காதல் தீண்டவே-24
காதல் தீண்டவே-24
எதிர்பாராத திருப்பங்களும் வளைவுகளும் நிறைந்தது இந்த வாழ்க்கை.
திடீரென ஏற்பட்ட இந்த பெரிய திருப்பத்தை சமாளிக்க முடியாமல் திணறிக் கொண்டிருந்தாள் சிற்பிகா.
தன்னை நோக்கி விழுந்த சந்தேக பார்வைகளை தாங்க முடியாமல் அவள் ராஜ்ஜை நோக்கினாள்.
“நான் தான்னு எப்படி உறுதியா சொல்றீங்க?” சிற்பிகாவின் கேள்விக்கு ராஜ், தீரனை நோக்கி கண்ணசைத்தான்.
முதல் கேள்வியே வில்லிலிருந்து புறப்பட்ட அம்பாக சிற்பியின் மீது பாய்ந்தது.
“நீங்க ஜாயின் பண்ணும் போதே தெளிவா சொன்னோம் ‘ஹானஸ்டி தான் இங்கே முக்கியம்னு. ஆனால் இந்த கம்பெனியிலே வேலை செய்யுறவங்க கிட்டே இல்லைனு நிரூபணம் ஆகிடுச்சு.” முகத்துக்கு நேராக தீரன் குற்றம் சாட்ட சிற்பிகாவின் விழிகள் சிவந்தது.
“சார் நான் ஹானெஸ்டா தான் இருந்தேன்… இருக்கேன்…” என்றாள் மிக அழுத்தமாக.
“ஓகே நீங்க ஹானெஸ்டா தான் இருந்தீங்க நான் ஒத்துக்கிறேன். பட் நம்ம கம்பெனிக்கு இல்லை… உங்களுக்கு ஸாகலர்ஷிப் கொடுத்த கம்பெனி கிட்டே… Am i right?” அவன் கேட்க சிற்பிகாவின் முகத்தில் தயக்கம் ஊறியது.
அதை குறித்து கொண்டவனின் அடுத்த கேள்வியோ, “நீங்க யாரோட ஸ்காலர்ஷிப்ல காலேஜ் முடிச்சீங்கனு தெரிஞ்சுக்கலாமா?” என்பது தான்.
அந்த கேள்வி முன்பு வெகுநேரமாக மௌனம் சாதித்தாள் சிற்பிகா.
“நான் அப்படி எதுவும் கஷ்டமான கேள்வியை கேட்கலயே சிற்பிகா… ஆன்சர் மீ… ” கடூரமாக உயர்ந்தது தீரனின் குரல்.
“முருகப்பா குரூப்ஸ் லிமிட்டட் தான் என்னோட ஸ்பான்சர்?” சிற்பிகாவிடமிருந்து தயங்கி தயங்கி பதில் வர சுற்றி இருந்தவர்கள் கண்கள் கோலிகுண்டை போல உருண்டது.
“உங்களுக்கு இப்போ நம்மளோட தொழில் போட்டியாளர் யாருனு தெரியும்ல?” தீரன் கேட்க சிற்பிகாவிடம் ஆம் என்ற தலையசைப்பு.
“எனக்கு என்ன டவுட்னா… இதுவரை உங்களுக்கு ஸ்பான்சர் பண்ண அந்த கம்பெனியிலே சேராம ஏன் இந்த கம்பெனியிலே சேர்ந்தீங்க… ஒருவேளை உளவு பார்க்கிறதுக்காகவா?” தீரனிடமிருந்து நேராக பாய்ந்த கேள்வியில் சிற்பிகாவிடம் அதிர்வு.
“நோநோ…அவங்க ஸ்காலர்ஷிப்ல படிச்சேன் அது உண்மை தான். ஆனால் இங்கே உளவு பார்க்க வரலை… இதுவரை சந்தேகப்படும்படியா எதுவுமே நான் பண்ணலையே… எப்படி காரணமே இல்லாம பழி போடுவீங்க… ” சிற்பிகா தன்பக்கத்து நியாயம் கேட்க இப்போது அபி அவளைப் பார்த்தான்.
“இதுக்கு முன்னாடி சந்தேகம்படும்படியா உன்னோட பிஹேவியர் இருந்தது சிற்பி… மிதுராவை மெயில் அனுப்பவிடாம நீ அவளை கம்பெல் பண்ணி கேன்டீன்க்கு முட்டை பஃப்ஸ் வாங்க கூட்டிட்டு போனல…” அபி கேட்க சிற்பிகாவின் கண்கள் வெறுமையாய் அவனை நோக்கியது.
