nila…pen-12

nila…pen-12

துளசியின் வீட்டை அபிராமியும் ஆத்ரேயனும் நெருங்கும்போது மாலை நெருங்கி கொண்டிருந்தது. அன்று முழுவதும் கொளுத்திய வெயிலின் தாக்கம் தீர மீண்டுமொருமுறை குளித்துவிட்டு பட்டுப்புடவை அணிந்திருந்தார் அபிராமி.

ஆதி எப்போதும் போல இயல்பாக ஒரு ஜீன்ஸ் ஷர்ட்டில் இருந்தான்.

“வணக்கம் சார்.” ஒரு புன்னகையோடு சங்கரபாணியை பார்த்து வணக்கம் வைத்தார் அபிராமி. ஏதோ கணக்கு வழக்குகளைப் பார்த்துக்கொண்டிருந்த மனிதர் சட்டென்று நிமிர்ந்தார்.

“ஆதி… வா வா, இது யாரு?” கையிலிருந்த நோட்புக்கை மூடி வைத்தவர் அபிராமியை பார்த்து கேட்டார்.

“இது என்னோட அத்தை, டெல்லியில இருந்து வந்திருக்காங்க.”

“அப்பிடியா, உள்ள வாம்மா, துளசீ…” உள்நோக்கி குரல் கொடுத்தார் சங்கரபாணி.

“இதோ வர்றேன்பா.” உள்ளேயிருந்து குரல் வர ஆதியும் அபிராமியும் ஒருவரை ஒருவர் பார்த்து புன்னகைத்து கொண்டார்கள்.

“ஏதோ புதுசா ஸ்வீட் பண்ணப்போறேன்னா, அதோட மல்லுக்கட்டுறா போல இருக்கு.”

“பரவாயில்லை… ஆறுதலாவே வரட்டும்.”

“நீ உட்காரும்மா.” சோஃபாவை காட்டினார் சங்கரபாணி.

“இருக்கட்டும் பரவாயில்லை.” அபிராமி சொல்லிக்கொண்டிருக்கும் போதே கிச்சனிலிருந்து வெளியே வந்தாள் துளசி.

வீட்டுக்கு விருந்தாளிகள் வந்திருப்பதை அவள் அறியவில்லை. தூக்கி சொருகிய புடவையோடு அப்பாவின் குரலுக்கு இயல்பாக வெளியே வந்தவள் சடாரென நின்று விட்டாள்.

அவசர அவசரமாக அவள் கை புடவைக் கொசுவத்தைச் சரி பண்ணியது.

அவள் தன்னைச் சரி பண்ணிக்கொண்ட அந்த இரண்டொரு நொடிகளில் ஆதியின் கண்களில் கோபம் வந்து போனதை யாரும் கவனிக்கவில்லை.

“வாங்க…” சம்பிரதாயமான அழைப்பு இப்போது துளசியின் இதழ்களில். அபிராமி இளையவளின் அருகே வந்து அவள் கைகளைப் பற்றிக்கொண்டார்.

“நான் ஆதியோட அத்தை, இன்னைக்கு மத்தியானம்தான் சென்னைக்கு வந்தேன்.” தன்னைத்தானே எந்தவித பந்தாவும் இல்லாமல் அறிமுகப்படுத்தி கொண்டார் அபிராமி.

“ஓ…” துளசிக்கு மனம் படபடவென அடித்துக்கொண்டது.

‘தன் அத்தை வரப்போவதை அவன் அவளிடம் சொல்லவே இல்லையே!’

“உட்காருங்க.”

“இந்தா துளசி.” தன் கையிலிருந்த மல்லிகைப்பூவை துளசியின் கையில் கொடுத்தார் அபிராமி. மல்லியை மகிழ்வோடு வாங்கி கொண்டது துளசி.

“இது…” மல்லிகைக்கு அடியில் ஏதோ இருக்க துளசி திகைத்தாள்.

“இது ஆதி உங்கிட்ட குடுக்க சொன்னது.” ரகசியம் போல சங்கரபாணிக்கு தெரியாத மாதிரி அபிராமி சொல்ல துளசி திடுக்கிட்டு நிமிர்ந்தாள்.

‘அப்படியென்றால்… இவருக்கு எல்லாம் தெரியுமா? எல்லாவற்றையும் சொல்லித்தான் தன் அத்தையை இங்கு அழைத்து வந்திருக்கிறானா?’

‘ஆம்’ என்பது போல சிரித்தார் அபிராமி. இமைகள் படபடக்க தலையைக் குனிந்து கொண்டாள் துளசி.

“ரெண்டு நாளும் பயங்கர வேலை அங்கிள், அதுதான் உங்களை வந்து பார்க்க முடியலை.”

“நிலத்தைப் பார்த்தியா ஆதி? பிடிச்சிருக்கா?” இயல்பாக ஆண்கள் பேசிக்கொண்டிருக்க பெண்கள் இருவரும் சோஃபாவில் அமர்ந்தார்கள்.

