Birunthavanam-12

Birunthavanam-12
பிருந்தாவனம் – 12
சுற்றுலா முடிந்து அனைவரும் ஊருக்கு திரும்பினர்.
பிருந்தா வீட்டில் வெளியூர் செல்வதாக கூறியிருந்தனர். அவர்கள் வர, இரு நாட்கள் ஆகும். அதுவரை, அவள் மாதங்கி வீட்டில் தங்குவதாகத்தான் ஏற்பாடு.
“இன்னும் ரெண்டு நாள் நீ எங்க வீட்டில் தான். மழை விட்டாலும், தூவானம் விடலைங்கிற மாதிரி நமக்கு ஜாலி தான்” வளவளக்க ஆரம்பித்த தோழிகள் சந்தோஷமாக அவர்கள் பேச்சை தொடர்ந்து கொண்டிருந்தனர்.
சற்று தள்ளி அமர்ந்திருந்த கிருஷின் பார்வை இவர்களை சுற்றி தான் இருந்தது.
‘அண்ணா…’ பிருந்தா அப்பொழுது அழைத்தது இப்பொழுது அவன் காதில் மீண்டும் எதிரொலித்தது.
‘அவ தேடி வந்து பேசினப்பவே பேசிருக்கலாமோ?’ அவன் மனம் இப்பொழுது பாசத்தை தட்டி எழுப்பி கொண்டிருந்தது.
‘இத்தனை வருஷமா அப்படியே பார்த்துட்டே போவா. அப்படியே போக வேண்டியது தானே? இப்ப மட்டும் ஏன் பேசினா?’ அவன் மனம் ஒரு பக்கம் சினந்து கொண்டது.
“சரி ஏதோ கோபமா பேசினா, இது தான் சாக்குன்னு மூஞ்சியை திருப்பிக்க வேண்டியது.” முணுமுணுத்தான் கிருஷ்.
‘நானா சண்டை போட்டேன். எத்தனை தடவை, ‘பிருந்தா’… ‘பிருந்தா…’ இவ பெயரை கூப்பிட்டு பின்னாடியே போயிருப்பேன்.
‘போ போன்னு சொல்லிட்டு இன்னைக்கு அண்ணான்னு ஒரு தடவை கூப்பிட்டு நான் பேசலைனா கண்டுக்காம போய்ட வேண்டியது.’ அவன் மனம் பிருந்தாவை வஞ்சனை இல்லாமல் திட்ட ஆரம்பித்தது.
அப்பொழுது, “க்ளுக்…” மாதங்கியின் சிரிப்பு சத்தம் கேட்க, அவன் சிந்தனை அவர்கள் பக்கம் மீண்டும் திரும்பி மாதங்கியின் பக்கம் சென்றது.
‘இவள் முகத்தில் சின்ன சலனம் கூட இல்லையே? இவளுக்கு உண்மையில் என் மேல் துளி கூட காதல் இல்லையா?’ அவன் கண்கள் சுருங்கியது.
‘ஏன் எனக்கு மட்டும் காதல் வந்து தொலைத்தது?’ தனக்கு தானே நொந்து கொண்டான்.
‘நான் இவளை விட்டு ஒதுங்கி செல்ல வேண்டுமா? என் மனதில் தோன்றிய காதலை மனதோடு புதைக்க வேண்டுமா?’ விழி மூடி சிந்தித்தான் கிருஷ்.
‘என்னை காதலிக்காத பெண்ணை தான் திரும்பியும் பார்க்க மாட்டேன்.’ அவன் மனமும் அறிவும் ஒரே கோட்டில் பயணிக்க ஆரம்பித்தது.
தன் கண்களை இறுக மூடி அந்த பயணத்தை உள்வாங்க முயற்சித்தான் கிருஷ்.
வீட்டிற்கு வந்த மாதங்கி, பிருந்தா இருவரும் கதைகதையாக கேரளாவை பற்றி சொல்லி கொண்டிருந்தார்கள்.
மாதங்கி அனைவரும் சிரிக்க சிரிக்க பேசி கொண்டிருந்தாள். அனைவரும் அதை ரசித்து கொண்டிருந்தார்கள். மாதங்கியின் தாய், தந்தை, பாட்டி, தாத்தா, தோழமை என்றாலும் முகுந்தனும் அதே வீட்டில் ஒரு பகுதி போல தான். முகுந்தனின் தாய், தந்தை எல்லாரும் அங்கு இருக்க வீடே கலைகட்டிருந்தது.
