kiyaa-10

kiyaa-10
கிய்யா – 10
சூரிய வெளிச்சம் தங்க நிறமாய் ஜொலித்து கொண்டிருந்த காலை பொழுது.
“கிய்யா… கிய்யா…” என்று குருவிகள் சத்தம் எழுப்ப, விஜயபூபதி ஜன்னல் வழியாக அந்த குருவிகளை பார்த்தான்.
முதலில் ஜன்னல் வழியாக தெரிந்த அந்த உலகமும், பறந்து கொண்டிருந்த பறவைகளும் அவனுக்கு வெறுப்பையே உருவாக்கின. தன் மோசமான நிலைமையை இன்னும் அவனுக்கு எடுத்து கூறவே, ஜன்னலை அடைக்கவும் கட்டளை பிறப்பித்தான்.
அவன் சொல்லை கிஞ்சித்தும் மதியாமல் அதை திறந்து வைத்த இலக்கியாவை எண்ணி இன்று அவனுக்கு சிரிப்பே வந்தது.
அவன் எண்ணமும் அவளையே சுற்றி வந்தது. ‘துர்காவும் அன்னைக்கு கோபமா பேசின பிறகு வரலை. இலக்கியாவும் வரலை. துர்கா வராதது நல்லது தான். ஆனால், இலக்கியா? அவளுக்கு சீக்கிரம் ஒரு மாப்பிள்ளையை பார்த்து கல்யாணம் முடிவு பண்ணனும். நானும் சில இடம் பார்த்து வைத்திருக்கிறேன். இலக்கியாவுக்கு சம்மதம்ன்னா பேசி திருமணத்தை முடிக்க வேண்டியது தான்.’ அவன் எண்ணப்போக்கை கலைத்தது காலடி சத்தம்.
ஸ்ரீராம் அங்கு நிற்க, “ஸ்ரீராம் வா… வா… எப்படி இருக்க?” விஜயபூபதி தன்னை உற்சாகமாகவே காட்டிக்க முயற்சித்தான்.
“நல்லாருக்கேன் அத்தான். நீங்க எப்படி இருக்கீங்க?” அவன் வினவ, “ம்…” சிரித்து கொண்டான் விஜயபூபதி.
ஸ்ரீராம் முகத்தில் கவலை இருக்க, “எதுவும் பிரச்சனையா ஸ்ரீராம்?” விஜயபூபதியின் கண்கள் இடுங்கியது.
“அப்படி தான் நினைக்குறேன்” அவன் வார்த்தைகளை மென்று விழுங்கினான்.
“இலக்கியா எங்க?” விஜயபூபதியின் குரல் உயர்ந்தது.
“அக்காவுக்கு கல்யாணம்” ஸ்ரீராம் கூற, “மாப்பிள்ளை யாரு?” விஜயபூபதியின் ஒற்றை புருவம் உயர்ந்தது.
“தெரியலை அத்தான்” அவன் தலை குனிய, “தெரியலையா? இது ஒரு பொறுப்பான தம்பி சொல்ற பதிலா?” விஜயபூபதி அவனை கண்டித்தான்.
“இந்த வீட்டில் எது என்னை கேட்டு, எனக்கு தெரிஞ்சி நடக்குது?” ஸ்ரீராம், விஜயபூபதியை பார்த்து நேரடியாக கேட்டான்.
“நாங்க உங்களோட உங்க வீட்டில் இருந்தோம். திடீருன்னு, நான் ஸ்கூலில் இருந்து வரும்பொழுது, அக்கா அழுதுகிட்டு இருந்தா. பின்பக்கமா ஒரு வீட்டில் இருந்தா. நீயும், நானும் இனி இந்த வீட்டில் தான் இருக்க போறோமுன்னு சொன்னா. பாட்டியும் நம்ம கூட இருப்பாங்கன்னு சொன்னா. நான் சரின்னு சொல்லிட்டேன். ஏன், எதுக்குன்னு ஒரு வார்த்தை கேட்கலை.” அவன் நிறுத்த, அங்கு மௌனம் நிலவியது.
“இப்ப, அக்காவோட கல்யாண விஷயத்திலும் நான் அப்படியே இருக்க முடியாதில்லை?” அவன் பரிதாபமாக கேட்டான்.
