Kalangalil aval vasantham 15(2)
Kalangalil aval vasantham 15(2)
ஒவ்வொரு பிரிவுக்குமே இத்தனை அடுக்குகள் என்றால், ஒவ்வொரு பிரிவுக்குமாக சேர்த்து ஒரு பெரிய படையே இயங்கிக் கொண்டிருக்கும்.
ஒவ்வொரு பிரிவுக்கும் தனித்தனி அலுவலகக் கட்டிடங்கள், அவற்றை மொத்தமாக நிர்வகிக்க ஒரு நிர்வாகக் குழு என்று பிரம்மாண்டமான சாம்ராஜ்யம் ஜூப்பிடர்.
பார்க்கத்தான் பிரம்மாண்டம், எப்படி நிர்வகிக்க முடியும் என்று தோன்றுமே தவிர, அத்தனையும் தானியங்கி இயந்திரம் போல! எங்கும் எந்தவொரு பழுதும் நேர முடியாது. இரண்டு, மூன்று தலைமுறைகளாக உழைப்பவர்கள் மிக அதிகம் அங்கு. அதனால், அத்தனை பொறுப்பும் தங்களுடையது என்ற உணர்வு மிகுதியாக இருக்கும்.
அத்தனை பேருக்கும் தலைமையாய் மாதேஸ்வரன்.
நேர்மையான, சற்றும் சுணங்காத நிர்வாகி!
மூன்று தலைமுறையைத் தாண்டி அவர் நான்காவது தலைமுறை. பிரம்மாண்டமாக இருந்த நிர்வாகத்தை இன்னும் பிரம்மாண்டமாக்கியவர்! உலகம் முழுதும் மூலை முடுக்கெங்கும், அவர்களது தயாரிப்புகளை எடுத்துச் சென்றவர்.
அவரது இணை துணை எல்லாம் ஸ்ரீமதி, அவரது மனைவி! ஆடிட்டிங் படிப்போடு, மொத்த நிர்வாகத்தையும் ஆட்டி வைக்குமளவு திறமையும் இருந்த தைரியமான பெண்மணி.
கணவரின் அத்தனை வேலைகளுக்கும் தோள் கொடுப்பவர். ஸ்ரீமதி ஆடிட் செய்ய வருகிறார் என்றால் அனைவருக்கும் சிறு பயம் துளிர்க்கும். திட்டுவார் என்பதெல்லாம் இல்லை. ஆனால் பார்வையே ஆளை மிரட்டிவிடும். அடி முதல் நுனி வரை அத்தனையும் ஆராய்வார். கணக்கில் ஒரு சிறு புள்ளி கூட தப்ப முடியாது. எவ்வளவு பிரச்சனை செய்பவர்களாக இருந்தாலும், அவர் நிறுத்தி வைத்து இரண்டு வார்த்தை பேசினால் போதும். அலறியடித்துக் கொண்டு ஓடி விடுவார்கள்.
இரும்புப் பெண்மணி!
உடன் சஷாங்கன், வைஷ்ணவி. இருவருமே நிர்வாகத்தில் பங்கெடுத்துக் கொள்வது வழக்கம். சிறு வயது முதலே நிர்வாகத்தின் அரிச்சுவடிகளை கற்றுக் கொடுக்க ஆரம்பித்து விடுவார்கள் அவர்களது குடும்பத்தில். நிர்வாகத்தைக் கற்றுத் தருவது போல, ஒழுக்கமும் மிக முக்கியம்.
அதோடு தொழிலாளர்களை தங்கள் குடும்பமாக பார்க்க வேண்டும் என்ற எண்ணத்தை மிகத் தீவிரமாக விதைத்து விடுவார்கள் சிறு வயதிலேயே! அது மிகப்பெரிய பொறுப்புணர்வை அப்போதே கொண்டு வந்து விடும். அப்படி பொறுப்பிருக்கும் பட்சத்தில், அவர்கள் திசை மாறுவது கடினம் தானே!?
அதுபோல, பெரும்பாலும் ஒற்றை மகனோடு நிறுத்தி விடுவது வழக்கம், பல தலைமுறைகளாக! அது அவர்களாக நினைப்பார்களோ, அல்லது அதுவாக அமைந்து விடுமோ, பல தலைமுறையாக அப்படித்தான்!
சொத்துப் பிரச்சனை வரக் கூடாது என்ற எண்ணமும், சொத்துக்கள் சிதறிவிடக் கூடாது என்ற எண்ணமும் கூட! ஆனால் பெண்கள் இருப்பார்கள்.
