Nee Enaku Uyiramma–EPI 14

189613085_863389437581725_4803627891963141566_n-252597ee

அத்தியாயம் 14

காரை பார்க் செய்து விட்டு டே கேர் உள்ளே நுழைந்தான் நேதன். அது ஒரு தனியார் டே கேர் செண்டர். குழந்தைகளைப் பார்த்துக் கொள்வதோடு சின்ன சின்ன விளையாட்டுக்கள், ரைம்ஸ், பாடம் சொல்லிக் கொடுப்பது என அவர்கள் வயதுக்கேற்ப ஆக்டிவிட்டிஸ் இருக்கும். கேஷவை இந்த டே கேரில் தான் சேர்த்திருந்தான் நேதன்.  

இவ்வளவு காஸ்ட்லியான இடத்திலா என வேணி தயங்க, தகப்பனின் கடமைகளில் இதுவும் ஒன்று என முடித்து விட்டான் நேதன். மகனை கொண்டு விடுவதையும் மீண்டும் ஏற்றி வருதையும் தனது வேலையாக்கிக் கொண்டான் இவன். அரக்கப் பறக்க பேபி சிட்டரிடம் விட்டு செல்ல வேண்டிய அவசியம் இல்லாததால், இவள் எழுந்து மூவருக்கும் காலை உணவு தயாரிப்பாள். ஒரு நாள் சீன ஸ்டைல், ஒரு நாள் தமிழ் ஸ்டைல், ஒரு நாள் டோஸ்ட் ப்ரேட் என உண்ணுவார்கள். காலை உணவும் இரவு உணவும் கட்டாயம் ஒன்றாய் சேர்ந்துதான் உண்ணுவது. ஒருவருக்கொருவர் பரிமாறிக் கொண்டு, பேசி சிரித்தப்படி, கேஷவையும் ஒரு சேர கவனித்து என உணவு வேளைகள் இனிமையாய் கழியும் இருவருக்கும்.

நேதனைப் பார்த்ததும் கையை நீட்டி ஒரே சத்தம் அந்தக் குட்டிக்கு. சிரிப்புடன் கேர் டேக்கர் அவனைத் தூக்கி வந்து நேதனிடம் தந்தார். அவனது உடமைகள் அடங்கிய பேக்கையும் வாங்கிக் கொண்ட நேதன்,

“கிளம்பலாமா கேஷவ்?” என கேட்க குதூகலமாய் சத்தமிட்டான் சின்னவன்.

காரில் இருந்த பேபி சீட்டில் சின்னவனை அமர்த்தியவன்,

“நாளைக்கு அம்மாவுக்கு பிறந்தநாள்! நாம இப்போ போய் கேக், அம்மாவுக்கு ட்ரெஸ், ஹ்ம்ம் வேற என்ன வாங்கலாம்?” என கேட்டப்படியே காரை ஸ்டார்ட் செய்தான்.

ஆவூவென சத்தம் வர,

“ஓ சரி! பெர்பியூமா? அது இல்லாமலே அம்மா வாசமாத்தான் இருப்பாங்க! ஆனாலும் நீங்க சொன்னதுக்காக வாங்கலாம்.” என மகனின் மழலைக்கு தானாகவே மொழி பெயர்த்துக் கொண்டான் நேதன்.

இவர்கள் இருவரும் அவசரமாய் ஷாப்பிங் முடித்து விட்டு வீடு வந்தார்கள். கேக்கை ப்ரிட்ஜில் பத்திரப்படுத்தியவன், டின்னர் செய்வதற்கு வேண்டிய பொருட்களை வெளியே எடுத்து வைத்து விட்டு கேஷவை குளிக்க வைக்கக் கூட்டிப் போனான்.