“இலக்கியா கிட்ட கேட்டியா?” விஜயபூபதி கேட்க, “அக்கா எதுவும் சொல்ல மாட்டேங்குறா. ஆனால், ராத்திரி முழுதும் அழுதிருக்கா. அக்கா முகமெல்லாம் வீங்கி இருக்கு. பாட்டிக்கு எதுவும் தெரியலை. அத்தை, மாமா நான் அங்க இருக்கிறது தெரியாமல் பேசிக்கிட்டு இருந்தாங்க. அதை வைத்து தான், அக்காவுக்கு கல்யாணமுன்னு எனக்கு விஷயம் தெரிந்தது.” என்று ஸ்ரீராம் நிலைமையை விவரித்தான்.
விஜயபூபதி இலக்கியாவுக்கு அலைபேசியில் அழைக்க, அவளுள் படபடப்பு. அதை மறைத்தபடி, “என்ன மிஸ்டர் விஜய்யபூபதி என்னை கூப்பிட்டிருக்கீங்க? கொழுக்கட்டை வேணுமா? இல்லைனா ஏதாவது கேக் ஆர்டரா?” அவள் தன் மனஉணர்வுகளை மறைக்கும் தொனியில் கேட்டாள்.
“நீ தான் வேணும். இங்க வா” அவன் வார்த்தைகளை கடித்து துப்பிவிட்டு தன் அலைப்பேசி பேச்சை துண்டித்தான்.
“அத்தான், நான் கிளம்புறேன். நான் சொன்னேன்னு அக்கா கிட்ட சொல்லிறாதீங்க.” ஸ்ரீராம் அங்கிருந்து கிளம்பிவிட்டான்.
இலக்கியா குறுக்கும் நெடுக்கும் நடந்து கொண்டிருந்தாள். அவளுக்கு விஜயபூபதியை இப்பொழுது பார்க்கும் விருப்பமில்லை. அதே சமயம் விஜயபூபதி அவள் வருகைக்காக தன் கைகளில் புத்தகத்தை வைத்துக்கொண்டு காத்திருந்தான்.
அப்பொழுது விஜயபூபதியின் அறைக்குள் நுழைந்தார் ரங்கநாதபூபதி.
தந்தையின் முகத்தை பார்த்ததும், அவர் பேச வருவதை கணித்தவன் போல், எதுவாக இருந்தாலும், அவராக பேசட்டும் என்றும் மௌனம் காத்தான்.
“நாளைக்கு இலக்கியாவுக்கு கல்யாணம்” அவர் நேரடியாக விஷயத்திற்கு வந்தார்.
“மாப்பிள்ளை யாரு?” அவன் தன் தந்தையை பார்த்து நேரடியாக கேட்டான்.
“நீயா இருந்தா நல்லாருக்கும்முன்னு நான் நினைக்குறேன்” அவர் சிரித்து கொண்டே கூறினார்.
“அதை நீங்க முடிவு செய்தால் போதுமா? என்கிட்ட கேட்கணும்” அவன் எகிறினான்.
“ஏன் கோபப்படுற? நீ தான் மாப்பிள்ளைன்னு நான் சொல்லவேயில்லை. நீயா இருந்தா நல்லாருக்கும்னு தான் நான் சொன்னேன்” அவர் தன்மையாகவே பேசினார்.
“நீ கல்யாணம் வேண்டாமுன்னு சொன்னா, வேற மாப்பிள்ளை வரிசையில் இருக்காங்க.” அவர் நக்கல் சிரிப்போடு கூறினார்.
“வேற மாப்பிள்ளைன்னா?” விஜயபூபதியின் கண்கள் இடுங்கியது.
“மாரிமுத்து….” என்று அவர் கூற, விஜயபூபதியின் கைகள் இறுகியது.
“நம்ம கிட்ட வேலை பார்க்குறான். போன மாசம் தான் அவன் குடிபோதையில் அடிக்க அவன் பொண்டாடி செத்து போய்ட்டா. நான் தான், அவனை ஜாமினில் எடுத்தேன். அவனோட ஒரு வயசு புள்ளை அம்மா இல்லாம கஷ்டப்படுது” அவர் பேசிக்கொண்டே போக, “அவனை பத்தி எனக்கு தெரியும்.” விஜயபூபதி பற்களை நறநறத்தான்.
“இல்லை, உனக்கு அவனை தெரியும். இலக்கியா, கழுத்தில் நான் தாலியை கட்டுன்னு சொன்னால் அவன் கட்டிருவானு உனக்கு தெரியாதில்லை. சட்டுப்புட்டுன்னு இலக்கியாவுக்கு கல்யாணத்தை முடிக்கணும். மாரிமுத்து ரெடிமேட் மாப்பிள்ளை.” தன் மகன் எதிரில் அவர் சாய்வாக அமர்ந்தார்.
