காதல் தீண்டவே-16
காதல் தீண்டவே-16
எந்தவொரு அரிதாரமும் பூசாமல் அந்த ஏற்காடு, இயற்கை அழகில் மிளிர்ந்துக் கொண்டிருந்தது.
அந்த அழகில் எல்லோர் கண்களும் மயங்கிப் போய் இருக்க, மிதுராவின் கண்கள் மட்டும் ராஜ்ஜின் மீது படிந்துப் போய் இருந்தது.
அதைக் கவனித்த தீரனுக்கு மனதுக்குள் ஏதோ நிரடியது.
சொல்ல முடியாத கவலையுடன் ராஜ்ஜைப் பார்த்தான். அவனது பார்வையின் மாற்றத்தை உணர்ந்தவனோ தீரனின் அருகில் வந்தான்.
“என்னாச்சு?” அவன் வாயசைந்தது.
“தெரியலைடா… உனக்கும் எனக்கும் இடையிலே ஏதோ இடைவெளி விழறா மாதிரியிருக்கு. நீ முன்னாடி இருந்தா மாதிரி இப்போ என் கூட இல்லைடா.” என்றான் ஒரு மாதிரி குரலில்.
“அடச்சீ… ஏன்டா லூசு மாதிரி பேசுற? நான் எப்பவும் உன் ராஜ் தான்” என்றவனது உதட்டசைப் படித்த தீரனின் இதழ்களில் ஒரு விரக்தி சிரிப்பு.
“இல்லை நீ இப்போ என் ராஜ் இல்லை. எப்பவும் சோகம்னா நான் தான் உனக்கு ஆறுதலா இருப்பேன். ஆனால் இப்போ உன் கண்ணீரை துடைக்க வேற கை கிடைச்சாச்சு” என்று திரும்பிக் கொண்டவனின் செயலில் நண்பனை யாருக்கும் விட்டுக்கொடுக்க முடியாத பிடிவாதம்.
அதை உணர்ந்த ராஜ்ஜின் உதடுகளில் புன்னகை படிமங்கள்.
“டேய் தீரா, இப்போ உன்னைப் பார்த்தா அம்மா கிட்டே சண்டை போடுற சின்னப்பிள்ளை மாதிரி இருக்குடா.”
குழந்தைப் போல் சிணுங்கிக் கொண்டிருந்தவனின் கன்னத்தைப் பிடித்துக் கிள்ளினான் ராஜ்.
ஆனாலும் தீரனின் முகத்தில் சமாதான சுடர் ஒளிர்ந்தபாட்டில்லை. அதை ஒளிர வைக்கும் முயற்சியோடு ராஜ் பேசினான்.
“மச்சான் அது நேத்து ரொம்ப ஃபீல் ஆகிடுச்சு. அதான் மிதுரா பக்கத்திலே வந்ததும் என் வலியை பகிர்ந்துக்கிட்டேன். மத்தபடி வேற எதுவும் இல்லைடா.” என்று ராஜ் சொல்ல வெகுதீவிரமாய் ஒலித்தது தீரனின் குரல்.
“நம்ம ரெண்டு பேருக்கும் நடுவுலே திரும்பவும் இன்னொரு பெண் வரதை நான் விரும்பலைடா… உனக்கு புரியும்னு நினைக்கிறேன்” அழுத்தமாய் சொல்லிவிட்டு நகர்ந்த தன் நண்பனையே கலக்கத்துடன் பார்த்துக் கொண்டு இருந்தது ராஜ்ஜின் விழிகள்.
“என்னாச்சு ராஜ்? ஏன் ஒரு மாதிரி இருக்கீங்க?” கேள்வியுடன் அருகில் வந்து நின்றாள் மிதுரா.
அவள் குரல் விழுந்ததும் கலக்கத்தின் சுவடுகள் பட்டென்று அவன் முகத்திலிருந்து அழிந்துப் போனது.
“ஒன்னுமில்லை மிதுரா. சும்மா தான் யோசிச்சுட்டு இருந்தேன்.” என்றவன் குளிரில் நடுங்கும் அவளது உடலைப் பார்த்தான்.
