Thanimai – 14

Thanimai – 14
தவிர்க்க முடியாத விபத்துகளும் இழப்புகளும்
தாய் – தந்தையின் பாசத்தை அறியாத இதழினிக்கு சந்திரசேகரும், வைதேகியும் பாசமழையை பொழிந்தனர். மற்றொரு பக்கம் கணவனின் அன்பில் மூழ்கி முத்தெடுக்க நாட்கள் இனிமையாகக் கழிந்தது. எந்தவிதமான சலனமும் இன்றி அமைதியாக ஓடும் நதியில் கல்லை விட்டு எறிவதுபோலவே அக்கம் பக்கத்தினர் இதழினி கருவுற்று இருக்கிறாளா என்று விசாரிக்க தொடங்கினர்.
அன்று மாலை அரவிந்தன் வீடு திரும்பும் வேலையில் இதழினி அவன் கண்ணில் அகபடாமல் இருக்கவே, “அம்மா அவ எங்கே ஆளையே காணோம்” தாயிடம் விசாரித்தான்.
அவனிடம் விஷயத்தை சொல்லாமல் இருப்பது தவறென்று நினைத்தவர், “காலையில் வளைகாப்புக்கு கூப்பிட எதிர்வீட்டு மீனாட்சி வந்திருந்தாங்கடா. நானும் எப்போதும் போல எதார்த்தமாக அவங்ககிட்ட பேசினேன். அப்போதான் உங்க வீட்டில் ஏதாவது விசேஷமான்னு இதழியை பார்த்துட்டே கேட்டாங்க” என்று அவர் நிறுத்திவிட்டு மகனின் முகத்தை நோக்கினார்.
அந்த விஷயத்தை கேட்ட அரவிந்தனின் கண்கள் ரத்தமென்று சிவக்க, “வீட்டுக்கு வந்தால் வந்த வேலையைப் பார்த்துட்டு போகாமல் இதெல்லாம் எதுக்கும்மா கேட்கிறாங்க? எப்போ பாரு அடுத்தவங்க வாழ்க்கையில் என்ன நடக்குதுன்னு பார்க்கிறதே வேலையாக வச்சிருப்பாங்களா?” என்று எரிச்சலோடு கேட்டான்.
அவனை சமாளிக்க முடியாமல் வைதேகி தடுமாறியபடி, “அவங்க கேட்பதுக்கு நம்ம என்னடா பண்ண முடியும்? நான் அதையெல்லாம் தவறா நினைக்கல. ஆனால் அதைகேட்டு பிள்ளையோட முகமே மாறிப்போச்சு” என்று வருத்தத்துடன் கூறினார்.
இருவரின் சத்தம்கேட்டு வேகமாக வெளியே வந்தவளின் முகம் அழுது சிவந்திருப்பதை கண்டு அவனுக்கு கோபம் அதிகரித்தது. ‘யாரோ சொல்வதற்காக இவ ஏன் தன்னை வருத்திக்கொண்டு சுற்றி இருக்கும் மத்தவர்களின் நிம்மதியையும் கெடுக்கிறாளோ?’ மனதினுள் நினைத்தவன் கோபத்தை அடக்கியபடி அமைதியாக நின்றான்.
“அவங்க சொன்னதில் என்ன தவறு இருக்குங்க. கல்யாணமாகி இரண்டு மாதம் முடிஞ்சபிறகும் குழந்தை உண்டாகல என்றால் அப்படிதான் கேட்பாங்க” அவள் கரகரத்த குரலில் கூறவே அவளை முறைத்தபடி இரண்டே எட்டில் அவளின் எதிரே சென்று நின்றான்.
அவனின் பார்வையை எதிர்கொள்ள முடியாமல் தலை குனிந்தவளின் முகத்தை ஒரு விரல் கொண்டு நிமிர்த்தியவன், “திருமணப் பந்தத்தில் குழந்தை ஓர் அழகான அங்கம் அவ்வளவுதான். அதற்காக குழந்தையே உலகம் கிடையாது. அவங்க அப்படி பேசினால் கேட்டுட்டு இப்படிதான் என்னை கஷ்டப்படுத்துவியா?” என்று அவன் போட்ட அதட்டலில் அதிர்ந்து நின்றாள் இதழினி.
“இல்லங்க..” என்று அவள் தொடங்க, “நம்மள பற்றி தவறாக பேச அவங்களுக்கு உரிமையில்ல இதழினி. அப்படி அவங்க பேசினால், ‘என் வாழ்க்கையில் தேவையில்லாமல் ஏன் மூக்கை நுழைக்கிறீங்கன்னு பட்டென்று கேட்டுவிடு. அதனால் எவ்வளவு பெரிய பிரச்சனை வந்தாலும் நான் பார்த்துக்கிறேன்” என்று தைரியமாக கூறினான்.