வேணி வீடு வர இரவு எட்டு ஆகிவிடும். அதற்குள் கேஷவை குளிக்க வைத்து, அவனுக்கு இரவு உணவும் கொடுத்திருப்பான் நேதன். அவள் குளித்து வந்ததும், சின்னவனை ஹை ச்சேரில் அமர வைத்து குட்டியாய் நறுக்கியப் பழங்களைக் கொடுத்து பிசியாக்கிவிட்டு, இவர்கள் இருவரும் சாப்பிடுவார்கள். பிறகு சிறிது நேரம் தொலைக்காட்சி. அதில் கார்ட்டுன் தான் ஓடும். அந்த நேரத்தில் இருவரும் அன்று அவர்களது நாள் எப்படி போனது என பகிர்ந்துக் கொள்வார்கள். மீட்டிங் இல்லாத சமயங்களில் கண்டிப்பாய் மாலை காபிக்கு வேணியிடம் தான் வருவான் நேதன். அப்பொழுதும் அளவளாவிக் கொள்வார்கள் இருவரும். எவ்வளவு பேசினாலும், எதாவது இருந்துக் கொண்டுதான் இருக்கும் இருவரும் பகிர்ந்துக் கொள்ள. தனிமையில் வாடிய அவனுக்கு பேச்சுத் துணையாய் இவளும், பேச மகனைத் தவிர யாரும் இல்லாத இவளுக்கு கிடைத்த வரமாய் அவனும் என வாழ்க்கை இனிமையாகவே போனது.

மூவரும் ஒரு அறையைத்தான் பகிர்ந்துக் கொள்கிறார்கள். வீட்டில் நிறைய ரூம் இருந்தும், இவர்கள் இருவரும் தன்னுடனே இருப்பதைத்தான் விரும்பினான் நேதன்.

“குழந்தைகள் அம்மா அப்பா கூட ஒன்னா படுத்தாத்தான் ரொம்ப ஒட்டுதல் வருமாம் வேணி! நீங்க ரெண்டு பேரும் தனியறையிலும் நான் இங்கயும் படுத்தா, அப்பான்னு எப்படி இவருக்கு ஒட்டுதல் வரும்!” என கேட்டு தன்னறையிலேயே இருத்திக் கொண்டான் அவர்கள் இருவரையும்.

ஒரு நாள் வேணியை நகர விடாமல் அவளை ஒட்டிக் கொண்டு துயில்பவன், இன்னொரு நாள் நேதனின் நெஞ்சின் மேல் கிடப்பான். மகனை சுற்றித்தான் இருவரின் இயக்கமும் இருந்தது. சாதாரணமாய் கைப்பிடித்து, தோள் பிடித்து, தொட்டுப் பேசிக் கொண்டாலும் அதற்கு மேல் இன்னும் ஒரு அடி கூட எடுத்து வைக்கவில்லை இருவரும். திட்டமிட்டு எதையும் நடத்திக் கொள்ள வேண்டாம், தானாகவே நெருக்கம் வரட்டும் என விட்டுவிட்டனர். திருமணம் முடித்தக் கையோடு ஆர்வமாய், தேடலாய், காமமாய் ஒருத்தருக்குள் ஒருத்தர் கரைந்துப் போக இவர்களென்ன இளம் ஜோடிகளா! வாழ்க்கையில் அடிப்பட்டு மிதிப்பட்டு ஒன்று சேர்ந்திருக்கும் மிடில் ஏஜ் ஜோடிகள் அல்லவா! எல்லாவற்றிலும் ஒரு நிதானம் இருந்தது இருவருக்கும்.   

கேஷவை ஹை ச்சேரில் அமர்த்தி அவனுக்கென்று தயாரித்த கோழி இறைச்சி கலந்த கஞ்சியை ஊட்டினான் நேதன். பின் வாயைத் துடைத்து விட்டு, அங்கேயே அமர்த்தி விளையாட சாமான்கள் கொண்டு வந்து கொடுத்தான். சின்னவன் என்னென்னவோ பேசியபடி விளையாட தங்களுக்கு டின்னராக நிறைய காய்கறிகள் மற்றும் மட்டன் சேர்த்து ஸ்பெகெட்டி செய்தான் நேதன்.

