UMUV16

Banner-730bcfe3

UMUV16

16

 

முதல் முறை சில மாதங்களுக்கு முன்பு இதே உணவகத்தில் நந்தாவைப் பார்த்த ஞாபகங்கள் மனத்திரையில் காட்சியாய் விரிய, புன்னகையுடன் கண்ணாடி சுவரின் அருகே அமர்ந்திருந்த ரிஷியையும், விஷ்ணுவையும் நெருங்கினாள் வர்ஷா.

“ஹாய்” என்று பொதுவாகச் சொன்னவள், எப்பொழுதும் போல விஷ்ணுவின் அருகில் அமர்ந்துகொள்ள, அவளிடம் பரிசொன்றை நீட்டிய ரிஷி, “ஆல் தி பெஸ்ட் வர்ஷா” என்று இயல்பாகப் புன்னகைக்க,

நன்றி என்பதைப் போல் தலையசைத்து அதை வாங்கிக்கொண்டாள் வர்ஷா, விஷ்ணுவும் அவன் பங்கிற்குப் பரிசொன்றைத் தந்து,

“நீ கிளம்பறதுல எனக்கு இஷ்டமில்ல, எனிவே பெஸ்ட் விஷ்ஷஸ்”

“தேங்க்ஸ் அண்ட் சாரி” என்றவள், செய்வதறியாது மௌனமாகக் குனிந்துகொள்ள,

“சரி கைஸ், இப்போ என்ன ஆர்டர் பண்ணட்டும்?” நிலைமையை இயல்பாக்க முயன்றான் ரிஷி.

மூவருக்கும் வேண்டியதை வாங்கிக்கொண்டு வந்த ரிஷி, இனிப்பை அவள் முன்னே நகர்த்தி, “இனிமே உன் வாழ்க்கைல எல்லாமே இனிப்பா இருக்கட்டும்” என்று சிரிக்க,

“தேங்…” என்றவள் கடுகடுவென இருந்த விஷ்ணுவையே பார்த்திருந்தாள். அவள் பார்வை சென்ற திசையைப் பார்த்தவன், விஷ்ணுவின் காலை மேஜைக்குக் கீழே உதைக்க, ‘ஸ்ஸ்’ என்று இழுத்துக்கொண்டான்.

அவனிடம், பேசு என்பதுபோல் ஜாடை காட்டிய ரிஷி சாப்பிட, விஷ்ணு அமைதியாகவே இருக்க, வர்ஷாவே பேசத் துவங்கினாள்.

“சாரி விஷ்ணு, வேணும்னே சொல்லாம மறைக்கல, உங்களைலாம் பார்த்தா போகவே மனசு வராதுன்னு தான் சும்மா இருந்தேன். எனக்கும் இது ரொம்ப பெரிய மாறுதல் தான் ஆனா என் மனசு இருக்கிற நிலைக்குக் கண்டிப்பா இந்த சேஞ் ஏதாவது நிம்மதி தராதான்னு ஒரு நப்பாசைதான்” என்றபடி விஷ்ணுவைப் பார்க்க, அவனோ கோவமாக உணவையே வெறித்திருந்தான்.

“ப்ளீஸ் விஷ்ணு, இப்படி உர்ர்ன்னு இருந்தா எனக்கு மனசே கேக்கல, மன்னிக்கக் கூடாதா?” இப்பொழுதும் விஷ்ணுவிடம் எந்த மாறுதலும் இல்லை, ரிஷி, “அவன் ஷாக்ல இருக்கான் சரியாயிடும்” அவளுக்குச் சமாதானம் சொல்ல, வர்ஷாவோ மீண்டும் விஷ்ணுவிடம்,

“எனக்கு ரொம்ப நாளைக்கு அப்புறம் கிடைச்ச ஒரே பிரென்ட் நீங்க தான், இப்படி மூஞ்சிய தூக்கி வச்சுக்கிட்டா எனக்கு ஒரு மாதிரி இருக்கு, ரொம்ப கில்டியா ஃபீல் ஆகுது விஷ்ணு ப்ளீஸ் சாதாரணமா பேச மாட்டீங்களா?”

