காதல் சதிராட்டம்-22b

காதல் சதிராட்டம்-22b

உடைந்து அழுது கொண்டு இருந்தவளை வினய் அணைத்து ஆற்றுப்படுத்த முயல ஐஸ்வர்யாவும் விமலும் ஓடி வந்து அவளை அணைத்துக் கொண்டனர். நால்வரது அணைப்பிலும் அவர்களது நட்பு கசிந்தது. ஆனால் ஐஸ்வர்யாவின் உள்ளத்தில் மட்டும் லேசான குற்றவுணர்வு கலந்து இருந்தது.

தன் கையில் இருந்த அந்த கோப்பையை எடுத்து ஆதிராவின் கொடுத்தவள் ” இது உன்னோடது ஆதி மா.. என்னோடது இல்லை… ” என்றாள் குரல் கரகரக்க.

ஆதிராவோ அந்த கோப்பையை வாங்காமல் ” நான் தோத்ததுக்கு வருத்தப்படல… ஆனால் போட்டியே போடாம தோத்துட்டேனு தான் வருத்தப்படுறேன் ஐஸ்வர்யா… எனக்கு இந்த கோப்பை எல்லாம் பெரிய விஷயம் இல்லை… ஆனால் ஏ. ஆர் ரஹ்மான் சார் முன்னாடி பாட முடியாம போயிடுச்சே அது தான் வலிக்குது. எல்லாமே இந்த பாழாப் போன என் தூக்கத்தாலே தான் வந்தது… நான் ஏன் இப்படி தூங்குனும்? இப்படி ஒரு வாய்ப்பை இழக்கணும்? எல்லாம் என்னாலே தான்…” என்று தன்னைத் தானே நொந்துக் கொண்டவள் ஒரு கட்டத்தில் தன்னையே அடித்துக் கொள்ள முயன்றாள்.

அவள் கைகளைப் பற்றி தடுத்து நிறுத்தினான் வினய்.

“ப்ளீஸ் ஆதிரா உன்னை நீயே காயப்படுத்தாதே… நான் தான் தப்பு பண்ணிட்டேன். நீ தூங்குனா எழுந்துக்க மாட்டேனு தெரிஞ்சும் உன்னைத் தனியா படுக்கவிட்டு பெரிய தப்பு பண்ணிட்டேன்..” என்று வினய் தன்னை குற்றம் சாட்டிக் கொள்ள முயல ஆதிராவோ தடுத்தி நிறுத்தி தன் மீது குற்றம் சுமத்திக் கொண்டாள்.

ஆனால் இந்த குற்றத்திற்கு காரணமான ஐஸ்வர்யாவோ எதையும் சொல்ல முடியாமல் தலை கவிழ்ந்து நின்றாள்.

இந்த விஷயத்தை சொன்னால் எங்கே தன்னை ஒதுக்கிவிடுவார்களோ என்று பயமாக இருந்தது.

ஆகையால் எதுவும் பேசாமல் அமைதிக் காத்தவள் மனதினுள் ஒரு எண்ணம் மட்டும் உறுதியாக உதித்தது.

“இனி என்ன ஆனாலும் சரி… ஆதிரா எதையும் இழக்கக்கூடாது… அவளை நான் இழக்கவும் விட மாட்டேன்… இனி அவளுக்கு வரப் போற எந்த ப்ரச்சனையும் என்னைத் தாண்டி தான் அவள் பக்கத்துல போக முடியும்… சாரி ஆதிரா… ஒரு வாட்டி நான் உன்னை கஷ்டப்படுத்திட்டேன். ஆனால் இன்னொரு வாட்டி காயப்படுத்த மாட்டேன்… ” என்று மனதார உறுதி எடுத்துக் கொண்டாள்.

அதற்கு பிறகு வந்த நாட்களில் எல்லாம் ஆதிராவை அவள் நொடிப் பொழுதுக் கூட பிரியவில்லை.

இருவரும் ஒட்டிப் பிறந்த இரட்டை சகோதரிகள் போல எல்லா இடத்திலும் ஒன்றாகவே திரிந்தனர். வினய்யோ அவர்களின் நட்பைக் கண்டு பூரித்துப் போய் இருந்தான். அவன் கண்கள்  இப்போது எல்லாம் ஆதிராவை வேறு மாதிரிக் காட்டியது.

முன்பு எல்லாம் அவள் முடி ஒதுக்கி தன் காதுமடலில் சொருகுவது வெறும் காட்சியாகத் தான் தெரியும். ஆனால் இப்போது எல்லாம் அது கவிதையாக தெரிந்தது.

