birunthavanam-16

birunthavanam-16
பிருந்தாவனம் – 16
கிருஷின் அலுவலகத்திற்கு சென்று, “நான் கிருஷை பார்க்கணும்” அவள் அதிகார தோரணையில் கூறினாள்.
காவலாளி மறுப்பு தெரிவிக்க தயங்க, அவனை தள்ளிவிட்டு வேகமாக உள்ளே சென்றாள்.
அவள் வேகத்தில் பலர் அவளை தடுக்க முயன்று தோற்று போக, அவன் அறை கதவை காலால் எட்டிமிதித்து திறந்தாள் மாதங்கி.
அவள் காட்டாற்று வெள்ளம் போல் அவன் அறைக்குள் நுழைய, அவள் பின்னோடு சிலர் ஓடி வர அவர்களை தன் விரலை அசைத்து வெளியே போகும்படி கட்டளையிட்டான் கிருஷ்.
கிட்டத்தட்ட ஒரு வருடம் கழித்து அவனை சந்திக்கிறாள் மாதங்கி.
“வாங்க வாங்க… நீங்க வருவீங்கன்னு எனக்கு தெரியும்.” அவன் குரலில் ஏளனம்.
எப்பொழுதும் அவன் ஆணழகன் தான். இப்பொழுது அவன் கையில் நிர்வாகம் வேறு என்ற மேமதையோடு இன்னும் கம்பீரமாக இருந்தான். முன்பு மாதங்கியிடம் பேசும் பொழுது தான் மாணவன் என்ற தயக்கம் இருக்கும். இன்று அதுவும் இல்லாமல் மிக தெளிவாக அவளை பார்த்து உரிமையோடு புன்னகைத்தான்.
அவனை கணக்கிட்டபடி, அவன் அருகில் சென்று “ஏன் இப்படி பண்ண? ஏன் இப்படி பண்ண?” என்று கேட்டு கொண்டே, “பளார்… பளார்…” என்று அவன் கன்னத்தில் அறைந்தாள் மாதங்கி.
தான் செய்த தவறுக்கு தண்டனை என்பது போல் , அவள் அறைந்த அடியை வாங்கி கொண்டவன், சில நொடிகளுக்கு பின் சட்டென்று அவள் கைகளை பிடித்து பின்னே திருப்பினான்.
“உரிமை உள்ள இடத்தில் இப்படி தான் அனுமதி இல்லாமல் வர தோணும். என் மனதிற்குள் நீ வந்த மாதிரி. இப்படி கன்னத்தில் அறைய தோணும்” அவன் புருவம் உயர்த்தி கூறினான்.
“ஆனால், எனக்கு வாங்கியதை திருப்பி கொடுக்கணும்.” அவன் அவள் முகம் அருகே நிதானமாக சென்றான்.
அவள் விலக முயற்சித்து முடியாமல் பின்னே நகர அவள் மேஜை மீது மோதி நின்றாள்.
“பொண்ணுகளை அடிக்குற அளவுக்கு நான் கோழை இல்லை. ஆனால், வாங்கியதை திருப்பி கொடுக்கற அளவுக்கு திமிர் பிடித்தவன். உன் பாஷையில் சொல்லணுமுன்னா அரசியல் திமிர்” அவன் இதழ்கள் அவள் கன்னங்கள் அருகே செல்ல, அவள் முகத்தை சுழித்தாள்.
அவள் கண்கள் இறுக மூடிக்கொண்டன. அவள் இமைகள் படபடவென்று துடித்து, எங்கு அவன் இதழ்கள் அவள் கன்னத்தை தீண்டிவிடுமோ என்று அவள் விருப்பமின்மையை காட்டியது.
அவள் அவனை இன்னும் நெருங்க, அவன் சுவாச காற்றில் அவள் தலை முடி முன்னும் பின்னும் அசைந்து அவன் அருகாமையை உணர்த்த, அவள் இதய துடிப்பு வேகமாக துடித்து அவள் அச்சத்தை வெளிப்படுத்த, அவள் தொண்டை குழி அவள் அச்சத்தை முழுங்கி அவள் மனநிலையை அவனுக்கு படம் பிடித்து காட்டியது.
“உன்னை லவ் பண்ணி தொலைச்சிட்டேன் டீ. உன்னை கஷ்டப்படுத்த கூடாதுன்னு தான் நினைக்குறேன்.” அவன் குரல் அவள் காதோரம் கர்ஜித்து அவள் விருப்பமின்மையால் அவளை தீண்டாமலே விலகியது.
