காதல் யுத்தம்
காதல் யுத்தம்
பகுதி 17
இது என்ன மாயம்
இது எது வரை போகும்
உன்னை பார்த்த நாள் முதல்
பறந்து போகிறேன் மேலே மேலே ………
சஜு மடிப்பு வைத்து கொண்டிருக்க “சஜு…” என்று ஆகாஷ் கத்தியதில், சஜு சலிப்படைந்தாள் ‘இவனோடு ஒரே தொல்லையாக இருக்கிறதே’ என்று அவசரமாக மடிப்பை இடுப்பில் சொறுகி “வரேன்” என்று பதிலளித்து விட்டு, சேலையை சரி செய்து கொண்டு, தட்டியின் அந்தப் பக்கம் சென்றாள்.
அங்கு ஆகாஷ் சட்டையை அணிந்து கொண்டு, இடுப்பில் துண்டுடன் பையில் தனது பாண்ட்டை தேடிக் கொண்டிருந்தான். அதற்குள் ஒரு வேஷ்டி தான் இருந்ததே, தவிர பாண்ட்டைக் காணவில்லை. அதன் பின் தான் சஜுவுக்கு குரல் கொடுத்தான்.
சஜு சென்று அவன் தேடுவதைப் பார்த்து வாய்க்குள் சிரித்து, மனதில் “நீ கல்யாணத்தன்னிக்கு வேஷ்டியோட பட்டப் பாட்டைப் பார்த்து தானே, இதை மாற்றி எடுத்து வைச்சேன்” என்று நினைத்தாள்.
ஆகாஷ் “சஜு பாண்ட்ட காணோம், இந்த வேஷ்டி தான் இருக்கு” என அதிர்வோடு கூற,
சஜு “இருந்த தானே காணாமப் போறதுக்கு, அம்மா தான், நீ புது மாப்பிளையாம், வேஷ்டி தான் கட்டணும்னு சொன்னாங்க”
ஆகாஷ் தன் உதட்டை மடித்து அவளைப் பார்த்து “இம்ம், சரி நீ போ, நா கட்டிட்டு வரேன் “
சஜு வெளியே வந்தாள். கீதா பானைக்கு திருநீர் பூசி, கல்லுக்கு நடுவே வைத்து, சுள்ளிகளையும் அந்தக் கல்லின் இடையில் வைத்து, அரிசியை நீரில் அலசி, வெல்லம் தட்டி வைத்து எல்லாவற்றையும் தயாராக வைத்து இருந்தார்.
ஒரு வழியாக ஆகாஷ் பெல்ட் போட்டு, பட்டு வேஷ்ட்டி கட்டி வெளியே வர, சஜு சுள்ளிகளில் சூடம் ஏற்றி பொங்கல் வைக்க ஆரம்பித்தாள். ஆகாஷ் தன் மாமனாருடன் அமர்ந்து, தன் அழகு மனைவி சஜு, கண்ணைக் கசக்கி கசக்கி, பொங்கல் வைக்கும் அழகை ரசித்து கொண்டிருந்தான்.
மஞ்சு ஆகாஷை அழைக்கவும், அவன் செல்ல, வெற்றிவேல் “மாப்பிள்ள, வேஷ்டிய மடிச்சு கட்டிட்டுப் போங்க ” என்று சொல்ல, வேஷ்டியை மடித்து கட்ட தெரியாமல் விழிக்க, வெற்றிவேல் சொல்லி தர, அப்படியும் அது அவனுக்கு நிற்காமல் வழுக்க, அவன் படாதப் பாடு பட்டான். சஜு அவன் அவஸ்த்தையை ஓரக்கண்ணால் பார்த்து ரசிக்க தவறவில்லை.
பொங்கல் வைத்து முடித்ததும், சாமிக்கு படைத்து, பூஜை செய்தனர். அனைவரும் சாமியை வணங்கினர்.
