Jeevan Neeyamma–EPI 24

Jeevan Neeyamma–EPI 24
அத்தியாயம் 24
என் நெஞ்சில் உன்னைப் பொத்தி வைத்திருப்பதால், எனக்கு தனிமை என்பது இல்லை என்பாள்! யாரவள்? என் ஜீவனவள்!
கார் பயணம் மிக அமைதியாகவே போய் கொண்டிருந்தது. தனது ஆயாவின் இறுக்கமான முகத்தைப் பார்த்து மிக அமைதியாகவே காரை ஓட்டினான் ரஹ்மான். ரேடியோ கூட திறக்கப்படவில்லை.
இவன் காலையில் எழுந்து தொழுகையை முடிக்கும் வரை அமைதி காத்த அப்துல்லா,
“கிளம்பு, பினாங்குக்கு போகனும்!” என அறிவித்தார்.
“எதுக்கு ஆயா?”
“காரணம் சொன்னாத்தான் கூட்டிட்டுப் போவியா?” என கேட்டவரின் குரலில் மருந்துக்கும் சிநேக பாவமில்லை.
பினாங் எனும் வார்த்தையில் மனம் படபடத்தாலும், அதற்கு மேல் ஒன்றும் கேட்காமல் பயணத்துக்கு ரெடியானான் ரஹ்மான். காரில் முன் சீட்டில் ஏறி அமர்ந்த அப்துல்லா, கண்ணை மூடி படுத்து விட்டார். மகனிடம் ஒற்றை வார்த்தைப் பேசவில்லை அவர்.
நெடுஞ்சாலையில் கவாசான் ரேஹாட் என அழைக்கப்படும் உணவகங்கள் மற்றும் டாய்லட் வசதி இருக்கும் இடத்தில் காரை நிறுத்தினான் ரஹ்மான். இரண்டு மணி நேரம் பயணித்திருந்தனர். காலை உணவு கூட எடுத்திருக்கவில்லை இருவரும். இவனால் பசி தாங்க முடியும் என்றாலும் அவன் தந்தைக்காகவே நிறுத்தி இருந்தான். கார் நிறுத்தப்படவும் கண்ணைத் திறந்தார் அப்துல்லா.
“உங்களுக்குப் பசிக்குமே, சாப்பிடலாம் ஆயா!” என்ற மகனை ஆதங்கத்துடன் பார்த்தார் அப்துல்லா.
மனைவி போனதற்குப் பிறகு, தாயாய் நின்று தாங்கும் மகன் மீது கோபமில்லை அவருக்கு. மிதமிஞ்சிய வருத்தம் மட்டுமே! தன்னிடம் இவ்வளவு பெரிய விஷயத்தை மறைத்து விட்டானே மகன் எனும் ஆதங்கம் மட்டுமே! பெருமூச்சுடன் காரில் இருந்து இறங்கினார் அவர். அவரை இடம் பார்த்து அமர்த்தி விட்டு, உணவு வாங்கி வந்து தந்தான் ரஹ்மான். அவருக்குப் பிடித்த தே ஓவும் வாங்கி வந்திருந்தான். அமைதியாக சாப்பிட்டார் அப்துல்லா. இவனும் ஒன்றும் பேசாமல் அமைதியாகவே உணவருந்தினான்.
காலை நேரமாதலால் ஆட்கள் குறைவாகவே இருந்தார்கள் அங்கே. உணவை முடித்தவுடன்,
“கிளம்பலாமா ஆயா?” என இவன் கேட்க,
“உன் கிட்ட பேசனும் ரஹ்மான்” என்றார் அவர்.
அமைதியாக அவர் முகம் பார்த்து அமர்ந்திருந்தான் ரஹ்மான்.
“நேத்து சி கேச்சிக் அப்பா போன் போட்டிருந்தாரு! மகளுக்கு கல்யாணம் செய்யப் போறத பத்தி பேசனாரு” என்றவர் மகனின் முகத்தை உற்று நோக்கினார்.
அவன் முகத்தில் ஆயிரமாயிரம் உணர்வுகள். சோகம், வருத்தம், ஆத்திரம், கவலை, ஆதங்கம், என நொடிக்கொரு ஜாலம் காட்டியது அவன் வதனம். கண்கள் மெல்ல சிவப்பேற, கை முஷ்டி இறுக, உடல் விறைப்புற பட்டென எழுந்துக் கொண்டான் ரஹ்மான்.