அதனாலேயே ஒவ்வொரு தலைமுறையிலும், அவர்களது குடும்பம் சொத்து விஷயத்தில் வளர்ந்து கொண்டு தான் இருந்தது. அதிகார மையம் ஒன்று தான் எனும் போது, குழப்பம் நேர்வதும் குறைவாயிற்றே!
இப்படி அவர்களது வாழ்க்கையின் ஒரு பகுதிதான் கிரிக்கெட் வாரியமும். பிரிட்டிஷார் இருக்கும் போதிலிருந்தே கிரிக்கெட் அவர்களது குடும்பத்தில் ஊறிப் போனது.
அது ஒவ்வொரு தலைமுறைக்கும் கடத்தப்பட, வழி வழியாக அது தொடர்ந்தது. மெட்ராஸ் பிரெசிடென்சியில் பிரிட்டிஷாரால் மெட்ராஸ் கிரிக்கெட் க்ளப் ஆயிரத்து தொள்ளாயிரங்களில் இருந்தது. அது முழுவதுமாக வெள்ளையர்களுக்கான கிளப். இந்தியர்களை அவர்கள் கிளப்பில் சேர்த்துக் கொள்வதில்லை. அதனாலேயே இந்த தவறான அடக்குமுறையைப் பார்த்து கோபப்பட்டு இந்தியர்களுக்கான மெட்ராஸ் யுனைட்டட் க்ளப்பை புஜ்ஜி பாபு நாயுடு, மாதேஸ்வரனின் கொள்ளுத் தாத்தா, மற்றும் பலர் சேர்ந்து ஆரம்பித்தனர்.
அதுதான் முதன் முதலாக இந்தியர்களுக்காக சென்னை மாகாணத்தில் ஆரம்பிக்கப்பட்ட கிரிக்கெட் கிளப். MCC (மெட்ராஸ் கிரிக்கெட் க்ளப்)க்கும் MUC (மெட்ராஸ் யுனைட்டட் க்ளப்)க்கும் அதாவது வெள்ளையர்களுக்கும் இந்தியர்களுக்கும் போட்டி நடத்துவதுதான் புஜ்ஜி பாபு நாயுடுவின் நோக்கமாக இருந்தது. ஆனால் முதல் மேட்சுக்கு முன்னரே புஜ்ஜி பாபு மாரடைப்பினால் இறந்து போக, அப்போது என்ன செய்வது என்று புரியாமல் அனைவரும் தவித்த போது, புஜ்ஜி பாபுவின் உதவியாளர் சுப்ரமணியமும், மாதேஸ்வரனின் கொள்ளுத் தாத்தாவுமாக சேர்ந்து அந்த மேட்சை நடத்தினார்களாம்.
சென்னை மாகாணத்தின் முதல் அணியின் கேப்டன், ராமுலு நாயுடு வெள்ளையர்களின் அணிக்கு தலைவரான பார்ட்ரிட்ஜ்க்கு எதிராக விளையாடியது வரலாறு. அந்த போட்டிகள் யாவும் பொங்கல் போட்டிகள் என்றழைக்கப்பட்டதாம்.
1932ல் சண்டைக் கோழிகளாக இருந்த இந்தியர்களுக்கான MUC (மெட்ராஸ் யுனைட்டட் க்ளப்)பையும் ஐரோப்பியர்களுக்கான MCC (மெட்ராஸ் கிரிக்கெட் க்ளப்) பையும் ஒன்றிணைத்து மெட்ராஸ் கிரிக்கெட் அசோசியேஷன் ஆரம்பிக்கப்பட்டது. 1935 ல் அது சட்டபூர்வமாக இயங்க ஆரம்பித்தது. அதன் பின் இந்திய கிரிக்கெட் வாரியத்தோடு ஒன்றிணைக்கப்பட்டது.
அத்தனைக்கும் வித்திட்டதில் தங்களின் பங்கும் இருக்கிறது என்பதில் மாதேஸ்வரனுக்கு பெருமை மிகவுமுண்டு. ஸ்ரீமதிக்கு அவரது குடும்பம் எப்படியோ, அப்படியே தான் கிரிக்கெட்டும், கிரிக்கெட் வாரியமும். மாதேஸ்வரன் விட்டாலும், வாரியம் கைவிட்டு போக அவர் விட மாட்டார். விட்டதுமில்லை. கணவர் முன் நிற்க, அவரை பின்னாலிருந்து இயக்கியது பெரும்பாலும் ஸ்ரீமதி தான்.
