pm9

pm9

 

ஃபீனிக்ஸ் – 9

 

இவன் அவனல்ல!

அவன் ஒப்புக் கொள்ளாமலேயே தீர்மானம் நிறைவேற்றியிருந்தேன்.

என் ஷ்யாமல்ல இவன்!

கடந்திருந்த நாள்களில் இவனைக் கவனித்துப் பார்த்திராததால் வேறுபாடுகள் தெரியவில்லை.

மேனரிசம் காட்டிக் கொடுத்துவிடுமே!

அதுதான் வெளிச்சம் போட்டுக் காட்டியிருந்தது.

அதற்குமேல் அவனை எதிர்கொள்ளவேயில்லை.  அவனும் எனைத் தொந்திரவு செய்யவில்லை.

படுக்கைக்குச் செல்லாமல், அறையிலிருந்த சோபாவில் சென்றமர்ந்தவளை நோக்கி, “என்ன செய்யப் போற?”, என்ற ஷ்ரவந்தின் அலட்சிய கேள்வியில்

“எனக்கு தோணுறதைச் செய்வேன்”, என ஆணித்தரமான பதிலை கூறினேன்.

தோளைக் குலுக்கியவன், “உன்னோட விருப்பம்”, என்றவாறு, யோசனையோடு எனை எதிர்பார்க்காமல் படுக்கைக்கு சென்றிருந்தான்.

படுத்திருந்தவனிடம், “எதுக்கு என்னை ஏமாத்துனீங்க?”

“யாரு ஏமாத்துனா?”

“உங்கம்மாதான்!”

“என்ன ஏமாத்துனாங்க?”

‘அதற்குமேல் பேசினால், ஷ்யாமைப் பற்றிக் கூற வேண்டுமே! எதுவும் என்னைப் பற்றித் தெரியாதவனுக்கு நானே துப்புக் கொடுத்து மாட்டிக் கொண்டால்… நீ ஷ்ரவந்தா என்று கேட்டுவிடுவோமா? எனத் தோன்றியதையும் கேளாமல் ஒத்தி வைத்துவிட்டேன்’

அடுத்து வந்த நாளில் அவனோடு உடன் செல்ல மறுத்துவிட்டேன்.

காரணம் கேட்டதற்கு மௌனத்தையே பதிலாக்கியிருந்தேன்.

ஷ்ரவந்தும் எந்த ரியாக்சனையும் முகத்தில் காண்பிக்காமல் எழுந்து அலுவலகத்திற்கு கிளம்பிவிட்டான்.

வழமைபோல அலுவலகம் சென்று வரத் துவங்கிவிட்டேன்.

கேள்விகள் தொடர்ந்தாலும், பதில் கூறாமல் தவிர்த்தேன்.

‘நான் நினைத்தது ஷ்யாமை.  அதனால் இதுநாள் வரை திருமணத்தைத் தவிர்த்தேன்.  தற்போது ஷ்யாம் என்ற பெயரில் வந்திருப்பது ஷ்ரவந்த்.  அதனால் அவனை மறுக்கிறேன்’, என நான் கூறினால் வீட்டில் பிரளயமே உண்டாகும் என்பதை அறிவேன்.

‘அவர்களின் வீட்டில் அனைவருமே, ஷ்ரவந்தை ஷ்யாம் என்றே அழைக்கிறார்கள்,  ஏதோ நடக்கிறது.  ஆனால் எதற்கு? புரியவில்லை எனக்கு.’

‘இதுவரை தெரியாமல் இருந்தது அப்படியே இருக்கட்டும்.  தெரிந்தால் அதன்பின் இன்னும் வார்த்தைச் சாடல்கள் கூடிப்போகும்’ என தவிர்த்துவிட்டேன்.

‘என்னைக் கல்யாணம் பண்ணிக்க சம்மதம்னு சொல்லிட்டு, இப்ப ஏன் எங்கூட வரமாட்டிங்குதுன்னு எனக்குத் தெரியலை’, என்றதோடு ஷ்ரவந்த் ஒதுங்கியிருந்தான்.