“எங்க போற?”
சுண்டு விரலைக் காட்டியவன் சட்டென நடந்து விட்டான்.
என்றோ ஒரு நாள் திருமணம் முடித்து இன்னொருவனுக்கு சொந்தமாகி விடுவாள் தன்னவள் என மனதை தயார் படுத்தி வைத்திருந்தாலும், அதை நேரில் கேட்கும் போது உள்ளமெல்லாம் ரணமாகி கொன்றது! உடல் அனலில் இட்டது போல தகித்தது. டாய்லட் இருக்குமிடத்துக்கு வந்தவன், தன் கையை ஓங்கி ஓங்கி சுவற்றில் குத்தினான். கை வலி எடுத்து, சிவந்து, லேசாக வீங்க ஆரம்பித்தும் குத்துவதை நிறுத்தவில்லை அவன். உயிருக்குயிரானவளை இன்னொருத்தனுக்கு தாரை வார்த்துக் கொடுக்கக் போகும் தனது கையாலாகாத்தனத்தை எண்ணி தன்னையே வதைத்துக் கொண்டான் ரஹ்மான். மீனாம்மா, மீனாம்மா என ஜபம் போல அவள் பெயரை உச்சரித்துக் கொண்டே இருந்தான் அவன். டாய்லட் உள்ளே ஆள் வரும் அரவம் கேட்டு, சுவற்றைக் குத்துவதை விட்டவன் முகத்தில் நீரை வாரியடித்து தன்னை சமன் படுத்த முயன்றான். மனதை நிதானப்படுத்த வேதங்களை ஓதினான். மூச்சை இழுத்து இழுத்து விட்டு தன்னை நிலைப்படுத்தினான். லேசாய் நிதானத்துக்கு வந்ததும் தனது ஆயாவை தேடி சென்றான்.
திரும்பி வந்த மகனின் முகத்தைப் பார்த்த அப்துல்லாவுக்கு மனம் உருகிப் போனது. ஆனாலும் அவனிடம் ஒன்றும் காட்டிக் கொள்ளவில்லை அவர்.
“எப்போ கல்யாணமாம்?” என அசிரத்தையாகக் கேட்பதைப் போல கேட்டான் இவன்.
“மீனாட்சி கல்யாணம் செஞ்சுக்க மாட்டேன்னு பிடிவாதம் பிடிக்கறாளாம்!”
சில்லென தென்றல் வீசியது போல தேகமெல்லாம் சிலிர்த்துப் போனது அவனுக்கு. அந்த உணர்வுகளெல்லாம் சில விநாடிகள்தான். அடுத்த நொடி குற்ற உணர்ச்சி வந்து அமர்ந்துக் கொண்டது.
‘நான் அவ வாழ்க்கையில ரெண்டாவது முறை வராம போயிருந்தா, அவளும் கணவன், குடும்பம், பிள்ளைகள்னு சந்தோசமா வாழ்ந்திருப்பாளே!’ என தன்னவளுக்காக மனம் வேதனைப்பட்டது.
“அவ மறுப்புக்கு நீதான் காரணம்னு அழகு சொல்றாரு! இது நெஜமா ரஹ்மான்?”
தலை ஆமென மெல்ல ஆடியது.
“உன் கிட்ட இருந்து இத நான் கொஞ்சம் கூட எதிர்ப்பார்க்கல ரஹ்மான்! சின்ன வயசுல இருந்து அவங்க குடும்பத்த உனக்குத் தெரியும்! அவங்களோட பழக்க வழக்கம் தெரியும், பாரம்பரியம் தெரியும்! நம்மள நம்பி அதாவது உன்னை நம்பி அவங்க மகள பழக விட்டிருக்காங்க! ஆனா நீ, அந்த நம்பிக்கைக்குத் துரோகம் செஞ்சிருக்க. நட்பா உன்னை நினைச்ச உன் நண்பன் ஆறுவோட நம்பிக்கையைத் தகர்த்திருக்க! அந்த குடும்பம் முழுக்க அவ மேல எவ்வளோ அன்பு வச்சிருக்காங்கன்னு உனக்குத் தெரியும் தானே! அவளுக்கு எப்படிலாம் கல்யாணம் செஞ்சு எப்படிலாம் வாழ வைக்கனும்னு அந்த தகப்பன் எவ்வளோ கனவு கண்டிருப்பாரு! அதெல்லாம் என் மகன் மூலமா கானல் நீரா போகனுமா ரஹ்மான்?”
