள் பேசப் பேச கௌசிகா கட் செய்து விட்டாள்.
அவள் தெரிந்து பேசுகிறாளா இல்லை தெரியாமல் பேசுகிறாளா என்று கௌசிக்குப் புரியவில்லை.. ஆனால் அவள் பேச்சு கௌசியை ரொம்பவுமே
பாதித்து விட்டது. பாத்ரூமிற்குள் சென்றும் அழுகை அடங்கவில்லை
கௌசிக்கு. இன்னும் ஒருவாரம் என்று சொன்னதே காதில் ஒலித்தது. கௌசிக்கு
தன் வாழ்க்கையை நினைத்து மிகவும் பயமாக இருந்தது. அழுது முடித்தவள் தன்
டி சர்ட்டால் கண்களைத் துடைத்துக் கொண்டு வெளியே வர தன் மூத்த
அத்தை ஜெயா பெட்டில் தன் டைரியுடன் உட்கார்ந்திருப்பதைக் கண்டு
பேயறைந்தால் போல நின்று விட்டாள். அவள் அந்த டைரியைப் படித்துக் கொண்டு இருந்த போது தான் நான்சி
கூப்பிட்டது. அவள் பேசிய பேச்சில் மறந்து பெட்டின் மீதே வைத்து விட்டுச் சென்றிருந்தாள்.
“அ… த்… தை” என்று நடுங்கிய குரலுடன் பக்கத்தில் போக ஜெயா அவளைக் கேள்வியாய்ப் பார்த்தார்.
“யாருடி அந்தப் பையன்?” – ஜெயா ஆதங்கமானக் குரலில்.
“…..” – கையைப் பிசைந்து கொண்டே பதில் பேசாமல் நின்றாள் கௌசி.
போய்க் கதவைச் சாத்தி தாழிட்டு விட்டு வந்தவர் தன் அண்ணன் மகளை அருகில்
இழுத்து “சொல்லுடி என்னத்த மனசுல வச்சிட்டு இப்படித் திரியற?” என்று கேட்ட
அவரின் குரலே கரகரத்தது.
அத்தையின் குரலில் நிமிர்ந்தவள் அவரின் கண்களில் கண்ணீர் கோட்டைக் கண்டாள்.. அவ்வளவு தான்.. தன்னைப்
பாசமாய் வளர்த்தவரின் கண்ணில் கண்ணீரைக் கண்ட கௌசியும் அழுதுவிட்டாள்.
“அத்தைதைதைதை……” என்று அவரைக் கட்டிக் கொண்டு அழுக ஆரம்பித்து விட்டாள். கௌசியின் கண்ணீர் வந்து
அவரின் தோளை நனைக்க அவளை விலக்கிப் பார்க்க கௌசி உடல் தளர்ந்து
போனவள் போல குறுகிக் கொண்டு அழுக அவளைப் பார்க்கப் பார்க்கப் அவருக்கு உள்ளுக்குள் வேதனை ஆனது.
“கௌசி…கண்ணு… இங்க பாரு.. எதுக்கு அழற தங்கம்.. என்னடா ஆச்சு.. இந்த டைரியில் இருப்பதற்கும் நீ அழுவதமும் எனக்கு பயமா இருக்கு டா.. என்னன்னு
சொன்னாத் தானே தெரியும்” என்று அவளின் கண்களைத் துடைத்து விட்டுக் கேட்டார்.
“அத்தை….” என்று அழுகையில்
விக்கினாள்.
“சொல்லு கௌசி.. என்ன இதெல்லாம்” என்று கேட்டவர் அவளை அழைத்துச் சென்று படுக்கையில் உட்கார வைத்து
தானும் படுக்கையில் உடன் அமர்ந்தார்.
சிறிது நேரம் அழுதவள் “நான் ஒருத்தன லவ் பண்ண அத்தை.. ரொம்ப நாளாவே..