எப்பொழுதும் அமைதியாக இருக்கும் அவனது இல்லம் இவர்களின் வருகையால் கலகலவென இருந்தது. எந்நேரமும் கேஷவின் சிரிப்பு, கத்தல், அழுகை, வேணியின் கலகல சிரிப்பு, மகனை திட்டும் கோபக் குரல், நேதனை கடிந்துக் கொள்ளும் உரிமையான பேச்சு என அந்த இல்லமே உயிர் பெற்று ஒளிர்ந்தது. இவனோடு அவர்கள் வந்துவிட, வேணியின் வீட்டை பொருட்களோடு சேர்த்து வாடகைக்கு விட்டிருந்தனர். அதில் வரும் பணமும் வேணியின் அக்கவுண்டுக்கே வருவது போல ஏற்பாடு செய்திருந்தான் இவன்.

அவளது முதல் திருமணத்தின் ஆரம்பத்தில் வேலை செய்திருந்தாலும், கணவர் நோய் வாய் பட்டது, இவளும் குழந்தை வேண்டும் என ட்ரீட்மேண்ட் போனது என பல இன்னல்களினால் வேலையை விட்டிருந்தால் வேணி. கணவரின் சேமிப்பிலும், இவள் சேமிப்பிலும் தான் அவர்கள் பிழைப்பு ஓடியது. சில சமயம் தம்பிகள் பண உதவி செய்தாலும், முதல் தம்பி மனைவியின் குத்தல் பேச்சுக்கு பயந்தே வேண்டாமென சொல்லிவிடுவாள் வேணி. கணவரின் இறப்புக்குப் பின் தனியாய் பிரசவத்தை எதிர் கொண்டவளுக்கு உதவியதெல்லாம் இரண்டாம் தம்பியின் மனைவிதான். இவள் கணவரும் அவளும் உறவல்லவா!

அதன் பிறகு பண நெருக்கடி கழுத்தை நெறிக்க ஆரம்பித்தது வேணியை. கணவரின் இன்சுரன்ஸ் பணமும், ஊழியர் சேம நிதி பணமும் கைக்கு வர நாளாக, தம்பிகளிடம் கையேந்த வேண்டிய நிலை. பணம் வந்ததும் அவர்கள் கொடுத்ததை திருப்பிக் கொடுத்து விட்டாள் தான்! ஆனாலும் என்னவோ தாழ்ந்துப் போன உணர்வு. தனித்து கணவரின் வீட்டிலேயே மகனோடு இருந்துக் கொண்டவள், அதன் பிறகே இந்த கபேயை ஆரம்பித்தாள்.

பணத்துக்காய் யாரிடமும் கையேந்தக் கூடாது எனும் மனைவியின் நிலைப்பாடு எதனால் வந்தது என அவள் வாய்மொழி வழி அறிந்துக் கொண்ட நேதன், அவளை அவள் போக்கிலேயே விட்டுவிட்டான். அவன் மனைவியையும் பிள்ளையையும் தங்கத் தட்டில் வைத்துத் தாங்க முடியும் அவனால். ஆனால் அந்தக் காரியம் வேணியின் சுயமரியாதையை உடைத்துப் போடும் என புரிந்தவன், அணுசரனையாக அவளைப் புரிந்து நடந்துக் கொண்டான்.  

“வந்துட்டேன் நான் வந்துட்டேன்! எப்படி போனேனோ அப்படியே திரும்பி வந்துட்டேன்” எனும் அவள் குரலில் மகன் அம்மா என கூச்சலிட்டான் என்றால், நேதனோ கண்கள் மின்ன தன்னவளைப் பார்த்தான்.

“அஞ்சு நிமிஷம் குடுங்க! நான் ஓடிப் போய் குளிச்சிட்டு வரேன்” என புன்னகையுடன் தங்களது ரூமுக்குப் போனாள் வேணி.