அதனாலேயே கிரிக்கெட் வாரியத்தில் அவர்கள் பங்கில்லாமல் எதுவும் நடக்காது. நடக்கவும் முடியாது. ஆதி முதல் அப்படித்தான்.
ஆனால் ஏன் அவ்வாறு இருக்க வேண்டும் என்று நிறைய பேர், தீவிரமாக நினைத்திருக்கின்றனர் என்பது பின்னாளில் தான் தெரிய வந்தது. ஸ்ரீமதி மேல் பெரும் காழ்புணர்ச்சி இருக்கிறது என்பது மாதேஸ்வரனுக்கும் தெரியும். ஆனால் அவை எல்லாம் தன்னைத் தாண்டித்தான் மனைவியை தொட முடியும் என்பதையும் அவர் எப்போதும் எல்லோருக்கும் உணர்த்திக் கொண்டிருப்பார்.
கிரிக்கெட் வாரியத் தேர்தல் என்றால் அது அன்அப்போஸ்ட்டாக மாதேஸ்வரனுக்கு மட்டுமானது தான். ஓரிரு முறை பிரம்மநாயகம் நின்றிருக்கிறார், அதாவது ரவியின் தந்தை! ஆனால் வெற்றி என்னவோ மாதேஸ்வரனுக்குத் தான்! அவ்வளவு தீவிரம் கிரிக்கெட் வாரியத்தின் மேல்!
கௌரவப் பிரச்சனை, அதோடு கிரிக்கெட்டின் மீதான தணியாத காதல்! நேர்த்தியான வீரர்களை உருவாக்கி சர்வதேச அளவில் நெஞ்சை நிமிர்த்தி நிற்க வேண்டும் என்ற ஆசை!
மகள் வைஷ்ணவிக்காக வரன் பார்க்கும் போது கூட, மருமகன் கிரிக்கெட் வீரராக தான் இருக்க வேண்டும் என்று விளையாட்டாகக் கூறிக் கொண்டிருப்பார் மாதேஸ்வரன்.
“மருமகன் கிரிக்கெட் ப்ளேயர்ன்னா உங்கப்பாதான் பால் பொறுக்கிப் போடணும் பார்த்துக்க, வைஷு…” என்று ஸ்ரீமதி கிண்டலடிப்பார்.
அவர்களுக்கெல்லாம் வேலையே வைக்காமல், வைஷ்ணவி ரவியைப் பிடித்திருக்கிறது என்று அழைத்து வந்தபோது பெற்றவர்கள் இருவருக்குமே அதிர்ச்சி ப்ளஸ் சங்கடம். ஏனென்றால் அவள் அழைத்து வந்ததே, அவர்கள் அவளுக்காகவென இன்னொரு மிகப்பெரிய விளையாட்டு வீரரை சம்பந்தம் பேசிக் கொண்டிருந்தபோதுதான்.
வீட்டில் அனைவருமாக அமர்ந்து பேசிக் கொண்டிருந்தபோது திடீரென வைஷ்ணவி ரவியை அழைத்து வர, என்ன சொல்வது என்றே புரியாமல் சமைந்து நின்றார்கள். மாதேஸ்வரன் தீராக் காதல் கொண்டிருந்த கிரிக்கெட் தான் அவர்களது காதலுக்கும் அடித்தளமாக அமைந்திருந்தது. வாரியக் கூட்டங்களில் கலந்து கொள்ளும் போது ஓரிரு முறை வைஷ்ணவியையும் அழைத்துச் சென்றிருக்கிறார் மாதேஸ்வரன்.
அங்கு ஆரம்பித்த பழக்கம், திருமணம் செய்து கொண்டேயாக வேண்டும் என்று அவள் அடம் பிடிப்பதில் வந்து நின்றது.
ஆனால் ரவியை ஏற்றுக் கொள்ளவே முடியாது என்று பிடிவாதம் பிடித்தார் ஸ்ரீமதி. அதை விட பிடிவாதமாக இருந்தார் மாதேஸ்வரன்.
ஆனால் அனைவரையும் சமாதானம் செய்ததே சஷாங்கன் தான்!