“என்னை கஷ்டப்படுத்த கூடாதுன்னு நினைக்குற நீ ஏன் என் அண்ணனையும், முகுந்தனையும் சிக்கலில் சிக்க வச்ச?” அவள் அவன் விலகியதும் கேட்க, “ஏன்னா, அவங்க தான் உன் பலவீனம். என்னால் உன்னை விட்டு விலக முடியாது. உன் கழுத்தை நெறிக்க மனசு வரலை. அது தான் அவங்க கழுத்துக்கு கத்தி வச்சேன்.” அவன் வார்த்தைகளை கடித்து துப்பினான்.
“உனக்கு என்ன தான் வேணும்” அவள் பேச்சை வளர்க்க விரும்பவில்லை. நேரடியாக விஷயத்திற்கு வந்தாள்.
“சாரி…” அவன் குரல் அவளிடம் மன்னிப்பை யாசிக்கவில்லை. விளக்கம் அளிக்கவே முயற்சித்தது.
“உன் ஃபோன் அட்டென்ட் பண்ணாதது தப்பு தான். எனக்கு உன்னை பார்க்கணுமுன்னு தோணுச்சு. எடுத்து பேசலைனா நீ வருவேன்னு தான் பேசலை.” அது மட்டுமே அவன் செய்த தவறு என்பது போல் அவன் இயல்பாக பேச ஆரம்பித்தான்.
“நான் கேட்ட கேள்விக்கு பதில்” அவள் அவனை பார்த்து முறைத்தாள்.
அவன் புன்னகைத்தான்.
“நான் உன்னை பொண்ணு கேட்டு வருவேன். நீ ஓகே சொல்லணும். அவ்வளவு தான். தெரியாத யாரையோ கல்யாணம் பண்ணிக்காம, தெரிஞ்ச என்னை கல்யாணம் செய்துக்க போற. உங்க அண்ணன், முகுந்தன் ரெண்டு பேருக்கும் ஒரு பிரச்சனையும் இருக்காது. வந்த பிரச்சனை சூரியன் பட்ட பனி போல விலகும்” அவன் அசட்டையாக கூறினான்.
“ஸோ, எல்லா பிரச்சனைக்கும் நீ தான் காரணம்?” அவள் அழுத்தமாக கேட்க, “தெரிஞ்சி தானே இங்க வந்திருக்க?” அவன் அவள் எதிரே நாற்காலியில் கால் மேல் கால் போட்டு அமர்ந்தான்.
“நீ பொண்ணு கேட்டு வா. நான் கல்யாணத்துக்கு சம்மதம் இல்லைனு சொல்றேன்.” அவள் கூறிக்கொண்டு கிளம்பி செல்ல, சட்டென்று அவளை தொடர்ந்து சென்று அவளை இடையோடு அணைத்தான் கிருஷ்.
“ஏய் என்ன பண்ற?” அவள் எகிற, அவன் விரல்கள் அவள் இடையை தீண்டியது.
“ஏய்…” அவள் அவனிடமிருந்து விடுபட முயற்சித்து கர்ஜிக்க, அவன் கைகள் அவள் கழுத்தை தீண்டி அவள் செயினை தடவியது.
“கிருஷ் என்ன பண்ற? நீ இவ்வளவு கெட்டவனா?” என்று அவள் அவனை தள்ள, “நான் என்ன பண்ணறேன்னு உனக்கு தெரியும். நான் இவ்வளவு கெட்டவன் இல்லைன்னும் உனக்கு தெரியும். நீ செய்றது தப்புன்னும் உனக்கு தெரியும்” அவன் அவள் கைப்பையை அவளிடமிருந்து உருகினான்.
“மொபைல், வாய்ஸ் ரெக்கார்டர், கேமரா படம் பார்த்து சின்ன புள்ளை மாதிரி விளையாடுற பார்த்தியா? உன் கண்கள் பேசுற பாஷயை கண்டுபிடிப்பான கிருஷ். காதலை பார்த்த அதே கண்ணில் இன்னைக்கு விஷமத்தை பார்த்தேன்” அவன் சிரிக்க, மாதங்கி அவனை முறைத்து பார்த்தாள்.
“நீ பேப்ஸ் தான் எனக்கு என்னைக்கும். வருங்கால புருஷனுக்கு எதிரா இப்படி எல்லாம் செய்யலாமா?” அவன் அவளை தன் கைவளைவுக்குள் நிறுத்தி, அழுத்தமாக கேட்டான்.
“உங்க அண்ணனுக்கு எதிரா நான் இப்ப எடுத்து வைத்திருக்கிறது முதல் அடி தான். ஆனால், இனி உன்னை வெளிய விட்டேன்னு வை அது எனக்கு தான் ஆபத்து. என்கிட்டே சம்மதம் சொல்லிட்டு வெளிய போற. நீ வீட்டுக்கு போறதுக்குள்ள, நம்ம கல்யாண பேச்சு ஆரம்பமாகிருக்கும்” அவன் உறுதியாக கூறினான்.