“நான் அவன் தான் இலக்கியாவுக்கு மாப்பிள்ளைன்னு சொல்லலை. நீ மாப்பிள்ளையா இருந்தா நல்லார்க்குமுன்னு தான் நினைக்குறேன். என் தங்கை மகள் வாழ்க்கையை நானே கெடுப்பேனா?” அவர் கேள்வியாக நிறுத்தினார்.
“இலக்கியா கல்யாணதுக்கு அப்படி என்ன அவசரம்? என்னால் துர்காவுக்கு துரோகம் பண்ண முடியாது” விஜயபூபதி எங்கோ பார்த்தபடி கூறினான்.
“ஐயோ, முக்கியமான விஷயத்தை சொல்ல மறந்துட்டேன் பாரேன்.” ரங்கநாத பூபதி தன் நெற்றியை தடவினார்.
“இந்த ஜாதி பிரச்சனையால், இந்த காதல் கல்யாணம் பிடிக்காம, இந்த ஆக்சிடெண்ட்டை பண்ணதே துர்காவோட அப்பா தானே?” அவர் தன் மகனை பார்த்து புருவம் உயர்த்தினார்.
“அப்பா…” அவன் தன் தந்தையை கண்டிக்கும் குரலில் அழைத்தான்.
“இப்படி சொல்லணும்னு எனக்கு மட்டும் ஆசையா? ஆனால், சூழ்நிலை என்னை அப்படி சொல்ல வைக்குது.” அவர் பரிதாபமாக உதட்டை மடித்து கூறினார்.
“அவங்க அப்பாவை வெளிய எடுக்க மட்டும் தான் துர்கா அலையனும். உன் நினைப்பே, அவளுக்கு வர கூடாது.” அவர் கர்ஜிக்க, விஜயபூபதி தன் தந்தையை பரிதாபமாக பார்த்தான்.
மகனின் பார்வையில் அவர் தன் கண்களை இறுக மூடி நிதானித்து கொண்டார்.
“எதையும் நான் செய்யணும்முனு நினைக்கலை. நீ இலக்கியாவை கல்யாணம் பண்ணிக்கிட்டா, இலக்கியாவுக்கும் நல்ல மாப்பிள்ளை கிடைக்கும். துர்காவுக்கும் உன் நினைப்பு வராது.” அவர் கூற, மகன் தந்தையை முறைத்தான்.
“நீ இலக்கியாவை கல்யாணம் செய்யணும்முனு நான் கட்டாயப்படுத்தலை. ஆனால், நீ இலக்கியாவை கல்யாணம் செய்யலைன்னா, துர்கா, இலக்கியா இரண்டு பேரோட வாழ்க்கையும்…” அவர் பேச, “நீங்க ஏன் அப்பா இப்படி மாறிடீங்க?” அவன் உடைந்த குரலில் ஆதங்கத்தோடு கேட்டான்.
தன் தந்தையின் குரலில் இருந்த அழுத்தத்தில், அவர் செய்ய போகும் செயலின் தீவிரத்தை அவன் உணர்ந்து கொண்டான். அவரிடம், சண்டையிட்டோ, விவாதம் செய்தோ அவரை தடுக்க முடியும் என்று அவனுக்கு தோன்றவில்லை.
சமரச பேச்சில் ஈடுபட முடிவு செய்தான் விஜயபூபதி.
“நான் மாறலை விஜய். என்னை மாத்திட்டாங்க” அவர் கண்கள் கலங்கியது.
“அப்பா….” விஜயபூபதியின் குரல் பரிதவிப்போடு ஒலித்தது.
“நீ விரும்பின படிப்பை தான் படிச்ச. நீ விரும்பின பிஸ்னெஸ்ஸை தான் பண்ணின. உனக்கு பிடிச்ச பெண்ணை தான் கல்யாணம் செய்வேன்னு சொன்ன. நான் எதிலையாவது தலை இட்டிருக்கேனா?” அவர் கேள்வியாக நிறுத்த விஜயிடம் மௌனம்.
“துர்காவோட அப்பா கேவலமா பேசினார் விஜய். உங்க மகன் சுயநலத்துக்காக என் பொண்ணு வாழ்க்கையை கெடுக்கறீங்கன்னு சொல்றார். நீ சரின்னு சொல்லிருந்தா, நான் அவர் பேச்சை மீறி துர்காவை உனக்கு கல்யாணம் செய்திருப்பேன். ஆனால், இப்ப அது கூட முடியாது.” ரங்கநாதபூபதியின் குரல் கோபமாக ஒலித்தது.