அதற்குமேல் அவனிடம் என்ன கேட்க இயலும்.

ஷ்யாமின் இடத்தை அப்படியே ஏற்றுக் கொண்டிருந்தான் ஷ்ரவந்த், எனது தாயிடம்.

அவருக்கு எந்தச் சந்தேகமும் வரவில்லை.

நானாகவே சென்று ஷ்யாமல்ல இவன் என்று துவங்கினால், வம்பு வாண்டடாக வந்துவிடும் என்பதும் அறிவுக்குப் புரிய மூச்சு விடவில்லை, ஷ்ரவந்தைப் பற்றி.

பையன் வீட்டுப் பெரியவர்கள் வந்து எங்கள் வீட்டுப் பெரியவர்களோடு பேசினாலும், நான் எதையும் கூறாததால் எந்த முடிவுக்கும் வர இயலாமல் இருக்கிறார்கள்.

வீடு திரும்பும் வழியில், வந்து என்னை மறைத்தவரை திடுக்கிடலோடு எதிர்கொண்டேன்.

“ஏம்மா, எம்பையங்கூட வர மாட்டேனு சொல்லிட்டே!”, ஷ்யாமின் தாய்

“இல்லை…”, என பதில் சொல்ல தடுமாறி நான் இழுக்க…

“எனக்குத் தெரியும்மா!”, என மாலை வேளையில் சேலைத் தலைப்பால் கண்ணிலிருந்து வழியும் நீரைத் தொடைத்தவாறு கூற

மீண்டும் திடுக்கிடலோடு நோக்கி, “எ..ன்..ன.. தெ..ரி..யு..ம்?”, வினவினேன்.

“எல்லாம் ஷ்யாம் சொல்லிட்டான்!”, என்றதுமே

“எப்ப?”

“மலேசியா போறதுக்கு முன்னயே”

‘பூமி நழுவாதா அது என்னை எடுத்துக் கொண்டால் நன்றாக இருக்குமே!’ என மனம் வாதனை கொண்டது.

“சாரி அத்தம்மா!”, என்னை அறியாமல் தலை குனிந்து மன்னிப்பு கோரினேன்.

“எதுக்கு சாரி நீ சொல்ற?”, துளைத்தது கேள்வி மட்டுமல்ல, பார்வையுந்தான்!

“பெரியவங்க நீங்க வந்து பொண்ணு கேட்டப்பபோ, நீங்க சொன்னதை நம்பித்தான் கல்யாணத்துக்கு சம்மதிச்சேன்!”, என என்னிலையை எடுத்துக் கூறினேன்.

“வந்து கேக்கறவங்களையெல்லாம் எதாவது சொல்லி தட்டிக் கழிக்கிறியேன்னுதான் ரொம்ப நாளா பாத்துட்டே இருந்துட்டுத்தான் சின்னவனுக்கு கேட்டேன்!”, எனது வாயைக் கிளறும் எண்ணத்தில் ஷ்யாமின் தாய்.

“இது இல்லைனா அதுன்னு மாத்திக்க… சோப்பில்லை!  இது எம்மனசு, உணர்வு சம்பந்தப்பட்டது. அதோட இது நடிப்பு கிடையாது, வாழ்க்கை!”, என அந்நேரத்திலும் கடுமையாகக் கூறிவிட்டேன்.