அதுவரை அழுது தன்னை வருத்திக்கொண்டு இருந்த இதழினியின் முகம் சற்று தெளிவத்தை கண்டு அவளின் மலர் முகத்தை கையில் ஏந்தி நெற்றியில் இதழ் பதித்தவன், “ஒரு விஷயத்தை தெளிவாக புரிஞ்சுகோ இதழி.. இந்த உலகம் வாழ்ந்தாலும் ஏசும், தாழ்ந்தாலும் ஏசும். அப்படியிருக்கும்போது மற்றவர்களை திருப்தி படுத்துவதற்காக வாழ ஆரம்பித்தால் கடைசியில் வலியும், வேதனையும்தான் மிஞ்சியிருக்கும்” என்று சொல்ல அவளும் சரியென்று தலையசைத்தாள்.
அவன் சென்று உடையை மாற்றிவிட்டு கைகால்கள் அலம்பிவிட்டு வர இருவருக்கும் உணவை எடுத்து வைத்தார் வைதேகி. இரவு வீடு திரும்பிய சந்திரசேகரிடம் நடந்த விஷயத்தை கூற அவரும் மகன் சொன்னதையே சொன்னார்.
சிறிதுநேரம் பேசியபடி அமர்ந்திருந்த பெரியவர்கள் இருவரும் அவர்களுக்கு தனிமை கொடுக்கும் விதமாக தூங்குவதாக சொல்லிவிட்டு எழுந்து செல்ல வானில் உலா போன நிலாவை வேடிக்கை பார்த்தபடி வாசற்படியில் அமர்ந்தவளின் அருகே நெருங்கி அமர்ந்தான் அரவிந்தன்.
ஓரவிழியால் அவனை ஏறிட்டவள், “என்ன விஷயம் ஆர்.வி” என்றாள் நேரடியாக.
மெல்ல அவளின் கரம்பிடித்தவன், “இதழி எனக்கு உன்னை மாதிரியே அழகான பெண் குழந்தைப் பெத்து கொடுடி” என்றவனின் விழிகளில் தெரிந்த நேசத்தை கண்டு வாயடைத்துப் போய் அமர்ந்திருந்தாள் மனைவி.
அவளின் மௌனம் அவனை என்னவோ செய்ய, “நீ ஏன் அமைதியாக இருக்கிற” என்று கேள்வி கேட்டான். இதுநாள்வரை அரவிந்தன் அவனுக்கென்று எதையும் அவளிடம் கேட்டதில்லை. தன்னிடம் முதல் முதலாக விருப்பபட்டு கேட்ட ஒரே விஷயம் இது மட்டுமே என்பதை மனதினுள் குறித்துக் கொண்டாள்.
மெல்ல அவனின் தோளில் சாய்ந்தவள், “எனக்காக இவ்வளவு செய்யும் உனக்கு இல்லாததா ஆர்.வி” என்று கேட்டு காதலோடு அவனின் கன்னத்தில் இதழ் பதித்தாள்.
தன்னவளின் விழிகளில் தெரிந்த அன்பில் தன் மனதை பறிகொடுத்த அரவிந்தன் அவளின் இடையோடு கரம்கொடுத்து அணைத்தபடி, “ஏய் நிஜமாத்தான் சொல்றீயா? அப்புறம் என்னை டீலில் விட மாட்டீயே” என்று நம்பாமல் கேட்டான்.
அவனை கோபத்துடன் முறைத்த இதழினி அவனின் இதழில் முத்தமிட்டு, “நான் சொல்வதை நம்புடா. காட் பிராமிஸ். உனக்கு பெண் குழந்தை பெத்து தரேன் போதுமா” என்று கேட்க அவனும் சரியென்று தலையசைத்தான்.
அடுத்த இரண்டு மாதத்தில் தான் கர்பமாக இருக்கும் விஷயத்தை உரைத்தாள் இதழினி. அந்த விசயமறிந்த வைதேகியும், சந்திரசேகரும் சந்தோசபட அரவிந்தனின் கால்களோ தரையில் பதியவில்லை.
அவளை அவளுக்காக நேசிக்கும் அவனின் பாசத்தில் பெண்ணவள் கட்டுண்டு கிடக்க, தான் உயிராக நேசிக்கும் பெண்ணின் வயிற்றில் தன்னுடைய மகவு வளர்ந்து கொண்டு இருப்பதை நினைத்து பூரித்தான்.
