UMUV21

Banner-77cf4214

UMUV21

21

 

“ஹேப்பி பர்த்டே டியர்” என்று அவள் காதில் மென்மையாகச் சொன்னபடி கேக்கை வெட்டினான்! தன் உயரத்திற்குக் குனிந்து கேக்கை ஊட்ட வந்தவனைக் கண்கலங்கப் பார்த்தவள், கேவலுடன் கையால் வாயைப் பொத்திக்கொண்டு சோஃபாவில் அமர்ந்துவிட்டாள்.

அவள் மனவோட்டம் புரிந்தாலும், “ஹே என்ன இது, கண்ணை துடை” மேஜையிலிருந்த டிஷ்யூவை எடுத்து அவள் கண்ணைத் துடைத்தவன், கேக்கை ஊட்டப் போக, அதைக் கையில் வாங்கிக் கொண்டவள், உணர்வுகளைக் கட்டுப்படுத்த தவிக்க, தண்ணீரைக் கொண்டுவந்து கொடுத்த ரிஷி,

“சாரி, நான் நேத்துதான் வந்தேன், உடனே வந்து பாக்க நினைச்சேன் ஆனா வரது வரேன் உன் பிறந்தநாளுக்கு வரலாம்னு”

கண்களைத் துடைத்துக்கொண்டவள், “என் பிறந்தநாள் எப்போன்னு நான் சொல்லவே இல்லையே?” அவனுக்குக் கேக்கைக் கொடுத்தபடி கேட்க,

“சொல்லலைனா தெரியாதா என்ன?” புன்னகைத்தவன், “எப்படி இருக்க வர்ஷா?” என்று கேட்க,

“இருக்கேன், நீங்க எப்படி இருக்கீங்க?”

“ம்ம் இருக்கேன். இரு…” என்றவன் அவன் பேக்பேக்கிலிருந்து இரண்டு பரிசு பெட்டிகளைக் கொடுத்தான்.

“இது விஷ்ணு கொடுத்தது, இது தாத்தா கொடுத்தது”

“தேங்க்ஸ்” என்று அதை வாங்கிக்கொண்டவள், “நீங்க எங்க இங்க?” என்று சில நிமிடங்களாக தன்னை குடைந்து கொண்டிருந்ததைக் கேட்க,

“சித்தப்பாவ பாக்க வந்தோம், அப்படியே உன்னையும் பாத்துட்டு போலாம்னு”

“வந்தோம்னா விஷ்ணுவும் வந்திருக்கானா?” உற்சாகமானவள், “ஏன் வரல என்னை பாக்க?” சட்டென வாட,

“அவன் சித்தப்பாவ பார்க்க நேரா ஆல்பர்ட்டா (பக்கத்து மாகாணம்) போயிட்டான். நான் உன்னை பார்த்துட்டு போலாம்னு வான்கூவர் வந்துட்டேன்” என்றவன் சோஃபாவில் சாய்ந்து கொண்டான்.

“தேங்க்ஸ் நந்தா…” என்றவள் பொதுவான விசாரிப்புகளுக்குப் பிறகு,

“ஒண்ணு கேக்கவா?” என்று தயங்கியவள், “விடுங்க அப்புறம் கேக்கறேன்”

“கேளு”

“இட்ஸ் ஓகே. பட் தேங்க்ஸ் நிஜமாவே உங்கள இங்க எதிர்பாக்கல. சந்தோஷமா இருக்கு” அவள் புன்னகைக்க, புன்னகைத்தவன்,

“இதுல என்ன இருக்கு, ம்ம் என்ன கேக்கணும்னு நினைக்கிறியோ கேளு”

“இன்னிக்கி எனக்கு சில ஐட்டம்ஸ் கிடைச்சது…அதெல்லாம் நீங்க கொடுத்ததான்னு…” அவள் தயக்கத்துடன் மாலை கிடைத்த பரிசுப் பொருட்களை அவனிடத்தில் காட்ட,

ஏதும் சொல்லாது அவளைச் சில நொடிகள் பார்த்தவன், “வேற யாரா இருக்க முடியும்?” மிகமிக மென்மையான குரலில் கேட்க, உறையும் குளிரிலும் குப்பென வேர்ப்பதைப் போல் உணர்ந்தவள்,

“என்ன சொல்ல வர்றீங்கன்னு…” அவனைப் பார்க்காமல் குனிந்துகொள்ள, கொட்டாவி விட்டபடி எழுந்தவனோ,

“அவ்ளோ சொல்லியும் புரியலையா? யோசி!” என்றபடி, “சரி நான் எங்க தூங்கறது?” என்று சோம்பல் முறித்தபடி கேட்டதில் வர்ஷாவிற்கு வேர்த்தே விட்டது.

