Mazhai -12

Mazhai -12
அத்தியாயம் – 12
வீடு வந்து சேர்ந்த சிற்பிகாவின் மனதில் வெறுமை சூழ்ந்தது. இத்தனை நாளாக நெஞ்சில் மறைத்து வைத்திருந்த காதல் கரையுடைத்து கண்ணீராக வெளியே வந்தது.
திருமணமான நாளில் இருந்தே அவளுக்கு முகிலனைப் பிடிக்கும். அவனின் மீது அளவுகடந்த காதலை வைத்திருந்த போதும், அவன் முன்பு வேண்டுமென்றே பிடிக்காதது போல நடந்து கொண்டாள். ஒவ்வொரு நாளும் அவனோடு சண்டை போட்டுவதில் தொடங்கிய நேசம் நாளுக்கு நாள் வளர்ந்தது என்றே சொல்லலாம்.
அந்த நேரத்தில் யாரிடமாவது அதைச் சொல்லிவிட்டால் மனதில் உள்ளம் பாரம் குறையுமே என்று நினைக்கும்போது மனக்கண்ணில் தாயின் முகமே தோன்றியது.
சுவற்றில் மாட்டபட்டிருந்த புகைப்படத்தை எடுத்து நெஞ்சோடு சேர்ந்தணைத்து, “அம்மா நான் மறுபடியும் அனாதையாக நிற்கிறேன் மா. உன் பொண்ணுக்கு நல்ல வாழ்க்கை கிடைச்சும் அதை சரியாக காப்பாத்திக்க தெரியலமா. முகிலன் என்னைவிட்டு நிரந்தரமாக விலகி போயிட்டான் மா” என்று கதறி அழுதாள்.
இங்கே ஒருத்தி தனியாக கதறுவதை அறியாத முகிலனின் நினைவுகள் அவளைச் சுற்றியே வலம் வந்தது. முதல் முறையாக அவளை மணமேடையில் தான் பார்த்தான். ஏனோ பார்த்த நொடியே மனதில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி இருந்தாள்.
ஒவ்வொரு முறை அவன் காயப்படுத்தும் போதும் அதை பெரிதாக எடுத்துகொள்ளாமல், எந்தநேரமும் அவனோடு சரிக்கு சரி சண்டையிட்டு வீட்டில் கலகலப்பை உருவாக்கிய பெண்ணின் மீது அவனுக்கு எப்படி காதல் வந்தது இன்றுவரை விடை கிடைக்காத கேள்விதான்.
தன்னுடைய குணங்களை மாற்றிக்கொள்ள அவள் எடுத்த முயற்சி, ஒற்றை முறைப்பில் ஆறடி ஆண்மகனை அடைக்கிவிடும் தோரணை அனைத்தும் ரசித்தான். அவள் மீதான காதலை வெளிப்படையாக சொன்னாலும் புரிந்துகொள்ளும் அளவிற்கு பக்குவமான வயது இல்லை என்ற காரணத்தாலும், அவளது படிப்பை மனதில் வைத்தும் இந்த முடிவை எடுத்திருந்தான்.
ஆனால் கடைசியாக அவள் தன்னிடம் விவாகரத்து பத்திரம் கொடுத்ததை அவனே எதிர்பார்க்காத ஒன்று. அதில் மனம் முற்றிலுமாக உடைந்து போனது. இதோ இன்று கிளம்பும்போது அவள் விறைப்பாக நின்றிருந்ததை கண்டு மனமெங்கும் வலி பரவியது.
“என்னை உன்னிடம் விட்டு செல்கிறேன்
ஏதும் இல்லையே என்னிடத்தில்
எங்கே போவது யாரைக் கேட்பது
எல்லா பாதையும் உன்னிடத்தில்
ஏன் எந்தன் வாழ்வில் வந்தாய்?
என் இரவையும், பகலையும் மாற்றி போனாய்..
ஏன் இந்த பிரிவை தந்தாய்..
என் இதயத்துள் தனிமையை ஊற்றிப் போனாய்..
உள்ளே உன்குரல் கேக்குதடி
என்னை என் உயிர் தாக்குதடி”
பாடல் வரிகளை முனுமுனுத்தது அவனது உதடுகள். சிந்து இருக்க வேண்டிய இடத்தில் இவளா என யோசித்த காலம்போய், சிற்பிகா இல்லாமல் வாழ்க்கையே இல்லையென்று மாறிப்போனது.