காலை வழக்கம்போல அரவிந்தனும், சந்திரசேகரும் பேசியபடி உணவருந்திட, “என்னங்க நம்ம மருமகள் கர்ப்பமானால் கோவிலுக்கு வருவதாக வேண்டியிருந்தேன். இந்த வாரத்தில் விடுமுறையில் குலதெய்வ கோவிலுக்கு போயிட்டு வந்துவிடலாமா?” என்றார் வைதேகி.
சிறிதுநேர சிந்தனைக்குப் பிறகு, “கண்டிப்பா போலாம்” என்று சொல்லவும் அரவிந்தனின் முகத்தில் சிந்தனை படர்வதைக் கவனித்தவர் மகனிடம் காரணத்தை விசாரித்தார்.
“இல்லப்பா இந்தவாரம் நிறுவனத்தில் கொஞ்சம் வேலையிருக்கு. அதை முடித்து கொடுக்காமல் எங்கேயும் நகர முடியாது” அவன் விஷயத்தை தெளிவாக எடுத்துரைத்தான்.
அவனின் பின்னோடு இருக்கும் காரணத்தை கேட்டபிறகு, “சரிப்பா.. அப்போ நீ வேலையை முடித்துவிட்டு மறுநாள் கோவிலுக்கு வந்துவிடு. நாங்க மூவரும் முதல்நாள் சென்று கோவிலில் தரிசனத்தை முடிச்சிட்டு அங்கேயே தங்கிக் கொள்கிறோம். மறுநாள் நீ வந்தபிறகு நால்வரும் காலை பூஜையை முடித்துவிட்டு வந்துவிடலாம்” என்றார்.
மூவரும் பேசுவதை பொறுமையாக கேட்ட இதழினி, “அது என்ன முதல்நாளே கோவிலுக்கு போகணும்னு சொல்றீங்க மாமா” என்று புரியாமல் கேட்டாள்.
“முதல்நாள் கோவிலில் சாமியாடி குறிசொல்வாங்க இதழினி. அதைக் கேட்க வெவ்வேற ஊரிலிருந்து நிறையப்பேர் வருவாங்க. அதுதான் மாமா அப்படி சொல்றாங்க” என்று வைதேகி சிரிப்புடன் மருமகளிடம் கூறினார்.
அவர் சொன்னதைக் கேட்டவுடன் நாக்கை கடித்துக்கொண்டு, “சாரி அத்தை எனக்கு இதைபற்றி எதுவும் தெரியாது. அதுதான் அப்படி கேட்டுட்டேன்” என்று மன்னிப்பு கேட்டாள்.
மருமகளின் தலையை பாசத்துடன் வருடிவிட்டு அவர் நகர்ந்துவிட, “சீக்கிரம் சாப்பிட்டுவிட்டு வேலைக்கு கிளம்புடா. இன்னைக்கு மீட்டிங் இருக்குன்னு சொன்ன இல்ல” என்று சந்திரசேகர் ஞாபகபடுத்திட சட்டென்று சாப்பிட்டுவிட்டு அலுவலகம் கிளம்பிச் சென்றான்.
அந்த வார இறுதியில் சந்திரசேகர், வைதேகி, இதழினி மூவரும் முதல் நாளே அரவிந்தனை தனியே விட்டுவிட்டு கிளம்பிச் சென்றனர். காலையில் அவர்களை வழியனுப்ப பஸ் ஸ்டேண்ட் வந்தான் அரவிந்தன்.
காலைநேரம் என்பதால் ஸ்கூல், காலேஜ் பெண்கள் அனைவரும் நின்றிருக்க அவனின் இயல்பான குணம் தலை தூக்கிட சுற்றி இருப்பவர்களை சைட் அடிக்க ஆரம்பித்தான் அரவிந்தன். அதுவரை அவனைவிட்டு பிரிவதை நினைத்து வருத்ததுடன் நின்றிருந்தவள் கணவன் பார்வை சென்ற திக்கை கண்டவுடன் எரிச்சலடைந்தாள்.
அவனை கோபத்துடன் முறைத்தவள், “அந்த பொண்ணு நல்லா இல்லங்க. அதுக்கு பக்கத்தில் நிற்கும் அந்த ரெட் கலர் சுடிதார் போட்ட பொண்ணு ரொம்ப அழகாக இருக்கிறா” என்று எரிச்சலோடு கூறினாள்.
அவளைத் திரும்பி பார்க்காமல், “ஆமால்ல” என்ற கணவனை இடையில் கையூன்றி அவனை கோபத்துடன் முறைத்தாள்.
