Jeevan Neeyamma–Epi 1

Jeevan Neeyamma–Epi 1
ஜீவன் நீயம்மா!
அத்தியாயம் 1
குளிர்கிறதே, தேநீர் வேண்டுமா என கேட்டால், உன் இதழ் தரும் தேன் நீர் கொடு என்பாள். யாரவள்? என் ஜீவனவள்!
மலேசியா
1985– அல்மினியா எஸ்டேட் (சிலாங்கூர்)
இருள் முற்றும் விலகாத காலைப் பொழுது அது. சாம்பிராணி வாசனை மூக்கைத் துளைக்க மெல்ல துயில் கலைந்தார் அழகர்சாமி. விழித்த நொடி அவர் கண்கள் தேடியது அவரது ஆசை மகளின் வதனத்தைத்தான். தாங்கள் படுத்திருந்த பாயிலிருந்து கொஞ்சம் தள்ளி இன்னொரு பாயில் தூங்கிக் கொண்டிருந்தாள் அவர் மகள் மீனாட்சியம்மன். மகளைப் பார்த்த நொடி கண்கள் பாசத்தில் மென்மையுற, அவளை அள்ளித் தங்கள் பாயில் படுக்க வைத்தார் அழகு. இல்லையென்றால் விழித்தெழுந்த நொடி பெரிதாய் பஞ்சாயத்து வைப்பாள் அந்த எட்டு வயது சின்னக் குட்டி.
“யம்மோ, ராத்திரி அப்பா பக்கத்துலத்தானே படுத்திருந்தேன்! காலையிலே ஏன் வேற மூலையில படுத்திருக்கேன்?” என சிணுங்கலாய் ஆரம்பித்து வைப்பாள் அன்றைய நாளை.
மனைவித் தன்னை செல்லமாய் முறைப்பதைப் பொருட்படுத்தாமல்,
“நீ தூக்கத்துல அப்படியே உருண்டுப் போயிட்டம்மா!” என சமாதானப்படுத்துவார் அழகு.
“நான் நடுவுலத்தானே படுத்தேன்! அப்புறம் எப்படி உங்க ரெண்டு பேரையும் மீறி உருண்டுப் போவேன்!” என புத்திசாலியாய் கேட்பவளுக்கு,
“ஸ்கோலுக்கு கெளம்பாம எழுந்ததுமே வாயடிச்சுட்டு நிக்காதே! போ போய் குளி!” என திட்டியபடியே தலையில் வலிக்காமல் ஒரு கொட்டு வைப்பார் பரமேஸ்வரி.
அதற்கே,
“யப்பா! வலிக்குதுப்பா, வலிக்குது!” என அழுது ஊரைக் கூட்டுபவளை அணைத்துக் கொள்வார் அழகு.
“ஈஸ்வரி! புள்ள மேல கையை வைக்காதன்னு எத்தனை தடவை சொல்றது? என் உசுரக் காப்பாத்திக் குடுத்த தெய்வம்டி என் மவ! நம்ம குலசாமி!” என மனைவியைக் கடிந்துக் கொள்பவர், மகளை அணைத்துக் கொஞ்சி சமாதானப் படுத்துவார்.
“யப்பா, அம்மாவை ஒரு கொட்டுக் கொட்டுப்பா! அப்போத்தான் எனக்கு வலி போகும்!” என தாயை ஓரக் கண்ணால் பார்த்தப்படியே வராத கண்ணீரைத் துடைப்பாள் மீனாட்சி.
முறைத்துப் பார்க்கும் மனைவியை,
“சும்மா, வெளையாட்டுக்கு ஒரு தட்டு தட்டிக்கறேன்டி ஈசு! பாவம்ல புள்ள, காலாங்காத்தாலே அழுதுட்டு நின்னா நல்லாவா இருக்கு” என மெல்லியக் குரலில் கண்களால் கெஞ்சியபடியே மனைவிக்கு ஒரு கொட்டு வைப்பார் அழகு.
அதன் பிறகே சின்னவளின் போலி அழுகை நிற்கும்.
“பங்கோன் பாகி (காலையில் எழுவோம்)
கோசோக் கீகி (பல் விளக்குவோம்)
ச்சூச்சி மூக்கா (முகத்தைக் கழுவுவோம்)
பக்காய் பாஜீ (உடை அணிவோம்)” என பள்ளியில் சொல்லிக் கொடுத்த மலாய் ரைமை சந்தோஷமாகப் பாடியபடியே குளிக்கப் போவாள் குட்டி.
