லவ் ஆர் ஹேட் 13

லவ் ஆர் ஹேட் 13
தன் முன் அமர்ந்திருந்த ரித்வியை பரிவாக பார்த்த மஹாதேவன், “என்னம்மா சாப்பிட்டியா? நேரத்துக்கு மாத்திரை சாப்பிடனும் தானே?” என்று மென்மையாக கேட்க, அவரை கலங்கிய கண்களுடன் ஏறிட்டாள் ரித்வி.
“ஏன் மாமா இப்படி ஒரு முடிவு எடுத்தீங்க? எனக்கு இந்த கல்யாணத்துல சுத்தமா சம்மதமில்லை.” என்று ரித்வி சொல்ல, அவளுக்கு விடயம் தெரிந்துவிட்டது என்று புரிந்தது மஹாதேவனுக்கு.
“ஏன் வேணாம் ரித்விமா? மாமா எப்போவும் உன் நல்லதுக்காக தான் எந்த முடிவும் எடுப்பேன்னு உனக்கு தெரியும் தானே?” என்று அவர் கேட்கவும், “மாமா, இது அப்படி இல்லை. என்னால இப்போ எதையும் ஏத்துக்க முடியல. ப்ளீஸ், எனக்கு எதுவும் வேணாம். ரொம்ப கஷ்டமா இருக்கு. அதுவும் கண்டிப்பா உங்க மகன் விருப்பத்தோட சம்மதிச்சிருக்க மாட்டாரு. வேற பொண்ண காதலிக்கிற அவரால என்னை எப்படி ஏத்துக்க முடியும்? அதுவும் நான்…” என்று நிறுத்தி விம்மி விம்மி அவள் அழ ஆரம்பிக்க, அவருக்கோ அத்தனை மனவலி!
அவளை வேதனை நிறைந்த பார்வை பார்த்தவர், அவளின் தலையை வாஞ்சையுடன் வருடி, “அன்னைக்கு உன் அப்பா உயிர கையில பிடிச்சிட்டு இருக்கும் போது என்னை அழைச்சி என்கிட்ட தான் உன்னை ஒப்படைச்சான். அப்போதிலிருந்து நீ என் பொறுப்பு ரித்விமா. நான் உன்னை சரியா கவனிச்சிருந்தா இப்படி நடந்திருக்குமா? என்னால இந்த குற்றவுணர்ச்சிய தாங்க முடியல. தயவு செஞ்சி வேணாம்னு சொல்லாதம்மா! இந்த குற்றவுணர்ச்சியில இருந்து நீதான் என்னை மீட்டெடுக்கனும்.” என்று தழுதழுத்த குரலில் சொன்னவரை பார்த்தவளுக்கு அவரை எப்படி கையாள்வது என்றே தெரியவில்லை.
“இல்லை மாமா, அது… ஏன்?” என்ன பேசி அவரை சமாதானப்படுத்துவது என்று தெரியாது ரித்வி திணற, “கல்யாணத்துக்கு அப்றம் எல்லாம் சரியாகிடும் டா. உனக்கு ஒரு பாதுகாப்பா அவனால இருக்க முடியும். அதே மாதிரி அவன் இழந்த பாசத்தை உன்னால மட்டும் தான் கொடுக்க முடியும். உனக்கு ஒரு நல்ல வாழ்க்கைய அமைச்சி தரனும் ரித்விமா. இல்லைன்னா, நான் இந்த குற்றவுணர்ச்சியிலயே செத்துருவேன்.” என்று இறுதியில் அழுகையிலே முடித்தார் மஹாதேவன்.
அவளுக்கோ என்ன பதில் சொல்வதென்று கூட தெரியவில்லை. அடுத்து என்ன செய்வதென்று தெரியாது பலத்த அமைதி அவளிடம்.
“உனக்கொன்னு தெரியுமா ரித்விமா?அதிபாவுக்கு வைஷ்ணவி மேல காதல் இல்லைன்னா, கண்டிப்பா அவன தான் தேர்ந்தெடுத்திருப்பேன். அதுமட்டுமில்லாம, அவனுக்கு உன் மேல இருக்குற அதிகப்படியான பாசத்தாலயும் அப்போ இருந்த மனநிலையிலும் உன்னை கல்யாணம் பண்றேன்னு சொன்னான். ஆனா, எனக்கு நல்லாவே தெரியும் ரித்விமா, அம்மாவா உன்னை பார்த்த அவனால கண்டிப்பா மனைவியா பார்க்க முடியாது.” என்று மஹாதேவன் சொல்லி முடிக்க, ரித்விக்கோ அதிர்ச்சி தான்!
