Nila Pen_13
Nila Pen_13
வேலையில் மும்முரமாக இருந்த ஆதியை அவன் ஃபோன் சிணுங்கி கலைத்தது. புதிய நம்பராக இருக்கவும் சற்று தயங்கி தாமதித்தே அழைப்பை ஏற்றான்.
“ஹலோ.”
“தம்பி, நான் சங்கரபாணி பேசுறேன்.”
“சொல்லுங்க அங்கிள்.” ஆதி பரபரப்பானான்.
“ஃப்ரீயா இருக்கீங்களா?” திடீர் மரியாதை மனிதரின் குரலில். ஆதிக்கு வியப்பாக இருந்தது.
“ஒன்னும் ப்ராப்ளம் இல்லை, நீங்க சொல்லுங்க அங்கிள், என்ன திடீர்னு ஃபோன் பண்ணி இருக்கீங்க? வீட்டுக்கு வரட்டுமா?”
“இல்லைப்பா, நான் இப்போ வீட்டுல இல்லை, வெளியே இருக்கேன்.”
“ஓ… சொல்லுங்க அங்கிள்.”
“கொஞ்சம் பேசணும் தம்பி.”
“உங்கிட்ட பேசணும் ஆதி, கிளம்பி வான்னு உரிமையா சொல்லுங்களேன் அங்கிள், அதை விட்டுட்டு ஏன் என்னைத் தள்ளி நிறுத்துறீங்க?”
“ஆதி…”
“எதுவா இருந்தாலும் சொல்லுங்க அங்கிள், ஆனா துளசி உனக்கில்லை ஆதின்னு மட்டும் தயவுசெய்து சொல்லிடாதீங்க அங்கிள், ப்ளீஸ்.”
சற்று நேரம் எதிர்முனை அமைதியாக இருந்தது. சங்கரபாணி இவனிடம் என்ன பேசுவதென்று தெரியாமல் திகைக்க, ஆத்ரேயனோ மனிதர் ஏதாவது எக்குத்தப்பாக பேசிவிடுவாரோ என்று தவித்தான்.
“அங்கிள்?”
“சொல்லுப்பா.”
“எங்க இருக்கீங்க நீங்க இப்போ?”
“பக்கத்து தெருவுல இருக்கிற பார்க்ல.”
“நான் அங்க வரட்டுமா இப்போ?”
“வந்தா நல்லா இருக்கும் ஆதி, முடியுமா?”
“இதோ, அஞ்சு நிமிஷம் அங்கிள்.” அழைப்பைத் துண்டித்து விட்டு படிகளில் தடதடவென்று இறங்கினான் ஆதி. ஓட்டமும் நடையுமாக பக்கத்து தெருவிற்கு வந்தவன் சரியாக ஐந்தாவது நிமிடம் சங்கரபாணியின் முன்பாக நின்றான்.
வயதை விட சற்றே முதிர்ந்த தோற்றம். ஒரு சிமெண்ட் பெஞ்சில் அமர்ந்திருந்தார் மனிதர். மனைவியின் இழப்பு, மகளின் நிலைமை என வாழ்க்கை அவரை வாட்டி இருந்தது.
“அங்கிள்!” தனக்கு முன்னால் வந்து நின்ற அந்த இளைஞனை சில நொடிகள் பார்த்தார் சங்கரபாணி.
‘இவனுக்கு என்ன குறை? என் துளசிக்கு அறிவு, அழகு, அந்தஸ்தோடு ஒரு வரன் அமையும்போது நான் சந்தோஷிக்காமல் ஏன் சங்கடப்பட வேண்டும்?!’
“அங்கிள்?!” மீண்டும் அழைத்தான் ஆதி.
“என்னாச்சு அங்கிள்? ஏன் ஒரு மாதிரியா இருக்கீங்க?”
“உட்காருப்பா.” பெரியவர் கையைக் காட்ட அவருக்கும் பக்கத்திலேயே அமர்ந்தான்.
“ஏதாவது பிரச்சனையா அங்கிள்? ஏன் ஒரு மாதிரியா இருக்கீங்க?”
“பேசணும் ஆதி, கொஞ்சம் மனசு விட்டு உங்கிட்ட பேசணும்னு எனக்குத் தோணுச்சுப்பா, வீட்டுல… துளசி இருப்பா, அதான் இங்க வந்துட்டேன்.”
“பேசுங்க அங்கிள், எதுவா இருந்தாலும் தாராளமா நீங்க எங்கிட்ட டிஸ்கஸ் பண்ணலாம்.”
“ஆதி… உங்க அத்தை கூட இந்த கல்யாணத்துக்காக இவ்வளவு தூரம் பயணப்பட்டு வந்திருக்காங்க.”
“நீங்க சம்மதம்னு ஒரு வார்த்தைச் சொன்னா என்னோட அம்மா அப்பா அடுத்த ஃப்ளைட்டிலேயே இன்டியா வருவாங்க.”
“அவசரப்படாதப்பா!”
“ஏன் அங்கிள்? இந்த கல்யாணத்துல என்னைவிட நீங்கதானே நியாயமா அவசரப்படணும்?!”
“அது சுயநலமில்லையா ஆதி?” அவசரமாக கேட்டார் சங்கரபாணி. குரலில் பதட்டம்.
“எது சுயநலம் அங்கிள்? உங்க பொண்ணுக்கு ஒரு தகப்பனா நீங்க கல்யாணம் பண்ணி பார்க்கிறது சுயநலமா?”
“இதுல சம்பந்தப்பட்டிருக்கிறது எம் பொண்ணு மட்டுமில்லை ஆதி.”
“சரி, நானுந்தான் சம்பந்தப்பட்டிருக்கேன், இப்போ அதுக்கு என்ன அங்கிள்?”
“ஆதி…” சங்கரபாணியின் பேச்சு இப்போது தடைப்பட்டது. ஆதி தாடைகள் இறுக அவரையே பார்த்திருந்தான்.