ஆனா அது அவருக்குத் தெரியாது.. அப்பா கல்யாணத்தைப் பத்தி பேசுனாரு.. அப்போ சொல்லலாம்-னு நினைச்சப்ப
தான். அவன் இன்னொரு பொண்ணும் லவ் பண்ணிட்டு இருக்கிறது தெரிஞ்சுது.
அப்பாக்காக மட்டும் தான்
கல்யாணத்துக்கு சம்மதிச்ச அத்தை.. ஆ..னா.. ஆனா.. என்னால அவனை மறக்க முடியல அத்தை” என்று அவர்
மடியில் விழுந்து கதறினாள்.
அவள் அழுதே பார்க்காத ஜெயா.. கௌசி அழுவதை.. அதுவும் ஒருவன் மேல் காதல்
கொண்டு அழுவதைக் காண
அவளுக்காக அவர் மனம் அடித்தது.
“கௌசி எந்திரி..” என்று அவளை எழுப்பியவர் “இங்க பாரு கௌசி.. நான் கேட்பதற்கு பதில் சொல்லு … இங்க பாரு
என்னப் பாரு.. நீ அவன காதலிச்சுட்ட.. ஆனா அவன் இன்னொருத்திப் பின்னாடி
போயிட்டான்… விடு.. ஆனா அதுக்காக நீ இந்தக் கல்யாணத்தில் விளையாடணுமா” என்று கேட்டு அவளை அதிர வைத்தார்.
அத்தை என்று ஏதோ சொல்ல வந்தவளை தடுத்து தன் பேச்சைத் தொடர்ந்தார்
ஜெயா. “இங்க பாரு.. இஷ்டம் இல்லாம நீ இந்தக் கல்யாணத்துக்கு ஒத்துக்கிட்டு
இப்படிக் கஷ்டப்படற.. இன்னும்
கல்யாணத்துக்கு அப்புறம் நீ இதை விட அனுபவிப்ப.. அந்தப் பையன் குருவோட உன்னால வாழ முடியுமா.. நீ வேணும்னா
சொல்லு நான் அண்ணன் கிட்ட பேசற” என்று அவர் சொல்ல கௌசி மறுப்பாகத் தலை அசைத்தாள்.
அவரின் கையைப் பிடித்து யாசிப்பது போல வைத்தவள் “அத்தை.. அப்பா என்னால தான் இப்போ ரொம்ப
சந்தோஷமா இருக்காரு அத்தை.. நீங்களே பாக்குறீங்கள.. இப்போ எப்படி
துள்ளித் திரிஞ்சிட்டு இருக்காருன்னு.. அம்மா இல்லாம இவ்ளோ நாள்
கஷ்டப்பட்டு வளத்துட்டாரு அத்தை.. என்னால எதுமே அவருக்கு பண்ண முடியல அத்தை.. இதையாவது நான்
அவருக்காக பண்றேன்.. அப்பாக்கிட்ட மட்டும் சொல்லிடாதீங்க அத்தை” என்று அவரின் கைகளின் மேலேயே நெற்றியைச் சாய்த்து அழுதாள்.
“அதுக்காக… நீ பிடிக்காம அங்க எப்படி டி போய் இருப்பே” என்று கேட்ட ஜெயாவின் கண்களிலும் கண்ணீர் வழிந்தது.
“நான் நினைச்சது தான் நடக்கல.. அவரு நினைச்சதாது நடக்கட்டும்” என்று கௌசி
முடிக்க ஜெயாவிற்கு மனசு இன்னும் கேட்கவில்லை.
“அத்தை என் மேல சத்தியமா
யாருகிட்டையும் சொல்லக் கூடாது” என்று ஜெயாவின் கையை எடுத்துத் தன் தலை
வைத்துக் கேட்டாள்.
“ஏய்ய்… என்ன கௌசி இது… கையை விடு” என்று அவர் உருவப் பார்க்க கௌசி
அவரின் கையை உடும்பாகப் பற்றி இருந்தாள்.