ஆதிராவின் கண்களை எந்த வித தயக்கமும் இன்றி பார்ப்பவன் இப்போது எல்லாம் அவள் கண்களைப் பார்க்கவே தடுமாறினான்.

எங்கே அந்த கருவிழிக்குள் தன் இதயத்தை தொலைத்துவிடுவோமோ என்று பயந்தான்.

அவளை எப்போது காதலிக்கத் தொடங்கினோம் என்று பலமுறை தன் மனதைக் கேட்டுப் பார்த்தான்.

அவளது கன்னங்களில் கண்ணீர் கறை ஒட்டி இருப்பதைப் பார்க்க முடியாமல் பார்த்த முதல் நாளே அவளை சமாதானம் செய்த பொழுதா?

அவளது காந்தக் குரலை மேடையில் கேட்டு ஸ்தம்பித்த அந்த நொடி தான் இந்த காதல் ராகம் மனதினுள் இசைக்கத் தொடங்கியதா?

அன்று அவளுக்காக பறவையின் கூட்டைத் தேடி சென்ற போது தான் இந்த காதல் கூட்டுக்குள் புகுந்து கொண்டேனோ?

கண்களை மூடி ஒவ்வொரு வரியையும் உயிர் மீட்டும் இசையாக என் காதினுள் நிறைத்து என் உயிரினில் ஊடுறுவிய அவளின் அந்த பாட்டின் போது தான் இதயம் அவளிடம் சரண் புகுந்ததோ?

அவனால் குறிப்பிட்டு இதனால் தான் இந்த காரணத்தால் தான் அவள் மீது காதல் வந்தது என்று வரையறுத்துக் கூற முடியவில்லை.

இன்னும் ஒரே மாதத்தில் அவனது படிப்பு முடியப் போகிறது. அதன் பின் அவன் இங்கே இருக்க மாட்டான்.

தன் சொந்த ஊருக்கு சென்று தன் தந்தையின் தொழிலைப் பார்த்துக் கொள்ள வேண்டிய நிலை.

ஆதலால் கடைசி நாளில் தன் மனதினுள் இருப்பதை அவளிடம் சொல்லிவிட வேண்டும் என்று முடிவு எடுத்தவன் ஹாட் சிப்ஸ் கடைக்கு செல்வதற்காக கிளம்பி வெளியே வந்து பைக்கை எடுக்க எத்தனித்த நேரம் சரியாக ஆதிராவும் அங்கே வந்து நின்றாள்.

அவன் அவளுக்காக எடுத்துக் கொடுத்து இருந்த சுடிதாரை தான் அணிந்து இருந்தாள்.

முதலில் அவளுக்கு கொடுக்க வாங்க மறுத்தவள் ஐஸ்வர்யாவுக்கும் அவன் கொடுப்பதைப் பார்ப்பதும் தயக்கம் இல்லாமல் வாங்கிக் கொண்டவளது தேகத்தை இன்று அந்த உடை தழுவி இருந்தது.

லாவண்டர் நிறத்தில் அங்கங்கே பூக்கள் சிதறி விழுந்ததைப் போல பாந்தமாக இருந்த அந்த உடை அவளுக்கு மிக அழகாக இருந்தது.

அவளிடம் இருந்து தன் கண்களை மீட்டு எடுக்க வெகுவாக சிரமப்பட்டு போனான் அவன்.

ஆனால் ஆதிராவின் மனதினிலோ காதல் பற்றிய விதை இன்னும் விழவே இல்லை.

தனக்கு ஒரு முறை ஸ்பான்ஸர்ஷிப் கிடைத்து அது பாதியிலேயே நின்று போய் தனது படிப்பை இனி தொடர முடியாதோ என தவித்த நேரம் இரண்டாவது முறை வேறு ஒருவரிடம் இருந்து ஸ்பான்சர்ஷிப் அவளுக்கு அரிதாக கிடைத்தது. கிடைத்த இந்த வாய்ப்பை இழந்துவிடக்கூடாது என்ற எண்ணம் மட்டுமே இருந்தது.

அதனால் படிப்பினில் மட்டும் தான் அவளது கவனம் இருந்தது.  இதை வினய்யும் அறிவான்.  அதனால் தான் அவன் காதலை இன்னும் அவளிடம் உரைக்காமல் மௌனம் காத்து வந்தான்.

தடுமாற்றமாக அவள் மீது இருந்துப் பார்வையை விலக்கிக் கொண்டு பைக்கை ஸ்டார்ட் செய்ய அவள் இருக்கையின் பின்னே அமர்ந்தாள். பைக் ஹாட் சிப்ஸ் கடையை நோக்கி பறந்தது.

