காதல் தீண்டவே-14a
காதல் தீண்டவே-14a
கதிரவனின் பொற் கதிர்கள் பூமியில் தன்னொளியைப் பாய்ச்சிக் கொண்டு இருந்தது.
அதன் பிரகாசத்தில் பூந்தளிர்கள் எல்லாம் பச்சைப்பட்டாய் மின்னிக் கொண்டு இருந்தன.
பூந்தொட்டியில் பரவியிருந்த வாசத்தை ரசித்தபடியே சீமா பூக்களுக்கு நீர்விட்டுக் கொண்டு இருக்க, அவரது கவனத்தை கலைத்தது… கீழே நின்று பேசிக் கொண்டு இருந்த விஸ்வத்தின் குரல்.
“என்னாச்சு கணேஷ்? எதுக்கு இப்படி குறுக்கும் நெடுக்குமா நடந்துட்டு இருக்க?” என்று பக்கத்து வீட்டில் குடியிருக்கும் கணேஷை விசாரித்துக் கொண்டிருந்தார் அவர்.
ஒரு வாரத்திற்கு முன்பு தான் கணேஷின் மனைவி அகிலா பிரசவித்து இருந்தாள். இப்போது கூட மருத்துவமனையில் தான் சிகிச்சையில் இருக்கின்றாள்.
சுகப்பிரசவமாக இருந்து இருந்தால் இந்நேரத்திற்கு உடம்பு தேறியிருந்து இருப்பாள். பாவம் கத்திப்பட்ட உடம்பாயிற்றே தேற சில நாட்களாகும் என்று சீமா அந்த பெண்ணிற்காக வருந்திக் கொண்டிருந்த நேரம் கணேஷின் குரல் இடைப்பட்டு ஒலித்தது.
“இல்லை அங்கிள். அவளுக்கு இன்னும் ஒரு வாரத்திலே பிறந்தநாள். எனக்கு இவ்வளவு பெரிய கிஃப்ட் கொடுத்த அவளுக்கு பெருசா என்ன கிஃப்ட் கொடுக்கலாம்னு யோசிக்கிறேன். நீங்க ஏதாவது ஐடியா கொடுங்களேன். ” என்றவன் கேட்க விஸ்வம் முகத்தில் சிந்தனை முடிச்சுகள். அதைப் பார்த்த சீமாவிற்கோ சிரிப்பு தான் வந்தது.
இந்த இரண்டு ஆண்களும் சேர்ந்து அப்படி என்ன பெரிய இன்ப அதிர்ச்சி கொடுத்துவிடப் போகிறார்கள்?
ஒரு பூங்கொத்து, தங்கத்திலோ வைரத்திலோ ஏதாவது ஒரு ஆபரணம் இல்லை என்றால் ஒரு உடை இதை தானே காலங்காலமாக பரிசாக கொடுக்கிறார்கள்.
ஆனால் ஒரு பெண் விரும்புவது கணவனிடம் இருந்து கிடைக்கும் இந்த பரிசுப் பொருட்களை அல்ல, கணவன் தன்னையும் தனக்காகவும் யோசிக்க வேண்டும் என்பதே.
தன் வயிற்றையே கிழித்து ஒரு புதிய உலகத்தை பரிசாக கொடுத்தவளின் வலிக்கு பரிசாக என்ன கொடுக்க முடியும் இவர்களால்? ஒரு ஹார்லிக்ஸ் பாட்டிலோ இல்லை ஆப்பிளையோ தவிர்த்து.
யோசித்துக் கொண்டிருந்த சீமாவின் எண்ணவோட்டத்தை தவிடு பொடியாக்கியது விஸ்வத்தின் பதில்.
“கணேஷ் உனக்கு ஒரே குழந்தை போதும்னு சொன்னல?”
“ஆமாம் அங்கிள். இந்த பேபியோட ஃபேமிலி ப்ளானிங் பண்றதா இருக்கோம்.”
“அப்போ சரி நீயே ஃபேமிலி ப்ளானிங் ஆப்பரேஷன் பண்ணிக்கோ. உன் பொண்டாட்டியோட வலியைப் பகிரிந்துக்கிறதுக்கு நிகரா வேற எதுவும் பெரிய கிஃப்ட் இல்லை…” என்று சொல்ல கணேஷிடம் திடுக்கிடல்.
