emv9

emv9

எனை மீட்க வருவாயா! – 9

“விடியலின் விழிப்பு…

விழிவழி நுழைந்து,

உணர்வினில் கலந்து,

மூச்சோடு உறவாடும்,

உன் நினைவுகளோடே..!

தினங்களின் களைப்பு,

மீண்டிடும் உன் ஒற்றை

ஓரப் பார்வையாலே…!”

 

கடனைக் கட்டவேண்டி, ஈஸ்வரியைத் தேடிவந்த காளியம்மாள், “இன்னும் எவ்வளவுத்தா குடுக்க வேண்டியிருக்கும்.  சரியா பாத்துச் சொல்லு” சிறு அழுக்கேறிய மஞ்சள் பையிலிருந்த பணத்தை ஈஸ்வரியிடம் எடுத்துக் கொடுத்தபடியே கேட்டார்.

நிதானமாக அதிலிருந்த தொகையை எடுத்து எண்ணிய ஈஸ்வரி, “இதே தவணைத் தொகையா அடுத்தடுத்துக் கட்டுனா, இன்னும் இரண்டு தவணையில முடிஞ்சிரும்த்தை”

கடன், வட்டி பற்றிய பேச்சு முதலில் பேசி முடித்தார்கள். பிறகு பொதுவான விசயங்கள் பேசிக் கொண்டிருந்த காளியம்மாள், “ஏத்தா, உங்க பெரியப்பா மகவுட்டுப் புள்ளைக்கு, மாப்பிள்ளை ஏதும் பாக்குறாகளா?”

“யாரு அந்த அன்னபூரணி மகளைக் கேக்கறீங்களா”

“அது பேருலாம் எனக்கு என்னானு தெரியாதுத்தா… அவுக உங்க வகையில சொந்தம்னால, உன்மூலமா கேக்கச் சொன்னாரு மாமா”

காரியம் நிறைவேற, யார் மேலாவது பழியைப் போட்டு சாதித்துக் கொள்வதென்பதெல்லாம் சாதாரணம். அதனால் அதை இலகுவாகவே கையாண்டார் காளி.

நேரடியாக உரியவரிடம் சென்று பெண்ணைக் கேட்டு, அவர்களுக்கு விருப்பமில்லையெனில், வருத்தம் எழும், அதைத் தவிர்க்க எண்ணிய காளி, மறைமுகமாக தனது எண்ணத்தை அறிய எடுத்துக் கொண்ட முயற்சிதான் இது.

உண்மையில் காளியம்மாள் தற்போது கேட்ட பெண்ணை, தன் மகனுக்கு எடுக்கும் எண்ணம் துளியுமில்லை. 

திவ்யாவை நேரடியாக ஈஸ்வரியிடம் கேட்க தயக்கம்.  தனது மகனுக்கு பெண்ணைத் தருவாளோ மாட்டாளோ என குழப்பமான மனநிலையில், அதே முறைகொண்ட, வேறு பெண்ணை ஈஸ்வரியிடமே வந்து கேட்கச் சொன்னார் காளியம்மாள்.

“பாத்துக்கிட்டுத்தான் இருந்தாக” சலிப்பாக உரைத்தாள் ஈஸ்வரி.

ஈஸ்வரியின் இந்த செயலின்மூலமே ஓரளவு கணித்துவிட்டார் காளி.  ஆனாலும் தெரிந்தாற்போல காட்டிக்கொள்ளவில்லை.

“கேட்டு வையித்தா. அடுத்த தடவை வரும்போது என்ன ஏதுன்னு சொல்லு”

“சரித்தை”

அதன்பின் வந்த பொதுவான பேச்சுகளில்கூட ஒதுக்கத்தைக் கவனித்தவர், தான் நினைத்து வந்ததுபோல நடப்பதைக் கண்டு சந்தோசத்தோடு விடைபெற்றுக் கிளம்பியிருந்தார் காளி.