ஆதி அவளுக்கென ஃபோன் ஒன்றை வாங்கி தன் அத்தையின் கையில் கொடுத்திருந்தான். எதிர் வீட்டில் இருந்தாலும் அவளைத் தொடர்பு கொள்வது அத்தனை இலகுவாக இருக்கவில்லை அவனுக்கு.

சற்று நேரத்திலெல்லாம் அந்த தெருவில் குடியிருக்கும் அத்தனைப் பெரியவர்களும் துளசியின் வீட்டில் ஆஜராகி விட்டார்கள், அது பாட்டியின் ஏற்பாடு.

சங்கரபாணி கூட இந்த ஏற்பாட்டை எதிர்பார்த்திருக்கவில்லை. ஆனால் பாட்டி அதிகம் காலத்தை விரயம் செய்ய விரும்பவில்லை, காரணம் துளசியின் வயது.

‘காலா காலத்துல ஒரு கல்யாணத்தைப் பண்ணிக்கிட்டாத்தானே வயசோட பேரன் பேத்தின்னு நாலையும் பார்க்கலாம்!’ இது பாட்டியின் வாதம். அதில் அந்த தெருவில் குடியிருக்கும் பெண்களுக்கும் சம்மதம் என்பதால் தங்கள் வீட்டு ஆண்களைப் பாட்டி சொன்ன நேரத்திற்கு அழைத்து வந்துவிட்டார்கள்.

“இங்கப்பாரு சங்கரபாணி, நேக்கு சுத்தி வளைச்சு பேசத்தெரியாது, ஊர்ல இருந்து வந்து நான் எல்லார்கிட்டயும் பேசின விஷயந்தான்.” பாட்டி திடீரென்று பேச்சை ஆரம்பிக்க துளசி எழுந்து உள்ளே போக எத்தனித்தாள். ஆனால் அபிராமி அவள் கைப்பிடித்து உட்கார வைத்தார்.

“எங்க போற துளசி? இங்கேயே உட்காரு.” மெதுவான குரலில் சொன்னார் அபிராமி. துளசியின் கண்கள் அந்த நொடி ஆதியை நோக்கின. அவனும் அவளைத்தான் பார்த்துக்கொண்டிருந்தான்.

“இதுல…‌ நான்…” தடுமாறினார் சங்கரபாணி.

“பொண்ணைப் பெத்தவன் நீதானே சங்கரபாணி? அப்போ நீதான் பதில் சொல்லணும்.”

“பெரியம்மா…”

“தயங்காம உன்னோட மனசுல என்ன இருக்குன்னு இந்த சபையில சொல்லிடு, மாப்பிள்ளை ஆத்துக்காரரும் இருக்கா, அவாளுக்கு ஒரு முடிவு சொன்ன மாதிரியும் ஆச்சில்லை!”

“நான் சுயநலமா முடிவெடுத்திருவேனோன்னு எனக்குப் பயமா இருக்கு பெரியம்மா!”

“……………” இப்போது பாட்டி கூட எதுவும் பேசவில்லை. அமைதியாக அமர்ந்திருந்தார்.

“இதுல நீங்க சுயநலமா முடிவெடுக்க என்ன இருக்கு சம்மந்தி?” இந்த தருணத்தில் தான் பேசுவதுதான் முறை என்று பேச்சை ஆரம்பித்தார் அபிராமி. வார்த்தைகள் உரிமையாக வந்தது இப்போது.

சங்கரபாணி அமைதியாக நிலத்தைப் பார்த்தபடி இருந்தார். எதுவுமே பேசவில்லை. அவர் மனதில் நினைப்பதை எல்லாம் சொல்ல முடியுமா? அதுவும் அவரே அவர் பெண்ணைப் பற்றி எப்படி அப்படி பேசுவது?

“ஆதிக்கு துளசியை பிடிச்சிருக்கு, துளசிக்கு ஆதியை பிடிச்சிருக்கு, அவ்வளவுதான்…‌ கல்யாணம் பண்ணணும்னு ஆசைப்படுறாங்க, பண்ணட்டுமே!” விஷயத்தை இலகுவாக்கினார் அபிராமி.

“அவ்வளவுதான் விஷயம்னு நீங்க நினைச்சீங்கன்னா எங்களுக்கும் சந்தோஷந்தான்.” இது கரீம். இப்போது பதறிப்போய் சங்கரபாணி தன் நண்பனைப் பார்க்க அவரைக் கண்களாலேயே ஆறுதல் படுத்தினார் கரீம்.

“பொண்ணு, மாப்பிள்ளை சம்மதத்தைத் தாண்டி ஒரு கல்யாணத்துக்கு வேற எதுவும் முக்கியமா இருக்கிறதா எனக்குத் தோணலைங்க!”