“வாட் அங்கிள்… நானா? ஆம்பளைங்க போய் இதை எல்லாம் பண்ணாலாமா? “
“ஏன் பண்ணக்கூடாதா? நல்லா யோசிச்சுப் பாரு கணேஷ். ஏற்கெனவே வலிப்பட்ட உடம்புலே மறுபடியும் கத்தி வைக்கிறதுக்கு பதிலா நாம அந்த கத்தியை பகிர்ந்துக்கலாமே. அவங்களுக்கு அந்த ஆப்பரேஷன் ரொம்ப வலியைக் கொடுக்கும் ஆனால் ஆம்பளைங்களுக்கு அந்த அளவுக்கு வலியைக் கொடுக்காது. உயிரைக் கொடுக்கிறேனு வசனம் பேசுறது உயிர்க்காதல் இல்லை வலியை பகிர்ந்துக்கிறதுக்கூட உயிர் காதல் தான். முடிவு உன் கையிலே.. ” என்று விஸ்வம் பேசிவிட்டு செல்ல கணேஷின் முகத்தில் தீவிரமான யோசனை.
விஸ்வத்தின் வார்த்தைகள் கணேஷின் உள்மனதை பாதித்ததைப் போல சீமாவின் உள்ளத்தையும் பாதித்தது.
வெளியே சென்று கொண்டிருந்த விஸ்வத்தையே இமைக்காமல் பார்த்துக் கொண்டிருந்த சீமாவிற்கு விஸ்வம் இப்போது மிகப் புதியதாய்.
“என்னம்மா அப்பாவை இப்படி சைட் அடிக்கிறீங்க.” என்று கேலி பேசியபடி பின்னால் இருந்து கட்டியணைத்தாள் மிதுரா.
அதைக் கேட்டதும் சீமாவின் கன்னக்கதுப்புகளில் முதன் முறையாக வெட்கப் படரல். அதைப் பார்த்த பெண்ணின் மனதிலோ சந்தோஷ சிதறல்.
தாயின் வெட்கத்தைப் பார்ப்பது முதல் முறை அல்லவா. அதனால் கண் சிமிட்டாமல் பார்த்து கொண்டு இருந்தாள்.
“என்னடி இப்படி என்னையே பார்த்துட்டு இருக்கிறதா உத்தேசமா? ஆஃபிஸ் டூர்க்கு தேவையான எல்லாத்தையும் எடுத்து வெச்சுட்டியா… எதுக்கும் ஒன் டைம் செக் பண்ணிக்கோ. “
“அதெல்லாம் கரெக்டா எடுத்து வெச்சாச்சுமா. நீங்க வந்து வழி அனுப்புறது மட்டும்தான் பாக்கி. அதனாலே சைட் அடிக்காம வந்து வழியனுப்பி வைங்க” குறும்பு பேசிய மகளின் காதைப் பிடித்துத் திருகினார் அவர்.
“வர வர வாய் ரொம்ப கூடிப் போச்சு உனக்கு.” என்று கடிந்தவரின் குரல் கொஞ்சம் அழுத்தமானது.
“மிதுரா பார்த்து கவனமா இருக்கணும். வளர்ந்த பிள்ளை நீ… உனக்கு எப்படி நடந்துக்கணும்னு தெரியும்… தெரியணும் சரியா? ” என்றவர் கேட்க இவள் நல்ல பிள்ளையாக தலையாட்டினாள்.
“சரி சரி ட்ரைன்ல எப்படி தனியா போவ? நான் வேணா அப்பாவை ஏத்திவிட சொல்லட்டுமா?”
“அம்மா ஆவடி ஸ்டேஷன்ல தீரன் சாரும் ராஜ் சாரும் எனக்காக வெயிட் பண்ணிட்டு இருக்காங்க. அவங்க என்னை பத்திரமா பார்த்துப்பாங்கமா. நான் போயிட்டு வரேன்.அப்புறம் புருஷனும் பொண்டாட்டியும் ரொமான்ஸ் பண்ணிக்கிட்டே பொண்ணை மறந்துடாதீங்க ஓகே வா.” என மிதுரா சொல்லிவிட்டு ஓடவும் சீமா பக்கத்தினில் இருந்த கட்டையை எடுக்கவும் சரியாக இருந்தது.
அரக்கப் பறக்க ஓடியவள் எதிரே வந்த தந்தையின் மீது முட்டி மோதினாள்.
“ரிலாக்ஸ்டா ஏன் இந்த அவசரம். இந்தா அப்பா உனக்காக ஸ்நாக்ஸ் வாங்கிட்டு வந்து இருக்கேன். ட்ரையின்ல சாப்பிடுடா.” என்றவர் பேசிக் கொண்டே அவள் மாட்டியிருந்த பையினில் திணித்தார்.
“அப்பா இது ஸ்நாக்ஸ் பத்தி பேசுற நேரமில்லை. எனக்கு எதிரா தாக்குதல் நடக்கப் போகுது. நீங்க தான் என்னைக் காப்பாத்தணும்” அரக்கப்பறக்க சொன்னவள் அவரது முதுகையே அரணாகக் கொண்டு வாகாக மறைந்துக் கொள்ள முயன்றாள்.