“நீங்க துளசியோட அப்பா எங்கிறதால உங்களைச் சும்மா விடுறேன் அங்கிள், உங்க மனசுல இப்போ ஓடுற எண்ணம் இன்னொருத்தர் மனசுல ஓடுதுன்னு தெரிஞ்சாலே அவங்களை ஒரு வழி பண்ணிடுவேன் நான்!”
“ஆதி!” ஆதியின் ஆங்காரமான குரலில் சங்கரபாணி திகைத்து போனார்.
“நீங்க பெத்த பொண்ணைப் பத்தியே உக்களால எப்பிடி அங்கிள் இப்பிடி நினைக்க முடியுது?”
“நானா நினைக்கலை ஆதி, ஆரம்பத்துல எனக்கும் இதெல்லாம் வலிச்சது, அப்புறமா மனுஷங்க பேசுறதைக் கேட்டு கேட்டு பழகிடுச்சு.”
“அந்த மனுஷங்க லிஸ்ட்ல நானும் என் ஃபேமிலியும் இல்லை, இப்போ எனக்கு நீங்க பதில் சொல்லுங்க அங்கிள்.”
“கொஞ்சம் பொறுப்பா… இது எம் பொண்ணோட வாழ்க்கை, அவ கல்யாணம் பண்ணி புகுந்த வீட்டுல போய் சந்தோஷமா வாழணும், அப்பிடி இல்லையா… அவ கல்யாணம் பண்ணலைன்னாலும் பரவாயில்லை, எங்கூட சந்தோஷமா இருக்கட்டும்.”
“என்னால துளசியை சந்தோஷமா வெச்சிருக்க முடியும் அங்கிள்.”
“கல்யாணம் எங்கிறது ரெண்டு மனுஷங்க சம்பந்தப்பட்டது மட்டுமில்லை ஆதி, ரெண்டு குடும்பம் சம்பந்தப்பட்டது.”
“அங்கிள், நீங்க கவலைப்படற மாதிரி எதுவும், எந்த பிரச்சனையும் என்னோட தரப்புல இருந்து வரப்போறதில்லை, அதை நீங்க கூடிய சீக்கிரமே புரிஞ்சுக்குவீங்க.”
“…………….” சங்கரபாணி அமைதியாக அப்படியே அமர்ந்திருந்தார்.
“நாளைக்கு துளசியோட பெர்த் டே, உங்க பர்மிஷனோட அதை ரொம்ப க்ராண்டா செலிபரேட் பண்ணணும்னு நான் ஆசைப்படுறேன் அங்கிள், துளசியை நான் மீட் பண்ணினதுக்கு அப்புறமா வர்ற ஃபர்ஸ்ட் பெர்த் டே, இதை நாங்க எங்க வாழ்நாள்ல என்னைக்குமே மறக்க கூடாது…” ஆதி இப்போது பேசுவதை நிறுத்திவிட்டு சங்கரபாணியை பார்த்தான்.
“துளசி மேல எனக்கிருக்கிற அன்பை, பாசத்தை, மரியாதைய எப்பிடி உங்களுக்குப் புரிய வெக்கிறதுன்னு எனக்குப் புரியலை அங்கிள்.”
“எனக்கு நீயும் முக்கியம் ஆதி.”
“கண்டிப்பா… நான் இல்லேங்கலை, அதே எனக்கு, துளசி இல்லாத ஒரு வாழ்க்கை உயிர்ப்பா இருக்காது எங்கிறதையும் நீங்க புரிஞ்சுக்கணும் அங்கிள்.”
“இப்ப நான் என்ன சொல்லணும்னு நீ எதிர்பார்க்கிற ஆதி?”
“மனப்பூர்வமா, சந்தோஷமா, முழு மனசோட இந்த கல்யாணத்துக்கு எனக்கு சம்மதம் ஆதின்னு சொல்லுங்க அங்கிள்.” ஆதியின் குரல் இறைஞ்சியது.
சங்கரபாணி ஆதியை பார்த்து லேசாக புன்னகைத்தார். அந்த முகத்தில் இப்போது கனிவு மட்டுமே தெரிந்தது.
“துளசிக்கு சீதனமா எங்கிட்ட இருந்து என்ன எதிர்பார்க்கிற ஆதி?” இப்போது ஆதி விழித்தான்.
“சீதனம்னா?!”
“பொண்ணைக் குடுக்கும் போது தனியா குடுக்க முடியுமா? நகை, பொருள்னு சேர்த்துத்தானே குடுக்கிறது வழமை.” சங்கரபாணியின் வார்த்தைகளில் ஆதி தன்னை மறத்தான்.
எழுந்து தன் வருங்கால மாமனாரைக் கட்டி அணைத்து கொண்டவன் பெருங்குரலெடுத்து சிரித்தான்.
“அதுக்குத்தான் நீங்க இருக்கீங்களே அங்கிள்! அதுக்குப் பிறகு வேற என்ன வேணும் எனக்கு? நீங்கதான் துளசியோட எனக்கு வர இருக்கிற சீதனம்.” ஆதி சொல்லி முடிக்க கண்கள் பனிக்க இப்போது சங்கரபாணி சிரித்தார்.
“தான்க் யூ அங்கிள்!”
“அதை நான்தான் சொல்லணும் ஆதி.”
“ம்ஹூம்… அப்பிடி நீங்க என்னைக்கும் நினைக்க கூடாது, துளசி மேல அனுதாபப்பட்டு வந்ததில்லை இந்த லவ், அவமேல ஆசைப்பட்டு வந்தது, நீங்க அதை என்னைக்கும் மறந்திட கூடாது அங்கிள்.”
“ஆதி…” சங்கரபாணி எதையோ சொல்ல தயங்கினார்.
“சொல்லுங்க அங்கிள்.”
“துளசி… ஒத்தைப் பொண்ணு இல்லையா? அதுவும் கொஞ்ச காலமா அம்மா இல்லேங்கிறதால அவளுக்கு அளவுக்கு அதிகமா நான் செல்லம் குடுத்துட்டேன், எங்க வீட்டுல அவ பேச்சுக்கு மறு பேச்சு இருந்ததில்லை.”
