அன்புடைய ஆதிக்கமே 18
அன்புடைய ஆதிக்கமே 18
அத்தியாயம் 18
சுருதி அண்ட் கோ கல்லூரியை சென்றடைந்த நேரம் அவர்களுக்கு முன்பே வந்திருந்த மீத ஆட்கள் எல்லா ஏற்படையும் கனகச்சிதமாக முடித்திருந்தனர். அவர்களை ஒரு முறை சரி பார்த்துவிட்டு அவந்திகா தலைமையில் ஒரு இருபது பேரை ஜெயக்குமார் பணிபுரியும் கல்லூரியில் விட்டுவிட்டு மீதம் இருக்கும் சிலரை அழைத்துக்கொண்டு சுருதி இன்னொரு கல்லூரிக்கு சென்று விட்டாள்…
சுருதி அங்கே சென்று ஒரு தடவையாவது சரி பார்க்கவில்லையெனில் அவளுக்கு தூக்கமே வராது. மற்றொரு காரணம் தன்னுடைய உத்தம புருஷனை அவள் பார்க்க விரும்பவில்லை என்பதும் தான் …
சுருதி சென்ற சிறிது நேரத்தில் இரத்த தானம் ஆரம்பித்திருந்தது. அவந்திகா, சுருதியின் தோழர்கள் ஆனந்த்,கவின்,கோகிலா,கீர்த்தி,என்று அனைவரும் பம்பரமாக சுழன்று தங்களுக்கு கொடுத்த கடமையை திறம்பட செய்துகொண்டிருந்தனர்…
மாணவர்களை அழைத்துக்கொண்டு வந்த ஜெயக்குமார் அவந்திகாவையும் சுருதியின் பள்ளி கால தோழமைகளையும் பார்த்தவுடன் தான் அவனுக்கு எல்லாம் புரிய ஆரம்பித்தது. உண்மையை சொல்ல போனால் ஜெயக்குமார்க்கு சுருதியை பற்றி ஒரு மண்ணும் தெரியாது. இந்த ஐந்து வருட காலத்தில் சுருதி எவ்வளவோ மாறி இருந்தாள். குணத்திலும் சரி..பழக்கவழக்கத்திலும் சரி. அவன் நினைத்து பார்க்க முடியாத அளவுக்கு நிறைய மாறிருந்தாள்…
ஜெயக்குமாரை பார்த்தவுடன் அவந்திகா மற்றும் சுருதியின் தோழமைகள் வந்து பார்த்து பேசினர்…
“என்ன அவந்தி இவங்க கூட?”என்று அவந்திகாவை பார்த்து கேட்டான்…
“ஆள் பத்தலைன்னு நேத்து நைட் போன் பண்ணி சொன்னாங்க அதான் அத்தான்.”என்று அவனை பார்க்காமல் கூறினாள்…
சரியாக இந்த நேரத்தில் அங்கு ஆஜராகி இருந்தனர் முப்பெரும் தேவிகள். பாரதியோ அவளுக்கும் அங்கு நடப்பதற்கும் எந்த சம்மந்தமும் இல்லாதது போல் ஏதோ யோசனையோடு கண்கள் அலைபாய நவீனா, பவியுடன் நின்றிருந்தாள்…
“சார்….நேம் குடுக்க சொல்றாங்க….நீங்க வந்து முதல் உங்க நேம் குடுத்துட்டு சைன் போடணுமாம் சார்…”என்று மிக பவ்வியமாகவே கூறினாள் நவீனா…
பாரதி அவனை திட்டி அதை அவனே கேட்க நேர்ந்த பின்பு மூன்று பேரும் ஜெயக்குமாரை பார்த்தவுடன் ரொம்பவே பம்மினர். அதிக படியான மரியாதை கொடுத்தனர்…
அவர்களை திரும்பி பார்த்தவன் “சரி…வாங்க.”என்று அவர்களிடம் கூறியவாறு சென்றவன் கண்கள் முழுவதும் தன் மனைவியை தேடியே அலைபாய்ந்தது…ஆனால் எங்கும் அவளை காணவில்லை.