கட்டையோடு வந்த சீமா,விஸ்வத்தின் பின்னே ஒளிந்து இருக்கும் மிதுராவைப் பிடிக்க முயன்றுக் கொண்டிருக்க அவளோ சீமாவை விஸ்வத்தின் மீது தள்ளிவிட்டு வேக எட்டு வைத்து வாசல் பக்கம் ஓடிவிட்டாள்.
இந்த திடீர் தாக்குதலை எதிர்பார்க்காத சீமா சட்டென்று நிலைத் தடுமாறி கீழே விழப் போக விஸ்வம் பிடித்துவிட்டார்.
இருவருக்கும் இந்த நெருக்கம் மிகப் புதிது.
இருவரிடமும் வரையறுக்க முடியாத தயக்கமும் பதற்றமும்.
மீள முடியாமல் அதே நெருக்கமான நிலையில் நிற்க வைத்தது, இருவருக்கிடையில் ஓடிய ஏதோ ஒரு மொழிப் பெயர்க்க முடியாத உணர்வு.
இருவருடைய நெருக்கத்தையும் பார்த்த மிதுரா கண்களில் பொங்கிய சந்தோஷத்தோடு “என்னைப் பெத்தவங்களே. நான் போயிட்டு வரேன். நீங்க மீதி ரொமான்ஸை உள்ளே போய் வெச்சுக்கோங்க. ” என சொல்லிவிட்டு அவர்களிடம் இருந்து கட்டைப் பறந்து வருவதற்குள் மீண்டும் கைக்கு அகப்படாமல் பறந்துவிட்டது அந்த சிட்டு.
💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐
தாம்பரம் என்ற பெயர்ப்பலகை தாங்கியிருந்த அந்த இடத்தில் நின்றுக் கொண்டு அலைபேசியின் தொடுதிரையைத் தொட்டு தொட்டு சடுகுடு ஆடிக் கொண்டிருந்தான் அபி.
அழைக்கலாமா வேண்டாமா? வேண்டாமா அழைக்கலாமா? அழைக்கலாமா வேண்டாமா? என அவன் யோசித்து கொண்டு இருக்க
“என்ன அபி சாரே. போனை வெச்சுக்கிட்டு ‘லவ் பண்ணலாமா வேணாமா இல்லை வேணாமா பண்ணலாமான்ற’ சாங்குக்கு ட்டியூன் பண்ணிக்கிட்டு இருக்கீங்க?”
வெகு அருகில் ஒலித்த சிற்பியின் குரல் கேட்டு திகைத்துத் திரும்பினான்.
யாருக்கு அலைபேசியில் அழைப்பதற்காக தயங்கினானோ அவளே எதிரில் வந்து நிற்கின்றாள் கொஞ்சும் சிரிப்புடன்.
ஒரு கணம் அந்த சிரிப்பில் தன்னை லயிக்கவிட்டவன் அடுத்து அவளது கேள்வியில் சட்டென தன்னை மீட்டெடுத்துக் கொண்டான்.
“இல்லைங்க மேடம்… தண்டவாளத்திலே குதிக்கலாமா வேணாமானு யோசிச்சுட்டு இருந்தேன்.”
“வாவ் அருமையான திங்கிங். உங்க முடிவு என்னனு தெரிஞ்சுக்க ஆர்வமா இருக்கேன். “
“உன் கிட்டே பேசுறதுக்கு பதிலா தண்டவாளத்திலே குதிக்கிறதுக்கு பெட்டர்ன்றது தான் என் முடிவு. “
“ஆஹா அருமையான முடிவு. ஆமாம் உங்களுக்கு ஏழு பிடிக்குமா ஆறு பிடிக்குமா இல்லை எட்டு பிடிக்குமா?”
” எட்டு.. அதுக்கு என்ன இப்போ?”
“இதோ நாம எதிர்க்க இருக்கிறது தான் எட்டாவது தண்டவாளம் உங்களுக்கு பிடிச்ச ட்ராக்லையே குதிங்க. ” என்றவள் சொல்ல அவன் அவளையே முறைத்துப் பார்த்தான்.
“எதுக்கு இப்போ முறைக்கிறீங்க? இந்த ட்ராக் பிடிக்கலைனா ஏழாவது ட்ராக் அந்த பக்கம் தான் இருக்கு. அங்க கூட குதிங்க. எனக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை. ” என்றவள் சொல்ல அவனால் இன்னும் முறைப்பது போல முகத்தை வைக்க முடியவில்லை. வெடித்து சிரித்துவிட்டான்.