“மாமா, வைஷூ அதி பத்தி உங்களுக்கு எப்படி….?” என்று அவள் அதிர்ந்து கேட்க, “இந்த வீட்டுல இருந்துக்கிட்டு இதை கூட தெரிஞ்சிக்காம இருந்தேன்னா என்னை விட முட்டாள் யாருமில்ல. இப்போ நீ சொல்லும்மா, உனக்கு என் பையன கல்யாணம் பண்ணிக்க சம்மதம் தானே? இந்த மாமாவுக்காக…” என்று இறைஞ்சும் குரலில் மஹாதேவன் கேட்கவும், மறுத்துப் பேச முடியவில்லை அவளால்.
அவருடைய வார்த்தைகளே அவர் எந்தளவு குற்றவுணர்ச்சியில் இருக்கிறார் என்பதை நன்றாக உணர்த்தியது. கண்களில் கண்ணீர் ஓட, மனதை கல்லாக்கிக்கொண்டு தரையை வெறித்தவாறு ரித்வி ‘ஆம்’ என்று தலையசைத்ததும், அவருக்கோ மனதில் பாதி பாரம் இறங்கிய உணர்வு!
இனி தன் மகன் அவளுக்கு பாதுகாப்பாக இருப்பான் என்று அவர் நினைத்திருக்க, யானைக்கும் அடி சறுக்கும் என்பதை உணர்த்த விதி பல விளையாட்டுக்களை கையில் வைத்திருந்தது.
அன்றே மஹாதேவன் மொத்த குடும்பத்திடமும் ரித்வியின் சம்மதத்தை சொல்ல, யாதவ்விற்கோ அத்தனை அதிர்ச்சி! கூடவே, ‘நான் அவ்வளவு சொல்லியும் சம்மதித்திருக்கிறாள்.’ என்ற ஆதங்கம் வேறு அவனுக்கு!
“அண்ணா, அன்னைக்கு வைஷ்ணவிக்கு யாதவ் அ கேக்கும் போது மகனோட விருப்பம் தான் முக்கியம், அது இதுன்னு ஏதேதோ சொன்னீங்க. இப்போ மட்டும் என்ன பண்ணியிருக்கீங்க? புள்ளையோட ஆசைய நீங்களே குழிதோண்டி புதைக்கலாமா?” என்று சகுந்தலா பொங்கி எழ, “இப்போ என் ரித்வியோட வாழ்க்கை தான் எனக்கு முக்கியம்.” என்று அழுத்தமாக வந்து விழுந்தன மஹாதேவனின் வார்த்தைகள்.
“அதிபா, அவனுங்கள கண்டுபிடிச்சாச்சா? அந்த நாயுங்கள என் கையால கொல்லனும்னு வெறியா இருக்கு.” என்று சந்திரன் கோபமாக கத்த,
“இன்னும் இல்லை சந்திரா. ஆனா, கூடிய சீக்கிரமே…” என்று அதிபன் அழுத்தமாக சொல்ல, கிட்டதட்ட கோபத்தை அடக்கிய நிலையில் தான் நின்றிருந்தான் இந்திரனும்.
ஆனால், யாதவ்விற்கோ இது எதிலும் கவனம் செலுத்த முடியவில்லை. தம்பிக்காக அப்பாவிடம் சம்மதித்து, ரித்வியிடம் பேசி இதை நிறுத்த தானே அவன் திட்டம் போட்டிருந்தான். ஆனால் இப்போது?
அனைத்து திட்டமும் சொதப்பியிருக்க, அவனால் நிலைக்கொள்ளவே முடியவில்லை. அதுவும், மஹாதேவன் அவன் யோசிப்பதற்கு கூட அவகாசம் கொடுக்கவில்லை.
தடாலடியாக கல்யாணத்துக்கான ஏற்பாடுகளை செய்தவர் அடுத்த ஒரு வாரத்திலேயே கல்யாணத்தை வீட்டிலே நடத்த திட்டம் போட்டுவிட்டார். அவருக்கோ இருவரும் மனம் மாறிவிடுவார்களோ என்ற பயம் தான்!