“என்னமோ இந்தக் காலத்துப் புள்ளைங்க பாயிண்டு பாயிண்டா சொல்றீங்க! கழுத்த நீட்டுன்னு பெரியவுக சொன்னா என்ன ஏதுன்னு கேக்காம நீட்டுன காலம் போயி இப்ப என்னன்மோ சொல்றீங்க”, என்றவர்

“அந்தப் பையலும் இப்டி நீ சொல்ற மாதிரி எதையாது சொல்லிக்கிட்டு உம்மேல ஆரம்பத்தில அம்புட்டு ஆசை வச்சிருந்தான்.  அவனோட கடசிக் காரியத்துக்குகூட நீ வரலைன்னதும், இவன் மட்டுந்தான் உம்பின்னாடி தெரிஞ்சிருக்கான்னு பேசாம அமைதியா இருந்தேன்.  நாளு போகப்போக உன்னை கவனிச்சப்பதான் அப்டியில்லைனு புரிஞ்சது.  ஏதோ என்னால ஒரு பொம்பிளைப் புள்ளையோட வாழ்க்கையில நல்லது பண்ணுவம்னு நெனச்சுத்தான் கல்யாணமே வேணானு தெரிஞ்ச சின்னவங்கிட்ட பேசுனேன்.  ஆரம்பத்தில யோசிச்சான்.  அப்புறம் பொண்ணு நீதான்னு எடுத்துச் சொன்னதும் சரினான்.  அதான்  அவனுக்கு வந்து கேட்டுட்டேன்மா.  என்னை மன்னிச்சிரு.  ஆனா ரெண்டு பேரும் இப்படி தனித்தனியா எதிர்திசையில பிரிஞ்சு இருக்கவா இம்புட்டுக் கஷ்டப்பட்டு கல்யாணம் பண்ணோம்…”, என இழுத்தவர்

“ஒன்னே ஒன்னு நான் சொல்லவா?, என என்னிடம் அனுமதி கேட்க

தலையைக் குனிந்தபடியே ஆமோதித்தேன்.

“இப்படியே தனிமரமா இன்னும் எவ்வளவு காலத்துக்கு இருப்ப நீயி!  போனவன் போயிச் சேந்துட்டான்.  அவனை நினைச்சிட்டு உன்னோட வாழ்க்கைய பட்டமரமா ஆக்கிக்கிட்டா அது எங்களுக்குத்தான் பாவம். 

நீ மனச மாத்திக்க.  உனக்கு சின்னவனைப் பிடிக்கலைன்னாலும் நீ வேற வர்ற மாப்பிள்ளையை பாத்து கல்யாணம் பண்ணிக்க!”, எனக் கெஞ்சலோடு கூற

“உங்களுக்கு கல்யாணங்கறது அவ்வளவு சாதாரணமா போயிருச்சா? இல்லை இது பொம்மைக் கல்யாணமா? இது இல்லைனா வேற ஒன்னுன்னு மாத்திட்டேபோக பொருள் இல்லை கல்யாணம்.  இது மனசு, பண்பாடு எல்லாம் சம்பந்தப்பட்டது. வேற என்னன்னாலும் சொல்லுங்க. கேட்டுக்கறேன். ஆனா கல்யாணம் அப்டிங்கற விசயத்துல யாரோட ஒப்பீனியனும் இனி எனக்கு வேணாம்.  எனக்கு அவரோட நினைப்போட கடைசிவரை வாழ முடியும்னு நம்பிக்கை இருக்கு!”

அதற்குமேல் பேச எதுவும் இல்லை எனும் ரீதியில், “நான் கிளம்பறேன்!”, அவ்விடத்தை விட்டு நகர்ந்திருந்தேன்.

சிதம்பர ரகசியமாக நான் நினைத்தது அவ்வாறு அல்ல என்பதை ஏற்றுக் கொள்ளவே எனக்குச் சங்கடமாக இருந்தது.

ஷ்யாமைப் பற்றி கேளாமலேயே அவர்களாகவே வந்து பேசியது இப்போது உறுத்தியது.

என்னை விரும்பியதை அறிந்து வந்து பெண் கேட்டிருக்கிறார்கள்.  அதுவும் விசயத்தை எப்படிக் கூறினால் நான் சம்மதிப்பேன் என யூகித்து, அதற்கேற்றாற்போல வந்து பேசியிருக்கிறார்கள்.

