காதல் சதிராட்டம் 28b

காதல் சதிராட்டம் 28b

அந்த அலைப்பேசியில் மிளிர்ந்த புகைப்படத்தையே ப்ரணவ் திகைத்துப் போய் பார்த்துக் கொண்டு இருந்தான்.

ஒரு முறை அலைபேசியைப் பார்ப்பதும் மறு முறை உத்ராவைப் பார்ப்துமாய் இருந்தவனைக் கடுப்புடன் பார்த்தாள், அவள்.

“இப்போ எதுக்கு டா என்னையும் போனையும் மாறி மாறிப் பார்த்துட்டு இருக்க?”

“என்ன டி பண்ணி வெச்சு இருக்க?”

“என்ன டா பண்ணி வெச்சு இருக்கேன்?” அதேக் கேள்வி மீண்டும் அவனிடம் திருப்பிவிட்டாள்.

“என்ன டி கோவை சரளா போட்டோவை அனுப்பி வைச்சு இருக்க?” என்று ப்ரணவ் கேட்க உத்ரா எதுவும் பேசாமல் சட்டென தலை குனிந்தாள். ஆனால் ப்ரணவ் தொடர்ந்து பேசினான்

“அது மட்டுமில்லாம  1234567890 னு வைபவ் நம்பரை சேவ் பண்ணி வெச்சு இருக்க. அடியே சதிகாரி அப்போ இவ்வளவு நாள் என்னை ஏமாத்திட்டு இருந்தியா?” என்றுக் கேட்க அவள் உதட்டைப் பிதுக்கினாள்.

“நான் வைபவ் கிட்டே பேசுனதே இல்லை ப்ரணவ். நீ அவன் பேரை சொன்னாலே நீ  கடுப்பாவியா. அதனாலே தான் சும்மா உன்னை வெறுப்பேத்தி விளையாடிட்டு இருந்தேன். ” என்று சொன்னவளை பலமாக முறைத்தான்.

“ஆக இத்தனை நாள் உன் ஜாலிக்காக என்னை கடுப்பேத்தி வெறுப்பேத்தி காண்டேத்தி பார்த்து இருக்க. அப்படி தானே?” என ப்ரணவ் கேட்க ஆமாம் என்று அவள் தலையசைந்தது.

“ஓ அப்படிங்களா மேடம்.” என்று அவன் கேட்க ” ஆமாம் அப்படி தான்” என்றாள் எவ்வித அலட்டலும் இன்றி.

அவளது பதிலைக் கண்டு தன் கைச்சட்டையை மேலேற்றிவிட்டவன் கை முஷ்டியை இறுக்கினான்.

“என்ன ப்ரணவ் கொசு கடிக்குதா? எதுக்கு இப்படிக் கைச்சட்டையை மேலே ஏத்தி விட்டு இருக்க? ஆமாம் அதென்ன கொசு கடிச்சு இப்படி குண்டா வீங்கிப் போய் கிடக்கு?”

“அடியே அது ஐயாவோட ஆர்ம்ஸ் டி. இப்போ இதே ஆர்ம்ஸ் மாதிரி எப்படி உன் மூஞ்சு வீங்கப் போகுதுனு மட்டும் பாரு… இல்லாத ஒன்னுக்காக என்னை எவ்வளவு டென்ஷனாக்குன?. இன்னைக்கு நீ டெட் பாடி தான். ” என்று அவன் சொல்ல அவள் அவனிடம் இருந்து தப்பித்து ஓட முயன்றாள்.

ஆனால் ப்ரணவ்வோ ஒரே எட்டில் அவளைப் பிடித்து சுவற்றில் சாய்தான்.

அவள் மருண்ட விழி அவனை மிரட்டியது.

அதுவரை அவனது கண்களில் இருந்த அனல் இப்போது குளிர்ச்சியாக மாறி இருந்தது.

அவளையே பார்வையால் விழுங்கிக் கொண்டு இருந்தான் அவன்.