நடந்த அத்தனையும் நினைத்துப் பார்த்த ரித்வியின் விழிகளிலிருந்து ஒருசொட்டு விழிநீர் தரையை தொட்டது. கைகளை உயர்த்தி கண்ணீரை அழுந்த துடைத்தவளின் விழிகள் வாசலில் ஒருசிலரை எதிர்ப்பார்த்து காத்திருந்ததும் உண்மை தான்.
சரியாக, அடுத்த சில நொடிகளில் வாசலில் வந்து நின்றவர்களை பார்த்து அவளுடைய விழிகள் விரிய, பார்வையை திருப்தியுடன் தாழ்த்திக்கொண்டாள் ரித்வி.
சலசலப்பு சத்தத்தில் திரும்பிய மஹாதேவன், வீட்டிற்கு வெளியில் கம்பீரமாக நின்றிருந்த தேவகியையும், அவருக்கு பக்கத்தில் சிவந்து கண்களும், இறுகிய முகமுமாக நின்றிருந்த ஆரனையும் பார்த்து அதிர்ந்து பின் உள்ளே வரும்படி சம்பிரதாயமாக அழைத்தார்.
தேவகியின் கண்கள் கலங்கி இருந்ததோ என்னவோ! மஹாதேவன் உள்ளே அழைத்தும் அழுத்தமாக ‘இல்லை’ என்று தலையாட்டியவர், வாசலிலே நின்றிருந்தவாறு ரித்வியை பார்க்க, ஆரனோ மார்புக்கு குறுக்கே கைகளை கட்டிய வண்ணம் ரித்வியையே பார்த்திருந்தான்.
அடுத்த சில நொடிளில் ஐயர் “கெட்டிமேளம்…கெட்டிமேளம்…” என்று குரல் கொடுத்து தாலியை யாதவ்விடம் நீட்ட, அதை கைகளில் ஏந்தியவனுக்கோ மனம் உலைக்களமாக கொதித்தது.
தன் பக்கத்தில் தலைகுனிந்து அமர்ந்திருந்தவளை கோபமாக திரும்பி பார்த்த யாதவ், தன் தந்தையை ஒரு பார்வை பார்த்துவிட்டு மங்கள நாணை அவளின் சங்கு கழுத்தில் அணிவிக்க, கண்களை அழுந்த மூடித் திறந்தாள் ரித்வி.
இதைப்பார்த்துக் கொண்டிருந்த ஆரனுடைய முகத்திலோ அத்தனை இறுக்கம்! அவனுக்கு அவள் மேல் காதல் இல்லை. ஆனால், ஏதோ ஒரு ஈர்ப்பு அவள் மேல் அவனுக்கு இருந்தது என்னவோ உண்மை தான்.
இங்கு மொத்த ஊருமே மஹாதேவனின் வீட்டு வாசலில் தேவகி வந்து நின்றதை பார்த்து அதிர்ந்தது பின் அடுத்து அவர்களை மரியாதையாக மஹாதேவன் அழைத்ததும் குழம்பித்தான் போனர். மஹாதேவன் குடும்பத்தின் பெரிய இழப்பு நிகழ்ந்ததே தேவகியின் குடும்பத்தால் தானே!
யாதவ் ரித்வியின் கழுத்தில் தாலியை கட்டியதுமே தேவகி அங்கிருந்து வெளியேறியிருக்க, ரித்வியை ஒரு பார்வை பார்த்துவிட்டு தன் பாட்டியின் பின்னால் சென்றான் ஆரன். இந்த திருமணத்தினால் வீட்டிலிருந்த ஆடவர்களுக்கோ நடந்த சம்பவத்தினால் உண்டான அழுத்தத்திலிருந்து மீண்ட உணர்வு!
இதில் மஹாதேவனின் மனநிலையை சொல்லவா வேண்டும்? குற்றவுணர்ச்சி பாதி குறைந்த உணர்வு அவருக்கு!
சகுந்தலாவுக்கோ அத்தனை பொறாமை! கோபம்! ஆனால், எதுவும் செய்ய முடியாத நிலை.
மஹாதேவனின் முன் வந்து நின்ற ரித்வி அவரின் காலில் விழ போக, யாதவ்வோ இருக்கும் கோபத்தில் மரம் போல் அசையாது நின்றிருந்தான்.