“அம்மா ரொம்ப அழகா இருக்காங்கல்ல?” என மகனைப் பார்த்துக் கேட்டான் நேதன்.

“ப்பூப்பூ!” என சத்தமிட்டு எச்சிலைத் தெறிக்க விட்டான் மகன்காரன்.

“ஆமான்னு சொல்றீங்களா இல்லைன்னு சொல்றீங்களா?”

நேப்கின் கொண்டு அவன் வாயைத் துடைத்து விட்டவன், கன்னத்தில் அழுத்தமாய் ஒரு முத்தம் வைத்தான். அதற்கும் கிளுக்கி சிரித்தான் கேஷவ்.

குளித்து விட்டு வந்தவள்,

“அம்மா உங்கள ரொம்ப மிஸ் பண்ணேன்” என சொல்லி மகனுக்கு ஆசையாய் கன்னத்திலும் உதட்டிலும் முத்தமிட்டாள்.

“என்னை மிஸ் பண்ணலியா?” என கேட்டான் நேதன்.

“உன்னையும்தான்” என இவள் சொல்ல,

தன் கன்னத்தைக் காட்டிய நேதன்,

“பின்ன எனக்கு ஏன் குடுக்கல?” என விளையாட்டாய் கேட்டான்.

புன்னகையுடன் அவன் அருகே போனவள், அவன் கன்னத்தில் பட்டும் படாமல் ஒரு முத்தம் வைத்தாள். மனைவியின் முதல் முத்தம் அவ்வளவு தித்திப்பாய் இருந்தது நேதனுக்கு. கண் மூடி அதை ரசித்தவன்,

“குடுக்கற முத்தத்தோட பெறப்படற முத்தத்துல இன்பம் கோடின்னு இப்பத்தான் நல்லா புரியுது வேணி! இனி கேஷவுக்கு குடுக்கறப்பல்லாம் அவர் டாடியான எனக்கும் முத்தம் குடுக்கனும்னு இந்த வீட்டுல சட்டம் கொண்டு வரலாம்னு இருக்கேன்!” என்றான்.

“சட்டம் போட்டு முத்தம் கேக்கற அளவுக்கு தைரியம் வந்துடுச்சா இந்த மொட்டை பாஸுக்கு?”

“நோ வேணி! எதப்பத்தி பேசனாலும் நான் பொறுத்துக்குவேன்! என் மொட்டை மண்டையைப் பத்தி பேசனா மட்டும் எனக்கு பொல்லாத கோபம் வரும்! அது உனக்கு நல்லதில்ல சொல்லிட்டேன்”

“ஓஹோ!! மண்டையைப் பத்திப் பேசனா சாருக்கு பிடிக்காதோ! உனக்குப் பிடிக்காதத தான் செய்வா இந்த வேணின்னு தெரியாதா மை டியர் டிஷூ பேப்பர்!” என்றவள் கொஞ்சமாய் தள்ளி நின்று,

“நேதன் இஸ் எ சொட்டை! அதை மறைக்க அடிச்சான் மொட்டை” என பாட்டாகவே பாடினாள்.

அவள் கிண்டலில் பள்ளிக்கால வேணியைப் பார்த்தவன், சட்டென கைப்பிடித்து இழுத்தான். இவள் எதிர்பாராத நேரம் இழுக்கவும் அவன் நெஞ்சில் மோதி நின்றாள் வேணி. அவள் உதடுகளை இரு விரலால் பிடித்து,

“இந்த வாய்தானே என்னை அவ்ளோ கிண்டல் அடிச்சது ஸ்கூல்ல! இந்த வாய்தானே என்னை டிஷூ பேப்பர்னு கூப்டுச்சு! இந்த வாய்தானே என்னை சொட்டைன்னு சொன்னுச்சு” என சொல்லியபடியே வலிக்கக் கிள்ளினான்.