அபிராமி கரீமிற்கு பதில் சொல்ல கரீமும் டேவிட்டும் இப்போது பார்வையைப் பரிமாறி கொண்டார்கள். இப்போது டேவிட் ஆரம்பித்தார்.

“சொல்றேன்னு நீங்க தப்பா எடுத்துக்க கூடாதும்மா.”

“இல்லையில்லை, பரவாயில்லை… நீங்க சொல்லுங்க.”

“நீங்க ஆதியோட அத்தை… பெத்தவங்க என்ன சொல்வாங்களோ தெரியாதே?” மிகவும் பவ்வியமாக வந்தது கேள்வி. ஆனால் அதற்கும் அபிராமி தயங்காமல் பதில் சொன்னார்.

“நான் சென்னைக்கு கிளம்பி வரும்போதே அண்ணா அண்ணிக்கு ஃபோனை போட்டு பேசிட்டேன், அவங்க சம்மதம் சொல்லியாச்சு.” சுலபமாக விஷயத்தை முடித்தார் அபிராமி.

பெண் வீட்டார் இதை எதிர்பார்க்கவில்லைப் போலும். கொஞ்சம் திக்குமுக்காடினாற் போல தெரிந்தது அபிராமிக்கு. சற்று நேரம் அங்கே அசாத்தியமான ஒரு அமைதி நிலவியது.

“உங்க எல்லாரோட மனசுலயும் இப்ப என்ன ஓடுதுன்னு எனக்கு நல்லாவே புரியுது, ஒன்னுக்குமே உதவாத சில மூடநம்பிக்கைகளுக்காக சின்னவங்க மனசை நோகடிச்சிடாதீங்க, ப்ளீஸ்.”

“அப்பிடி இல்லைம்மா, நாங்க எல்லாருமே பார்க்க வளர்ந்த பொண்ணுதான் துளசி, அவமேல எங்களுக்கு நிறையவே அக்கறை இருக்கு, ஆனாலும், இப்போ முடிவெடுக்க வேண்டியது சங்கரபாணிதானே?” இது டேவிட்.

“துளசி உங்க வீட்டுப்பொண்ணா இருந்திருந்தா நீங்க என்ன பண்ணி இருப்பீங்க?”

“ஆதியை போல மாப்பிள்ளைக் கிடைச்சா கசக்குமா? எதைப்பத்தியும் யோசிக்காம சட்டுன்னு சம்மதம் சொல்லி இருப்பேன்.” சொல்லிவிட்டு டேவிட் சிரித்தார். அந்த இடத்தின் இறுக்கம் சற்றே அந்த சிரிப்பில் தளர்ந்தது.

“அப்புறம் என்ன? உங்க நண்பரையும் அதே வார்த்தையைச் சொல்ல சொல்லுங்க!”

கரீம், டேவிட் இருவர் மனதிலும் இந்த திருமண ஏற்பாட்டிற்கு மறுப்பு இல்லை என்று தெரிய அவர்கள் வீட்டுப்பெண்களும் மகிழ்ந்து போனார்கள். ஆனால் பாட்டியின் முகமும் சங்கரபாணியின் முகமும் தெளிவடையவில்லை.

அதன்பிறகு அங்கே சூழ்நிலைக் கொஞ்சம் இலகுவாக ஆனது. பெண்கள் தேநீர் தயாரிக்க வீட்டிலிருந்த காரம் ஸ்வீட்டோடு பரிமாறப்பட்டது.

அப்போதுதான் வேலையிலிருந்து திரும்பி வந்திருந்த நம்பியும் வந்து இணைந்து கொண்டான்.

“அத்தை வர்றாங்கன்னு சொல்லவே இல்லை!”

“திடீர்னு விஷயத்தைச் சொன்னதால எப்ப வருவாங்கன்னு எனக்கே தெரியலைடா.”

“ம்…”

“என்னடா துளசியோட அப்பா இவ்வளவு யோசிக்கிறாரு?”

“அவசரப்படாதே, கொஞ்சம் விட்டுப்பிடி.”

“எத்தனை நாளைக்கு?”

“இவன் ஒருத்தன்! அதான் கூட இருக்கிறதெல்லாம் தலையை ஆட்டிடுச்சு இல்லை, இவர் தலையையும் ஆட்ட வெச்சிடுவாங்க.”

“மெயின் ஸ்விட்ச் ஏன் டல்லா இருக்கு?”

“யாரு பாட்டியா?”

“ஆமா.”

“டல்லா இருந்தாலும் இன்னைக்கு அத்தனைப் பேரையும் கூட்டி விஷயத்தை நடத்துதில்லை?”

“அது சரிதான்…”

“கொஞ்சம் டைம் குடு ஆதி, இது இது இப்பிடித்தான்னு ரொம்ப காலமா பழகிட்டாங்க, சட்டுன்னு மாத்த முடியாது, இதுவே பக்கத்து தெருவுல நடந்திருந்தா சுலபமா ஏத்துக்கிட்டுருப்பாங்க, அதுவே சொந்த வீட்டுல நடக்கும்போது மனசு ஏத்துக்க முரண்டு பிடிக்குது.”