“அது எனக்குத் தெரியும் அங்கிள்.”
“அது சரின்னு நான் சொல்ல மாட்டேன், அதே நினைப்புல அவ உங்கிட்டயும் சலுகைகளை எதிர்பார்க்கலாம்.”
“எதிர்பார்க்கட்டும், தப்பே இல்லை அங்கிள்.”
“அப்பிடியில்லை ஆதி, நான் வாழ்ந்து பார்த்தவன், நாம எவ்வளவுதான் ஆசைப்பட்டு கட்டிக்கிட்டாலும் கல்யாணம் ஆன புதுசுல இருக்கிற மாதிரியே என்னாளும் வாழ்க்கை இருந்துடாது.”
“ம்…”
“துளசி பொறுப்பான பொண்ணுதான், இருந்தாலும் சட்டுன்னு கோபம் வரும், சில நேரங்கள்ல ரொம்ப பிடிவாதம் பிடிப்பா.”
“ஓ…” இப்போது ஆதி முகத்தில் ஆச்சரியத்தோடு ஒரு புன்னகை மலர்ந்தது.
அவன் கூட அன்று கிராமத்து வீட்டில் அவள் கோபத்தைப் பார்த்தானே! நேற்று கூட அவள் பிடிவாதத்தால் அவனுக்கு இரட்டிப்பு விருந்து கிடைத்ததே!
“சொன்னா புரிஞ்சுக்குவா, நீ கொஞ்சம் பொறுமையா அவளைப் பார்த்துக்கணும் ஆதி.” சங்கரபாணியின் குரலில் சொர்க்கத்தில் சஞ்சரித்த ஆதி பூலோகத்திற்கு வந்தான்.
“துளசியை நீ நல்லா பார்த்துக்கணும் ஆதி.” கண்கலங்கிய பெரியவரின் கையைக் கெட்டியாக ஆதி பிடித்துக்கொண்டான்.
“அந்த விஷயத்துல மட்டும் நீங்க என்னைக்கும் கவலைப்பட கூடாது அங்கிள், உங்க பொண்ணை நான்…” சட்டென்று நிறுத்தினான் ஆதி.
“வெறும் பேச்சால சொல்லுறதை விட நான் செய்கையால செஞ்சு காட்டுறேன் அங்கிள்.”
தன் கரத்தைப் பற்றியிருந்த இளையவனின் கரத்தைத் தன் கண்களில் ஒற்றிக்கொண்டார் சங்கரபாணி. ஆதியின் கை லேசாக நனைந்தது.
***
நேரம் இரவு பத்தை நெருங்கி கொண்டிருந்தது. இரவு வேலைகளை முடித்துக்கொண்டு துளசி படுக்கைக்கு வந்துவிட்டாள்.
தலையணையில் தலையை வைத்த உடனேயே சொல்லாமல் கொள்ளாமல் ஆதியின் முகம் நெஞ்சுக்குள் வந்து உட்கார்ந்து கொண்டது.
அவனை நினைத்த மாத்திரத்திலேயே நேற்றைய இரவு நினைவிற்கு வர தலையணையில் முகத்தைப் புதைத்து கொண்டாள் துளசி.
இன்பமான கனவுகளோடே கண்ணயர்ந்திருப்பாள். சற்று நேரத்தில் அவள் அலைபேசி சிணுங்கியது. திடுக்கிட்டு விழித்தாள்.
‘யாராக இருக்கும்?! அதுவும் இந்த நேரத்தில்? ஆதிக்கு மட்டும்தானே இந்த அலைபேசி எண் தெரியும்!’
நேரத்தைப் பார்க்க அது பன்னிரெண்டு என்றது. ஆதிதான் அழைத்து கொண்டிருந்தான். துளசி அவசரமாக அழைப்பை ஏற்றாள்.
“ஹலோ!”
“ஹாப்பி பெர்த் டே ஹனி!” ஆதியின் குரலில் ஈ மொய்த்தது. துளசி திடுக்கிட்டாள்.
“ம்…” அவள் பதில் இப்படித்தான் இருந்தது.
“ஏய்! பெர்த் டே பேபி… என்னாச்சு? விஷ் பண்ணுறேன்… ம் எங்கிற?!”
“ஆங்…” இப்போதும் விழித்தது பெண்.
“என்னாச்சுடா? எதிர்பார்க்கலையோ?!”
“ம்ஹூம்… இல்லை…”
“ஏன்? ஏன் எதிர்பார்க்கலை?”
“……………..”
“துளசி… தூங்கிட்டயா என்ன?”
“இல்லையில்லை…”
“அப்போ ஏதாவது பேசேன்.”
“என்ன பேச?”
“பேச முடியலைன்னா நேத்து குடுத்த மாதிரி ஏதாவது குடேன்.” இப்போது அவன் குரலில் ஆயிரம் தேனீக்கள் மொய்த்தது. பெண் மௌனமாகி விட்டாள்.
“துளசி…” ஆதியின் குரல் கிறக்கத்தோடு வந்தது. நேற்றைய இரவு இருந்த தைரியம் இன்றைக்கு இருக்கவில்லை பெண்ணுக்கு.
“துளசி… ஏய்!” மீண்டும் அவன் அதே குரலில் அழைத்தான்.
“உங்களுக்கு என்ன ஸ்வீட் பிடிக்கும்?” துளசி தன்னை மீட்டுக்கொண்டாள்.
“எதுக்குக் கேக்குறே?”
“நாளைக்குப் பண்ணலாமேன்னுதான்.”
“துளசியைத்தான் ரொம்ப பிடிக்கும் எனக்கு, குடுக்கிறியா?”
“ரொம்ப பேசுறீங்க நீங்க.”
“ஆமா, கல்யாணத்துக்கு உங்கப்பா சம்மதம் சொல்லிட்டாரில்லை, அந்த சந்தோஷம் எனக்கு!”
