YALOVIYAM 3.1


யாழோவியம்


அத்தியாயம் – 3

அவன் அப்படிச் சொல்லியதும், “ரொம்ப பண்ணாத மாறா!” என்று கடுகடுவென முகத்தை வைத்துக் கொண்டு கோபப்பட்டாள்.

அந்தக் கோபத்தில் குஷியாகிப் போனவன், “நான் என்ன பண்ணேன்? மேடம்தான் கட்சி வேலையில பிஸி” என்று அவளை வம்பிழுத்தான்.

“மாறா?!” என்று அடிக்கும் தொனியில் ஆரம்பித்தவள், “அப்படி இல்லை. ராஜாண்ணா-வ கட்சி வேலை செய்யச் சொல்றேன். அவ்வளவுதான்!” என தன்மையாகவே முடித்தாள்.

“சரி அதை விடு. இப்போ எங்கே இருக்க?” என்று கேட்டதும், கட்சிக் கோடி, கட்சித் தலைவர்களின் சிலைகள், அங்கங்கே நின்று கொண்டிருக்கும் கட்சி ஆட்கள் என அனைத்தையும் சுற்றிப் பார்த்தாள்.

பின் மெதுவாக, “கட்சி ஆபிஸ்” என்றதும், அழைப்புத் துண்டிக்கப்பட்டது. ‘ப்ச்! கட் பண்ணிட்டான்!’ என சொல்லி நிமிர்ந்தவளுக்கு, ராஜா-தினா பேசிக் கொண்டிருப்பது தெரிந்தது.

‘மாறா-கிட்ட பேசணுமே’ என்று உள்ளெழுந்த அவசரத்தில், கார் ஹாரனை அழுத்தி ராஜாவின் கவனத்தைக் கலைத்தாள். திரும்பியவன், ‘வர்றேன்’ என சைகையால் சொன்னான்.

‘ஐயோ’ என்றிருந்தாலும், சுடர் அமைதியாக இருந்தாள்.

சற்று நேரத்தில் கார் கதவைத் திறந்த ராஜா, “காலை-ல டேரைக்டா ஏர்போட் வந்திடு” என தினாவிடம் சொல்லிவிட்டு, காரில் ஏறி அமர்ந்தான்.

சுடரின் முகத்தைப் பார்த்தவன், “என்னாச்சு? ஏன் ஹார்ன் அடிச்ச??” என்று கேட்டதும், “ராஜாண்ணா சீக்கிரமா கார்-அ வெளியே எடு” என பரபரத்தாள்.

“எதுக்கு?” என்று கேட்டாலும், காரை கிளப்பியிருந்தான்.

“மாறா ஃபோன் பண்ணியிருந்தான்” என்றதும், “ஓ! டிசி-கிட்டருந்து ஃபோனா? அதுக்கு எதுக்கு இவ்வளவு டென்சன்?” என சாலைப் போக்குவரத்தைப் பார்த்துக் கொண்டே கேட்டான்.

“அவனோட?! எங்க இருக்க-ன்னு கேட்டான், கட்சி ஆபிஸ்-ல இருக்கேன்-னு சொன்னேன். உடனே ஃபோன் கட் பண்ணிட்டான்” என சிடுசிடு குரலில் சொல்லிமுடித்தாள்.

இலகுவான குரலிலே, ” ’இதுல இன்வால்வ் ஆகாத சுடர்’-ன்னு அன்னைக்கே சொன்னேன். நீதான் கேட்கலை” என்றதும், முகத்தை உம்மெமன்று வைத்துக் கொண்டாள்.

“ஒரு நியூஸ் கலெக்ட் பண்ண கட்சி ஆபிஸ்-க்கு வந்தேன்னு சொல்லி, நீ டிசியை சமாளிச்சிருக்கணும்” என்று யோசனை சொல்லிப் பார்த்தான், அதன்பின்னும் வாயை இறுக மூடிக் கொண்டிருந்தாள்.

