காதல் சதிராட்டம் -21
காதல் சதிராட்டம் -21
கலைநயம் மிக்க பொருட்களால் ஆக்கிரமிக்கப்பட்டு இருந்த அந்த வீடு இப்போது கலைந்துப் போய் கிடந்தது. கீழே பல பொருட்கள் விழுந்து சிதறிக் கிடந்தது.
உடைந்துக் கிடந்த கண்ணாடித் துகள்களில் எல்லாம் ஆதிராவின் சலனமான முகம் பிரதிபலித்துக் கொண்டு இருந்தது.
அவள் கைகளில் வைத்து இருந்த ஏஞ்சல் தண்ணீரில் தத்தளித்துக் கொண்டு இருப்பது போல் அவளும் இப்போது ஏதோ ஒரு இனங் காணாத உணர்வில் தத்தளித்துக் கொண்டு இருந்தாள்.
மெது மெதுவாக அவனை நோக்கி நகரும் இதயத்தை வலுக்கட்டயமாக இழுத்துப் பிடித்து வைத்து அவனை நோக்கி ஒற்றை வார்த்தையாக தேங்க்ஸ் என்றுவிட்டு தன்னறைக்குள் ஏஞ்சலுடன் நுழைந்துவிட்டாள்.
என்ன முயன்றும் அவளால் இப்போது வைபவ்வோடு வினய்யை ஒப்பிட்டுப் பார்ப்பதை நிறுத்த முடியவில்லை.
வைபவ்வும் அவளும் ஒரு நாள் வெளியே சென்று இருக்கும் போது ஏஞ்சலுக்கு உணவை வைக்க மறந்துவிட்டாள். அப்போது அவள் ஏஞ்சலுக்கு உணவு அளிப்பதற்காக பாதியிலேயே கிளம்புவதாக சொன்ன போது வைபவ் முகம் போன போக்கு அவளுக்கு இன்றும் நியாபகம் இருந்தது.
“உனக்கு நான் முக்கியமா இல்லை ஏஞ்சல் முக்கியமா? இப்போ நீ என்னை விட்டுப் போன நீ என்னை காதலிக்கலன்றது அர்த்தம்… நீயே முடிவு பண்ணிக்கோ… ” என்று அவன் அவளை காதலைக் காட்டி தடுத்து நிறுத்த முயற்சித்த போது அவளால் அங்கிருந்து செல்ல முடியவில்லை.
பல்லைக் கடித்துக் கொண்டு அங்கே இருந்தாள். அதன் பிறகு வைபவ் முகம் மலர்ந்து அவன் அவளிடம் சந்தோஷமாக பேசிக் கொண்டு இருந்தான்.
ஆனால் ஆதிராவின் முகத்தில் ஒரு பொட்டு கூட சந்தோஷம் இல்லை. ஆனால் அவன் அதை கவனிக்கவில்லை கவனித்தாலும் அதைப் பெரியதாக எடுத்துக் கொள்ளவில்லை.
அவன் நினைத்தபடி எல்லாம் நடந்துவிட்டது என்ற மிதப்பு தான் அவன் கண்களில் தெரிந்தது.
அன்று இரவு வேண்டுமென்றே தாமதமாக அவளை வீட்டிற்கு கொண்டு வந்து விட அவளோ அவனிடம் விடைபெறாமலேயே அவசர அவசரமாக தனது அறையிற்கு ஓடினாள்.
ஏஞ்சல் துவண்டுப் போன துளசி செடியாக மீன் தொட்டிக்குள் சுருண்டுக் கிடந்தது. அதைக் கண்டதும் இவளது கண்ணீர் பாகாய் உருண்டு திரண்டு கன்னத்தை நனைத்தது.
படபடப்பாக போனை எடுத்து வைபவ்விற்கு அழைத்தாள்.
அவனோ எடுத்த உடன் ” ஆதிரா என் கிட்டே பாய் சொல்ல முடியாம போனதாலே இப்போ போன் பண்ணி இருக்கியா?” என்றுக் கேட்டான் அவளின் அவசரம் புரியாமல்.
“இல்லை வைபவ்… ஏஞ்சல்க்கு உடம்பு முடியல… வெட்டினரி டாக்டர் கிட்டே கூட்டிக்கிட்டு போகணும். ப்ளீஸ் வர முடியுமா?” என கேட்க எதிர் முனையில் வைபவ் பொறிந்தான்.