அப்போது அவளை திரும்பிப் பார்த்தவன், “ஐயோ இப்போ ரொம்ப அழகாக இருக்கிற இதழினி” என்று அவன் புன்னகையோடு அவளை வம்பிற்கு இழுத்தான்.
“இங்கே பாருங்க எனக்கு இதெல்லாம் பிடிக்காதுன்னு சொல்ல மாட்டேன். ஆனால் நான் இருக்கும்போது இப்படியெல்லாம் பண்ணாதீங்க” என்று கண்டிப்புடன் கூறியவளின் காதோரம் குனிந்தவன், “நீ இல்லாத நேரத்தில் சைட் அடிக்க பர்மிஷன் கொடுக்கிறீயா?” என்று குறும்புடன் கேட்டான்
அவனை நிமிர்ந்து பார்த்தவள், “நான் உங்க வாழ்க்கையில் நிரந்தரமாக இல்லாமல் போனால் கண்டிப்பா நீங்க இன்னொரு பெண்ணை மேரேஜ் பண்ணிக்கலாம்” என்றவளின் நாக்கில் சனி புகுந்ததோ என்னவோ? அது உண்மையாகவே நடக்குமென்று தெரியாமல் கணவனோடு பேசிக் கொண்டிருந்தாள்.
அவள் சொன்னதைகேட்டு மனம் பதறிட, “ஏய் அப்படியெல்லாம் சொல்லாதே. உனக்கெல்லாம் எதுவுமே ஆகாதுடி. நீ சோகமாக இருந்ததால் உன் மனநிலையை மாற்றிட அப்படி பண்ணினேன்..” தன்னவளை சமாதானம் செய்தான்.
தங்களை சுற்றி நிற்பவர்களை மறந்தவர்கள் அவர்களின் உலகிற்கு செல்ல பஸ் ஹாரன் சத்தம்கேட்டு தன்னிலைக்கு மீண்டனர். விழுப்புரம் செல்லும் பேருந்தில் ஏறிய மூவரும் ஒரு வரிசையில் ஒன்றாக அமர்ந்திட, “நாங்க சொன்னது ஞாபகம் இருக்கு இல்ல.. இன்னைக்கு வேலை முடிச்சிட்டு சீக்கிரம் கிளம்பி கோவிலுக்கு வந்துவிடு” என்று கூறினார் சந்திரசேகர்.
அவன் சரியென்று தலையசைத்துவிட்டு, “இதழினி கொஞ்சம் கவனமாக இருடா” என்று மனையாளிடம் கூறிவிட்டு அங்கிருந்து கிளம்பிவிட்டான்.
சிறிதுநேரத்தில் பேருந்து கிளம்பிட அவர்களின் பயணம் இனிதாக தொடங்கியது. அடுத்த அரைமணி நேரத்தில் அரவிந்தன் அலுவலகத்தை சென்றடைந்தான். என்றும் இல்லாமல் மனம் படபடவென்று அடித்துக்கொண்டது. அதற்கு ஏற்றார்போல செல்போன் சிணுங்கியது.
அரவிந்தன் போனை எடுத்து காதில் வைக்க, “டேய் நான் மகேஷ் பேசறேன். சென்னையில் இருந்து விழுப்புரம் செல்கின்ற வழியில் பெரிய ஆக்ஸிடென்ட் ஆகிடுச்சுடா” பதட்டத்துடன் கூறியவன் அடுத்து சொன்ன விஷயத்தை கேட்டு அவனுக்கு தலையே சுற்றியது.
“ஏய் என்னடா சொல்ற?” என்று அதிர்ச்சியுடன் அரவிந்தன் கேட்க, “எதிரே வந்த லாரியில் பிரேக் பிடிக்காமல் பஸ்ஸில் நேராக மோதி பஸ் கீழே சரிஞ்சிடுச்சு. அதில் உங்க அப்பா, அம்மா இருவரும் ஸ்பார்ட் அவுட்” என்று எச்சிலை விழுங்கியபடி அவன் கூறிட ஒருநிமிடம் தன்னை சுற்றி என்ன நடக்கிறதென்று புரியாமல் நின்றிருந்தான்.
சற்றுமுன் புன்னகையோடு கிளம்பி சென்ற தாய் – தந்தையினர் உயிரோடு இல்லை என்ற விஷயத்தை ஜீரணிக்க முடியாமல் நின்றிருந்தான்.