“என்ன? தூ….ங்க வா?” திணறியவள், கேக்கை பிரிட்ஜில் வைத்தவன் முதுகைப் பார்க்க,

“ஆமா ராத்திரி பன்னிரண்டரை மணிக்கு தூங்கவான்னு என்ன கேள்வி?”

“நீங்க இங்க எப்படி? வீட்டுக்குப் போகலையா?” அவள் விழிக்க,

“ஏன் இது வீடு இல்லையா அப்போ?” அவன் கொண்டு வந்திருந்த பையிலிருந்து இரவு உடையை எடுத்துக்கொண்டு, பரிச்சயமானது போல உடைமாற்ற குளியலறைக்கு அவன் செல்ல, அவளோ பேயறைந்தது போல் அமர்ந்துவிட்டாள்.

‘என்னை வச்சு காமெடி பண்றானா? திடுதிப்புன்னு வந்து நின்னுட்டு, எங்க தூங்கன்னு கேட்டா?” தலையைச் சொறிந்தவள், வேகமாக அறையைச் சுற்றி பார்வையை ஓடவிட்டாள்.

இருவர் அமரக்கூடிய ஒரே ஒரு சோஃபா, டி டேபிள் ஹாலின் ஒருபுறம் பால்கனி மற்றொருபுறம் சமையல் பகுதி. மீதம் இருப்பதென்னவோ அந்த ஒற்றை படுக்கை அறைதான். கார்ப்பெட்டில் படுத்துக்கொண்டாலும் குளிரதான் செய்யும், தலையைச் சொறிந்தவள் சிந்தனையைக் கலைத்தது நந்தாவின் குரல்.

“ஹோய் என்ன அங்கேயே நிக்குற? நான் எங்க தூங்கட்டும்ன்னு கேக்கறேன், ஜெட்லேக்ல செமயா சொக்குது” கண்களைக் கசக்கியபடி இரவு உடையில் நின்றிருந்தவனைக் கண்ணிமைக்காமல் பார்த்தவள்,

“அது…இங்க” என்று சோஃபாவை பார்க்க, “நக்கலா? அது உனக்கே பத்தாது.அதான் இவ்ளோ பெரிய கட்டில் இருக்கே, நமக்கு போதும். சரி சீக்ரம் வந்து படுத்துக்கோ” என்றவன், “ஹேப்பி பர்த்டே ஒன்ஸ் அகெய்ன். ஏழு மணிக்கு எழுப்பு” என்றபடி மொபைலை சார்ஜில் போட்டவன் படுத்துக்கொண்டான்.

ஆணியடித்தார் போல் அங்கேயே நின்றவள், மெல்ல அவனை எட்டிப் பார்க்க, அவனோ அவள் போர்வையைக் காதுவரை போர்த்திக்கொண்டு கண்களை மூடிகொணிடிருக்க,

‘அடப்பாவி கவலையே இல்லாம நொசுக்கினு இருக்க? நான் எங்கடா தூங்குவேன்?’ உதட்டைச் சுழித்தவள், கையைக் கன்னத்துக்கு முட்டுக்கொடுத்து சோஃபாவில் அமர்ந்துவிட்டாள்.

மொபைலை எடுத்தவள், ‘ரிஷி, நந்தா வந்துருக்கான்! என்ன ஏதுன்னு தெரியல ஆனா இங்கேயே தூங்கறான்! மீதிலாம் அப்புறம் சொல்றேன். இப்போ என்ன செய்ய? நான் எப்படி அவன் பக்கத்துல தூங்க முடியும்’ என்று மெசேஜ் செய்தவள், மெல்ல எட்டிப்பார்க்க, மொபைலை எடுத்துப் பார்த்த நந்தனாகிய ரிஷி, புன்னகைத்துக்கொண்டு எதையோ டைப் செய்துவிட்டு மீண்டும் போர்வைக்குள் புகுந்து கொண்டான்.

‘டுபுக்கு! சிரிக்கிறதை பாரேன்!’ கொஞ்சிக்கொண்டவள், மொபைலை பார்க்க,

‘என் கிட்ட கேக்குறதுக்கு நீ அவனை கேட்கலாமே?’ என்றிருக்க,

‘அவனைத்தானே கேக்கிறேன் ?’ நொந்து கொண்டவள், சில நிமிடங்கள் அமைதியாக அமர்ந்துவிட்டாள்.,

“வர்ஷா தூங்க வா! நேரமாச்சு!” அவன் குரலில், சொருகிய கண்கள் விரிந்துகொள்ள, வேகமாகப் படுக்கையறைக்குள்ளே சென்றவள், “நான் எப்படி உங்க பக்கத்துல? நா ஹால்ல படுத்துக்குறேன்” என்றபடி தலையணையை எடுத்துக்கொள்ள, போர்வையை உதறிவிட்டு எழுந்தவன்,

“ஏன் உன்னை என்ன பண்ணிடுவேனாம்? ஒழுங்கா இருக்கணும்னா எங்கயும் எங்களுக்கு இருக்க தெரியும். சோ நீ கொஞ்சம்…” அதற்கு மேல் சொல்லாமல் மீண்டும் படுத்துக்கொள்ள, முடிந்த அளவு கட்டிலின் ஓரமாகப் படுத்துக்கொண்டவள், மனம் சத்தமாகவே துடிக்கத் துவங்கியது.