ஆனால், அடுத்து திடீரென கேட்ட, “யாருப்பா இந்த பொண்ணு? யாதவ் தம்பிக்கு தெரிஞ்ச பொண்ணாமே…” என்ற குரலில் யாதவ் வாசலை சட்டென திரும்பிப் பார்க்க, அங்கு கண்களில் கண்ணீரோடு கோபத்தில் பற்களை நரநரவென கடித்த வண்ணம் நின்றிருந்தாள் நடாஷா. அவள் பக்கத்திலே அவளின் அம்மா.
“வட்ஸ் கொய்ங் ஆன் ஹியர்?” என்று நடப்பதை புரியாது பார்த்து தன் மகளிடம் அதிர்ந்து அவர் கேட்க, அவளுக்கோ நடப்பது கனவாக இருக்கக் கூடாதா? என்று தான் இருந்தது.
நடாஷாவை பார்த்த யாதவ்விற்கோ அவளின் கண்களை நேருக்கு நேர் பார்க்கவே முடியவில்லை. அவளை பார்க்க முடியாது பார்வையை அவன் வேறுபுறம் திருப்ப, நடாஷாவின் முன் சென்று நின்றார் மஹாதேவன்.
தலை குனிந்து தான் செய்த தவறுக்காக கைகளை கூப்பி, “என்னை மன்னிச்சிடும்மா. எனக்கு வேற வழி தெரியல. கண்டிப்பா கடவுள் உனக்கு ஒரு நல்ல வாழ்க்கைய அமைச்சி கொடுப்பாரு.” என்று மஹாதேவன் சொல்ல, ரித்விக்கோ ‘அவளின் மனது காயப்பட தான் காரணமாகி விட்டோமே!’ என்ற வேதனை!
“இதை நான் எதிர்ப்பார்க்கல பேபி.” என்று தேய்ந்த குரலில் சொல்லிவிட்டு நடாஷாவின் அம்மா அங்கிருந்து நகர்ந்து காரில் சென்று அமர, நடாஷாவின் அழுத்தமான பார்வை யாதவ்வின் மீது தான்.
‘எனக்காக காத்திருப்பேன் என்று சொன்னாயே டா? என்னை ஏமாற்றிவிட்டாயே!’ என்று குற்றம் சாட்டுவது போல் இருந்தது அவளுடைய பார்வை. இப்போது குற்றவுணர்ச்சியில் மருகிக் கொண்டிருந்தது என்னவோ யாதவ் தான்.
நடாஷாவோ அதற்கு மேல் அங்கு நிற்காமல் சென்றுவிட, போகும் அவளை பார்த்த யாதவ் மானசீகமாக, ‘ஐ அம் சோரி…’ என்றுவிட்டு தன் அப்பாவையும், தன் மனைவியையும் தான் உக்கிரமாக ஒரு பார்வை பார்த்தான். அதற்கு மேல் அவனால் ஒரு நிமிடம் கூட அங்கு நிற்க முடியவில்லை.
கழுத்திலிருந்த மாலையை தரையில் எறிந்துவிட்டு விறுவிறுவென அவன் தனதறைக்குள் சென்றுவிட, “வைஷு, ரித்விய அறைக்கு அழைச்சிட்டு போ!” என்று சூழ்நிலை கருதி சொன்னான் அதிபன்.
அடுத்து இரண்டுநாட்கள் கழித்தும் வீடோ கல்யாணம் நடந்ததற்கான எந்தவித கலையுமின்றி வெறுச்சோடி போயிந்தது. யாதவ் அவனது அறையிலேயே அடைந்துக் கிடக்க, ரித்வியும் அறையிலிருந்து வெளியவே வரவில்லை. வீட்டாற்களும் இருவரின் மனநிலை, சூழ்நிலை கருதி எந்தவிதமான சடங்குகளையும் செய்ய முன்வரவில்லை.
மஹாதேவனுக்கு யாதவ்வின் இறுக்கமும், ரித்வியின் ஒதுக்கமும் வருத்தத்தை கொடுத்தாலும், ‘எல்லாம் சரியாகிவிடும்’ என்று மனதின் ஓரத்தில் சிறு நம்பிக்கை!