காளியம்மாளுக்கு தான்கூறிய பெண்ணைப்பற்றியும், அவர்களது வீட்டைப்பற்றியும் அனைத்தும் தெரியும்.  ஈஸ்வரியைக் காட்டிலும், குறைவான அந்தஸ்தில் இருந்தவர்களின் வீட்டில், பெண்ணெடுக்கும் எண்ணமெதுவும் காளியம்மாளுக்கு இதுவரை இல்லை.

தான் எடுத்த பேச்சால், ஈஸ்வரியின் செயலைக் கண்டுகொண்டு, அடுத்த முடிவை எடுக்க எண்ணியிருந்தார்.

தான் நினைப்பதுபோல, தங்களது வீட்டில் சம்மந்தம் செய்யும் விருப்பம் ஈஸ்வரிக்கு இருந்தால், நிச்சயமாக தான் கூறியவர்களிடம் எதுவும் மேற்கொண்டு பேசமாட்டாள் என யூகித்துக் காயை நகர்த்தியிருந்தார் காளி.

அடுத்தமுறை ஈஸ்வரி கூறும் பதிலைக்கொண்டு, மேற்படி என்ன பேசலாம் என திட்டம் வைத்திருந்தார் காளி.

அதற்கேற்ப, அன்றைய நிரலை முடித்துக்கொண்டு, விடைபெற்றுக் கிளம்பியிருந்தார் காளி.

சாதாரண நாள்களில், கடன் தொகையை செலுத்த வரும் காளியம்மாளை நன்கு உபசரித்து அனுப்பும் ஈஸ்வரி, அன்று ஒரு டீயோடு அனுப்பியிருந்தார்.  அதிலிருந்தே ஈஸ்வரியின் மனதை ஓரளவிற்கு கணித்திருந்தவர், அதைக் கணவனிடம் சென்று பகிர்ந்து கொண்டிருந்தார்.

“அவ மகளைக் கேக்காம, அன்னபூரணி மகளைக் கேட்டதுல ஈஸ்வரிக்கு வருத்தம்போல.  அதுனால, கண்டிப்பா நமக்கு பொண்ணு குடுப்பா, சட்டுன்னு போயிக் கேக்காம, அடுத்த தடவை என்ன செஞ்சி வச்சிருக்குறானு பாத்துட்டு, கேட்டுக்கிறுவோம்னு கிளம்பி வந்துட்டேன்” என்றிருந்தார் காளி.

…………………..

வாரம் ஒன்று கடந்திருந்தது.

வகுப்பறையின் மோகன நிகழ்விற்குபின், கிருபாவைக் காணவே இல்லை.  திவ்யா, அன்று இரவில் படுக்கைக்குப் போகுமுன் வழமைபோல குறுஞ்செய்தி அனுப்ப முயல, கிருபாவின் திறன்பேசி அணைத்து வைக்கப்பட்டிருப்பது தெரிய வந்தது.

அடுத்த நாள் முதல், அவன் கல்லூரிக்கும் வரவில்லை. இன்று வருவான், நாளை வருவான் என நாள்கள் போனதே அன்றி, கிருபாவைப் பற்றி எதுவும் தெரியவில்லை.  பித்து பிடித்தாற்போலிருந்தது திவ்யாவிற்கு. யாரிடம், என்னவென்றுபோய் கேட்பாள்.

அவனது நினைவைத் தின்று, உணவைத் தவிர்த்திருந்தாள். உடல் வாடத் துவங்கியிருக்க, அவளின் தாய், “என்னடீ ஆச்சு.  திடீர்னு புஸ்னு வர்ற, திடீர்னு இப்டி வன்குரங்கு மாதிரி சட்டுனு மெலியற”

“எனக்குத் தெரிஞ்சா, நானே அதை சரி பண்ணிருக்க மாட்டேனாம்மா”

“இப்டி வித்தியாசமான உடம்ப, நான் பாத்ததே இல்லைடீ”

“டாக்டர் சொன்னமாதிரி, அப்பப்போ எனக்கே தெரியாம, ஏதோ இன்டெர்னல் சப்கான்சியஸ் டைப் ஸ்ட்ரெஸ்ஸுனு நினைக்கிறேன்மா”