“என்னைப் பார்த்தா உனக்கு ட்ராவல்ஸ் வெச்சு நடத்திக்கிட்டு இருக்கா மாதிரி தெரியுதா ஆதிரா? எனக்கு இப்போ அர்ஜென்ட்டா வேற வேலை இருக்கு. என்னாலே வர முடியாது… ” என்று அவன் அவள் அழைப்பைத் துண்டித்துவிட்டான்.
அவனின் பதில் இவளுக்கு அவனின் மீது வெறுப்பை மூட்டியது. இதுவரை யார் உதவியும் இல்லாமல் தனியாக வாழ்ந்த என்னால் இந்த நிலையை சமாளிக்க முடியாதா என்ன? இனி இவன் உதவியை எக்காரணத்துக் கொண்டும் எதிர்பார்க்கவேக்கூடாது என்று நினைத்தவள் தன் கண்ணீரைத் துடைத்தபடி ஏஞ்சலைக் கூட்டிக் கொண்டு ஆட்டோவில் கிளம்பி டாக்டரிடம் சென்று காண்பித்தாள்.
அவர் ஏஞ்சலுக்கு பயப்படும் படி எதுவும் இல்லை என்று சொல்லுவிட்டு சில பல மருந்துகளை வழங்கிய சிறிது நிமிடத்தில் ஏஞ்சலின் அசைவினில் மெல்லியதாக மாற்றம் வந்தது.
அதுவரை துவண்டு இருந்த செடி லேசாக துளிர்விட்டதுப் போல ஏஞ்சல் மெதுவாக நகரத் தொடங்க அப்போது தான் அவளுக்கு உயிரே வந்தது.
அன்று போல இன்றும் அவளுக்கு இன்னொரு முறை உயிர் போய் உயிர் வந்தது.
ஏஞ்சலை அந்த பூனையின் அருகே பார்த்தவுடன் அவள் மொத்தமாக செயலிழந்துப் போய்விட்டாள். அந்த கண்ணாடி கதவு வேறு சற்று சிக்கலாக மாறிப் போனது.
கதவின் உள்பக்கத்தில் இருக்கும் பொத்தானை அழுத்திவிட்டு அந்த கதவை சாத்திவிட்டால் வெளியே இருந்து அந்த கதவை சாவி இல்லாமல் திறக்க முடியாது.
இன்று யாரோ அந்த உள் பக்க பொத்தானை அழுத்திவிட்டு இருந்தார்கள், கதவை மூடும் போது ப்ரணவ்வும் அதைக் கவனிக்காமல் விட்டு இருந்தான்.
ஆதலால் உள்ளே செல்ல முடியாமல் போகவே தான் ஆசை ஆசையாய் பார்த்துக் கொண்ட அந்த வீட்டின் கதவை வினய் உடைக்க வேண்டியதாயிற்று. ஆதிராவிற்காக தன் உயிரையே கொடுப்பவனுக்கு இந்த விஷயம் சாதாரணம் தான்.
ஆனால் ஆதிராவிற்கு இது சாதாரணமான விஷயமாக தோன்றவில்லை.
சற்றுமுன்பு தான் ப்ரணவ்வின் வாய்மொழியால் வினய்யிற்கு அந்த வீட்டின் மீதான நெருக்கத்தை அறிந்துக் கொண்டாள்.
ஆனால் அந்த பாசத்தையும் மீறி தன் கண்ணீரை பெரியதாக கருதி அந்த கதவை உடைத்து கீழே எல்லா பொருட்களையும் சிதறடித்தது அவளுக்கு பெரிய விஷயமாக தான் தெரிந்தது.
தனக்காக அவன் செய்த உதவிக்காக பதிலுக்கு ஏதாவது செய்தே தீர வேண்டும் என்று அவள் மனம் பரபரத்தது. திரும்பி தன் ஏஞ்சலைப் பார்த்தாள்.
“ஏஞ்சல் நம்மளுக்கு ஹெல்ப் பண்ண வினய்க்கு நம்ம காம்ப்ளிமென்ட் கிப்டா ஏதாவது பண்ணனும்ல சோ நாளைக்கு நாம வினய்க்கு டின்னர் ரெடி பண்ணலாம் சரியா… ” என்று ஏஞ்சலைப் பார்த்து சொன்னவள் நாளை என்ன என்ன செய்யலாம் என்ற யோசிக்கத் தொடங்கிவிட்டாள்.