“அப்பா சம்மதிப்பார்னு எனக்கு முன்னாடியே தெரியும்.”
“அப்பிடியா?! எப்பிடி?”
“நான் ஆசைப்பட்டு அப்பா எதையும் மறுத்ததில்லை.”
“அப்போ ஆசைப்படுறியா துளசி?”
“……………”
“துளசி ப்ளீஸ்… பேசு எங்கிட்ட.”
“நீங்க என்ன நினைக்கிறீங்க?”
“உன்னோட ஆசை எவ்வளவுன்னு நேத்து நைட்டே புரிஞ்சுது துளசி.”
“ம்ஹூம்… அது ரொம்ப கம்மி.”
“ஹா… ஹா… ஸ்வீட் ராஸ்கல்! அசத்துறடீ!” ஆதி அந்த இடமே அதிர சிரித்தான்.
“உங்க அத்தை எந்திரிச்சு வரப்போறாங்க.”
“வரட்டுமே, துளசி வீட்டுக்கு என்னை இப்போ கூட்டிட்டு போங்கன்னு சொல்லுவேன்.”
“எதுக்கு இந்த நேரத்துலன்னு கேட்டா?”
“கேக்க மாட்டாங்க, எதுக்கு இந்த நேரத்துல போவாங்கன்னு எங்கத்தைக்குத் தெரிஞ்சிரிக்கும்.”
“ஐயே போதுமே!” அவள் இங்கிருந்த படியே அழகு காட்டினாள்.
“போதாதே துளசி!” அவன் அங்கிருந்து ஆசை மூட்டினான்.
சற்று நேரம் இருவரும் எதுவும் பேசிக்கொள்ளவில்லை. அந்த இதமான அமைதியை அனுபவித்தபடி இருந்தார்கள். ஆதியே இப்போது பேசினான்.
“துளசி.”
“ம்…”
“இன்னைக்கு என்ன ப்ளான்?”
“ஒன்னுமில்லையே!”
“ஏய்! பெர்த் டேக்கு ஒன்னுமே இல்லையா?”
“இல்லைங்க, அப்பா எப்பவும் போல புதுசா ட்ரெஸ் வாங்கி குடுப்பாங்க, அம்மா இருக்கும்போது ஸ்வீட் பண்ணுவாங்க, இப்போ அதுகூட பண்ணுறதில்லை நான்.”
“ஓ… ஆனா இந்த பெர்த் டே அப்பிடி இருக்காது.”
“அப்பிடியா?”
“ம்… உங்கப்பாக்கிட்ட பர்மிஷன் வாங்கிட்டேன், சரியா ஏழு மணிக்கு மேடம் ரெடியா இருங்க.”
“ஐயையோ! நைட்லயா?”
“உங்கப்பாவும் இப்பிடித்தான் அலறினாரு, ஆனா உன்னளவுக்கு இல்லை.”
“ம்ஹூம்… நான் மாட்டேன்.”
“துளசி… சின்னதா ஒரு ட்ரீட், அவ்வளவுதான்.”
“வீட்டுலயே…”
“அது சரிப்பட்டு வராது, நீ ஏழு மணிக்கு ரெடியாகி இரு.”
“நம்பிண்ணாவையும்…”
“துளசி!” அவன் அதட்டலில் அவள் அடங்கிப்போனாள்.
“எங்கூட வர உனக்கென்ன பயம்?”
“பயமெல்லாம் இல்லை… நைட்ல…”
“சீக்கிரமா வந்திடலாம், ஓகே.”
“ம்…”
“குட்நைட் துளசி.”
“குட்நைட்.”
***
அன்று காலையிலேயே துளசி எழுந்து தலைக்கு நன்றாக ஷாம்பு போட்டு குளித்தாள். அம்மா போன பிறகு பிறந்தநாள் கொண்டாட்டம் எல்லாம் இருந்ததில்லை.
அப்பா எப்போதும் போல புதிதாக உடை எடுத்து கொடுப்பார், அவ்வளவுதான். ஆனால் இன்றைக்கு எல்லாமே வித்தியாசமாக இருந்தது. அவன் அனைத்தையும் மாற்றி இருந்தான். மனதில் புதுவித உற்சாகம் பரவியது துளசிக்கு.
குளித்து முடித்தவள் புத்தாடையை அணிந்து கொண்டாள். இளநீல வண்ண சுடிதார். அழகாக இருந்தது. கிச்சனுக்கு வந்து மளமளவென்று சக்கரைப் பொங்கல் தயாரித்தாள். ஃபோனை எடுத்து நம்பியை அவசரமாக அழைத்தாள்.
“ஹாப்பி பெர்த் டே துளசி.”
“தான்க் யூ ண்ணா, எத்தனை மணிக்கு வேலைக்குக் கிளம்புவீங்க?”
“என்ன விஷயம் சொல்லு.”
“கொஞ்சம் ஸ்வீட்ஸ் வாங்கணும்.”
“என்னென்ன வாங்கணும்மா?”
“நான் சர்க்கரைப் பொங்கல் பண்ணி இருக்கேன், அதோட ஸ்வீட்ஸ்ஸும் வெச்சு அவங்க வீட்டுக்கு அனுப்பணும் நம்பிண்ணா.”
“எவங்க வீட்டுக்கு?” நம்பி பெரிதாக சிரிக்கும் சத்தம் கேட்க துளசி அமைதியானாள்.
“நீங்க என்னைக் கேலி பண்ணுறீங்க நம்பிண்ணா.”
“இல்லைம்மா, இல்லையில்லை… ரெண்டு கிலோ போதுமா? எல்லா அயிட்டமும் இருக்கிற மாதிரி வாங்கட்டுமா?”
“ஓகே ண்ணா.”
ஒருவித மகிழ்ச்சியோடு நடமாடும் தன் பெண்ணைப் பார்த்தும் பாராதது போல கவனித்துக்கொண்டார் சங்கரபாணி. அவர் மனதும் லேசானது போல இருந்தது.