அவர் கேட்ட கேள்விகள் ஒவ்வொன்றும் நெஞ்சில் ஈட்டியாய் குத்தியது ரஹ்மானை. ஆயாவுக்கு பதில் சொல்ல முடியாமல் தொண்டையடைத்தது இவனுக்கு. தண்ணீரை குடித்து சோகத்தை உள்ளே இறக்கியவன் மெல்லிய குரலில்,
“நான் என்ன ஆயா செய்யட்டும்? ஜாதியோ, மதமோ, மொழியோ, இனமோ பார்த்து வரதில்லையே காதல்! இது வேணாம்னு நான் எவ்வளவோ போராடியும் இந்த மனசு விடாப்பிடியா அவதான் வேணும்னு கேட்டு என்னை கொஞ்சம் கொஞ்சமா கொன்னுட்டு இருக்கே, நான் என்ன ஆயா செய்யட்டும்? இது சரி வராதுனு உடம்பால பிரிஞ்சி இருந்தாலும் மனசு என் மீனாம்மாவ விட்டு வர மாட்டேன்னு சண்டித்தனம் செய்யுதே, நான் என்ன ஆயா செய்யட்டும்?” என்றவனின் குரலில் அவ்வளவு வலி.
“நம்பிக்கைத் துரோகம்னு சொன்னீங்களே ஆயா, அந்த துரோகத்த செஞ்சிடக் கூடாதுன்னு தான் நெஞ்சு முட்ட ஒருத்தர் மேல இன்னொருத்தருக்கு காதல் இருந்தும் நாங்க ரெண்டு பேரும் தனிச்சு நிக்கறோம். உங்களுக்காக அவ என்னை விட்டுக் குடுத்துட்டா, அவ குடும்பத்துக்காக நான் அவள விட்டுக் குடுத்துட்டேன். உங்க எல்லாருக்காகவும் தனித்தீவா வாழ்ந்துட்டு இருக்கோம் நாங்க!”
“நீ எனக்காக ஒன்னு செய்யனும் ரஹ்மான்!”
என்ன என்பதை போல பார்த்தான் இவன். மகனின் சோக முகம் இவர் நெஞ்சைக் கசக்கிப் பிழிந்தாலும் இன்னொரு குடும்பத்தின் நன்மைக்காக சொல்ல வந்ததை பிசிறில்லாமல் சொன்னார் அப்துல்லா.
“உன்னை மறந்துட்டு வேற கல்யாணம் செஞ்சிக்க சொல்லி மீனாட்சிய நீதான் கன்வின்ஸ் பண்ணனும். அதுக்குத்தான் நாம அங்க போறோம்!”
அதிர்ந்துப் போனான் ரஹ்மான்.
“என்னால முடியாது ஆயா!”
“ரஹ்மான்!!!!”
“எப்படி ஆயா சொல்லுவேன்! எப்படி சொல்லுவேன் நான்? நான் உனக்கு வேணம்னு சொன்னதுலயே அவ பாதி செத்துட்டா! இன்னொருத்தன கட்டிக்கன்னு சொன்னா முழுசா செத்திடுவா ஆயா! என்னால அது முடியாது!”
“அப்போ வாழ்நாள் முழுக்க உன்னையே நினைச்சிட்டு அவ பட்ட மரமா நிக்கனுமா ரஹ்மான்? அது தான் உன் காதல் அவளுக்கு கொடுக்கற பரிசா?”
“ஐயோ அப்படிலாம் இல்ல ஆயா!” என தவித்தான் இவன்.
“அப்போ அவ கிட்ட பேசி சம்மதிக்க வை!”
இரு கரங்கள் கொண்டு முகத்தை மூடிக் கொண்டான் ரஹ்மான். வீங்கி இருந்த அவன் கரத்தைப் பார்த்து உயிர் வரை வலித்தது இந்த தகப்பனுக்கு. மகனைப் பார்த்து இதயம் கசிந்தாலும் அழகுவின் கண்ணீருக்காக தனது மனதைக் கல்லாக்கிக் கொண்டார் அப்துல்லா.