“என்ன இழவோ, அவனுங்க காசு புடுங்க, வாயிக்கு வந்ததை, எதையாது சொல்லுவாய்ங்க.  இவவேற.  அதைப்போயி நம்பிக்கிட்டு” என்றவர், “சாப்பாட்டை ஒதுக்காம, கழிவில்லாம நல்லாச் சாப்பிடு.  எல்லாஞ் சரியாகிரும்”

“பசிக்கவே மாட்டிங்கிதேம்மா”

“வேலை, வெட்டி எதாவது செய்யணும்.  எப்பவும் புத்தகமும், கையுமா, வெட்டியாவே இருந்தா அப்டித்தான்”

ஈஸ்வரிக்கு தெரிந்ததைக் கூறிவிட்டு, பழையபடி விக்கியிடமும், திவ்யாவைப் பற்றிப் பேசியிருந்தார்.

“கடசி வருசம் வரப்போகுதுல்ல.  அதான் கொஞ்சம் லோடு கூடபோல.  இதுக்குபோயி நீ பயப்படாதத்தை” என ஆறுதல் கூறியிருந்தான்.

ஆனால் தோழியிடம் கல்லூரியில் வந்து தனித்துப் பேசியவன், “பய ஏதோ பிரச்சனையில மாட்டியிருக்கான்போல தெரியுது திவ்யா.  முடிஞ்சவரை அவங்கூட பேசறதைக் குறை”

“அதுக்குலாம் நேரம் இருக்குனு நினைக்கிற” என அப்பாவிபோல முகத்தை வைத்துக்கொண்டு கேட்டவளை, நம்பவும் முடியாமல், நம்பாமலிருக்கவும் முடியாமல் இருந்தான் விக்கி.

“என்ன பிரச்சனையாம்” நூலை விட்டுப் பார்த்தாள்.

“இது எதுக்கு உனக்கு?” 

“அவனே பிரச்சனை மாதிரிதான்…!” இழுத்தாள்.

“ஏன் உங்கிட்ட வந்து எதாவது பிரச்சனை பண்ணானா?” என நொடியில் மாறிய முகத்தோடு கேட்டவனைக் கண்டு

“அவனுக்கு பிரச்சனைனு சொன்னியா… அதான் அப்டிக் கேட்டேன்” சமாளித்தாள்.

“எல்லாத்தையும் விளையாட்டா நினைக்காத திவ்யா.  எல்லாரும் என்னை மாதிரினு, நீ வெள்ளந்தையா இருந்திரப்போற! உனக்கு இன்னும் ஊரு, உலகம் தெரியாம இருக்க!”

“சேச்சே.. அவங்கிட்ட நமக்கென்ன வெட்டிப் பேச்சு. அதுசரி.. சந்தடி சாக்குல என்னை ஒன்னுந் தெரியாதவன்னு சொல்லிட்ட” என்று பேச்சை வளர்த்தாள்.

கிருபாவைப் பற்றித் தெரிந்து கொள்ள, ஆவலாய்ப் பறந்த இதயத்திற்கு, இதம் கூட்ட வேண்டி, ஆர்வத்தைக் காட்டாமல், அசட்டையாய் வந்தவனிடம் கேள்வியையும் கேட்டு வைத்தாள்.

ஆனாலும், தான் அறிந்ததைப்பற்றி அணுவளவும் பகிராமல் கிளம்பியிருந்தான் விக்னேஷ்.

இரயில் நிலையமருகே வைத்து, ஒரு கும்பல் அவனை வலுக்கட்டாயமாக அழைத்துச் சென்றதாக, சிலர் பேசக் கேட்டிருந்தான்.  அதன்பின் அவன் கல்லூரிக்கு வரவில்லை என்பதையும், ஒவ்வொரு நாளும் கிடைத்த அவன் ஊர் மாணவர்களின் பகிர்தல் வழி, கேட்டதைக் கொண்டு நேரங்கிடைக்கும்போது மாணவர்களுக்கிடையே விவாதித்தபடி இருந்தனர்.