எதையும் தீர விசாரிக்காமல் சம்மதித்தது, எனது தவறு.

அப்போதே அவனை அந்த அரைவேக்காட்டைச் சந்தித்திருந்தால் விசயம் அறிந்திருக்கலாம்.

இனி அவர்களை எதிர்கொள்ளும்போதெல்லாம் சங்கடமாக இருக்குமே என்பதோடு, ஷ்ரவந்தை தவிர்க்க வேண்டும் என்கிற எண்ணமும் வர அன்று உறக்கமின்றித் தவிக்க நேரிட்டது.

அடுத்தடுத்தும் என்னிடம் பேச முயன்ற பங்கஜம் அத்தையைத் தவிர்த்தேன்.

எத்துனை அவஸ்தைகள்!

இருந்தபோதும் அவஸ்தை! இல்லாதபோதும் அவஸ்தை!

அடுத்தநாள், அலுவலகம் சென்றதும், மாற்றுப் பணி, அல்லது இடப்பெயர்வு ஏதேனும் ஒன்றிற்கு எங்களது அலுவலகத்தில் வாய்ப்பு இருக்கிறதா என்பதை அறிந்து கொள்ள முயன்றேன்.

சில நாள்களில், சற்று முயற்சித்து இடப்பெயர்வு மூலம் வேறு ஊருக்கு மாற்றல் வாங்கிக்கொண்டு கிளம்பும்போது, “ம்மா, ஹாஸ்டல்ல தங்கிக்குவேன்.  இதுக்காக நீங்க எதுக்கு அங்க வந்திட்டு, மாசம் ஒரு தடவை இங்க வந்துட்டுப் போறேன்”

“என்னது, மாசம் ஒரு தடவையா? இரண்டு மணி நேரந்தான பஸ்ல வர?  வாரா வாரம் வரதானா நீ ஹாஸ்டல்ல இரு.  இல்லைனா நாங்களும் அங்கேயே வீடு பாத்துட்டு வந்திரோம்”, என எனது தாய் உறுதியாகக் கூற

தாயின் முடிவில் பதறி, “சரிம்மா.  வாரவாரம் வந்திட்டுப் போறேன்”, என கிளம்பிவிட்டேன்.

அதட்டிப் பார்த்தபோதும் அசையவில்லை.

அன்பாகக் கூறியபோதும் சட்டை செய்யவில்லை.

அதற்குமேல் என்ன செய்ய என்று புரியாமல் தண்ணீர் தெளிக்காமலேயே விட்டிருந்தனர் பெரியவர்கள்.

திருமணம் நடந்தும் வாழாமல் வந்துவிட்ட எனது நிலையை எண்ணிக் கோவில் கோவிலாக செல்வதை வாடிக்கையாக்கியிருந்தார் என் தாய்.

தந்தையோ, மனதிற்குள் வைத்துப் புழுங்கினாரேயொழிய, அவரால் எனது மறுப்பை மீறி எதையும் செய்ய இயலவில்லை.

எதனால் நான் மறுக்கிறேன் என்பதே தெளிவாகத் தெரியாமல் இரு ஜீவன்கள் மனதோடு மருகிக் குமைகிறது.

ஷ்யாமின் தாய், என்னைக் காணாமல் எனது தாயிடம் விசாரிக்க, விசயம் அறிந்ததும், இதற்குமேல் மறைக்கக் கூடாது என்று நினைத்து விசயத்தை மேலோட்டமாகக் கூறிவிடலாமா என முன்வர, அதேநேரம் விசயத்தைக் கூறினால் வரும் பாதகங்களை எண்ணி பின்வாங்கியிருந்திருக்கிறார்.

அதையும் அவரே என்னை எதேச்சையாக நேரில் சந்தித்தபோது கூறியிருந்தார்.

என் பெற்றோரோடு, ஷ்யாமின் தாயும், எனக்காக இறைவனைப் பிரார்த்திக்கத் துவங்கியிருந்தார்.