இரண்டு நாட்கள் கழித்து,
மஹாதேவன் எப்போதும் போல் தன் மனைவியின் புகைப்படத்தின் முன் நின்று, ‘சாரு, நம்ம ரித்விமாவுக்கு நம்ம பையனையே கல்யாணம் பண்ணி கொடுத்துட்டேன். ரித்வியோட பொறுப்ப இளமாறா என்கிட்ட தான் ஒப்படைச்சான். ஆனா, நான் அதுல தவறிட்டேன். அதனால உண்டான குற்றவுணர்ச்சி இப்போ தான் என் மனச விட்டு இறங்கியிருக்கு. ஆனாலும், கார்த்திய நினைச்சி ஒரு பயம் இருக்கத் தான் செய்யுது. கூடிய சீக்கிரம் புரிஞ்சிப்பான்.’ என்று பேசிக் கொண்டே சென்றவர், “நான் உங்க கூட பேசனும்.” என்ற யாதவ்வின் குரலில் சட்டென்று திரும்பிப் பார்த்தார்.
“கார்த்தி, சொல்லுப்பா.” என்று அவர் கேள்வியாக நோக்கவும், அவர் கண்களை பார்க்காது பார்வையை திருப்பிக் கொண்டவன், “நான் இன்னும் இரண்டு நாள்ல கொழும்புக்கு கிளம்புறேன்.” என்று சொல்ல, முதலில் அதிர்ந்து விழித்த மஹாதேவன் பின் அவனை நிதானமாக ஏறிட்டார்.
“தாராளமா போ கார்த்தி. ஆனால், ரித்விமாவயும் கூட அழைச்சிட்டுப் போ!” என்று அவர் சொல்ல, சட்டென்று அவரை நிமிர்ந்து பார்த்தவன், “அவ எதுக்கு?” என்று கேட்க வந்து அப்பாவின் மேலுள்ள மரியாதை காரணமாக வார்த்தைகளை விழுங்கி கோபமாக அவரை நோக்கினான்.
அவரோ சற்றும் அவனின் கோபத்தையெல்லாம் கண்டுக் கொள்ளவில்லை.
“கார்த்தி, இப்போ ரித்வி உன் பொறுப்பு. அவளுக்கு நீதான் எப்போவும் துணையா இருக்கனும். பாதுகாப்பா இருக்கனும். இதுவே ரித்விமாவோட இடத்துல வேறெந்த பொண்ணா இருந்திருந்தாலும் மொத்தமா உடைஞ்சி போயிருப்பா. கோழைத்தனமா முடிவெடுத்திருக்க கூட வாய்ப்பிருக்கு. ஆனா, என் மருமகள் எந்தளவு மென்மையோ அதை விட அதிகமா மனதைரியம் ஜாஸ்தி. ஆனாலும், நீ எப்போவும் ரித்வி கூட இருக்கனும். இப்போ நீ அவள விட்டு போனேன்னா, ஊர் இன்னும் தப்பா தான் பேசும். நீ உன் கூட அவள கூட்டிட்டு போறதுன்னா போ! இல்லைன்னா…” என்று இழுத்து அவர் நிறுத்த, அவனுக்கோ அத்தனை ஆத்திரம்!
“எல்லாம் உங்க இஷ்டம் தானே? என் மனச பத்தி உங்களுக்கு கவலையே இல்லை தானே? சரி, இதுவும் உங்க இஷ்டப்படி…” என்றுவிட்டு அறையிலிருந்து வெளியேறியவன் கதவை அறைந்து சாத்தியதிலேயே அவனுடைய கோபத்தின் அளவு நன்றாக தெரிந்தது. ஆனால், இந்த விடயத்தை கேள்விப்பட்ட ரித்விக்கு தான் தூக்கி வாரிப்போட்டது.
“மாமா ப்ளீஸ், நான் போகல. நான் இங்கேயே இருக்கேன். உங்க கூட…” என்று அவள் கெஞ்ச, அவரோ அவள் சொல்வதை காதிலே வாங்கவில்லை. மகனை சமாளிக்க தெரிந்த அவருக்கு மருமகளை சமாளிக்க தெரியாதா என்ன?
“ரித்விமா, கல்யாணம் ஆனா புருஷன் கூட தானே இருக்கனும். அது தானே முறை?” என்று கேட்ட மஹாதேவன், “அது ஒன்னும் உனக்கு புதிய இடம் கிடையாதும்மா. ரொம்ப பழக்கப்பட்ட இடம். நீ பொறந்து வளர்ந்த ஊரு.” என்று சொல்ல, ‘அம்மா… அப்பா…’ என்று மனம் அழைக்க கண்கள் தானாக கலங்கின ரித்விக்கு.