பெற்றவர்கள் இருவரின் கண்களும் துள்ளிக் குதித்தபடி போகும் சின்னவளின் மேல் தான் நிலைத்திருக்கும்.
“பொட்டைப் புள்ளைக்கு இம்புட்டு செல்லம் குடுக்காதைய்யா! என்னைக்கு இருந்தாலும் நம்மள விட்டுட்டு அடுத்த வீட்டுக்குப் போக போறவ! ஆம்பளப் புள்ளய வரவுல வைக்கனும் பொட்டப் புள்ளைய செலவுல வைக்கனும்”
“இன்னும் பழைய பஞ்சாங்கமா இருக்காதேடி! என் மீனுக்குட்டிய படிக்க வைச்சு யூனிசிட்டி(யுனிவெர்சிட்டி) வரைக்கும் அனுப்புவேன் நான். அவ படிச்சு டீச்சரானதும் அவளுக்கேத்த வாத்தியாரா பார்த்துக் கட்டி வைச்சு அழகுப் பார்த்துட்டுத்தான் இந்த அழகு கடைசி மூச்சை விடுவான்” என கண்களில் கனவு மின்ன சொல்வார் அழகு.
“ம்கும்! ஆசையிருக்காம் ஆனை மேல அம்பாரி போக, அம்சம் இருக்காம் கழுதை மேய்க்க! போயா போயா, போய் வேலையப் பாரு” என தோளில் முகவாய் கட்டையை இடித்தப்படி நொடித்துக் கொள்வார் பரமேஸ்வரி.
“மொல்ல, மொல்ல! தாவாங்கட்டை சுளிக்கிக்கப் போகுது” என மனைவியை நக்கலடிப்பார் அழகு.
அழகு அந்த எஸ்டேட்டில் லாரி ஓட்டும் பணி செய்பவர். செம்பனை காடுகளுக்கும், ரப்பர் தோட்டங்களுக்கும் பணியாட்களை லாரியில் ஏற்றி இறக்குவது, செம்பனைத் தார்களை பேக்டரிக்கு ஏற்றி செல்வது என கங்காணி(சூப்பர்வைசர்) கட்டளையிடுவது போல இவர் வேலைகள் அமையும். மீனாட்சி பூமியில் உதிக்கப் போகும் நாளன்றும் அப்படித்தான் செம்பனைக் காட்டுக்கு ஆட்களை இறக்க லாரியில் ஏறி அமர்ந்து விட்டார் அழகு. அந்த நேரம் ஓடி வந்த பக்கத்து வீட்டுப் பொடியன், ஈஸ்வரிக்கு இடுப்பு வலி வந்து விட்டதாக சொல்ல, தனது வேலையை இன்னொரு ட்ரைவரிடம் கொடுத்து விட்டு மனைவியை கவனிக்க ஓடினார் இவர்.
எஸ்டேட்டுக்கு என இருக்கும் சுகாதார மையத்துக்கு மனைவியை அழைத்துப் போன இரண்டு மணி நேரத்தில் சுகப் பிரசவத்தில் பிறந்தாள் மீனாட்சி அம்மன். பெண் குழந்தை என கேள்விப்பட்டதும் முதலில் மனம் சுணங்கித்தான் போனார் அழகு. அந்தக் காலக்கட்டத்தில் சீர் செனத்தி, வரதட்சணை, நகை நட்டு என பெண்ணை கரை சேர்ப்பதற்குள் மூச்சு முட்டிப் போய்விடும் பெற்றவர்களுக்கு. பெருமூச்சுடன் அந்தக் குட்டி சுகாதார மையத்தின் வாசலில் நின்றவரை நோக்கி ஓடி வந்தார் அவரின் நண்பர்.