இதற்கிடையில் வார இறுதி நாளில் ஊருக்கு வந்திருந்தவளை நேரில் சந்தித்தான் அந்த அரைவேக்காடு!

அவனை இனி அவ்வாறு அழைக்கக்கூடாதாம்.

எனது தாயிடம் பேச்சோடு பேச்சாக நான் அவ்வாறு கூறக்கேட்டதும், கொதித்து விட்டார்.

‘கட்டுன புருசனை அரவேக்காடுன்னு சொல்ற?  உன்னை நாங்க இப்டியா வளத்தோம்.  ஒரே நாள்ல இப்டி ஏதோ மரியாதை கெட்டதனமா மருமகங்கிட்ட பேசி விரட்டியிருக்க!”, என்கிற தாயின் கேள்வியோடு, குற்றஞ்சாட்டும் முகத்தையும் கண்டு நடப்பிற்கு வந்து சுதாரித்தேன்.

ஆனாலும் எதிர்பாராமல் அரைவேக்காடும் வந்து சந்தித்தது.

“என்னை உனக்கு யாருன்னு தெரிஞ்சிருச்சுன்னு மனசுக்குள்ள பட்சி சொல்லுது, உண்மைதான?”, எனும் கேள்வியோடு வந்து நின்றவனை எதிர்பார்க்காததால், பதற்றத்தில் குப்பென வியர்க்கத் துவங்கியிருந்தது.

“நான் ஷ்ரவந்த். எங்க ஷ்யாமை நீ நினைச்சியானு எனக்குத் தெரியாது.  பட் உன்மேல அவன் பைத்தியமா இருந்தான்.  நீயும் அவனை நினைச்சியா?  அதனாலதான் மேரேஜ்கு லேட் பண்ணியா?” என வினவ

‘தாலி கட்டியிருந்தாலும், கணவனாக ஏற்றுக் கொள்ள இயலாதவன் என்கிற நிலையில் அவனது பேச்சை வேண்டா வெறுப்பாக கேட்டபடியே பதில் கூறினேன்.’

“அப்டியெல்லாம் இல்ல!  எனக்கு மேரேஜ்ல இன்ட்ரெஸ்ட் இல்ல!”, என அங்கிருந்து நழுவ முனைய

“அப்ப எதுக்கு நம்ம கல்யாணத்துக்கு சம்மதம் சொன்ன?”

‘நீ அவன்னு நினைச்சு’, என வாய்வரை வந்த வார்த்தையை எனக்குள் வைத்துக் கொண்டு,

“இப்ப எதுக்கு அதெல்லாம்”, என்றேன்

“ம்ஹ்ம்.. எதுக்கு கேப்பேன்? கல்யாணமான அன்னிக்கே வேணானு வந்துட்ட. அப்ப ஒன்னுந் தெரியலை.  இப்ப எங்க பாத்தாலும் எல்லாரும் கேக்குறானுங்க.  என்னத்தைச் சொல்ல? அதுல அன்னிக்கு நைட்டு எங்கம்மா ஏமாத்திட்டதா எங்கிட்ட சொன்ன? என்ன ஏமாத்துனாங்கனு சொல்லலை. அதான் நீ சொல்றதை வச்சு…”, என அப்போதும் நிமிர்வோடு பேச

“இப்டி வழியில மறிச்சுப் பேசுறது எனக்குப் பிடிக்கல”, என்றபடியே அகன்றிருந்தேன்.  உண்மையில் அவனிடம் இருந்து தப்பிக்க நானெடுத்த அவசர முடிவு அது.

அடுத்த வாரத்தில் விடுமுறையில் வீட்டிற்கு வந்திருந்தபோது வீட்டிற்கு வந்ததோடு எனது அறைக்குள் வந்து  என் முன் நின்றவனைக் கண்டு அதிர்ந்து போனேன்.

————————

 

Leave a Reply

error: Content is protected !!