“அக்காவுக்கு பிடிச்சிருக்கு. நல்லாவும் படிச்சு இருக்காங்க. பெரிய குடும்பம் தான். இதுக்கு மேல என்ன வேணும் ப்பா?” என்று அவன் கேட்க,
“சினிமா குடும்பம் நமக்கெப்படி சரி வரும் தம்பி? அதுவுமில்லாம எலெக்ஷன்ல எனக்கு ஆப்போசிட்டா நின்னவன் பையன். அப்பவே எவ்வளவு குடைச்சல் கொடுத்தான். எனக்கு சுத்தமா பிடிக்கல… அவன் நமக்கு வேண்டவே வேண்டாம்…” தனிமையில் மாதேஸ்வரன் முழுமையாக மறுத்துவிட, தாயை பிடித்தான்.
“நாம பார்த்த மாப்பிள்ளைய வைஷுவுக்கு பிடிக்கலையே ம்மா? அவ எப்படி அங்க சந்தோஷமா இருப்பா? அவளுக்கு பிடிச்சது எதுவோ அதை தானே நாம கொடுக்கணும்?” ஷானின் கேள்விக்கு, ஸ்ரீமதி அவனை உறுத்துப் பார்த்துவிட்டு,
“அவ பொம்மையா கேக்கறா? கேட்டதை வாங்கிக் கொடுக்க ஷான்? ஒரு கல்யாணம்னா சாதாரணம் இல்ல கண்ணா. அது வாழ்க்கை. நாம நல்லா வாழறதும், நாசமா போறதும் நாம தேடிக்கற துணையால தான். நம்ம சாய்ஸ் தப்பா போச்சுன்னா, போறது வெறும் காசு பணமில்ல. வாழ்க்கை. அவன் நல்லவனா, ஒழுக்கமானவனா இதையெல்லாம் தான் பாக்கணும். படிப்போ, வசதியோ, பெரிய குடும்பமோ முக்கியமில்ல.
இப்ப வைஷுவுக்கு நாம பார்த்து இருக்க மாப்பிள்ளைக்கு நம்ம அளவு வசதி இல்ல தான். ஆனா ஒழுக்கமானவன். பொறுப்பானவன். கஷ்ட நஷ்டம் தெரிஞ்சவன். அது மாதிரி பையனுக்கு பொண்ணைக் கொடுத்தா காலமெல்லாம் நாம கவலையில்லாம இருக்கலாம் கண்ணா. இல்லைன்னா அந்த கவலையே நம்மளை அரிச்சு தின்னுடும்…”
மடியில் படுத்தபடி தமக்கைக்காக வக்காலத்து வாங்கிக் கொண்டிருந்தவனின் தலையை ஆதூரமாக தடவியபடி கூறினார். வார்த்தைகளில் எவ்வளவு கனிவிருந்ததோ, அதேயளவு கண்டிப்பும் இருந்தது.
அவர் அப்படித்தான்! தன்னுடைய பிள்ளைகளை விட்டுக் கொடுக்கவும் மாட்டார். அதேயளவு கண்டிக்கவும் தயங்க மாட்டார்.
“ம்மா எனக்கு ரவிய பார்த்தா தப்பானவரா தெரியல. நாம சூஸ் பண்ற ஆள் தப்பா இருந்து, ரவி நல்லவரா இருந்துட்டா காலமெல்லாம் அக்காவுக்கு கஷ்டம் தானேம்மா?” என்று கேட்க,
“இல்ல கண்ணா. ரவியோட பார்வை சரியில்ல. அவனைப் பார்க்கும் போது எனக்கென்னமோ ஒரு பாம்பை பார்க்கற மாதிரியிருக்கு. அவ்வளவு விஷமாத் தெரியறான். உனக்கு இன்னும் அதை பிரிச்சு பார்க்கற அனுபவமெல்லாம் வரலடா கண்ணா…” என்று அவர் சன்னமாக சிரித்தபடி கூறியவரின் வார்த்தைகள் இன்னமும் அவனது காதுகளில் ஒலித்துக் கொண்டிருந்தது.
அந்த வார்த்தைகள் தான் எவ்வளவு நிஜம். அப்போது அது புரியாமல், வைஷ்ணவியின் பிடிவாதத்திற்காக தானும் பெற்றோரிடம் பிடிவாதமாக இருந்து திருமணத்தை முடித்து வைத்ததெல்லாம் அவனது கண் முன் வந்து போயிற்று.
காலம் போன பிறகு, தாயை இழந்த பிறகு அவரது வார்த்தைகளை கேட்டிருக்கலாமோ என்ற எண்ணம் தோன்றியது அவனுக்கு! அப்போது எதுவுமே தவறாக தோன்றவில்லை.
