அன்பின் உறவே…4-1
அன்பின் உறவே…4-1
அன்பின் உறவே… 4-1
மனதிற்குள் உற்சாகம் குமிழிட, சீழ்க்கை அடித்துக்கொண்டே வீட்டிற்குள் நுழைந்த பிரஜேந்தரை தடுத்து நிறுத்தினார் சரஸ்வதி.
“விடிஞ்சதும் எந்த பஞ்சாயத்துக்கு போயிட்டு வர்றாப்புல நம்ம பிஸ்தா?” இடக்காக கேள்வி கேட்டவர், “உனக்குன்னு தனியா எடுத்து வைக்க முடியாது. வந்து சாப்பிட்டு முடி!” அதட்டலுடன் முடிக்க,
சற்று முன்னர் காதலியுடன் வம்பு வளர்த்துக் கொண்டே காலை உணவை முடித்த மகன், தற்போது அம்மாவின் அழைப்பிற்கு என்ன பதில் சொல்வதென்று தெரியாமல் முழித்தான்.
“எனக்கு இப்ப பசிக்கல மாம்! ஆபீசுக்கு லேட்டாயிடுச்சு… நான் சைட்டுக்கு போற வழியில பார்த்துக்கறேன்!” மழுப்பலுடன் சொல்லி நழுவப் பார்த்தவனை சரஸ்வதி விடுவதாக இல்லை
“அடேய்… காலங்கார்த்தால எந்திருச்சு ரெண்டு மருமகளுகளும் மெனக்கெட்டு வகை தொகையா ஆக்கிவைச்சா, துரை வெளியே சாப்பிடுவாராம்ல… ஒழுங்கு மரியாதையா வந்து உட்காரு! அரைமணி நேரம் லேட்டா போனா உன் கம்பெனி ஒன்னும் கவுந்தடிச்சு படுத்திடாது!”
குறையாத அதட்டலுடன் சரஸ்வதி மல்லுக்கு நிற்க, அம்மாவிடம் சிக்கிக்கொண்டு தம்பி படும் அவஸ்தையை பார்த்து, அண்ணன்கள் இருவரும் மௌனமாக ரசித்துக் கொண்டிருந்தார்கள்.
“டிபன் முடிச்சிட்டியா இல்ல, இனிமே தான் சாப்பிடப் போறியா பிஜூகண்ணா!” வேண்டுமென்றே சீண்டத் தொடங்கினான் ராஜேந்தர்.
“ம்… நேத்தே முடிச்சிட்டேன்’டா! கொய்யால… உன் வேலைய பார்த்துட்டு போறியா?” கடுப்புடன் எரிந்து விழுந்த தம்பியின் கோபம், அண்ணன்களுக்கு சிரிப்பை மூட்ட, அம்மாவோ சட்டமாக நின்று கொண்டு அவனை முறைத்தார்.
“வெளியே போயி சாப்பிட்டு வர்றவன், முன்னமே சொல்லிட்டுப் போறதுக்கென்ன? உனக்குன்னு ஒருத்தி அடுப்படியில கெடந்து அல்லாடும் போது தான் உனக்குத் தெரியும். ஆக்கி வைச்சத என்ன பண்ணுறதுன்னு வந்தவ கொமட்டுலயே குத்துவா… அப்ப, இந்த கோபத்தை அவகிட்ட கொட்ட முடியுமா?” சரஸ்வதி உரக்க கேள்வி கேட்க,
“அப்படியே மதியத்துக்கு பார்சல் பண்ணிக் குடுத்திடுவா!“ பதில் சொல்லிச் சிரித்தான் ரவீந்தர்.
“யம்மோவ்! அவனுக்குன்னு வர்றவளுக்கு இப்டி வகையா பொங்கலும் பூரியும் கிண்டத் தெரியுமான்னு கேளுங்க! வளர்ந்த பிறகும் அம்மாவும் அப்பாவும் இடுப்புல தூக்கிச் சுமக்குற பச்சபுள்ளையா இருக்கப் போகுது…” மீண்டும் வேண்டுமென்றே சீண்டு முடித்தான் ராஜேந்தர்.
“டேய் அண்ணா! கோர்த்து விடாம நீ போகமாட்டியா?” கோபத்துடன் அவன்மேல் பாய வந்த தம்பிக்கு பயந்தவன் போல் ராஜேந்தர் சிரித்துக் கொண்டே போர்டிகோவுக்கு ஓட, ரவீந்தர் வண்டியெடுக்க இருவரும் சேர்ந்து பிஸ்தா பாரடைசுக்கு கிளம்பினர்.