“சால்வைக் கொண்டு வரலையா?” அக்கறையாய் வார்த்தைகள் விழுந்தது அவனிடம்.
“இல்லை. ரூம்லயே மறந்து வைச்சுட்டேன்” என்று சொன்னவளின் தோளைத் தொட்டு திருப்பியவன் தான் அணிந்திருந்த சால்வையை எடுத்து அவளின் மீது போர்த்தினான்.
இந்த காட்சியைத் தூரத்தில் இருந்து பார்த்த அந்த மூவரின் கண்களும் கோலிக்குண்டாய் உருண்டது.
“ஹே கண்டிப்பா இந்த மிது, ராஜ் சாரை தன் கையிலே போட்டுக்கிட்டாடி” ஐஸ்வர்யாவின் வஞ்சனையான பேச்சு, அவர்களுக்கு வெகு அருகில் நின்றுக் கொண்டு இருந்த தீரனின் காதுகளைத் துளைத்தது.
வேகமாகத் திரும்பிப் பார்த்தவனது கண்களில் புன்னகையா வருத்தமா எனத் தெரியவில்லை.
தன் நண்பனின் மீது அக்கறை காட்டும் மிதுராவை, அவனுக்குப் பிடித்துத் தான் இருந்தது.
ஆனாலும் உள்ளுக்குள் ஏதோ ஒரு நெருடல்.
இந்த புது உறவினால் மீண்டும் தங்கள் நட்பு விரிசல் பட்டுவிடுமோ என பயந்த மனதிற்குள்ளோ, ரிக்டர் அளவீட்டில் கணக்கிட முடியாத நிலநடுக்கம்.
யாருடனும் பேசாமல் எதனோடும் ஒட்டாமல் தனியாய் நின்றுக் கொண்டு அந்த எமரால்ட் ஏரியை வெறித்தபடி நின்றுக் கொண்டு இருந்தான் தீரன்.
ராஜ்ஜுடன் பேசியபடி திரும்பிய மிதுராவின் விழிகள் தீரனை தீண்டியது.
அவளுக்கு இந்த தீரனே மிக வித்தியாசப்பட்டவனாக தெரிந்தான்.
ராஜ்ஜைப் போல அவன் எல்லாரிடமும் வெளிப்படையாக ஒதுக்கம் காட்டவில்லை. எல்லாரிடமும் பேசுகின்றான். ஆனால் ராஜ்ஜை தவிர்த்து யாரையும் அவன் மனதிற்கு மிக நெருக்கமாக வைக்கவில்லை. ஓரடி தள்ளியே வைத்து இருக்கின்றான்.
ஆனால் அது எதிரில் இருப்பவர்களுக்குத் தெரியாதபடி பார்த்தும் கொள்கின்றான்.
சற்று முன்பு கூட இரயிலில் அந்த பெண்களிடம் சம்பிரதாயமாகப் பேசினானே அதேப் போல தானே என்னிடமும் முதல் நாள் பேசினான். நான் தான் என் மேல் வைத்த அக்கறை என நினைத்துக் கொண்டேன். அவன் என்னிடம் மட்டும் நட்பாக இருக்க விரும்பினான் என நினைத்தேன்.
ஆனால் நான் நினைத்தபடி அல்லவே இந்த தீரன்!
ப்ரத்யேகமான அன்பை ராஜ் எனக்குத் தருகின்றான், ஆனால் இந்த தீரனுக்கோ நான் பத்தில் ஒருவள்.
நினைத்த போதே வேப்பிலையைத் தின்ற கசப்பு.
மிதுராவின் முகபாவனைகளைப் பார்த்த ராஜ் அவளது தோளைத் தொட்டு என்னவென்று கேட்டான்.
ராஜ்ஜைப் பார்த்த மாத்திரத்தில் தீரனைப் பற்றிய எண்ணங்கள் எல்லாம் அவளுக்குள் வடிந்துப் போனது.
இப்போது ஆதனைப் பற்றி அறிந்து கொள்ளும் ஆர்வம், அவள் மனக்குளத்தில் நிறைந்தது.