இருவரும் ஹாட் சிப்ஸ் கடையிற்கு வந்து ஒன்றாக இறங்குவதைப் பார்த்த அந்த மேலாளர் கணேசனின் பார்வை குரோதமாக அவர்களின் மீது வந்து விழுந்தது.

அன்று ஆதிரா அட்வான்ஸை கேட்டதாக கடை ஓனர் செல்வத்திடம் சொல்லாததால் கணேசனை தனியாக அழைத்துச் சென்று வெளுத்து வாங்கிவிட்டார்.

அவர் இப்படி வெளுத்து வாங்கியதற்கு காரணம் வினய் தான்  என்பதை பேச்சுவாக்கில் இரண்டு நாட்களுக்கு முன்பு தான் செல்வத்திடம் இருந்து அறிந்துக் கொண்டார்.

அதுவரை இல்லாமல் இவர் இங்கே செய்யும் அட்டூழியங்கள் எல்லாம் வினய்யிற்கு தெரியும் என்பதும் அவருக்கு தெரியும்.

நேரம் கிடைக்கும் போது எல்லாம் வினய் தன்னை அசிங்கப்படுத்துவதை பார்க்கும் போது எல்லாம் அவரது உள்ளம் எரிமலையாய் கொதித்தது.

வினய்யை ஏதாவது செய்ய வேண்டும் என்ற குரோதத்தோடே வாய்ப்புக்காக காத்துக் கொண்டு இருந்தார்.  அவர் கண்களோ கேஷ் கவுண்டரில் நின்றுக் கொண்டு இருந்த புதுப் பெண்ணின் மீது விழுந்தது.

“கண்ணு இன்னைக்கு நீயா என் கிட்டே வரப் போற… உனக்காக தான் காத்துக்கிட்டு இருக்கேன்… ” என்று மனதினுள் நினைத்த அந்த கணேசன் அந்த பெண்ணை கழுகுப் பார்வை பார்த்தபடி  கடந்தார். அந்த பார்வை பட்டு தன் உடம்பு எல்லாம் எரிவது போல் இருந்தது கனியிற்கு.

இந்த கணேசனின் தொல்லை தாங்காமல் ஆதிராவோடு பணியாற்றிக் கொண்டு இருந்த பெண் பாதியிலேயே வேலையை விட்டு நின்று விட்டாள். இரண்டு வாரத்திற்கு முன்பு தான் புதியதாக கனிமொழி இங்கு வந்து சேர்ந்தாள். அந்தப் பெண் இங்கே வந்த முதல் நாளிலேயே  இவர் தன் அயோக்கியத்தனங்களை காட்டத் துவங்கி இருந்தார்.

கனிமொழியின் தந்தையிற்கு இருதய அறுவை சிகிச்சைக்காக பணம் தேவைப்பட்டது. அதற்காக இவரிடம் அவள் உதவிக் கேட்க கணேசனோ அதற்கு பதிலாய் வேறு ஒன்று கேட்டான்.

தன்னுடன் உல்லசமாக ஓர் இரவு கழித்தால் தான் அந்த பணத்தைத் தர முடியும் என்ற பதிலைக் கேட்டதும் உள் அளவில் உடைந்துப் போய்விட்டாள்.

இன்று தான் அந்த பணத்தைக் கட்டுவதற்கு இறுதி நாள்.

கண்களில் கலக்கத்துடன் அவள் வேலைப் பார்த்துக் கொண்டு இருக்க ஆதிரா அவளின் பக்கத்தில் வந்து நின்றாள்.

சாதாரணமாக கனி யாரிடமும் அவ்வளவு எளிதில்  மனம் திறந்து பேசவோ சிரிக்கவோ மாட்டாள். ஆனால் வந்த இரண்டு வார்த்தில் ஆதிராவிடம் மட்டும் ஓரளவுக்கு பேசினாள். ஆனால் என்ன என்றால் பதில் சொல்வதோடு நிறுத்திக் கொண்டாள்.

ஆதிரா கனியின் சோகமான முகத்தைப் பார்த்து ” என்ன ஆச்சு கனி உடம்பு சரியில்லையா? நான் வேணா பார்த்துக்கிறேன் நீ போய் கொஞ்சம் ரெஸ்ட் எடுத்துக்கோ ” என்றாள் ஆதரவாக.

கனியின் முகத்திலோ லேசாக விரக்தி புன்னகைத் தட்டியது.

“உடம்பு எல்லாம் நல்லா தான் இருக்கு.. மனசு தான் சரியில்லை ஆதிரா. இந்த ஆம்பளைங்களை நினைச்சாளே எரிச்சலா வருது… பொண்ணுங்கனா அவளோட உடம்பு மட்டும் தான் அவங்களுக்கு தெரியுது… ஒரே வெறுப்பா இருக்கு… “என்றாள் தன் எரிச்சல் கொண்ட குரலில்.

