YALOVIYAM 3.2
YALOVIYAM 3.2
யாழோவியம்
அத்தியாயம் – 3
லிங்கம் வீடு
வீட்டு வளாகத்திற்குள் ராஜாவின் கார் வந்து, நுழைவாயில் முன்னே இருந்த இடத்தில் நின்றது. சுடர் நன்றாகத் தூங்கியிருந்தாள்.
“சுடர் வீடு வந்திருச்சு. எந்திரி” என்று ராஜா எழுப்பியதும், சரியாகக் கூட கண்களைத் திறக்காமல் எழுந்தாள். அதே கணத்தில், கார் சத்தம் கேட்டு லதா வெளியே வந்தார்.
நுழைவாயில் படிக்கட்டுகளில் இறங்கியபடி, “வா ராஜா! நீ வருவேன்னுதான் தூங்காம இருந்தேன்” என்று சொல்லிக் கொண்டே, ஓட்டுனர் இருக்கை சன்னல் அருகில் வந்து நின்றார்.
எதுவும் பேசாமல் இருந்தான். அவனை முறைத்துப் பார்த்தபடியே சுடர் இறங்கி, அவள் அம்மா அருகே வந்து நின்றாள்.
“ராஜா சாப்பிட்டுப் போகலாம்-ல?” என்று லதா கேட்டதும், “வெளியவே சாப்பிட்டோம்” என யாருக்கோ சொல்வது போல் சொன்னான்.
“சாப்பிட்டாச்சா?” என ஏமாற்றத்துடன் சொன்னவர், “நீ, சுடரை விட வருவேன்னு இவ அப்பா சொன்னாரு. அதான் உனக்கும் சேர்த்து சமைச்சி வச்சிருந்தேன்” என்றார்.
லதாவிற்குப் பதில் சொல்லாமல், “லேட்டாயிடுச்சி…” என ராஜா ஆரம்பிக்கும் போதே, “இது என்ன பழக்கம் ராஜாண்ணா?” என்று சுடர் அதட்டியதும், இருவரும் அவளைத்தான் பார்த்தனர்.
“அம்மா பேசிக்கிட்டு இருக்காங்க. நீ உள்ளே இருந்தே பதில் சொல்ற!? இறங்கி நின்னுகூட பதில் சொல்ல மாட்டியா?” என்று சுடர் கேட்டதும், “ஏய் சுடர்! இதுல என்ன இருக்கு? சும்மா இரு” என்று லதா கண்டிக்கும் தொனியில் சொன்னார்.
லதா சொன்னதைப் பொருட்படுத்தாமல், சுடர் சொன்னதற்காக வேஷ்டியைச் சரி செய்தபடியே ராஜா காரில் இருந்து இறங்கினான்.
“அவ சொல்லறான்னு நீயும் ஏன் ராஜா?” என லதா சொன்னாலும், “அப்படியே ஒரு வாய் சாப்பிட்டுப் போயேன்” என்று கெஞ்சத்தான் செய்தார்.
“வேண்டாம்” என சொல்லி, காரில் ஏறப் போகையில், வெளியே வந்த லிங்கம், “தலைவரைப் பார்த்துப் பேசிட்டியா ராஜா?” என்று கேட்டார்
“ம்ம் பேசிட்டேன்”
“என்ன சொன்னாரு?”
“ஐ.டி விங் டிஸ்ட்ரிக்ட் செக்ரட்டிஸ் கூட மதுரையில மீட்டிங் இருக்கு. அதைப் பத்திதான் பேசினாரு. நாளைக்கு மதுரைக்குப் போறேன்” என விளக்கமாகச் சொன்னான்.
“சரி போயிட்டு வா” என்றதும், காரில் ஏறிக் கொண்டான். பின், “கிளம்புறேன்” என பொதுவாகச் சொன்னவன், “குட் நைட் சுடர். ரெண்டு மூணு நாளாகும் வர்றதுக்கு” என்று சொல்லிச் சென்றுவிட்டான்.