“துர்கா அப்பா அசிங்கமா பேசறார். என் வாய் கொண்டு சொல்ல முடியாதபடி பேசுறார். நாம துர்காவை…” மேலும் பேசமுடியாதபடி ரங்கநாத பூபதியின் தோள் குலுங்கியது.
“அப்பா…” அவன் பதறினான்.
“அந்த பொண்ணு வேண்டாம். உன் பாணியிலே சொல்றேன். அவ நல்லாருக்கட்டும்” அவர் கூற, விஜயபூபதி தன் தந்தையை கூர்மையாக பார்த்தான்.
“இலக்கியா என்ன பாவம் பண்ணா அப்பா?” அவன் கேட்க, “நான் முதலில் ஒரு தந்தை. என் மகன் முக்கியம். மகன் வாழ்க்கை ரொம்ப முக்கியம். நான் ஒரு சராசரி மனிதன். ஒரு சுயநலவாதி தான். உனக்கு கல்யாணம் ஆகாதுன்னு என் காது பட பேசுறாங்க. வெளிய பொண்ணு பார்த்தா, உன் தங்கை பொண்ணே உன் மகனை கல்யாணம் செய்ய மாட்டாளாண்ணு கேட்கறாங்க.” அவர் நிறுத்தினார்.
“இலக்கியா கல்யாணத்துக்கு என்ன அவசரமுன்னு கேட்டியே? இதுக்கு தான் இந்த அவசரம்” அவர் உறுதியாக கூறினார்.
“ஊருக்காக நாம வாழ முடியமா?” அவன் கேட்க, “எனக்கு ஊரில் மரியாதை முக்கியம். ஒன்னு நீ இலக்கியாவை கல்யாணம் செய்யணும். இல்லை, உனக்கு பொண்ணு பார்க்கறதுக்கு முன்னாடி இலக்கியாவுக்கு கல்யாணம் ஆகணும்” அவர் ஆணையிட, “என்ன மிரட்டுறீங்களா அப்பா?” அவன் நக்கலாக கேட்டான்.
“ஆமா, மிரட்டல் தான். என் சுயகௌரவுதுக்காகவும் என் மகனின் வாழ்க்கைக்காவும் நான் என்ன வேணும்ன்னாலும் செய்வேன். என் மகன் வாழ்க்கை சரி இல்லைனா, என் தங்கை வாழ்க்கை எனக்கு ரெண்டாம் பட்சம் தான்” அவர் மேலும் பேச விரும்பாதவர் போல் எழுந்து கொண்டார்.
“நாளைக்கு இலக்கியாவுக்கு கல்யாணம்.” அவர் செல்ல எத்தனிக்க, “என்னை மிரட்டறீங்க? இலக்கியா இந்த மிரட்டலுக்கு எல்லாம் பயப்பட மாட்டாளே?” விஜயபூபதி நக்கலாக கேட்டான்.
“ம்…” அவர் சிரித்து கொண்டார். “மாப்பிள்ளை யாருன்னு தெரியாமலே, கல்யாணத்துக்கு சம்மதம் சொல்லிருக்கா. மிரட்டலுக்கு பயந்து இல்லை. பாசத்துக்கு கட்டுப்பட்டு” அவர் தன் மகனை பார்த்து சற்று கம்பீரமாகவே கூறினார்.
“உங்களை அந்த பாசம் கட்டிபோடலை?” விஜயபூபதி புருவம் உயர்த்தினான்.
“நானும் பாசத்தில் கட்டுப்பட்டு தான் எல்லாம் செய்யறேன்” கூறிக்கொண்டு வெளியே செல்லும் தந்தையை விஜயபூபதி செய்வதறியாமல் பார்த்தான்.
** ** **
விஜயபூபதி இலக்கியா திருமணம் முடிந்த அன்றிரவு.
இலக்கியா தன் கழுத்தில் உள்ள தாலியை பார்த்து கொண்டிருந்தாள். விஜயபூபதி அவளை பார்த்து கொண்டிருந்தான்.
“எங்க அம்மா சொன்னது சரி தான்” அவன் கூற, “உங்க புத்திசாலி அம்மா என்ன சொன்னாங்க?” அவள் நக்கலாக கேட்டாள்.