ஆனால் எப்படி அறிவது என்று யோசித்த மனதிற்கு நானிருக்கிறேன் என்ற குரலாய் அந்த அலைபேசி ஒலி எழுப்பி அடங்கியது.
அவளுடைய தோழன் விமல் தான் அழைத்திருந்தான். ராஜ்ஜிடம் பேசிவிட்டு வருகிறேன் என்று ஜாடையில் சொன்னவள் தனியாக வந்து அலைப்பேசியை உயிர்ப்பித்துக் காதில் வைத்தாள்.
“எப்படி டா விமல்? நான் குழப்பத்துல இருக்கும் போது எல்லாம் ஆபத்பாண்டவனா வர!” என்றாள் எடுத்தவுடன்.
“ஆஹா
ஐஸ் பலமா இருக்கே… அப்போ கண்டிப்பா ஏதோ பெரிய குழப்பமா தான் இருக்கும் போல. சொல்லுங்க இந்த ஆலம்பனா, உங்களுக்கு என்ன குழப்பத்தை தீர்க்க வேண்டும்?” என்றான் அலாவூதின் பூதத்தின் பாவனையில்.
“இந்த ஆதன் யாருனு தெரியணும் விமல்…”
“அதான் சொன்னனே. இந்த ஆதன் க்ரீன் கார்ட் ஹோல்டர்னு. இன்னும் ஒரு பத்து மாசம் டைம் கொடு மிது… எப்படியாவது அந்த ஆதனை கண்டுபிடிச்சு உன் முன்னாடி நிறுத்துறேன்.”
“என்னது பத்து மாசமா? அடேய் நல்லவனே, ஆதன் யாரா இருப்பாங்கனு நான் ஓரளவு யூகிச்சுட்டேன். ஆனால் கன்ஃபர்மேஷன் மட்டும் பென்டிங். கண்டுபிடிக்க ஐடியா கொடுடா” என்று ஆரம்பித்தவள் நடந்து முடித்த அனைத்தையும் அவனிடம் ஒப்பித்தாள்.
“நீயே சொல்லுடா… இப்போ நான் என்ன பண்றது?” என கேட்டவளுக்கோ விமல் சொன்ன பதில் கண்களில் வெளிச்சத்தை வர வைத்திருந்தது.
“ஹையோ விமலு உன் குட்டி மூளைக்குள்ளே இவ்வளவு பெரிய அறிவா? நான் எதிரே பார்க்கலைடா. நீ மட்டும் என் நண்பனா கிடைக்காம போய் இருந்தா நான் என்ன ஆகி இருப்பேன்?”
“உருப்பட்டு இருப்படி.. ” என்று சின்ன சிரிப்புடன் சொன்னவன் அவளிடம் பேசிவிட்டு அலைப்பேசியை வைத்தான்.
மிதுராவின் மனதினிலோ பாரம் இறங்கிய உணர்வு.
அடுத்து செய்ய வேண்டியதை யோசித்தபடி அந்த பேருந்தில் ஏறியவளுக்கோ அடுத்து சென்ற எந்த இடமும் மனதினில் பதியாமல் யோசனையினில் உழன்றுக் கொண்டிருந்தாள்.
சரியாக
இரவு ஒன்பது மணிக்கு தங்களது ரிசார்ட்டை அடைந்தது அந்த சுற்றுலாப் பேருந்து.
உள்ளிருந்து இறங்கியவர்கள் எல்லாரும் அவசர அவசரமாக உண்டுவிட்டு தங்களது அறைக்குள் நுழைந்து கொண்டிருந்தனர்.
ஆனால் ராஜ்ஜை மட்டும் அறைக்குள் செல்ல முடியாதபடி தோட்டத்திலேயே பிடித்து வைத்திருந்தாள் மிதுரா.
மலர்கள் சூழ்ந்த இடத்தில்
அமர்ந்துக் கொண்டு அவனிடம் ஏதேதோ வளவளத்துக் கொண்டு இருக்க ராஜ்ஜோ எதுவும் பதில் பேசாமல் தலையசைத்துக் கேட்டு கொண்டிருந்தான்.