“…”

“யார்கிட்ட பேசறேனோ இல்லையோ கண்டிப்பா உங்ககிட்ட பேசுவேன் விஷ்ணு. கால் இல்லைனா கூட சேட் பண்ணலாம், தினமும் மெஸேஜ் பண்றேன். நீங்க இப்படி சோகமா இருந்தா எனக்கு கிளம்பவே தோணல. யாரை மிஸ் பன்றேனோ இல்லையோ உங்களை ரொம்ப மிஸ் பண்ணுவேன்” என்றவள் தலையைக் குனிந்துகொள்ள,

மெலிதாகப் பொறாமை தலை தூக்கத் துவங்கியது ரிஷியின் மனதில், ‘ அவனை மட்டும்தான் மிஸ் பண்ணுவியா? எனக்கு மெசேஜ் பண்ணா நாங்கலாம் பேசமாட்டோமோ?’ கடுப்பானவன் நந்தாவாகத் தன் மொபைல் நம்பரைக்கூட இதுவரை வர்ஷாவிடம் தராததை மறந்திருந்தான்.

கைக்குட்டையால் கண்களை அவள் துடைத்துக்கொள்வதைப் பார்த்த விஷ்ணு, வீம்பைக் கைவிட்டு, “எனக்கு உன் மேல கோவம் தான். மன்னிக்கனும்னா இனிமே நீங்க வாங்கலாம் கூடாது. அங்க போனதும் தினமும் எனக்கு மெசேஜ் பண்ணனும், ஒரு வருஷ காண்ட்ராட் முடிஞ்சதும் சென்னை வந்துரனும். சரியா?” புன்னகையுடன் கறாராகச் சொல்ல,

“யாருக்காக வரேனோ இல்லையோ உங்களுக்காக வரேன்…சாரி உனக்காக வரேன் சரி தானே?” வர்ஷா கலங்கிய கண்களுடன் சிரிக்க,

விஷ்ணுவோ “டேய் நீ தான் சாட்சி, இவ பேச்சு மாறினா நீ தான் கேக்கணும்” என்றான் ரிஷியைப் பார்த்து

‘என்னத்துக்கு? உனக்காகத்தான் வரேன்னு சொன்னா நான் ஏன் கேக்கணும்? நல்ல பிரென்ட் ஊர் உலகத்துல இல்லாத பிரென்ட்’ மனதில் செல்லமாகக் கோவித்துக் கொண்டவன் வெளியில் புன்னகையுடன் தலையசைத்தான்.

ரிஷி “வர்ஷா எப்போ பிளைட்? நாங்க டிராப் பண்றோம் ”

அவள் பதில் தர வாயெடுக்கும் போதே, குறுக்கிட்ட விஷ்ணு “என்கிட்டே சொல்லு நீ அவன்ட சொல்லி அவன் அதை புரிஞ்சுக்கறதுக்குள்ள பிளைட் கிளம்பிடும்” என்று கேலி செய்ய,

“நானே டேக்சி பிடிச்சு போயிக்கிறேன், மதுவும் தாத்தாவும் வருவாங்க ஏர்போர்ட்க்கு, பிளைட் ராத்திரி பத்துமணிக்கு மேல தான் உங்களுக்கு கஷ்டம் வேண்டாம்” என்றவள் மெதுவாக ரிஷியைப் பார்த்து, புன்னகைக்க,

அவனோ “அதெல்லாம் சிரமம் இல்ல நாங்க வரோம், எப்போ கிளம்பனும்னு விஷ்ணுக்கு சொல்லிடு போதும்” என்றான்.

மறுப்பாகத் தலசைத்தவள் கவனத்தைச் சிதைத்தது, ஆதேஷின் ஃபோன் கால்.

“ஆதேஷ்” என்றவள், அழைப்பை ஏற்க, ஸ்பூனை இறுக்கமாகப் பிடித்தான் ரிஷி.

“இல்ல நான் கிளம்பிட்டேன் இப்போ வீட்டுக்கு போறேன்…என்ன விஷயம்…ஃபோன்லயே சொல்லுங்க…ப்ளீஸ் அழாதீங்க…சரி வரேன்…எஸ் அந்த பார்க்கல மீட் பண்ணலாம்…ப்ளீஸ் டோன்ட் க்ரை…சரி…பை” அழைப்பை துண்டித்தவள், பேச வாயெடுக்க,

“ம்ம் புரிஞ்சுது சாப்பிட்டுட்டு போய் பார்த்துட்டுவா” என்ற ரிஷி சாப்பிடுவதை தொடர, அவனை முறைத்த விஷ்ணு,