“வலிக்கிதுடா” என இவள் துள்ள, விரலை எடுத்தவன் தன் உதட்டை அங்கே பொருத்திக் கொண்டான்.

வலிக்கக் கிள்ளிய உதட்டுக்கு தன் உமிழ் நீரால் ஒத்தடம் கொடுத்தான் ஆடவன். அவன் சட்டைக் காலரை இறுகப் பற்றிக் கொண்டவள், அவனிட்ட ஒத்தடத்தை இசைந்து ஏற்றுக் கொண்டாள். அவள் மூச்சுக்குத் தவிக்க, உதட்டை விடுவித்தவன், தன் நெஞ்சொடு இறுக அணைத்துக் கொண்டான் தன்னவளை. இவளும் எங்கெங்கோ அலைந்து தாய் மடி சேர்ந்தது போல அவன் கழுத்தில் முகத்தைப் பதித்துக் கொண்டாள். அவள் அப்படி செய்ததில் நேதனுக்கு அவ்வளவு சந்தோஷம். அவள் முகத்தை நிமிர்த்தி நெற்றியில் அழுத்தமாய் முத்தமிட்டு தன் மகிழ்ச்சியைக் காட்டினான்.

“அம்மா பால்” எனும் சத்தத்தில்தான் இருவரும் தரை இறங்கினார்கள்.

இவள் வெட்கமாய் அவனைப் பார்த்து புன்னகைக்க, அவனும் அழகாய் வெட்கப் புன்னகையை சிந்தினான். அன்று இரவு உணவு அமைதியாகப் போனது இருவருக்கும். இவள் அவனை ஓரக் கண்ணால் பார்க்க, அவள் பாராத போது இவன் அவளை கீழ்க்கண்ணால் பார்த்தான். இருவரும்,

‘கண்ணுக்கும் கண்ணுக்கும் மோதல்

நெஞ்சத்தை நீ தந்தால் காதல்’ என பாடாதது மட்டும்தான் பாக்கி.

உணவை முடித்துக் கொண்டவர்கள், மகனோடு தொலைக்காட்சி முன் அமர்ந்தார்கள். கேஷவ் கார்பெட்டில் அமர்ந்து அவனது விளையாட்டுப் பொருட்களோடு விளையாடியப்படியே தொலைக்காட்சி பார்த்தான். எப்பொழுதும் சலசலவென பேசிக் கொண்டிருக்கும் இவ்விருவரும் ஒரு மோன நிலையில் இருந்தார்கள். கார்ப்பேட்டில் கால் நீட்டி அமர்ந்திருந்த நேதன் தன் பக்கத்தில் அமர்ந்திருந்தவளை மெல்ல தன் மடியில் சாய்த்துக் கொண்டான்.

இதற்கு முன் கஸ்டங்களை சொல்லி அழுதவளை தன் மடி சாய்த்து ஆறுதல் அளித்திருக்கிறான் நேதன். இதுதான் ஆசையாய், அன்பாய், காதாலாய் தன் மனைவியை மடி சாய்த்தத் தருணம். அவள் தலையை மெல்ல வருடிக் கொடுக்க, அவன் வயிற்றில் தன் முகத்தைப் புதைத்துக் கொண்டாள் இவள். இவர்களை நெருங்கி வந்த சின்னவர் தன் அம்மாவின் மேல் ஏறி நேதனின் நெஞ்சில் சாய்ந்துக் கொண்டான். சொர்க்கமே தன் கை சேர்ந்தது போல கண்கள் கலங்கிப் போனது இவனுக்கு.

“ஐ லவ் யூ போத்!” என சொல்லி கேஷவின் கன்னத்தில் முத்தமிட்டவன், மெல்ல குனிந்து தன் மனைவியின் கன்னத்திலும் முத்தமிட்டான்.

அன்றிரவு நன்றாய் உறங்கிக் கொண்டிருந்த வேணியை எழுப்பினான் நேதன்.