ஆரம்பத்தில் போனில் கோபமாகப் பேசிய அழகு, பின் உடைந்து கண்ணீர் விட்டு கதறிவிட்டார் இவரிடம். அவர் சொல்லித்தான் தங்கள் பிள்ளைகளின் காதல் கதை தெரிந்தது அப்துல்லாவுக்கு. இந்தப் பிரச்சனைக்கு முடிவை நேரில் வந்து பேசித் தீர்த்துக் கொள்ளலாம் என சொல்லி போனை வைத்திருந்தார் இவர்.
பெண்ணைப் பெற்ற தகப்பனாய் அழகு மனம் படும் பாடு புரிந்தது இவருக்கு. அவர் சம்மதித்தால் தனது செல்ல சி கெச்சிக்கை மருமகளாக்கிக் கொள்ள இவருக்கும் ஆசையாய்தான் இருந்தது. ஆனால் மதம் மாறாமல் அது சாத்தியமில்லையே இந்த நாட்டில்! அழகுவின் பிரச்சைனைக்கான தீர்வு தன் மகனிடம்தான் இருக்கிறது என புரிந்துக் கொண்டுதான் பினாங்குக்கு கிளம்பி இருந்தார் அப்துல்லா.
மகன் தன்னிலை அடைய சிறிது அவகாசம் கொடுத்தவர், கார் சாவியை அவனிடம் இருந்து வாங்கிக் கொண்டார். இவனும் தன் தந்தையின் அருகே கண் மூடி அமர்ந்துக் கொண்டான். காரைக் கிளப்பியதும்,
“ஈபூவுக்கு இந்த விஷயம் தெரியுமா? அதான் ரஹ்மான் சொல்லற வரைக்கும் அவன கல்யாணம் செய்ய சொல்லி வற்புறுத்தாதீங்கன்னு சொன்னாளா?” என கேட்டார் அப்துல்லா.
ஆமென தலையசைத்தான் இவன்.
தந்தையாய் தாயுமானவனாய் இருந்தாலும், பிள்ளை என வரும் போது தாயிடம் இருக்கும் அந்த நுண்ணிய உணர்வு தகப்பனிடம் இருப்பதில்லைதான் என எண்ணிக் கொண்டார் அப்துல்லா.
‘உன் மகன் தவிக்கிறத என்னால தாங்க முடியல அமீனா! ஆனா எனக்கு வேற வழி தெரியலையே நான் என்ன செய்ய!’ என மனைவியிடம் சரணடைந்தார் அந்த அன்பு கணவர்.
கெடாவில் இருந்து லீவுக்கு வீட்டுக்கு வந்தவளை சந்தோஷமாகவே வரவேற்று உபசரித்தனர் வீட்டினர். அன்றைய இரவு உணவு உண்டுவிட்டு ஓய்வாய் அமர்ந்திருந்த போதுதான் பேச்சைத் தொடக்கினார் அழகு.
“அம்மாடி மீனுக்குட்டி! வந்து இங்க உட்காருடா” என தன் அருகே மகளை அமர்த்திக் கொண்டார்.
“என்னப்பா?” என கேட்டப்படியே வந்து அமர்ந்தாள் மகள்.
“படிச்சு முடிச்சு, நீ வேலைக்கும் போய் ஒரு வருஷம் ஓடிப் போச்சு!”
அடுத்து என்ன வரப் போகிறது என புரிந்துப் போக மேனி மெல்ல நடுங்கியது இவளுக்கு.
“அப்பா உனக்கு மாப்பிள்ளைப் பார்த்திருக்கேன்மா! அவரும் வாத்தியார்த்தான்! நமக்கு தூரத்து சொந்தம். உன் போட்டோவ பார்த்தே மாப்பிள்ளை பிடிச்சிருக்குன்னு சொல்லிட்டாரு! ஜாதகம் கூட பத்துக்கு எட்டு பொருந்தி வருதுடாம்மா! அப்பாவுக்கு இந்த சம்பந்தம் ரொம்ப பிடிச்சிருக்கு! வீட்டுலயும் எல்லாருக்கும் பிடிச்சிருக்கு. இந்தா மாப்பிள்ளைப் போட்டோ! நீயும் பிடிச்சிருக்குன்னு ஒத்த வார்த்தை சொல்லிட்டா, புது வீட்டுக்குப் போனதும் கல்யாணத்த வச்சிடலாம்” என்றவருக்கு மகள் சம்மதம் சொல்லி விடுவாள் என அவ்வளவு நம்பிக்கை.