சற்று நேரத்தில் நம்பி வந்துவிட்டான். அழகான பாக்ஸில் ஒரு கேக்கும் வாங்கி இருந்தான், கூடவே ஸ்வீட்ஸ்.
“எல்லாம் போதுமான்னு பாரு துளசி.”
“ஓகே ண்ணா, எவ்வளவு ஆச்சு?”
“காலங்காத்தால எங்கிட்ட நல்ல நாளும் அதுவுமா திட்டு வாங்காத, சக்கரைப் பொங்கல் எங்க? குடு நான் டேஸ்ட் பண்ணி பார்க்கிறேன்.” நம்பி கேட்க அப்பாவிற்கும் அவனுக்கும் பரிமாறினாள் துளசி.
“சக்கரைப் பொங்கல் இன்னைக்கு டேஸ்ட் அட்டகாசமா இருக்கே, வழக்கமா துளசி பண்ணுற பொங்கல் இத்தனை டேஸ்டா இருக்காதே, என்ன காரணமா இருக்கும்!” சற்று சத்தமாகவே பேசிக்கொண்டு நம்பி யோசிக்க சங்கரபாணி கூட சிரித்தார்.
“அண்ணா…” அவள் சிணுங்கவும் நம்பி பலமாக சிரித்தான்.
“சரி சரி, அங்க ஒருத்தன் காத்துக்கிட்டு கிடப்பான், நீ போய் எல்லாத்தையும் குடு.”
“ஐயையோ! நானா?”
“பின்ன யாரு நானா? எனக்கா பெர்த் டே?”
“அப்பா…” அவள் தயங்கினாள்.
“உங்கப்பாவை நான் எங்க வீட்டுக்கு இப்போ கூட்டிட்டு போறேன், நீ அதுக்குள்ள ஆதி வீட்டுக்குப் போய் வந்திடு.”
“அண்ணா… இன்னைக்கு ஈவ்னிங்…” துளசி இப்போதும் தயங்கினாள்.
“சொன்னான் துளசி, போயிட்டு வா… உங்கப்பாவே பர்மிஷன் குடுத்திருக்காரு, எதுக்கு இவ்வளவு தயங்கிறே நீ?”
“நீங்களும் கூட வாங்களேன்.”
“ஆதி என்னைக் கொன்னே போட்டிருவான்.” பயந்தவன் போல நடித்துவிட்டு நம்பி கிளம்பிவிட்டான். போகும்போது சங்கரபாணியையும் அழைத்துக்கொண்டு போக மறக்கவில்லை.
துளசி அனைத்துப் பொருட்களையும் எடுத்துக்கொண்டு ஆதியின் வீட்டிற்குப் போனாள். கதவு திறந்துதான் இருந்தது. அபிராமி கிச்சனில் நின்றிருந்தவர் இவள் வருவதைப் பார்த்து புன்னகைத்தார்.
“ஹாப்பி பெர்த்டே துளசி!” ஆர்ப்பாட்டமான வாழ்த்து.
“தான்க் யூ.” துளசி வெட்கியது.
“இதென்ன கைல?”
“ஸ்வீட்ஸ், சர்க்கரைப் பொங்கல், கேக்!”
“ஓ… குடு குடு, ஆதீ… இங்க வந்து யாரு வந்திருக்கா பாரு!” சத்தமாக அழைத்துவிட்டு பொங்கலை ருசி பார்க்க ஆரம்பித்தார் அபிராமி.
துளசி அண்ணார்ந்து மாடிப்படிகளின் முடிவைப் பார்த்தாள். அவள் உள்ளுணர்வு பொய்க்கவில்லை. அங்கே ஆதி அவளையே பார்த்தபடி நின்றிருந்தான்.
“துளசி, ஆதி மாடியிலதான் இருக்கான், நீ இதைக் கொண்டு போய் அவனுக்குக் குடு.” பொங்கலை சிறிய ப்ளேட்டில் போட்டு அதை துளசியின் கையில் கொடுத்துவிட்டு வெளியே போய் யாரோடோ ஃபோன் பேச ஆரம்பித்துவிட்டார் அபிராமி.
துளசி அவனைப் பார்க்க… ஆவலோடு அவள் வரவிற்காக காத்திருப்பவன் போல நின்றிருந்தான் ஆதி. துளசி படிகளில் மெதுவாக ஏறினாள்.
இப்படி வைத்த கண் வாங்காமல் பார்த்தபடி நின்றிருந்தால் எப்படி அவள் அருகே போவாள்!
“சக்கரைப் பொங்கல்.” ப்ளேட்டை அவன் புறமாக நீட்டினாள் பெண். வாங்கிக்கொண்டவன் முதல் ஸ்பூனை அவளுக்கு ஊட்டி விட்டான்.
“ஹாப்பி பெர்த் டே துளசி.” இனிப்போடு அந்த வாழ்த்தும் துளசிக்குள் சுகமாக இறங்கியது.
“தான்க் யூ.”
“நான் வேற ஸ்வீட் கேட்டேனே…” கண்களில் குறும்பு மின்ன அவன் கேட்ட போது துளசி மெதுவாக படிகளில் இறங்க போனாள். அவள் கைப்பிடித்து தடுத்தான் ஆதி.
“இல்லையா துளசி?” அவன் குரலில் இப்போது இருந்தது என்ன? ஏக்கமா? அவன் பெருவிரல் துளசியின் கையை வருடி கொடுத்தது.
“நான் போகணும்.”
“இன்னைக்கு ஏழு மணி, ரெடியா இரு.” அந்த குரலுக்குப் பயந்தவள் போல துளசி அவசர அவசரமாக தலையை ஆட்டிவிட்டு நகர்ந்தாள்.
வீட்டுக்குள் வரும்போதே சங்கரபாணியின் குரல் கேட்டது. வீட்டு தொலைபேசியில் யாருடனோ பேசிக்கொண்டிருந்தார்.