“வேலை, தொழிலுக்கு போறதுன்னா இப்படி பொறுப்பா நேரத்துக்கு போகணும். நீயும் இருக்கியே? பாதிநாள் வேலைக்கு ரெண்டுநாள் சாக்கு சொல்லிட்டு ஊர் சுத்திட்டு திரியுற!” மகனைத் திட்டிக்கொண்டே உள்ளே சென்றார் சரஸ்வதி.
“அவனுகளும் என் படிப்பை படிச்சிருந்தா, இந்நேரம் வெளிநாடு, பெரிய கம்பெனின்னு பறந்திருப்பானுங்க. படிப்புக்கேத்த வேலையை பார்க்க விடாம இங்கேயே இருந்து குண்டுசட்டிக்குள்ள குதிரைய ஒட்டச் சொல்றது யாரு? நீங்க தானே… அப்ப அனுபவிங்க!” பிரஜேந்தர் சொல்லிக்காட்டியதில் சரஸ்வதி அம்மாளின் கோபம் இன்னமும் எகிறியது.
“இன்னைக்கு யார் புண்ணியத்துல காலை டிபனை வெளியே முடிச்சீங்க மச்சினரே?” அம்பிகா கேலிச் சிரிப்பில் கேட்க,
“என் ஃப்ரண்டு கூட…” ஒற்றை வார்த்தையில் பதில் சொல்லி, தனதறைக்குள் நுழைந்தான்.
‘உன்னோட பர்த்டே செலிபிரேஷனுக்கு நான் ஃபுல்டே பிளான் போட்டா, எல்லாத்தையும் சொதப்பிட்டு போயிட்டியே பிங்கி! ஒருநாள் லீவ்ல சும்மா இருக்குறது எவ்வளவு கஷ்டம் தெரியுமா?’ உள்ளுக்குள் புலம்பியபடி தன் அறையில் பொறுமையற்று உலாத்தியவனுக்கு நேரத்தை நெட்டித் தள்ளுவது பெரும்பாடாய் இருந்தது.
சட்டென்று தோன்றிய யோசனையில், தனது நட்பு வட்டத்தின் வாட்ஸ்-அப் குருப்பில் நுழைந்து, ‘என்ன பண்றீங்க மச்சான்ஸ்?’ டெக்ஸ்டில் அனைவருக்கும் அழைப்பு விடுக்க, வரிசையாக பதில்கள் வந்து விழுந்தன.
‘இப்பதான் விரலை தேய்ச்சிட்டு, சீட்டுக்கு வர்றேன் மாமா!’
‘இந்த நேரத்துல கிரிக்கெட்டா விளையாடுவோம்? ஆபீஸ்ல தான் இருக்கேன்டா மச்சி!’
‘ஜூ-ல இருக்கறவன் கூட ஜூம் மீட்டிங் போயிட்டு இருக்குரா மாமு!’
‘என்ன விசயம்னு சொல்லுங்க பங்காளி!’ இன்னமும் பல கலவையான டெக்ஸ்ட் மெசேஜ்கள் வந்துக் குவிந்த வண்ணமிருக்க,
‘இன்னைக்கு ஓபி அடிச்சிருக்கேன், போர் அடிக்குதுடா பசங்களா… எல்லாரும் தியேட்டர் பக்கம் வந்து சேருங்க’ நல்ல நண்பனாக பிரஜேந்தர் அழைப்பு விடுத்தான்.
‘இந்தா வந்துட்டோம் மச்சி!’
‘உன் ஆளோட பொறந்தநாளுன்னு உதார் காட்டுன… உனக்கே ஆப்பு வைச்சிட்டு போயிட்டாளா?’ அடுத்தடுத்து உற்ற நண்பர்களின் கேள்விகள் தொடர,
‘ஓசியில படமும் பிரியாணியும் வேணுமுன்னா வாயை மூடிட்டு தியேட்டருக்கு வந்து சேருங்க பக்கீஸ்!’ நண்பர்களின் வாயடைத்தான் பிரஜன்.
‘ஃபிகரை கூட்டிட்டு போகாமா எங்க கூட ஜாயின்ட் ஆகுற… என்ன விஷயம் மாப்ளே?’
