EVA11

ELS_Cover3-4868b9df

EVA11

11

வெளியே இருந்ததற்கு ஏற்றவாறு உள்ளேயும் பிரம்மாண்டம்.

சஹானாவின் தாய் பூர்ணிமா, அவர்களை புன்னகையுடன் வரவேற்றார். நல விசாரிப்புகளுக்குப் பிறகு, வெகுசில நிமிடங்களே பேசிக்கொண்டிருந்தனர்.

ட்ரேயில் பழச்சாற்றுடன் வந்தார் உதவியாளர் ஒருவர். அவரிடத்தில் சஹானா, ஆதன் இருவரது பைகளையும் அவரவர் அறைகளில் வைக்கச் சொல்ல,

ஆதன் தடுத்தும் அவர் விடாப்பிடியாய் பைகளைக் கொடுத்தனுப்பி, அங்கிருந்த தொலைப்பேசியை எடுத்து இன்டெர்காமில் பேசியவர்,

“பார்கவா, தாத்தா ரூம்ல தான் அப்பாவும் இருக்கார் அழச்சிட்டு போ”  ஆதனிடம் “பெரியவங்க தூங்கற நேரம் ஒரு வாட்டி பாத்துட்டு வந்துடுங்க பிறகு காலைல நிதானமா பேசிக்கலாம். சாப்பிட எடுத்துவைக்க சொல்றேன்” என்றார்.

“வழில சாப்பிட்டுட்டோம் ஆன்ட்டி” ஆதன் சொன்னவுடன் ஒருமுறை மகளை முறைத்தவர், “அதெல்லாம் பரவாயில்லை கொஞ்சமா சாப்பிடலாம் வளர்ற பசங்க தானே” அவர்களை அனுப்பிவைத்தார்.

விசாலமான வரவேற்பறையைத் தாண்டிப் பார்கவுடன் ஆதன் நடக்கப் பூர்ணிமாவின் பேச்சு கேட்டது.

“வாடி மகாராணி சொந்த வீட்டுக்கு வர உனக்கு பாக்குவெத்தலை வச்சு கெஞ்ச வேண்டி இருக்கு! சீக்கிரம் பிரெஷ் ஆகு தருண் வந்துகிட்டு இருக்கான். இப்படி தான் ராத்திரி…” அதற்குமேல் கேட்கவில்லை.

வீடெங்கும் பல புகைப்படங்கள், கைவினை பொருட்கள் மற்றும் சில ஓவியங்கள், “பூர்வீக வீடா பார்கவ்?” ஆதன் பார்வையிட்டபடி கேட்க,

“ஆமா. அந்த காலத்துல கூட்டுக் குடும்பமா இருந்தாங்களாம். ஒவ்வொருத்தரா வேற வேற ஊர்ல செட்டில் ஆகிட்டாங்க. என் தாத்தா மட்டும்தான் சென்டிமெண்டா காஞ்சிபுரத்தை விட்டு நகரவேயில்லை… எங்க படிப்புக்காக சென்னைல கொஞ்சநாள் இருந்தாங்க. உனக்குத் தான் தெரியுமே”

“ம்ம்”

“பார்கவ் சொல்ல நினைச்சேன் வர வழில…” வேக வேகமாக அனைத்தையும் சொன்ன ஆதன், “இன்னிக்கி ராத்திரியே வந்து நிக்க போறான்னு நான் நினைக்கல. நாளை காலைலதானே வருவான்னு சொன்ன?” என்றான் யோசனையாய்.

பார்கவ், “நானும் தான், நாளைக்கு வாடான்னு எவ்வளவோ சொல்லிப் பார்த்தேன், உடும்பு மாறி நிக்கிறான்”

“பெட்ரோமாக்ஸ் லைட்டேதான் வேணுமாமா?”

சிரித்துக்கொண்டவன், “வரட்டும் அவனா நாமளான்னு பாத்துருவோம்”  அறை வந்துவிட, “தாத்தா பாட்டி சூப்பர் கூல். அப்பா நல்லவர் ஆனா முன்கோபி. சொன்னேன்ல கவனம்” ரகசிய எச்சரிக்கையுடன் கதவைத் தட்டிவிட்டுத் திறந்தான்.

சஹானாவின் அறையில்,

“சென்னைல இருந்ததா வேண்டாத சகவாசம் வருதுன்னு ஊருக்குக் கூட்டிட்டு  வந்தப்போவே தலைப்பாடா அடிச்சுக்கிட்டேன். கிழங்கள் பேச்சை கேட்டுகிட்டு மறுபடி அதே சென்னைக்கு போயி அதே மாதிரி கெட்டு சுத்துறியேடீ” கோவமாக அலமாரியிலிருந்து துணிகளை புரட்டியபடி பூர்ணிமா கத்திக்கொண்டிருக்க,

சஹானா பிரஞையே இல்லாமல் ஜன்னல் கம்பியில் நெற்றியை முட்டியபடி வாழ்க்கையை நொந்து கொண்டிருந்தாள்.

“…பத்தாங்கிளாசோட நிறுத்தி கைய கால முறிச்சு வீட்ல போட்டிருந்தா இப்படி எவனோ ஒருத்தனோட கும்மாளம் போட்டுக்கிட்டு வருவியா? அந்த பார்கவை சொல்லணும்! அறிவிருந்தா வயசு பொண்ண இப்படி எவன்கூடவோ ராத்திரி வேளைல வரவைப்பானா?

அண்ணனும் தங்கையும் ஆடுங்க. நாளைக்கு புள்ள வீட்ல துப்புவாங்க!”

“யாரும் தவம் கெடக்கல அந்த… தருணை கட்டிக்க! எனக்கு இந்த கல்யாணம் வேண்டாம் வேண்டாம் வேண்டாம் அவ்ளோதான்!”