சஜு ‘நன்றி கடவுளே, என் ஆகாஷை என்னிடம் திருப்பி தந்ததற்கு, மிகவும் நன்றி. என் மனம் ஆறும் வரை, நான் எவ்வளவு தான் கொடுமை படுத்தினாலும் ஆகாஷ் என் மீது கோபப்படாமல், என்னை பொறுத்துக்கொண்டு என்னுடன் இருக்க வேண்டும், அந்த ரமாவை இவன் மறந்து விட வேண்டும் கடவுளே’
ஆகாஷ் ‘கடவுளே, நான் தொலைத்ததாய் நினைத்த பொக்கிஷத்தை திரும்ப எனக்கு கிடைக்க செய்ததற்கு நன்றி தெய்வமே, என் சஜு என்னைப் புரிந்து கொள்ளும் வரை, அவள் செய்யும் கொடுமைகளைத் தாங்க, எனக்கு பொறுமையை கொடுத்து அருள வேண்டும் தாயே’ என இருவரும் வேண்டிக் கொண்டனர்.
மற்ற அனைவரும் சஜு வாழ்க்கை நன்றாக அமைய வேண்டும் என வேண்டினர். பின் அனைவரும் அமர்ந்து சாப்பிட்டனர், ஆகாஷ் சாப்பிட்டு கை கழுவ செல்ல, இவர்கள் அமர்ந்து சாப்பிட்ட இடத்தில், ஒரு புதியவன் சஜு கண்ணை மூடிக் கொண்டு நின்றிருந்தான்.
சஜு “யார்” என்று கேட்டும் பதிலில்லாமல் போக, யார் என்று தெரியாமல் திணறிய சஜு “மஞ்சு யாரு டி சொல்லு” எனக் கேட்க, வந்தவன் சொல்லாதே என்பது போல் தலையாட்ட, மஞ்சுவும் அமைதி காத்தாள். ஆகாஷ் இதையெல்லாம் பார்த்து முகம் கடுகடுக்க, அவர்களை நோக்கி நடந்தான். அதற்குள் கீதா வந்து “டேய் அருண், வந்ததும் அவள கலவரப்படுத்தனுமா? விடு பா அவளை” எனவும்.
வந்தவன் கீதாவை செல்லமாக முறைத்து கையை எடுத்தான். உடனே எழுந்த சஜு “டேய் அண்ணா, எப்படி இருக்க?” என்று இடது கரத்தால் அவன் கரத்தை பிடித்தாள். அருணும் அவள் கைகளை இரண்டு கைகளால் பற்றி கொண்டு “இம்ம், எங்க ஞாபகம் எல்லாம் இருக்கு போலேயே, ஆமா நீ அம்மா அப்பாக்கு வேலையே வைக்காம ஒரு காரியத்தைச் செஞ்சதா சொன்னாங்க? நிஜமா! நீயா இப்படி பண்ண?” என அவன் கேட்க, தன் அண்ணன் தன்னைக் குத்தி காட்டவும், சஜுவுக்கு கண்கள் கலங்க ஆரம்பித்தது.
வெற்றிவேல் “ஏய் அருண் விடுடா, ஏன்டா வந்ததும் வராததுமா கோவில்ல வச்சு அவள அழ வைக்குற”
அருண் “சரி, சரி அழுகுணி அழுகைய நிப்பாட்டு, ஆமா எங்க உன் வீட்டுக்காரர், உன் தொல்ல தாங்காம அதுக்குள்ள ஓடிட்டாரா?” எனச் சிரிக்க, மஞ்சு வாய்க்குள்ளேயே சிரித்தாள்.
சஜு கண்களால் அருணை முறைக்க, அருண் தோளின் மேல் ஒரு கரம் விழுந்தது.
ஆகாஷ் இவர்களை நெருங்கும் போதே அவர்கள் பேசியது காதில் விழ, ‘ஓ! சஜு அண்ணனா’ என்று மனதில் நினைத்து அவன் தோளில் கை வைத்து “வாங்க மச்சான், நல்லா இருக்கீங்களா? என்ன கல்யாணத்துக்கு வராம, இப்ப வந்திருக்கீங்க?” என்று நலம் விசாரித்தான்.