இந்த காட்சியை தூரத்தில் இருந்துப் பார்த்த அபி சிற்பியின் விழிகள் சந்தோஷத்தில் மிளிர்ந்தது.
“சிற்பி, ராஜ் யாரு கூடவும் அதிகமா ஒட்ட மாட்டான் சிரிக்க மாட்டான். ஆனால் மிதுரா வந்த அப்புறம் ரொம்ப மாறிட்டான். இனி அவன் லைஃப் ஹேப்பியா அமையும்.” என்று அபி சொல்ல சிற்பியிடம் ஆமோதிப்பு. இவர்களுடைய பேச்சைக் கேட்டபடியே தீரனின் பார்வை எதிரில் இருந்தவர்களை வெறித்தது.
அவன் மனதினிலோ கடந்த காலத்தின் நினைவுச் சுழல். ஏதேதோ எண்ணங்கள் ஏதேதோ கற்பனைகள். மனம் ஒரு நிலையில் இல்லை.
மேலும்
அங்கே நிற்க முடியாமல் தன் அறைக்குள் புகுந்து கதவை அறைந்து சாத்திக் கொண்டான்.
இங்கோ மிதுரா ராஜ்ஜிடம் பேசிபடி கடிகாரத்தைப் பார்த்தாள்.
மணி பதினொன்றை நெருங்கிவிட்டது.
இப்போது சரியாக ஆதனின் குரல் காற்றின் அலை வரிசையில் ஒலிக்க வேண்டும்.
அப்படி ஒலிக்கவில்லை என்றால் இந்த ராஜ் தான் ஆதன்.
நினைத்தபடியே அலைப்பேசியில் ரேடியோவை உயிர்ப்பித்தாள். ஆனால் அதில் ஆதனின் குரல் ஒலித்தது.
அவள் நெற்றியில் ஏகப்பட்ட குழப்ப முடிச்சுக்கள்.
அவள் ஊகம் பொய்த்துப் போனதன் வீரியம் முகத்தில் தெள்ளந்தெளிவாய் படர்ந்தது.
அவள் முகம் போன போக்கைப் படித்த, ராஜ் என்னாச்சு என்றுக் கேட்டான் கவலையாக.
தூக்கம் வருவதாய் பொய் சொல்லிவிட்டு தன் அறைக்குள் புகுந்துக் கொண்டவளுக்கோ தலையை சுற்றிக் கொண்டு வந்தது.
துவங்கிய இடத்திலேயே மீண்டும் வந்து நின்றுவிட்ட சோர்வு.
ஆதனைப் பற்றிய தேடலை மீண்டும் முதலில் இருந்து துவங்க வேண்டும்.
நினைத்த போதே ஆயாசமாக இருந்தது.
கண்களோ உறக்கத்தின் போர்வைப் போர்த்திக் கொள்ளாமல் கட்டிலில் உருண்டபடிக் கிடந்தது.
கடிகாரத்தின் முள் சரியாக காலை எட்டை நெருங்க அப்போது தான் மிதுராவின் விழிகளில் லேசாக உறக்கம் எட்டிப் பார்க்க கண்ணை மூடினாள்.
“ஹே மிது, எழுந்திடுடி. இப்போ எழுந்தா தான் கிளம்ப சரியா இருக்கும். ” என்று சிற்பிகா எழுப்ப முனைய சோர்வின் பிடியினில் இருந்தவளோ “இல்லை சிற்பி, எனக்கு ரொம்ப டயர்டா இருக்கு. நீங்க போயிட்டு வாங்க” என்றுவிட்டு போர்வையில் சுருட்டிக் கொண்டாள்.
கவலையுடன் அவள் அருகில் வந்த சிற்பி, “ஓகே மிது, அப்போ நம்ம போக வேண்டாம். நீ நல்லா ரெஸ்ட் எடுடா. அப்போ தான் சரியா ஆகும்” என்றபடி அருகில் அமர்ந்து நெற்றியை வருடிவிடத் துவங்கினாள்.