அன்னையின் வார்த்தைகளைவிட இந்த முட்டலின் வலி பெரிதாய் தோன்றவில்லை.

“என்னடி கேடு? தருண் என்னவொரு தங்கமான பையன் தெரியுமா, உன் மேல உயிரையே வச்சுருக்கான். சகு சகுனு உருகுறான். கொடுத்து வச்சிருக்கணும்டீ நீ! கண்டவனோட நீ சுத்தினது தெரிஞ்சும் அவங்க பையனுக்கு உன்னை கொடுன்னு கேட்டதுக்கு நாம எவ்வளவு கொட்டி கொடுத்தாலும் ஈடாகாது!”

“எதையான கொடுக்கணும்னா கொடுத்துத்தொலை என்னை தூக்கிக் கொடுக்க உனக்கு அதிகாரம் இல்ல! நான் மேஜர்! ரொம்ப வற்புறுத்தின, போய்கிட்டே கிடப்பேன்” ஆவேசமாகத் திரும்பினாள்.

“ஓஹோ அந்தப் பொறுக்கி சகவாசம் விடலையா? என்கிட்டியே எவன்கூடவோ ஓடிபோவேன்னு சொல்ற  அளவுக்குத்திமிரா?” மின்னல் வேகத்தில் கன்னத்தில் விழுந்த அறையில் சஹானாவின் கன்னம் எரிந்தது. அழுகையை ரோஷத்துடன் கட்டுப்படுத்திக்கொண்டாள்.

“ஆயிரம் தரம் சொல்லிட்டேன் நான் அப்போ அந்த பையனை காதலிக்கவே இல்ல! ஏன் இப்படி இல்லாத விஷயத்தை வச்சுக்கிட்டு என்னைக் கொடுமை படுத்துறீங்க!”

“நீ சொல்றதை எல்லாம் நம்ப நான் ஒன்னும் அந்த அப்பாவி கிழம் இல்ல! இந்த ட்ரெஸ்ஸ போட்டுக்கிட்டு தயாராகு… அப்போவே சொன்னேன் பார்கவோட நிறுத்திக்கலாம்னு…”

பூர்ணிமா கதவை அறைந்து சாத்திவிட்டுச் செல்ல, பொங்கிவந்த அழுகையைக் கட்டுப்படுத்திக்கொண்டதில் தலைவலி பிளக்கத் துவங்கப் படுத்துவிட்டாள்.

சில நிமிடங்களிலேயே,

“தருண் வந்துட்டான் சீக்கிரம் வா!” பூர்ணிமா இன்டெர்காமில் மிரட்ட, பஞ்சாகிப் போன கால்களில் வலிமையின்றி, மேஜையைப் பிடித்துக்கொண்டவள், அவர் எடுத்துவைத்திருந்த உடையை ஆத்திரமாக தள்ளிவிட்டாள்.

ஒரு பக்கம் தருண் அரக்கத்தனமான சிரிப்புடன், “என்னிக்கு இருந்தாலும் நீ என்கிட்டே தான் வரணும். வர வைப்பேன் பாத்துகிட்டே இரு!” 

மறுபுறம் ஆதன் மென்மையான புன்னகையுடன், “தப்பு பண்ணவனே தைரியமா வரான் நீ ஏன்மா ஒளியனும்? அவனை புழுவை பாக்குறமாதிரி நிமிர்ந்து முகம் பார்த்து பேசு. உன் பார்வை தாங்காம குற்ற உணர்ச்சில அவன் குனியனும். தைரியமா அவனை ஃபேஸ் பன்னு”

பூதாகரமான பலநாள் பயமும், புதிதாக துளிர்விட்டிருக்கும் நம்பிக்கையும் ஒன்றோடரொன்று முட்டிக்கொண்டது.

வேண்டா வெறுப்பாக உடைமாற்றியவள், ‘கர்மம் பிடிச்சவனை வரவேற்க அர்த்தராத்திரி அலங்காரம் வேற!’ கண்ணாடியைப் பார்க்காமலே பொட்டை மட்டும் வைத்துக்கொண்டு, ஜன்னலருகே சென்று நின்றாள்.

‘அவங்க ரெண்டு பேரும் இருக்கும்போது ஏன் பயப்படனும்? கண்டிப்பா எதாவது பண்ணுவாங்க. பார்கவ் சொதப்பினா ஆதன் சமாளிச்சுடுவான்’

‘வெரிகுட்’ என்றது நிலவு.

தாத்தாவின் அறையிலோ நிலைமை தலைகீழாக இருந்தது. சஹானாவின் தந்தை சந்திரனின் எதிரே அமர்ந்த ஆதனை துளைப்பதைப் போல் பார்த்திருந்தார். வந்து சரியாகப் பத்து நிமிடங்கள் ஆகின்றன இன்னும் மனிதர் ஒருவார்த்தை கூடப் பேச வில்லை!

தாத்தா கேட்கும் கேள்விகளுக்கு ஆதன் பதில் சொல்லிக்கொண்டிருந்தான்,

“ஆமா தாத்தா எங்க கம்பெனியை நான் தான் கொஞ்ச மாசமா பாத்துக்கறேன். அப்பா, அம்மா மேற்பார்வை பாத்துப்பாங்க…”

பார்கவ் தலையில் அடித்துக் கொள்ளாத குறையாக முழித்திருந்தான். ‘அது சொதப்பும்னு பார்த்தா இவனே சொதப்புறானே! நான் கூட வேல செய்றவன்னு சொல்லி வச்சேன்னு படிச்சு படிச்சு சொன்னேனே’

மகனை ஒரு முறைப்பு விட்ட சந்திரன் ஆதனிடம் அதட்டலாக, “உங்க கூட வேலை பாக்குறதா சொன்னான்?” விட்டால் அடித்து விடுவாரோ பார்கவ் பதட்டமாக.