“என்னோட பொறுமைக்கும் எல்லை இருக்கு நம்பி, துளசி அப்பாக்கிட்ட இதை நீயே சொல்லிடு.” கொஞ்சம் கோபமான குரலில் சொல்லிவிட்டு ஆதி வீட்டை நோக்கி போய்விட்டான்.

ஆதி வீட்டிற்குப் போவதைப் பார்த்த போதும் அபிராமி கண்டுகொள்ளவில்லை. அங்கிருந்த பெண்களோடு சுமுகமான ஒரு உறவை உருவாக்கி கொண்டார். காமிலா, எமிலி, சரஸ்வதி என மூவரும் பழகுவதற்கு இனியவர்கள் என்பதால் அது ஒன்றும் பெரிய காரியமாகவும் இருக்கவில்லை.

“துளசிக்கு இப்பிடியொரு நல்ல வரன் அமையத்தான் இத்தனைக் காலமும் தட்டித்தட்டி போயிருக்குப் போல!”

“உங்க அண்ணி எப்பிடி? நல்லா தமிழ் பேசுவாங்களாமே?!”

“துளசியோட ஜாதகத்தை உங்கண்ணா வீட்டுல பெரிசு பண்ண மாட்டாங்களா?”

“டெல்லியில இப்போ குளிரா என்ன? நீங்க இல்லாம உங்க பொண்ணு அங்க தனியா சமாளிப்பாளா?”

இப்படி பேச அவர்களுக்குள் ஆயிரம் கதை இருந்தது. கலகலவென்று பேசிக்கொண்டிருந்தார்கள். துளசி சிறிது நேரம் அங்கே இருந்துவிட்டு அவள் அறைக்குள் எழுந்து சென்றுவிட்டாள். சற்றுப்பொறுத்து அபிராமி அவள் அறையை எட்டி பார்த்தார்.

“உள்ள வரலாமா துளசி?”

“வாங்க வாங்க.” அவசர அவசரமாக அமர்ந்திருந்த கட்டிலை விட்டு எழுந்தாள் துளசி. அவளை அங்கிருந்த ட்ரெஸ்ஸிங் டேபிள் முன்பாக கொண்டு அமர்த்திய அபிராமி அவள் தலையில் சிறிது பூவை வைத்து விட்டார்.

“பூ வாங்கிட்டு வாடான்னு சொன்னா… ஒரு கூடைப் பூவை வாங்கிட்டு வர்றான்!” இயல்பாக பேச்சை ஆரம்பித்தார் அபிராமி.

யார், என்ன, ஏது என்று துளசி எதுவும் கேட்கவில்லை. தன் அண்ணன் மகனைப் பற்றித்தான் அவர் பேசுகிறார் என்று புரிந்தது.

“எதுக்குடா இவ்வளவு பூன்னு கேட்டேன்.” துளசி பக்கத்தில் தானும் அமர்ந்தபடி பேச்சைத் தொடர்ந்தார் அபிராமி.

“துளசிக்குன்னு சொன்னீங்களே அத்தைங்கிறான்.” துளசியின் கையைத் தன் கையில் எடுத்துக்கொண்டு சற்று நேரம் பேசாமல் இருந்தார் அபிராமி.

முகம் தீவிரமான சிந்தனையைக் காட்டினாலும் முகத்தில் என்னவோ புன்னகைதான் தெரிந்தது.

“துளசியோட இடத்துல என்னோட பொண்ணு இருந்திருக்க படாதான்னு மனசு நினைக்குதும்மா.” ஒளிவு மறைவு இல்லாமல் பேசினார் அபிராமி. அந்த வார்த்தைகளில் சடாரென்று நிமிர்ந்தாள் துளசி.

“ஆதி உம்மேல பைத்தியமா இருக்கான், ஃபாரின்ல பொறந்து வளர்ந்திருந்தாலும் அவன் எவ்வளவு நல்ல பையன்னு எனக்குத் தெரியும் துளசி.”

“……………”

“கண்டிப்பா அவனுக்கு வரப்போறவளை அவன் வெச்சு தாங்குவான், தேவையில்லாத விஷயங்களைத் தூக்கி குப்பையில போடச்சொல்லு உங்கப்பாவை.” கொஞ்சம் கண்டிப்போடு சொன்னவர் எழுந்து கொண்டார்.

துளசி இப்போது லேசான தவிப்போடு பெரியவளைப் பார்த்தாள்.

“என்ன துளசி? என்ன கேக்கணும் உனக்கு எங்கிட்ட?”

“எம்மேல…‌ எம்மேல… கோபம் இல்லையே உங்களுக்கு?” தயங்கியது பெண்.