கீழே வினய் உடைந்துப் போன பொருட்களை எல்லாம் ஒவ்வொன்றாக எடுத்து மேஜையின் மீது வைத்துக் கொண்டு இருக்க ப்ரணவ்வோ அதிர்ச்சியில் அசையாமல் சோபாவின் மீது உட்கார்ந்து கொண்டு இருந்தான்.
அதுவரை காணாமல் போய் இருந்த உத்ரா வீட்டிற்குள் நுழைந்த அடுத்த நொடி அவளும் அதிர்ச்சியாகிவிட்டாள்.
கீழே விழுந்த பொருட்களையும் ப்ரணவ்வின் முகத்தையும் பார்த்தவள் பதறிப் போய் ப்ரணவ் அருகே ஓடினாள்.
“டேய் ப்ரணவ் சீக்கிரமா எழுந்துடு டா… ” என்று உத்ரா சொல்ல அவனோ எதற்காக எழுந்துக் கொள்ள சொல்கிறாள் என்று மறுகேள்வி கேட்காமலேயே எழுந்து நின்றான்.
சுற்றி முற்றி அவனை வட்டமடித்து ஆராய்ந்து பார்த்தவள் யோசனையாக நிமிர்ந்துப் ப்ரணவ்வைப் பார்த்தாள்.
“டேய் என்னடா நீ பண்ண சம்பவத்துக்கு அண்ணா பதில் சம்பவமா பெருசா பண்ணி இருப்பாங்கனு பார்த்தேன்… ஆனால் உடம்புல ஒரு காயம் இல்லை.. எப்படி டா அண்ணாவை சமாளிச்சே? எதை சொல்லி தப்பிச்சே? சரி அதைவிடு நல்லா தடிமாடு மாதிரி வளர்ந்து இருக்கியே இப்போ கூட குழந்தை மாதிரி கண்ணாடியை உடைச்சு வெச்சு இருக்கே..” என்று சொல்லியபடி கீழே விழுந்து கிடந்த பொருட்களை எல்லாம் எடுக்கத் துவங்கினாள்.
ஆனால் உத்ராவின் வார்த்தைகளைக் கேட்ட ப்ரணவ்வோ ” ஏது ” என்றான் அதிர்வாக.
“அம்மா பர தேவதை தடிமாடு கணக்கா கண்ணாடியை உடைச்சது நான் இல்லை உன் அண்ணன் தான்… ” என சொல்ல உத்ரா பட்டென்று தன் கையில் வைத்து இருந்த பொருட்களை எல்லாம் கீழே போட வினய் திரும்பி உத்ராவையும் ப்ரணவ்வையும் மாறி மாறி கொலைவெறியோடு முறைத்தான்.
“அண்ணா ஏற்கனெவே உடைஞ்சு போன பொருள் தானே அது.. அதை தெரியாம உத்ரா கீழே போட்டுட்டா அதுக்கு ஏன்னா இப்படி முறைக்கிறீங்க?” என்று ப்ரணவ் உத்ராவிற்கு ஆதரவாக பேச வர வினய் அவனைப் பார்த்து பல்லைக் கடித்தான்.
“நான் கொலைகாரனா மாறுறதுக்குள்ளே இங்கே இருந்து தப்பிச்சு போயிடுங்க… இல்லைனா இங்கே நடக்கிறதே வேற… ” என்று சொல்லிவிட்டு அவன் திரும்பி பார்க்க அங்கே இருந்த இருவரும் எப்போதோ காணாமல் போய் இருந்தனர்.
உதட்டில் பூத்த சின்னச் சிரிப்புடன் மீண்டும் கீழே சிதறிக் கிடந்த எல்லா பொருட்களையும் சேகரித்து ஒரு அறையில் பத்திரப்படுத்தி வைத்துக் கொண்டு இருந்தான்.
வெளியே உத்ராவை அழைத்து கொண்டு சென்ற ப்ரணவ்வோ முணுமுணுத்தபடியே வந்து கொண்டு இருந்தான்.
“இது என்ன உத்ரா அவரே எல்லா பொருளையும் போட்டு உடைப்பாராம் அப்புறம் அவரே சின்னதா ஒரு பொருளை போட்டதுக்கு இப்படி திட்டுவாராம்… இதெல்லாம் கொஞ்சம் கூட சரியில்லை உத்ரா. அண்ணாவை சமாளிப்பதற்கு இன்னும் நமக்கு பயிற்சி பத்தலையோ உத்ரா… ” என அவன் கேட்டு கொண்டு வர இன்னும் உத்ரா அதிர்ச்சியில் இருந்து மீளவே இல்லை.