அவந்திகாவிடம் கேட்கலாம் என்று நினைத்தால் அவனுக்கு ஏதோ சங்கடமாக இருந்தது. ஏதோ ஒரு வழியில் அவள் மனதை காயப்படுத்துவது போல் ஆகிவிடும் என்று பயந்தான். சுருதி நண்பர்களிடம் கேட்கலாம் என்று பார்த்தால் தன் மனைவி எங்கே என்று அவர்களிடமெல்லாம் கேட்பது அவனுக்கு பிடிக்கவில்லை.அதனால் அமைதியாகி விட்டான்…
அவன் அமைதியானால் மட்டும் போதுமா…அவனது மாணவ கண்மணிகள் தங்கள் வாயால் ஜெயக்குமார்க்கும் சுருதிக்கும் இடையில் மிக பெரும் பிரளயத்தை உருவாக்க காத்திருந்தனர்…
“ஏன் நவீ அந்த பொண்ணு ஜேகே சாரை அத்தான்னு தானே கூப்பிட்டாங்க?ஒரு வேளை நம்ம சாரோட முறை பொண்ணா இருப்பாங்களோ?”
என்று பவித்ரா நவீனாவிடம் கூறிக்கொண்டிருக்கும் போது அதை பாதியில் கேட்ட அவர்கள் வகுப்பு ஆல் இந்தியா ரேடியோ என்று பெயர் சூட்டப்பெற்ற சந்துரு அவன் கற்பனைக்கு ஏற்றது போல் சிறிது திரித்து ….அவன் வகுப்பு நண்பர்களிடம் கூற அவர்களில் ஒருவன் இன்னும் சிறிது மசாலா சேர்த்து தனது சீனியர்களிடம் கூற இப்படியே கதை திரைக்கதை வசனம் என்று அனைத்தையும் உருவாக்கியிருந்தனர். இறுதியில் மாப்பிள்ளை தங்க செம்பு கொடுத்தா தான் தாலி கட்டுவாராம் என்று வடிவேலு காமெடி போல் திரிந்து அங்கோர் கதை உலாவி கொண்டிருந்தது…
இன்னொரு கல்லூரிக்கு சென்று அனைத்தையும் சரிபார்த்து விட்டு தனது நண்பனுடன் ஜெயக்குமார் பணிபுரியும் கல்லூரியை வந்து அடைந்தாள் சுருதி..
சுருதி இரத்த தானம் நடக்கும் இடத்தை நெருங்கும் சமயம் சரியாக ஜெயக்குமார் அவள் பார்வை வட்டத்தில் விழுந்தான்.மிகுந்த கோபத்துடன் நின்றிருந்தவன் பார்வை அவனுக்கு நேரெதிராக கைபேசியை கையில் வைத்து பேசிக்கொண்டிருந்த மாணவனை நோக்கி இருந்தது…
சுருதி அவனை பார்த்தவாறே வந்துகொண்டிருக்க வேகமாக அந்த மாணவனை நெருங்கிய ஜெயக்குமார் அவனின் சட்டை காலரை பிடித்து அவனை தன்னை நோக்கி திரும்பியவன் அவன் கையில் இருந்த கைபேசியை பிடுங்கியவன் கன்னமோ காதோ எதென்று சரியாக சுருதிக்கு தெரியவில்லை சலுப்பென்று அந்தமாணவனுக்கு ஒரு அறை கொடுத்திருந்தான்.
அந்த அறையில் தன்னாலே சுருதியின் கரம் நேற்றைய நினைவில் தனது கன்னத்தை பற்றியது. அடிவாங்கிய மாணவன் “எதுக்கு சார் என்னை அடிச்சீங்க?”என்று திடிரென்று அறை வாங்கியதாலோ அல்லது தான் செய்த காரியத்தை பார்த்துவிட்டானோ என்ற பதைபதைப்பிலோ குரல் நடுங்க கேட்டான் அந்த மாணவன்…
“ஓஹ்….சார்க்கு அவர் என்ன பண்ணார்னு தெரிலையா?இன்னொரு அறை வாங்குனா எல்லாம் ஞாபகம் வரும்னு நினைக்குறேன்.”என்று கூறியவாறு வலது கை பக்க சட்டையை மடித்துவிட்டவாறு மீண்டும் அந்த மாணவனுக்கு ஒரு அறை கொடுத்திருந்தான் ஜெயக்குமார்…
அந்த அறையில் அந்த மாணவன் கீழே விழுந்திருந்தான். விழுந்த மாணவனின் நண்பர்கள் அவனை தூக்கி விட முயல தனது இடது கரத்தை அசைத்து வேண்டாம் என்பது போல் சைகை செய்தான் ஜெயக்குமார்….இடது கை சட்டையும் மடித்துவிட்டவன்,இடது கையால் அந்த மாணவனை அச்சு தூக்குகாக தூக்கி நிற்பட்டிருந்தான்…