“இல்ல நீ போகாத. என்னவாம் இப்போ? அழுது சீன் போடறானா?” என்று கடுகடுக்க,

“சாரி சொல்லணுமாம், கொஞ்சம் பேச முடியுமான்னு கேட்டான் அதான்…பாவமா இருந்துது…” வர்ஷா உதட்டை சுருக்க, விஷ்ணுவோ, “அதான் இப்போவே சொல்லிட்டான்ல போதும். நேர ஒன்னத்தையும் கிழிக்க வேண்டாம். நீ வீட்டுக்கு போ”

ரிஷி, “இல்ல வர்ஷா நீ அவனை பார். எதுவானாலும் பேசி முடிச்சுட்டா உனக்கும் நல்லது. இல்லைனா நீ ஊருக்கு போனாலும் உன்னை தொல்லை பண்ணுவான்” என்று தீர்க்கமாக சொல்ல, சரியென்று தலையசைத்தவள், உணவை முடித்துக்கொண்டு,

“ரெண்டு பேரும் கொஞ்சம் பார்க்கிங் வரை வரீங்களா?” என்று கேட்க, ஆண்கள் இருவரும் அவளுடன் சென்றனர்.

ஸ்கூட்டியில் இருந்து இரண்டு பைகளை எடுத்தவள் ஆளுக்கொன்றாய் கொடுத்தாள்.

ஆர்வம் தாங்காமல் உடனே பிரித்த விஷ்ணு, “நான் என்ன குழந்தையா கரடி பொம்மை தர?” என்றவன், “அவனுக்கும் அதானா?” என்றான் சிரிப்புடன், ஆமென்று தலையசைத்தவள்,

“அதை பாக்கும்போதெல்லாம் என்னை நினைச்சுப்பீங்களாம் அதான்” என்று கண்சிமிட்டியவள், “சரி கிளம்பறேன் அவனை பார்த்துட்டு வீட்டுக்குப்போயி தான் பேக்கிங் பண்ண ஆரம்பிக்கணும்” என்றாள்.

ரிஷி “பத்திரம் அண்ட் பொம்மைக்கு தேங்க்ஸ்” என்று புன்னகைக்க, விஷ்ணு, “அவன் ஏதான வம்பு பண்ணா கால்மீ” என்றான்.

சரியென்று கிளம்பி வர்ஷா சென்றுவிட, விஷ்ணு ரிஷியிடம் கோவமாக,

“அவன் என்ன பிளான் போடறானோ? எதுக்கு இப்போ அவனை பாக்க போக சொன்ன?”

“பேசி தான் பாக்கட்டுமே”

“நீ அவனை நம்பறியா? அவன் மாற மாட்டான்டா”

“நான் அவனை நம்பல, வர்ஷாவோட கோவத்தை நம்பறேன்”

“இல்ல எனக்கு சரியா படல” விஷ்ணு பைக்கை வெறிக்க,

“வேணும்னா நீ போ, நான் ஆபீஸ்க்கு போறேன்” என்று ரிஷி தன் பைக்கில் அமர்ந்து கொண்டு, “எனக்கு போன் பண்ணு, நான் லைன்லேயே இருக்கேன், நீயும் அவன் என்னதான் சொல்ல வரான்னு பாரு. இதுக்கெல்லாம் டென்சன் ஆகாத” தோளைகுலுக்கிவிட்டு கிளம்பிவிட, வர்ஷாவை பின் தொடர்ந்தான் விஷ்ணு.

பூங்காவில் ஆதேஷுடன் அமர்ந்திருந்த வர்ஷாவை தொலைவில் கண்டு கொண்ட விஷ்ணு அவர்கள் பெஞ்சின் பின்னே இருந்த மரத்தின் பின்புறம் மறைவாக நின்றுகொண்டு,

‘இவளால என்னலாம் பண்ணவேண்டி இருக்கு! இப்படி ஒட்டுக்கேட்க வச்சுட்டாளே’ ரிஷிக்கு மெசேஜ் செய்தான்.

‘ஹாஹாஹா அதை ஏன் அப்படி பாக்குற? நீ ஒரு துப்பறிவாளானாய்ட்ட. இப்ப நீ ஒரு ஷெர்லாக் ஹோம்ஸ்’ என்று கிண்டலாக பதில் தர, ‘அட போடா, இரு கால் பண்றேன், கேக்குதானு பாரு இல்லைனா என்ன பேசுறாங்களோ மெசேஜ் பண்றேன்’ என்றவன் ரிஷியை அழைத்தான்.