ஒவ்வொருவரும் ஒவ்வொன்றைச் சொல்ல, இன்ன விசயம் என யாருக்கும் உறுதியாகத் தெரிந்திருக்கவில்லை.  அதைக்கொண்டே திவ்யாவிடம், இவ்வாறு முன்னெச்சரிக்கையாக பகிர்ந்து கொண்டிருந்தான் விக்னேஷ்.

போட்டுக் கொடுத்துவிட்டு, தனது பணி நிறைவடைந்ததாய், நிம்மதியோடு வலம் வந்தாள் கயல்.

கயலின் சொற்படி, அன்று மாலையில் வீடு திரும்ப, புகைவண்டி நிலையம் சென்றவனை, அவளின் ஊர் இளங்காளைகள் மறித்து, வம்படியாய் இட்டுச் சென்றிருந்தனர்.

கிருபாவோடு செல்லும் மாணவர்கள், இடையில் வந்து தடுத்தும், அவர்களால் எதுவும் செய்ய முடியாத நிலை.

கிருபாவின் வீட்டில், தாங்கள் அறிந்ததை தவறாமல் சென்று பகிர்ந்து கொண்டிருந்தனர்.

………………..

அழைத்துச் சென்றவர்கள், இதமாய் நடந்து கொள்ளாமல், கை நீட்டியிருந்தனர்.

வலி பொறுக்காதவனாய், “நான் சொல்றதை காது குடுத்துக் கேக்காம, கைய வைக்கிற வேலையெல்லாம் வச்சிகிட்டா, பின்னாடி ரொம்பக் கஷ்டப்படுவீங்க” என்றிருந்தான் கிருபா.

“நீ செஞ்ச செயலுக்கு, உன்னை சிவப்பு கம்பளம் போட்டா வரவேற்பாங்க” கிண்டல் செய்தனர்.

“நான் என்ன செஞ்சேன்னு உங்கள்ல யாராவது பாத்தீங்களாடா.   பொ*** மாதிரி யாரோ ஏதோ சொன்னதை வச்சி, முட்டாத்தனமா ஏண்டா பிகேவ் பண்றீங்க” கிருபாவின் வார்த்தையைக் கேட்டதும், வாயிலேயே ஒரு குத்து விட்டிருந்தான் ஒருவன்.

குபுகுபுவென உதட்டிலிருந்து செந்திரவம் வழிய, சூடாய் இறங்கியதைக் கொண்டு, நடப்பதை உணர்ந்தவனுக்கு காற்றிலிருக்கும் உப்புத் தன்மையில் எரியத் துவங்கியது.

கிருபாவிற்கு உண்டான எரிச்சலில், வண்டி சென்று கொண்டிருக்கும்போதே, எட்டி எதிரில் இருந்தவனை அடிக்க முடியாமல், தனது இரண்டு கால்களைக் கொண்டு, ஓங்கி அவனை மிதிக்க, ஓரத்தில் இருந்தவன் வலி பொறுக்காது “ஆவ்வ்” எனக்  கத்தியிருந்தான்.

வழிநெடுக, இதுபோன்ற முரட்டுத்தனமான செயல்களை அரங்கேற்றியபடி, ஒருவழியாய் ஊர்போய் சேர்ந்திருந்தனர்.

ஊர் பெரியவர்களிடம் கிருபாவை ஒப்படைக்கும்முன், ஒருவருக்கொருவர் அடித்து, மிதித்து காயம் செய்து, இரத்தக் களறியாய் மாறியிருந்தார்கள் அனைவரும்.

கிருபாவைக் கண்டு பதறியவர்கள், மற்றவர்களிடம், “இதுதாண்டா உங்ககிட்ட எந்தப் பொறுப்பையும் குடுக்கறதேயில்லை. ஆவூண்ணா என்ன பழக்கம் கைய நீட்டறது” கண்டித்ததோடு, கிருபாவை முகம் கழுவி வரச் செய்தார்கள்.