‘கோபம் வந்திருச்சி போல’ என நினைத்தவன், “ஆனாலும் டிசி ரொம்ப ஸ்ட்ரிக்ட்! இல்லையா?” என்று அவளை வாய் திறக்க வைக்கும் கேள்வியைக் கேட்டான்.

“ச்சே! ச்சே! அப்படியில்லை ராஜாண்ணா. இந்த விஷயத்தில மட்டும்தான் இப்படி! மத்தபடி ஓகே” என முகத்தில் பிரகாசத்துடன் சொன்னவள், “எங்கயாவது நிறுத்த முடியுமா? அவன்கிட்ட பேசிட்டுப் போகலாம்” என்று கேட்டாள்.

“ம்ம்” என்றவன்… சற்று நேர பயணத்திற்குப் பின், ஆட்கள் நடமாட்டம் இல்லாத இடத்தில் நிறுத்தினான். பின்னர், “பேசிட்டுக் கூப்பிடு. நான் வெளியே நிக்கிறேன்” என்று சொல்லி, இறங்கிக் கொண்டான்.

அவன் போனதும்… மாறனுக்கு மீண்டும் அழைத்து, “மாறா” என உரிமையாக அழைத்ததும், “இப்ப எங்கே இருக்கிற?” என்ற கேள்வியோடே ஆரம்பித்தான்.

“கட்சி ஆபிஸ்-ல இல்லை!! அது போதும்-ல உனக்கு?” என்று கோபத்துடன் சொன்னாள்.

“சரி சரி விடு” என்றவன், “நீ ஏன் அங்க போன? உன் அண்ணனுக்காகவா? இன்னைக்கும் ஸ்கூல் பையன் மாதிரி, கட்சி ஆபிஸ் போக மாட்டேன்னு சொன்னானா??” என்று கேலியாகக் கேட்டான்.

“இப்படிப் பேசாத மாறா! அவங்களைப் பத்தி உனக்கு என்ன தெரியும்? இந்த வயசில ஐடி விங் செக்ரட்டரி தெரியுமா?” என்று பெருமையாகச் சொன்னாள்.

“ஐடி விங் செக்ரட்டரி அவ்வளவுதான். ஏதோ ஐடி வேர்ல்ட்-க்கே கிங் மாதிரி பில்ட்-அப் கொடுக்காத” என, தங்கையை விட அண்ணனை வம்பிழுப்பதில் அலாதி ஆனந்தம் போன்ற குரலில் பேசினான்.

“நீ இப்படியே பேசிக்கிட்டு இரு! நான் ஃபோன் கட் பண்றேன்” என்றதும், “சுடர்! சுடர்! கட் பண்ணிடாத ப்ளீஸ்” என்று கெஞ்சினான்.

அழைப்பிலே அவள் இருந்தாலும் அமைதியாக இருந்ததால், “சரிம்மா! இனிமே என் மச்சானைப் பத்தி ஒரு வார்த்தை பேசலை. போதுமா?” என்று அவள் வசத்திற்கு வந்தான்.

அப்படிச் சொல்லியும் அவள் பேசாமல் இருந்ததால், ‘சரி டாப்பிக் சேஞ் பண்ணலாம்’ என நினைத்தவன், “சாப்டாச்சா சுடர்?” என்று கேட்டுப் பார்த்தான்.

“ஏன்??! சாப்பிடலைன்னு சொன்னா, கேண்டில் லைட் டின்னர் அரேஞ் பண்ணப் போறியா??” என்று அவனை வார ஆரம்பித்தாள்.

‘அய்யயோ! அவ அண்ணனைப் பேசினதுக்கு, என்னை பேசுவாளே!! என்ன செய்ய?’ என்று யோசித்ததால் அமைதியாக இருந்தான்.

மீண்டும் அவளே, “சொல்லுங்க கலெக்டரே! என்ன பண்றீங்க?” என்று கேட்டதும், ‘நார்மலா பேச ஆரம்பிச்சிட்டாளா? இல்லையா?’ என்ற குழப்பத்திலே, “மார்னிங் டைம் கிடைக்கலை சுடர். அதான் இப்ப ஜிம் ஒர்க்கவுட் பண்றேன்” என்று உண்மையைச் சொன்னான்.