“வேணிம்மா, வேணி! எழுந்துக்கோடா”

“ஹ்ம்ம்” என சொல்லி மறுபக்கம் புரண்டுப் படுத்தாள் இவள்.

“எழுந்துக்கோடா ப்ளீஸ்” என அவள் கன்னம் தொட்டு அசைக்க, மெல்ல இமைப் பிரித்தாள் அவள்.

“என்னடா?” என தூக்கக் கலக்கக் குரலில் கேட்டாள்.

“ஹேப்பி பேர்த்டே டார்லிங்!” என்றவன் மெல்ல குனிந்து மென்மையாய் அவள் உதட்டில் முத்தமிட்டான்.

அவன் கழுத்தைக் கட்டிக் கொண்டவள்,

“சே சே நீ”(நன்றி மாண்டேரினில். எல்லா இனத்தவருக்கும் இப்படி முக்கியமான சிற்சில வார்த்தைகள் தெரியும் இந்த நாட்டில்) என முகம் மலர சொன்னாள்.

“வா, வா! உனக்கு சர்ப்ரைஸ் இருக்கு”

படக்கென எழுந்து அமர்ந்துக் கொண்டாள் இவள்.

“நெஜமாவா? எனக்கு இப்படிலாம் யாரும் சர்ப்ரைஸா எதுவும் செஞ்சதில்ல” என்றவளுக்கு ஆர்வத்தில் கண்கள் மின்னியது.

அவளது கைகளைப் பற்றிக் கொண்டு ரூமின் பால்கனிக்கு அழைத்துப் போனான் நேதன். அங்கே ஹை ச்சேரில் முன்னே சாய்ந்து தூங்கிக் கொண்டிருந்தான் கேஷவ்.

“என்னடா பண்ணி வச்சிருக்க அவனை?”

“உன்ன மாதிரியே நம்ம மவனும் தூங்குமூஞ்சியா இருக்காரு! அதான் அப்படியே அள்ளிட்டு வந்து உட்கார வச்சிருக்கேன்! நாள பின்ன நாம எடுக்கற செல்பிய பார்த்து என்னை உங்க ஆட்டத்துக்கு ஏன் சேர்த்துக்கலைன்னு இவர் கேட்டுட கூடாதில்லையா! அதுக்குத்தான்” என சொல்லி புன்னகைத்தான் நேதன்.

அங்கிருந்த குட்டி மேசையில் அழகாய் அமர்ந்திருந்தது ப்ரேஷ் ப்ரூட் கேக். அதன் அருகே வ்ரேப் செய்யப்பட்ட பரிசுகளும் ரோஜா பொக்கே ஒன்றும் வீற்றிருந்தன. சுவற்றின் பின்னே ஹேப்பி பேர்த்டே வாசகத்தை ஒட்டி வைத்திருந்தான் நேதன்.  

மலைப்புடன் இதையெல்லாம் பார்த்தப்படியே தூங்கி வழிந்துக் கொண்டிருந்த மகனைத் தூக்கிக் கொண்டாள் வேணி.

“கேக் வெட்டலாம் வேணி” என்றவன் போனை ட்ரீபோட் ஸ்டாண்டில் பிக்ஸ் செய்து விட்டு இவர்கள் அருகே வந்து நின்றான்.

கேண்டிலைக் கொளுத்திவிட்டு, ஹேப்பி பேர்த் டே பாடலை பாட ஆரம்பித்தான் நேதன். இவளுக்கும் அவனது உற்சாகம் தொற்றிக் கொண்டது. இவர்களது சத்தத்தில் விழித்து அழுகையை ஸ்டார்ட் செய்ய ஆரம்பித்த கேஷவ், கேண்டில் வெளிச்சத்தைப் பார்த்து பட்டென நிறுத்திக் கொண்டான். அதைக் காட்டி உற்சாகமாக எதையோ சொல்லியவனுக்கு, அதை ஊத கற்றுக் கொடுத்தாள் வேணி. பல முறை முயன்று அவன் கேண்டிலை ஊதி அணைக்க படபடவென கைத்தட்டினான் நேதன். சந்தோஷத்தோடு மகனின் கரத்தையும் ப்ளாஸ்டிக் கத்தியில் பிடிக்க வைத்து வெட்டப் போனவள், பின் மெல்ல திரும்பி,