அருண் “நல்லா இருக்கேன் மாப்பிள்ளை, கல்யாணத்துக்கு வர தான் ட்ரை பண்ணேன், பட் டிக்கெட் கிடைக்காம, உங்க கல்யாணத்தன்னைக்கு தான் டிக்கெட் கிடைச்சு, புறப்பட்டு வரேன். அம்மா தான் சொன்னாங்க கோவில்ல தான் எல்லோரும் இருக்கீங்கன்னு, அப்படியே குலசாமி கோவிலுக்கு வந்த மாதிரி ஆச்சுன்னு ரெஸ்ட் எடுக்காம வந்துட்டேன் “
சஜு “அம்மா, என்னம்மா நீங்க அண்ணன் வர்றான்னு என்கிட்ட கூட சொல்லல?”
அருண் “ஏய் வாலு, நான் தான் அம்மாகிட்ட சொல்லாதீங்கன்னு சொன்னேன், அப்புறம் இங்க வந்து பார்த்தா ஸ்வீட் சர்ப்ரைஸா மஞ்சு வேற இருக்கா”
மஞ்சு மௌனம் காத்தாள். சஜு “ஏய் குரங்கு, இப்ப மட்டும் வாய் வராதே உனக்கு” என்று மஞ்சு காதைக் கடித்தாள்.
மஞ்சுவிற்கு உடன் பிறப்புகள் இல்லாமல், ஒற்றை பெண்ணாய் இருப்பதால், விடுமுறை நாட்கள் எல்லாம் மூன்று பேரும் ஒன்றாய் தான் இருப்பார்கள். ஒன்று மூன்று பேரும் ஒன்றாக மஞ்சு வீட்டிலோ அல்லது சஜு வீட்டிலோ விடுமுறை முடியும் வரை இருப்பார்கள். சஜுவுக்கும் மஞ்சுவுக்கும் நான்கைந்து வருடங்கள் வித்தியாசம் என்றாலும், இருவரும் பெண் பிள்ளைகள் என்பதால், கூட்டு சேர்ந்து விளையாடுவார்கள்.
அருண் சில சமயம் இவர்களுடன் விளையாடுவான், பல சமயம் சண்டை போட்டு, அவன் செட் பையன்களுடன் விளையாட போய் விடுவான். ஆக மொத்தம் இதிலிருந்து என்ன தெரிவிக்கப் படுகிறது என்றால், மஞ்சுவின் வால் தனம் சஜுவிடம் இருந்து வந்ததா, இல்லை சஜுவின் சேட்டைக்கு காரணம் மஞ்சுவா என்று இரு தாய்மார்களும் ஆராய முற்பட்டால், அந்த ஆராய்ச்சிக்கு முடிவு என்பது சிவனின் அடி முடி காண்பது போன்றது.
எனவே இவர்கள் இரண்டு பேரும் ராட்சசியாக இருப்பதால், அருண் இவர்களை விட வல்லவனாக இருக்க வேண்டும் என்று அசுரனாக இருந்தான். பாவம் இவர்களைப் பெற்றவர்கள் தான் படாத பாடு பட வேண்டும். ஆனால் இவர்கள் சேட்டை இவர்களுக்குள் மட்டும் இருப்பதால், பெரியவர்கள் அதைப் பெரிதாக எண்ணவில்லை.
ஆனால் சஜுவோ கல்லூரி முதல் வருடம் சென்ற பின் அமைதியின் சொரூபமாக மாறி இருந்தாள், மஞ்சு, அருண் ஏன் அவர்கள் பெற்றவர்களுக்கே ஆச்சரியம் தான். ஆனால் மகள் பொறுப்பாகி விட்டாள் என்று சந்தோசப்பட்டனர், ஆனால் மஞ்சுவின் வால் தனம் குறையவில்லை, அதற்கும் முற்று புள்ளி வைக்கப்பட்டது.