தன்னிடம் சரியாகப் பேசாமல் போகிறவனையே பார்த்த லதாவை, “வாங்க-ம்மா” என்று சுடர் அழைத்துக் கொண்டு போனாள்.
வீட்டின் உள்ளே நுழைந்ததும், “ஏன் இப்படி பண்றான்?” என வருத்தப்பட்ட லதா, ராஜாவுக்காக சமைத்திருந்த வகைகளைப் பார்த்ததும்… அங்கு நிற்கும் வேலை ஆட்களைப் பார்த்து, “இதெல்லாம் என்ன பண்ணணுமோ, பார்த்துப் பண்ணுங்க” என்று சொல்லிவிட்டு, அறைக்குள் சென்றார்.
லிங்கமும் சுடரும், அவர் பின்னேயே அறைக்குள் வந்திருந்தனர். எப்போதும் போல் லதா புலம்ப ஆரம்பித்திருந்தார்.
“மனசுக்குள்ளயே கஷ்டப்படுறானோ? ஆனா சின்ன வயசிலருந்து எந்தக் கஷ்டமானாலும் என்கிட்டதான சொல்லி அழுவான். இப்ப ஏன் அதைச் செய்ய மாட்டிக்கிறான்?” என்று லதா கவலைப்பட்டதும், “ம்மா! கொஞ்ச கொஞ்சமா ராஜாண்ணா சரியாகிட்டு வர்றாங்க” என்று சுடர் தேற்றினாள்.
“அப்ப ஏன் என்கூட பேச மாட்டிக்கிறான்?” என்று லதா கேட்ட கேள்விக்கு, சுடரிடம் பதில் இல்லை.
“சாப்பிடத்தான சொன்னேன். அதைக் கூட செய்ய மாட்டிக்கிறான்” என்று கண்கலங்க புலம்பியதும், “ம்மா! நிஜமாவே நானும் ராஜாண்ணா-வும் வெளியே சாப்பிட்டோம்” என்றாள்.
கலங்கிய கண்களைத் துடைத்தபடியே, “அவனுக்காகச் சமைச்சிருக்கேன்னு தெரிஞ்சா, ஒரு வாயாவது சாப்பிட்டுத்தான் போவான். இப்ப ஏன் இப்படி இருக்கான்னு தெரியலை?” என்றார்.
மேலும், “கட்சி வேலை-ல கவனமே இல்லாம இருக்கானாமே? அப்பா சொன்னாரு. நம்ம ராஜாவா இப்படி?!” என்றவருக்கு அதற்குமேல் பேச முடியவில்லை.
ஆறுதலாக அம்மாவின் தோள்களைத் தட்டிக் கொடுத்துக் கொண்டே, சுடர் தன் அப்பாவைப் பார்த்து, “தலைவர் சொல்லித்தான இப்ப மதுரைக்குப் போறாங்க. அப்புறம் என்னப்பா?” என்று ராஜாவிற்காகப் பேசினாள்.
“இது என்னைக்கோ செய்ய வேண்டிய வேலை” என்றவர், “கட்சில எல்லாரும் ‘ராஜா ஏன் இப்படி இருக்கான்-னு?’ என்கிட்ட வந்து கேட்கிறாங்க. எனக்கும் என்ன பதில் சொல்லன்னு தெரியலை” என்று வருத்தப்பட்டார்.
அம்மா-அப்பா இருவரின் முகத்திலும் கவலையைக் கண்டவள், “போதும். ரெண்டு பேரும் இப்படி இருக்காதீங்க. ரொம்ப லேட்டாகிடுச்சி. தூங்குங்க” என உத்தரவு போல் சொல்லி, அறையைவிட்டு வெளியே வந்தாள்.
என்னதான் அவர்களைக் கவலைப்படாமல் இருக்கச் சொன்னாலும், ‘ஏன் ராஜாண்ணா அம்மாக்கூட பேச மாட்டிக்கிறாங்க?’ என்ற கேள்வி தலைக்குள் வந்து நின்று கொண்டு, அவளைக் கவலைப்படச் செய்தது.