“கல்யாண பேச்சு வேணுமின்னா நடக்கலாம். கல்யாணம் நடக்காது” அவள் அறுதியிட்டு கூறி புன்னகைத்தாள்.
“நீயானு தெரிஞ்சிக்க தான் நான் வந்தேன். ஐயோ என் அண்ணனை காப்பாத்துன்னு பிச்சை கேட்க உன்னை தேடி வரலை.” அவள் அவனை பார்த்து எதிர்த்து கூறினாள்.
“என் வீட்டில் வேற பொண்ணை கல்யாணம் செய்ய சொல்லி எனக்கு பிரஷர். நான் இன்னொரு பெண்ணோடு வாழ்க்கையை அழிக்க தயாராயில்லை. ஒரு பெண்ணோட வாழக்கையில் மட்டும் விளையாடலாமுன்னு முடிவு பண்ணிட்டேன். அதுக்கு தான் இந்த கல்யாணம்” அவன் அவள் கொழுகொழு கன்னத்தை பிடித்து கூற, அவன் மனதில் அவன் கொடுத்த காதல் பரிசு வந்து இம்சித்தது.
“நான் செத்தாலும்…” அவள் பேச எத்தனிக்க, அவள் பேச்சை அவன் இதழ் அணைப்பில் நிறுத்தினான்.
எதிர்பாராத அவனது இந்த செய்கையில் அவள் கண்கள் கோபத்தை பிரதிபலிக்க,சட்டென்று அவன் தன்னை மீட்டு கொண்டான்.
“இப்படி பேசாத, நான் உயிரோடு இருக்கிற வரைக்கும் உனக்கு அப்படி ஒரு நிலைமை வராது ” அவன் கண்கள் கலங்கியது. அவனின் இந்த சொற்கள் அவளையும் தாக்கியது. இருவரும் நொடிப்பொழுதில் மீட்டுக்கொண்டனர்.
“சாரி… பட் ஐ லவ்ட் இட் பேப்ஸ்” அவன் அவள் அதரங்களை ரசித்தபடி அவள் கன்னம் தட்டி சொல்ல, அவள் அவனை யோசனையாக பார்த்தாள்.
“நான் ரொம்ப தன்மையா போக நினைக்குறேன். நீ உன் அண்ணன், முகுந்தன் கிட்ட மொத வைக்குற. சரி அத்தோட கல்யாணத்தை பண்ணலாமுன்னு பார்த்த, நான் ஏதோ வில்லன் மாதிரி, நான் பேசுறதை ரெகார்ட் பண்ண ட்ரை பண்ணற? ஏன் மாதங்கி என் அன்பை புரிஞ்சிக்கவே மாட்டேங்குற?” அவன் கேள்வியாக நிறுத்தினான்.
“உன்கிட்ட இருக்கிறது அன்பே இல்லை. பிடிவாதம். நீ வேணும்ன்னு நினைச்சிட்டே வேணும்முன்னு பிடிவாதம் பண்ற. நான் வேண்டாமுன்னு சொல்லிட்டேன் விலகி போக வேண்டியது தானே?” அவள் கேட்டாள்.
“வீட்டில் போய் சம்மதம் சொல்லு மாதங்கி. சொல்லு இல்லை சொல்லுவ. இல்லலைனா, உன் அண்ணன் லஞ்சம் வாங்கிட்டானு வேலை இழந்து நிற்பான். உன் தோழன் முகுந்தன் அவன் ப்ரொஜெக்ட்டில் மோசடின்னு வாழ்க்கை இழந்து நிற்பான். நான் பொண்ணு கேட்டு வரும் பொழுது முடியாதுன்னு சொல்லி எல்லாரையும் நடுத்தெருவுக்கு கொண்டு வர மாட்டேன்ன்னு நினைக்குறேன்.” அவன் அவள் பேச்சை ஒதுக்கி மிரட்டலாகவே நிறுத்தினான்.
“இந்த கல்யாண பேச்சு வேணுமின்னா நடக்கலாம். கல்யாணம் ஒரு நாளும் நடக்காது. அதுவும், என்னை மிரட்டின இந்த ஒரு காரணத்துக்காகவே நடக்கவே நடக்காது.” அவள் சவால் விட்டாள்.
“கல்யாண பேச்சு நடந்தா போதும், கல்யாணத்தை நான் நடத்தி காட்டுவேன்.” அவன் மேஜையை தட்ட, “கல்யாணத்தை நான் நிறுத்தி காட்டுவேன்.” அவள் அவன் முன் சொடக்கிட்டாள்.