“எலே அழகு, ஒனக்கு ஆயுசு நூறு டோய்! இன்னிக்கு உன்னோட லாரி, எட்டாம் டிவிஷன்ல(செம்பனை மரங்கள் நடப்பட்டிருக்கும் இடங்களை டிவிஷன் வாரியாக பிரிப்பார்கள்) போய் கிட்டு இருக்கறப்ப டயர் வெடிச்சு மரத்துல மோதி கவுந்துடுச்சாம். ஒனக்குப் பதிலா ஓட்டிட்டுப் போன நம்ம மாடனுக்கு தலையில அடிப்பட்டு அந்த இடத்துலயே உசுர் போச்சாம். லாரில போன எல்லோருக்கும் சரியான அடியாம்டா! அந்த மீனாட்சி அம்மன் தான் ஒன் உசுர காப்பாத்திருக்கா டோய்!” என செய்தி சொல்லி விட்டு விரைய, உள்ளே மகளின் அழுக்குரல் கேட்டது.
அப்படியே சிலிர்த்துப் போய் விட்டது அழகுக்கு. அந்த அம்மனே தனக்கு மகவாய் வந்து உயிரைக் காப்பாற்றிக் கொடுத்ததாய் முழு மனதாய் நம்பினார் அவர். அதனால்தான் மகளுக்கு மீனாட்சி அம்மன் என பெயரை வைத்து அவள் மேல் உயிரையும் வைத்திருந்தார் அழகர்சாமி.
மகளைத் தங்கள் பாயில் படுக்க வைத்துவிட்டு, எழுந்துக் கொண்டார் அழகு. அறையில் இருந்து வெளியே வந்தவர், எந்த சத்தமும் மகளை எழுப்பி விடாமல் இருக்க கதவை சாற்றி வைத்தார்.
எஸ்டேட் நிர்வாகம் கொடுத்த அந்தப் பலகை வீட்டில் ஒரே ஒரு அறைதான் இருக்கும். அந்த அறையில் இவரும் மனைவியும் மகளோடு படுத்துக் கொள்வார்கள். கொஞ்சம் பெரிதாய் இருக்கும் வரவேற்பறையில் அவரின் ஆத்தாவும், அழகு பெற்ற மற்ற இரண்டு ஆண் பிள்ளைகளும் பாய் விரித்துப் படுத்துக் கொள்வார்கள்.
அடிக்கடி அந்த ஊரில் வெள்ளம் வந்து பெரும் சேதாரத்தை ஏற்படுத்துவதால், நான்கு பக்கமும் பெரிய தூண் வைத்து வீடெல்லாம் மேலே ஏற்றிக் கட்டப்பட்டிருக்கும். ஐந்து படிகள் ஏறி உள்ளே நுழைந்தால், வரவேற்பறை வரும். அதன் இடது புறத்தில் ஒரு ரூம் இருக்கும். வரவேற்பறையைத் கடந்து ஐந்து படிகள் கீழே இறங்கினால், சாப்பிடும் இடம் வரும். சின்னதாய் இருட்டாய் இருக்கும் அந்த இடத்தின் இடது புறம் கதவைத் தாண்டி வெளியே போனால், அங்குதான் சமையல் கூடம். இன்னும் விறகு அடுப்புத்தான் அங்கே. கரி அடுப்பு இருந்தாலும் மிக அவசியம் என்றால் மட்டும்தான் அந்த அடுப்பைப் பயன்படுத்துவார்கள்.
குனிந்து விறகுகளை நன்றாக உள்ளே தள்ளிவிட்டு, ஊதாங்குழல் வைத்து நன்றாக ஊதி நெருப்பை வேகமாக எரிய விட்டுக் கொண்டிருந்த பரமேஸ்வரியின் இடையை இரு வலிய கரங்கள் அணைத்துக் கொண்டன. எப்பொழுதும் நடக்கும் கூத்துதான் இது என்பதால், பின்னால் திரும்பி தன் கணவரை முறைத்தார் ஈஸ்வரி.
“நேரங்கெட்ட நேரத்துல தான் இந்த மைனருக்கு பொண்டாட்டிய கொஞ்ச வரும்! போய் ஊத்த வாயக் கழுவிட்டு காப்பித்தண்ணி குடிக்க வாங்க” என தள்ளி விட்டார் கணவரை.
“எப்பப் பாரு மகளையே கொஞ்சுங்கன்னு திட்ட வேண்டியது! சரி போனா போகுது நம்ம பொண்டாட்டியாச்சேன்னு கொஞ்ச வந்தா தள்ளி விட வேண்டியது! போடி போக்கத்தவளே” என செல்லமாக மனைவியைக் கடிந்துக் கொண்டவர், அவர் கொடுத்தப் பல்பொடியை வாங்கிக் கொண்டு வீட்டுக்கு வெளியே போனார்.