இரண்டு நாட்கள் கழித்து, லிங்கம் வீடு
சுடரின் அறை
கீழே சாப்பிடக் கிளம்பும் போது ஒரு கைப்பேசி அழைப்பு வந்தது. யாரென்று பார்த்தாள். கல்லூரியில் இளங்கலை பயிலும் போது அவளது ஜூனியர் என்பதால், அழைப்பை ஏற்று, “சொல்லு மதி” என்றாள்.
“அக்கா எப்படி இருக்கீங்க?” என்று சம்பிரதாயக் கேள்வி கேட்டு பேச்சை ஆரம்பித்ததும், “ம்ம்ம் நல்லா இருக்கேன். என்ன விஷயமா ஃபோன் பண்ண?” என்றாள்.
“ஒரு ஹெல்ப் வேணும்-க்கா! முடியுமா?”
“என்னென்னு சொல்லு பார்க்கிறேன்?”
“இன்ஜினியரிங் என்ட்ரன்ஸ் எக்ஸாம் நியூஸ் இருக்கு-ல? அதைப் பத்திக் கொஞ்சம் டீடெயில்ஸ் கலெக்ட் பண்ணியிருக்கேன். நீங்க அதைக் எடிட் பண்ணித் தரணும்”
“எந்த டிஸ்ட்ரிக்ட்-ல நடந்தது? ஏன் கேட்கிறேனா அரியலூர், ஈரோடு செங்கல்பட்டு-ன்னு மூணு டிஸ்ட்ரிக்ட்-ல இந்த நியூஸ் வந்திருக்கு அன்ட் கேஸ் ரெஜிஸ்டர் ஆகியிருக்கு”
“நான் சொல்றது ஈரோடு டிஸ்ட்ரிக்ட்-ல. நான் கலெக்ட் பண்ண டீடெயில்ஸ் தர்றேன். அதை ஒரு 20 மினிட்ஸ் வர்ற மாதிரி எடிட் பண்ணனும்”
“நீ மெயில் பண்ணு. நான் பார்க்கிறேன். பட், நானும் இந்த நியூஸ் பத்தி சில டீடெயில் கலெக்ட் பண்ணியிருக்கேன். ஸோ, ஒரு 30-40 மினிட்ஸ் வர்ற மாதிரி பண்ணா உனக்கு ஓகேவா?” என்றதற்கு, “பரவால்ல பண்ணுங்க-க்கா” என சம்மததித்ததும், விடைபெற்று அழைப்பைத் துண்டித்தாள்.
எதிர்காலம் பற்றித் திட்டமிடும்படி வீட்டுச் சூழல் இல்லாததால், இது போன்று கல்லூரியில் பழக்கமானவர்கள் கேட்கும் பொழுது செய்திகளைத் திருத்தி தந்து கொண்டிருக்கிறாள். பேசியதை அசைபோட்டுக் கொண்டிருக்கையில், “சுடர்” என்று அழைத்தபடியே லதா அறைக்குள் வந்தார்,
“ம்மா! நானே சாப்பிட கீழே வரணும்னு நினைச்சேன். நீங்க என்ன மேல வந்திருக்கீங்க?” என்று அவரை நோக்கிச் சென்றபடியே கேட்டாள்.
அவர் அதற்கு பதில் சொல்லாமல், “சுடர்… ராஜா-கிட்ட… எனக்காக ஒன்னு கேட்கணும்… கேட்கிறியா?” என்று தயங்கியபடியே கேட்டார்.
“என்னம்மா கேட்கணும்?”
“நான் கேட்டுப் பார்த்திட்டேன்… பதில் சொல்ல மாட்டிக்கிறான்… அதான்…” என மீண்டும் தயங்கியவர், “ஏன் என்கூட… பேச மாட்டிக்கிறான்னு… கேட்கிறியா?” என்று வருத்தத்துடன் கேட்டார்.