அவருக்கும் வேதனை தான்! பத்து வருடங்களுக்கு முன் அவர் ரித்வியை அழைத்து வந்ததே கொழும்பு மாவட்டத்திலிருந்து தானே!
ரித்வியுடைய அப்பா இளமாறனும் அம்மா ருபிதாவும் ஒரு விபத்தில் இறக்க, இளமாறனோ தன் கடைசிதருவாயில் தன் நண்பனை சந்திக்கவென உயிரை கையில் பிடித்து அவரின் கையில் தன் மகளை ஒப்படைத்த பிறகே உயிரை விட்டிருந்தார்.
‘என் அம்மு உன் பொறுப்பு மஹா. என் ரூபி கூடவும், என் பொண்ணு கூடவும் ரொம்ப வருஷம் வாழனும்னு ஆசைப்பபட்டேன். இவ்வளவு சீக்கிரம் கடவுள் அழைப்பார்னு எனக்கு தெரியல. ஆனாலும், இத்தனை வருஷம் வாழ்ந்த சந்தோஷத்தோடயே போறேன். அதுவே இந்த மனசுக்கு போதும். இனி ரித்விய நீதான் பார்த்துக்கனும்.’ என்று தன் நண்பன் அன்று கடைசியாக சொன்ன வார்த்தைகள் ஆழப்பதிந்து போனது மஹாதேவனின் மனதில். இப்போது கூட அந்த நியாபகத்தில் அவருக்கு கண்களே கலங்கிவிட்டது.
ரித்வியின் தலையை வாஞ்சையுடன் வருடிய மஹாதேவன், “இத்தனை வருஷம் கழிச்சி மறுபடியும் கொழும்புக்கு போக போற. இப்போ உனக்கு அது புதிய இடம் தான். இந்த மாற்றம் உனக்கு அவசியம் டா.” என்று சொல்ல, “மாமா… அது…” என்று தயக்கமாக ஏதோ சொல்ல வந்தவளின் மனதை புரிந்துக் கொண்டார் அவர்.
“கண்டிப்பா கார்த்தி உன்னை நல்ல பார்த்துப்பான் ரித்விமா. ஆனா என்ன ஆனாலும் சரி, நீ அந்த தேவகி வீட்டுப் பொண்ணுன்னு மட்டும் அவனுக்கு தெரியவே கூடாது. அது தெரிஞ்சா அவனோட மனநிலையை என்னால கூட யூகிக்க முடியல.” என்று அவர் சற்று பயத்துடனே சொல்ல, ரித்விக்கு கூட அதை நினைத்து உள்ளுக்குள் பதறத்தான் செய்தது.
ஆம், தேவகியின் கடைசி மகனே இளமாறன். அவரின் கணவர் சுந்தரம் பல வருடங்களுக்கு முன் ஊரில் ரவுடிசம், கட்டபஞ்சாயத்து என்றிருந்தவர் தான். அதுவும், மஹாதேவன் குடும்பத்துடன் எப்போதும் ஒரு பகை அவருக்கு!
இரு குடும்பங்களுக்கிடையில் பிரச்சினை இருந்தாலும் மஹாதேவனும், இளமாறனும் நெருங்கிய நண்பர்கள் தான். அன்று இரு நண்பர்கள் செய்த காரியத்தால் உண்டான கோபத்தில் சுந்தரம் மஹாதேவனின் மனைவி சாருவை அரிவாளால் வெட்டிவிட, அது அடுத்த சந்ததியினருக்கும் பகையை வளர்த்துவிட்டது.
‘தெரிந்தால் என்னாகுமோ?’ என்ற பயம் ஒருபுறம் என்றால், ‘உண்மையை மறைத்து அவரை ஏமாற்றுகிறாயே…’ என்று குற்றம் சாட்டும் மனசாட்சி இன்னொரு புறம்.
எப்படியோ ரித்வியை சம்மதிக்க வைத்தவர் அப்போது தான் நிம்மதி பெருமூச்சுவிட, ஆனால், இங்கு அறையில் மொத்த பொருட்களும் தரையில் சிதறியிருக்க, நடாஷா அழைப்பை ஏற்காததில் யாதவ்விற்கு உண்டான மொத்த கோபமும் ரித்வியின் மேல் தான் தாவியிருந்தது.
–ஷேஹா ஸகி