ஆதனோ அலட்டிக்கொள்ளாமல், “ஆமா அங்கிள், அவ என் கூடத்தானே வேலைபண்ணுறா? என் செக்ரெட்டரியா…”

“என்ன என் பொண்ணு உனக்கு காரியதரிசியா?” கண்கள் கடகடவெனச் சிவக்க பார்கவிடம், “என்னடா இது? இதுக்கா படிப்பு பாழாகக் கூடாதுன்னு வக்காலத்து வாங்கின நீ?”

“அப்பா… அது…”

“நீங்க தப்பா நினைக்க வேண்டாம் அங்கிள்” புன்னகையுடன் குறுக்கிட்ட ஆதன்,

“பேருக்குத்தான் செக்… காரியதரிசி, ஆனா எனக்கு நிர்வாகம் பண்ண சஹா… சஹானா தான் உதவறா. கூடவே சொந்தமா ஒரு சின்ன சாப்ட்வேர் உருவாக்கவும் செய்றா. கண்டிப்பா அவ படிப்பு வீண் இல்லை அங்கிள்.

சஹானாவுக்கு பயம் இருக்கிறதால சாப்ட்வேர் டீம்ஸ்ல போட்டா அங்க கூட்டமா உட்கார சங்கடமா இருக்கும்னு செக்ரெட்டரின்னு ஒரு வேலையை உருவாக்கி தனியா ஒரு ரூமும் கொடுத்து பாத்துக்க தான் இந்த ஏற்பாடு பண்ணேன்” என்று விளக்கினான்.

“இருந்தாலும் எங்க குடும்ப கவுரவம் என்ன? இப்படி…”

“மறுபடி குறுக்கிடறத்துக்கு மன்னிக்கணும் அங்கிள். நீங்க நினைக்கிற மாதிரி கண்டிப்பா அவ எடுபிடி வேலையலாம் செய்றதில்லை. எப்போ வேணும்னாலும் நம்ம கம்பெனிக்கு வந்து நீங்க பார்க்கலாம் அங்கிள்” ஆதன் முகத்தை உற்று நோக்கியவர் என்ன நினைத்தாரோ,

“ம்ம் என்ன கர்மமோ! இதெல்லாம் எங்க குடும்பத்து வழக்கமில்ல. எங்க இந்த காலத்து பசங்களுக்கு பெரியவங்க மேல மரியாதை இருந்தா தானே” தன்னை குறிப்பிடுவதுபோல் தோன்றியது பார்கவிற்கு.

அனைத்தையும் அமைதியாகப் பார்த்திருந்த பாட்டி, “குழந்தை எப்படி வேலை செய்றா? பாவம் நிறைய வேலை வாங்கிடாதே பா. அப்பாவி பொண்ணு சாது…” என்று துவங்க,

“அம்மா!“ சந்திரன் அதட்டினார்.

“போடா! என் பேத்தி எங்கயோ போயி கஷ்டப்படறதே உன்னால தான். வீட்ல அவளை நிம்மதியா ஒருநாளாவது நீயோ உன் பொண்டாட்டியோ இருக்க விடறீங்களா?” டக்கென எரிந்து விழுந்தவர், கனிவுடன் ஆதனிடம்,

“ஏதாவதுன்னா என்கிட்டே சொல்லு என் செல்லுக்கு கூப்பிடு, வாட்ஸப் வச்சுருக்கேன். பாவம் குழந்தையை கடிஞ்சுக்காதபா. அங்கேயாவது அவ நிம்மதியா இருக்கணும்னுதான் போராடி வேலைக்கு அனுப்பிவைச்சோம்”

ஆதங்கத்துடன் சொன்னவர் கையைப் பற்றிக்கொண்டவன், “அதெல்லாம் இல்ல பாட்டி சஹானா ரொம்ப சின்சியர்! பிரமாதமான பொறுப்பான பொண்ணு. குறையே சொல்ல முடியாது” என்றவன் மனதில்,

அவள் முதல் போர்டு மீட்டிங்கில் அடித்த லூட்டியும், அவனைப் பலமுறை செல்லமாகத் திட்டியதும் வந்துபோக,

“நான் திட்டறதா? தப்புன்னா என்னையே டக்குன்னு தயங்காம கேள்வி கேப்பான்னா பாத்துகோங்களேன். நேர்மையானவங்களை பார்த்தா நமக்கே ஒரு மரியாதை வரும்ல பாட்டி” என்றதும் பாட்டியின் முகம் பூரித்துவிட்டது.

“என் பேத்தி புத்திசாலி! எனக்குத் தெரியுமே” சிலாகித்தார் தாத்தா.

“என் பொண்ணு! பொறுப்பு ரத்தத்திலேயே இருக்காதா?” சந்திரன் முகத்தில் இல்லாத மீசையை முறுக்குவது போல் தோன்றியது. உணர்ச்சிகளை வெளிக்காட்டாத இறுகிய முகபாவம் வேண்டுமென்றே பிடித்துவைத்ததோ?

பார்கவ் திட்டம் வேறு, நடப்பது வேறு என்றாகிக் கொண்டிருக்க வேடிக்கை மட்டும் பார்த்திருந்தான். இங்கும் தருணின் வருகை தெரிவிக்கப்பட, தாத்தா, பாட்டி தவிர மற்ற மூவரும் அவனைக் காண விடைபெற்றனர்.