இருவரது உரையாடலும் ரிஷிக்கு கேட்கவில்லை என்று சொல்ல, ‘சரி இரு என் ப்ளூடூத் உருட்டி விடறேன். நீ என்கூட பேச மெசேஜ் பண்ணு’ என்ற விஷ்ணு, அவன் ப்ளூடூத்தை மெதுவாக உருட்டிவிட்டான்.

‘கேக்குதா’ என்று ரிஷிக்கு மெசேஜ் செய்ய அவனும் ‘எஸ்’ என்று பதில் அனுப்பினான்.

ஆதேஷ், “இல்ல வர்ஷா! நான் எவ்ளோ பெரிய தப்பு பண்ணிட்டேன். உன்னை காய படுத்தினத்துக்குத்தான் எனக்கு இந்த தண்டனை”

வர்ஷா, “நோ ப்ளீஸ். நீங்க அதெல்லாம் யோசிக்காம நார்மலா இருங்க”

“வர்ஷா, எனக்கு நீ வேணும், ப்ளீஸ்”

“என்ன இது திடீர்னு” வர்ஷா கை பையை இறுக்கமாக பிடித்து கொண்டாள்

“நீ இல்லாம என் வாழ்க்கை எவ்ளோ சூன்யமா இருக்குனு இப்பதான் புரியுது வர்ஷா. ப்ளீஸ் எனக்கு நீ வேணும்” ஆதேஷ் அவள் கையை பற்ற,

விஷ்ணு கோவமாக ‘கைய பிடிக்கிறான்டா, போயி அவன் மூஞ்சிய உடைச்சுடவா?’ ரிஷிக்கு மெசேஜ் செய்து பற்களை கடிக்க,

‘நோ நோ’

‘ரெண்டு பல்லையாவது உடைச்சுடுவா?’

“நோ!’

சில நொடிகள் அமைதியாக இருந்தவள்,

“ஆதேஷ்! எனக்கு இப்போதான் வாழ்க்கை ஸ்ட்ரெஸ் இல்லாம இருக்கு. மறுபடி உங்ககூட ரிலேஷன்ஷிப்ல இருக்க எனக்கு விருப்பமில்ல. மன்னிச்சுடுங்க” என்றாள் மென்மையாகவே.

விஷ்ணு, ‘இவ சரி பட மாட்டா! அவன்கிட்ட என்ன பொறுமை?’ என்றவன் ஆதேஷின் முதுகை பொசுக்கிவிடுவதை போல முறைத்தான்.

ஆதேஷ், “ப்ளீஸ் வர்ஷா”

“புரிஞ்சுக்கோங்க, நான் உங்கள கடந்து வந்துட்டேன்”

“இல்ல! உன்னால அது முடியாது. நான் இல்லாம உன்னால இருக்கவே முடியாது!”

அதுவரை வர்ஷாவை பார்த்திருந்த ஆதேஷ், திடீரென்று மீண்டும் அவள் கையை பற்ற, விஷ்ணுவின் கோவம் எல்லை மீற துவங்கியது, ‘மறுபடி கைய பிடிக்கிறான்டா!’ என்று மெசேஜ் செய்ய, அவன் வாயை பொத்திய ரிஷி, “அமைதியா இரு” என்று அவன் காதில் கிசுகிசுக்க,

“டேய் நீ எப்போ வந்த?” விஷ்ணு கிசுகிசுக்க, விரலை உதட்டில் வைத்து “ஷ்ஷ்” என்ற ரிஷி, இப்பதான் என்றான் சத்தமில்லாமல்.

ஆதேஷ் பற்றிய கையை வெடுக்கென்று இழுத்துக்கொண்ட வர்ஷா, “என்ன இது? ப்ளீஸ் பிஹேவ் யுவர்செல்ஃப்.