***
“அம்மா சொன்னதை கேட்டிருக்கணும் ப்ரீத்தி…” என்று அவன் சொன்னபோது, பிரச்சனையின் மூலாதாரத்தை தொட்டது போல இருந்தது ப்ரீத்திக்கு.
ரவி திட்டமிட்டு உள்ளே நுழைந்திருக்கிறான் என்று ஸ்வேதா சொன்னது எவ்வளவு உண்மை என புரிந்தது.
அப்படி திட்டமிட்டு ஒருவன் ஒரு குடும்பத்தில் நுழைந்து, அந்த குடும்பத்தை சேர்ந்தவர்களையே காலி செய்யுமளவு வன்மம் ரவிக்கு ஏன் வந்தது, எப்படி வந்தது என்று தான் புரியவில்லை. இப்போதே கேட்டு, ஷானை மீண்டும் அந்த வன்மத்துக்குள் மூழ்க வைக்கவும் அவளுக்கு விருப்பமில்லை.
வெறும் பணத்துக்காக ஒரு குடும்பத்தை இந்தளவு ஒருவனால் கெடுக்க முடியுமா? ஷான் படும் துன்பத்தை பார்க்க சகிக்கவில்லை ப்ரீத்திக்கு!
தோளில் இருந்த அவனது கையை எடுத்து விட்டவள், திரும்பி நின்று அவனை நேராகப் பார்த்தாள்.
“அம்மாவோட டெத்ல உனக்கு சந்தேகம் இருக்கா ஷான்?” கூர்மையாக அவள் கேட்க,
“அம்மாவோடது நேச்சுரல் டெத் கிடையாது ப்ரீத்தி…” என்று அவன் இடைவெளி விட, அவனை அழுத்தமாகப் பார்த்தாள்.
“நம்பிக்கைத் துரோகம். அதுதான் ரொம்ப பெரிய விஷம்… அவங்களை கொன்ன விஷம்.” என்றவனின் வார்த்தைகள் அவளுக்கு புரியவில்லை.
“புரியல”
“அப்பா இன்னொரு பொண்ணோட இருக்கறத பார்த்ததுல தான் அம்மாவுக்கு ஹார்ட் அட்டாக் வந்தது…” என்று அவன் கூறிய வார்த்தைகளை அவளால் கொஞ்சமும் நம்ப முடியவில்லை.
“கண்டிப்பா இருக்காது ஷான்…” திட்டவட்டமாக மறுத்தாள் அவள்.
“எப்படி சொல்ற?”
“எனக்கு அப்ப என்ன நடந்ததுன்னு எல்லாம் தெரியாது. ஆனா அப்பா கண்டிப்பா அப்படிபட்டவங்க கிடையவே கிடையாது…” என்று மிக மிக உறுதியாகக் கூறியவளை ஆழ்ந்து பார்த்தான் ஷான்.
“அப்படித்தான் கடைசி வரைக்கும் அம்மாவும் சொன்னாங்க ப்ரீத்தி. ஆனா அவங்க இப்ப இல்லையே!” என்றவனின் குரலில் அத்தனை காரம்!
“வேற என்னவோ தப்பாகிருக்கு. ரவி இதுல கண்டிப்பா சம்பந்தப்பட்டிருக்கணும். இன்னும் வேற என்னமோ இருக்கணும்.”
“எஸ். இப்ப நல்லா புரியுது. ஆனா இப்படியெல்லாம் விளையாடி அவன் என்ன சாதிச்சான்?”
“எதுவா வேண்ணா இருக்கட்டும். ஆனா அக்காவோட லைப் இதுல மாட்டி இருக்கு ஷான்…” என்றபோதுதான் அவனுக்கும் வைஷ்ணவியின் நினைவு வந்தது.
மனம் முழுக்க கசப்புப் பரவியது!
“ஆனா ரவியை என்னால சும்மா விட முடியாது…” அவனது குரலில் அத்தனை உறுதி. எக்கின் உறுதி!