தருண், புகைப்படத்தைவிட நேரில் அழகாகவே இருந்தான். எழுந்து நின்று சந்திரனை வணங்கியவன் உயரத்திலும் உடற்கட்டிலும் பார்கவை போலவே, சின்ன வயது முதல் சாப்பிட்ட பாதம் பிஸ்தாக்கள் தெரிந்தன.

பார்கவ் ஆதனை அறிமுகம் செய்துவைக்க,

“ஹாய்” என்று கைநீட்டிய தருணின் கையை சற்று இறுக்கமாகவே பிடித்துக் குலுக்கிய ஆதனின் மனதில் உதித்த கெட்டவார்த்தைகளைக் கேட்டிருந்தால் தருண் முகம் என்னவாகியிருக்கும்? நினைக்கும் போதே சிரிப்புவர,

இயல்பாகவே, “ஹாய்” என்றான்.

தருணுக்கு ஆதனை நினைவில்லாத போதிலும் என்னமோ இரடியது.

“சகு எங்க அத்தை?” உள்ளே எட்டிப்பார்த்தபடி பூர்ணிமாவைக் கேட்டான். ஆதன் மனம் தாறுமாறாகத் துடிக்க, அங்கே ஓசைப்படாமல் மெல்ல நடந்து வந்தாள் சஹானா.

சல்வாரின் நுனியைப் பற்றிக்கொண்டிருந்தாள். பதட்டப்படுகிறாள். பயப்படுகிறாள்.

‘என்னை பார் சஹா. தைரியமா அவனை பார்!’ என்றவன் ஓரகண்ணால் தருணை பார்க்க, சஹானாவை தின்பதைப் போல் பார்த்திருந்தவன் கண்ணில் வேட்டையாடும் மிருகத்தின் குரூரம்.

‘கண்டிப்பா சஹாவை உனக்கு தரவே மாட்டேன்’ தீர்மானித்துக் கொண்டான் ஆதன்.

தருண், “ஹாய் சகு எப்படி இருக்கே பார்த்து ரொம்ப நாளாச்சு” நக்கல் தெரிந்தது.

அவன் குரலில் சில்லென்ற வியர்வை துளிர்விட, ‘உன்னால முடியும்’ ஆழமாக ஒருமுறை சுவாசித்தவளின் பார்வை, எதிரே அமர்ந்திருந்த ஆண்களின் கால்களை ஒவ்வொன்றாகக் கடந்து ஆதனின் காலில் நிலைத்து, நிமிர்ந்தது.

புன்னகையுடன் அமர்ந்திருந்த ஆதனின் முகம், தாக்க வரும் அந்நியர்கள் நடுவே காக்க வரும் ஒரே ஒரு நண்பனைக் காணும் சந்தோஷ தந்தது.  இமைகளை ஒரு முறை மூடித் திறந்தவன் ‘நான் இருக்கேன். நிமிர்’என்றது போல் தோன்ற, சல்வாரின் நுனியை விடாமல்,

தருணிடம், “ஹாய். எப்படி இருக்கே?” திக்காமல் கேட்க,

தருண் அவள் பேசுவாளென்று நினைக்கவில்லையோ? “எப்படி இருக்கேன்? நீயே சொல்லேன்” திமிராகக் கால்மேல் கால் போட்டு அமர்ந்தான்.

‘உன்னைவிட காட்டெருமையே அழகா இருக்கும்’ நினைத்துக்கொண்டவள், “எரு… எக்கச்சக்கமா மாறிட்டே, முன்ன சொங்கி மாதிரி இருப்பே இப்போ பரவால்ல” என்றாள்.

தருணின் பேஸ்தடித்த முகமோ, பெரியவர்களில் மிரட்டலோ, தொண்டை செருமலோ, முறைப்புகளோ எதுவுமே சஹானாவின் கருத்தில் பதியவே இல்லை. என்னவோ உலகத்தையே புதிய கண்ணோடு பார்க்கும் சந்தோஷம் அவளிடம்.

ஆதன், பார்கவ் இதழ்களோ கேலி சிரிப்பில் வளைந்தன.

“பரவால்ல மாமா உரிமையா விளையாடறா, என்ன சகு?” தருண் கண்ணில் கோவமிருந்தாலும் அவமதிப்பை சிரித்து மழுப்பினான்.

“ஆமா” என்றவள் ஆதனை பார்க்க, யாருக்கும் தெரியாமல் தொடை அருகிலேயே கட்டைவிரலை உயர்த்தி காட்டினான்.

‘உனக்கென்ன ஈஸி எனக்குதான் தொண்டை வரளுது’ அமைதியாக நின்றாள்.

“அப்புறம் சென்னைலயே இருக்க என்னை வந்து பார்க்கணும்னு தோணலையா? பழசெல்லாம் மறந்துட்டியா? வீட்டுக்கு வந்தா விளையாடிட்டு இருக்கலாம்ல” தருண் பூடகமாகக் கேட்க,

பொருள் விளங்கிய பார்கவ் பல்லைக் கடிக்க, ஆதன் எழுந்தேவிட்டான்!

அனைவரின் பார்வையை உணர்ந்து, “வாஷ்ரூம்” என்று நெற்றியைத் தடவிக்கொள்ள, “வாங்க” சஹானா முந்திக்கொண்டு அழைத்துச் சென்றாள்.

“அவ என்ன குழந்தையா பா…” பூர்ணிமா பேசத் துவங்க, பெரியவர்கள் கவனம் தருண் மீதே இருந்ததால் பெரிதாய் யாரும் கண்டுகொள்ளவில்லை.