‘ம்ம்… எல்லாம் நல்ல விசயம்தான். என் ஆளோட அப்பன்காரன் மக பொறந்தநாளுக்கு கோவில்ல அன்னதானம் பண்றாராம். நான் கொஞ்சம் டிஃபரண்டா சினிமா டிக்கெட்டும் பிரியாணியும் தானம் பண்ணலாம்னு இருக்கேன். இதுக்கு மேல கேள்வி கேட்டா, உன்னை கழட்டி விட்டுடுவேன் எப்படி வசதி?’ கெத்தாக மிரட்டியதில், அடுத்த அரைமணி நேரத்தில் தியேட்டர் வாசலில் தவம் கிடக்கிறோம் என சூளுரைத்தது நண்பர்கள் வட்டம்.
நண்பர்களுடன் ஊர் சுற்றிக் கொட்டமடிக்க தயாராகிக் கொண்டு கீழே செல்ல, மீண்டும் வீட்டுப் பெண்களிடம் மாட்டிக் கொண்டான்.
“கொழுந்தனோட டியூட்டி டைம் பதினோரு மணிக்கு மாறிடுச்சா பிரதி?” கடிகாரத்தை பார்த்துக் கொண்டே தங்கையிடம் ஜாடையாக கேட்டாள் அம்பிகா.
“அவருக்கு மட்டும் ஸ்பெஷல் ஷிஃப்டா இருக்கும் போலக்கா!” பிரதீபாவும் வம்புக்கு இழுக்க,
“டி-சர்ட்டும், டிராக் பாண்டும் போட்டுட்டு போறத பார்த்தா, நிஜமாவே வேலைக்கு தான் போறானா இல்ல வேற எங்கேயோ போறானா? அத்தைக்கிட்ட சொல்லவா?” நேரடியாகவே மிரட்டினாள் அம்பிகா.
“உங்க டிபனை சாப்பிடாதது தப்பு தான் அண்ணிங்களா! அதுக்காக அயர்ன் லேடிகிட்ட இப்படியெல்லாம் கோர்த்து விடக்கூடாது. இப்பவே சொல்லிட்டேன்… இன்னைக்கு முழுக்க ஐயாவுக்கு வெளியேதான் சாப்பாடு. உங்க ஃபுட் சார்ட்ல எழுதி வைச்சுக்கோங்க… உனக்காக பொங்கல் கிண்டினேன், புளியக் கரைச்சேன்னு ஆக்கி வைச்சா, நீங்க சமைச்சத நீங்களே முழுங்க வேண்டியதா இருக்கும். உங்க மாமியார் என்னைப் பத்திக் கேட்டா எதையாவது சொல்லிச் சமாளிங்க… அம்புட்டுத்தேன்!” சமாதானக் கொடியை பறக்கவிட்டு பெரிதாகக் கும்பிடு போட்டான் பிரஜேந்தர்.
“வெளியே சாப்பாடா… என்ன காரணமோ? உள்ளது உள்ளபடி சொன்னா, அத்தைகிட்ட போட்டுக் கொடுக்காம இருக்க முயற்சி செய்யறோம்” கோரஸ்பாடி இரண்டு பெண்களும் ஹைஃபை கொடுத்துக் கொள்ள,
“ஆஹா… நம்மகிட்டயே போட்டு வாங்கப் பாக்கிறீங்களே! அம்மா கேட்டா கோவிட் வாக்ஸின் செகண்ட் டோஸ் போட்டுக்கப் போயிருக்கறதா சொல்லிடுங்க!” சிரித்துக்கொண்டே தன் பைக்கை நோக்கி நடந்த நேரத்தில் கருணாகரன் எதிரே வந்தார்.
“வேலைக்குப் போகாம இந்நேரத்துல வீட்டுல என்ன பண்ற?” அப்பா சத்தம் போட,
“ஆங்… எங்க பாஸுக்கு இன்னைக்கு பைல்ஸ் சர்ஜரின்னு ஆபீஸ்ல லீவ் விட்டுட்டாங்க!” வாய்க்கு வந்ததை சொல்லி விட்டுச் சிட்டாகப் பறந்தான் பிஸ்தா.
“தத்தி, தத்தி… இதெல்லாம் எங்கிருந்து உருப்படப் போகுது? சரசு… ஏய் சரசு!” கத்திக்கொண்டே உள்ளே வந்தார் கருணாகரன்.