‘கல்யாணமானா இப்படி தான் ஒரே பெட்ல தூங்குவோம்ல! அச்சோ!’ கண்களை மூடிக்கொண்டவள், ‘இதெல்லாம் யோசிக்க கூடாது! நீ வெஜிடேரியன் லவ்வர்’ தனக்குத்தானே சொல்லிக்கொண்டு, கற்பனையில் மிதக்கத் துவங்கிய மனதை அடக்க முயன்று கொண்டிருக்க, மொபைல் வைப்ரேட்டாகியது.

‘என்ன பண்றே? நந்தா என்ன பண்றான்’ ரிஷியின் மெசேஜில், விறைத்தவள், திரும்பி அவனைப் பார்க்கத் தைரியமின்றி, ‘தெரியலை ரிஷி, அவன் என் பக்கத்துல தான் படுத்துருக்கான்’ என்று பதில் அனுப்பிவைத்தாள்.

‘அடிப்பாவி! இதெல்லாம் கல்யாணத்துக்கு முன்னாடி தப்பு!’ அவன் மெசேஜில் திரையை முறைத்தவள்,

‘தப்பெல்லாம் நீ பண்ணு, அறிவுரை எனக்கா?’ வியந்தவள், ‘அவன் சும்மா தான் தூங்கறான். சும்மா ஏதான பேசாதீங்க’

‘அவன் சும்மா இருப்பான்! ஆனா நீ இருப்பியா? நீ தான் அவனை லவ் பண்றியே!’

‘அதுக்கு? என்ன பண்ணிடுவேணாம்?’

‘அதை என் வாயால எப்படி சொல்ல?…’ அருகே முத்தம் தரும் எமோஜியை அனுப்பியிருந்தான் ரிஷி.

‘கொக்கமக்கா! கிஸ்? அதுவும் நானு?’ ஷாக்கடித்ததைப் போல எழுந்து உட்கார்ந்தவள், நெஞ்சைப் பிடித்தபடி திரும்பிப் பார்க்க, மொத்தமாகப் போர்வைக்குள்ளே போயிருந்தான் அவள் நந்தா.

‘அதுக்கெல்லாம் வாய்ப்பே இல்ல! பக்கி முகத்தையும் சேர்த்து மூடிட்டு தூங்குது! இதுல என்னத்த நான் கிஸ் பண்ண?’ என்று அலுப்புடன் பதில் தர,

‘அப்போ அவன் முகத்தை திறந்தா குடுப்பியா?’ ரிஷியின் பதிலில் உறைந்தவள், ‘பய அசையுறமாரியே தெரியல எப்படி டைப் பண்றான்?’ யோசித்தபடி,

‘முகத்தை காட்டினா கொடுப்போம், எங்களுக்கு என்ன பயம்?’ என்று பதில் அனுப்பிவைத்தவள், ‘பயபுள்ள கிஸ் கேட்டுட்டு ஒன்னும் தெரியத மாதிரி முகத்தை மூடிக்கிட்டு படுத்திருக்கிறதை பாரேன்!’ நகத்தைக் கடித்தபடி அமர்ந்திருந்தாள்.

சில நிமிடங்களில் போர்வையை முகத்திலிருந்து விலக்கியவன், வர்ஷாவின் புறம் திரும்பிப் படுத்துக்கொள்ள,

‘கேஷுவலா திரும்புறாராம்!’ நாக்கை துருத்தியவள், ‘எனக்கென்ன பயம்? பாரு இப்போ எப்படி கிஸ் அதிர போகுதுன்னு!’

அவனை நெருங்கியவள், அவன் கன்னத்தை நோக்கி உதட்டைக் குவித்தபடி குனிய, படாரென்று கண்களைத் திறந்தவன், அவள் குவித்த உதட்டில் நச்சென்ற முத்தத்தைப் பதித்தவன், முகத்தையும் சேர்த்து போர்வையால் மூடிக்கொண்டான்.

மின்னல் வேகத்தில் நடந்து முடிந்ததை நம்பமுடியாமல், அதிர்ச்சியில் மலங்க மலங்க விழித்தவள், இயந்திரம்போலத் திரும்பிப் படுத்துக்கொண்டாள்.