“ஏன் நல்ல கலெக்டர்-ன்னு சொன்னா போதாதா? நல்லா இருக்கிற கலெக்டர்-ன்னு சொல்லனுமா?” என்று மீண்டும் வாரினாள்.

“நான் அப்பவே உன் அண்ணன் பத்திப் பேச மாட்டேன்னு சொல்லிட்டேன். ஸோ நீயும்…” என்று கட்டளை போல் சொன்னதும், “ஸோ நீயும்?” என அதையே சுடர் தோரணையாகக் கேட்டதும், “ஒழுங்கா பேசேன் சுடர்” என்று விருப்பத்துடன் வேண்டினான்.

சிரித்துக் கொண்டே, “அதெல்லாம் விடு மாறா! இன்னைக்கு, ஃபர்ஸ்ட் ஃபர்ஸ்ட் நம்ம மீட் பண்ணதை நினைச்சிப் பார்த்தேன்” என்று அதுவரை கலாய்த்துக் கொண்டிருந்தவள் குரல் காதலாக மாறியிருந்தது.

“ஓ! Very funny இல்லையா?”

சிரித்த முகம் அப்படியே சுருங்கிப் போக, “அதுல என்ன funny-யா இருக்கு?” என்று கேட்டாள்.

“நீ தூங்கி எழுந்திரிச்சி உட்கார்ந்திருந்தது அது funny-யாத்தான் இருந்தது”

“அன்னைக்கு அப்படிப் பார்த்திக்கிட்டு நின்ன, இன்னைக்கு இப்படிச் சொல்ற?”

“இப்ப கூட நீ பக்கத்தில இருந்தா, அப்படித்தான் பார்ப்பேன்” என்று காதலன் குரலில் சொன்னதும், அந்தக் குரலின் மடியில் சுகமாய் தலைசாய்த்துக் கொண்டு, சுடர் மௌனமாக இருந்தாள்.

“ஹே சுடர்! என்ன பிளெஸ்ஸிங்கா?” என்று கேட்டதற்கு, “இரு பார்த்துச் சொல்றேன்” என கார் கண்ணாடியைப் பார்க்க எம்பி வரப் பார்த்தாள்.

உடனே, “அது தேவையேயில்லை. நானே சொல்வேன். அப்படியெல்லாம் எதுவும் இருக்காது” என்று உறுதியாகச் சொன்னான்.

“எப்படிச் சொல்ற?”

“ஃபர்ஸ்ட் டைம் பார்க்கிறப்பவே வரலை. இப்போ எப்படி வரும்?”

சிரித்துக் கொண்டே, “அதுவும் சரிதான்” என்று சாதாரணமாகச் சொன்னதும், அவனும் சிரித்துக் கொண்டான்.

பின் சில நொடிகள் அமைதி நிலவியது. அது முடிந்ததும், “மாறா” என்று கடகடவென அவன் உயிரை உருட்டும் குரலில் அழைத்தாள்.

அதை உணர்ந்து சிலிர்த்துக் கொண்டே, “சொல்லு சுடர் என்ன வேணும்?” என்று புரிந்து கேட்டான்.

“மீட் பண்ணி ரொம்ப நாளாச்சு மாறா. பார்க்கணும் போல இருக்கு” என்று ஆசை, ஏக்கம் கலந்த ஒரு குரலில் கேட்டாள்.

“சரி. டைம் டேட் சிச்சுவேஷன் பார்த்துட்டு சொல்றேன். கண்டிப்பா மீட் பண்ணலாம். சரியா?” என்று காதலையும் காதலியையும் வழிநடத்தும் குரலில் சொன்னான்.