குளிக்க, துவைக்க வீட்டுக்குள்ளேயே பெரிய தொட்டி வைத்த குளியலறை இருந்தாலும் கழிவறைக்கு இன்னும் வெளியேத்தான் செல்ல வேண்டும். எட்டு வீடுகளுக்கு நான்கு என கழிவறை பொதுவாக கட்டி வைத்திருப்பார்கள். இவர் காலை நான்குக்கே எழுந்து வந்துவிடுவதால் அந்த நேரத்தில் யாரும் இருக்க மாட்டார்கள். மற்ற நேரமென்றால் அடிபிடி சண்டையே நடக்கும் அவ்விடத்தில். வயிற்றை அலசுவதால் அங்கே வருபவர்கள், ஆர அமர அரசியல், சினிமா, யார் புருஷன் யாரோடு கள்ளத் தொடர்பில் இருக்கிறான், யார் பொண்டாட்டி யாரோடு ஓடிப் போனாள் என மொத்தத்தையும் அலசி ஆராய்வார்கள்.
வீட்டுக்கு வந்து ஜிலுஜிலுவென இருந்த தொட்டித் தண்ணீரில் இருந்து நீரை வாரி உடம்பில் ஊற்றிக் கொண்டார் அழகு. குளித்துக் கொண்டிருக்கும் போதே கதவின் மேல் அவர் உடுத்திக் கொள்ள வேண்டிய உடைகளை தொங்க விட்டார் ஈஸ்வரி. அதை உடுத்திக் கொண்டு வெளியே வந்தவரின் நாசியை காபியின் மணம் சுகமாய் நிரடியது.
சமையலறையின் ஒரு மூலையில் கிடந்த மணக்கட்டையை எடுத்து வந்து நடுவே போட்டு அமர்ந்தார் அழகு. டம்ளரில் கருப்பட்டி போட்டு கலந்த கருப்புக் காபியை ஊற்றிக் கொண்டு வந்து கணவரின் கையில் கொடுத்தார் ஈஸ்வரி. அவரும் ஒரு டம்ளரை எடுத்துக் கொண்டு கணவர் அருகிலேயே சம்மணமிட்டு அமர்ந்தார். அந்த ஏகாந்த வேளை, கணவன் மனைவி இருவருக்கும் மட்டுமே உரியது.
“ஆ காட்டுப் புள்ள!” என தனது டம்ளரில் இருந்த காபியை ஊதி, மனைவியின் வாயருகே கொண்டுப் போனார் அழகு.
மறுக்காமல் ஈஸ்வரியும் அவர் கொடுத்த காபியைப் பருகினார். சற்று நேரம் ஒருவர் அருகாமையை மற்றவர் அனுபவித்தப்படி காபியை அருந்தினார்கள் கணவன் மனைவி இருவரும்.
“ஏய்யா!(என்னங்க, ஏங்க என்பது போல) முருகனுக்கு என்னமோ நோட்டு புஸ்தகம் வாங்கனுமாம்! ஒரு வாரமா கேட்டுக்கிட்டுக் கிடக்கறான்”
முருகன் இவர்களின் முதல் வாரிசு. வயது பன்னிரெண்டு ஆகிறது. இரண்டாவது பையனின் பெயர் ஆறுமுகம். அவனுக்கு பத்து நடக்கிறது.
“இன்னிக்கு அட்வான்சு போடுவாங்கடி! சாயங்காலம் டவுனுக்குக் கூட்டிட்டுப் போறேன். கெளம்பி நிக்க சொல்லு முருகன! என் கன்னுக் குட்டி பென்சிலு, ரப்பரு, ரூலரு எல்லாம் வச்சிருக்காளா இல்ல வாங்கனுமா?”
“கன்னுக்குட்டியாம் கன்னுக்குட்டி! கன்னுக்குட்டி பேப்பரை திங்கற மாதிரி இவ பென்சிலு, ரப்பரு எல்லாத்தையும் கடிச்சுத் திங்கறா! சுண்டு விரலு அளவுக்கு ஒரு பென்சிலும், ஆட்டுப் புளுக்கை அளவுக்கு ஒரு ரப்பரும் வச்சிருக்காய்யா உன் அரும மவ! எனக்கு வர ஆத்திரத்துக்கு, வாயிலயே நாலு போட்டுருவேன்! அவள அடிச்சிட்டு உன் கிட்ட பேச்சுக் கேக்க முடியாதுன்னு தான் பேசாம இருக்கேன்” என நொடித்துக் கொண்டார் ஈஸ்வரி.