“ஹே லூசு! என் உடம்புக்கு எதுவும் இல்லை. நைட்டு தூங்கல. அதான் இப்போ தலை வலிக்குது தூக்கமும் வருது. படுத்தா சரியாகிடும். நீ ஒழுங்கா போயிட்டு வா.”என்று ஏதேதோ சொல்லி சமாதானப்படுத்தி சிற்பிகாவை வழியனுப்பி வைத்து கட்டிலின் மீது விழுந்த அடுத்த நொடி கதவு தட்டப்பட்டது.
சோர்வாக எழுந்து கதவைத் திறந்தவளின் விழிகளிலோ வியப்பின் விரிவு.
எதிரே ராஜ்!
இவன் அவர்களுடன் போகவில்லையா? கேள்வியுடன் பார்த்தவளது நெற்றியில் கைவைத்து உடல் சூட்டை அளந்தான் அவன்.
பின்னர் கைகளில் கொண்டு வந்திருந்த மாத்திரையை தந்துவிட்டு தண்ணீர் எடுத்துக் கொடுத்தான்.
அவனையே பார்த்தபடி மாத்திரையை உண்டவள் மீண்டும் அதேக் கேள்விக்கு வந்து நின்றாள்.
“இல்லை மிதுரா, நீ உடம்பு முடியாம இருக்கும் போது என்னாலே போக முடியலை. அதான் வரலைனு சொல்லிட்டேன்” என்றவனது பாசத்தைக் கண்டு அவள் விழிகள் நெகிழ்ந்தது.
“நான் நைட்டு தூங்கல ராஜ். அந்த டயர்டாலே தான் வரலைனு சொன்னேன்.” என்றவள் சொல்ல “நோ ப்ராப்ளம் மிதுரா. நீ தூங்கி எழுந்த அப்புறம் தனியா இருக்கணும்ல. அதனாலே தான் நான் போகல.” என சொன்னவன் அவளைத் தூங்க சொல்லிவிட்டு தன்னறைக்கு சென்றுவிட இவள் உறக்கத்திற்குள் நுழைந்தாள்.
ரிஸார்ட்டில் இருந்து கிளம்பிய அந்த பேருந்து கிள்ளியூர் அருவிக்கு வந்து நின்றது.
எதிரே இருந்த அருவி தன் அழகால் அத்தனை பேரையும் கட்டிப் போட்டு இருந்தது, தீரன் ஒருவனைத் தவிர.
எல்லா இடத்திற்கும் ராஜ்ஜோடு சென்று பழக்கப்பட்டவனுக்கு இந்த பயணமோ அத்தனை தனிமையாக.
அருகே அபியும் சிற்பியும் இருந்தாலும் அவன் மனது மட்டும் ஏனோ அந்நியப்பட்டு போய் நின்றது.
மிதுராவின் அருகில் இருக்க வேண்டும் என்பதற்காக தன்னை தனியே தனித்துவிட்ட ராஜ்ஜை எண்ணி அவனுக்குள் வருத்தமாக இருந்தது கூடவே கொஞ்சம் கோபமாகவும் இருந்தது.
இத்தனை நாள் பழகிய நட்பை விட சில நாட்களுக்கு முன்பு கிடைத்த நட்பு அவ்வளவு முக்கியமாகப் போய்விட்டதா என்ற பொறாமை வேறு.
அவனும் ராஜ்ஜுடன் ரிஸார்ட்டிலேயே தங்கியிருப்பான் தான். ஆனால் இந்த குழுவை பார்த்துக் கொள்ள வேண்டியது அவன் கடமையல்லவா அதனால் தான் பல்லைக் கடித்துக் கொண்டு இங்கே அமர்ந்து இருந்தான்.
மனதினில் ஏதோ சொல்ல முடியாத பயம்.
மிதுராவினால் தங்கள் நட்பு மீண்டும் பாதிப்புக்குள்ளாகப் போகிறது என்பதை மட்டும் அவன் ஆழ்மனது திரும்ப திரும்ப அவனிடம் சொல்லிக் கொண்டிருந்தது.
ஒரு வேளை உண்மையாகிவிடுமோ!