ஒரு பெரு மூச்சு விட்டபடியே அம்மாவின் முக வாட்டத்தைப் பார்த்து, “நீங்க இதையே நினைச்சிக்கிட்டு இருக்காதீங்க” என்றவள், “சாப்டீங்களா?” என்று கேட்டாள்.
அமைதியாக நின்றவரிடம், “ம்மா! ராஜாண்ணா மதுரை போயிருக்காங்க. அவங்க வந்தப்புறம் கேட்கலாம். இப்ப சொல்லுங்க சாப்டீங்களா?” என்று கேட்டாள்.
‘இல்லை’ என்று தலையசைத்ததும், “சரி. வாங்க சாப்பிடலாம்” என்று கீழே கூட்டிச் சென்றாள்.
ஒருநாள் கழித்து மாலைநேரம்…
‘மாவட்ட ஆட்சியர் அலுவலகம் செங்கல்பட்டு’ என பதாகை வைக்கப்பட்ட நுழைவாயிலுக்குள் யாழ்மாறன் வாகனம் நுழைந்தது.
புதிதாகக் கட்டப்பட்டிருந்த செங்கல்பட்டு மாவட்ட ஆயுதப்படை தலைமையகத்தின் திறப்பு விழாவிற்குச் சிறப்பு விருந்தினராகச் சென்றுவிட்டு வருகிறான்.
வாகன முகப்பில் பொருத்தப்பட்டிருந்த தேசியக் கொடி, ஒரு பெருமிதத் தோற்றத்தைத் தந்தது. வாகனத்தின் முன்புறம் சிவப்பு நிற பின்னணியில், ‘அரசு வாகனம்’ ‘மாவட்ட ஆட்சியர் & மாவட்ட நீதிபதி’ என்ற பொன்னிற எழுத்துக்கள் கூடுதல் கம்பீரத் தோற்றத்தைக் கொடுத்தது!
இது வாகனத்திற்கு மட்டுமல்ல, வாகனத்தில் வந்தவனுக்கும் சேர்த்தே!!
கார் கதவைத் திறந்துகொண்டு இறங்கியவன், விறுவிறுவென்று அலுவலக கட்டிடத்தில் அவனுக்காக ஒதுக்கப்பட்ட அறைக்குள் சென்றான்.
அறையில் இருந்த இருக்கையின் முன்னே ஓர் கண்ணாடி மேசை இருந்தது. அதன் இடப்புறம் ஒரு கணினி வைக்கப்பட்டிருந்தது. மேசையின் வலப்புற ஓரத்தில் சிறிய அளவிலான மரத்தாலான அசோகத்தூண் இருந்தது.
மேசை நடுவில், நீள் வட்டவடிவ மரப்பலகையில் இந்திய ஆட்சிப் பணி சேவை சின்னக் கொடி, தேசியக் கொடி நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.
அதனருகில், ‘யாழ்மாறன் IAS’ என்று எழுதப்பட்டிருந்த பெயர் பலகை!
அறைக்குள் வந்தவன், நேரத்தைப் பார்த்துக் கொண்டே இருக்கையில் அமர்ந்து கொண்டான். பின், சுற்றுலா தளங்களின் வளர்ச்சிக்காக, மாநில அரசின் திட்டங்கள் அடங்கிய கோப்புக்களைப் பார்த்துக் கொண்டிருந்தான்.
அக்கணம், அவன் உதவியாளர் காசி வந்து, “சார் கட்அவுட் வைக்கிறதுக்கு பெர்மிஸன் கேட்டு ஆளுங்க வந்திருக்காங்க” என்றதும், ‘வரச் சொல்லுங்க’ என்று சைகை செய்தான்.
சில நொடிகளில், இரு ஆளுங்கட்சி உடன்பிறப்புகள் உள்ளே நுழைந்ததும், “உட்காருங்க” என்றான்.