கீழே விழுந்ததனால் கசங்கி சிறிதாக மேலே ஏறியிருந்த அடி வாங்கிய மாணவனின் சட்டையை இழுத்து நேர் படுத்தியவன் மீண்டும் ஒரு அடி அடித்திருந்தான். இந்த முறை விழுகாதவாறு அவனை ஒரு கையால் தாங்கி பிடித்திருந்தான். உதடு கிழிந்து ரத்தம் கொட்டிக்கொண்டிருந்தது…
அதெல்லாம் கண்டுகொள்ளாமல் தனது கைபேசியை எடுத்து அவர்களின் துறை தலைவர் அலெர்ட் ஆறுமுகத்துக்கு அழைத்தவன் அவர்கள் இருக்கும் இடத்திற்கு அவரை வர சொல்லிவிட்டு அழைப்பை துண்டித்தான்…
அந்த இடத்தில இருந்த அனைவரின் பார்வையும் ஜெயக்குமார் மீது தான் இருந்தது. அனைவரது பார்வையிலும் வாவ் என்பது போல் ஜெயக்குமார் மேல் படிந்து இருந்தது. ஏனெனில் அடிவாங்கிய மாணவன் மூன்றாம் தர பொறுக்கி என்பது அந்த கல்லூரியே அறிந்த விஷயம். பெரிய தொழிலதிபரின் வாரிசு என்பதால் அவனை யாரும் கண்டு கொள்ளமாட்டார்கள். அப்படி தண்டித்தால் ஒவ்வொரு வருடமும் தவறாமல் கிடைக்கும் டொனேஷன் தொகை மிஸ் ஆகுமே.
அங்கிருந்த அனைவரும் தங்களையே பார்ப்பதை உணர்ந்தவன் இப்படி செய்து விட்டோமே என்று தன் பின்மண்டை முடியை லேசாக கோதிவிட்டவன் இரு புருவத்தையும் உயர்த்தி “என்ன பார்வை?அவங்க அவங்க வேலையை பாருங்க.”என்று சத்தமாக கூறியவன்; அந்த மாணவனை பிடித்து அழைத்துக்கொண்டு இல்லையில்லை கிட்டத்தட்ட இழுத்துக்கொண்டு அவ்விடம் விட்டு நகர்ந்தான்.
ஜெயக்குமார் சம்பவ இடத்தை விட்டு விலகி செல்லும் வரை கன்னத்தில் கை வைத்து அவனை பார்த்தவாறே நின்றிருந்தாள் சுருதி .அவந்திகா வந்து அவளை தொடவும் தான் சுயஉணர்வு வர பெற்றவள் அவந்திகாவை பார்த்து ஏதோ கனவுலகத்தில் இருந்து வெளி வந்தவள் போல் இரண்டு கண்ணையும் சிமிட்டி சிமிட்டி வினோதமாக ஏதோ செய்து வைத்தாள்…
சிரிப்பா அது எப்படி இருக்கும் என்று கேட்கும் அவந்திகாவையே கண்ணை மூடி சுருதியை அடித்து சிரிக்க வைத்திருந்தாள்…
அவந்திகா அடித்து அடித்து சிரித்ததில் முழுவதும் இயல்பு நிலைக்கு வந்தவள் அவந்திகாவை முறைத்து பார்த்த சுருதி “என்ன சிரிப்பு?பே…”என்று திட்டிவிட்டு சுருதி தன்னுடைய வேலையை பார்க்க சென்றாள்…
“வர வர இவனுக்கு கை ரொம்ப தான் நீளுது. நல்ல வேலை நேத்து நம்மளை அவ்வளவு போர்சா அடிக்கலை. ஆமா இப்ப எதுக்கு அந்த பையனை அடிச்சான்…சாதாரண விஷயத்துக்கு எல்லாம் இவ்வளவு கோவம் பட மாட்டானே…வேற என்னவா இருக்கும்?சாந்தரம் அவன்கிட்டயே கேட்டுக்குவோம்.”என்று சுருதி எப்பொழுதும் போல் புலம்பி கொண்டிருக்கும் போதே திடிரென்று அவள் புலம்பலில் இடையிட்ட மனசாட்சி ‘அடியே கூறுகெட்டவளே! நீ அந்த நொண்டி குமார் கூட சண்டை டி…அப்புறம் எப்படி அவன்கிட்ட கேட்ப?’என்று மானக்கேடாக திட்டியது…
“அட! ஆமாம்ல…மறந்துட்டேன்…மன்னிச்சு!”என்று மனசாட்சியை அனுப்பி வைத்தவள், புலம்பலுக்கும் மியூட் பட்டனை அழுத்திவிட்டு தனது வேலையில் இணைந்தாள்….