பிருந்தா மாதங்கியின் பேச்சை ரசித்து சிரித்தாலும், அவள் மனதில் மெல்லிய ஆசை எட்டி பார்த்தது.
‘இப்படி எல்லாரும் ஒண்ணா இருக்கிறது தானே பிருந்தாவனம் மாதிரி அழகான வாழ்க்கை. என் வீடு இப்படி இல்லையே? அம்மா, அப்பா மட்டும் தான். அதுவும் அப்பா பாதி நாள் வேலை வேலைன்னு வெளிய போய்டுவாங்க.’ அவள் மனம் பிருந்தாவனத்தை எண்ணி ஏங்க ஆரம்பிக்க, அவள் முகம் வாடி அவள் கண்கள் ஏக்கத்தை எடுத்து கொண்டது.
சில நிமிடங்கள் கழித்து அதை கண்டுகொண்ட, அரவிந்த், “பிருந்தா என்ன ஆச்சு? உடம்பு சரி இல்லையா?” அவன் கேட்க, “இல்லை அண்ணா. அதெல்லாம் இல்லை” பிருந்தா மறுப்பாக தலை அசைத்தாள்.
“அவ ரொம்ப நேரமா அப்படி தான் இருக்கா அரவிந்த். பாவம் அவளும் எத்தனை நாள் தான் மாதங்கியின் மொக்கையை தாங்குவா?” முகுந்தன் கேலி போலவே, நானும் உன்னை கண்டுகொண்டேன் என்று சொல்லாமல் சொன்னான்.
“அதெல்லாம் இல்லை முகுந்தன்” என்று பிருந்தா மறுத்தாள்.
மாதங்கி அரவிந்தை அண்ணன் என்று அழைப்பதால், அவர்கள் வீட்டிற்கு வந்து போகும் பிருந்தாவும் அப்படியே அழைத்து பழகிருந்தாள். முகுந்தன் கல்லூரியில் அறிமுகம், அதே பழக்கத்தோடு இப்பொழுதும் அவனை பெயர் சொல்லியே அழைப்பாள் பிருந்தா.
“டேய்…” என்று மாதங்கி முகுந்தனை மிரட்டிவிட்டு பிருந்தாவின் பக்கம் திரும்பி, “வா பிருந்தா ரூமுக்கு போய் ரெஸ்ட் எடுக்கலாம்” என்று தன் தோழியை தன் அறைக்கு அழைத்து சென்றாள் மாதங்கி.
மாதங்கி, பிருந்தா இருவரும் பேசி கொண்டிருக்கையில், அவர்கள் பேச்சு கிருஷை பற்றி வந்தது. கிருஷ் பற்றிய பேச்சில் மாதங்கியின் மனதோரத்தில் மெல்லிய சிந்தனை பரவியது.
அப்பொழுது, மாதங்கியின் அறை கதவு தட்டப்பட்டது. “மாதங்கி நான் கிளம்புறேன். நாளைக்கு என் ஆபீஸ் விஷயமா பெங்களுர் வரைக்கும் போறேன்” முகுந்தன் சொல்ல, “ஓகே டேக் கேர்” என்று மாதங்கி சிரித்தமுகமாகவே கூறினாள்.
சில தூரம் நடந்து சென்ற முகுந்தன், ரெண்டடி எடுத்து பின்னே திரும்பினான்.
“பிருந்தா ஓகேவா?” அவன் கரிசனமாக கேட்க, அவன் கரிசனத்தில் பிருந்தாவின் முகத்தில் மெல்லிய புன்னகை பரவியது.
முகுந்தன் பிருந்தாவை பற்றி அக்கறையாக கேட்க, மாதங்கியின் அறிவு கிருஷ் அவளிடம் காட்டும் அக்கறையை நினைவு கூர்ந்தது. மனதில் ஓடி கொண்டிருந்த கிருஷ் பற்றிய சிந்தனை மேலே எழும்பியது.
“பிருந்தா பத்தி உனக்கு என்ன அக்கறை? முதலில் அக்கறை மாதிரி விசாரிப்பீங்க. அப்புறம் லவ்வுன்னு சொல்லுவீங்க. நீங்க மட்டும் நல்லா படிச்சி வேலைக்கு போகணும். படிக்குற நாங்க மட்டும் எங்க படிப்பை காதல்ங்கிற பேர்ல நட்டாத்துல விட்டுட்டு கல்யாணம்ங்கிற பெயரில் நாசமா போகணும் அது தானே?” என்று மாதங்கி சுள்ளென்று விழ, பிருந்தா பதறி போனாள்.