‘என்னை நீயும் நம்பவில்லையா’ என்ற கேள்வி அப்பட்டமாக அவள் முகத்தினில் விரவி கிடக்க அபி சட்டென்று தலை குனிந்தான்.
இந்த காட்சியைக் கண்ட அந்த முன்று ஜோடி கண்களும் வஞ்சமாய் சிரித்துக் கொண்டது. ஆனாலும் அந்த புறம்பேசும் குழுவிலிருந்த ஒருத்தி முகத்தினில் மட்டும் வஞ்சத்தோடு சேர்ந்த குழப்பம்.
அந்த அறை முழுக்க இப்போது மௌனத்தின் அடர்த்தி.
எதுவும் பேசாமல் அப்படியே தளர்ந்துப் போய் இருக்கையில் அமர்ந்தவளை ஆதரவாய் தாங்கிப் பிடித்த மிதுரா “ஒரு முட்டை பஃப்ஸ் சாப்பிட போனதுக்கு இவ்வளவு பெரிய பழியா… இது நியாயமேயில்லை…” கடுமையான கண்டிப்பு அவளிடம்.
அவர்களிருவரையும் மாறி மாறிப் பார்த்த அதிதியோ, “என்ன ஏதுனு எதுவும் விசாரிக்காம இப்படி யூகங்களை மட்டுமே அடிப்படையா கொண்டு ஒருத்தர் மேலே பழி போடுறது மனிதத்தன்மையற்ற செயல். அதை ஒரு எச்.ஆர் ஆ இருந்துட்டு நான் அனுமதிக்க மாட்டேன்… ” என்றாள் இவளும் கோபமாக.
“மிஸ். அதிதி… நாங்க ஆதராமில்லாம பேசல. ஞாயிற்றுக்கிழமையான நேத்து ஏன் சிற்பிகா ஆஃபிஸ்க்கு வந்தாங்கனு கேட்டு சொல்ல முடியுமா?” என தீரன் கேட்க சிற்பிகாவுக்கோ ஐயோ என்றானது.
எப்படி சொல்வது? எதை சொல்வது?
தூண்டிலில் அகப்பட்ட மீனாய் சிற்பிகாவிடம் தத்தளிப்பு.
பதிலின்றி மௌனம் காத்தவளின் முன்பு அடுத்த கேள்வி வந்து விழுந்தது.
“ஓகே ஆஃபிஸ்க்கு வந்தது தான் வந்தீங்க… ஆனால் ஏன் உங்க சிஸ்டம்ல லாகின் பண்ணாம அபி சிஸ்டம் லாகின் பண்ணி மொத்த ப்ராக்ராமையும் மாத்தி சர்வர்ல டெப்லாய் பண்ணீங்க?” சாட்டையாய் சுழன்றது அடுத்த கேள்வி.
“இந்த கேள்விகளுக்கு என் கிட்டே நியாயமான பதிலிருக்கு. ஆனால் அதை சொல்ல முடியாத நிலையிலே நான் இருக்கேன்.. உங்களோட பார்வைபடி தப்பு பண்ணது நானாவே இருக்கட்டும். எங்க சைன் பண்ணனும்னு சொல்லுங்க… நான் சைன் பண்ணிட்டு கிளம்பிக்கிட்டே இருக்கேன். ” சிற்பிகாவின் வார்த்தையைக் கேட்டு மிதுராவும் அதிதியும் ஒரே நேரத்தில் அதட்டினர்.
“நீ ஏன் போகணும் சிற்பி? அப்படி இந்த கம்பெனியைவிட்டு போறதா இருந்தாலும் உன் மேலே விழுந்த பழியை இல்லைனு மாத்திட்டு தான் போகணும். ” மிதுரா ஆதரவாய் பேச
“வீ ஆர் தேர் ஃபார் யூ சிற்பி. ஒரு எச். ஆர் ஆ என் கம்பெனி எம்ப்ளாயிஸ் காரணமே இல்லாம தண்டிக்கப்படுறதை நான் அனுமதிக்கமாட்டேன்” அழுத்தமாய் சொன்ன அதிதி எதிரில் நின்றிருந்த மூவரையும் கோபமாக முறைத்துவிட்டு தீரனுக்கு அருகில் காலியாக இருந்த இருக்கையில் அமர்ந்தாள்.
எப்போதும் கலகலப்பாக இயங்கும் அந்த அலுவலகம் இன்று மயான அமைதியை தத்தெடுத்திருந்தது.