“என்னை மயக்கி கல்யாணம் பண்றது தான் உன் வேலையாம். என் சொத்துக்கெல்லாம் நீ அதிபதி ஆகணும்னு உன் ஆசையாம்! அது நடக்கலைன்னு இப்படி சூழ்நிலையை பயன்படுத்தி என்னை கல்யாணம் பண்ணிக்கிட்டியாம்” அவன் கூற, “அம்மா மட்டும் தான் புத்திசாலின்னு நினச்சேன். இப்ப அம்மா கூற்றை ஒத்துக்கிட்ட மகனும் பயங்கர புத்திசாலி தான்” அவள் மெச்சுதலகா கூறினாள்.
“என்ன டி நக்கலா?” அவன் எகிற, “அத்தான்…” என்று அவள் பேச ஆரம்பிக்க, “இந்த அத்தான் நொத்தான் செத்தான்னு என்னை கூப்பிட்டுட்டு அலையாத ” அவன் கண்டிப்போடு கூறினான்.
“ஓகே விஜய்யபூபதி. எனக்கும் அப்படி எல்லாம் கூப்பிட விருப்பம்மில்லை தான்.” என்று கூறிவிட்டு அவன் படுக்கறையில் அவள் படுக்க எத்தனிக்க, “என்ன பெட் எல்லாம் இங்க போட்டு படுக்க ஆரம்பிச்சிட்ட?” அவன் கடுப்பாக கேட்டான்.
“எனக்கும் இப்படி இங்க பெட் போட்டு படுக்க எல்லாம் ஆசை இல்லை விஜய்யபூபதி. உங்க பக்கத்துலயே படுத்துக்கலாமுன்னு தான் பார்த்தேன். ஆனால், உங்களுக்கு தொந்தரவு இருக்க கூடாதுன்னு தான்” அவள் கண்சிமிட்டி சிரித்தாள்.
“அடிங்…” அவன் கைகளை உயர்த்த, “விஜய்யபூபதி, நீங்க எனக்கு புருஷனா இருந்தாலும், என் தூக்கத்தை கெடுகிறது எனக்கு பிடிக்கலை. உங்க மனைவியான இலக்கியாவை நீங்க கொஞ்சம் புரிஞ்சிக்கணும்.” அவள் நிறுத்த அவன் அவளை கோபப்பார்வை பார்த்தான்.
“இலக்கியாவுக்கு ரொம்ப பேசுறது பிடிக்காது. அவளும் அளவா தான் பேசுவா. மத்தவங்க கிட்டையும் அதை எதிர்பார்ப்பா. நீங்களும், உங்க அம்மாவும் என்கிட்டே ரொம்ப பேசாதீங்க. எனக்கு அதெல்லாம் சுத்தமா பிடிக்கலை. கம்மியா அடக்கமா பேசுங்க.” அவனை எச்சரித்து விட்டு போர்வைக்குள் நுழைந்து கொண்டாள்.
‘செய்றதையும் செய்திட்டு வாயை பாரு’ அவன் அவளை கடுப்பாக பார்க்க, அவன் எண்ணங்கள் ஓரிரு நாளில் முடிவாகி அரங்கேறிய அவன் திருமணத்தை சுற்றி வந்தது. போர்வைக்குள் நுழைந்து கொண்டாலும், அவள் எண்ணமும் அவள் திருமணத்தையே சுற்றி வந்தது.
அன்று!
விஜயபூபதியின் தந்தை ரங்கநாத பூபதி தன் மகனிடம் பேசி சென்ற சில நிமிடங்களில் விஜயபூபதி அறைக்குள் நுழைத்தாள் இலக்கியா. அவன் விழியசைவில் அவன் அருகே சென்றாள் இலக்கியா.
அவள் கன்னத்தில் அவன் பளார் என்று அறைந்தான். விரக்தியோடு அவள் தன் மறுகன்னத்தை காட்டி கொண்டு நிற்க, அவன் தன் கைகளை உதறிக்கொண்டு, தன் முகத்தை வேறு பக்கம் திருப்பிக்கொண்டான்.
“வால் கொண்ட மிருகம் போல் என் வாழ்க்கை மாறிடுச்சு. வாள் கொண்டு அறுத்தாலும் தாங்கி கொண்டு தானே ஆகணும்” இலக்கியா ஏளனமாக கூறினாள்.
“அப்படி என்ன அவசியம்? அப்பா அப்படி என்ன கேட்டாங்க உன்கிட்ட?” அவன் கேட்க, அவள் மெளனமாக நின்றாள்.