ஊர்ப் பெரியவர்கள் மிகவும் நிதானமாய் நடந்து கொண்டனர்.

கிருபாவிடம் விசாரிக்க, “வாசண்ணே கடையில வண்டிய வேல குடுத்துருந்தேன்.  அதை ஈவினிங் வந்து எடுக்க வரும்போது, வண்டிய உருட்டிக்கிட்டு வந்த கணேசன்கிறவரு, வாசண்ணன்கிட்ட உதவி கேட்டாரு”

வாசன் டூவிலர்ஸ் முக்கியச் சாலையில் அமைந்திருந்து.  சுற்றியிருக்கும் நான்கு கிராமத்தார், மற்றும் அதன்வழியே செல்லும் வழிப்போக்கர் எதிர்பாராது நேரிடும் தங்களது வாகனப் பிரச்சனையின்போது, அங்கே வந்து தங்களது இரண்டு சக்கர வாகனத்தை பழுது நீக்கிச் செல்வர்.  ஆகையினால் வாசனை அறியாதவர்கள் சொற்பமே.

இடையில் மறித்துப் பேசிய ஒருவன், “ஞாயித்துகிழமையெல்லாம வாசன் கடையத் திறக்கறான்”

“அதானே” என சிரிப்பலை

முறைத்தவன், “என்னோட வண்டிய சனிக்கிழமை வந்து எடுத்துக்கச் சொன்னாரு.  நாந்தான் வரமுடியலை, ஞாயித்துக்கிழமை வந்து எடுத்துக்கறேன்னேன்.  அதுனால வந்து கடையத் தொறந்து வச்சிருந்தாரு” என உரைத்தவன், அன்றைய பேச்சைப் பற்றிக் கூறினான்.

‘அக்கா மக டவுனுக்கு போகணும்னு சொல்லுச்சு.  வண்டி இடையிலயே நின்னுருச்சு.  எதாவது ஸ்பேரா வண்டியிருந்து குடுத்தா, நான் போயி அதுல அந்தப் புள்ளையக் கூட்டிட்டு வருவேன்.  அதுக்குள்ள நீங்க என் வண்டிய சரிபார்த்து வச்சிருங்க’

‘வண்டியெல்லாம் இல்லையே’ என்ற வாசன், ‘தம்பி, நம்ம பக்கத்து ஊருதான்.  வேணும்னா, அவங்கிட்ட உதவி கேட்டுப் பாருங்க’ என்று கிருபாவைக் காட்டிக் கூறிட, அவனோ

“சாரிண்ணே, என் வண்டிய இதுவரை யாருக்கும் குடுத்ததில்லை” தயங்கி உரைக்க

“இங்க பக்கந்தான்.  ரெண்டு கிலோமிட்டர்ல இருக்கு.  நான் போன் போட்டுச் சொன்னா, உன்னால அந்தப் புள்ளைய இங்க கூட்டிட்டு வந்து விடமுடியுமா?” கணேசனின் கேள்வியில் மிகவும் தயங்கினான் கிருபா.

இதுவரை மட்டுமே ஊர்தலைவர்களிடம் பகிர்ந்து கொண்டவன், அதற்குமேல் பேசியதைக் கூறவில்லை.

வாசன், “பொண்ணு வீட்ல வேற பையனோட கல்யாணத்துக்கு ஏற்பாடு பண்ணிட்டாங்க.  பாவம் கணேசன்.  அந்தப் புள்ளைமேல உசிரையே வச்சிருக்கான். பாத்துப் பண்ணுப்பா” என்றதும், கிருபா அதற்குமேல் தயங்காது ஒத்துக் கொண்டிருந்தான்.

அதனால் அன்று அந்தப் பெண்ணை அழைத்துச் சென்று விட்டதோடு சரி.  அனைத்தையும் ஊர்ப் பெரியவர்களிடம் கூறியவன், இறுதியாகச் சொன்ன திருமண விசயத்தை மட்டும் மறைத்திருந்தான்.