இரவெல்லாம் தூங்காத களைப்பில் விழி மூட இருபுருவங்களின் மத்தியில் வந்து நின்றாள். சிறிதுநேரம் முயன்று ஆழ்ந்த தூக்கத்திற்கு சென்றான். பிளைட் இலண்டனில் தரையிறங்கியதும், செக்கிங்கை முடித்துக்கொண்டு வெளியே வந்தனை அழைத்துச் செல்ல நிறுவனத்தில் இருந்து ஆள் வருவார்கள் என்றனர்.
அவன் வெளியே வந்ததும் பார்வையைச் சுழற்ற, கிட்டத்தட்ட அவனது வயதுடையவனின் கையில் இருந்த பெயர் பலகையில் தன் பெயரைக் கண்டு, “திவாகர்” என்று கேட்க அவனும் ஒப்புதலாக தலையசைத்தான்.
“ஐ எம் முகிலரசன்” என்று அவன் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டான்.
“நீங்க தமிழா?” அவன் கேள்வியாக இழுக்க, “யெஸ்” என்றதும் முகத்தில் எல்லையில்லாத சந்தோசம் பரவியது.
உடனே அவனது கையில் இருந்த ட்ராலியை வாங்கி, “நான் எதிர்பார்க்கவே இல்ல. நம்ம கம்பெனியில் நானும் உங்க டீம் என்று சொன்னாங்க. உங்களை பார்த்து மனசுக்கு நிறைவாக இருக்கு” என்றவன் பேசியபடி முன்னே சென்றான்.
அதுவரை இருந்த கவலையை மறந்து, “நான் இவ்வளவு ஜாலியாக பேச ஆள்கிடைக்கும் என்று நினைக்கவே இல்ல. நம்ம ஊர்விட்டு வந்துடோம்னு கொஞ்சம் வருத்தம் இருந்தது உங்களை பார்த்தபிறகு ஐ எம் பீலிங் பெட்டர்” என்று புன்னகைத்தான்.
இருவரும் காரில் இருப்பிடம் நோக்கி பயணித்தனர். ஒரு ஹால், இரண்டு பேட் ரூம், ஒரு கிச்சன் என்று கச்சிதமாக இருந்த வீடு அவனுக்கு மிகவும் பிடித்துப் போனது.
“நீங்க இந்த ரூமில் தங்கிகோங்க முகில். அப்புறம் இங்கே வெளியே சாப்பிடும் செலவு அதிகம் என்பதால் நானே சமைப்பேன். உங்களுக்கு வேண்டும் இருவரும் வேலையை பகிர்ந்து செய்யலாம்” என்றபடி அவன் அறையைவிட்டு வெளியேற, பயணக்களைப்பு தீர குளித்துவிட்டு வந்து வீட்டிற்கு அழைத்தான்.
அவனது அழைப்பை எடுத்த மகேஸ்வரி, “தம்பி ஊருக்குப் பத்திரமாக போய் செர்ந்துவிட்டாயா?” என்று தவிப்புடன் கேட்டார்.
தாயின் குரல்கேட்டவுடன் வழக்கத்திற்கு மாறாக கண்களில் கண்ணீர் திரையிட, “ம்ஹும் நல்லபடியாக வந்துட்டேன் அம்மா” என்று தொடங்கி சிறிதுநேரம் பேசியவன் கடைசியாக சிற்பிகாவிடம் வந்து நின்றான்.
“அம்மா சிற்பிகா உங்களோடு வீட்டுக்கு வந்தாளா?” அவன் தயக்கத்துடன் கேட்க,
“இல்லடா! அவ அப்படியே மழையில் நனைந்துகொண்டே வீட்டுக்குப் போயிட்டா. இந்தபொண்ணு ரொம்ப நல்லவன்னு நினைச்சு உனக்கு கட்டிவச்சு உன் வாழ்க்கையை பாழாக்கி விட்டேனோ என்று ரொம்பவே கவலையாக இருக்குபா” என்றார் கண்கள் கலங்க.
இத்தனை நாளாக இல்லாமல் இன்று அவர் பேசுவதைக் கேட்டு, “என்னம்மா இப்படி பேசறீங்க?” என்றான் புரியாத பாவனையோடு.
“பின்ன என்னடா.. நீ எங்களைவிட்டு பிரிஞ்சி போவதை நினைத்து நாங்க எல்லோரும் வருத்தமாக இருக்கோம். இவ என்னவோ எவனோ எக்கேடு கேட்டால் எனக்கென்னன்னு சிலை மாதிரி நிற்கிற.. நெஞ்சில் கொஞ்சமாவது ஈரம் வேண்டாம்” என்று சிற்பிகாவை கோபத்தில் திட்டித் தீர்த்தார்.