“சிற்பி, நான் தான் எல்லாரையும் வெச்சு செய்வேன். ஆனால் நீ ஒருத்தி தான் என்னை வெச்சு செய்யுற. பட் ஐ லைக் இட்.” என்றவன் சொல்லி சிரிக்க அவளும் இணைந்து சிரித்தாள்.
இருவரது சிரிப்பு சத்தத்திற்கு இணையாக பெரும் புன்னகையுடன் வந்து நின்றது அந்த ஏற்காடு எக்ஸ்ப்பிரஸ்.
“ஹே சிற்பி” என்று குரல் வந்த திசையை நோக்கினாள். அங்கே மிதுரா நின்றுக் கொண்டு இருந்தாள்.
அவளைப் பார்த்த வேகத்தில் இவள் பையை அப்படியே விட்டு செல்ல அபி அந்த பெட்டியையும் சிற்பியையும் முறைத்துப் பார்த்தான்.
“ஹே சிற்பி உன் லக்கேஜ் இங்கேயே இருக்கு. “
“நீங்க எடுத்துட்டு வாங்க அபி. “
“என்ன நானா?”
“அபி சாரே… புஷ்-அப்ஸ் இன்னும் என் மெமரிலே இருந்து எரேஸ் ஆகல. ” என்றவள் நியாபகப்படுத்த கப்சிப்பென அடங்கினான் அபி.
“இந்தா எடுத்துட்டு வரேன் சிற்பி மா. நீ பார்த்து போடா.” பல்லைக் கடித்துக் கொண்டு அந்த பெட்டியைத் தூக்கினான்.
இவர்கள் இருவரது சம்பாஷனைகளை உள்ளிருந்து கவனித்தது மூன்று கண்கள்.
அந்த விழிகளுக்கு சொந்தக்காரர்கள், அலுவலகத்தின் புறம் பேசும் கூட்டத்தின் உறுப்பினர்களான ஷாலினி,ஐஸ்வர்யா, இஷிதா என்ற மூவரும் தான்.
இப்போது இவர்கள் வாயிற்கு கிடைத்த இரண்டாவது அவலாக சிற்பியும் அபியும்.
அப்படியானால் முதல் அவல்?
அது மிதுராவும் இரண்டு கார்த்திக்கும் தான்.
ஆவடி ரெயில் நிலையத்தினில் ஏறிய மிதுராவையும் தீரனையும் ராஜ்ஜையும் பார்த்துக் கொண்டு தான் இருந்தது இவர்களது Fm radio கண்கள்.
உள்ளே நுழைந்ததும் மிதுரா ஜன்னலோர இருக்கையில் அமரப் போக தீரனோ சிறுப்பிள்ளை போல ஜன்னல் சீட்டு என்னுடையது என சண்டைப் போட, இவள் விட்டுக் கொடுத்துவிட்டாள். தீரன் ஜன்னலோர இருக்கையில் அமர அடுத்து மிதுரா அமர்ந்தாள். அதற்கு அடுத்து ராஜ் அமர்ந்துக் கொண்டான்.
இரு ஆடவர்களும் அவ்வப்போது மிதுராவிடம் பேசிக் கொண்டு இருந்தனர்.
இதில் தீரனை நினைத்து அவர்களுக்குக் கவலையில்லை. ஏனென்றால் தீரன் எல்லோரிடமும் சகஜமாக பேசுவான்.
ஆனால் இந்த ராஜ்?
எப்போதும் முசுடாக இருக்கும் அவன் மிதுராவிடம் மட்டும் சிரித்து சிரித்து சைகை மொழியில் பேசுவதென்ன? இருவரும் ஒரே உணவை பகிர்ந்து உண்பதுதான் என்ன? அலுவலகத்திலும் இப்போதெல்லாம் ராஜ் சிரித்தபடி எல்லாரிடமும் நடந்து கொள்வதுதான் என்ன?
பார்க்க பார்க்க அந்த விசித்திர விழிகளைக் கொண்ட அந்த பெண்களுக்கு விசித்திரமாய் தெரிந்தது இந்த காட்சிகள்.
“ஹே இந்த மிதுரா ரெண்டு கார்த்திக் சாரையும் கைக்குள்ளே போட்டு வெச்சு இருக்கா. அதுவும் முக்கியமா ராஜ் சாரை… அதே மாதிரி இந்த சிற்பி அபியை கைக்குள்ளே போட்டு வெச்சு இருக்கா. வந்து கொஞ்சம் நாள் இருக்குமா? அதுக்குள்ளே எப்படி கொக்கி போட்டு மடக்கிட்டாளுங்க பாரு.. ” என்று திரித்துப் பேசி சுகம் கண்டுக் கொண்டிருந்த அந்த பெண்களை கவனிக்கவே இல்லை பாவம் இந்த மிதுவும், சிற்பியும்.