இரத்த தானம் செய்வதற்கு முன் பெயர் கொடுத்துவிட்டு எடை பார்க்கவேண்டும். அதற்காக நின்ற பெண்கள் வரிசையில் அவர்களின் பெயர் மற்றும் எடையை குறித்து கொண்டிருந்த தன் தோழி கீர்த்தியிடம் இது வரை எத்தனை பேர் சென்றிருக்கிறார்கள் என்று தெரிந்துகொள்ள அவளின் அருகில் அமர்ந்து பதிவேடுக்கும் நோட்டை பார்த்துக்கொண்டிருந்தாள் சுருதி.
சுருதி ஏன் அங்கு சென்றோம் என்று நினைத்து சுவற்றில் முட்டி கொள்ளும் அளவிற்கு அங்கு இருந்த பெண் மாணவிகள் பேசி கொண்டிருந்தனர்…
“எந்த டிபார்ட்மென்ட் டி இந்த சார்?எப்படி அடிச்சார்னு பாரு?அவனுக்கு இதெல்லாம் தேவை தான். எவ்வளவு ஆடிருப்பான். ஆனால் எதுக்கு அடிச்சார்னு தான் தெரியல?”என்று ஒரு மாணவி கூற, அதுக்கு இன்னொருத்தி “அந்த சார் ஈஅண்ட்சி டிபார்ட்மென்ட்…புதுசா வந்துருக்காரு…செம ஹண்டசம் என்ன?”
“அதை விட அவர் attitude செம டி…சட்டையை ஏத்திவிட்டுக்கிட்டு அடிச்சாரு பாரு…செம மேன்லி!”என்று இன்னொருத்தி கூற
“அவர் அடிக்கிறதை எல்லாரும் பார்த்துட்டாங்கனு முகத்தை சுருக்கி முடியை கோதி விட்டாரு பாரு…ப்ப்ப்ப்ப்பா…”என்று முதலில் இந்த பேச்சு வார்த்தையை ஆரம்பித்தவள் கூற சுருதிக்கு ஒரு பக்கம் சிரிப்பு என்றாலும் இன்னொரு பக்கம் என்னங்க டி ரொம்ப தான் வருணிக்குறிங்க என்று எரிய ஆரம்பித்திருந்தது…
அடுத்து அடுத்து என்ன பேசிருப்பார்களோ சுருதி அந்த இடத்தை விட்டு காலி செய்தாள்.
சரி இயற்கை அழைப்பை முடித்து விட்டு வருவோம் என்று ரெஸ்ட் ரூம் பக்கம் ஒதுங்கினால் அங்கும் இந்த பாழா போன ஜெயக்குமார் டாபிக் தான்…
அந்த ரெஸ்ட் ரூம் ஒருவர் சென்று வந்த பின்பு அடுத்தவர் செல்ல வேண்டும் பதினைந்து கழிப்பறைகள் இந்த மாதிரி இருந்தது. அதில் வரிசையில் வேறு நின்றுகொண்டு இருந்தார்கள். இவளும் ஒரு வரிசையில் நிற்க அங்கு தான் பின் வருமாறு பேசிக்கொண்டிருந்தனர்…
“ஜேகே சார் ரொம்ப நல்லவர் என்ன?ஆமாம் அவருக்கு கல்யாணம் ஆயிருச்சா?”என்று ஜெயக்குமாரின் துறையில் கடைசி வருடம் படிக்க கூடிய மாணவி ஒருத்தி கேட்க,ஏற்கனவே அங்கு ஜோடிக்கப்பட்டு திரிந்த புரளி ஒன்று ஜெயக்குமாரின் மனைவி முன்பே அவிழ்க்க பட்டது…
“இன்னும் இல்லையாம்…ஆனால் அவரு அவர் முறை பொண்ணை தான் கல்யாணம் பண்ணிக்க போறாராம்.”என்று இன்னொரு பெண் கூறியவுடன் முதல் வார்த்தையில் ‘என்னது அவனுக்கு இன்னும்
கல்யாணம் ஆகலையா?அப்புறம் நான் யாரு டி?’ என்பது போல் கூறிய பெண்ணை திரும்பி பார்த்தவள் அவள் கூறிய இரண்டாவது வாக்கியத்தில் உயிர் வர பெற்றாள் சுருதி…
“உனக்கு எப்படி தெரியும்?”என்று அந்த பெண் கேட்கவும்…”அவங்க தான் இங்கே வந்துஇருக்காங்கல்ல.”என்றாள்
“ஓஹ் அப்போ நம்ம தான்னு இவங்களுக்கு தெரியும் போல.”என்று சுருதி நினைத்து கொண்டிருக்கும் போதே அந்த நினைப்பில் சுருதியின் பின்னாடி நின்றிருந்த பெயர் தெரியாத அந்த பெண் ஒரு லாரி மண்ணள்ளி போட்டாள்.