“முதலில் கல்யாண பேச்சு நடக்கட்டும். அப்புறம் மத்ததெல்லாம் பார்த்துக்கலாம்.” அவன் குரலில் வெற்றியின் கொக்கரிப்பு.
“இந்த திருமண பேச்சை நீ கல்யாணம் வரை கொண்டு போய்ட்டேன்னா, நீ பார்க்க போறது மரணவலி” அவள் கண்களில் குரூரம்.
“அது மனைவியின் கையால் தானே?” அவன் கேலி பேச, “ஒரு நாளும், இந்த மாதங்கி உனக்கு மனைவி ஆகமாட்டா.” அவள் உறுதியாக கூறினாள்.
அங்கு சில நிமிடங்கள் மௌனத்தில் கழிய, அவள் அறிவு அவனுக்கு எதிராக திட்டமிட ஆரம்பித்தது.
“நீ வீட்டுக்கு போ. நான் உன் அண்ணன் பிரச்னையை தீர்த்துட்டு உன்னை பெண் பார்க்க வருவேன்” அவன் அவள் மௌனத்தை கலைத்தான்.
“என்னை மிரட்டி நடக்குற இந்த கல்யாண பேச்சு வார்த்தை, மணமேடை வரைக்கும் வந்து, என் கழுத்தில் நீ தாலி கட்டும் சூழ்நிலை வந்தால், என் கழுத்தில் தாலி ஏறாது. ஆனால், உனக்கு அதே நாள், அதே நேரம் நான் மரணத்தின் வலியை காட்டுவேன்” அவள் சவால் விட்டு வேகமாக திரும்பி செல்ல, அவன் மனம் பதறியது.
வேகமாக அவள் பின்னே சென்று, அவள் முடியை கொத்தாக பிடித்து அவன் பக்கம் திருப்பி, “உனக்கு ஏதாவது… உன்னை ஏதாவது…” அவளை தன் மார்போடு சாய்த்து அவன் வார்த்தைகள் தடுமாறியது.
அவன் உடல் நடுங்கி, அவள் அருகாமையிலே ஆசுவாசம் தேட எத்தனித்தது. “மாது… மாது…” அவளை விலக்கவும் முடியாமல், அவளிடம் விளக்கவும் முடியாமல் அவன் குரல் இப்பொழுது கர்வத்தை விட்டு காதல் பிச்சை எடுத்தது.
அவன் இதய துடிப்பு அவன் உணர்ச்சியை கூறியது. அவன் தீண்டல் அவளை விட முடியாமல் அவனது தவிப்பை கூறியது.
‘இது தான் காதலா?’ அவள் அறிவும் மனமும் தடுமாறியது.
அவள் அவனிடமிருந்து விலகவே முயற்சித்தாள்.
‘என் அண்ணன் மேல் லஞ்ச புகார் கொடுத்து, முகுந்தன் காவல் துறையின் உதவியோடு செய்து கொண்டிருக்கும் ப்ரொஜெக்ட்டை மோசடி என்று கூறி, என்னை நிர்பந்தப்படுத்தும் இவனது தான் காதலா?’
‘இது தான் காதல் என்றால் நான் இந்த காதலை அடியோடு வெறுக்கிறேன். இப்படி எல்லாம் பேசிவிட்டால், மாதங்கி காதல் மயக்கத்தில் விழுந்திருவாளா?’
‘இவன் வழியில் சென்று இவனுக்கு கொடுக்கிறேன் அடி. அந்த அடியிலிருந்து, இவன் ஒரு நாளும் எழ கூடாது. அண்ணனும் முகுந்தனும் படும் வேதனையை இவன் படவேண்டும்.’ மாதங்கியின் மனம் சூளுரைத்து கொண்டு அவனிடமிருந்து விலகி நின்றது.
“என்னை கோழைன்னு நினைச்சியா? நான் என்னை எதுவும் பணிக்க மாட்டேன். ஆனால், நீ வலியை மட்டுமே அனுபவிப்ப. கதறவைப்பேன் உன்னை…” அவள் குரல் சபதம் செய்தது.
“காதலி கையால் விஷமே சாப்பிட்டாலும் அது அமிர்தம் தான். அது மனைவினா தேவாமிர்தம்.” சற்று முன் அவன் உணர்ந்த அமுதத்தை உணர்த்துபவன் போல், அவன் உதடுகளை தன் விரல் கொண்டு தீண்டினான்.
‘இவனை என்ன செய்வது?’ என்று தெரியாமல் அவள் தவிக்க, ‘இவளை என்ன செய்வது?’ என்று அறியாமல் அவன் தவித்தான்.
பிருந்தாவனத்தில் வலம் வருவோம்…