இதயம் வெளியே வந்து விழுந்துவிடும் போல இருக்க, உடல் உஷ்ணமாவதை உணர்ந்தவள், மெல்ல உதட்டை வருடிப் பார்த்து, சந்தோஷ சங்கடத்தில் நெளிந்தவள், ‘ஐயோ!’ என்று மொத்தமாகத் தன் போர்வைக்குள்ளே புகுந்துகொண்டாள்.

காலையில் நிதானமாகவே கண்விழித்தவள் நாசியை நிமிண்டியது அருமையான நெய் வாசனை. கண்களைக் கசக்கிக்கொண்டு எழுந்தவள், ரிஷி வந்திருந்தது ஞாபகம் வர வேகமாக எழுந்து வெளியே செல்ல, மேஜையில் உணவை எடுத்து வைத்துக்கொண்டிருந்தான்.

வர்ஷாவை கண்டதும் “குட் மார்னிங்! ஹேப்பி பர்த்டே. பிரெஷ் ஆகிட்டு வா! ப்ரேக்பாஸ்ட ரெடி, பொங்கல் சாம்பார்” என்றவன், “நான் கொஞ்சம் ஆபீஸ் ஒர்க் பாக்கணும் சீக்ரம் வாடா” என்று கொஞ்சலாகக் கேட்க, அதன் படியே வேகமாகத் தயாராகி வந்தாள்.

முந்தைய இரவு முதல் முத்தத்தின் நினைவு வர, கன்னம் சூடாவதை உணர்ந்தவள், தயங்கியபடி, “நீங்க ஏன் இதெல்லாம் பண்றீங்க நந்தா” உதட்டைச் சுழிக்க,

அப்படி ஒன்று நடந்ததே தெரியாததுபோல் இயல்பான குரலில் அவனோ, “நீ அசந்து தூங்கிட்டு இருந்த, எனக்கு முழிப்பு வந்துருச்சு பசிவேற பொறுக்க முடியல, கிச்சனுக்கு வந்தா… ஒண்ணுத்தையும் காணும்” உணவை மேஜையில் வைத்தவன்,

“வா! சீக்ரம் சாப்பிடு நான் கொஞ்சம் ஒர்க் முடிச்சுட்டு வரேன் நாம வெளில போலாம்” என்றபடி அவளுக்குப் பொங்கலைப் பரிமாறினான்.

உணவைச் சில நொடிகள் பார்த்திருந்தவள், “நந்தா நேத்து அதிர்ச்சில எதுவுமே தோணலை, நீங்க எதுக்காக என்னை பார்க்க வந்துருக்கீங்க? அத்தனை கிப்ட்ஸ் எதுக்கு? அந்த டைரி பேப்பர்னு அவ்ளோ…அழகான வரிகள்…” நேற்றைய நினைவுகளில் தொலைந்தவள்,

“எல்லாத்துக்கும் மேல இப்படி இங்கேயே தூங்கறேன்னு என்னை யோசிக்கவே விடாம அழிச்சாட்டியம் வேற. என்ன வேணும் உங்களுக்கு?”

“சோறு வேணும். பசிக்குது” என்றவன் பொங்கலை வாசம் பிடிக்க,

சிரித்துவிட்டவள், “அப்போ சொல்றதா இல்ல அதானே? திமிரு அவ்ளோ திமிரு !”

“ஏன்? என் திமிரு உனக்கு பிடிக்காதா?” ஒற்றை புருவம் உயர்த்தி அவன் கேட்க,

“பிடிக்கும்தான் அதுக்காக அதுகூடவே இருக்க முடியுமா? கொஞ்சம்….கொஞ்சமேனும் கன்சிடர் பண்ணலாம், எனக்கு ஒண்ணும் புரியலல ? பாவம்ல நான்?” அவள் கொஞ்சலாகக் கெஞ்ச,

“இல்ல” என்றவனோ, ரசித்து ருசித்துப் பொங்கலில் மெய்மறந்தான்.

‘இம்சைடா நீ!’ அவனை மனதுள் கொஞ்சிக்கொண்டவள், ‘என் வீட்ல என் எதிரில் என் கூடவே என் நந்தா!’ தன்னையும் மீறிப் புன்னகைத்தவள் முகம் சந்தோஷத்தில் ஒளிர,

“சாப்பிட்டு எவ்ளோ வேணும்னாலும் சைட்டடி. ஏற்கனவே பொங்கல் சாப்டா தூக்க மாத்திரை மாதிரி ஜம்முன்னு தூக்கம் வரும், நீ இப்படி ஸ்வீட்டா பாத்தா அப்புறம் நான் இப்போவே தூங்கவேண்டியது தான்…உன் மடில” விஷமமாகச் சொல்ல, வார்ஷாவிற்கு புரையேறி விட்டதில் சிரித்தவன்,

“பயப்படாத! சும்மா” கண்சிமிட்டியபடி தண்ணீரை அவள் முன் நகர்த்தினான்.