அதே நேரத்தில் அவள் மழையில் நனைந்த விஷயம் தெரிந்தவுடன் உள்ளம் சந்தோஷத்தில் துள்ள, “அம்மா இதுக்காக வருத்தப்பட தேவையில்லம்மா. ரொம்ப சின்னபொண்ணு கொஞ்சநாளில் அவளே புரிந்துகொள்வாள். நீங்க அவளை டிஸ்டப் பண்ணாதீங்க. அவ படிப்பை முடிக்கட்டும் பிறகு பேசலாம்” என்று அவன் மனைவிக்கு சப்போர்ட் போட்டான்.
அவன் சொன்னதைக்கேட்டு கோபம் தலைக்கேற, “ஆமா உனக்கு உன் பொண்டாண்டி படிப்புதானே முக்கியமாக போச்சு. இருவரும் சேர்ந்து எனக்கொரு பேரபிள்ளையை பெத்து தருவீங்க என்று நினைச்சேன் எல்லாமே கனவாக போயிரும் போல” என்று புலம்பிவிட்டு போனை வைத்தார்.
அடுத்தடத்து வந்த நாட்களில் தன்னை முழுவதுமாக பணியினில் ஈடுபடுத்திக் கொண்டான். அதே நேரத்தில் திவாகர் நட்பு கிடைத்த காரணத்தால் ஓரளவு தன் மனக்கவலை மறந்து நடமாட தொடங்கினான்.
அந்த வார இறுதியில் விடுமுறை தினமென்ற காரணத்தால் மற்ற நண்பர்களோடு சேர்ந்து டிஸ்கொத் செல்லும்போது முகிலனையும் உடன் அழைத்துச் சென்றான். அங்கே எல்லோரும் அரை இருட்டில் குடித்துவிட்டு கண்டபடி ஆட்டம் போட, “நீ டிரிங் பண்ணுவியா?” என்றான் திவாகர்.
“இல்லடா! அதை கையில் தொடக்கூடாது என்று முடிவு செஞ்சிருக்கேன்” முகிலன் சன்ன சிரிப்புடன்.
“அப்போ நீயும் என்னை மாதிரிதானா?” என்றவன் ஆச்சரியத்துடன் கேட்டான்.
அவனை திகைப்புடன் ஏறிட்டு, “உனக்கு டிரிங் செய்ய பிடிக்காதா?” என்றவுடன் இடமும், வலமும் தலையசைத்து மறுத்தான் திவாகர்.
“நானும் இதெல்லாம் குடிச்சவன்தான். என்னோட செல்ல பிசாசு ஒன்னு இந்தியாவில் இருக்கு. அது என்னை ஒருநாள் லேட் அண்ட் ரைட் வாங்கிய பிறகு இதை தொடுவதற்கு கூட மனசு வருவதில்லை” சிரிப்புடன் அவன் விளக்கம் கொடுத்தான்.
முகிலனின் மனக்கண்ணில் சிற்பிகாவின் முகம் தோன்றி மறைய, “யார் உங்க லவ்வரா?” என்று கேட்க, “ஐயோ அவன் என் தங்கச்சி. இப்போ காலேஜ் படிச்சிட்டு இருக்கிற.. என்கிட்ட சொல்லாமல் மேரேஜ் பண்ணிகிட்ட கோபத்தில் பேசாமல் இருக்கேன்” ஏதோ நினைவில் மனதில் இருந்த பாரத்தை அவனிடம் இறக்கி வைத்தான்.
அவனது முகத்தில் தெரிந்த வலி மனதை என்னவோ செய்ய, “உங்களிடம் சொல்லாமல் மேரேஜ் செய்துகிட்டாங்களா? அதுவும் காலேஜ் படிக்கின்ற பொண்ணு” என்றவன் கேள்வியாக நிறுத்தினான்.
அதற்குள் திவாகர் செல்லிற்கு மெயில் ஒன்று வரவே, “இங்கே பாருங்க அவதான் அனுப்பியிருக்கிற. நான் இன்னும் எந்த மெயிலுக்கும் பதில் அனுப்பல. என்னை அவ அண்ணனாக நினைக்கல. அதனாலே தான் யாரும் இல்லாத அனாதை என்று சொல்லி கல்யாணம் செய்தாள்” அவன் கோபத்தில் பொரிந்து தள்ளினான்.
சிலநிமிடங்கள் இருவருக்கும் இடையே அமைதி நிலவியது.