மனைவி சொன்ன உவமானத்தில் சிரிப்புப் பொத்துக் கொண்டு வந்தது அழகுவுக்கு. வரிசைப் பற்கள் மின்ன சிரித்துக் கொண்டிருக்கும் தன் கணவரையே எப்பொழுதும் போல ஆசையாகப் பார்த்திருந்தார் ஈஸ்வரி.
“செய்யற வேலையை விட்டுப்புட்டு செனையாட்டுக்கு மயிறு புடுங்கன கதையா, தலைக்கு மேல சோலி கழுதை கிடக்க ஒம் புருஷன் வாயைப் பார்த்துட்டு நிக்கறவ! போத்தா போய் வேலையப் பாரு!” என்றபடியே நரைத்திருந்த தனது கூந்தலை அள்ளி முடிந்தப்படி வந்தார் ராக்கம்மா, நம் அழகுவின் அம்மா.
கணவனும் மனைவியும் சட்டென தள்ளி அமர்ந்தனர். வேகமாக தனது காபியை வாயில் சரித்துக் கொண்டு எழுந்தார் ஈஸ்வரி. அடுப்பு ஓரத்தில் வைத்திருக்கும் கரியைக் கொண்டு வந்து தனது மாமியாரிடம் கொடுத்தவர், அமைதியாய் அவர் முகம் பார்த்திருந்தார்.
மருமகள் கொடுத்தக் கரியை வாங்கி பல்லைத் தேய்த்து வாயைக் கொப்புளித்த ராக்கு,
“ஏப்பா அழகு! காபி தோட்டத்துல களை எடுக்க வரேன்னு சொன்னியே, இன்னிக்கு தோது படுமா?” என மகனிடம் கேட்டார்.
அரசாங்கம் ஒதுக்கிக் கொடுத்த ரிசாப்(புறம்போக்கு) நிலத்தில், இவர்கள் காபி மரங்களை பயிரிட்டிருந்தனர். அழகு எஸ்டேட்டில் வேலைப் பார்க்க, மாமியாரும் மருமகளும் காபி தோட்டத்தில் வியர்வை சிந்த உழைத்தனர். அதில் வந்த வருமானத்தில், இரண்டு கறவை மாடுகளும், மூன்று ஆடுகளும், சில பல கோழிகளும் இவர்களுக்கு சொந்தமாய் இருந்தன.
“ஆத்தா, நாலு மணிக்கு எஸ்டேட்டு வேலை முடிஞ்சுடும்! முருகன டவுனுக்குக் கூட்டிட்டுப் போகனுமாம் புக்கு வாங்க! கூட்டிட்டுப் போகவா இல்ல களை எடுக்க வரவா?” என கேட்டார் தன் அம்மாவிடம்.
இதுதான் அழகு! மனைவியிடம் கூட்டி செல்கிறேன் என்றவர், அம்மாவிடம் சம்மதம் கேட்டு நின்றார். ஈஸ்வரியைத் தங்கமாய் தாங்கினாலும், அம்மாவென வந்து விட்டால் தாய்க்குப் பின் தான் தாரம் எனும் தாரக மந்திரத்தைத் தவறாமல் கடைப்பிடிப்பார் அழகு. ஈஸ்வரியும் கணவர் மனம் அறிந்து மாமியாருக்கு அடங்கிப் போய்விடுவார்.
“பையன் படிப்புத்தான்ப்பு முக்கியம்! நீ டவுனுக்குப் போற வேலையப் பாரு! அப்படியே ஆசாங்(சீனர் பெயர்) கடையிலே நல்ல பாக்காப் பார்த்து ஒரு கட்டியும்(கிலோ போல அளவுகோள்), பொம்பளைப் படம் போட்ட பொயலையும்(புகையிலை) வாங்கிட்டு வந்துடு ராசா!” என்றவர் மருமகளைப் பார்த்து,
“ஏத்தா இன்னிக்கு மத்தியான சமையலுக்கு மாசி கருவாடு, மொச்சைக் கொட்டை, கத்திரிக்கா எல்லாம் போட்டு கொழம்பு வச்சிடு. மொச்சைக் கொட்டையை கொஞ்சம் உண்டுன்னு போடு! புள்ளைங்களுக்கு நல்லா காத்துப் போகும்! எனக்கு அப்படியே கொஞ்சம் களி கிண்டிடு!” என அன்று சமைக்க வேண்டியதை சொன்னவரின் முன்னே கருப்பு காபியை நீட்டினார் ஈஸ்வரி.