கணவர் நீட்டிய போட்டோவை வாங்காமல் அமைதியாய் அமர்ந்திருந்தவளையே உற்றுப் பார்த்தார் ஈஸ்வரி. அவருக்கு இதயம் படபடவென அடித்துக் கொண்டது.
“பையனுக்கு அக்கா தங்கச்சி இல்ல! ஒரே ஒரு அண்ணாதான். அவருக்கும் கல்யாணமாகிடுச்சுடி! உங்களுக்கு கல்யாணமானா தனிக்குடுத்தனம்னு சொல்லிட்டாங்க. எந்தப் பிக்கல் பிடுங்கலும் இல்லாம நிம்மதியா போகும்டி வாழ்க்கை. மாப்பிள்ளைப் பையனும் கண்ணுக்கு லட்சணமா இருக்காரு! வாங்கிப் பாருடி போட்டோவ!” என மகளை உந்தினார் ஈஸ்வரி.
அப்பொழுதுதான் வீட்டுக்கு வந்த ஆறுமுகம்,
“என்னப்பா சொல்லிட்டீங்களா இவ கிட்ட? அடியே கல்யாணப் பொண்ணு, சீக்கிரம் மாப்பிள்ளையைக் கட்டிக்கிட்டு வீட்ட விட்டு கிளம்பற வழிய பாரு! அப்போத்தான் எனக்கு ரூட் கிளியர் ஆகும்” என கிண்டலடித்தான்.
அப்பொழுதும் அமைதிதான் அவளிடம். மகளின் அமைதி என்னவோ செய்ய,
“என்னம்மா கண்ணு?” என கேட்டார் அழகு.
கண்கள் கலங்க,
“எனக்கு கல்யாணம் வேணாம்ப்பா” என்றாள் இவள்.
“என்னடி கல்யாணம் வேணா?” என குரலை உயர்த்தினார் ஈஸ்வரி.
“அடியே இவளே! இப்போ எதுக்கு இம்புட்டு கோபம் ஒனக்கு! நம்ம கைக்குள்ளயே வளந்தப் புள்ள, கல்யாணமாகி வேற வூட்டுக்குப் போறதுனா பயம் இருக்கத்தானே செய்யும்! நல்லபடி சொல்லி தேத்தி விடாம வள்ளுன்னு விழற!” என மருமகளைக் கடிந்துக் கொண்டார் ராக்கு.
“ஏத்தா பவுனுக்குட்டி! மாப்பிள்ளை வூடு இந்த ஃபேரிய புடிச்சு கடல் கடந்து போனா அரை மணி நேரத்துல வந்துடும்த்தா! பார்க்கனும்னு ஒரு போனு போட்டா உங்கப்பன் உன்னைப் பார்க்க ஓடி வந்திடுவான்த்தா” என பேத்தியை சமாதானப்படுத்தினார் ராக்கு.(பட்டர்வெர்த் பினாங்கின் ஒரு பகுதி என அறியப்பட்டாலும், கடல் கடந்து குட்டி தீவாக இருக்கும் இடத்தையே பினாங் தீவு என சொல்வார்கள்.) இவளுக்குப் பார்த்திருந்த வாத்தியார் மாப்பிள்ளை பினாங்கில்தான் வேலை செய்தார்.
“எனக்கு கல்யாணம் வேணாம் அப்பத்தா” என கண்களில் கண்ணீர் வழிய பேசியவளைக் கோபமாகப் பார்த்தார் ஈஸ்வரி.
“அந்தப் போட்டாவுல உள்ள பையந்தான் இந்த வீட்டுக்கு மாப்பிள்ளை! அவர் கூடத்தான் உனக்கு கல்யாணம் நடக்கப் போகுது! வேற எதாச்சும் கோக்குமாக்கா நடந்துகிட்டன்னு வை, உங்க அம்மா தூக்குல தொங்கிடுவா!” என ஆங்காரமாய் ஈஸ்வரி சொல்ல, உடைந்து அழுதாள் மீனாட்சி.
“என்ன ஈசு இப்படி பேசற!” என கோபம் கொண்டார் அழகு.
“உங்க அருமை மக என்னைப் பேச வைக்கறா! நீங்க கல்யாணத்துக்கு ஆக வேண்டியத பாருங்க” என அவர் சத்தம் போட, குளித்து விட்டு வந்த ஆறு,
“என்னம்மா இவ்ளோ சத்தம்? இவ ஏன் அழறா?” என கேட்டான்.