சட்டென்று எழுந்த திவாகர், “ஸாரி அப்சட்டாக இருக்கு. நான் வீட்டுக்குப் போறேன்” என்று அவன் அங்கிருந்து கிளம்ப முகிலனும் அவனோடு சேர்ந்து கிளம்பிவிட்டான்.
இரவு உணவை முடித்துவிட்டு அறைக்குள் செல்ல போன திவாகரை நிறுத்தி, “நீ பேசுவதைக் கேட்டால் அவளுக்கும் இருக்கின்ற ஒரே உறவு நீதான்னு தோணுது. அதனால் கோபத்தை ஒதுக்கி வச்சிட்டு கொஞ்சநேரம் அவளோடு பேசு. நான் பேசியது தவறு என்று நினைச்சால் மன்னிச்சுக்கோ” என்று அறைக்குள் சென்று மறைந்தான்.
முகிலனின் பேச்சில் இருந்த உண்மை மனதைப் பாதிக்க, ‘என் சொந்த தங்கச்சியாக இருந்தால் இப்படி பேசாமல் இருந்திருப்பேனா?’ என்ற கேள்வி நெஞ்சில் எழுந்தது.
நேராக அறைக்கு சென்று பலநாள் திறக்காமல் வைத்திருந்த ஸ்கைப் அக்கௌன்ட் ஓபன் செய்து பார்த்தான். அவனது செல்ல பிசாசிடம் இருந்து நிறைய மெசேஜ் வந்திருந்தது.
“டேய் அண்ணா உன்னிடம் சொல்லாமல் கல்யாணம் செய்தது தவறுதான் மன்னிச்சுக்கோ. எனக்கு ஒரு பாதுகாப்பு வேணும்னு தான் இந்த முடிவெடுத்தேன்” அதை வாசித்த திவாகர் முகம் மாறியது.
‘இதைவிட்டால் பாதிகாப்பு வேறு வழியே இல்லை பாரு’ மனதிற்குள் நினைத்தபடி மேலும் வாசித்தான்.
அவன் இந்தியாவிற்கு வந்தால் மட்டுமே கணவனின் பெயரை சொல்வேன். அவனை நேரில் அறிமுகபடுத்தும் ஆசையில் இப்போது உனக்கு போட்டோ அனுப்பவில்லை என்ற தகவல் கண்டு வாய்விட்டுச் சிரித்தான் திவாகர்.
பிறகு, “நானே மணமேடையில் தான் அவரை பார்த்தேன். நீ பார்த்தால் கூட இவ்வளவு அழகான ஆளை தேடிகண்டுபிடிக்க முடியாது. அந்தளவுக்கு உன் மச்சான் அழகோ அழகு..” என்று சைட் அடித்த விஷயத்தை பகிர்ந்தாள்.
‘திடீர்னு திருமணம் செஞ்சிகிட்ட படிப்பை பாதியில் நிறுத்தி இருப்பாளோ?’ என்று மனம் பதை பதைக்க, “ஹே இன்னைக்கு அவரும் நானும் கோவிலுக்கு போனோம். அங்கே புவனாவை மீட் பண்ணேன். இப்போ திரும்ப நான் காலேஜ் போக போறேன்” என நடந்ததை விரிவாக சொன்னாள்.
அதை படித்தபிறகு மனம் அமைதியடைய, “அம்மா ஆசைப்படி நான் எப்.எம்.மில் ஆர்.ஜே.வாக ஜாயின் பண்ணிருக்கேன். என் வீட்டுக்காரர் சம்மதத்துடன்’ தன் சந்தோஷத்தை கூற, ‘இவளுக்கு இருக்கும் வாய்க்கு சரியான இடத்தில் தான் வேலைக்கு போயிருக்கிற’ என்று நினைத்துகொண்டான்.
“இன்னைக்கு நான் அந்த ஆன்டியை எங்க வீட்டில் மீட் பண்ணேன். என் கணவரும், அவங்க மகனும் ஃப்ரெண்ட்ஸ் என்ற உண்மை தெரிஞ்சிது. அத்தோடு அந்த வீட்டைக் கேட்டாலும் நான் எழுதி தந்திருப்பேன் என்று சொன்னாங்க” சோகமாக அனுப்பியிருக்க, ‘வாழ்க்கை ஒரு வட்டம்தான். எங்கே போனாலும் நடந்ததை நினைவுபடுத்த யாராவது வந்துருவாங்களே’ மனதினுள் பொரிந்து தள்ளினான்.