அதற்குள் ஆக்ஸிடென்ட் விசயமறிந்து வெளியே வந்த ராகுல் அரவிந்தனை அழைத்துக்கொண்டு விபத்து நடந்த இடத்தை நோக்கி கிளம்பினான். அங்கே சென்று பார்க்க சுற்றி இருந்த பொதுமக்கள் விபத்தில் அடிப்பட்டவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அதை பார்த்தபிறகு இதழினியின் நினைவு வரவே வேகமாக பைக்கைவிட்டு இறங்கியவன் பஸ் சரிந்து விழுந்த இடத்தில் வேகமாக தேடினான். லாரி இடது பக்கம் மோதிய வேகத்தில் சாலையின் சரிவில் இருந்த மரத்தின் மீது மோதி சட்டென்று பள்ளத்தில் உருண்டிருந்தது.
பஸ் கீழே சரிந்த வேகத்தில் டிரைவர் சீட்டிற்கு பின்பக்கம் அமர்ந்திருந்தவர்கள் சரிந்த வேகத்தில் நசுங்கி இறந்திருக்க இதழினியை காணாமல் மற்ற இடங்களில் தேடினான்.
தன்னவளின் உடலை காணாமல் தேடியபோது டிரைவர் சீட்டின் பின்னோடு உடல்முழுவதும் ரத்தகாயத்துடன் கவிழ்ந்த நிலையில் இருந்தவளை கண்டு வேகமாக வெளியே தூக்கி வந்தவனுக்கு அழுகை கூட வர மறுத்தது.
மெல்ல அவளின் கன்னம் வருடி, “இதழி” என்றழைக்க அவள் விழி திறக்கவில்லை. மூக்கில் கை வைத்து பார்க்க மூச்சுக்காற்று விட்டுவிட்டு வருவதை கவனித்தவன் அவளை இரண்டு கரங்களில் ஏந்தினான்.
“இதழி கண்ணை திறந்து பாருடி” என்று அவன் காத்திட அவனின் குரல்கேட்டு விழி திறக்க முயற்சித்தவளை தூக்கிக்கொண்டு ஓடியவன் ஸ்டேச்சரில் படுக்க வைத்தான்.
அவளை செக் பண்ணி பார்த்த டாக்டர், “அவங்க உயிர் பிரிஞ்சி பத்து நிமிஷம் ஆச்சு” என்றார் வருத்தத்துடன். அதைகேட்டு கல்போன்று சமைந்து நின்றவனை ராகுலும், மகேஷும் இயல்புக்கு கொண்டுவர முயற்சித்தனர்.
தன் குடும்பத்தின் இழப்பை அவனால் ஏற்க முடியவில்லை. அவனின் மனம் முழுவதும் ரணமாக இருக்க, உணர்வுகள் அவனை அழுக சொல்ல, கண்ணீர் வராமல் பிரம்மைப் பிடித்தவன் போல இதழினியை பார்த்தபடி நின்றான் அரவிந்தன்.
அடுத்தடுத்து நடக்கவேண்டிய காரியங்களை மற்ற இருவரும் அவனின் பக்கமிருந்து செய்தனர் அலுவலக நண்பர்கள். மூவரையும் நல்லபடியாக அடக்கம் செய்தபிறகு வீட்டில் தனிமையில் அமர்ந்திருந்தான். எந்த நேரமும் சிரித்த முகமாக வலம் வரும் நண்பனின் முகத்தில் இருந்த சோகம் மற்றவர்களையும் பாதித்தது.
இப்போது அவனால் சிரிக்கவும் முடியவில்லை, வாய்விட்டு அழுகவும் முடியவில்லை. உணர்வுகள் இருந்தும் ஜடம்போல இருந்தவன் அன்றாட வாழ்க்கையை தனியாக நின்று எதிர்கொள்ள தொடங்கினான். வீட்டிற்கு வந்தால் தனிமை அவனை விரட்டியது.
மற்றொரு பக்கம் அலுவலகம் சென்றால் அங்கே இருப்பவர்களின் அனுதாப பார்வைக்கு ஆளாக வேண்டிய நிலைமை. இவை இரண்டையும் தவிர்க்க முடியாமல் அரவிந்தனுக்கு பைத்தியமே பிடித்தது. வீட்டிற்குள் நுழைந்தவனுடன் ஆளில்லாத தனிமை அவனை சூழ்ந்து கொள்ள நாட்கள் செல்ல தொடங்கியது. இப்படியே எட்டு மாதம் சென்றது.
அந்த வேலையை விட்டுவிட்டு வேறொரு நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்தவன் சென்னையிலிருந்து கிளம்பி விழுப்புரத்திற்கு வந்தான். அங்கே அவனின் புதிய வாழ்க்கைக்கான அத்தியாயம் இனிதாக தொடங்கியது.