“இல்ல அத்தை… என் மேல சத்தியம் பண்ணுங்க” என்று பிடிவாதமாகக் கேட்க,
“சரிடி.. சரி.. உன் மேல சத்தியமா யாருக்கும் சொல்ல மாட்டேன்.. சரியா.. கையை விடு” என்று கையை உருவிக்
கொண்டவர் அழதேவிட்டார்.
சின்ன வயதில் இருந்து தான் தூக்கி வளர்த்தவள்.. விளையாட்டுத் தனமாக சுற்றி வந்தவள் இன்று இவ்வளவு
இப்படிப் பேசுவது அவருக்கு கண்களைக் கரித்து விட்டது.
“நீ இவ்வளவு மெட்சூர்ட்டுன்னு
நினைக்கல கௌசி” என்று கண்களைத் தன் சேலைத் தலைப்பால் துடைத்தபடி
சொன்னார் ஜெயா.
“எனக்கு அப்பா சந்தோஷம் தான் முக்கியம் அத்தை” என்று சொன்னாள் எங்கோ வெறித்தபடி. ஆனால் அவளின்
மனதிற்கு மட்டுமே தெரியும் விக்காவின் வார்த்தைக்காக என்றும். அவனை இந்த
ஜென்மத்தில் மரப்பதும் ஒன்று
மரணிப்பதும் ஒன்று என்பதை அவள் நன்றாக உணர்ந்தாள்.
வெளியே சென்று வந்த வரதராஜனின் குரல் கேட்க கண்களைத் துடைத்துக்
கொண்டு எழுந்த ஜெயா, கௌசியின் தலையை வருடி “உனக்கு எல்லாமே நல்லதா அமையும் டி” என்று அவளின்
என்று அவளின் கன்னத்தைப் பிடித்து கண்களைத் துடைத்து விட்டார்.
“மூஞ்சியைக் கழுவிட்டு வா.. போய் சாப்பிடலாம்” என்றுவிட்டு அவர் வெளியே
சென்றுவிட்டார்.
மூஞ்சியைக் கழுவித் துடைத்துவிட்டு வெளியே வர விக்னேஷ், ஜீவா, மதி என
மூவரும் உள்ளே நுழைந்தனர்.
அவர்களைப் பார்த்து கஷ்டப்பட்டு புன்னகையை வரவழைத்தவள் விக்னேஷைக் காண முடியாது ஜெயா அத்தையை நாடிச் சென்றாள். மதி தான்
கௌசியின் கருவலைத்தையும் ஓய்ந்த
தோற்றத்தையும் கவனித்தாள். ஆனால் விக்னேஷும் ஜீவாவும் அதற்கு வேறு மாதிரி காரணத்தைக் கற்பித்தனர்.
“என்னடி உன் ஆள் கூட செம கடலையா டே அன்ட் நைட் ஃபுல்லா.. கண் எல்லாம் சிவந்து டார்க் சர்கில்ஸ் வந்திருக்கு..” என்று வம்பிழுத்தபடி விக்னேஷ் சென்று அவளின் தோளைச் சுற்றி கை போட்டு நின்று கேட்க.. எப்போது அவன்
வம்பிழுத்தாலும் இனிப்பவளுக்கு இன்று
வேப்பங்கொழுந்தாய் கசந்தது. அதுவும் இன்னொருவனுடன்… அவளைக் கல்யாணம் செய்து கொள்ளப் போகிறவன் என்றாலும் அவளால் ஏனோ
மனதளவில் அதை ஏற்க முடியவில்லை.
ஒரு வெற்றுப் புன்னகையையே பதிலாய்
அளித்தவள் தன் அத்தையிடம் சென்று நின்று கொண்டாள் உதவி செய்கிறேன் என்ற பெயரில்.
“பார்ராரா…… நம்ம கௌசி வேலை எல்லாம் செய்யறா… கல்யாணத்துக்கு அப்புறம் முழு நேரக் குடும்பத் தலைவி
ஆகப் போறா” என்று ஜீவா சிரிக்க விக்னேஷும் ஜீவாவும் ஹைபை அடித்துக் கொண்டனர்.