உணவை முடித்துக்கொண்டவன், ஹாலில் அமர்ந்து அலுவலக வேலையில் மூழ்கிவிட, அவன் அருகில் அமர்ந்து டிவி பார்த்துக் கொண்டிருந்தவள் மனமோ கனவுலகில் மிதக்கத் துவங்கியது,

‘கல்யாணம் ஆனா இப்படித்தான் இருக்கும்ல சாட்டர்டே சண்டேலாம்’ யோசித்தபடி அவனைப் பார்க்க, அவனோ தீவிரமாக லேப்டாப்பில் மூழ்கியிருந்தான்.

‘அந்த லேப்ட்டப்பை பார்க்கும் ஆர்வத்துல பாதியாவது என்னை பாக்கும் போது காட்டுடா அது போதும்.ஏன்டா இவ்ளோ அழகா இருக்க?’ அவள் இமைக்க மறந்து ரிஷியைப் பார்த்திருக்க,

“என்னையே பாத்துகிட்டு இருக்கிறதுக்கு டிவி எதுக்கு?” ரிஷியின் கேள்வியில் அதிர்ந்தவள்,

“அது…அது…” என்று திணறியபடி தொலைக்காட்சியைப் பார்க்கத் திரும்ப, அவள் முகத்தைப் பிடித்து நிறுத்தியவன், “டிவில என்ன ஓடுது?” என்று கேட்க,

“அது…கிரிக்கெட்”என்றதில் சிரித்தவன்,

“உங்க ஊர்ல கிரிக்கெட் புட்பால் கிரவுண்டுல தான் விளையாடுவாங்களா?” என்று நக்கலாகச் சிரித்தபடி அவள் முகத்தை விடுவிக்க, டிவி திரையில் கால்பந்தாட்டம் ஓடுவதைக் கண்டவள், வெட்கத்தை மறைக்க, குஷனை வைத்து முகத்தை மறைத்துக்கொண்டாள்.

அவனோ சிரித்தபடி வேலையைத் தொடர்ந்தான்.

‘போச்சு மானமே போச்சு! பக்கின்னு நினைச்சுருப்பான்’ நொந்து கொண்டவள் மறந்தும் அவனைப் பார்ப்பதை நிறுத்தவில்லை. ரிஷி சொன்னபடி பொங்கலின் பக்கவிளைவோ, தன்னவனின் அருகாமை தந்த நிம்மதியோ சோஃபாவிலேயே சாய்ந்து உறங்கியவள் மதியம் கண் விழிக்க மாலை ஆகி விட்டது.

ரிஷி படுக்கை அறையில் உறங்கிக் கொண்டிருப்பதைப் பார்த்தவள், ஓசைப்படாமல் தயாராகி, அவன் அருகே மேஜையில் இருந்த போஸ்ட் இட்நோட்டில் ‘நைட் வர லேட் ஆகும், எனக்காக வெயிட் பண்ண வேண்டாம் நீங்க சாப்பிடுங்க’ என்று எழுதி வைத்துவிட்டுப் புறப்பட்டவள்,

‘நான் லூகாஸ் கூட டேட்டிங் போறேன், அன்னிக்கி காட்டின டிரஸ் போட்ருக்கேன். அவனுக்கு பிடிக்கும்னு நம்பறேன். நீங்க என்ன பண்றீங்க’ என்று ரிஷிக்கு மெசேஜ் செய்துவிட்டு, லூகாஸை சந்திப்பதாகச் சொன்ன உணவகத்தை நோக்கிப் பயணித்தாள்.

உணவகத்தின் வாசலில், கையைப் பிசைந்தபடி நின்றிருந்த லூகாஸ் “படபடன்னு இருக்கு வர்ஷா” என்று உதட்டைக் கடிக்க,

“கூல் டவுன்! டேக் டீப் ப்ரீத்” அவனுடனே சில நிதானமான மூச்சுக்களை விட்டவள், “நீ இப்படி திருதிருன்னு முழிக்காம வா, எல்லாம் பர்பெக்ட்டா நடக்கும்” அவன் கையைப் பிடித்து வலுக்கட்டாயமாக உணவகத்திற்குள் அழைத்துச் சென்றாள்.

மறுமுனையில் சிலநிமிடங்கள் கழித்துக் கண்விழித்த ரிஷி, வர்ஷாவை தேட, ‘வெளில போலாம்னு சொன்னேன் எங்க தான் போனாளோ!’ அவளை அழைக்க மொபைலை எடுத்தவன், அருகிலிருந்த போஸ்டிட் நோட்டையும், அவள் மெஸேஜையும் படித்துவிட்டு, தலையில் அடித்துக்கொண்டான்.