நாம பிரியலாம்னு நீங்க சொன்னப்போ சரின்னு முடிவெடுத்தது நானும் தான். உங்க முடிவுல நீங்க உறுதியா இல்லைன்றதுக்காக நான் விட்டுக் கொடுக்க முடியாது” என்று முறைக்க,

அவள் பதிலில் கோவம் வந்தாலும் அதை மறைத்துக்கொண்டவன், “உன் உள் மனசுல நான் இன்னும் இருக்கேன்னு எனக்கு தெரியும். நீ தான் எனக்கு சரியானவள்னு உணர்ந்துட்டேன். உனக்கும் என்னைவிட பெட்டர் வேறு யாருமில்ல”

“நீ வேண்டாம்னு சொன்ன அதே வர்ஷா தான் நான். எந்த விதத்துலயும் நான் மாறல, இப்போ மட்டும் நான் எப்படி உனக்கு சரியானவள்னு நீ நினைக்கிறே?”

“அதான் தப்புன்னு சொல்றேன்ல?” கத்திவிட்டவன், தணிந்த குரலில், “இப்போ உணர்ந்துட்டேன். எனக்கு நீ வேணும் வர்ஷா” என்றவன்,

“ப்ளீஸ் வர்ஷா, இங்க எல்லாரும் என்னை கேவலமா பாக்குறாங்க, எனக்கு இங்க இருக்கவே முடியல, எனக்கு அங்க மாத்தலும் தரமாட்டேன்னு சொல்லிட்டாங்க, எல்லாம் அந்த ராக்ஷசி அகாங்ஷா பண்ண வேலை. நீ மனசு வச்சா கனடா ஹெட் ஆபிஸ்ல பேசி எனக்கும் அங்க ஒரு வேலை வாங்கி கொடு, நாம நம்ம வாழ்க்கையை அங்க ஆரம்பிக்கலாம். அங்கேயே செட்டில் ஆகிடலாம்” என்று மயக்கும் குரலில் சொன்னபடி அவள் தோளை பற்ற,

கோவமாக விஷ்ணு வெளிவரும் முன்பே வர்ஷா ஆதேஷின் கையை தட்டிவிட்டு எழுந்துவிட, ரிஷி விஷ்ணுவை மறைவாக இழுத்து, மறுப்பாக தலையாட்டினான்.

“தொடாதே” என்று ஆதேஷை முறைத்தவளோ, “எத்தனைவாட்டி சொல்றேன்? எனக்கு விருப்பம் இல்லனு!” என்று கடுகடுக்க,

“நீ பொய் சொல்றே, உன்னால நான் இல்லாம இருக்க முடியாது” என்றான் ஆதேஷ் திமிராய்.

“நான் சொல்றது உண்மையோ பொய்யோ, நீ நம்பக்கூடாதுன்ற முடிவோட கேட்கும்பொழுது நான் என்ன சொன்னா உனக்கென்ன? நீ நினைக்கிறதை நினைச்சுக்கோ!” என்றவள், “நான் கிளம்பறேன்” என்று பையை மாட்டிக்கொண்டாள்.

“நில்லு! நான் பேசிகிட்டு இருக்கேன். எனக்கு காரணம் வேணும். அப்படி கூட நான் வேண்டாம்ன்னு ஆகுமா என்ன?” என்று மிரட்ட,

“நீ எதுக்கு எனக்கு? சொல்லு நீ எதுக்கு எனக்கு? நீ என்கூடவே இருக்க என் அன்பு போதுமானதா இல்லைன்னு நீ தானே சொன்ன? நான் தனியா இருந்தப்போ, பேச ஆளில்லாம தவிச்சப்போ, செத்துடலாம்னு நினைச்சப்போ நீ இல்ல, இனி நீ எனக்கு வேண்டாம் உன் முகத்தைக்கூட இனிமே பாக்கவேண்டாம்” என்றவள் அவனை கடக்க முயல, அவளை வழிமறித்தவன்,

“நான் நம்ப மாட்டேன். நான் உன்ன காதலிக்கிறேன்னு சொன்னப்போ சரின்னு சொல்லிட்டு இப்போ நான் வேண்டாம்னா?” அவன் விடுவதாக இல்லையென்று அவன் கண்ணில் தெரிந்த ஆத்திரம் உணர்த்த,

“நான் ஒன்னும் தனிமைல வாடியோ, பாசம் காட்ட ஆளே இல்லாம ஏங்கியோ உன் காதலை ஏத்துக்கல! என் மேல அன்பா இருக்க ஒருத்தரோட மனசை கஷ்ட படுத்த கூடாதேன்னு நினைச்சேன்! என்னையே சுத்தி வந்த உன் அன்புக்கு நான் கொடுத்த மரியாதை, என் வாழ்க்கைய நான் உன்கிட்ட ஒப்படைக்க நினைச்சேன்.