“எதுக்கு?!”

“இல்லை…” மேலே பேச முடியாமல் தவித்தாள் பெண். தொண்டைக்குள் எதுவோ ஒன்று சிக்கி வலியை உருவாக்கியது.

“ஆதிக்கு பிடிச்சிருக்குன்னா எனக்கு நீயும் இன்னொரு பொண்ணுதான் துளசி.” தெளிவாக பதில் சொல்லிவிட்டு போனார் அபிராமி.

பதில் கேட்க நல்லதாக இருந்தாலும் துளசி வாடிப்போனது. அப்படியென்றால் என்ன அர்த்தம்? அபிராமிக்கு ஆதியை தன் மருமகனாக்கும் எண்ணம் இருந்திருக்கிறதா? எண்ணம் சொன்ன பதில் துளசிக்கு மகிழ்ச்சியைத் தரவில்லை.

பூவோடு அவன் கொடுத்திருந்த பெட்டியைத் திறந்தாள். ஃபோன் ஒன்று இருந்தது. இரவிற்காக காத்திருந்தாள் துளசி.

இரவும் நிலவும் அவள் அவசரத்தைப் புரிந்து கொள்ளாமல் சாவகாசமாக வந்து சேர்ந்தது. லேசாக அன்று மழை வேறு தூறியது. அவனை அவளாகவே அழைத்தாள்.

ஃபோனில் ஏற்கனவே ஸிம் போட்டிருந்தான் ஆதி. அதுதான் அவன் அவளை அழைக்க வசதி என்று நினைத்திருப்பான் போலும்.

“துளசி!” ஆதி அழைத்த பின்புதான் துளசிக்கு இவனிடம் என்ன பேசுவதென்ற திகைப்பு ஏற்பட்டது. அவள் மனதில் தோன்றுவதை எப்படி அவனிடம் கேட்பது? ஆனால் அவனுக்கு அப்படி எதுவும் தோன்றவில்லை.

“என்ன நீயாவே கூப்பிட்டிருக்கே, நம்பமுடியலை!”

“அது…”

“சொல்லு.”

“இல்லை… உங்கத்தை குடுத்தாங்க, அதான் பேசலாம்னு…”

“அப்ப உனக்கு எங்கிட்ட பேச எதுவோ இருக்கு, சொல்லு சொல்லு.” அவன் ஆரம்பித்து கொடுக்க அப்போதும் துளசிக்கு தான் நினைத்ததை அவனிடம் கேட்க முடியவில்லை.

“அது வந்து…”

“அதுக்கு முன்னாடி நான் உங்கிட்ட ஒரு விஷயம் பேசணும்.” அவன் குரலில் லேசான கோபம் தொனித்தது.

“என்ன?”

“இன்னைக்கு என்ன ட்ரெஸ் பண்ணி இருந்த நீ?”

“ஓ… அது, எனக்கு இன்னைக்கு அத்தனைப் பேரும் வருவாங்கன்னு தெரியாது, நான் சாதாரணமா வீட்டுல கட்டுற ஸாரியில…”

“நான் அதைச் சொல்லலை துளசி.” இப்போதும் அவளை இடைமறித்த அவன் குரலில் கோபம்.

“புரியலை, நீங்க என்ன சொல்றீங்க?”

“அந்த ஸாரியை எங்கேயோ மேல தூக்கி வெச்சிருக்கே.”

“மேல தூக்கி வெச்சனா? இடுப்புல சொருகி இருந்தேன், கிச்சன்ல வேலையா இருந்தேன் இல்லை?” அவள் குரலில் அவள் நிலையை விளக்கிவிடும் வேகம் இருந்தது.

“அதுசரி, நீ பாட்டுக்கு ஹாலுக்கு வந்து அந்த ஸாரியை கழட்டி விடுறே.”

“ஐயையோ! என்ன பேச்சு இது? நான் எப்போ அப்பிடி பண்ணினேன்?” அவள் பதறினாள்.

“மேல இருந்ததைக் கழட்டி விட்டியா இல்லையா?”

“ஆண்டவா! சொருகி இருந்ததை எடுத்து விட்டேன்.”

“எதுவோ ஒன்னு பண்ணினே.”

“பேசுற தமிழைக் கொஞ்சம் நல்லாத்தான் பேசுங்களேன், இப்போ அதுக்கு என்னவாம்?” அவளுக்கும் இப்போது கோபம் எட்டிப்பார்த்தது.

“அங்க உன்னோட அப்பா, என்னோட அத்தை எல்லாரும் இருந்தாங்க துளசி.”

“ஆமா, உங்கத்தை இருந்ததாலதான் எடுத்துவிட்டேன்.”

“அப்போ அத்தை உன்னைப் பார்த்தாங்க!”

“பார்த்தா என்ன?”

“ஏய்! கொன்னுடுவேன் உன்னை, அங்கெல்லாமா பார்க்கிற மாதிரி ட்ரெஸ் பண்ணுவாங்க.”