அவனது பார்வை பரிமாற்றம் அவளது கன்னக் கதுப்புகளில் வெட்கத்தை பூசி சென்று இருந்தது.

தயக்கமாய் அவனைப் பார்த்தாள்.

அவனோ அவளது தாடையை நிமிர்த்தி அவளுடைய கண்களோடு தன் கண்களைப் படரவிட்டான்.

“எதுக்காக வைபவ் பேரை சொல்லி என்னை வெறுப்பத்துன?” எனக் கேட்க அவளது உதடுகளில் பதில் மொழி இல்லை. தலையைக் குனிந்துக் கொண்டாள்.

“எதுக்காக நான் வைஷாலி கூட பேசுனா உனக்கு அவ்வளவு கோவம் வந்தது?” என ப்ரணவ் மீண்டும் கேட்க அதற்கும் அவளிடம் பதில் இல்லை. மௌனத்தை மட்டுமே பதிலாக வைத்து இருந்தாள்.

“எதுக்காக உத்ரா நான் உன் மேலே இப்படி பைத்தியம் மாதிரி ஆகிட்டேன்?” என்று ப்ரணவ் சட்டென்று கேட்க அதுவரை குனிந்து இருந்தவள் தலை பட்டென்று நிமிர்ந்தது.

“இந்த குறும்பா? இந்த வாயாடித் தனமா? இந்த கண்ணா? இல்லை உன் கோபமா? இல்லை நீ என் மேலே வைச்ச பாசமா? எது டி என்னை உன் மேலே பைத்தியம் ஆக்குச்சு? ” என்று ப்ரணவ் கேட்க திக்பிரம்மை பிடித்ததுப் போல் அவனையேப் பார்த்தாள்.

அவன் அவளது கையை எடுத்துத் தன் நெஞ்சின் மீது வைத்துக் கொண்டான்.

உத்ரா உத்ரா என்று அலறும் அவன் இதயத்தின் ஓசையை அவளுக்கு உணர்த்துவதற்காக போலும்.

அவளும் அந்த ஓசையை உணர்ந்துவிட்டாள் போல, காதல் விழிகளோடு அவனைப் பார்த்தாள்.

ப்ரணவ்வின் விழிகளிலும் காதல் வழிந்தோடிக் கொண்டு இருந்தது.

அவளது காதோரம் தன் உதடுகளைக் கொண்டு சென்றான்.

அவனது மூச்சுக்காற்றுப்பட்டு அவளது
உடல் நடுக்கம் கொண்டது. அவனது உள்ளங்கையை சட்டென பற்றிக் கொண்டாள்.

தன் உள்ளங்கையை வந்தடைந்த  அவளது விரல்களை அழுத்தமாக பற்றிக் கொண்டு “இந்த கையை நான் எப்பவும் விட மாட்டேன் உத்ரா. ஐ லவ் யூ டி. ” என்றான் அவள் காதுமடல் சிவக்க.

அவனது வார்த்தையால் அவள் முகத்தினில் நாணம் வழிந்தோட அதை மறைக்க அவனது நெஞ்சத்தையே மஞ்சமாக கொண்டாள் அவள்.

தன் கையில் கிடைத்த பொக்கிஷத்தை கைவளைவுக்குள் பத்திரமாய் பொத்திக் கொண்டான் அவன்.

💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐

“ஆதிரா இது தான் உன்னோட முதல் தண்டனை”  என வினய் சொல்ல அவளோ கோபமாக இடுப்பில் கைவைத்து முறைத்தாள் அவனை.

“என்ன இது வினய்?”

“இந்த தோட்டத்துல இருக்கிற எல்லா செடிக்கும் தண்ணி ஊத்தணும் ஆதிரா.” என அவன் சொல்லிவிட்டு அவளிடம் பைப்பை தர கடுப்பாக கீழே போட்டாள்.