“இப்ப சொல்லுங்க.  உதவினு கேட்டதுக்கு, நான் கூட்டிட்டுப்போயி அந்த மெக்கானிக் ஷாப்புல விட்டுட்டு கிளம்பி போயிட்டேன்.  அவங்களுக்குள்ள என்ன உறவு ஏதுன்னு எதுவும் எனக்குத் தெரியாது.  அதைச் சொன்னா காதுகுடுத்துக் கேக்க மாட்டறாங்க” சென்றவர்களுக்கு பாதகமில்லாததை மட்டும் உரைத்தான்.

அடுத்து, கிருபாவை விட்டதோடு, வாசனைப் பிடித்துக் கேட்க, “என் கடையில வேலைக்கு விட்டாப்புல.  அப்புறம் வண்டி சரியானதும், அந்தப் புள்ளையோட டவுனுக்குப் போயிட்டாப்ல.  அவ்ளோதான் எனக்குத் தெரியும்” என அத்தோடு நழுவியிருந்தான் வாசன்.

இதற்கிடையே கிருபாவை அடித்து காயப்படுத்தியமைக்காக, அவனது தந்தை பிரச்சனையைத் துவங்கியிருந்தார்.

கிருபாவின் முகங்களில் உண்டான காயம் சரியாகும்வரை, வெளியில் எங்கும் செல்ல அனுமதித்திருக்கவில்லை.  ஆகையால் கல்லூரிக்கும் வராமல் இருந்திருந்தான்.

கிருபாவைப் பொறுத்தவரையில், ஆரம்பத்தில் உதவ முன்வந்திராதவன், அவர்களின் காதலை அறிந்ததும் உதவ முன்வந்தான். 

கிருபா, வாசன், கணேசன் மூவருமாய் கூட்டாக இணைந்தே செய்ததுதான் இவை அனைத்தும்.  அதை ஒரு வாரத்திற்கு முன்பே திட்டமிட்டு, செய்திருந்தனர்.

கிருபா போனால் சந்தேகம் எழாது என நினைத்தே, அவனையும் கூட்டு சேர்த்திருந்தனர்.

தனக்கும், திவ்யாவிற்குமான காதல், இலகுவாய் இணையக் கூடியதாக இருந்தால் நல்லதே.  அப்படி இல்லையெனில், பிறரின் உதவி தங்களுக்கு தேவையாய் இருக்கும் என்கிற மனநிலையிலேயே அன்று கணேசனுக்கு உதவியிருந்தான்.

அது இத்தனைதூரம் பிரச்சனையாகும் என கிருபா கிஞ்சித்தும் எண்ணியிருக்கவில்லை. அனைத்திற்கும் கயலே காரணம் என்றறிந்தபோதும், அவளின் மீது சினமெதுவும் எழவில்லை. மாறாக, ‘பெரிய சிஐடி சகுந்தலானு நினைப்பு’ என்பதாக மட்டுமே இருந்தது.

………………………………

ஆறு நாள்களுக்குபின் பார்த்துக் கொண்டவர்களுக்கு பேச்சே எழவில்லை.

கிருபாவின் காயங்களைக் கண்டதும், அதனைத் தொட்டு கண்ணில் நீரோடு, “எப்டி? என்னாச்சு”

“இடிச்சிட்டேன்” கணேசனின் காதலைப்பற்றி யாரிடமும் பகிர்ந்து கொண்டானில்லை.  அதை அவளிடமும் மறைத்திருந்தான்.

“இப்டி யாராவது போயி இடிப்பாங்களா?”

“நான் இடிச்சிருக்கேன்ல” என அவளின் தலையோடு, தனது தலையை முட்டிச் சிரித்தான் கிருபா.

“உனக்கு எப்பவும் விளையாட்டா?  இந்த ஒரு வாரம் நான் பட்டபாடு எனக்குத்தான் தெரியும்” அழுகையோடு கூறினாள்.

“இங்க மட்டும் என்னவாம்” அவளின் இருகரங்களையும், தனது கரங்களுக்குள் பாதுகாப்பாய் பொத்தி வைத்தபடியே கேட்டான்.