இப்போவும் வெளிநாட்டு வாழ்க்கைக்காக, அழகுக்காக வெறும் உடம்புக்காக நீ அகாங்ஷாகிட்ட போட்ட நாடகத்த பார்த்த அப்புறமும் உன் மேல கோவமே வரலை, பரிதாபமா தான் இருக்கு! அன்பையும் காதலையும் உணரத்தெரியாத ஜடமா இருக்கியேன்னு பரிதாபமா இருக்கு!

நீ ஆசைப்படுற பணமும் உடம்பும் உன்னோட கடைசி நாளைக்கு நிம்மதி தராது! உன் வாழ்க்கைல கடைசி நிமிஷத்துல, உண்மையா அன்பை தர ஒருத்தரை கூட வாழ்க்கைல சம்பாதிக்கலைனு நினைச்சு வருத்தப்பட்டு சாவ! அப்போ காலம் கடந்து இருக்கும் ஆதேஷ்! இட் வில் பீ டூ லேட்!” என்றவள் அவனை கடந்து செல்ல, அவள் கையை பிடித்து இழுத்தவன்,

“நீ வேணாம்னு சொன்னா சரின்னு கேட்டுட்டு போக நான் என்ன குழந்தையா?” என்று அவளை நெருங்க,

அவனை தள்ளியவள், “செருப்பு…” என்று துவங்கும் போதே, ஆதேஷின் சட்டை காலரை பிடித்து பின்னே இழுத்திருந்தான் ரிஷிநந்தன்.

“அவ தான் தொடாதான்னு சொல்றால? என்ன ஜென்மமடா நீ?” என்று அவனை மரத்தோடு அழுத்தி பிடித்து முறைக்க,

“ஓ இவன் இருக்கற திமிறுல தான் என்னை வேணாம்னு சொன்னியா? வெள்ளை தோலை பார்த்து மயங்கிட்டியா, இல்ல என்கிட்டே தொடக்கூடாதுன்னு நடிச்சிட்டு இவன்கிட்ட…” பேசி முடிக்கும் முன்னே அவன் முகத்தில் குத்தியிருந்தான் ரிஷி.

‘ஆ ‘ என்று அலறியவன் கன்னத்தை பற்றிக்கொள்ள, வர்ஷாவோ திடீரென்று எங்கிருந்து ரிஷி வந்தானென்று அதிர்ந்திருந்தாள்.

“ஆள் வச்சு அடிக்கிறியாடி பி…” அவன் வயிற்றில் கால் முட்டியால் ரிஷி ஏத்தியதில், ‘ஐயோ’ என்று வலியில் ஆதேஷ் மடிந்தபடி குனிந்துகொள்ள,

கோவம் அடங்காத ரிஷி, “எவ்ளோ அசிங்கப் பட்டும் வாய் கொழுப்பு அடங்கல ல?”

மறுபடி ஆதேஷ் ஏதோ சொல்ல வாயெடுக்க, ரிஷி அவனை மீண்டும் குத்த கையை ஓங்கும் போது, அவன் சட்டையை பிடித்து இழுத்த வர்ஷா, வேண்டாம் என்பதுபோல், ‘வே…’ என்று தடுக்க,

“இவனை நீ இவ்ளோனாள் சும்மா விட்டதாலதான் கொழுப்பேறி கிடக்கு நாய்க்கு” என்று ஆதேஷை முறைத்த விஷ்ணு,

ஆதேஷை நோக்கி திரும்பிய வர்ஷா, “ஏண்டா என் பிராணனை வாங்குற? நான் அப்போ உன்னை எவ்ளோ நம்பினேன் தெரியுமா? ஏன் இவ்ளோ கீழ்த்தரமா இருக்க?” என்று கோவமும் ஆதங்கமுமாக கேட்க,

உதட்டோரம் கசிந்த ரத்தத்தை துடைத்துக்கொண்ட ஆதேஷ், “நானா நம்ப சொன்னேன்?” என்று திமிராக சொல்ல, ரிஷி மீண்டும் அவன் முகத்தில் குத்திவிட்டு,

