birunthavanam-15

Birunthaavanam-e5c1b6d0

பிருந்தாவனம் – 15

நாட்கள் அதன் போக்கில் நகர்ந்து மாதங்கி பிருந்தாவின் கல்லூரியின் கடைசி நாளும் வந்தது. அவர்கள் அன்றைய பரீட்சையை முடித்து ஃபர்வெல் பார்ட்டி ஏற்பாடு செய்திருந்தார்கள்.

 எல்லார் முகமும் சற்று வாடி தான் இருந்தது. பிருந்தா மாதங்கியை ஒட்டி கொண்டே அலைந்தாள். ‘இவள் என் அண்ணனை திருமணம் செய்தால், எனக்கு அண்ணி’ என்ற எண்ணம் பிருந்தாவுக்கு மாதங்கியை பார்க்கும் பொழுதெல்லாம் வந்து இம்சித்தது.

‘மாதங்கியை இந்த விஷயத்தில் கட்டாயபப்டுத்த கூடாது’ என்பதில் பிருந்தா உறுதியாக இருந்தாள்.

மாதங்கியின் மனதிலும் நண்பரகளை பிரியும் வருத்தம் இருக்கத்தான் செய்தது. ஆனால், அவள் பெரிதாக வெளிக்காட்டவில்லை.

தோழிகள் பலரும் பேசிக்கொண்டிருக்க, அவர்களுக்கு முதல் வருட ஆரம்பத்தில் மாதங்கி பாடியது நினைவு வர, இன்றும் அவளை பாட சொல்லி கேட்டனர்.

 அன்று போல், கலகலவென்று பாடும் மனநிலை மாதங்கிக்கு இல்லை. அவள் மறுப்பு தெரிவிக்க, அனைவரும் அவளை கட்டாயப்படுத்தினர்.

மாதங்கி பாடுவதற்கு மேடை ஏற, அவளறியாமல் அன்று கிருஷோடு அவள் செய்த  லூட்டி நினைவுக்கு வந்தது.

 ‘இன்று நினைத்தாலும், நான் அந்த லூட்டியை செய்ய முடியுமா? இந்த கல்லூரி வாழ்க்கை எனக்கு எதையோ கற்று கொடுத்திருக்கிறது போல?’ அவள் சிந்தனை ஓட, மாதங்கி மௌனமாக நின்றாள்.

 “மாதங்கி பாடு…” பலரின் குரல் ஒலிக்க, மாதங்கி பாட ஆரம்பித்தாள்.

“மனசே மனசே மனசில் பாரம்

நண்பர் கூட்டம் பிரியும் நேரம்

இந்த பூமியில் உள்ள சொந்தங்கள் எல்லாம்

ஏதேதோ எதிர்ப்பார்க்குமே

இந்த கல்லூரி சொந்தம் இது மட்டும் தானே

நட்பினை எதிர்பார்க்குமே.. ஹே.. யே…யே…யே..யே..”

 மாதங்கியின் கண்கள் கலங்கியது. தன் மூச்சை உள்ளிழுத்து தன்னை சரி செய்து கொண்டாள்.

“நேற்றைக்கு கண்ட கனவுகள்

இன்றைக்கு உண்ண உணவுகள்

ஒன்றாக எல்லோரும் பரிமாறினோம்

வீட்டுக்குள் தோன்றும் சோகமும்

நட்புக்குள் மறந்து போகிறோம்

நகைச்சுவை குறும்போடு நடமாடினோம்”

    மாதங்கி புன்னகைக்க முயற்சி செய்து தோற்றே போனாள்.

“நட்பு என்ற வார்த்தைக்குள்

நாமும் வாழ்ந்து பார்த்தோமே

இத்தனை இனிமைகள் இருக்கின்றதா

பிரிவு என்ற வார்த்தைக்குள்

நாமும் சென்று வாழத் தான்

வலிமை இருக்கின்றதா… ஹே.. யே…யே…யே..”

பிருந்தா தன் தோழியின் கழுத்தை கட்டி கொண்டு கதறிவிட்டாள்.

“சொல்ல வந்த காதல்கள்

சொல்லி விட்ட காதல்கள்

சுமைகளின் சுமையானதே.. ஹே.. யே…யே…யே..”

    மாதங்கியின் மனதில் ஒரு நொடி கிருஷின் முகம் மின்னலாய் வெட்டி சென்றது.

       ‘இந்த கல்லூரியொடு அவன் நினைவுகளை விட்டு செல்ல வேண்டும். சீனியரும் இடையில் என்னை அழைத்ததோடு சரி. நான் பேசலை, அவர் நம்பர் பிளாக் பண்ணியதும், என்னை தொந்திரவு செய்யவில்லை’ மாதங்கி சுய அசலில் இறங்கி பாடாமல் மௌனித்து விட, நண்பர்கள் பாட்டை முடித்தனர்.

அனைவரின் குரலும் அழுது வடிய, மாதங்கி முதலில் சுதாரித்து கொண்டாள்.