‘லூசு! உனக்காக எவ்ளோ ஆசையா வந்தேன்! என் பிளானெல்லாம் சொதப்புறதுக்கே பிளான் போடுறே நீ’ கடுகடுத்தபடி வர்ஷாவை அழைத்தான், அதை ஏற்காமல் கட் செய்தவள், ‘எழுந்துட்டிங்களா நந்தா? மேஜைல சாதம் இருக்கு சாப்பிடுங்க. நான் வர நேரமாகும்’ என்று பதிலனுப்ப,

‘எங்க இருக்க?’ என்றவன் கேள்விக்குப் பதிலாக அவள் அனுப்பிய ட்ரீம் டைன் உணவகத்திற்கு வேகமாக விரைந்தான்.

காரைப் பார்க் செய்யக் கூடப் பொறுமை இல்லாது தவித்தவன், மேலே பார்க்கிங்கிற்கு சாவியைக் கொடுத்துவிட்டு உணவகத்திற்குள் நுழைந்தான். பார்வையால் வர்ஷாவை தேட, அவளோ கண்ணில் தென்படவில்லை,

வர்ஷாவை அழைத்தவன், “எங்க இருக்க வர்ஷா? நான் ‘ட்ரீம் டைன்’ல தான் இருக்கேன்” என்று படபடக்க, “நீங்க ஏன் வந்தீங்க? எங்க இருக்கீங்க?” அவள் ரகசியமாக மிரட்ட,

“இங்க தான் கார்டன் செக்ஷன்ல”

“அங்க எங்க…” அழைப்பைத் துண்டித்துவிட்டாள்.

தன் கையை யாரோ இழுப்பதை உணர்ந்தவன் வலப்பக்கம் திரும்ப அங்கே பதுங்கிக்கொண்டிருந்த வர்ஷா, முறைப்புடன், “ஆர்வ கோளாறா பாஸ் நீங்க?” அவனை முறைத்தவள், “முழிக்காதீங்க! வாங்க” என்று அவனையும் தன்னருகில் இழுத்து, கார்டன் ரெஸ்டாரண்டை சுற்றி அமைக்கப்பட்டிருந்த ஹெட்ஜிற்கு (புதர் வேலி) பின்னே இழுத்துச் சென்றாள்.

அங்கே ஏற்கனவே பதுங்கியபடி அமர்ந்திருந்த லூகாஸ், “ஹாய் நண்டா” என்றான் கிசுகிசுப்பாக,

“நண்டாவது தேளாவது?” முணுமுணுத்துக்கொண்டவன், “ஹாய்” என்றான் சம்பிரதாயமாக.

“புதருக்கு பின்னாடி என்ன பண்றீங்க?” வர்ஷாவை அவன் மிரட்ட,

“ம்ம் எத்தனை இலை இருக்குன்னு எண்ணிக்கிட்டு இருக்கோம்” முறைத்தவள் குரலிலும் கோவத்திற்குப் பஞ்சமில்லை.

“நக்கலா?” அவன் எழ முயற்சிக்க, அவன் கையைப் பற்றி இழுத்தவள்,

“ஸ்ஸ்ஸ் ரெண்டு நிமிஷம் சும்மா இருக்க மாட்டீங்களா?” அவனை முறைத்தவள், “எழுந்தீங்கன்னா கடிச்சு வச்சுருவேன் சொல்லிட்டேன்” என்று விரலை ஆட்டி முறைக்க,

அவளை முறைத்தபடியே தன் உயரத்தை ஹெட்ஜிற்கு பின்னே மறைத்துக்கொள்ள ஏடாகூடமாகவே தன்னை மடக்கிக்கொண்டு அமர்ந்தான் ரிஷிநந்தன்.

‘இதுங்க தான் லூசுங்கன்னா என்னையும், ஏன் எதுக்குன்னே தெரியாம லூசுத்தனமா நடந்துக்க வைக்கிறாங்க’, புதரிலிருந்து மெல்ல எட்டியெட்டி பார்த்துக்கொண்டிருந்த லூகாஸையும் வர்ஷாவையும் பார்த்து மனதில் நொந்து கொண்டவன், கோவத்தைக் கட்டுப்படுத்த மூச்சில் கவனத்தைத் திருப்பினான்.