“ம்ம்! ராஜாண்ணா வெயிட் பண்றாங்க. ஸோ நாளைக்குப் பேசலாம்”

“சரி” என்றவன், அவள் திரும்பச் சொல்ல மாட்டாள் என்று தெரிந்திருந்தும், “விர்ச்சுவல் ஹக்ஸ் அன்ட் கிஸ்ஸஸ்” என்று சொல்லி, அழைப்பைத் துண்டித்தான்.  

பேசிவிட்டுக் கைப்பேசியை வைத்த மாறனுக்கு, முதல் சந்திப்பைப் பற்றிச் சுடர் பேசியது, இரண்டாவது சந்திப்பு எங்கே, எப்படி நடந்தது? என்று நினைத்துப் பார்க்க வைத்தது.

காதல் ஓவியம் அத்தியாயம் – 2

முதல் சந்திப்பிற்கு அடுத்த நாள்…

கல்லூரி முடிந்திருந்ததால், மாணவர்களில் அதிகம் இல்லாத மாலை நேரத்தின் அமைதியில் கல்லூரி வளாகம் இருந்தது.

தினமும் வந்து போய் படிக்கும் மாணவர்களில் பெரும்பாலானோர் கிளம்பிச் சென்றிருந்தார்கள். சில மாணவர்கள் மட்டும்… வாகனங்கள் நிறுத்தும் இடத்திலும், சிற்றுண்டிச் சாலையிலும் நின்று விடுதி நண்பர்களுடன் அரட்டை அடித்துக் கொண்டிருந்தனர்.

ஏதோதோ எண்ணங்களுடன் தனியாக நடந்து வந்து கொண்டிருந்த சுடரின் கண்கள், எதேச்சையாக நேற்று பார்த்தவனைப் பார்த்தன. கல்லூரி நிறுவனரின் சிலை இருந்த மண்டபத்தின் திண்டில் அமர்ந்து படித்துக் கொண்டிருந்தான்.

‘இவனுக்கு ஐடி கார்டு திருப்பிக் கொடுக்கணு-ங்கிற ஐடியா இருக்கா? இல்லையா? ரொம்ப கூலா உட்கார்ந்து படிச்சுக்கிட்டு இருக்கான். அது இல்லாம எனக்கு எவ்வளவு கஷ்டம்?’ என்ற எண்ணத்துடன், அவனை நோக்கி நடந்தாள்.

அவன் அருகில் வந்து சுடர் நின்றபின்பும், புத்தகத்திலே அவனது முழுகவனம் இருந்தது. ‘இப்படிப் படிக்கிறானே! என்ன செய்ய?’ என தெரியாமல், அவன் பக்கத்தில் கிடந்த புத்தகங்கள், ‘காலேஜ் பேக்’, அவனது அடையாள அட்டை என ஒவ்வொன்றாய் பார்த்துக் கொண்டே நின்றாள்.

இன்னும் அவன் தலை நிமிர்ந்து பார்க்கவில்லை என்றதும், அவன் தன்னைப் பார்க்க வேண்டுமென தொண்டையைச் செருமினாள்.

அந்தச் சத்தத்தில்… புத்தகத்தின் பக்கங்களில் இருந்த கவனம் கலைந்து, நிமிர்ந்து பார்த்தான். நின்றிருந்தவளைப் பார்த்தவன் முகத்தில் சட்டென்று ஒரு முறுவல் வந்தது.

‘இப்பவாவது பார்த்தானே!’ என்று சுடரும் லேசாக முறுவலிக்கும் பொழுதே, ‘ஒரு நிமிஷம்’ என்று சைகையில் சொன்னவன், தன் ‘காலேஜ் பேக்’-லிருந்து சுடரின் அடையாள அட்டையை எடுத்து நீட்டினான்.

‘கேட்காமலே கொடுத்திட்ட’ என்று மெச்சுவது போல் முறுவலை சற்றே விரிவுபடுத்தி, அதை வாங்கிக் கொண்டாள்.