“இதோ, துளசி வந்துட்டாம்மா, கொஞ்சம் பொறு.” தொலைபேசியில் யாருக்கோ பதில் சொன்னவர்,
“துளசி, சீக்கிரமா வா, யாமினி லைன்ல இருக்காங்க.” என்றார். துளசி சட்டென்று ஓடிப்போய் ரிசீவரை வாங்கிக்கொண்டாள்.
“அக்கா, சொல்லுங்கக்கா.”
“ஹாப்பி பெர்த் டே துளசி.”
“அக்கா! உங்களுக்கு எப்பிடி?!” துளசிக்கு ஆச்சரியம் தாங்கவில்லை. ஆசிரமம் நடத்தும் அக்காவிற்கு அவள் பிறந்தநாள் இன்று என்று எப்படி தெரிந்தது?!
“நேத்து இங்க ஆதி வந்திருந்தார்.”
“ஓஹ்! எதுக்கு?!”
“பசங்க அன்னைக்கு அவர் வந்தப்போ கையால துணி துவைச்சாங்க இல்லையா, அதைப் பார்த்திருப்பார் போல.”
“ஆமா, எங்கிட்ட கூட வருத்தப்பட்டாரு.”
“அதான், நேத்து வரும்போது ரெண்டு வாஷிங் மெஷின் ஆர்டர் பண்ணி கொண்டு வந்தாரு.”
“ஓஹ்!” துளசி வாயடைத்து போனாள். பேச நா எழவில்லை.
“என்னாச்சு துளசி?” சங்கரபாணி கூட மகளின் நிலைமைப் பார்த்து கேள்வி கேட்டார்.
“எனக்குத் தெரியாதுக்கா, எங்கிட்ட அவங்க எதுவும் சொல்லலை.”
“செய்யணும்னு நினைக்கிறவங்க சொல்லிட்டு செய்ய மாட்டாங்க துளசி.”
“ம்…”
“துளசி பெர்த் டே அன்னைக்குக் குடுக்கணும்னு நினைச்சாங்களாம், அப்பிடி என்ன துளசி அவ்வளவு ஸ்பெஷல்னு கேலி பண்ணினேன்.” சொல்லிவிட்டு யாமினி சிரித்தார். துளசிக்கு முகம் சிவந்து போனது.
“என்னென்னமோ சந்தோஷமான விஷயமெல்லாம் ஆதி சொல்றாரு, உண்மையா துளசி?” நிஜமான அக்கறையோடு கேட்டது அந்த பெண்.
“அக்கா…” அப்பா குரல் கேட்கும் தூரத்தில் நின்றிருந்ததால் துளசிக்கு பேச்சு வரவில்லை.
“அப்பா சம்மதம் சொல்லிட்டாங்களா துளசி?”
“ஆமாக்கா.”
“அப்ப ஃபோனை அப்பாக்கிட்ட குடு.”
அதன்பிறகு சங்கரபாணியும் யாமினியும் சிறிது நேரம் பேசிக்கொண்டார்கள். யாமினி அனைத்தையும் மனிதரிடம் சொல்லி இருப்பார் போலும்.
ஃபோனை வைத்துவிட்டு மகளிடம் வந்தவரின் கண்கள் கலங்கி இருந்தது. துளசி கூட ஆச்சரியம் முழுதாக தீராததால் அமைதியாகவே நின்றிருந்தாள்.
“சாமி நம்ம மேலயும் நிறைய இரக்கம் வெச்சிருக்கான் இல்லை துளசி!” சொல்லிவிட்டு மனிதர் அப்பால் போய்விட்டார். துளசிக்கு அழலாம் போல இருந்தது!
***
மாலை ஏழு மணி. அந்த ப்ளாக் ஆடி இதமான பாடல்கள் ஒலிக்க எங்கேயோ போய்க்கொண்டிருந்தது.
“எங்க போறோம்?” இது ஏற்கனவே அவனிடம் துளசி கேட்ட கேள்வி. ஆனால் பதில்தான் வரவில்லை.
“பொறு பொறு… என்ன அவசரம்?” சொல்லிவிட்டு சாவதானமாக அந்த ஆடியை ஓட்டிக்கொண்டிருந்தான் ஆதி.
இருள் பரவத்தொடங்கி இருந்த அந்த இதமான வேளையில் கார் ஓர் உயர்தர ஹோட்டலின் முன்பாக போய் நின்றது. துளசி திடுக்கிட்டு போனாள்.
இந்த ஹோட்டலை எல்லாம் அவள் சம்பாத்தியத்திற்கு வெளியே இருந்து மட்டும்தான் பார்க்க முடியும்!
“இங்க… இங்க எதுக்கு?”
“இறங்கு துளசி.” காரை அதற்குரிய இடத்தில் நிறுத்திவிட்டு அவள் பக்கமாக வந்து கதவைத் திறந்து விட்டான் ஆத்ரேயன். திருதிருவென விழித்தபடி அமர்ந்திருந்தவளின் கரம் பிடித்து எழுப்பி உள்ளே அழைத்து சென்றான்.
நாகரிகத்தின் உச்சக்கட்டத்தில் இருந்தது ஹோட்டல். மெல்லிய இதமான இசையும் வாசமும் அவளை வேறொரு உலகிற்கு அழைத்து செல்வது போல இருந்தது. அந்த சூழ்நிலை துளசியை எதுவோ பண்ண சட்டென்று ஆதியை நெருங்கி அவன் கரத்தைப் பற்றிக்கொண்டாள்.
“ஏய்… என்னாச்சு?” தன்னை ஒண்டிக்கொண்டவளை விசித்திரமாக பார்த்துவிட்டு ரிசப்ஷனிற்கு போனான் ஆதி. அங்கே ஏதோ பேசிவிட்டு கையில் ஒரு கீயை வாங்கி கொண்டான்.
அவள் பார்வையால் கேட்ட கேள்விக்கு அவன் பதில் சொல்ல முனையவில்லை. நேராக லிஃப்ட்டை நோக்கி போய் அதில் ஆறாம் தளத்திற்காக காத்திருந்தான். அந்த ஹோட்டலில் மொத்தம் ஆறு தளங்களே இருந்தன.