“ஸ்ஸ்…ஸ்ஸ்ஸ்…ஸ்ஸ்ஸ்ஸ்…நந்தா!” அவன் தோளை வர்ஷா சீண்ட, திரும்பியவன் பேசும்முன்னே, “நான் சிக்னல் கொடுக்கும்போது ‘சர்ப்ரைஸ்’ ன்னு சொல்லிகிட்டே எழுந்துக்கணும்” என்று ரகசியமாகச் சொல்லிவிட்டு மீண்டும் எட்டிப்பார்ப்பதைத் தொடர, தலையில் அடித்துக்கொண்டவன்,

‘தலையெழுத்து!’ என்று நொந்துகொள்ள, ‘லூசை காதலிச்சா லூசாதான் ஆகணும்’ மனம் அசட்டையாகச் சொல்ல, ‘ஆகி தொலைக்கிறேன்’ கண்களை மூடிக்கொண்டவன். வர்ஷாவின் சிக்னலுக்காகக் காத்திருந்தான்.

சில நொடிகளில், ‘நவ்’ என்று சொல்ல, வர்ஷா லூகாஸுடன் சர்ப்ரைஸ் என்று கத்தியபடி எழுந்தவன் கண்கள் விரிந்தன.

பார்ட்டி பாப்பர் வெடித்து வண்ண காகிதங்கள் மழையாய் பொழிய, அதன் நடுவே வயது முதிர்ந்த தம்பதிகள் அமர்ந்திருந்தனர்.

இவர்கள் மூவரும் எழுந்ததில் ஆச்சரியத்தில் ‘ஹே லியூக்!’ என்று கன்னங்களைப் பற்றிக்கொண்ட பெண், குழப்பமாக எதிரே அமர்ந்திருந்த முதியவரைப் பார்க்க, அவர் ஜாடை செய்ததில், லூகாஸ் தன் பேண்ட் பாக்கெட்டிலிருந்து சிறிய பெட்டியொன்றை எடுத்து அவரிடம் கொடுத்தான்.

மூதாட்டியின் முன்னே மண்டியிட்டவர், பெட்டியைத் திறந்து மோதிரத்தை நீட்டி, பிரெஞ்சில் என்னவோ கேட்க, கண்கலங்கியவர் கண்களைத் துடைத்தபடியே ஆமென்று தலையசைக்க, சுற்றி இருந்த அனைவருமே கைதட்ட, அழகாய் வெட்க புன்னகை பூத்த பெண்ணவர் விரலில் மோதிரத்தை அணிவித்தார்.

தனது தாத்தா பாட்டிக்கு வர்ஷாவையும் ரிஷியை நந்தா எனவும் அறிமுகம் செய்துவைத்தான் லூகாஸ்.

சில நிமிடங்கள் அவர்களுடன் பேசியவர்கள், வாழ்த்து தெரிவித்துவிட்டு, வேறொரு மேஜையில் அமர்ந்துகொள்ள, லூகாசோ கிட்டார் இசைக்கத் துவங்கினான்.

“என்ன கேட்டார் என்ன சொன்னாங்க ஒன்னும் புரியலை ஆனா பாட்டி கல்யாணத்துக்கு ஓகே சொல்லிட்டாங்க போல” வர்ஷா ரிஷியைப் பார்க்க,

“ ‘48 வருஷம் கழிச்சு கேக்கறேன்னு தப்பா எடுத்துக்காத. நான் உன்னை முதல்முதலா பார்த்தப்போ எப்படி உணர்ந்தேனோ அதே உணர்வு மாறாம அப்படியேதான் இருக்கேன். என்னை கல்யாணம் பண்ணிக்க சம்மதமா’ன்னு கேட்டார்” ரிஷி சொல்ல,

“வாவ்! சூப்பர்ல?” வியப்புடன் லூகாஸின் பாட்டி தாத்தாவைப் பார்த்த வர்ஷா,

“இவ்ளோ வருஷம் கல்யாணமே பண்ணிக்கல ஆனா சேர்ந்தே இருக்காங்க. பேரன் பேத்தின்னு பார்த்தவங்க…இன்னும் எவ்ளோ அன்னோன்யமா இருக்காங்க”

“இங்கே அதெல்லாம் சாதாரணம் ஆனா இத்தனை வருஷம் இவங்க சேர்ந்தே இருக்குறது சாதனை தான்”

“யு நோ நந்தா, லுகாஸ் தாத்தாக்கு ஒரே டென்சன், படபடப்பு தாங்காம பேரனை ஐடியா கேட்டு, அப்புறம் அவன் பண்ண ஏற்பாடுதான் இதெல்லாம்” பேசிக்கொண்டே போனவள்,

“ஆமா உங்களுக்கு பிரெஞ்சு தெரியுமா?” வியப்புடன் ரிஷியைப் பார்க்க,

“ம்ம்” என்றவன் பார்வை இப்பொழுது பேரனின் கிட்டார் இசைக்கு நடனமாடிய லூகாஸின் பாட்டி தாத்தாவின் மீதே இருக்க,

“கம்” என்று அவர்கள், இளையவர்களை அழைக்க, தயக்கத்துடன் ரிஷியைப் பார்த்த வர்ஷாவின் கையைப் பற்றி அழைத்துச்சென்ற ரிஷி,

லூகாஸின் இசைக்கேற்ப மெல்ல மெல்ல அவளுடன் ஆடத் துவங்கினான். நேரம் போவதே தெரியாமல் அவன் கையில் பறப்பதைப் போல் உணர்ந்தவள் அந்த நிமிடம் அப்படியே நீண்டுவிடக் கூடாதா என்று ஏங்கினாள்.