“எங்கெல்லாம் பார்க்…” அப்போதுதான் அவன் கவலை என்னவென்பது துளசிக்கு புரிந்தது. அவள் இடைச்சேலை லேசாக விலகி இருந்திருக்க வேண்டும். வீட்டில்தானே இருக்கின்றோம் என்று அவளும் சற்றே பொடுபோக்காக இருந்திருக்க வேண்டும்.

அதற்கா இவனுக்கு இத்தனைக் கோபம் வருகிறது?! அத்தோடு வந்தது ஒரு பெண், அதுவும் அவன் அத்தைதானே?!

“வீட்டுக்கு வந்தது உங்க அத்தைதானே…”

“துளசி!” அந்த ஒற்றை வார்த்தையில் அவன் ஒட்டுமொத்த அதட்டலும் தெரிந்தது.

“இனி நீ ஸாரி கட்ட வேணாம்.”

“……………..”

“சொல்றது கேக்குதா உனக்கு?”

“அப்போ ஸ்கூலுக்கு என்ன உடுத்துறதாம்?”

“ஸ்கூலும் வேணாம் ஒன்னும் வேணாம், அங்க எத்தனைப் பேரு எப்பிடியெல்லாம் பார்ப்பாங்க, எனக்குக் கஷ்டமா இருக்கு துளசி.”

“இப்போ என்னை என்ன பண்ண சொல்றீங்க?”

“சீக்கிரமா இங்க வந்து சேர்ற வழியைப் பாரு, அதுக்கப்புறமா தாராளமா ஸாரி கட்டு, அதைத் தூக்கி மேல சொருகு, என்ன வேணா பண்ணு, யாரும் வேணாங்கலை.”

துளசிக்கு தலையில் அடித்துக்கொள்ளலாம் போல இருந்தது. என்ன இவன், இப்படியெல்லாம் கண்டிஷன் போடுகிறான்?!

“உங்கப்பா எதுக்கு இன்னைக்கு அவ்வளவு யோசிச்சாரு? எனக்கு அவர் பொண்ணைக் குடுக்க அவ்வளவு யோசிக்கணுமா என்ன? எனக்கு வந்த ஆத்திரத்துக்கு…”

“அப்போ பேசாம உங்க அத்தைப் பொண்ணைக் கட்டிக்கிட்டு சந்தோஷமா இருங்க.” கோபத்தில் தன்னை அறியாமல் வார்த்தைகளை விட்டாள் துளசி. அவள் குரலும் இப்போது அளவுக்கு அதிகமாக உயர்ந்திருந்தது.

“அத்தைப் பொண்ணா?‌ நீ யாரைச் சொல்றே? ஷிவானியையா?” ஆதி ஒருமாதிரியான குரலில் கேட்டான்.

துளசி மௌனித்து விட்டாள். கேட்க நினைத்ததுதான். இருந்தாலும் கேட்ட விதம் தவறோ? ஆனாலும் கொட்டிய வார்த்தைகளை அள்ள முடியாதே!

“துளசி!” மீண்டுமொரு அதட்டல்.

“அது…”

“கிளம்பி வா நீ.”

“ஐயையோ!”

“நீயா வா, இல்லைன்னா நான் நம்பிக்கு இப்போ ஃபோனை போடுவேன்.”

“இந்த நேரத்துல நான் எப்பிடி… அங்க…” அவள் முடிக்கும் முன்பாகவே அழைப்பு துண்டிக்கப்பட்டிருந்தது. துளசி தவித்து போனாள்.

‘என்ன இவன் இப்படியெல்லாம் நடந்து கொள்கிறான்?!’ மனதில் ஆயிரம் எண்ணங்கள் ஓடிக்கொண்டிருக்கும் போது நம்பியின் குரல் வாசலில் கேட்டது. துளசி திடுக்கிட்டு போனாள்.

இந்த வேகம், பிடிவாதம், கோபம் எல்லாம் அவளுக்குப் புதிதாக இருந்தது. எப்போதும் அமைதியாக நடமாடும் அப்பாவைப் பார்த்து வளர்ந்த பெண் அவள். அம்மா இருந்த போதுகூட வீடு இப்போது போல அமைதியாகத்தான் இருக்கும்.

ஒரே பெண் என்பதால் துளசி கூட எப்போதும் ஆர்ப்பாட்டமாக இருந்ததில்லை. இந்த புயல் துளசியை தன்னுள் சுருட்டிக்கொள்ள பார்க்கிறதே!

“துளசீ…” அழைத்தபடி வந்தான் நம்பி. துளசிக்கு சங்கடமாக இருந்தது. நம்பி அண்ணாவிடம் என்னவென்று விளக்குவது!

“என்னாச்சும்மா? பயல் காட்டுக்கத்து கத்துறான்.”