அருணும், சஜுவும் கல்லூரி செல்லும் சமயம் மஞ்சு அப்பொழுது பள்ளியில் படித்து கொண்டிருந்தாள். சஜு மாறினாலும் மஞ்சு மாறவில்லை, அவள் வால் தனம் அருணிடமும், சஜுவிடமும் நடந்து கொண்டே இருந்தது.
மஞ்சு பள்ளி விடுமுறைக்கு இவர்கள் வீட்டிற்கு வந்த பொழுது, இவர்களுக்கு கல்லூரி தேர்வு நடந்து கொண்டிருக்கும். இவள் அவர்கள் அவசரமாகக் கிளம்பும் போது பேனா, கால்குலேட்டர், ரெகார்ட் நோட் இப்படி எதையாவது எடுத்து வைத்து விடுவாள்.
அவர்கள் இது தெரியாமல் கல்லூரி சென்று பின் தெரிந்து, நண்பர்களிடம் கடன் வாங்குவார்கள், ரெகார்ட், ப்ராக்டிகல் நோட் போன்றவற்றுக்கு ஆசிரியர்களிடம் திட்டு வாங்கி திரும்பவும் வீட்டுக்கு வந்து எடுத்து செல்வர். அம்மாவிடம் புகார் சொன்னால், “அவள் சிறு பெண், மாறிவிடுவாள்” என்று விட்டுவிடுவார்.
ஒரு சமயம், பத்தாவது விடுமுறைக்கு வந்தவள், அப்பொழுது அருண் இன்ஜினியரிங் கடைசி வருடம் படித்து கொண்டிருந்தான். ப்ராஜெக்ட் விசயமாக தன் நண்பர்களை வீட்டிற்கு அழைத்து வந்திருந்தான்.
கீதா, சஜு படிப்பதால், மஞ்சுவை பழச்சாறு கலந்து கொடுக்க சொன்னார். அவள் வால் தனம் எட்டிப் பார்க்க, அந்தப் பழச்சாறில் வெள்ளையாக மாவு போல ஏதோ ஒரு டப்பாவில் இருந்ததையும் சேர்த்து கலக்கி அனைவருக்கும் கொடுத்தாள். பாவம் அவளுக்கு தெரியாது அது சுண்ணாம்பு என்று. நல்ல வேளை, அருண் ஏனோ அன்று வேண்டாம் என்று சொல்லி விட்டான்.
கடைசியில் அவரவர் வீட்டிற்கு நண்பர்கள் செல்ல, சுண்ணாம்பும் வேலை செய்ய, வாயும் வயிறும் எரிய மறுநாள் அவனிடம் வந்து புலம்பி தள்ளி விட்டனர்.
“ஏன்டா உன் வீட்டிற்கு வந்தா, இப்படி தான் எல்லோருக்கும் கலக்கி கொடுப்பீங்களாடா? நல்லா கலக்கிடுச்சுடா மச்சான்” என்று தன் வயிற்றை பிடித்து கொண்டு ஒருவன் சொல்ல,
இன்னொருவன் “ஏன்டா அந்த பாப்பா பேரு என்னடா?” மற்றவன் “மஞ்சு டா” அவன் “இம் ஆமாம் டா, அந்த பிள்ளைய பெத்தாங்களா, இல்ல காட்டுல இருந்து பிடிச்சிட்டு வந்தாங்களா டா? அப்பா சாமி” என்று புலம்பி தள்ளி விட்டனர்.
அருண் இவள் வால் தனம் வீட்டினரோடு இருக்கும் என்று பார்த்தால், இப்பொழுது வீட்டிற்கு வெளியே வரை நீள்கிறதே என்ற ஆத்திரத்தில் வீட்டிற்கு சென்றவன், மஞ்சுவின் மண்டையிலேயே கொட்ட, அவள் அழுது கொண்டே தன் வீட்டுக்கு உடனே செல்ல வேண்டும் என்று அடம் பண்ணி அன்றே தன் மாமனோடு அவள் வீட்டிற்கு சென்றும் விட்டாள்.