அவர்கள் உட்கார்ந்ததும், “சொல்லுங்க என்ன விஷயம்?” என்று கேட்டான்.
“அதான் சார், கட்அவுட் வைக்கிற விஷயமா, பெர்மிஷன் வாங்கிட்டுப் போகலாம்னு வந்தோம்” என்று ஒரு படிவத்தைக் கொடுத்தனர்.
வாங்கியவன், “எந்த ஏரியா? பர்டிகுலரா எந்த ரோடு-ன்னு சொல்லுங்க” என்று கேட்டான்.
அவர்கள் சொன்னதும், “அது ரொம்ப சின்ன ரோடு ஆச்சே?! 10 அடிக்கு கம்மியாதான இருக்கும்” என்று யோசித்தான்.
“அமைச்சர் தொகுதிக்கு வர்றாரு. அதுக்காகத்தான் இந்த ஏற்பாடெல்லாம். ஒரு நாள்தான??” என்று கேட்டு, சலுகையை எதிர்பார்த்தனர்.
படிவத்தை அவர்களை நோக்கித் தள்ளியபடியே, “14 அடி-க்கு மேல இருக்கணும். அப்படியே இருந்தாலும், அதுக்கும் நிறைய ரூல்ஸ் இருக்கு. இந்த ரோடு-க்கு கண்டிப்பா பெர்மிஷன் கொடுக்க முடியாது” என்று மறுத்துவிட்டான்.
“நான் வேணா அமைச்சர் பி.ஏ-வ பேசச் சொல்லவா?” என்று அதிகாரத்தை வைத்து, அவனை சரிசெய்ய பார்த்தனர்.
கொஞ்சமும் இசைந்து கொடுக்காமல், “கேள்வி இதுதான்-னா, யார் கேட்டாலும் பதில் ஒன்னுதான்” என்று சொல்லும் பொழுதே, வெளியில் ஏதோ கூக்குரல் கேட்டது.
“சார்” என்று மீண்டும் உடன்பிறப்புகள் இழுத்தபோது, “நீங்க போகலாம்” என முடித்துவிட்டான்.
‘கொஞ்சம் கூட வளைஞ்சே கொடுக்க மாட்டிக்கிறானே. கட்சி மேலிடத்துல சொல்லணும்’ என நினைத்துக் கொண்டே, ஆளுங்கட்சியின் உடன்பிறப்புகள் இடத்தைக் காலி செய்தன.
அவர்கள் சென்றாலும், வேலையில் கவனம் செலுத்த முடியாத அளவிற்கு, வெளியிலிருந்து சத்தம் வந்ததும், “காசி!” என்று உதவியாளரை அழைத்தான்.
அழைத்த குரலுக்கு உள்ளே வந்தவர், “என்ன சார்?” என்று கேட்டு நின்றார்.
“வெளியில என்ன சத்தம்?”
“சார்! மனு கொடுக்க வந்திருக்காங்க”
“இன்னைக்கு கிடையாது. திங்கட்கிழமைதான்னு சொல்லி அனுப்ப வேண்டியதான? அதுக்கு எதுக்குச் சத்தம்??”
“சொன்னா கேட்க மாட்டிக்கிறாங்க சார். ஒரு லேடி ரொம்ப அழறாங்க” என்றதும், எழுந்து வெளியே போனான். காசியும் பின்னயே சென்றார்.
அவன் அறையிலிருந்து வெளியே வரும் பொழுது, பாதுகாவலர்கள் அந்தப் பெண்ணிற்குப் புரிய வைக்க முயற்சி செய்து கொண்டிருந்தனர்.
அழுதுகொண்டே இருந்த பெண் ஆட்சியரைப் பார்த்ததும், “ஐயா ஐயா!” என்று அந்தப் பெண் அவன் முன் வந்து நின்று கொண்டார்.