“ஏய்ய்ய் எல்லாரும் ஹால்ல போய் உக்காருங்கடா… சும்ம
தொணதொணன்னு” என்று கௌசியின் நிலையை அறிந்த ஜெயா எரிச்சலைக்
காட்டினார் மகன்களிடம்.
“ஏன் பெரியம்மா.. அடுப்புல இருந்து இறக்குன குக்கர் மாதிரி இருக்கீங்க.. சரி
விடுங்க.. ஏய் நீ வா உன்கிட்ட பேசி எவ்வளவு நாள் ஆச்சு” என்று கௌசியின் கையைப் பிடித்து இழுக்க அவன்
கையிலிருந்து தன் கையை கௌசி உருவிக் கொண்டாள்.
“நான் வரலை.. வேலை இருக்கு” என்று முதுகைக் காண்பித்து திரும்பிக்
கொண்டாள்.
“அவதான் வேலை இருக்குன்னு சொல்றாள்ல… அவ வருவா.. நீங்க மூனு
பேரும் போய் உட்காருங்க” என்று ஜெயா சிடுசிடுத்தார்.
விக்னேஷிற்கு முதல்முதலாய் கௌசி இப்படி விலகி நின்றது என்னவோ செய்தது.. ஆனால் அது என்ன உணர்வு என்று அவன் அறிய முற்படவில்லை..
கோபம் கொண்டவனாய் வந்து ஹாலில் வந்து அமர்ந்து கொண்டான். அவன்
பக்கத்தில் வந்து எதுவும் பேசாமல் அமைதியாய் அமர்ந்தனர் ஜீவாவும் மதியும். மதிக்கு ஏதோ நெருடலாக
இருந்தது. கணவனிடம் தன்
எண்ணத்தைச் சொல்லி வாங்கிக் கட்டிக் கொள்ளவும் அவள் தயாராக இல்லை.
தன்னை சிந்தனையிலேயே மூவரும் அமர்ந்திருந்தனர்.
உள்ளே கௌசி தன் அத்தையின் தோளில் நின்றபடி சாய்ந்து கண்ணீரை
உதிர்த்துக் கொண்டிருந்தாள். அவளின் கண்ணீரை உணர்ந்தவர் விரலை
வைத்து பேசாதே என்று எச்சரித்தார். கண்களைத் துடைத்துவிட்டவருக்கும்
கண்ணீர் வழிந்தது. அதற்குள் மாடிக்கு சென்றுவிட்டு கீழே வந்த வரதராஜன் விக்னேஷ் ஜீவா மதி மூவரையும்
வரவேற்று விட்டு சமையல் அறைக்குள் நுழைய அதற்குள் கௌசியும் ஜெயாவும்
கண்ணீரின் சுவடில்லாமல் நின்றனர்.
“என்னமா… சாப்பாடு ஆச்சா… பாருங்க அவங்களும் வந்துட்டாங்க.. ஆச்சுன்னா
எடுத்து வைங்க” என்று வரதராஜன் சொல்ல சாப்பட்டை எடுத்துப் பரிமாறினர்.
“நீயும் உட்காரு கௌசி…” என்று ஜெயா சொல்ல விக்னேஷின் அருகில் மட்டும் இருந்த இடத்தில் உட்கார்ந்தாள் கௌசி. விக்னேஷ் இறுகின முகத்துடன் உட்கார்ந்து சாப்பிட்டானே தவிர மறந்தும்
கௌசியின் பக்கம் திரும்பவில்லை. அவன் கோபமாக இருக்கிறான் என்று
அவளுக்கு நன்கு புரிந்தது.
சாப்பிட்டுவிட்டு எழுந்தவனுடன் தானும் அரை சாப்பாட்டிலேயே எழுந்து வந்து கையை கழுவினாள். வெளியே
வந்தவனிடம் “விக்னேஷ்” என்று அழைத்தாள்.
“என்ன சொன்ன?” என்று திரும்பியவன் முறைப்பாக அவளிடம் கேட்டான்.
“விக்னேஷ்… ன்னு” என்றாள் கௌசிகா.