“அண்ணா…”

“சரி சரி, என்னோட வா நீ.”

“ஐயையோ! அப்பா… இந்நேரத்துல?”

“அப்பா தூங்கப்போறாங்களாம், நான் எங்க வீட்டுக்குக் கொஞ்சம் துளசியை கூட்டிட்டு போறேன்னு பர்மிஷன் வாங்கிட்டேன், நீ வா துளசி, அதான் நான் இருக்கேனில்லை.”

இருவரும் வீட்டை விட்டு வெளியே வந்தார்கள். பாரதி தெரு அமைதியாக இருந்தது. கதவைப் பூட்டிவிட்டு வந்தான் நம்பி.

“என்னாச்சு? சண்டையா?”

“அப்பா சம்மதம் சொல்ல தயங்குறாங்களாம், அதுக்கு எம்மேல கோபப்பட்டா நான் என்ன பண்ணுறது நம்பிண்ணா?”

“எங்கிட்டயும் கத்தினான், ஐயா பொறுமைக்கும் ஒரு எல்லை இருக்காம், அதை உங்கப்பாக்கிட்ட சொல்லட்டாம்.”

இருவரும் பேசியபடியே ஆதியின் வீட்டை நெருங்கி விட்டார்கள். நம்பி வாசலிலேயே நின்றுவிட்டான்.

“நீ உள்ள போய் பேசிட்டு வாம்மா, நான் இங்கேயே நிக்கிறேன்.”

“அவங்க அத்தை…”

“அவங்க தூங்கிட்டாங்க போல.” பேச்சை நிறுத்திய நம்பி துளசியை தயக்கத்தோடு பார்த்தான்.

“என்ன நம்பிண்ணா?”

“துளசி… அவன் உம்மேல பைத்தியமா இருக்கான், சில நேரம் ஆதியை பார்த்தா எனக்குச் சிரிப்புத்தான் வருது, சின்னப்புள்ளை மாதிரி நடந்துக்கிறான்.”

துளசி தலையைக் குனிந்து கொண்டாள். நம்பியே மீண்டும் பேசினான்.

“உங்க கல்யாணத்துக்கு எதிரா யாராவது நின்னா அவனுக்குக் கோபம் கன்னாபின்னான்னு வருது, நீ அவனுக்குக் கிடைக்காம போயிடுவேயோங்கிற பயத்துலதான் அவன் இவ்வளவு அவசரப்படுறான்.”

“ஓ…”

“நீயும் அவனைக் கோபப்படுத்துற மாதிரி எதுவும் பேசிடாதே.”

“அத்தைப் பொண்ணைப் பத்தி பேசினேன், அதுக்கு இவ்வளவு கோபமாண்ணா?”

“இதே அத்தைப் பொண்ணைப் பத்தி நான் பேசியிருந்தா கண்டுக்காம போயிருப்பான், இங்க பேசினது துளசி இல்லையா, அதை அவனால தாங்க முடியலை, புரிஞ்சுக்கோ.”

“ம்…” தலையை ஆட்டினாள் துளசி.

“பசங்கன்னா அப்பிடித்தாம்மா, தான் விரும்புற பொண்ணைத் தான் மட்டுந்தான் பார்க்கணும், தான் மட்டுந்தான் ரசிக்கணும்… இப்பிடியெல்லாந்தான் நினைப்பாங்க.”

“அதையும் சொல்லியாச்சா?” துளசி கேட்க நம்பி சிரித்துவிட்டு துளசியின் தலையைத் தடவிக்கொடுத்தான்.

“என்னோட தங்கை, என்னோட ஃப்ரெண்ட்… எனக்கு எவ்வளவு சந்தோஷமா இருக்கு தெரியுமா? ஓடு ஓடு… போய் பேசிட்டு சீக்கிரமா வா.” நம்பி விரட்ட உள்ளே போனாள் துளசி.

கால்கள் நடையை மறந்தன போல பின்னிக்கொண்டன. சிரமப்பட்டு வீட்டினுள் போனாள் துளசி. விளக்குகள் அனைத்தும் அணைக்கப்பட்டு ஒரு மங்கிய சரவிளக்கு மட்டும் எரிந்து கொண்டிருந்தது.

ஹாலில் இருந்து பார்த்த போது ஆதி கிச்சனில் டைனிங் டேபிள் செயாரில் அமர்ந்திருப்பது தெரிந்தது. ஒற்றைக் கையில் தலையைத் தாங்கியபடி அமர்ந்திருந்தான்.

இவள் நடையின் அரவம் கேட்டிருக்கும் போலும், தலையைத் திருப்பாமலேயே பேசினான்.

“வாங்க மேடம்!” குரலில் கோபத்தின் அளவு சற்றே மட்டுப்பட்டிருந்தது. மெதுவாக நடந்து போய் அவன் அமர்ந்திருந்த நாற்காலியின் பின்னால் நின்றாள் பெண். முன்னே செல்ல தைரியம் இருக்கவில்லை.