“நீயும் வந்து பிடிச்சுக்கோ” என நேதனையும் தங்கள் கூட்டணியில் சேர்த்துக் கொண்டாள். முகம் பூவாய் மலர்ந்துப் போனது நேதனுக்கு.

மூவரும் அந்த கேக்கை வெட்டி பிறந்தநாளை இனிமையாகத் தொடக்கி வைத்தனர். கேக்கை கேஷவுக்கு கொஞ்சமாக ஊட்டியவள், நேதனுக்கும் ஊட்டிவிட்டாள். மகன் கையைப் பிடித்து வேணிக்கும் கேக் ஊட்ட வைத்த நேதன் தானும் ஊட்டி விட்டான் அவளுக்கு.

தான் வாங்கிய பரிசையும் பொக்கேவையும் அவளிடம் கொடுத்தவன், கேஷவ் வாங்க சொல்லியதாக சொல்லி சின்னவனின் கையால் ஒரு கிப்டையும் கொடுக்க வைத்தான். கை நிறைய பொருள்களுடனும், முகம் நிறைய புன்னகையுடனும் நின்றிருந்தாள் வேணி.

“இதுதான் என்னோட ஃபர்ஸ்ட் பொக்கே தெரியுமா! ரொம்ப சந்தோசமா இருக்குடா நேதன்! மனசே நெறைஞ்சுப் போய் இருக்கு. நான் தான் எல்லோருக்கும் பார்த்து பார்த்து செய்வேன். முதன் முதலா எனக்காக, நீ செஞ்சிருக்க! தேங் யூ சோ மச்” என சொல்லியவளின் கண்கள் கலங்கிப் போயிருந்தது.

“பர்த்டே பேபி அழக்கூடாது!” என சொல்லி அவளை அரவணைத்துக் கொண்டான் இவன்.

இருவருக்கும் நடுவில் நசுங்கிய கேஷவ் சிணுங்க ஆரம்பித்தான்.

“அவருக்கு தூக்கம் கண்ணுலயே நிக்கிது! நீ தூங்க வை வேணி! கிப்ட அப்புறம் பிரிச்சுக்கலாம்” என சொன்னவன்,

“ஐ லவ் யூ போத்” என்றபடி கேக்கை ப்ரிட்ஜில் வைக்க எடுத்துப் போனான்.

மகனை கட்டிலில் போட்டு தட்டி தூங்க வைத்தவளின் மனம் சந்தோஷக் கடலில் தளும்பி தள்ளாடியது. அவளால் என்றென்றும் மறக்க முடியாத பிறந்த நாளாய் இதை மாற்றி இருந்தவனின் மேல் அன்பு ஊற்றெடுத்தது.  

நேதன் திரும்பி வருவதற்குள் தூங்கி இருந்தான் சின்னவன். நேதனும் மகனும் வாங்கி இருந்த பரிசுகளைப் பிரிக்க சொல்லி அதை வீடியோவாக பதிவு செய்தான் இவன். நீல வர்ணத்தில் ஒரு ட்ரெஸ்சும் அதற்கேற்ற மாதிரி ஒரு கைப்பையும், கேஷவின் சார்பாக ஒரு விலை உயர்ந்த பெர்பியூமும் வாங்கி இருந்தான் நேதன்.

“ரொம்ப அழகா இருக்கு நேதன்”

“உனக்குப் பிடிச்சதுல ரொம்ப சந்தோஷம்”

அவன் முகத்தை ஆழ்ந்து பார்த்தவள்,

“தேங்க் யூ சோ மச்!” என உணர்ந்து சொன்னாள்.