எழுந்து அவனருகே போனவர், மகனைப் பிடித்து சரமாரியாக அடிக்க ஆரம்பித்தார். அவன் திகைத்துப் போய் பார்க்க,
“ஏன்டி இவளே! உனக்கு பைத்தியம் கிய்த்தியம் புடிச்சிடுச்சா! அவன ஏன்டி அடிக்கற?” என சத்தம் போட்டார் ராக்கு.
“எல்லாம் உன்னாலத்தான்! உன்னாலத்தான்! அவன கூட்டாளின்னு நீ சேர்த்துக்கவும் தான் இவ்வளவும் நடக்குது” என மகனை கண் மண் பாராமல் அடித்தார் அவர்.
“யம்மா, யம்மா விடுமா!” என தடுத்தான் ஆறு.
“ம்மா அண்ணாவ விடுங்க! நான் ரஹ்மானை காதலிச்சதுக்கு அவன் என்ன செய்வான்!” என மீனாட்சி கதற, அந்த இடமே சட்டென அமைதியாகிப் போனது.
எல்லோரின் பார்வையும் மீனாட்சியின் மேல் நிலைக் குத்தி நின்றது. தரையில் மடங்கி அமர்ந்தவள் முகத்தை மூடிக் கொண்டு அழ ஆரம்பித்தாள்.
“ஐயோ ஐயோ! தலைப்பாடா அடிச்சிக்கிட்டேனே அவங்க சவகாசம் வேணான்னு! என் பேச்சை யாராச்சும் கேட்டீங்களா?” என நெஞ்சில் அறைந்துக் கொண்டு கத்தினார் ராக்கு.
அழகு அப்படியே செயலிழந்துப் போய் நின்றார். தன் செல்ல மகளா! காதலா! அதுவும் வேற்று மதத்து ரஹ்மானுடன் காதலா! அவரால் நம்பவே முடியவில்லை.
கண்ணீர் கண்களுடன் நிமிர்ந்து தகப்பனை ஏறிட்டவள்,
“அப்பா, அப்பா! நீங்க என்ன சொன்னாலும் கேக்கறேன்பா! ஆனா கல்யாணம் மட்டும் வேணாம்பா! ஐயோ, என்னால வேற யாரையும் என் பக்கத்துல வச்சுக் கற்பனை பண்ணிக் கூட பார்க்க முடியலையே!” என நின்றிருந்த தகப்பனின் கையைப் பிடித்துக் கொண்டு கெஞ்சினாள் மீனாட்சி.
அவர் முகத்தைத் திருப்பிக் கொள்ள,
“எனக்கு ரஹ்மான ரொம்பப் பிடிக்கும்பா! உங்களுக்குப் பிறகு என்னை பூப்போல தாங்கனது அவன்தான். என்னோட முதல் நட்பு, முதல் காதல் எல்லாமே அவன்தான்! நான் வயசுக்கு வந்தத கூட முதன் முதலா சொன்னது அவன் கிட்டத்தான்! ரஹ்மானைக் கட்டிக்க நீங்க சம்மதிக்க மாட்டீங்கன்னு எனக்கும் தெரியும், அவனுக்கும் தெரியும்பா! நாங்க, ரெண்டு குடும்பத்து நன்மையைக் கருதிதான் விலகி வந்துட்டோம், என்னென்னிக்கும் விலகியே இருப்போம்! என் வாழ்க்கையில இருந்து அவன ஒதுக்கி வச்சாலும், என் மனசுல இருந்து ஒதுக்கி வைக்க முடியலப்பா! எவ்வளவோ முயற்சி செஞ்சுப் பார்த்துட்டேன் அவன மனச விட்டுத் தூக்கிப் போட முடியல!” என தேம்பியவள்,
“கல்யாணம்னு நீங்க பேசறதயே என்னால ஏத்துக்க முடியலையே, எப்படிப்பா அந்த இன்னொருத்தன் கூட மனசு ஒப்பி வாழ்வேன்! அதை நெனைக்கறப்பவே அருவருப்பா இருக்குப்பா! அப்படியே செத்துடலாம் போல இருக்கு!” என சொல்லி வாய் மூடுவதற்குள் மகளை பளாரென அறைந்திருந்தார் அழகு.