மேஜைக்குத் திரும்பிய வர்ஷா “பிரெஞ்சு பேச தெரியுமா? அவங்க கூட இவ்ளோ சரளமா பேசுறீங்க?” வியப்புடன் அவனைக் கேட்க,

“ம்ம் எழுத படிக்கவும் தெரியும்” அதுவரை முகத்திலிருந்த புன்னகை மறைந்தது, படபடப்புடன், “அதுவா முக்கியம்…எப்போ கிளம்பலாம்?” என்று அவன் நேரத்தைப் பார்க்க,

“எங்க போனும்?”

“ஈவினிங் வெளில போகணும்னு சொன்னேன்ல? இப்போவே லேட்!” ரிஷி பொறுமை இழக்க,

“எதுக்கு நந்தா?”

அவளை வெட்டவா குத்தவா என்பதைப் போல் முறைத்தவன், அவசர அவசரமாக அனைவரிடமும் விடைபெற்றுக்கொண்டு வர்ஷாவுடன் கிளம்பினான்.

எதோ கேட்க வந்தவளை, தடுத்தவன், “ரீச் ஆயிடுவோம் அதுவரை ப்ளீஸ்” என்று உதட்டில் விரல் வைத்து மௌனமாக இருக்கும் படி புன்னகைக்க, “பொழச்சு போங்க” என்றவள் சாலையில் கவனத்தைத் திருப்பினாள்.

மாலை வெளிச்சம் மறைந்து இருள் படரத் துவங்க, காரிலிருந்து இறங்கியவளை கையைப் பற்றி அழைத்துச் சென்றவன்,

“கண்ணை மூடிக்கோ! ட்ரஸ்ட் மீ…மெதுவா நடந்து வா” என்று வர்ஷாவின் காதில் சொல்ல, புன்னகையுடன் கண்ணை மூடிகொண்டவள், ‘பீடிகைலாம் பலமா தான் இருக்கு’ புன்னகைத்துக்கொண்டு, அவன் கைப்பற்றி மெல்லமாகக் கண்களை மூடிக்கொண்டு நடந்தாள்.

அவள் தோள்களைப் பிடித்தபடி அவள் பின்னே நின்றவன், “இப்போ கண்ணை மெதுவா திறந்து பார்” என்று அவள் காதருகில் சென்றவன், “ஹேப்பி பர்த்டே வர்ஷா” என்று அவள் கன்னத்தில் மென்மையாக முத்தமிட, உறைந்தவள் எதிரே தெரிந்த காட்சியைக் கிரகிக்க சில நொடிகளானது.

அடர் வனத்தின் நடுவே, இருவர் தங்க ஏதுவான டென்ட் இருக்க, எதிரே குளிர்காய நெருப்பு மூட்டப் பட்டிருக்க, அங்கே மேஜையில் சுடச் சுட உணவு வைக்கப் பட்டிருக்க, சிறிய துணி பேனரில் ‘ஹேப்பி பர்த்டே மை லவ்’ என்றிருக்க, வர்ஷா சிலையாகித்தான் போனாள்.

அவளைக் கடந்து முன்னே சென்றவன், “மெனி மெனி மோர் ஹேப்பி ரிட்டன்ஸ் வர்ஷா” என்று இரு கைகளையும் விரித்து அவளைப் பார்வையால் அழைக்க, அவனையே கண்களில் நீர் கோர்க்கப் பார்த்திருந்தவள் அசையாமல் இருந்தாள்.

“வா” என அவன் மீண்டும் அழைக்க, மெல்ல அவனை நெருங்கியவள் மென்மையாக அவனை அணைத்து கொண்டு அவன் மார்பில் சாய்ந்துகொண்டாள்.

நொடிகள் நிமிடங்களாக விரிந்ததோ, நிமிடங்கள் நொடிகளாகச் சுருங்கியதோ, நேரம் காலம் மறந்து நின்றவள்,விலகினால் கனவென கலைந்துவிடுமோ என்ற பயத்துடனே அவனை இறுக்கமாகக் கட்டிக்கொண்டாள்.

Leave a Reply

error: Content is protected !!