“இதெல்லாம் ஒரு தண்டனையா வினய்? ” என அவள் கேட்க அவன் உதட்டில் புன்னகை.

“எனக்கு ரொம்ப ரொம்ப பெரிய தண்டனையா வேணும் வினய்… ” என்றாள் அவள் கண்களில் ஏக்கத்துடன்.

“இது ஒன்னு மட்டுமே உனக்கு தண்டனை கிடையாது. இந்த வாரம் முழுக்க ஒவ்வொரு நாளும் உனக்கு ஒரு தண்டனை தான். ” என வினய் சொல்ல அரைமனதுடன் அந்த செடிகளுக்கு எல்லாம் தண்ணீர் ஊற்றத் துவங்கினாள்.

எல்லா செடிக்கும் நீர்விட்டவள் இறுதியாய் அவளும் அவனும் ஒன்றாக நட்ட அந்த செடியின் அருகில் வந்தாள்.

கைவிரல்கள் தானாய் அந்த செடியை வருடிக் கொடுத்தது.

கண்டிப்பாக இந்த செடி அன்பின் மரமாக வளர்ந்து நிற்கும் என்று நம்பிக்கைக் கொண்டது அவள் மனம்.

ஆனால் அது எப்போது காதல் மரமாக மாறும்?

அன்று முழுவதும் செடியைப் பராமரித்துக் கொண்டும் நீரூற்றிக் கொண்டும் இருந்தவள் அந்தி சாய  எல்லா வேலையையும் முடித்துவிட்டு ஆயாசமாக அமர்ந்தாள். வினய் அவளது அருகில் அமர்ந்து அவளுக்குத் தண்ணீர் நீட்டினான்.

புன்னகையுடன் வாங்கிக் குடித்தவள் முழுக்குவளையும் குடித்துவிட்டு காலிக் குவளையை அவன் கையில் கொடுத்தாள். அவளது சோர்வு அவனை கொஞ்சமாய் சோகப்படுத்தியது.

“போதும் ஆதிரா. இன்னைக்கான தண்டனை முடிஞ்சுடுச்சு. நாளைக்கு அடுத்த தண்டனைக்கு நீ  தயாராகணும்னா இப்போ போய் ரெஸ்ட் எடுத்தா தான் முடியும். ” என்று வினய் சொல்ல ஆதிரா சலித்துக் கொண்டாள்.

“ஆமாம் என்ன பெருசா தண்டனை சொல்லிடப் போற. இன்னைக்கு செடிக்கு தண்ணீர் ஊத்த சொன்னா மாதிரி நாளைக்கு கோலம் போட சொல்லப் போற.” என ஆதிரா சொல்ல வினய்  அவளது வார்த்தைகளைக் கேட்டு” வாவ் சூப்பர் ஆதிரா” என்றான்.

ஆதிராவின் பார்வை புரியாமல் அவனைப் பார்த்தது.

“நான் நாளைக்கு கோலம் போடப் போற தண்டனையை தான் கொடுக்கப் போறேனு உனக்கு எப்படி தெரியும்?” என்றான் ஆச்சர்யமாக.

“ஐயோ போச்சுடா.” என்று தலையில் அடித்துக் கொண்டவள் “வினய் அப்போ நாளைக்கு உண்மையாவே கோலம் போடுறது தான் எனக்கான தண்டனையா. இது உனக்கு ஓவரா இல்லையா?”

“இல்லையே.” என்று கண்ணடித்து சொன்னவன் “நாளைக்கு தண்டனைக்கு தயாரா இரு. குட் நைட் ஆதிரா ” என்று சொல்லிவிட்டு சென்றவனையே இமைக்க மறந்துப் பார்த்தாள்.

“யூ ஆர் சோ யூனிக் வினய்.” என்று இதழ்கள் முணுமுணுத்தது.

அறைக்குள் வந்தவள் நேராக ஏஞ்சலிடம் சென்றாள்.