ஒரு அறையின் முன்பாக ஆதி அவளைக் கொண்டு வந்து நிறுத்தியபோதும், அறைக்குள்ளே அழைத்து சென்ற போதும் கூட அவள் எதுவும் கேட்கவுமில்லை, அவனும் எதுவும் சொல்லவுமில்லை.
அறைக்கதவை அவன் மூடிவிட்டு திரும்ப துளசி அப்போதுதான் அந்த அறையைக் கவனித்தாள். அறையை ஒட்டி ஒரு பெரிய பால்கனி இருக்க, பால்கனியிலிருந்து பார்த்த போது கடல் தெரிந்தது.
பால்கனி கதவைத் திறந்து கொண்டு வெளியே வந்தாள் துளசி. லேசான உப்புக்காற்று அவள் நாசி தீண்டியது.
“பிடிச்சிருக்கா?” ஆதியின் குரல் அண்மையில் கேட்டது. சட்டென்று திரும்பியவளைத் தடுத்து அவள் பின்புறமாக நின்று எதையோ நீட்டினான் ஆத்ரேயன்.
சின்னதாக ஒரு பெட்டி. ஏதோ கிஃப்ட் என்றுதான் துளசி முதலில் நினைத்தாள். ஆனால் அவன் அதைத் திறந்து பார்க்க சொன்னபோது பெண் திகைத்துவிட்டது.
“என்ன… என்ன இது?!”
“இதுக்காகத்தான் துளசியை இவ்வளவு கஷ்டப்பட்டு கடத்திக்கிட்டு வந்தேன்.”
“…………….”
“இப்ப ஒரு தாலி, கல்யாணத்தப்போ ஊரறிய இன்னொரு தாலி, ரெண்டையும் நானே கட்டிடுறேன், இப்போ திருப்தியா?”
“யாரு… யாரு சொன்னாங்க?”
“ஷ்…” கேட்ட பெண்ணின் இதழ்களில் தன் ஒற்றை விரல் வைத்து தடுத்தான் அவன்.
“இது நமக்கான நேரம் துளசி, விளக்கம் எல்லாம் விலாவரியா அப்புறம் பேசலாம்.” என்றவன் அந்த பெட்டியிலிருந்த தாலியை வெளியே எடுத்தான்.
அங்கே இருந்த சிடி ப்ளேயரை உயிர்ப்பிக்க அதில் நாதஸ்வரம், மேளம் என்று மங்கள வாத்தியங்கள் முழங்கியது. துளசியின் கண்களை இமைக்காமல் ஒரு நிமிடம் பார்த்தான் ஆத்ரேயன்.
“துளசி… இந்த ஆத்ரேயனை வாழ்நாள் முழுக்க காதலிக்க உனக்குச் சம்மதமா?” அந்த ஒற்றைக் கேள்விக்குப் பதில் சொல்ல இயலாமல் அவள் கண்கள் லேசாக கலங்கியது.
அதுவே அவனுக்குப் போதுமானதாக இருக்க அவள் கழுத்தில் மூன்று முடிச்சுகள் போட்டான். துளசி சிலிர்த்து நின்றது.
“ஹாப்பி பெர்த்டே டார்லிங்!” உரிமையோடு சொன்னவன் அவள் இதழ்களில் அழுத்தமாக முத்தம் வைத்தான். துளசி துவண்டு போனது.
“தாலி கட்டியாச்சு… அதுக்கப்புறமா…” ஆதி இழுக்க விலுக்கென்று நிமிர்ந்தாள் துளசி. கண்களில் பயம் அப்பட்டமாக தெரிந்தது.
“ஹா… ஹா… பயந்துட்டியா துளசி? ஆனா கண்களுக்கு இன்னைக்கு நிச்சயமா விருந்து உண்டு.” என்றான் பூடகமாக.
“அப்பிடின்னா என்னவாம்?”
“இங்க வா.” அவளை அழைத்துக்கொண்டு அங்கிருந்த வாட்ரோபின் அருகில் போனவன் அதைத் திறந்தான். உள்ளே நான்கைந்து பாக்கெட்டுகளில் ஆடைகள் இருந்தன.
“இதெல்லாம் உங்களுக்குன்னு நான் ஆசையாசையா வாங்கினது…”
“ம்…”
“அதை ஒவ்வொன்னா எனக்குப் போட்டு காமிப்பீங்களாம்.” அந்த பாக்கெட்டுகளுக்காக அவள் கையை நீட்ட அவன் ஒன்றை மட்டும் நீட்டினான்.
துளசி பிரித்து பார்த்தாள். அழகான மயில் நீல நிறத்தில் அனார்கலி ஆடை ஒன்று இருந்தது. அவள் ஆடையை மாற்ற இடம் கொடுத்துவிட்டு பால்கனிக்கு போய்விட்டான் ஆதி.
கண்ணாடி கதவின் திரையை இழுத்துவிட்டு கதவை மூடிய துளசி ஆடையை மாற்றினாள். கழுத்தில் தொங்கிய புத்தம் புது தாலி மனதை வெகுவாக நெகிழ்த்தியது.
ஆடையை மாற்றிக்கொண்டு அங்கிருந்த முழு நீள கண்ணாடியில் தன்னைப் பார்த்தாள். பாதம் வரை நீண்டிருந்த ஆடை அவள் மெல்லிடைக்கு வெகுவாக பொருந்தியது.
திரையை இழுத்துவிட்டு கதவை இவள் திறக்க, கடலை இதுவரைப் பார்த்திருந்தவன் திரும்பினான்.
“வாவ்!” அவன் வாய் வார்த்தைப் பெண்ணுக்கும் கர்வத்தை மூட்டியது.
“பக்கத்துல வர பர்மிஷன் உண்டா துளசி?” அவன் கேள்விக்கு மௌனமே பதிலாக வர அதையே அனுமதியாக எடுத்து கொண்டு அருகில் வந்தான்.