விஷ்ணுவிடம் “அவள கூட்டிகிட்டு போ, இவனை கொஞ்சம் கவனிச்சுட்டு வரேன்” என்று சொல்ல,

“ஐயோ வேணாம்னு சொல்லு விஷ்ணு, இனிமே அவன் வரமாட்டான்” வர்ஷா கெஞ்ச,

“போ வர்ஷா!” ரிஷியின் முகத்தில் தெரிந்த ரௌத்திரத்தில் அரண்டவள் எதுவும் சொல்லாது, விஷ்ணுவுடன் திரும்பி திரும்பி பார்த்தபடி செல்ல, ரிஷியோ ஆதேஷை அடிக்க துவங்கினான்.

“மவனே இனிமே எந்த பொண்ணையும் தொடவே கூடாதுடா நீ” என்று ரிஷி அவனை எத்த, மொத்தமாக சுருண்டுவிட்டான் ஆதேஷ்.

“இன்னொரு தடவ வர்ஷா கிட்ட பேச முயற்சி பண்ண,.. பேசிக்கிட்டு இருக்க மாட்டேன் உன்னை, அப்படியே உயிரோட பொதச்சுடுவேன்.” என்று எச்சரிக்க,

கையை உயர்த்தி, ‘மாட்டேன்’ என்பதுபோல் செய்கை செய்த ஆதேஷ் மரத்தில் சாய்ந்தபடி அமர்ந்துவிட, கீழே இருந்த விஷ்ணுவின் ப்ளூடூத்தை எடுத்துக்கொண்ட ரிஷி விறுவிறுவென பூங்காவை விட்டு வெளியேறினான்.

வர்ஷாவின் வீடுவரை பின்தொடர்ந்த விஷ்ணு, “எதையும் யோசிக்காம பேக்கிங் பண்ற வேலைய பாரு சரியா?” என்று புன்னகைக்க,

பதற்றம் குறையாமல் இருந்தவளோ, “ம்ம் சரி, கொஞ்சம் நந்தாகிட்ட என்னாச்சுன்னு கேட்டுக்கோங்க” என்றாள்

“ம்ம்”

“அப்புறம் அவர்கிட்ட கொஞ்சம் கோவத்தை கட்டுப்படுத்திக்க சொல்லுங்க ப்ளீஸ்” என்று தயங்க

சிரித்துவிட்ட விஷ்ணு, “ஏன் பயமா இருக்கோ?” என்று கிண்டலாக கேட்க, “ஆமா” என்ற வர்ஷாவின் குரலே அவனுக்கு உணர்த்தியது, அவள் ரிஷியின் கோவத்தை கண்டு மிரண்டிருக்கிறாளென்று.

இரவு பால்கனியில் விஷ்ணுவுடன் அமர்ந்திருந்தான் ரிஷி,

“என்னை போயி பாருடான்னு சொல்லிட்டு நீ ஏன்டா வந்த?” விஷ்ணு அவனை வம்பிழுக்க,

“ரன்னிங் கமெண்ட்ரி கேட்க பொறுமையில்ல, ஆனா வர்ஷா சூப்பர்ல, எவ்ளோ தைரியமா பேசினா” ரிஷியின் முகத்தில் தெரிந்த பெருமிதத்தில், சிரித்துக்கொண்ட விஷ்ணு,

“அவ தான் தைரியமா அவனை சமாளிச்சால? நடுவுல எதுக்கு சார் ஹீரோ அவதாரம் எடுத்தீங்களாம்?” என்று சிரிக்க,

“அவன் சும்மா சும்மா தொட்டு பேசறான், எனக்கு கோவம் கண்ட்ரோல் பண்ண முடியல, விட்ருந்தா அவன் கையை உடைச்சு போட்ருப்பேன், வர்ஷா இதுக்கே பயப்படுவாளோன்னு சும்மா இருந்தேன்” என்றான் ரிஷியோ தீவிரமான முகத்துடன்.

“அவ ஏற்கனவே மிரண்டு போய் தான் இருக்கா, அவளே சொன்னா” என்று விஷ்ணு தோளை குலுக்க, ஒரு நொடி முகம் இறுகிய ரிஷி, “அப்படியா?” என்றுவிட்டு யோசனையாக வெளியே தெரிந்த வானத்தை வெறிக்க, வர்ஷாவின் ஃபோன் வந்தது.

“ஹலோ!”