அதன் பின் இவனைக் கண்டால், அவனிடம் வாயே திறக்க மாட்டாள். அப்படியே மஞ்சுவின் குடும்பமும் டெல்லி சென்று விட்டது, அருணும் வேலைக்கு சென்று விட்டான்.
அதன் பின் எப்பொழுதாவது வந்தால், மஞ்சு இவனிடம் மட்டும் வாய் திறக்க மாட்டாள், ஆனால் கண்களாலேயே தொடர்வாள்.
இன்றும் அப்படி தான் செய்தாள். அருணும், ஆகாஷும் பரஸ்பரம் தங்கள் வேலைகளைப் பற்றி பேசி கொண்டு ஓய்வு எடுத்து கொண்டிருக்க, பெண்கள் கிளம்ப ஆயத்தமானார்கள். கிளம்பும் போது அருண் ஆகாஷின் வேஷ்டிக்கு விடுதலை அளித்து, தான் கொண்டு வந்திருந்த பையில் இருந்து ஒரு பாண்ட்டை எடுத்து கொடுத்தான்.
திரும்பவும் ஆகாஷே வண்டி ஓட்ட, அருண் ஓட்டுகிறேன் என்று சொன்னதற்கு, அவனைப் பயணக் களைப்பு நீங்க ஓய்வெடுக்க சொல்லிவிட்டான். ஆகாஷ் ஓட்ட அருண் பக்கத்தில் அமர, பின்னே சஜு, மஞ்சு, கீதா அமர, வெற்றிவேல் அவர்கள் பின்னே அமர்ந்து சிறிது கண்ணயர்ந்தார். அனைவரும் துயில் கொள்ள ஆகாஷும் சஜுவும் முழித்து கொண்டு இருந்தனர். சஜு அவன் பார்க்கவில்லை என்று இப்பொழுது தான் ஆகாஷை நன்றாகப் பார்த்தாள். ஆகாஷ் வண்டியை ஓட்டினாலும், சஜு தன்னை சைட் அடிப்பதைக் கவனிக்க தவறவில்லை.
ஒரு ஹோட்டலில் நிறுத்தி மதிய உணவை உண்டனர். உண்ட பின், அருண் வண்டியை ஓட்ட, பக்கத்தில் வெற்றிவேல் அமர, ஆகாஷ், சஜு தனியாக பின்னே அமர்ந்தனர், அவர்கள் பின்னே கீதாவும் மஞ்சுவும் அமர்ந்தனர்.
ஆகாஷ் கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தினான். சஜு இவன் அமரப் போகிறான் என்பதை உத்தேசித்து இருக்கை நடுவே அமர, அவனும் ஜென்னலோரமாய் உட்காராமல், அவனும் அவள் அருகில் நகர்ந்து பக்கத்தில் அமர்ந்தான். சஜு நகராமல் இருந்தாள், ஏனெனில் எல்லோரும் முழித்திருந்தார்கள், அவர்கள் கண் அயர்ந்ததும் நகரலாம் என்றிருந்தாள்.
அதன் பின் வேண்டும் என்றே தூங்குவது போல, ஆகாஷ் அவள் தோள்களில் விழுந்து தூங்க, சஜு பொறுத்து பார்த்து விட்டு, தன் கை நகத்தால் கிள்ள, ஆகாஷ் “ஸ்…” என்றான்
“என்னாச்சு மாப்பிள்ளை” என்று வெற்றிவேல் கேட்க, ஆகாஷ் “ஒன்னும் இல்லை மாமா, ஏதோ எறும்பு கடிச்ச மாதிரி இருக்கு” என்று சொல்லிவிட்டு, தன் கைகளை எடுத்து, சஜுவை அணைத்தார் போல, கார் சீட்டின் மீது கை நீட்டி வைத்திருந்தான்.
கார் வளையும் போதும், குலுங்கும் போதும், அவள் தோள் மேல் அவன் கைப் பட்டது. சஜு அவனை முறைக்க, அவன் கண்ணடித்தான். சஜு கோபத்தின் எல்லையில் கொதித்து கொண்டிருந்தாள்.
யுத்தம் தொடரும்….