“கனி ப்ளீஸ் அப்படி நினைக்காதே… ஆம்பளைங்களிலே நல்லவங்களும் இருக்காங்க. ஏன் வினய்யையே கூட எடுத்துக்கோ… ஹீ இஸ் வெரி ஜென்டில் மேன்… ப்ளீஸ் இப்படி எல்லாரையும் சேர்த்து கெட்டவங்கனு சொல்லாதே… ” என்றாள் அவளுக்கு நம்பிக்கை ஊட்டும் விதமாய்.

ஆனால் இந்த ஆண் இனத்தையே வெறுத்து இருந்த கனி அதை ஏற்றுக் கொள்ளவில்லை.

“இல்லை ஆதிரா…  நான் என் அனுபவத்திலே சொல்றேன்… பசங்க ஏதோ ஒரு எதிர்பார்ப்பினாலே தான் நம்ம கிட்டே பேசுவாங்க. அவங்க மனசுல இருக்குற அந்த எதிர்பார்ப்பு பூர்த்தி ஆகுறதுக்காக நமக்கு உதவி செய்யுற மாதிரி நல்லவங்க மாதிரி காட்டிப்பாங்க.  ஆனால் அவங்களோட தேவை முடிஞ்சதும் தூக்கி எறிஞ்சுட்டு போய்டுவாங்க.” என்று கனி பேச பேச அவளால் இந்த கருத்தை முற்றிலுமாக மறுக்க முடியவில்லை.

ஏனென்றால் அவளும் இந்த சம்பவத்தைக் கடந்து வந்து இருக்கிறாள்.

பத்தாம் வகுப்பில் படிக்கும் போது அவளது நண்பன் அவளுக்கு உதவி செய்வதைப் போல செய்து அவன் மீது நம்பிக்கை வர வைத்து பின்னொரு நாளில் அவன் அவளிடம் தவறாக நடந்துக் கொள்ள முயன்றான்.

அந்த கசப்பான அனுபவத்தால் தான் அவள் யாரிடம் இருந்தும் உதவி வாங்கிக் கொள்ள மாட்டாள்.

அந்த உதவியின் பின்னால் ஒரு எதிர்பார்ப்பு ஒளிந்துக் கொண்டு இருக்கும் என்பதை அவள் மனது ஆழமாக நம்பியது.

அப்போதில் இருந்தே ஆண்களிடம் இருந்து ஒதுங்கியே இருந்தாள்.
ஆனால் வினய் மட்டும் விதிவிலக்கு.

அவளது ஆழ்மனம் வினய் அப்படிப்பட்டவன் இல்லை என்பதை ஆணித்தரமாக நம்பியது. பல நாட்கள் கழித்து அவள் முழுவதாக நம்பியது வினய்யை மட்டும் தான்.

“வினய் அப்படிப்பட்டவனாக கண்டிப்பாக இருக்க மாட்டான்… ” என அவள் யோசித்துக் கொண்டு இருந்த நேரம் கனி மீண்டும் தொடர்ந்தாள்.

“நீ சொல்றீயே வினய்… அவன் கூட உன்னை ஒரு மார்க்கமா தான் பார்க்கிறான்… நீ கவனிக்காத டைம்லாம் அவன் உன்னைத் தான் பார்த்துட்டு இருப்பான் நான் கவனிச்சு இருக்கேன். அவன் கூட ஏதோ ஒரு எதிர்பார்ப்போட தான் உன் கிட்டே பழகுறான்… ” என கனி சொல்ல ” சீ சீ அதெல்லாம் கிடையாது.” என்று சொல்லியபடியே வினய்யைப் பார்த்தாள்.

அவன் கண்கள் தன்னை பார்வையால் அளந்து கொண்டு இருப்பதைப் பார்த்தும் சட்டென்று ஆதிராவின் மனம் ஆட்டம் கண்டது.

கனி சொன்னதைப் போல் அவன் அவளைத் தான் பார்த்துக் கொண்டு இருந்தான். ஆனால் காமமாக அல்ல காதலாக.

இதுவரை காதலைப் பற்றியே அறியாத ஆதிராவின் நெஞ்சத்திற்கு ஏனோ அந்த பார்வை தடுமாற்றத்தை விளைவித்தது.

“ப்ளீஸ் வினய் நான் உன் மேலே ரொம்ப நம்பிக்கை வைச்சு இருக்கேன்… என் நம்பிக்கையை உடைச்சிடாதே… ” என்று அவளது மனம் அவனிடம் போராடிக் கொண்டு இருந்தது.

Leave a Reply

error: Content is protected !!