பல் படாமல் அதை வாயில் ஊற்றிக் கொண்ட ராக்கு, உள்ளே பேரப் பிள்ளைகளை எழுப்பி விடப் போனார். அழகு ஆடு மாடுகளை கவனித்து விட்டு வேலைக்குக் கிளம்பிப் போனதும், பிள்ளைகள் கிளம்பி பசியாறிவிட்டு அந்த எஸ்டேட்டிலேயே இருக்கும் தமிழ் பள்ளிக்குப் போவார்கள். மாமியாரும் மருமகளும் சாப்பாட்டுக் கூடையைத் தூக்கிக் கொண்டு பொடி நடையாக காபி தோட்டத்துக்கு வேலையைப் பார்க்கக் கிளம்புவார்கள்.
பிள்ளைகள் மூவரும் பள்ளி முடிந்து நேராக காபி தோட்டத்துக்கே வந்து விடுவார்கள். அங்கேயே அவர்கள் தோண்டி வைத்திருந்த குளத்தில் நீர் சேந்தி கை கால் முகம் கழுவி, மழை வெயிலுக்கு ஒதுங்கிக் கொள்ள, அடித்து வைத்திருந்த கூடாரத்தில் கூட்டமாய் அமர்ந்து உணவு உண்டு எல்லோரும் அந்த காபி தோட்டத்தில் வேலைப் பார்ப்பார்கள்.
சின்னவள் மட்டும் எல்லோருக்கும் டிமிக்கி கொடுத்துவிட்டு அந்த காபி மரங்களின் ஊடே ஓடி விளையாடுவாள். சிவப்பாய் பழுத்திருக்கும் காபி பழத்தைப் பறித்து தோல் உடைத்து சப்பி சப்பி சாப்பிடுவாள். விளையாடி களைத்துப் போனதும், கூடாரத்தில் அவளுக்கென வைத்திருக்கும் பழைய துணிகளை ஒன்றாய் கட்டி ஈஸ்வரி செய்து வைத்திருக்கும் தலையணையை கட்டிக் கொண்டு உறங்கிப் போவாள்.
மாலையானதும் தன் சைக்கிளில் காபி தோட்டத்துக்கு வருவார் அழகு. மகளைப் பின் சீட்டில் ஏற்றிக் கொண்டு அவர் மெல்ல சைக்கிள் மிதிக்க, மற்றவர்கள் பின்னாலேயே நடந்து வருவார்கள். திடலை நெருங்கியதும் பையன்கள் இருவரும் விளையாட போய் விடுவார்கள்.
அதோடு ஈஸ்வரிக்கு பரபரவென வேலை ஓடும். இரவு உணவு தயாரிப்பதில் இவர் இறங்கினால், அழகு மாட்டு கொட்டகைக்குப் போய் வருவார். இவர்கள் வீட்டில் இருந்து சற்று தொலைவில் இருந்தது அது. பாட்டியும் பேத்தியும் கோழிகளைப் பிடித்து அதற்காகவென அழகு செய்து வைத்திருந்த மர வீட்டில் அடைத்து வைப்பார்கள். கோழியின் எச்சத்தை மிதித்து விடாமல் இருக்க பாலே டான்சரைப் போல பாதத்தைத் தூக்கி விரல்களால் நடப்பாள் சின்னவள். ராக்குவுக்கு சிரிப்பாய் வரும்.
“ஏய் சின்னக்குட்டி!”
“யெஸ் அப்பத்தா!”
“கோழி கறி திங்கறப்போ மட்டும் ருசிக்குது! கோழிப்பீன்னா கசக்குதோ” என்பவர், அதை கொஞ்சமாய் எடுத்து அவள் கையில் தடவி விட்டு விடுவார்.
“யம்மா!!!!!!” என ஓலமிட்டப்படியே வீட்டுக்கு ஓடுவாள் மீனாட்சி. அது என்னவோ பேத்தியை வம்பிழுப்பதில் அப்படி ஒரு சுகம் ராக்குவுக்கு.