“ரொம்ப இமோஷனல் ஆகாதே வேணி! உனக்கு பேர்த்டே அதனால கிப்ட் குடுத்து செலெப்ரேட் பண்ணேன். எனக்கு பேர்த்டேனாலும் உனக்கு கிப்ட் குடுப்பேன். கேஷவ் பேர்த்டேனாலும் உனக்கு கிப்ட் குடுப்பேன்! ஏன்னா நீயே என் வாழ்க்கையில எனக்கு கிடைச்ச பெரிய கிப்ட்” என்றவனை இறுக அணைத்துக் கொண்டாள் இவள்.

மெல்ல கால்களை எக்கி அவன் காதில்,

“பேர்த்டே பேபி உனக்கு ஒரு பரிசு குடுக்கனும்னு ஆசைப்படுது” என்றாள்.

“என்ன பரிசு?”

“லைட்டை அணைச்சிட்டு வா! அப்போத்தான் சொல்வேன்”

அவன் போய் விளக்கை அணைக்க, இவள் அவனை அணைத்துக் கொண்டாள்.

“நேதன்!”

“ஹ்ம்ம், என்னடி லெங்லோய்?”

“லெங்லோய்னா என்ன?”

“லெங்லோய்னா அழகினு அர்த்தம்”

“நான் அழகியா?”

“பேருலயே அம்சத்தை வச்சிருக்கற அம்சமான அழகிடி நீ”

இன்னும் அவனை இறுக்கிக் கொண்டாள் அம்சவேணி.

“என்ன பரிசுன்னு இன்னும் சொல்லலியே!” என்றான் இவன்.

“பேர்த்டே பேபி, பொறந்தப்போ போட்டிருந்த ட்ரேஷோட உன் கிட்ட வரப்போறா! அதான் அந்த கிப்ட்” என மெல்லிய குரலில் அவன் காதில் முணுமுணுத்தாள் இவள்.

அவளைத் தழுவி இருந்தவனின் பிடி இறுகியது. அதற்கு மேல் அங்குப் பேச்சிற்கு இடமிருக்கவில்லை. கட்டிலில் மகன் இருக்க, மொத்தமான கம்போர்டரை கீழே விரித்து அதில் தொடங்கினார்கள் தங்களின் தேடலை. முந்தைய உறவுகளில் காயம் பட்டிருந்தவர்கள், ஒருவர் விருப்பத்தை இன்னொருவர் கேட்டு, முக மாற்றத்தில் ஒருவர் மற்றொருவரின் பிடித்தத்தை உணர்ந்து, உடல் மொழியில் இன்பம் கொடுப்பது எது என புரிந்துக் கொண்டு நிதானமாய் நிறைவாய் தங்கள் காதலைப் பரிமாறிக் கொண்டார்கள். வாய் வார்த்தையால் சொல்லி இருக்காத காதலை இருவரும் கை வார்த்தையால் சொல்லிக் கொண்டார்கள். ஆர்ப்பாட்டமில்லாத அழகிய சங்கமம் ஒன்று ஆனந்தமாய் அரங்கேறியது அங்கு.

தன்னால் அவனை மகிழ்விக்க முடிகிறது எனும் இன்பத்தில் இவள் முகம் பூத்திருக்க, தன்னால் இவளை பூரிக்க வைக்க முடிகிறது எனும் சந்தோசத்தில் இவன் மகிழ்ந்திருந்தான். யாராலும் காமம் செய்ய முடியும். ஆனால் காதல் கொண்டவர்களுக்கு மட்டுமே தங்கள் இணையின் திருப்தியும், ஆனந்தமும் தங்களுடைய இன்பத்தை விட முக்கியமானதாகப்படும்.

 

(போன எபிக்கு லைக் அண்ட் கமேண்ட் போட்ட அனைவருக்கும் நன்றி.  லவ் யூ ஆல். )