“விடவே வேண்டாம். ஆனா வைஷுக்காவ பார்க்கணும்…”
“ம்ம்ம்… புரியுது…” என்றவனின் குரலில் தீராப்பகையுணர்ச்சி! “அவனை மொத்தமா அடிப்பேன். ஒவ்வொன்னுக்கும் சேர்த்து வச்சு அடிப்பேன். அவன் எழுந்திருக்க முடியாதபடி, திருப்பி அடிக்க முடியாதபடி அடிப்பேன். ஏன்டா இவன் கிட்ட வெச்சுகிட்டோம்ன்னு நினைக்க வைப்பேன்…”
“இது சினிமா இல்ல ஷான். சண்டை போட்டு வில்லனை சாகடிக்க…”
“எனக்கும் தெரியும். சண்டை போட்டுத்தான் ஒருத்தனை போட்டு தள்ளனும்ங்க்றது கிடையாது.” என்றவனின் குரலில் ஒரு விநோதமானவொரு உணர்ச்சி.
“பின்ன?”
“பகையாளியை உறவாடிக் கொல்…”
“என்ன சொல்ற?” குழப்பமாக அவள் கேட்க,
“அவனுக்கு மட்டும் தான் உறவாடி கொல்லத் தெரியுமா? அதுக்கு மேல எனக்கும் தெரியும். செய் அல்லது செத்து மடி. அவ்வளவுதான். இந்த விளையாட்டுல ஒன்னு நான் முடிஞ்சு போகணும்… இல்லைன்னா அவன் முடிஞ்சு போகணும். மொத்தமா…” வஞ்சத்தின் மொத்த உருவமாக அவன் கூற, ப்ரீத்திக்கு அவனது அந்த அவதாரம் நடுக்கத்தைக் கொடுத்தது. வயிற்றில் பூச்சி பறந்தது.
ஆனாலும் அவனை தனியாக விட முடியாது. துரியோதனன் கௌரவன் என்றாலும் கர்ணனுக்கு அவன் தோழன்!
“நாமன்னு சொல்லு ஷான். நானும் இந்த விளையாட்டை விளையாடிப் பார்க்க ஆசைப்படறேன். என்னையும் சேர்த்துக்க ப்ளீஸ்…” என்று விளையாட்டாக கேட்பதை போல கேட்டவளை மெல்லிய புன்னகையோடு பார்த்தான் ஷான்.
“இது லைஃப் கேம் ப்ரீத்தி. என்னோட உயிரை பணயம் வெச்சு விளையாடப் போறேன்..”
“அதான் என்னையும் சேர்த்துக்க சொல்றேன் ஷான்…”
“எந்த எக்ஸ்ட்ரீமுக்கும் நான் போவேன். உன்னால அது முடியாது. உனக்குன்னு ஒரு வாழ்க்கை இருக்கு…”
“அதெல்லாம் அப்புறம் பார்த்துக்கலாம்.”
“வேண்டாம் ப்ரீத்தி… கஷ்டமோ நஷ்டமோ, அது என்னோட போகட்டும்…”
“உன்னை அப்படி தனியா விட முடியாது ஷான். எனக்கு மனசு வர மாட்டேங்குது… எதுவா இருந்தாலும் சேர்ந்தே செய்யலாம். ஒரு பொண்ணா எனக்கு நிறைய இடத்துல அட்வான்டேஜ் இருக்கும். ப்ளீஸ் என்னை யூஸ் பண்ணிக்க…” என்றவளின் குரலில் அத்தனை பிடிவாதம்.
“ஏன்டி நாம என்ன டூர் போறோமா? நானும் வருவேன்னு அடம் பண்ற?” எரிச்சலாக அவன் கேட்க,
“அப்படித்தான்…” அவளது பிடிவாதம் இன்னும் அதிகமானது!
“அப்படின்னா நான் சாகப்போறேன் வர்றியா?” கோப மிகுதியில் அவன் கேட்க,
“அப்கோர்ஸ் எஸ். நீ இப்ப கடல்ல குதின்னு சொன்னாக்கூட குதிப்பேன். ஏன்னு கேக்க மாட்டேன்.”
“ஏன் இப்படி லூசாட்டம் இருக்க ப்ரீத்தி?”
“செஞ்சோற்றுக் கடன். உன்னோட உப்பை சாப்பிடறேன். இதைக் கூட செய்யலைன்னா என்னாகறது? நீ கெட்டதே பண்ணாக் கூட அதுல எனக்கும் ஷேர் கொடு ஷான். உன்னோட பாவத்தை நான் பங்குப் போட்டுக்கறேன்…” வெகு இயல்பாக கூறிவிட்டு அவனை விட்டு நடக்கத் துவங்கினாள்.
வானம் மெலிதாக தூர ஆரம்பித்தது.
சஷாங்கனின் மனதுக்குள் மழையும் புயலும்!