அது என்னவோ பாட்டிக்கும் பேத்திக்கும் ஏழாம் பொருத்தம். அம்மாவிடம் அடங்கிப் போய் விடும் அழகு கூட மகள் விஷயத்தில் அம்மாவை எதிர்த்துக் கொள்வார்.
“இந்த ராக்கம்மாவ கோயிலுக்குக் நேர்ந்து விட்டுடலாம்ப்பா! பக்கத்து வீட்டு பாட்டிய வேணும்னா நீ ஆத்தாவா எடுத்துக்கோ!” என அடிக்கடி அழகுவுக்கு அட்வைஸ் செய்வாள் மீனாட்சி அம்மன்.
“சின்ன சிறுக்கிக்கு வாய் கொழுப்பப் பார்த்தியாடா! கால இழுத்துப் புடிச்சு சூடு வச்சா, வாயி தன்னாலயே அடங்கிடும்” என கோபப்படுவார் ராக்கம்மா.
சூடு வைப்பேன் என சூளுரைக்கும் அதே வாய்த்தான், இரவில் கள்ளைக் குடித்து விட்டு பேத்தியைக் கொஞ்சோ கொஞ்சென கொஞ்சும்.
“என் அழகு பெத்த அழகு ராசாத்தி! மீனாட்சி அம்மன் சிலை கணக்கா எம்புட்டு அழகு என் பேத்தி! எம்பரம்பரையிலே இல்லாத சுருட்டை முடி, மீனு மாதிரி கண்ணு, குட்டி மூக்கு, மஞ்சக் கிழங்காட்டம் நெறம், ஊரு கண்ணே எம் பேத்தி மேலத்தான். ஏத்தா ஈசு, எம்பேத்திய சுத்திப் போடுத்தா!” என பேத்தியை மடியில் இருத்திக் கொண்டு அலப்பறை செய்வார்.
சோற்றில் ரசத்தையும், சாம்பாரையும் ஊற்றி பிசை பிசையென பிசைந்து,
“என் செல்லக்குட்டில்ல, சாப்பிடுத்தா!” என அழிச்சாட்டியம் செய்வார் ராக்கு.
அவர் பிசைந்த சோற்றைப் பார்க்கவே உமட்டும் சின்னவளுக்கு.
“வேணா விடு அப்பத்தா!” என கதறுபவளை இறுக்கிப் பிடித்து சோற்றை வாயில் திணிப்பார்.
“இது அப்பத்தா வாயி! இது ஒங்கொப்பன் வாயி! இது ஒங்கொம்மா வாயி” என வீட்டில் உள்ளவர்கள் அனைவரையும் சொல்லி ஊட்டுவார்.
ராக்குவின் கணவர் உயிருடன் இருந்த போது பழக்கி விட்ட கள் குடிக்கும் பழக்கம் இன்னும் தொடர்கிறது. உடம்பு வலிக்கென குடிக்க ஆரம்பித்து, அது இல்லாமல் முடியாது என ஆகிவிட்டது ராக்குவுக்கு. பழைய கதைகளைப் பேசி, போய் சேர்ந்து விட்ட கணவரை நினைத்து ஒரு மூச்சு அழுது, மருமகளிடம்
“கொஞ்சம் கள்ளு குடித்தா, உடம்பு வலிலாம் பஞ்சா பறந்துடும்” என ஆலோசனை வழங்கி, தன் ரவுசை முடித்துக் கொண்டு ராக்கு படுத்ததும் மற்றவர்களும் தூங்கிப் போவார்கள்.
இது ஒரு அழகான குடும்பம்.. அழகுவின் அன்பான குடும்பம்.
(ஜீவன் துடிக்கும்…)
(வணக்கம் டியர்ஸ்,
இந்தக் கதையின் வார்த்தை பிரயோகம் அந்த காலக்கட்டத்துல நான் கேட்டப்படியே குடுத்துருக்கேன்! எதையும் சென்சர் பண்ணல! அப்படி சென்சர் செஞ்சா படிக்க லைவ்லியா இருக்காது! வாரத்துக்கு ரெண்டு எபி குடுக்க முயற்சி செய்யறேன். என் கூடவே இந்த இமோஷனல் ரோலர் கோஸ்டர்ல பயணிக்க விரும்பறவங்க, வாங்க டைம் மிஷின்ல ஏறி போகலாம் 1985க்கு)