“நான் இன்னைக்கு உங்க எல்லாருக்கும் பர்ஃபி செய்து கொண்டு வரணுமுன்னு நினச்சேன் தெரியுமா?” என்று சோகமாக கூற, “ஏன் கொண்டு வரலை?” என்று தோழி ஒருத்தி நமட்டு சிரிப்போடு கேட்டாள்.

“ஏண்டி, உனக்கு இந்த கொலை வெறி? ஒரு தடவை இவ கொண்டு வந்த தேங்காய் பர்ஃபியை நாம நம்ம பெஞ்ச் ஆடுதே அதை நிற்க வைக்க கீழ வச்சி அதை எடுக்க மறந்துட்டோம். மறுநாள் கிளாஸ் முழுக்க எறும்பு வந்து எச்.ஓ.டி கிட்ட திட்டு வாங்கினது மறந்து போச்சா?” பிருந்தா கேலி பேச, “அந்த எறும்புக்கு என் தேங்காய் பர்ஃபியோட மகிமை தெரிஞ்சிருக்கு. உங்களுக்கு தெரியலை” மாதங்கி கழுத்தை சிலுப்பினாள்.

“எறும்புக்கு பல் இல்லை. எங்களுக்கு இருக்கில்ல?” தோழி ஒருத்தி நியாயம் பேச, நண்பர் கூட்டம், சிரித்து சூழ்நிலையை சரி செய்ய முயற்சித்தனர்.

“நான் இன்னைக்கு செய்த மைதா பர்ஃபி அப்படி ஒன்னும் கல்லு மாதிரி இல்லை.” என்று மாதங்கி கண்களை விரித்து கூற, “அப்ப எடுத்துட்டு வரவேண்டியது தானே?” பிருந்தா கேலி பேசினாள்.

“அது தான் பாத்திரத்தை விட்டே வரலையே? தண்ணியில் ஊற வச்சிட்டு வந்தேன்” மாதங்கி சோகமாக கூற, “நாலு வருஷத்தில் ஒரு டிகிரி வாங்கிட்ட, ஆனால் உனக்கு சமைக்க வரலை பாரேன். உன்னை கட்டிக்க போறவன் ரொம்ப பாவம்” அவர்கள் நபர்கள் குழாமில் தோழன் ஒருவன் கேலி பேசினான்.

“எங்களை தான் இப்படி கேலி பேசுவீங்க. நாளைக்கு உனக்கு ஒருத்தி வருவா. போடுறா தோப்புக்கரணம், அப்படின்னா போடுவீங்க” என்று மாதங்கி பதிலடி கொடுத்தாள்.

“அது தானே!” என்று மாணவிகள் கூட்டம் இப்பொழுது ஒன்றுகூட, “எஸ்கேப்…” என்று மாணவர்கள் கூட்டம் ஓட்டம் பிடித்தது.

பல கனவுகளோடு புது வாழக்கையை எதிர்நோக்கி…

வாழ்வில் காத்திருக்கும் சவால்களை அறியாமல்…

கவலையை உதட்டோர புன்னகையில் மறைத்து கொண்டு…

வாழ்வின் எதார்த்ததை ஏற்று கொண்டு…

வீட்டை நோக்கி பறந்தனர்.

       அந்த இளம் பட்டாம்பூச்சிகள் வாழ்வின் வண்ணமயத்தை தேடி!

பிருந்தா வீட்டிற்குள் நுழைய, அங்கு அவள் தாய் மாமா அமர்ந்திருந்தார்.

“வாம்மா  பிருந்தா. படிப்பு முடிஞ்சிருச்சா? மாப்பிள்ளை பார்க்கலாமா?” என்று அவர் மீசையை முறுக்கியபடி கேட்க, “வேண்டாம் மாமா. நான் மேல படிக்க போறேன். இல்லை வேலைக்கு போவேன். கல்யாணம் இப்ப வேண்டாம்” நறுக்கு தெறித்தார் போல் கூறினாள் பிருந்தா.

“என்ன பிருந்தா. மாமா சொல்றதை கேட்க…” என்று பிருந்தாவின் தாயார் ருக்மணி கூற, “அம்மா, நீங்க வேணுமின்னா மாமா சொல்றதை கேட்டுட்டு ஆடுங்க. என்னால முடியாது. அப்பா, முழு விவரம் இல்லாமல் நீங்க சொல்றதை நம்புறாங்க. நான் அப்படி எல்லாம் நீங்க சொல்றதை இனி கேட்க முடியாது. பிருந்தாவனத்தில் எல்லாரும் நல்லவங்க தான்” என்று பிருந்தா உறுதியாக கூறினாள்.

“என்னடி வாய் ரொம்ப நீளுது. என் அண்ணன் உனக்கு தாய்மாமன். எனக்கு அப்புறம் அவர் தான் உனக்கு எல்லாம். உங்க அப்பா வழி சொந்தம் எல்லாம் அப்புறம் தான்” என்று ருக்மணி பிருந்தாவிடம் கை ஓங்க எத்தனிக்க, “ருக்மணி” என்று தன் தங்கையை அடக்கினார் தில்லை நாயகம்.