கூந்தலுக்கு அவள் போட்டிருந்த க்ளிப்பை அவன் அகற்றிவிட, கடல் காற்றிற்கு அது அலையென ஆடியது. அவள் காதோரம் தன் கரத்தை நுழைத்தவன் அங்கிருந்த கூந்தலை லேசாக கலைத்து விட்டான்.
“பியூட்டிஃபுல்!” அவன் பேச்சு, செய்கை எல்லாம் விசித்திரமாக இருந்தது துளசிக்கு.
அடுத்ததாக அவன் நீட்டிய பாக்கெட்டில் ஆடையின் படம் பிரின்ட் செய்யப்பட்டிருந்தது. முழு நீள கவுன். அழகான அடர் பச்சையில் வெல்வெட் துணியில் தைக்கப்பட்டிருந்தது.
கை மிகவும் குட்டையாக இருக்க துளசி அவனைச் சங்கடத்தோடு பார்த்தாள். அவன் கண்கள் அவளை யாசிக்க எதுவும் பேசாமல் திரையையும் கதவையும் மீண்டும் மூடினாள்.
ஆடை மிகவும் அழகாகத்தான் வடிவமைக்கப்பட்டிருந்தது. கனகச்சிதமாக அவை அனைத்தும் அவளுக்குப் பொருந்தும் ரகசியம் என்ன? முகம் சிவக்க கதவைத் திறந்தாள்.
ஆவலோடு அவன் கண்கள் அவளை அங்குலம் அங்குலமாக ரசித்தன. சற்று நேரம் அவளையே பார்த்திருந்தவன் இப்போது அடுத்த பாக்கெட்டை நீட்டினான்.
எதுவுமே பேசாமல் அதை வாங்கிய துளசி விதிர்விதிர்த்து போனாள். பாக்கெட்டில் இருந்த படத்தைப் பார்த்த போது பெண்ணுக்கு மயக்கம் வந்தது.
தற்போது அணிந்திருந்த ஆடையின் பாதிதான் படத்தில் இருந்தது. அழகான கறுப்பு நிற ஆடைதான். ஆனால் இதையெல்லாம் அவளால் அணிய முடியாது.
“துளசி ப்ளீஸ்…” அவள் முக பாவங்களையே பார்த்திருந்த ஆதியின் வார்த்தைகளில் இப்போது கெஞ்சல், கொஞ்சல் எதுவும் இல்லை. உரிமையான அதட்டலே இருந்தது.
‘நீ இதைப் போட்டு நான் பார்த்தே ஆகவேண்டும்.’ என்பது போல அவன் நின்றிருந்தான்.
“ம்ஹூம்… நான் மாட்டேன்.”
“துளசி!” எப்போதும் வேலை செய்யும் அவன் அதட்டல் இப்போது நமத்துப்போனது.
“இது வெள்ளைக்காரிங்க போடுறது, நான் மாட்டேன்.”
“இந்த ட்ரெஸ் போடுறதுக்காக நான் இப்போ வெள்ளைக்காரியைக் கல்யாணம் பண்ணலாமா? நீதானே என்னோட பொண்டாட்டி? அப்போ நீதானே போட்டு காமிக்கணும்!”
“உங்க ஆசை ஏன் இப்பிடியெல்லாம் போகுது?” அழாத குறையாக கேட்டாள் துளசி.
“எனக்கு இதுதான் பிடிச்சிருக்கு, உன்னால போட முடியுமா, முடியாதா?”
“முடியாது!” அவளும் பிடிவாதமாக நின்றிருந்தாள்.
“இப்போ நீயா போடுறியா, இல்லை நான் போட்டு விடட்டுமா?” அவன் கோபமாக அவள் அருகில் வர சட்டென்று துளசி உள்ளே போய் விட்டாள்.
ஆதி புன்னகைத்து கொண்டான். அழகான கறுப்பு நிற லேஸ் ஆடை. ஆன்லைனில் பார்த்த போது சட்டென்று பிடித்துப்போக ஆர்டர் பண்ணி இருந்தான். துளசியின் போதாத காலம் அது இன்று காலையில்தான் வந்து சேர்ந்திருந்தது.
தலையைக் கையால் கோதியபடி அந்த மாலை நேரத்து கடற்கரைக் காற்றை ஆழ்ந்து சுவாசித்தான் ஆதி. மனம் முழுவதும் அந்த ஆடையில் பெண் எப்படி இருப்பாள் என்ற கற்பனையே ஓடியது.
திரையை விலக்கும் ஓசை கேட்கவும் கணமும் தாமதிக்காமல் திரும்பினான் ஆத்ரேயன். திரையை விலக்கியவள் கதவைத் திறக்கவில்லை. அறையின் விளக்கையும் அணைத்திருந்தாள்.
மங்கலான நிலா வெளிச்சத்தில் அவள் எழிலுரு ஆதிக்கு போதையூட்டியது. தேவதை ஒன்று வானிலிருந்து குதித்தது போல இருந்தது அவனுக்கு.
நிமிர்ந்தும் பார்க்கவில்லை அவள் அவனை. கண்ணாடி கதவிற்கு அப்பால் நிலம் பார்த்து நின்றிருந்தாள். அந்த அழகு அத்தனையும் அவனுக்கே சொந்தம் என்று நினைத்த மாத்திரத்தில் ஆதிக்கு பித்தம் தலைக்கேறியது.
கதவின் அருகே போனவன் இப்போது எதற்காகவும் அவளை வற்புறுத்தவில்லை. கண்களில் அவளை முழுதாக நிரப்பி கொண்டான்.
தன் ஒற்றைக் கையை நீட்டி அவன் அந்த கண்ணாடி கதவைத் தீண்ட… சட்டென திரையை இழுத்து விட்டாள் துளசி.
ஆதி இப்போதும் புன்னகைத்தான்!
இரு கைகள் தீண்டாத பெண்மையை – உன்
கண்கள் பந்தாடுதோ…