“இங்க பாருங்க! நான் சொல்றதைக் கொஞ்சம் கேளுங்க” என பொறுமையாக ஆரம்பித்தான். இப்பொழுது பாதுகாவலர்கள் அவன் அருகில் வந்து நின்று கொண்டனர்.
அவன் சொல்ல வருவதைக் கவனிக்காமல், “நீங்கதான் உதவனும்” என்று அழுதார்.
“அவரைப் பேச விடுங்க-ம்மா” என்று காசி சொன்னதும், அந்தப் பெண் கொஞ்சம் அழுகையைக் கட்டுப்படுத்த முயற்சித்தார்.
“மனு கொடுக்கிறதுக்கு முன்னாடி, ஃபர்ஸ்ட் ரெஜிஸ்டர் பண்ணனும்” என்று சொல்லும் பொழுதே, “புரியலைங்க” என்றார்.
“திங்கட்கிழமை வந்து மனுவைப் பதிவு பண்ணுங்க, அதுக்கப்புறமா…” என்று விளக்கையில், “ஐயா! என் பையனைக் கொன்னுட்டாங்க” என்று சொல்லி, சுவரில் சாய்ந்து அழுது, அப்படியே சரிந்து தரையில் உட்கார்ந்துவிட்டார்.
அந்தப் பெண் கத்திச் சொன்னதும், ஆட்சியர் அலுவலகத்திற்கு வேறு வேலையாக வந்தவர்கள் அங்கங்கே நின்று வேடிக்கைப் பார்த்தனர். அதைக் கண்ட மாறன், பாதுகாவலர்களைப் பார்த்தான்.
அவனின் பார்வை புரிந்தவர்கள், வேடிக்கைப் பார்க்க நின்றவர்களை வேலையைப் பார்க்கும்படிச் சொன்னார்கள்.
அழுபவரைப் பார்த்த மாறன், “கொஞ்சம் எந்திரிங்க. என்ன செய்யணும்னு சொல்றேன்” என்று சொல்லிப் பார்த்தான். அவன் குரலைக் கேட்காத அளவிற்கு, அவர் அழுது புரண்டு கொண்டிருந்தார்.
‘என்ன செய்ய?’ என்று நின்றவனைக் கண்ட காசி, “எம்மா, அவர் பேசறார்-ல! கொஞ்சம் காது கொடுத்து கேளுங்க-ம்மா” என்று சொன்னார்.
அப்பொழுதும் அரற்றிக் கொண்டிருந்தவரைப் பார்த்தவன், லேசாக அமர்ந்து, “இங்க பாருங்க, இது போலீஸ் கேஸ். மனு கொடுக்க அவசியமில்லை. நீங்க போலீஸ் ஸ்டேஷன் போய் கம்பளைண்ட் கொடுங்க” என்று விளக்கினான்.
பின் எழுந்து நின்றவன்… காசியைப் பார்த்து, “அவங்களுக்கு ஸ்டேஷன் தெரியலைன்னா…” என சொல்லும் பொழுதே, “ஐயா! கொலை நடந்ததே போலீஸ் ஸ்டேஷன்-லதான்” என்று, அந்தப் பெண்மணி கதறினார்.
மாறனுக்கு அதிர்ச்சி என்றில்லை. இருந்தாலும், இதை எதிர்பார்க்கவில்லை என்பதை அவன் முகம் காட்டியது. அவனுக்கு மட்டுமில்லை, கேட்டுக் கொண்டிருந்த காசி மற்றும் காவலர்களுக்கும்தான்.
இன்னும் இன்னும் அரற்றிக் கொண்டிருந்தவரை, மாறனும் மற்றவர்களும் பார்த்தார்கள். “இன்ஜினீரிங் முடிச்ச பையன். அநியாயமா கொன்னுட்டாங்க” என்று ஆரம்பித்தார்.
dears,
கதையில் வரும் பெயர்களும், சம்பவங்களும் கற்பனையே. மற்றொரு விடயம் பின்னொரு பதிவில் பகிர்ந்து கொள்கிறேன்.