இப்போது அவன் தலையைத் திருப்பி பார்த்தான். அவன் கை இயல்பாக அவள் கையைப் பற்றி இழுத்து அவன் முன் நிறுத்தியது. பற்றிய கையை விடாமல் அந்த மெல்லிய நீண்ட விரல்களை லேசாக நீவி விட்டான்.

“சாரி… நான் அப்பிடி பேசியிருக்க கூடாது.” துளசி சமாதானக்கொடி பிடித்தது. அவன் அமைதியாக இருந்தான். கோபப்படுவான் என்று அவள் எதிர்பார்த்திருக்க அவன் அமைதி அவளை வியப்புக்குள்ளாக்கியது.

எட்ட நின்றிருந்த அவளைத் தன்னருகே அழைத்து அவள் இடையோடு முகம் புதைத்து கொண்டான். முன்னம் அவள் அணிந்திருந்த அதே புடவையில்தான் இருந்தாள் துளசி.

அவள் வெற்றிடையில் அவன் முகம் புதைந்து அது அவனுக்கு மாத்திரமான உரிமை என்று சொல்லாமல் சொன்னது. துளசி சிலிர்த்து போனது. அவள் தன்னை அவனிடமிருந்து விடுவித்துக்கொள்ள மெதுவாக முயன்றாள்.

அவன் கைகள் இரண்டும் அவள் இடையை வளைத்து அவனோடு சேர்த்துக்கொண்டது. கால் கடுக்க காத்திருந்த நம்பியை இருவருமே மறந்து போனார்கள்.

துளசிக்கு என்ன செய்வதென்றே புரியவில்லை. இவனை எந்த வகையில் சேர்ப்பது? திடீர் திடீரென்று ஆத்திரப்படுகிறான், பிற்பாடு குளிர்நிலவாகி போகிறான்.

வெளியே தங்களை வீரர் என்று சொல்லிக்கொள்ளும் பல ஆண்கள் வீட்டில் இப்படித்தானா? ஆமென்பது போல நடந்தது அடுத்த நிகழ்வு.

துளசி ஆதியின் முகத்தை கஷ்டப்பட்டு தன்னிடமிருந்து பிரித்தாள். கண்கள் இரண்டும் செவ்வரி ஓடியிருக்க கலங்கி இருந்தது. அவன் கண்ணீர் அவள் உயிரை உருக்கியது.

“என்னாச்சு?! ஏன்… ஏன் இப்பிடி?!” துளசி தவித்தாள், துடித்தாள்.

“ஒன்னுமில்லை.” இயல்பாக சொன்னவன் கண்களைத் துடைத்து கொண்டான்.

“நான் சும்மாதான் அப்பிடி சொன்னேன், நீங்க என்ன இப்பிடி சின்ன விஷயத்துக்கு…”

“நீ பேசினது சின்ன விஷயம் இல்லை துளசி, உங்கத்தைப் பொண்ணைக் கல்யாணம் பண்ணிக்கோங்கன்னு எவ்வளவு சாதாரணமா சொல்றே!”

துளசிக்கு பக்கென்றது. என்ன இவன்?‌ சாதாரணமான விஷயத்தை இவ்வளவு பெரிது படுத்துகிறானே?! முகம் முழுவதும் சிவந்து போக அந்த அரை இருளில் அவன் அமர்ந்திருந்த கோலம் அவள் மனதை வாட்டியது.

“நம்பி காத்திருப்பான், நீ கிளம்பு துளசி… மறந்தும் இனிமே இப்பிடியெல்லாம் எங்கிட்ட பேசாதே, குட்நைட்.” சொல்லிவிட்டு நாற்காலியிலிருந்து எழப்போனவனின் தோளைத் தொட்டு தடுத்தாள் துளசி.

கேள்வியாக அவளை அண்ணார்ந்து பார்த்தான் ஆதி. மெதுவாக குனிந்தவள் அவன் இதழ்களில் தன் இதழ்களைப் பதித்தாள். திடுக்கிட்டது இப்போது அவன்!

அவன் கண்களை ஆழ்ந்து ஒரு பார்வைப் பார்த்துவிட்டு விலகப்போனவளை தன் மடியிலேயே இருத்திக்கொண்டான்.

“நம்பிண்ணா காத்திருக்காங்க.”

“ஷிவானி பத்தி ஏன் அப்பிடி பேசின துளசி? அவளை நான் அப்பிடியெல்லாம் நினைச்சது…” மேலே அவனைப் பேச விடாமல் மீண்டும் அவன் இதழ்களுக்குத் தடைப் போட்டாள் துளசி. ஆதி… ஆடிப்போனான்!

பெண் நெஞ்சில் மோகம் உண்டு…

அதில் பருவத்தாபம் உண்டு…

Leave a Reply

error: Content is protected !!