“கேம்ப்கு வந்திருக்கிற டாக்டர் பொண்ணு டி. செமயா இருந்துச்சு. சார் ஹயிட் கலர்க்கு செம மேட்ச். ரெண்டு பெரும் சின்ன வயசுல இருந்தே லவ் பண்ணங்களாம் … ஆனால் அவங்க வீட்டுல ஒத்துக்கலையாம். ரெண்டு குடும்பத்துக்கும் ஏதோ சொத்து பிரச்சனையாம். அதான் இன்னும் கல்யாணம் பண்ணிக்கலையாம். ரெண்டு பேர் வீட்டுலையும் சம்மதம் வாங்க வெயிட் பண்றங்களாம் ” என்று ஏதோ அந்த பெண் அருகில் நின்று பார்த்தது போல் கதை சொல்லிக்கொண்டிருந்தாள்.
அனைத்தையும் கேட்ட சுருதி பொங்கி வரும் புனல் போன்று வந்த கோவத்தை அடக்கிக்கொண்டு, போன காரியத்தை முடித்து கொண்டு தனது வேலையை பார்க்க சென்றாள்…(செத்தான் டா குமாரு.)
“சார்…இவன் பண்ண காரியத்தை பாருங்க.”என்று அடக்க முடியா கோபத்துடன் கத்திய ஜெயக்குமார் பிரின்சிபால் முன்பு அந்த மாணவனிடம் இருந்து கைபேசியை கிட்ட தட்ட விசிறியடிக்குமாறு அவர் முன்பு வைத்தான்…
அதை பார்த்த பிரின்சிபால் அதிர்ந்து விட்டார்…”என்ன பா இதெல்லாம்?”என்று அந்த பையனை நோக்கி கோபத்துடன் கேட்டார்.
“இன்னும் என்ன சார் இந்த பொறுக்கி கிட்ட கேட்டுட்டு இருக்கீங்க?அவன் பேரெண்ட்ஸை கூப்பிட்டு இன்போர்ம் பண்ணிட்டு சைபர் கிரைம்ல இவனை பிடிச்சு குடுங்க சார்.”என்று அழுத்தமாக அதே சமயம் அமைதியாக கூறினான் ஜெயக்குமார்.
“அப்படி எல்லாம் எடுத்தோம் கவுத்தோம்னு பண்ண முடியாது ஜெயக்குமார். கொஞ்சம் பொறுங்க…பேசுவோம்.”என்று பிரின்சிபால் சிறிது படபடப்பாக கூறினார்.
“இன்னும் என்ன சார் பொறுக்க சொல்றிங்க?அந்த மொபைலை பாருங்க… கூட படிக்கிற பொண்ணுங்க, பாடம் சொல்லி குடுக்குற டீச்சர்ஸ் அவங்க எல்லாத்தையும் தப்பு தப்பா போட்டோ எடுத்து வைச்சு இருக்கான். இப்ப பிளட் கேம்ப் நடந்துகிட்டு இருந்த இடத்துல ஒரு பொண்ணு குனிச்சு ஏதோ எடுத்துட்டு இருக்கும் போது அந்த பொண்ணை தப்பான ஆங்கிள்ல போட்டோ எடுத்துட்டு இருக்கான். கையும் களவுமா பிடிச்சு இருக்கேன். இவனெல்லாம் இன்னும் காலேஜ்ல இருந்தா தப்பாயிரும் சார்.”என்று என்ன இந்த மனிதன் இப்படி கூறுகிறார் என்று கோபத்துடன் பல்லை கடித்தவாறு கூறினான்.
“மேனேஜ்மென்ட் ல பேசணும். போலீஸ் கேஸ்ன்னு போனா நம்ம காலேஜ் பேர் பாதிக்கப்படும். நீங்க கோவப்படாம யோசிச்சு பாருங்க புரியும்.”என்று கூறியவர் அந்த மாணவனிடம் விசாரிக்க ஆரம்பித்தார்.
பின்பு அவனின் பெற்றோரை அழைத்து கல்லூரிக்கு வர சொன்னார். பின்பு ஜெயக்குமாரிடம் திரும்பி அவன் வேலையை சென்று பார்க்குமாறு சொல்லி அனுப்பி வைத்தார்.
காதலித்து பார்ப்போமா கண்மணி?????
ஆதிக்கம் தொடரும்…