“ஏய்யா!!!” என ஈஸ்வரி அலற,
“ஐயோ புள்ளயே அடிச்சுக் கொல்லறானே!” என சத்தம் போட்ட ராக்கு தன் வயோதிக உடல் ஒத்துழைத்த அளவுக்கு வேகமாய் நடந்து வந்து தன் பேத்தியைக் கட்டிக் கொண்டார்.
“இன்னொரு அடி என் பேத்தி மேல விழுந்துச்சு நான் மனுசியா இருக்கமாட்டேன்டா! பஞ்சையும் நெருப்பையும் பக்கத்துல வச்சா பத்திக்காம என்னடா செய்யும்? நான் சொல்லறப்பலாம் அலச்சியமா இருந்துட்டு, இப்போ வந்து குத்துதே குடையுதேன்னா ஆச்சா?” என புலம்பியவர், பேத்தியின் சிவந்திருந்த கன்னத்தை வருடிக் கொடுத்தார்.
“உசுர குடுத்து வளத்த என் கிட்டயே செத்துடலாம் போல இருக்குன்னு சொல்லறா ஆத்தா! எமனுக்குத் தூக்கிக் குடுக்கவா மாருலயும் தோளுலயும் போட்டு வளத்தேன்! என் மகளுக்கு நல்ல வாழ்க்கை அமையனும்னு ராப்பகலா நாயா பேயா உழச்சி இவள கரை ஏத்துனேனே இப்படி செத்துப் போகனும் மாதிரி இருக்குன்னு இவ வாயால கேக்கறதுக்குத்தானா ஆத்தா!” என கண்ணீர் விட்டார் அழகு.
ராக்குவின் பிடியில் இருந்து விலகி தந்தையைக் கட்டிக் கொண்டாள் மீனாட்சி.
“என்னை மன்னிச்சிடுங்கப்பா! அப்படிலாம் இனிமே பேச மாட்டேன்!” என கதறியவளை அழகு கட்டிக் கொள்ள, இன்னொரு புறம் வந்து மகளைக் கட்டிக் கொண்டார் ஈஸ்வரி. தங்களின் செல்ல மகளின் அழுகை இருவரையும் மிகவும் பாதித்தது.
“பாப்பா, எந்தக் காரணத்த கொண்டும் செத்து போற முடிவ மட்டும் எடுக்க மாட்டேன்னு எனக்கு சத்தியம் பண்ணிக் குடு” என கையை நீட்டினார் அழகு.
கண்ணீருடன் அவருக்கு சத்தியம் செய்துக் கொடுத்தாள் மகள்.
“ஆத்தா இவள கூட்டிட்டுப் போய் படுக்க வை! சோர்ந்துப் போய் கிடக்கறா! மத்ததெல்லாம் நாளைக்குப் பேசிக்கலாம்” என்றவர் மகளைப் படுக்க அனுப்பினார்.
மகளை படுக்க அனுப்பி விட்டுத்தான் அப்துல்லாவுக்கு போன் செய்தார் அழகு. கோபமாக ஆரம்பித்தவர் அப்துல்லாவின் அன்பான வார்த்தைகளில் அடங்கிப் போனார். அன்று இரவு அந்த வீட்டில் யாருக்குமே உறக்கமில்லை. அழகு பலதும் நினைத்தப்படி அப்படியே படுத்திருந்தார்.
யாருக்கு என்ன கவலை இருந்தாலும் விடியல் என்பது வந்துதானே தீர வேண்டும்! பொழுது விடிந்தது, இந்த காதலர்களின் வாழ்க்கை விடியுமா?
அன்றைய நாள் சாதரணமாக ஆரம்பித்து, ஆறு ரஹ்மானின் ஆக்ரோஷமான அடிதடியில் வந்து நின்றது.
“டேய் ரஹ்மானு! என் தங்கச்சி மேல கைய வச்ச, ஒனக்கு மொத எதிரி நான்தான்டா” என சின்ன வயதில் சொன்னவன், தன் தங்கையின் வாழ்க்கையையே திசை திருப்பியிருந்தவனை சும்மா விட்டு விடுவானா!!!!!!!!
(ஜீவன் துடிக்கும்…)
(போன எபிக்கு லைக், கமேண்ட் போட்ட அனைவருக்கும் நன்றி. லவ் யூ ஆல் )