“ஹே சஹா அந்த பக்கி என்ன பேச்சு பேசறான், ஓங்கி ஒரு அறை விடாம சும்மா இருக்க?” ஆதன் முகம் சிவக்க,

“விடுங்க! நான் எப்படியும் அவனை கவனிக்கல, ஒரு செகென்ட் பார்த்தேன் மனசு அடிச்சுக்க ஆரம்பிச்சு மயக்கம் வரமாதிரி ஆயிடுச்சு. டக்குனு உங்களை பார்க்க ஆரம்பிச்சுட்டேன், என்னமோ ரொம்ப பாதுகாப்பா தோனவும் மேற்கொண்டு நிக்க முடிஞ்சுது”

துப்பட்டாவால் வியர்வையை துடைத்துக்கொண்ட படி திரும்பியவள் கன்னத்தில் கைதடம் பதிந்திருக்க, “என்ன இது சஹா?” முகம் கோவத்தில் துடிக்க அதை வருடியவன், “என்ன இது?” என்று கத்தினான்.

“அம்மா” பார்வையைத் தாழ்த்திக்கொண்டாள்.

“எதுக்கு? ஏதாவது சொல்லேன்!”

“ப்ளீஸ் கத்தாதீங்க”,

”பழைய பாட்டு தான். உங்க கூட தனியா ராத்திரி வந்தது, சென்னைல இருக்க பொறுக்கி பயகூட… அதான் மாஜி லவ்வரோட ஓடப்போறேனாம் அதுவும் நீங்கன்னு தெரிஞ்சா என்ன ஆகுமோ”

“ப்ளாடி ஹெல்!” கண்முன்னே கண்ணில் நீருடன் புன்னகைப்பவளைத் தாவி அணைத்துக்கொள்ளத் துடித்த கைகளைக் கட்டுப்படுத்தி கொண்டவன், கோவத்தைக் கட்டுப்படுத்த முடியாமல் திணறினான்.

“எனக்கு பழகிப்போச்சு. நீங்க போயிட்டு வாங்க” அவள் வாஷ்ரூமை காட்ட,

“கோவத்துல எழுந்துட்டு சமாளிக்க சொன்னேன்மா”

அவள் பேசும் முன்பே அங்கே பார்கவ் வந்துவிட, “ரொம்ப பேசறான்பா முகரையை பேத்துடுவேனோன்னு பயமா இருக்கு. சஹானாவுக்கும் அவன் மேல காதல் இருக்குறது அவ முகத்துல தெரியுதாம். பரதேசி பயலுக்கு ரொம்பதான் கான்பிடென்ஸ்” பொருமிய பார்கவ்,

சிரிப்புடன், “ஏன்டி அந்த காதல் முகத்தைக் காட்டு” தங்கையின் கன்னத்தை பற்றித் திருப்ப, “ஸ்ஸ்” என்று அவன் கையை நகர்த்தினாள்.

“அம்மாவா?” பார்கவ் முகம் இறுகியது.”விட்றா வேற எதாவது பேசு” என்றவள், “ஆமா அப்பாவை எப்படி சமாளிச்சீங்க?”

“அதையேன் கேக்குற” என்றவன் ஆதனிடம் திரும்பி, “என்னப்பா நீ கவுத்துட்டே? அப்பா என்னை எப்படி முறைச்சார் பாத்தேல. இப்போ கூட ஒரு மாதிரி பாக்குறார்” என்று குறைபட்டான்.

சஹானா, “அவன் கெடக்கான் முட்டாபீஸு! ஹே மொறைக்காதே நான் தருணை சொன்னேன்” அவசரமாகச் சொன்னவள்,

“ஆமா என்னாச்சு ஏதாவது பிரச்சனையா அப்பா கோச்சுக்கிட்டாரா?”

“ஏன் கேக்குற” பார்கவ் அனைத்தையும் சொல்ல,

ஆதன், “பொய்யில ஆரம்பிச்சா பின்னாடி நாம சொல்ற உண்மையை நம்ப தோனாது. உங்க வீட்டு மனுஷங்களை பார்த்ததும் ஏனோ ஏமாத்தணும் தோனலை, நேர்மையாவே அணுகலாம்னு தோனுது”

“சூப்பர்! நீங்க என்னை அவன் கிட்ட ஒப்படைச்சுட்டு தான் கிளம்ப போறீங்க? கூடவே முகூர்த்த நாளும் பார்த்துக் குடுத்துடுங்க சுலபமா இருக்கும்!” பல்லைக் கடித்தவள்,

“இதுக்கு என் முதல் பிளான் படி நான் ஓடியே போயிருப்பேன்” தோளைக் குலுக்க, “ஓடியா?” ஆண்கள் இருவருமே வாய்பிளந்தனர்.

“தனியாத்தான். முழிக்காதீங்க. நான் முகம் அலம்பிகிட்டு வரேன் நீங்க போங்க”

அவள் கதவைத் தாளிடும் வரை காத்திருந்தவன், பார்கவிடம், “என்ன இது? கைநீட்டி அடிக்கிறதெல்லாம் என்ன பழக்கம் பார்கவ்” ஆதங்கம் தாங்காமல் கேட்டுவிட,

“சுதந்திர இந்தியா கேட்டுக்கு அந்த பக்கத்தோட முடிஞ்சுபோச்சு. இங்க பெரியவங்க என்ன பண்ணாலும் அதுதான் சரி. எதிர்த்துப் பேச கூடாது. முடியாது”

“நீ உன் தங்கைக்காக பேச மாட்டியா? அப்படி என்ன பா கை…”

“கையாலாகாத தனம்னு தானே கேக்க வர? நான் கட்டுப்பட்டு இருக்கிறது என் தாத்தா, பாட்டி முகத்துக்காக. அப்பா, அம்மா நல்லவங்க தான் ஆனா குடும்ப சந்தோஷத்தைவிடச் சொந்தகாரங்க கிட்ட மரியாதை கெடக்கூடாதுன்றது அவங்களுக்கு முக்கியமா இருக்கு”

ஆதன், “ஏன் எங்களுக்குலாம் சொந்தகாரங்க இல்லையா?” நக்கலாகவே கேட்டான்.