“மாதங்கி, முகுந்தன் அப்படி என்ன கேட்டுட்டாங்க? நீ ஏன் இப்படி தேவை இல்லாமல் உளறுற?” என்று பிருந்தா பேசி கொண்டே போக, “பிருந்தா…” முகுந்தனின் குரல் அவளை அடக்கியது.
முன்னே சென்று கொண்டிருந்தவன் மீண்டும் பின்னே ரெண்டடி எடுத்து வைத்தான். அவன் கைகளை மார்பில் குறுக்கே கட்டி கொண்டு, மாதங்கியை ஆழமாக பார்த்தான்.
அவன் பார்வையின் தீட்சண்யத்தில் மாதங்கி தன்னை சுதாரித்து கொண்டாள். “ஈ….” என்று அசட்டு சிரிப்பு சிரித்து வைத்து அறைக்குள் நுழைந்து கொள்ள அவள் முயல, அறையின் வழியை அடைத்து கொண்டு கைகளை நீட்டினான் முகுந்தன்.
‘ஐயோ… மாதங்கியை திட்டி விடுவானோ?’ என்று பிருந்தாவின் இதயம் வேகமாக துடிக்க ஆரம்பித்தது.
“மாதங்கி…” அவன் குரல் ஆழமாக ஒலித்தது.
அவள் இப்பொழுது அவன் முகம் பார்ப்பதை தவிர்த்தாள். ‘மாதங்கி இப்படி பதட்டப்படுற ஆள் கிடையாதே.’ முகுந்தன் அவளை பார்த்தபடி கணக்கிட்டு கொண்டிருந்தான்.
“எதுவும் பிரச்சனையா மாதங்கி?” அவன் அக்கறையோடு கேட்க, “எனக்கு என்ன பிரச்சனை? எனக்கு பிரச்சனை வந்தால் உன்னால் தான் வரணும். கிளம்பு… கிளம்பு…” அவள் சிடுசிடுக்க, அவன் கண்கள் சுருங்கியது.
“எனக்கு என் மாதங்கி பத்தி தெரியும்.” அவன் குரலில் அழுத்தம் கூடி இருந்தது.
“அது என்ன என் மாதங்கி?” அவள் இவனை கேலி போல கேட்க, “எஸ்… என் தோழி மாதங்கி! உங்க அண்ணனை விட நீ என் கூட தங்கை மாதிரி அலைந்த நாட்கள் தான் அதிகம். உன்னை சின்ன வயசிலிருந்து பார்க்குறேன். இன்னைக்கு நீ பேசின வார்த்தைகள் நீ இல்லை. அதுவும் என்னை பார்த்து நீ பேசலை.” அவன் நிதானமாக பேசினான்.
“ஆமா, உன்னை பார்த்து பேசலை. அதோ, அந்த சுவற்றை பார்த்து தான் பேசினேன்” அவளும் விடாப்பிடியாக அலட்சியத்தை காட்டினாள்.
அவன் புன்னகைத்து கொண்டான். சற்று தூரம் நடந்தவன் மனம் தாளாமல், “ஏதாவது பிரச்சனைனா சொல்லு மாதங்கி. வழக்கம்போல, விளையாட்டு தனமா நீயே சமாளிச்சிகுலாமுன்னு நினைக்காத. சரியா? நானும் இருக்கோம். உங்க அண்ணனும் இருக்கோம்.” அவன் அவள் மேலும் பேச இடம் கொடுக்காமல், விறுவிறுவென்று சென்றுவிட்டான்.
‘என்ன மாதிரியான மனிதர்கள் இவளை சுற்றி? முகம் பார்த்து, பேசும் விதம் பார்த்து…’ முகுந்தனின் மேல் பிருந்தாவுக்கு மதிப்பு பன்மடங்கு கூடியிருந்தது.
“மாதங்கி…” பிருந்தா அக்கறையாக அழைக்க, “அவசரப்பட்டு, டென்ஷன் ஆகி சொதப்பிட்டேன்ல?” மாதங்கி முகம் சுழித்தாள்.
“எங்க அண்ணன் தான் போலீஸ். ஆனால், இவனுக்கும் போலீஸ் மூளை. எப்படி கண்டுபிடிச்சான் பாரு கேடி. இந்நேரம் கிருஷ் சம்பந்தபட்டிருக்கான்னு கண்டுபிடிச்சிருப்பான்” மாதங்கி தலையில் அடித்து கொண்டாள்.