“ஓய் ஏஞ்சல் உன் புது வீட்டுல குஷியா இருக்கியா?” என்று அந்த மீன் அக்வாரியத்திற்குள் நீந்திக் கொண்டு இருந்த ஏஞ்சலை வெளியில் இருந்து வருடிவிட்டவள் மென்மையான குரலில் சொன்னாள்.

“ஏஞ்சல் வினய்யை நான் ரொம்ப கஷ்டப்படுத்தி இருக்கேன் தெரியுமா? ஆனால் அவன் என்னை கனவுல கூட கஷ்டப்படுத்த நினைக்காதவனா இருக்கான். இப்படி எல்லாம் ஒருத்தர் இருக்க முடியுமா? ஆனால் வினய் இருக்கானே. அவனாலே இப்படி இருக்க முடியுதே.  ஹீ இஸ் சோ யூனிக் ஏஞ்சல்… ” என்று சொன்னவள் வினய் தனக்காக எழுதிய கடிதத்தை கையில் எடுத்தாள்.

கைகள் உதறியது.

அந்த கடிதத்தைப் படித்தால் அதற்கான முடிவு சொல்ல வேண்டும்.

ஆமாம் என்று சொல்ல முடியாத படி வைபவ்வின் முகம் இடையில் வந்து விழுந்தது.

இல்லை என்று சொல்ல முடியாதபடி வினய்யின் முகம் இன்னொரு பக்கம் தெரிந்தது.

இரண்டு பேருக்கும் இடையில் பெண்டுலம் போல் ஆடியது அவள் மனம்.

சட்டென்று அந்த கடிதத்தை மூடி வைத்துவிட்டு கட்டிலின் மீது சென்று படுத்துவிட்டாள்.

கண்ணை மூடினால் வினய்யின் நியாபகம். கல்லூரி நினைவுகள் எல்லாம் அவள் கண் முன்னே விரிந்தாடியது.

பட்டென்று எழுந்து அமர்ந்தவள் தன் மனதை சமன்படுத்திக் கொண்டு படுத்தால் இன்னொரு புறம் வைபவ்வின் நியாபகம். பேருந்து பயணம் முதல் அவள் காதல் சொன்னது வரை வந்து அவளை இம்சித்தது.

நிம்மதியாக படுக்க முடியாமல் கட்டிலில்  புரண்டவள், எழுந்து ஜன்னலின் அருகே வந்தாள்.

எதிரே இருந்த பௌர்ணமி நிலவும் அவளைப் போல் காய்ந்துக்  கொண்டு இருந்தது.

வினய் அவள் மனது புண்படும்படி எந்த தண்டனையும் கொடுக்கவில்லை என்றாலும் கடவுள் அவளுக்கு சரியான கொடுத்துவிட்டார் என்பது அவளுக்குப் புரிந்தது.

அனல் மேலும் நிற்க முடியவில்லை. புனல் மேலும் நிற்க முடியவில்லை.

மனதார வைபவ்வையும் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. வினய்யையும் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.

அவள் உதடுகளில் சோக முறுவல்.

தான் செய்த தவறிற்கு சாகும் வரை இந்த தண்டனை ஏற்றுத் தான் ஆக வேண்டும் என்று நினைத்தவள் அப்படியே படுத்து உறங்கியும் போனாள்.

அடுத்த நாள் காலை எழுந்தவள் அவன் கொடுத்த கோலம் போடும்  தண்டனையை நிறைவேற்றி விட்டுப் பார்க்க வினய்யோ அடுத்த நாள் மலையேறும் தண்டனை என்றான்.

அந்த தண்டனையும் முடித்துவிட்டு அவனைப் பார்க்க அதற்கடுத்த நாள் தண்டனையாய் பாட்டு பாட சொன்னான்.

அதையும் கடுப்புடன் முடித்தவளுக்கு கொடுக்கப்பட்ட அடுத்த தண்டனை சமையல் செய்வதாம்.