“இருக்கலாம். நான் சொல்றது இங்க எப்படின்னு மட்டும். எங்கப்பா ரொம்பவே கட்டுப்பாடா எங்களை வளர்க்கணும்னு இருந்தார். என்ன நாங்க இப்போ வளர்ந்துட்டோம்ன்றதை அவர் உணரல.

இதுக்கெல்லாம் என்ன காரணம்னு எனக்கே சரியா தெரியாது. ஆனா, ‘தயவு செஞ்சு என் புள்ளைய மன்னிச்சு நீ இந்த குடும்பத்துக்காக உன் கோவத்தை கட்டுப்படுத்திகோ’ன்னு தாத்தா கண்கலங்கிக் கெஞ்சும் போது மான ரோஷத்தை குடும்பத்துக்காகத் தூக்கி போடலாம்னு தோனிச்சு”

“இருக்கட்டும் ஒத்துக்கறேன் நீ பொறுத்துக்கறது உன் விருப்பம். ஆனா, சஹா வேற வீட்டுக்குப் போகவேண்டிய பொண்ணில்லையா? அவளை சந்தோஷமா வச்சுக்கலாமே. குறைஞ்சபட்ச அன்பைக்கூட தரமாட்டேன்னா எப்படி?” கோவத்தில் அவன் உதடுகள் துடித்தன.

“அதுக்கு ஈடுகட்டத்தான் தங்கமும் வைரமுமா சேர்த்துவச்சுருக்காங்க. பாசத்துக்கு எடைக்கு எடை போல” வெறுமையாகச் சிரித்தவன், “நீ எதுக்கு இவ்வளோ உணர்ச்சிவசபடற? என்ன செஞ்சாலும் உன்னால ஒரு அளவுக்கு மேல அவளை காப்பாத்த முடியாது ஆதன். அதான் எதார்த்தம்!”

“என்ன எதார்த்தம்? அவளை தூக்கி கார்ல போட்டுக்கிட்டு போய்கிட்டே இருப்பேன். ஒரு பொண்ணோட பேர் கெட வேண்டாம்னு பாக்கறேன்” அவன் கைகளை இறுக்கிக்கொள்ள,

“அவ்ளோ தீவிரமா இருந்தா தாராளமா கூட்டிகிட்டு போ! நீ அவகூட இந்த கேட்டைத் தாண்டணும்னா அதுக்கு ஒரு கண்டிஷன் இருக்கு. நீ சம்மதிச்சா நானே என் தங்கையை உன் கூட அனுப்பிவைக்கிறேன்!”

“என்ன கண்டிஷன்? சொல்லு இப்போவே செய்றேன். என்னால இதெல்லாம் பார்க்கவே முடியல”

அவனையே சிலநொடி பார்த்திருந்தவன், “ராத்திரி பேசுவோம். இப்போ நேரமானா சந்தேகம் வரும். வா”

இருவரும் திரும்ப, வழியிலேயே டைனிங் அறைக்கு மாறியிருந்தவர்களைப் பார்த்து அங்கே சென்றனர்.

“அவ எங்கடா?” பூர்ணிமா உணவை வைத்தபடி கேட்க,

“வந்துருவாமா. வா உட்கார்” நண்பனுக்காக நாற்காலியை இழுத்துப்போட்டான் பார்கவ்.

சஹானாவும் வந்துவிட தருண் தன் அருகே அவளை அமர அழைக்க, அவளோ காதில் விழாததுபோல் பார்கவ் அருகில் அமர்ந்தாள்.

“கல்யாணம் ஆகட்டும். கூச்சம் இருக்கும்ல” பூர்ணிமா சமாளித்தபடி பெண்ணை முறைக்க,

“உங்க அம்மாவுக்கு முறைச்சு முறைச்சு முழி அப்படியே முட்டைக்கண்ணா ஆயிடும்னு சொல்லு” ஆதன், பார்கவ் காதில் கிசுகிசுக்க, சிரித்துவிட்டுச் சமாளித்துக்கொண்டான்.

பார்கவ் கையைச் சீண்டி புருவம் உயர்த்தி சஹானா ரகசியமாகக் கேட்க, ‘எனக்கும் சொல்லேன். சிரிப்பேன்ல?’ அவன் சொல்ல அவளும், சத்தம் வராமல் சிரித்தாள்.

அதைப் பார்த்திருந்த ஆதன், ‘இந்த வீட்ல சிரிக்கவே மாட்டங்களோ? என் மொக்கையே இவங்களுக்கு ஜோக்கா தெரியுதே’ அவளை எப்பொழுதும் சிரித்த முகமாக வைத்திருக்க விரும்பினான்.

தருணுக்கு அவள் சிரிப்பைக் குலைக்க மனம் துடித்தது!

சஹானாவை வதைத்து அவள் நடுக்கத்தைக் கண்டு, பார் உன்னை வென்றுவிட்டேன் என்று கொக்கரித்து அற்ப சந்தோஷம் பெற ஓடோடி வந்தால், அவளோ எவனோ ஒருவனை அழைத்துவந்து தன்முன்னே சிரிப்பதா?

யார் இந்த பயல், கண்டுபிடிக்கிறேன்! கறுவிகொண்டனுக்கு என்றோ அவள் ஆவேசமாகக் கீறிய தழும்பில்லாத கன்னம் எரிந்தது.

இரவு தூங்கும் நேரம்வரை ஓரிரு வார்த்தைகள் மட்டும் பேசி உந்தித்தள்ளியவள் தன் அறைக்குள் சென்று தாளிட்டு கொண்டபின்தான் ஆசுவாசமடைந்தாள்.