“கேட்குறேன்ல?” அவன் கர்ஜனை செய்தான்.
அவள் அவனை சட்டை செய்யாமல் நிற்க, அவள் முடியை அவன் கொத்தாக பிடித்திருந்தான்.
“கேட்குறேனல்ல சொல்லு இலக்கியா?” அவன் குரலை உயர்த்தினான்.
அவன் இயலாமை, அவன் உடல் வலி, மனவலி எல்லாம் கோபமாக மாறி கொண்டிருந்தது.
“ஏன் இலக்கியா உன் வாழ்க்கையை நீயே கெடுத்துக்குற? நான் ஒரு நோயாளி தான். என்னால எதுவும் முடியாது. நீ வேண்டாமுன்னு சொல்லு இலக்கியா. உனக்கு கல்யாணத்தில் விருப்பம் இல்லை. கல்யாணம் வேண்டாமுன்னு சொல்லு இலக்கியா” அவன் கோபத்தில் கூட, அவளிடம் கெஞ்சினான்.
அத்தனை நேரம் மௌனம் காத்தவள், “மாமா விருப்பப்படி என் திருமணம் நடக்கும்” அவள் கூற, அவன் அவளை வேகமாக பிடித்து தள்ளினான்.
அவள் படாரென்று அவன் கால்மாட்டில் விழுந்தாள். அவளுக்கு வலித்தது. நிமிர்ந்து அவனை பார்த்தாள்.
“எனக்கு இதெல்லாம் வலிக்கலை அத்தான். ஆனால், துர்காவுக்கு என்ன பதில் சொல்லுவேன்னு தெரியலை அத்தான்.” அவன் கால்மாட்டில் முகம் புதைத்து கதறினாள் இலக்கியா.
“என்னை கல்யாணம் பண்ணிக்கிட்டா, இந்த அழுகை தான் உன் வாழ்க்கையின் ஆரம்பம்” அவன் கோபமாக கூற, தன் கண்ணீரை துடைத்து கொண்டு புன்னகைத்தாள் இலக்கியா.
“என்னை யாராலும் அழ வைக்க முடியாது அத்தான். நான் அழுதா, அதை நான் தான் முடிவு செய்வேன். என் அழுகையை கூட நான் விரும்பி தான் செய்வேன். நானா விருப்பப்பட்டா மட்டும் தான் செய்வேன்.” அவள் அழுத்தமாக கூறினாள்.
“இழப்பையும், அவமானத்தையும் பல தடவை, பல விதமா பார்த்தவ நான். அதை கொடுத்ததும் உங்க குடும்பம் தான்” கூறிவிட்டு மடமடவென்று வெளியே சென்றாள் இலக்கியா.
அதன் பின் துர்காவுக்கும், இலக்கியாவுக்கும் தீங்கு வருவதை தடுக்க பல வழியில் முயற்சித்தான்.
ஆனால், அனைத்தும் பலனின்றி முடிந்து அவன் திருமணத்தில் வந்து நின்றது.
அவன் சூழ்நிலை கைதியாகி போனான். அவள் மனமுவந்தே சூழ்நிலையை ஏற்றுக்கொண்டாள்.
சிலரின் உதவியோடு அமர்த்தப்பட்டான் விஜயபூபதி. எந்த ஆர்பாட்டமுமின்றி அவர்கள் திருமணம் அரங்கேறியது. அவன் அவள் கழுத்தில் தாலியை கட்டினான்.
அவள் கண்கள் தாலியை பார்த்தது. ‘இது துர்காவுக்கு சொந்தமான தாலி. இவன் துர்காவின் காதலன்’ அவள் மனம் அத்தான் என்ற உறவை மறந்து தெளிந்த நீரோடையாய் சிந்தித்தது.
‘அம்மா அப்பா உறவும் எனக்கு நிரந்திரமில்லை. இப்ப, கணவனும் நிரந்திரமில்லை.’ அவள் பட்ட நன்றிக்கடனும், அவள் செய்து கொடுத்த சத்தியமும் அவள் மீது பட்சாதாபம் கொண்டு கண்ணீர் வடித்தது.
திருமணம்!
சிலருக்கு வரம் சிலருக்கு சாபம்
சிலருக்கு சூழ்நிலை சிலருக்கு கட்டாயம்
விலகும் நாள் தெரிந்து அரங்கேறும் திருமணம்?
சிறகுகள் விரியும்…