உப்பு உருண்டையை செய்து கொடுத்தவளுக்கு கிடைத்த  அடுத்த தண்டனை ப்ரணவ்வுடன்  மொக்கை போட்டியை நிகழ்த்த வேண்டுமாம்.

ப்ரணவ்வின் மட்டமான மொக்கை ஜோக்குகளுக்கு கஷ்டப்பட்டு எதிர் கவுண்டர் கொடுத்துவிட்டு வினய்யைப் பார்த்தாள். அடுத்து அவளுக்கு இறுதியாக கொடுத்த தண்டனையை கேட்டு தலைசுற்றியது.

நெயில் பாலீஷ் போட்டுக் கொள்ள வேண்டுமாம்.

“இதெல்லாம் ஒரு தண்டனையா வினய்?” என்று சலித்தபடியே அந்த ஞாயிற்றுக்கிழமையைத் தொடங்கினாள்.

“ஆமாம் ஆதிரா எப்போ பார்த்தாலும் நகத்தைக் கடிக்கிறியே அதுக்கு தான் நெயில் பாலீஷ் போட சொல்லி தண்டனை கொடுத்தேன்.” என்றவனை நக்கலாக முறைத்துவிட்டு நகச்சாயம் பூசிய கையை அவன் முன்பு நீட்டி “ஓகே வா” என்றாள் கேள்வியாய்.

அந்த தளிர் விரல்களில் பூசப்பட்ட நகச்சாயத்தை ரசனையோடு பார்த்தவனது கண்கள் ரசனையோடு சொன்னது ” அருமையா இருக்கு. ” என்று.

அதைக் கேட்டு புன்னகைப் பூத்தவள் “ஓகே வினய். ” என்று சொல்லிவிட்டு தன்னறைக்குள் சென்று விட்டாள்.

செல்லும் அவளையே இமைத்தட்டாமல் பார்த்துக் கொண்டு இருந்த வினய்யின் தோள் மீது ஒரு கை ஆதரவாக விழுந்தது.

திரும்பிப் பார்த்தான் ப்ரணவ் தான்.

“அண்ணா இன்னையோட நீங்க ஒப்பந்தம் போட்ட முப்பது நாள் முடியப் போகுது. அண்ணி என்ன சொல்லப் போறாங்கனு எனக்கு பதட்டமா இருக்கு அண்ணா. ” என்று ப்ரணவ் பேச வினய் மிக நிதானமாக அவனைப் பார்த்தான்.

“எனக்கு எந்த பதட்டமும் இல்லை ப்ரணவ். அவளோட பதில் என்னனு எனக்குத் தெரியும். ” என்ற அவனது குரலில் அவளை முழுவதாய் அறிந்தவன் தான் தான் என்ற கர்வம் தெரிந்தது.

“என்ன பதில் அண்ணா?” என்று ப்ரணவ் கேட்க வினய் மெதுவாக சிரித்தான்.

“இன்னும் கொஞ்ச நேரத்திலே அவளே வந்து சொல்லுவா டா. அதுவரை பொறுமையாய் இரு. ” என்று வினய் நிதானமாக சொல்லிவிட்டு தன் அறைக்கு சென்றுவிட்டான்.

ஆனால் இங்கோ ப்ரணவ்வாலோ இல்லை உத்ராவாலோ அப்படி நிதானமாக இருக்க முடியவில்லை.

குறுக்கும் நெடுக்குமாய் ஹாலில் நடந்துக் கொண்டு இருந்தனர்.

ஆதிரா தன் அறையில் இருந்து வெளிப்பட்டு மெல்ல மெல்ல கீழே இறங்கி வந்துக் கொண்டு இருந்தாள்.

அவளையேப் பார்த்துக் கொண்டு இருந்தனர் அவர்கள் இருவரும்.

அவளுடைய பதில் என்னவாக இருக்கும்?

Leave a Reply

error: Content is protected !!