வேகமாகப் பைஜாமாவிற்க்கு மாறியவள், சன்னலோரமாக நாற்காலியில் புத்தகத்துடன் அமர்ந்துவிட்டாள்.

மொபைல் வைப்ரேட் ஆக ஆதன் தான் வாட்ஸாப்பில்,

“நாளைக்கி முதல் மூவ் ஆரம்பிக்கறோம், தயவுசெஞ்சு நீ ஒத்துழைக்கணும்”

“என்ன செய்ய போறீங்க சொல்லவே மாட்டேங்கறீங்களே”

“ஒன்னுன்னா சொல்லலாம். நிலைமைக்கு ஏற்றமாதிரி ஏதாவது செய்வோம்”

“அப்போ திட்டம்ன்னு ஒன்னு இல்லவே இல்லையா? வாய்ல வடை சுடறீங்களா?”

“ஹே சீ! வடை தோசைன்னு. எற்கனவே சாப்பிட்டது மூச்சுமுட்டுது. சரி நீ நாங்க சொதப்பாம இருக்கணும்னு மட்டும் வேண்டிக்கோ”

“சொதப்பினா என்ன ஆகும்?” சஹானா கேட்க,

“நமக்கு கல்யாணம் ஆகும்!”

மெசேஜை படித்தவள் மனதில் பட்டாம்பூச்சி கூட்டமே சிறகடிக்க, ’அப்படி என்னடா பிளான் போட்டுத் தொலைச்சே!’ சந்தோஷத்தைக் காட்டிக்கொள்ள முடியாமல்,

“ஜாக்கிரதையா பண்ணுங்க”

“எப்படி ஹெல்மெட் போட்டுக்கிட்டு தாலிக்கட்டவா?” கூடவே கண்ணாடி அணிந்த ஸ்மைலி அனுப்பிவைத்தான்.

முகத்தைத் தலையணையில் மறைத்துக்கொண்டு, “கட்டு கட்டு” சொல்லிக் கொண்டவளுக்கே ஏன் என்று விளங்கவில்லை.

“இருக்கியா?”

“ஹெல்மெட் வாங்க போலாம்னு பாக்கறேன்” அனுப்பிவிட்டு நகத்தைக் கடித்துக்கொண்டாள்.

“ஹா ஹா ஹா! காலைல கடைதிறக்கட்டும் வாங்கிடுவோம். கல்யாணத்துக்கு யூஸ் ஆகுதோ இல்லையோ உன்னால நான் அடிவாங்காம தப்பிக்கக் கவசம் தேவை தாயே!” அவன் பதிலைப் படித்துச் சிரித்துக்கொண்டவள்,

“தயவுசெய்து கவனமா இருங்க. கஷ்டம்னா ரிஸ்க் எடுக்க வேண்டாம் நான் தலையெழுத்து எப்படியோ சமாளிச்சுக்கறேன்”

உடனே கால் வர, அவன்தான்.

“மூடிக்கிட்டு தூங்கு! இப்படி எதாவது பெனாத்தின பல்லை பேத்துடுவேன்! நீயே சரினு சொன்னாலும் உன்னை அவன்கிட்ட கொடுக்க நான் தயாரா இல்ல. புரிஞ்சுதா?” படபடத்தவன் உடனே அழைப்பைத் துண்டித்திருந்தான்.

“இவன் பிளானுக்கும் கல்யாணம் நடக்கும்னு சொன்னதுக்கும் என்ன சம்மந்தம்? என்னத்தடா திட்டம் போடுறீங்க?” வாய்விட்டே புலம்பியவள் பார்கவை அழைக்க அவன் பதிலே தரவில்லை.

“பக்கி தூங்கி இருக்கும்! அதுக்குள்ளயா?” புரண்டு புரண்டு படுத்தவள் உறக்கம் வராமல் தவித்தாளென்றால், ஆதனோ அறைக்குள் நுழைந்த பார்கவுடன் பேசத் துவங்கினான்.

***

“எழுந்திரு டீ” பார்கவ் அவள் முதுகில் அடிக்க, “போடா” சுருட்டிக்கொண்டாள்.

“சரி தருண் வந்து எழுப்புவான் தூங்கு” என்றதில் மின்சாரம் பாய்தாற்போல் எழுந்தவள், “என்னடா சொல்றே?”

“அந்த மடையனுக்கு உனக்கு பெட் காபி கொடுத்து எழுப்பனுமாம். கேட்டு மூச்சுவாங்க ஓடிவரேன் நீ தூங்கு” போர்வையை அவள்மேல் போட்டவன் சென்றுவிட, “இல்ல இல்ல! நான் எழுந்துட்டேன்!” அவள் கத்தியது காற்றில் கரைந்தது.

அரக்கப்பரக்க எழுந்ததில் ஒருநொடி தலைசுற்றி சுவரைப் பிடித்துகொண்டாள். சுற்றும் முற்றும் பார்த்தவளுக்கு அண்டமும் நடுங்கியது.

எப்படி தப்பிப்பதென்று யோசித்திருக்க, அறைக்கு வெளியே தருணின் குரல் கேட்டது. ஓடிச்சென்று கதவில் காதை வைத்தாள்.

இன்னொரு ஆண் குரல்! யார்?

“குட்மார்னிங் தருண், என்ன இவ்வளோ சீக்கிரமா எழுந்துடீங்க?” ஆதன் குரல்தான்!

“குட் மார்னிங். சகுவை நானே எழுப்பி காபி கொடுத்தா சந்தோஷப்படுவால?”

‘நினைப்புதான் எருமைக்கு!’ ஆதன் பதிலுக்காகக் காதை அழுத்தியதால் வலித்தது.