“ஆன்லைன்கூட வரலை” வருத்தமாய் கேட்டாள்.

“வீட்ல என்னைச் சுத்தியே ஆளு இருந்தாங்கடா.  அதான் போனைத் தொடவே முடியலை”

“மனசில்லனு சொல்லு.  எதையாவது சொல்லி சமாளிக்காத”

“இப்ப அதுக்கு என்ன செஞ்சா, இந்த ஒரு வாரத்தை காம்பன்சேட் பண்ணலாம்னு சொல்லு.  செஞ்சிருவோம்” சிரித்தபடியே கேட்டான்.

“நானும் இப்டி ஒரு வாரம் லீவு போட்டு வீட்ல இருக்கேன்.  அதுதான் சரியா இருக்கும்” திவ்யா கூறி முடித்ததும்,

“ஏய் லூசு.  நான் என்னமோ வேணுனோ உன்னை அவாய்ட் பண்ண மாதிரி சொல்ற. சிச்சுவேசன் இதுதான்னு சொல்லிட்டேன். புரியாம பேசுனா என்ன செய்ய”, என்றவன் “அதுக்காக எனக்கும் நீ அதே கஷ்டத்தைக் குடுப்பியா” கலங்கிய கண்களோடு, ஒரு பக்கத் தோளோடு அவளை அணைத்தபடியே கேட்டான்.

திவ்யாவின் கண்களில் இருந்து, கொடைக்கானல் சில்வர் ஃபால்ஸ்ஸைப்போல வழிந்த நீரைக் கண்டு, அவளின் ஏக்கம் புரிந்து கொண்டவன், “சின்ன புள்ளை மாதிரி அழாதே டீடீ” என கன்னத்து நீரைத் துடைத்து, அதில் இதழ் பதித்துச் சொன்னான்.  “என்னைப் பாக்காம, பாதியாயிட்ட லூசே”

“ஏன் சொல்லமாட்ட” என சிரிக்க முயன்றவள், “உண்மையச் சொல்லு.. என்ன பிரச்சனை”

“பிரச்சனையெல்லாம் ஒன்னுமில்லை.  என்னை, வேற ஒருத்தன்னு நினைச்சி கைய வச்சிட்டானுங்க” காலரைத் தூக்கிவிட்டபடியே சிரித்தவன், தன்னவளை சீண்டிச் சமாளித்திருந்தான்.

அதேநேரம் கயல் தன்னிடம் கூறியது நினைப்பில் வர, “உங்கிட்ட ஒன்னு கேக்கவா.. ஆனா கேட்டுட்டு, எனக்கு உண்மையான பதிலைச் சொல்லணும்” பலமான பீடிகையோடு கேட்டாள்.

“ம்ஹ்ம்”

“எங்கிட்ட நீ உண்மையா இல்லைன்னு ஒருத்தவங்க வந்து சொன்னாங்க.  உண்மையச் சொல்லு.  நீ எங்கிட்ட உண்மையா இருக்கியா இல்லையா?” அவனது விழிக்குள் ஊடுருவிய பார்வையோடு வினவினாள்.

இதை திவ்யாவிடம் யார் வந்து கூறியிருப்பார்கள் என்பது கிருபாவிற்கு புரிந்தேயிருந்தது.  ஆனாலும், அமைதியாய், “எதுனால, அவங்க என்னை அப்டிச் சொன்னங்கனு நீ கேக்கலையா?”

“கேட்டேன்”

“என்ன சொன்னாங்க”

“என் நல்லத்துக்கு சொல்றதாச் சொன்னாங்க.  அதை ஏத்துக்கறதும், ஏத்துக்காததும் என்னிஷ்டம்னு சொல்லிட்டுப் போனாங்க”

“நீ நம்புறியா என்னை?”

திவ்யா என்ன பதில் கூறினாள்?  கயல் கூறியதை அறிந்த கிருபா என்ன முடிவெடுத்தான்?

………………..

Leave a Reply

error: Content is protected !!