“அம்மா, நான் மாமான்னு தான் சும்மா இருக்கேன். இல்லைனா, நீங்க ரெண்டு பேரும் எப்ப பாரு கிருஷ் அண்ணாவையும் பெரியம்மா பெரியப்பா பத்தி பேசுறதையும், பாட்டி, தாத்தா பத்தி பேசுறதையும் கேட்டு கண்டும் காணாமலும் போவேனா?” என்று பிருந்தா கோபமாக கேட்டாள். அவளது பல நாள் அடக்கிவைக்கப்பட்ட கோபம், இன்று வருத்தத்தோடு வந்தவளுக்கு  சர் என்று ஏறிவிட்டது.

“உனக்கு சீக்கிரம் ஒரு கல்யாணம் செய்து வைக்கணும். படிப்பை முடிச்சி ஒரு நாள் கூட ஆகலை. வாய் ரொம்ப நீளுது” என்று ருக்மணி தன் மகளை மிரட்ட, “நான் இங்க இருக்கணுமா, இல்லை பாட்டி தாத்தா வீட்டுக்கு போகணுமான்னு முடிவு பண்ணிக்கோங்க. இப்ப கிருஷ் அண்ணனுக்கு நான் ஒரு ஃபோன் போட்டா போதும். அண்ணன் வந்து என்னை கூட்டிட்டு போவாங்க” கூறிவிட்டு மடமடவென்று தன் அறைக்குள் நுழைந்து கொண்டாள் பிருந்தா.

“அண்ணா, இது என்ன இவ இப்படி பேசிட்டு போறா?” என்று ருக்மணி தன் தமயனிடம் புலம்ப, “அவ அப்பா வீட்டு ஆளுங்களோட, அவளுக்கு சுமுகமான உறவு இருக்குன்னு அர்த்தம். உன் புருஷன் சரவணன் முழுசா உன் பக்கம் தானான்னு பார்த்துக்கோ.” தில்லைநாயகம் அறைக்கு சென்று கதவை தாழிடும் தன் தங்கை மகளை கண்களை சுருக்கி பார்த்தடி கூறினார்.

“அவர் என் பக்கம் தான். இருந்தாலும், எப்ப அவங்க வீட்டு பக்கம் சாய்வாருன்னு சொல்ல முடியாது” ருக்மணி கடுப்பாக கூறினார்.

‘அப்படி, நான் அந்த குடும்பத்தை சும்மா வாழ விட்டிருவேனா? அவங்க அரசியல் வாழ்க்கைக்கு நான் வைக்குறேன் வேட்டு.’  தில்லைநாயகம் மனதோடு பொருமினார்.

அதே நேரம் தன் அரசியல் அலுவலகத்தில் வேணுகோபாலன்  யோசனையில் ஆழ்ந்திருந்தார்.

‘எலக்க்ஷன் வர போகுது. கூட்டணி எதுவும் சரியா இல்லை. எல்லா பக்கமும் நமக்கு நெருக்கடியா இருக்கு. சந்தியாவை கிருஷ்க்கு கல்யாணம் செய்து வச்சா நாகராஜனை நம்ம பக்கம் சேர்திறலாம். ஜாதி ஓட்டும்  நம்ம பக்கம் திரும்பும். ஆனால், இந்த கிருஷ் கல்யாணதுக்கு ஒதுக்க மாட்டேங்குறானே.’

‘கல்யாண பேச்சும் இழுத்துட்டு போறதால, நாகராஜன் பேச்சு இப்பல்லாம் சரி இல்லை.  அம்மாவும், வேதநாயகியும் கிருஷ் சம்மதம் தான் முக்கியமுன்னு  அவன் பக்கம் நிற்குறாங்க’ தன் குடும்பத்தை பற்றியும்  அரசியல் போக்கை பற்றியும் சிந்தித்து கொண்டிருந்தார் வேணுகோபாலன் ஒரு தந்தையாகவும், அரசியல்வாதியாகவும்!

மாதங்கி வீட்டிற்குள் செல்ல அங்கு ஓர் அசாதாரண சூழ்நிலை நிறைந்திருக்க, அவர்களோடு சென்று அமைதியாக அமர்ந்து கொண்டாள். அவர்கள் பேசிய விஷயத்தில் முழு காரணம் அவர்கள் அறியாவிட்டாலும், மாதங்கி அறிந்து கொள்ள படபடவென்று அறைக்குள் சென்று கிருஷ்க்கு அழைத்தாள்.

கிருஷின் முகத்தில் மெல்லிய புன்னகை எட்டி பார்த்தது. அவன் அவள் அலைபேசி அழைப்பை எடுக்கவில்லை. புன்னகையோடு அவள் அழைப்பை பார்த்து கொண்டே இருந்தான்.  “நீ என்னை தேடி நேரில் வரணும். நான் உன்னை பார்க்கணும்” அவன் உதடுகள் எதிர்பக்கம் அழுத்தமாக முணுமுணுத்து கொண்டது.

    “அம்மா, நான் கோவிலுக்கு போயிட்டு வரேன்.” கூறிக்கொண்டு கிருஷின் அலுவலகத்தை நோக்கி அவள் வண்டியில் பறந்தாள் மாதங்கி.

பிருந்தாவனத்தில் வலம் வருவோம்…