“ரிஷி ரிஷி ரிஷி ரிஷி. ஐயோ ரிஷி நான் சூப்பர் ஹேப்பி” வர்ஷா கத்தியதில் சத்தம் தாங்காது சற்று தொலைவில் மொபைலை பிடித்துக்கொண்ட ரிஷி, சிரித்தபடி, “ஹே என்ன ஏதுன்னு சொல்லிட்டு கத்து” சொல்ல,

“இன்னிக்கி நந்தா அந்த ஆதேஷ் பன்னிய, விட்டான் பாரு மூஞ்சிலயே…செம்ம சீன்! அப்படியே அவன் காலரை பிடிச்சு இழுத்து மரத்துல அமுக்கி….நீங்க பாத்து இருக்கணும்! மிஸ் பண்ட்டீங்க. அப்படியே ஆதேஷ் ஃபேஸ் வெளிறிப்போச்சு. அவனை ஒரு எத்து ஏத்தி…” அவள் அன்று நடந்ததை சொல்லி, ரிஷியின் வீர சாகசங்களை மிகைப்படுத்தி அவனிடமே சொல்லி சிலாகிக்க,

ரிஷியோ வெட்க புன்னகையுடன் எதுவும் அறியாதவன்போல கேட்டுக்கொண்டிருந்தான். பல நிமிடங்கள் நீண்டது உரையாடல்,

“இப்போ தான் பேக்கிங் முடிச்சேன், செம்ம வலி முதுகு கழண்டு விழுந்துரும் போல இருக்கு. தூங்க போறேன்”

“ம்ம் சரி மா”

“ரிஷி அப்புறம் ஒன்னு”

“சொல்லு மா”

“நான் ஊருக்கு போனாலும் உன்கூட வாட்ஸப்ல மெசேஜ்ல பேசலாம்ல? ஃபோன் கால் எப்படி சரி வரும்னு தெரியல. பன்னிரண்டு மணி நேரம் கிட்டத்தட்ட வித்தியாசம். உங்களுக்கு ஓகே தானே?”

“இதெல்லாம் என்ன கேள்வி? எப்போ பேசணும்னு தோணுதோ கால் இல்லைனா மெசேஜ் பண்ணு”

“தேங்க்ஸ்”

“சரி நீ தூங்கு நேரமாச்சு”

“குட்நைட்”

“குட்நைட்” என்று அழைப்பை துண்டித்தவனை முறைத்தபடி அமர்ந்திருந்தான் விஷ்ணு.

“நீ இன்னும் இங்கயா இருக்க?”

“ஓஹ் நான் இங்க தான் இருந்தேன்னு கூட ஞாபகம் இருக்கா?”

“டேய் ஏன்டா?”

“நீ பேசு, நான் அதோ அந்த மூலைல உட்காந்துட்டு என்ன மண்ணாங்கட்டிக்கு இங்க வந்து நிக்குறேன்னு யோசிச்சிகிட்டு இருக்கேன். வர்ஷா ஊருக்கு போறாளே பய சோகமா இருப்பானேன்னு உன்னக்கு துணையா பேச வந்தேன் பாரு என்ன சொல்லணும் ”

“ஹேய்…”

“ஓடிப்போய்டு!” விஷ்ணு முறைத்தபடி எழுந்து செல்ல,

“அதெல்லாம் முடியாது” அவன் முதுகை பிடித்து தள்ளியபடி அவனுடன் உள்ளே சென்றான் ரிஷி.

மறுபுறம் ரிஷி விஷ்ணு இருவரும் கொடுத்த பரிசை திறந்து பார்க்காமல் அப்படியே பெட்டிக்குள்ளே வைத்துக்கொண்டாள் வர்ஷா. ‘அடுத்த மாசம் என் பொறந்த நாளைக்கு திறந்து பாக்குறேன். என் முதல் பர்த்டே கிப்ட் நந்தா கிட்டேந்து’ சிரித்துக்கொண்டவள். பெட்டியை பூட்டி வைத்துவிட்டு உறங்க துவங்கினாள்.

ரிஷியோ உறக்கம் வராமல் பிரண்டு பிரண்டு படுத்து, வர்ஷா கொடுத்த கரடி பொம்மையை அணைத்தபடி கண்களை மூடிக்கொண்டான்.

***

Leave a Reply

error: Content is protected !!