அதன்பின், ‘என்ன பேச?’ என்ற தயக்கத்தில் மீண்டும் குனிந்து கொண்டான். ஆனால், ‘ஏதாவது பேச வேண்டும்?’ என்ற ஆர்வத்தில், அவள் அந்தத் திண்டில் அமர்ந்தாள்.

அவள் அமர்ந்ததை உணர்ந்ததும், ‘பெயரைக் கேட்பாள். அப்படியே பேச்சை ஆரம்பிக்க வேண்டும்’ என்று உள்ளுக்குள் திட்டமிட்டான்.

ஆனால் சுடரோ ஏதும் பேசாமல், இருவருக்கும் இடையே கிடந்த அவனது புத்தகங்களை எடுத்துப் புரட்டிக் கொண்டிருந்தாள். பக்கத்தில் இருப்பவளை ஓர விழிகளால் பார்த்தபடியே, அவனும் புத்தகத்தின் பக்கங்களைப் புரட்டிக் கொண்டிருந்தான்.

சட்டென புத்தகத்தை வைத்துவிட்டு, அவனது அடையாள அட்டையை எடுத்துப் பார்க்க ஆரம்பித்தாள். இக்கணம், நன்றாகத் திரும்பி அவளைப் பார்த்தான்.

அவன் பார்க்கிறான் என உணர்ந்ததும், அடையாள அட்டையில் எழுதியிருந்த ‘யாழ்மாறன்’ என்ற அவனது பெயரை ஓசை வராமல் உதட்டை மட்டும் அசைத்து வாசித்தாள், ‘ஓவியச்சுடர்’.

அவளின் அந்த உதட்டசைவு, அவனை அசைத்துப் பார்த்தது. அவள் உதடுகளுக்கு இடையே உச்சரிக்கப்பட்ட அவன் பெயர், அவனது உள்ளத்தை நச்சரிக்கத் தொடங்கியது.

அடையாள அட்டையைக் கீழே வைக்காமல், அவனிடம் நீட்டினாள். அவன் வாங்க முற்படுகையில், தன் கையைப் பின்னோக்கி எடுத்து, அவனை ஏமாற்றினாள்.

‘அட!’ என்பது போல் அவன் அவளைப் பார்த்ததும், கண்களால் சிரித்தாள். அவனும் புன்னைகைத்துக் கொண்டான்.

தயக்கங்கள் குறைந்து, சுடர் ஏதோ பேச வருகையில், ‘சுடர்! இங்கே என்ன பண்ற?’ என்றொரு தோழியின் குரல் வந்தது. அதைக் கேட்டதும், அவனது அடையாள அட்டையைப் போட்டுவிட்டு, திண்டிலிருந்து குதித்து ஓடப் பார்த்தாள்.

சட்டென, ‘சொல்லாமல் போகிறோமே’ என்று நியாபகம் வந்ததும், திரும்பிப் பார்த்தாள். அவனும் ‘பேசாமல் போகிறாயே?’ என்பது போல் பார்த்தான்

அதற்குள், ‘சுடர் வா’ என்று மீண்டுமொரு முறை அழைப்பு வந்தது.

புத்தகத்தின் பக்கங்களைப் புரட்டிக் கொண்டிருந்தவனை, புரட்டிப் போடும் வண்ணம், ‘பிரண்ட்ஸ்! போகணும்?’ எனக் கண்களால் பேசி, சைகையால் ‘பை’ என்று சொல்லிவிட்டு ஓடிவிட்டாள்.

அந்தச் சந்திப்பின் முடிவில் இருவருக்குள்ளும் எழுந்த ஈர்ப்பு இன்னும் அதிகமானது.  

யாழோவியம் அத்தியாயம் – 3 தொடர்கிறது…

நிகழ்கணத்திற்கு வந்தவன், சுடர் சொன்னது போல் ‘யாழ்மாறன்’ என்று சொல்லிப் பார்த்தான்.

காதலால் தன்னை புரட்டிப் போட்டுக் கொண்டிருப்பவளை நினைத்து, இன்று தூக்கம் வராமல் புரண்டு புரண்டு படுக்கப் போவது உறுதி என்று சிரித்துக் கொண்டே உடற்பயிற்சியில் ஈடுபட்டான்.