“இவருக்கு பொழுது போகவும், கோபத்துல ஏலம் விடவும் தான் என்னை பெத்து பேர் வைச்சாங்களா? வீட்டுக்குள்ள நுழையும் போதே சரசு, சரசுன்னு டாவாலியா கத்தகிட்டே வரவேண்டியது. சொல்லுங்க, சரசுக்கு என்னவாம்?” படபடத்தபடியே வெளியே வந்து கேட்டார் சரஸ்வதி.
“உன் மகன் வேலைக்கு போறானா இல்லையான்னு கூடப் பாக்காம அப்படியென்ன வேலை உனக்கு?”
“எனக்கு ஒரு வேலையும் இல்ல… சின்னவன் இன்னைக்கு லேட்டா ஆபீசுக்கு போறான், அவ்வளவுதான்! வெள்ளனவே எந்திரிச்சு வெளியே போனவனுக்கு என்ன வேலையோ என்னவோ… அரக்கபரக்க திரும்பிவந்து ஆபிசுக்கும் போறானேன்னு சந்தோசப்படுங்க! சீக்கிரமா போனா மட்டும் அவனுக்கு சம்பளம் அதிகமா குடுத்து எம்.டி போஸ்ட் தூக்கி குடுத்திடப் போறாங்களா என்ன? இந்த மட்டுக்கும் வீட்டுக்கு அடங்கி ஒடுங்கி இருக்கானேன்னு நிம்மதியா இருங்க!” சடசடவென சரஸ்வதி பொரிந்து முடிக்க,
“ஒவ்வொரு புள்ளைக்கும் உன்னை மாதிரி ஒரு அம்மா இருந்தா போதுமே… அவனவன் பேஸா உருப்பட்டுடுவான். அவனை ரொம்பவே விட்டுப் பிடிக்கிற… இதெல்லாம் எங்கே போயி முடியப் போகுதோ?” கோபத்துடன் கண்டித்தார் கருணாகரன்.
“இவனை நம்பித் தான் கட்டிட தொழில்ல இறங்கப் போறேன்னு புள்ளைய பெரிய படிப்பு படிக்க வைச்சுட்டு, அவனுக்கு முட்டுக் கட்டையும் போட்டா என்ன அர்த்தம்? அப்படியொன்னும் தடம் மாறிப் போறவன் கெடையாது. எம் புள்ள எப்பவுமே கட்டித் தங்கம்தான்” புலம்பலுடன் உள்ளே சென்றார் சரஸ்வதி.
அந்த கட்டித்தங்கம் நண்பர்களுடன் சேர்ந்து தியேட்டரில் விசிலடித்து படம் பார்த்து முடித்து, நல்ல நான்வெஜ் ரெஸ்டாரெண்டில் பிரியாணியையும் மொக்கிவிட்டு அடுத்த கட்ட ஆலோசனையை நடத்தியது.
சாப்பிட்டு முடித்ததும், “தின்னது செரிக்க கிரவுண்ட்ல பாஸ்கெட்பால், வாலிபால் விளையாடனும் இல்லன்னா பௌலிங் சென்டருக்கு போய் பந்து விளையாடனும், என்ன செய்யலாம் பாய்ஸ்?” நண்பர்களிடம் கேட்டான் பிரஜேந்தர்.
“நான் வரல சாமி! நீ என்னதான் தண்ணியா செலவு பண்ணினாலும் உன் ஆத்தா, அப்பன் உன்னை வையப் போறதில்ல… ஆனா, நம்ம கதையே வேற, நம்ம வீட்டுல மாசக் கடைசியில சம்பளம் வந்ததான்னு சிபிஐ ரேஞ்சுல கேள்வி கேட்டே டார்ச்சர் பண்ணிடுவாங்க மாமு! மிச்சம் இருக்குற அரைநாள் வேலைய பார்த்திட்டு நல்ல பிள்ளையா வீட்டுக்குப் போயிடுறேன்!” என்றபடியே ஒருவன் கழன்று கொள்ள, அதையே மற்றவர்களும் பின்பற்றினார்கள்
எதிலும் மனம் ஒட்டாமல் மாலை ஆறுமணிவரை நேரத்தை விரட்டித் தள்ளியவன், வீட்டிற்கு வந்து மாப்பிள்ளையாக தன்னை சிங்காரித்துக் கொண்டு ரவீணாவின் வீட்டை அடைந்தான்.