“ஸ்வீட்! ஆனா… பொண்ணுங்களுக்கு தன் மனசுக்கு பிடிச்சவங்க கண்ணுக்குத் தான் அழகா தெரியணும்னு எண்ணம் இருக்குமாம். நீங்க பாட்டுக்கு போய் எழுப்பி அவ ஜொள்ளு உட்டுக்கிட்டு காட்டேறி மாதிரி தலைவிரிகோலமா தூங்கி எழுந்து… அதை நீங்க பார்த்துடீங்கனு வருத்தப்பட்டா? அப்புறம் அதுனாலயே கூட ஒதுங்கிப்போகலாம்ல?”

‘அடப்பாவி! அவன் கண்ணுலயே படக்கூடாதுன்னு இருக்கேன். லூசு லூசு உன்னை நம்பினேன் பார் என்னை ஜோட்டால அடிச்சுக்கணும். நான் காட்டேறியா?’’ கதவைக் குட்டினாள் ஓசைப்படாமல்.

“அப்படியா சொல்றீங்க? ஆமா இதெல்லாம் உங்களுக்கு எப்படி தெரியும்?”

‘அதானே உனக்கு எப்படி தெரியும்?’ சஹானா ஆர்வமானாள்.

“அமெரிக்காலருந்து அமஞ்சிகரை வரை பொண்ணுங்க மனசு ஒரே மாதிரிதான் இந்த விஷயத்துல”

“இருக்கலாம் எனக்கு தெரிஞ்சது சகு தான்”

‘படுபாவி புழுகுறதை பாரேன். நீ ஊர் பொறுக்கின்னு சென்னைக்கே தெரியும்!’ பல்லைக்கடித்துக்கொண்டாள்.

“ஆமா நீங்க அமெரிக்கால படிச்சீங்களாமே? அங்க விசா இருக்கா இன்னும்?”

“இருக்கே ஏன்?”

“அங்க லாஸ் வேகாஸ் காஸினோ தாறுமாறா இருக்குமாம் போயிருக்கீங்களா?”

‘ஒ சூதாட்டம் வேறயா? ஒரு கெட்டபழக்கம் விடறது இல்லையா நீ?’ சஹானா கண்களை மூடிக்கொண்டாள்.

“ஒரு வாட்டி போயிருக்கேன் ஆனா எனக்கு அதெல்லாம் என்னமோ ஆர்வம் வரலை. என் பிரென்ட் இருக்கான், அந்த ஊர்க்காரன் அவனுக்கு இதெல்லாம் அத்துப்படி”

“வாவ்” தருண் ஆர்வமாக, “எனக்கு அங்க போக ரொம்ப நாள் ஆசை, உங்க பிரென்ட் உதவுவாரா?”

“தாராளமா” என்றான் ஆதன்.

“சரி அந்த பொண்ணுங்க மனசு சமாச்சாரம் உண்மையா?”

“என் கேர்ள் பிரெண்ட்ஸ் சொல்லுறதை வச்சுதான் சொன்னேன்”

என்னவோ உள்ளுக்குள் பிறழக் கோவமாகக் கதவைத் திறந்த சஹானா கண்முன்னோ தருண் காபியுடன். அருகில் ஆதன் புன்னகையுடன்.

பாரபட்சமின்றி இருவரையுமே முறைத்தாள்!

“என்ன காலங்கார்த்தால ரூம் வாசல்ல நின்னு கூச்சல்? ஒருத்தி தூங்குறான்னு அறிவில்லை! இடியட்ஸ்!”

ஆதன் விழிகள் விரித்தான் என்றால், தருணுக்கு முகத்தில் ஈ ஆடவில்லை, எச்சிலை விழுங்கினான்.

அவளை மிரட்ட வந்தால் அவள் மிரட்டுவதா?

“என்ன?” அவள் கத்தியதில் தருண் பாவம்போல் காபியை நீட்ட, “பல்லுகூட தேய்க்காம காபி குடிக்கிறமாதிரி இருக்கா என்ன பார்த்தா!”

“இல்ல பெட் காபி…”

“என் தலையில கொட்டு!” என்றவள் “இவன் தான் லூசு காபி கீப்பின்னு நீங்க என்ன டீயா?” ஆதன் மேல் பாய,

“இல்ல பூஸ்…” அதற்குள் அவன் கழுத்தை நெறிப்பதைப் போல் கையைக் கொண்டுபோனவள்,

“காலங்கார்த்தால வந்து டார்ச்சர் பண்றீங்க! போங்க!”

தருணிடம்,
“உனக்கு தனியா சொல்லனுமா? போடா என்னமோ உண்மையா காதலிக்கிற மாதிரி… போ! ஓடிப்போகமாட்டேன்! அதான் வந்து நிக்கிறியே நாக்கை தொங்க போட்டுக்கிட்டு போ! ச்சே காலங்காரத்தை இதுங்க முகத்துல முழிச்சு” கதவை அறைந்து சாத்தினாள்.

தருண் குழப்பமாகக் காபி கப்பை வெறித்தான்.

‘இவ்ளோ பேசுவாளா? சஹானா தானே இது?’ ஒருமுறை அவள் அறை கதவைப் பார்த்தவன் ஆதனை பாராமல் யோசனையுடன் பாவமாகக் கீழே செல்ல, ஆதனுக்கு சத்தியமாக ஒன்றுமே விளங்கவில்லை.

‘எதுக்கு வந்து கத்துறா? கூச்சலா? நான் சாதாரணமாத்தானே பேசினேன். பயமெலாம் பொய்யா?’ தலையைக் கலைத்துக்கொண்டவன் தாடையைத் தடவிக்கொண்டு படிகளில் இறங்கினான்.

***

Leave a Reply

error: Content is protected !!