சற்று நேரத்தில், “மாறன்” என்று அறையின் வெளியிலிருந்து ஓர் அழைப்பு வந்தது.

உள்ளிருந்தே, “வர்றேன்-ம்மா” என்று சொல்லி கதவைத் திறந்ததும், “இன்னும் ஒர்க் அவுட் முடியலையா? இவ்வளவு நேரம் என்ன பண்ண?!” என்று அவனது அம்மா திலோ கேட்டார்.

தன் காதல் பற்றி வீட்டில் தெரியாததால், “சாரி சாரி-ம்மா! ஒரு பைவ் மினிட்ஸ் கொடுங்க. வந்திடுறேன்” என்று சமாளிக்க பார்த்தான்.

“எதுக்கு இவ்வளவு நேரம் ஒர்க் அவுட்? சாப்பிட வேண்டாமா? பசிக்காதா?” என்று அலுத்துக் கொண்டே கேட்டவர், “தியாகு! இவனைப் பாருங்க” என்று கணவரிடம் முறையிட்டார்.

“ப்பா! பைவ் மினிட்ஸ்தான். கொஞ்சம் அம்மாகிட்ட சொல்லுங்களேன்” என்று அவனும் அப்பாவைத் துணைக்கு அழைத்தான்.

இன்னும் சமாதானமாகாமல் நிற்கும் மனைவியைப் பார்த்த தியாகு, “திலோ இங்கே வா” என்று அழைத்ததும், ‘இனி அப்பா பார்த்துக் கொள்வார்’ என்ற எண்ணத்தில், மாறன் மீண்டும் அறைக்குள் சென்றுவிட்டான்.

தியாகுவை நோக்கிச் சென்ற திலோ, “ஹி…” என தொடங்கும் போதே, “ஒர்க் டென்சன் இருக்கும். ரிலாக்ஸ் ஆகிட்டு வருவான். அதுவரைக்கும் நாம பேசிக்கிட்டு இருக்கலாம்” என்றதும், கணவர் அருகில் திலோ அமர்ந்தார்.

இதுதான் மாறனின் தாயார் திலோத்தமா. கணவர் தியாகுவால் திலோ என்று அழைக்கப்படுபவர். பூச்செண்டு விற்பனை தொழில் செய்து வருகிறார்.

திலோவிற்கு தியாகு மீது அளவுகடந்த அன்பு உண்டு. தியாகுவைச் சார்ந்தே வாழ்ந்து பழகியவர். தியாகு மீது அவருக்கு அவ்வளவு காதல். தியாகுவை அவருக்கு அவ்வளவு பிடிக்கும். ‘தான், மகன், கணவர்’ என்ற உலகத்தில் வாழ்க்கையை ரசித்து வாழ்ந்து கொண்டு வருகிறார்.

அடுத்து மாறனின் தந்தை தியாகு. துணை காவல் பொது ஆய்வாளர், காவல் ஆணையர், குற்றப்பிரிவு துணை ஆணையர் என சில மாநிலங்களில் பணிபுரிந்திருக்கிறார். கடைசியாக ஜார்கண்ட் மாநிலத்தில் காவல் துறை தலைமை இயக்குனராக இருந்து பணி ஓய்வு பெற்றவர்.

சில விசாரணை ஆணையக் குழுவில் உறுப்பினராக இருந்து பணியாற்றிய அனுபவமும் உண்டு. மகனின் கல்வித்தகுதி, அவனது ஆட்சியர் பணி, அதில் அவன் செயல்பாடுகள் குறித்து மிகவும் பெருமைபட்டுக் கொள்வார்.

சற்று நேரம் திலோவும் தியாகுவும் பேசிக் கொண்டிருக்கும் போதே, மாறன் வந்து விட்டான். அவர்களுடன் சேர்ந்து பேசியபடியே இரவு உணவையும் எடுத்து முடித்தான்.