“அண்ணா கிட்ட சொல்லுவாங்களோ?”என்று பிருந்தா பதட்டமாக கேட்க, “நிச்சயம் சொல்லுவான். ரெண்டும் கூட்டு களவாணிங்க தான். ஆனால், வெளிய சொல்ல மாட்டாங்க. என் கிட்ட நேரடியா கேட்டால் சமாளிக்க வேண்டியது தான். கேட்க மாட்டாங்கன்னு தான் நினைக்குறேன்….” மாதங்கி தன் போல பேசிக்கொண்டிருக்க, பிருந்தாவின் சிந்தனையோ வேறு மாதிரி இருந்தது.
அதே நேரம் கிருஷ் தன் வீட்டில் தன் அறையில் ஓய்வு என்ற பெயரில் ஒதுங்கி கொண்டான்.
அவன் கை விரல்களுக்கு இடையில் அவள் வளையல்கள். அதை அவனின் எண்ண போக்கிற்கிணங்க அங்கும் இங்கும் அசைத்தான்.
‘நான் அவளை விட்டு ஒதுங்க வேண்டுமா?’ இப்பொழுது அவன் அறிவும், மனமும் வேறு பக்கம் பயணிக்க ஆரம்பித்தது.
தன் கண்களை மூடி, வளையலை அவன் அசைக்க பிருந்தாவனத்தில் அந்த வளையோசை மிக ரம்மியமாக ஒலிக்க ஆரம்பித்தது.
அவன் முகத்தில் மெல்லிய புன்னகை. அவள் வாசம் அவனை நிறைக்க, அவனை தொட்டது அவள் பார்வை. அந்த பார்வையில் அவன் பார்த்த காதல்.
எழுந்து அமர்ந்து கொண்டான் கிருஷ்.
“என் மாது என்னை விரும்புறா!” அவன் குரல் உறுதியாக ஒலித்தது.
‘படிக்கனுமுனு சொல்றா. சரி தானே? படிக்கட்டும். வேலைக்கு போகணுமுன்னு சொல்றா போகட்டும். அதுவரைக்கும் நான் காத்திருப்பேன். எனக்கு என்ன அவசரம்?’ தன்னை தானே திடப்படுத்திக்கொண்டான்.
‘ஆனால், அப்புறமும் அவ என்னை வேண்டாமுன்னு சொன்னா, அதுக்கு காரணம் அவ அண்ணனா தான் இருக்கனும். அவ அண்ணனுக்காக நான் அவளை விட்டு ஒதுங்கனுமா? கிருஷ் அவனை வைத்தே வேலையை சாதிப்பான்.’ அரவிந்தை பற்றி எண்ணுகையில், அவன் நிதானம் தவற, அவன் கைகளில் உள்ள வளையலை தடுமாற விட்டான்.
சட்டென கைகளை நீட்டி அவன் மொத்த வளையல்களை பிடிக்க, ஒரு வளையல் மட்டும் கீழே விழுந்து உடைந்தது அவன் காதலில் மெல்லிய கீறல் விழுகிறது என்பதை உணர்த்துவது போல்!
மற்ற வளையல்களை பத்திரமாக அவன் எடுத்து வைத்துவிட்டு உடைந்த வளையலை பார்த்தான். ‘உச்…’ கொட்டி அவன் முகம் வருத்தத்தை வெளிப்படுத்தியது.
“கிருஷ்….” அவன் பாட்டி அவர் அறையிலிருந்து அழைக்க, “இதோ வரேன் பாட்டி…” சத்தம் செய்து கொன்டு. உடைந்த வளையலை சுத்தம் செய்து கொண்டு பாட்டி அறையை நோக்கி ஓடினான்.
அப்பொழுது, அவன் சரியாக சுத்தம் செய்யாத உடைந்த வளையல் அவன் காலை குத்தியது. அவன் அதை அப்பொழுது உணரவில்லை. பாட்டி அறைக்கு செல்ல, “என்னடா காலில் ரத்தம்?” பாட்டி பதறியபடியே கேட்டார்.
“அது கண்ணாடி குத்திருக்குமோ?” அவன் தடுமாற, “நம்ம வீட்டுக்கும் பொண்ணுக்கும் ராசியே இல்லை டா. இப்பவும் இப்படி ஆகுது பாரேன்.” என்று பாட்டி பேச, அவர் பேசிய செய்தியில் உடைந்த கண்ணாடி வளையல் அவன் கால்களுக்கும், ‘மாதங்கி என்னை விலகி விடுவாளோ?’என்ற எண்ணம் அவன் மனதிற்கும் ஒரு சேர வலியை கொடுக்க ஆரம்பித்தது.
பிருந்தாவனத்தில் வலம் வருவோம்…