ப்ரணவ் அண்ணாவா உடைஞ்சாங்க?” என்றாள் மீண்டும் நம்பாத குரலில்.
“ஆமாம் உத்ரா அவர் தான் உடைச்சாரு.. என்னோட இரண்டு முட்டைக்கண்ணாலே அவர் கண்ணாடி உடைச்ச சம்பவத்தை நேரிலே பார்த்தேன்… நம்பு… “
“ஆனால் அண்ணா உடைச்சதை என்னாலே நம்பவே முடியல ப்ரணவ்.. ஒரு வேளை உன் கண்ணு தப்பா பார்த்து இருக்குமோ.. “
“அடிங்க கொன்னுடுவேன் உன்னை… அதான் சொல்றேன்ல அண்ணா தான் உடைச்சாங்கனு.. இப்படி திரும்ப திரும்ப இதே கேள்வியே உன் மண்டையை உடைச்சுடுவேன் சொல்லிட்டேன்…”என்றான் கடுப்பாக.
“இல்லை ப்ரணவ் அவங்க பொத்தி பொத்தி பாதுகாத்ததை இப்படி ஒரே செகண்ட்ல அடிச்சு நொறுக்குனதை என்னாலே நம்பவே முடியல… “
“உத்ரா நம்ம மனசுக்கு பிடிச்சவங்க கண்ணீருக்காக இந்த மலையை கூட புரட்டி போட்ட முடியும்… காதல் வந்தா தான் இதெல்லாம் உனக்கு புரியும்.. ” என்று அவன் சொல்ல உத்ரா சட்டென்று நிமிர்ந்து ப்ரணவ்வைப் பார்த்தாள்.
“மிஸ்டர் ப்ரணவ் எனக்கும் எல்லாமே கூடிய சீக்கிரம் புரிய ஆரம்பிச்சுடும். ஏன்னா என் ஆளு வைபவ் எனக்கு எல்லாத்தையும் புரிய வைப்பாரு. எனக்காக அவர் இந்த உலகதத்தையே கூட புரட்டிப் போடுவாரு. சரி நான் போய் என் ஆளு கிட்டே பேசுறேன்…” என்று சொல்லிவிட்டு சென்றவளை விளங்காத பார்வையுடன் பார்த்துக் கொண்டு இருந்தான் ப்ரணவ்.
“அடேய் ப்ரணவ் உனக்கு சனி வேற எங்கேயும் இல்லைடா. உன் நாக்குலயே உட்கார்ந்து டான்ஸ் ஆடிட்டு இருக்கு. சும்மா இருந்தவளை உசுப்பேத்திவிட்டு இப்படி வைபவ்வைக் காதலிக்க நானே ஐடியா கொடுத்துட்டேனே. ஐயோ ஐயோ எங்கப் போய் முடியப் போகுதோ… இவள் வேற இப்போலாம் என் கிட்டே பேசவே மாட்டேங்குறா… போன்லயே விழுந்து கிடக்கிறா… ரொம்ப தான் பண்றா இப்போ எல்லாம்… ” என்று மனதுக்குள் புலம்பித் தள்ளிக் கொண்டு இருந்தான்.
நிமிடத்திற்கு ஒரு முறை வரும் குறுஞ்செய்தி அன்று ஏனோ வைபவ்வின் அலைபேசியிற்கு வரவே இல்லை. இதுவரை அந்த குறுஞ்செய்திகளை புறக்கணித்தவன் மனமோ இன்று வரவில்லை என்றதும் தன்னையும் அறியாமல் அந்த குறுஞ்செய்திகளுக்காக காத்து இருக்கத் தொடங்கியது.
என்ன ஆயிற்று ஏன் இன்னும் வரவேயில்லை என்று எண்ணிக் கொண்டு இருக்கும் போதே அலைபேசி நொடி நேர மின்னலாய் ஒளிர்ந்தது. சட்டென்று எடுத்துப் பார்த்தவனது இதழ்கள் புன்னகையில் மிளிர்ந்தது.
தேடாதே அன்பே
உன் தேடலின் முடிவில்
நான் தான் இருப்பேன்
உறவாக உன் உயிராக…