“அவரை வெளிநாடு அனுப்ப நிறுவனம் முடிவெடுத்து இருக்கு. நான் காலேஜ் போவதால் என்னை தனியாக விட்டுட்டுப் போக கொஞ்சம் யோசிச்சாரு. நான்தான் அவரை வற்புறுத்தி சம்மதிக்க வச்சேன்” என்ற தகவலோடு இப்போது வீடு மாறியிருக்கும் இடம் மற்ற தகவலையும் சொன்னாள்.
“நேற்று அவரு வெளிநாடு போயிட்டார் அண்ணா. என்னால் அதை தாங்கவே முடியல. ஆனால் இந்த பிரிவு இன்னும் நெருக்கத்தை அதிகரிக்கும்னு அதை எனக்குள் மறச்சுகிட்டேன். அங்கே போனதும் எனக்கு மெசேஜ் செய்தார்” என்று மொத்தத்தை அவனிடம் சொல்லி இருந்தாள்.
இப்படி ஒவ்வொரு மெசேஜ் வழியாக அவளது தகவல்கள் மற்றும் மனநிலையை புரிந்துக் கொண்ட திவாகருக்கு கோபம் கொஞ்சம் குறைந்தது. ஆனால் அவளுக்கு போன் செய்யவோ, அவள் அனுப்பிய குறுஞ்செய்திகளுக்கு பதில் அனுப்பவோ மனம் வரவில்லை.
‘நான் இருக்கும்போது அனாதை என்று சொல்லி திருமணம் செஞ்ச ஒரே காரணத்திற்காக இவளோடு கொஞ்சநாள் பேசாமல் இருக்கணும்’ என்று மனதிற்குள் முடிவெடுத்துவிட்டு கடிகாரத்தை பார்த்தவன் உறங்க சென்றான்.
மறுநாள் காலைபொழுது அழகாக விடிந்தது.
அன்று வழக்கத்திற்கு மாற்றாக முன்பே எழுந்த திவாகர் காபி தயார் செய்து கொண்டிருக்க, “குட் மார்னிங்” என்று அங்கே வந்தான் முகிலன்.
அவனது விழிகள் சிவந்து இருப்பதைக் கண்டு, “என்ன நைட் சரியாக தூங்கவில்லையா?” என்று விசாரிக்க, மறுப்பாக தலைய்சைத்தவன் கையில் காபி கப்பை திணித்தான்.
அதை வாங்கி பருகியவன், “என்னோட இம்சை ஞாபகமாக இருக்கு. நான் இல்லாமல் என்ன செய்யறா என்று தெரியல. என்னோட மனசு முழுக்க அவமீதே இருக்கு” என்று கண்களை மூடியபடி கூறினான்.
“ஓஹோ நியூ ஜோடியை பிரிச்சிட்டங்களா? அப்போ கொஞ்சம் கஷ்டமாக தான் இருக்கு..” அவன் வேண்டுமென்று கேலி செய்ய அதற்கும் ஒரு சிரிப்பை மட்டுமே பதிலாக தந்தான்.
“ம்ஹும் நீ நைட் சொன்னதை யோசிச்சு பார்த்தேன். என் தங்கச்சிக்கு என்னைவிட்டால் வேறு ஆளில்லை. அதனால் நேற்று திறக்காமல் வைத்திருந்த ஸ்கைப் அக்கௌண்ட் ஓபன் பண்ணி பார்த்தேன். எனக்கு நிறைய மெசேஜ் செய்திருந்தா” என்று தன் மகிழ்ச்சியை அவனிடம் பகிர்ந்தான்.
அதில் இருந்தே அவன் தங்கை மீதான பாசத்தை உணர்ந்தவன், “நான் சொன்னதை தவறாக நினைக்காமல் உடனே அவங்ககிட்ட பேசியது மனசுக்கு சந்தோஷமாக இருக்கு திவா” என்றான் புன்னகையுடன்.
“ஐயோ நான் அவ எனக்கு அனுப்பிய மெசேஜ் தான் படிச்சேன். என் கோபம் பற்றி அவ புரிஞ்சிக்கணும்னு அவளுக்கு ரிப்ளே பண்ணல. இன்னும் கொஞ்சநாள் போகட்டும் பிறகு யோசிக்கலாம்” திவாகர் சிரித்தபடி அறைக்கு செல்ல, தன்னவளை நினைத்து பெருமூச்சுவிட்டு அவனும் ஆபீஸ் கிளம்பினான்.
இருவரும் சேர்ந்தே அலுவலகம் செல்ல, நாட்கள் அதன் போக்கில் செல்ல தொடங்கியது.