“ஓ… விக்கா இப்போ விக்னேஷ்
ஆயிட்டேன்ல…” என்று நக்கலும் கோபமுமாகக் கேட்டவன் “புதுசா உனக்கு
ஆள் வந்துட்டோனே எங்கள எல்லாம் தர்ட் பெர்சன் ஆக்கிட்டயாக்கும்” என்று
கேட்டான்.
“ப்ளீஸ் டா.. இப்படி எல்லாம் பேசாத… இப்போ எதுக்கு இந்தக் கோபம்” என்று
கேட்டவளுக்கு கண்ணீர் நான் வரவா என்று கேட்க அதை அடக்கி உள்ளே வைத்தாள்.
“இல்ல டி.. நான் என் லிமிட்லையே இருந்துக்கறேன்.. உனக்கு நான் கையப் பிடிச்சா கூடப் பிடிக்கல.. விடு.. உனக்கும் நிச்சயம் ஆயிருச்சு ஸோ
அதுதான் கரெக்ட்.. இனிமேலும் பழைய மாதிரி இருந்தா குரு என்ன நினைப்பான்.. அவன் இடத்தில் நானே இருந்தாலும்
கோபம் தான் வரும்” என்றவன் வாய் போனப் போக்கில் பேசிக் கொண்டு இருந்தான். ஆனால் கௌசி தான் கண்ணீர் முத்துக்களை உதிர்த்துக்
கொண்டு இருந்தாள்.
அவளது கண்ணீரைக் கண்டு கைகளால் அதைத் துடைக்கச் சென்றவன் கையை
மறுபடியும் கீழே இறக்கினான். “கௌசி.. இப்போ என்ன சொல்லிட்டன்னு அழுகற..
கண்ணைத் துட” என்று சொல்ல அவள் அப்படியே நின்றிருந்தாள்.
“சாரி டா… உன்ன ஹர்ட் பண்ணிருந்தா” என்று விசும்பியபடி மறுபடியும் அழுதாள்.
“ஏய்… கண்ணைத் துடைக்கப் போறீயா இல்லையா டி” என்று அவன் அடிக் குரலில சீற அவளின் அழுகை அவன்
சொல்லுக்குக் கட்டுப்பட்டு நின்றது.
“என்ன கௌசி.. இப்போதெல்லாம் எப்போ பார்த்தாலும் அழறே.. கல்யாணப் பொண்ணுனா நல்ல கலகலன்னு இருக்க
வேணாமா” என்றவன் கைகளைக் கட்டியபடி நின்றான். அவளின் கண்ணீரைத் துடை என்று அவன் மூளை உந்தியதே அதற்குக் காரணம்.
கண்களைத் துடைத்தவள் “என் மேல கோபமா டா” என்று விவரிக்க முடியாத சோகக் கண்களுடன் கேட்க விக்னேஷ்
அவளின் பார்வையில் அடிப்பட்டுப் போனான்.
இந்தப் பார்வைக்கு என்ன அர்த்தம் என்று சத்தியமாக அவனுக்கு புரியவில்லை..
ஆனால் அவளின் சோகம் அவனைத் தாக்கியது. அவனைப் பொருத்த வரை
கௌசிகா குருவுடன் நன்றாகப் பேசி பழகி புரிந்துகொண்டு இருக்கிறாள். ஒருவேளை நாம பேசுனதுல இவ இப்படி
அழறாளோ என்று பலவாறு யோசித்தான். தலையைச் சிலுப்பி சுயநினைவிற்கு
வந்தவன் “அதெல்லாம் இல்லடி. உன்கிட்ட ஒரு குட் நியூஸ் சொல்லத் தான்
வந்தோம்” என்று பேச்சின் திசையை மாற்றினான்.
அவன் குட் நியூஸ் என்றதும் கௌசி அவனைப் புருவ முடிச்சுடன் பார்க்க.. மதி,
ஜீவா, வரதராஜன், ஜெயா எல்லோரும் ஹாலிற்கு வந்தனர்.