யார் முகத்திலும் ஒளிர்வில்லை. எல்லார் கண்களும் சிற்பியை கோபமாக முறைத்துக் கொண்டிருந்தன.
வேலை இன்றே பறிபோய்விடுமோ இல்லை நாளை பறிக்கப்பட்டுவிடுமோ என்ற பயம் அப்பட்டமாக எல்லார் முன்பும் படறிகிடந்தது.
அலுவலகத்தில் சேர்ந்த முதல் நாளே அதி சிறப்பாக நடந்தேறிய சம்பவத்தை நினைத்து அதிதி பெருமூச்சுவிட்ட நேரம் ராஜ்ஜிடமிருந்து மெயில் வந்து விழுந்தது அவள் உள்பெட்டியில்.
“டியர் அதிதி,
நீங்க இன்னும் எச்.ஆர் ஆ ஆகல… உங்களுக்கான ஆரம்பகட்ட ட்ரைனிங் பீரியட் முடிஞ்ச அப்புறம் தான் நீங்க எச்.ஆர்.
சோ இப்போதைக்கு சிற்பி விஷயத்திலே தலையிட உங்களுக்கு எந்தவித அதிகராமுமில்லை… அதனாலே இந்த பிரச்சனையிலே இருந்து நீங்க ஒதுங்கியிருக்கவும்.
தேங்க்ஸ் & ரிகார்ட்ஸ்,
கார்த்திக் ராஜ்”
என அந்த மெயில் முடிந்திருந்தது.
அதை படித்து முடித்தவளுக்கோ சுறுசுறுவென ராஜ்ஜின் மீது கோபம் எழும்ப அவனைப் பார்த்து முறைத்தாள். ஆனால் ராஜ்ஜோ இவளைக் கண்டுகொள்ளாமல் வேலையில் மூழ்கியிருந்தது அவனை இன்னும் கடுப்பாக்கியது.
மிதுராவோ தனக்கருகில் காலியாகயிருந்த தீரனின் இருக்கையே பார்த்துக் கொண்டிருந்தாள்.
அவனில்லாத அந்த இருக்கையில் திரும்ப திரும்ப அவனுடைய நிழல் படிந்து கிடப்பதை போன்ற பிரம்மை..
தன்னை நேரில் சந்திக்க துணவில்லாமல் மீட்டிங் ஹாலிற்குள் புகுந்துக் கொண்டவனை நினைத்து கோவம் கோவமாக வந்தது மிதுராவிற்கு.
அருகிலிருந்த ஏதோ ஒரு ஃபைலை எடுத்துக் கொண்டு தீரனிருந்த மீட்டிங் ஹாலின் வெளியே நின்று கதவைத் தட்டினாள்.
“யெஸ் கம் இன். ” அவன் குரல் அனுமதி கொடுக்க உள்ளே சென்றவளின் பார்வையோ அவனை நேருக்குநேர் சந்தித்தது.
“யெஸ் சொல்லுங்க. ஹவ் கேன் ஐ ஹெல்ப் யூ” ஒட்டாத குரலோடு கேள்வி வந்து விழுந்தது.
“உண்மையை சொன்னா போதும். அது தான் நீங்க எனக்கு பண்ற பெரிய ஹெல்ப்பா இருக்கும். ஏன் என்னை வேண்டாம்னு சொன்னீங்க தீரன். ஐ நீட் அ ப்ராப்பர் ரீசன்”
“இந்த விஷயம் பேசுறதுக்கு இது சரியான டைம்மில்லை மிதுரா…” அவன் லாப்டாப்பில் இருந்து விழியெடுக்காமலே பேச அவனருகில் கோபமாய் சென்று நின்றாள்.
“நிராகரிக்கப்படுறது கொடுமைனா, காரணமே தெரியாம நிராகரிக்கப்படுறது அதைவிட கொடுமை. எனக்கு காரணம் வேணும். இப்பவே… இங்கவே…” அழுத்தமாய் சொல்லிவிட்டு நின்றவளின் உறுதியிலேயே தெரிந்தது பதில் கிடைக்காமல் இங்கிருந்து நகரமாட்டாள் என்பது.
ஒரு முடிவோடு எழுந்து தீரனும் நின்றான்.
இருவருக்குமிடையில் தற்போது இரண்டு சென்டிமீட்டர் தான் இடைவெளியென்றாலும் மனதளவில் கணக்கிட முடியாதளவிற்கு பெரும் இடைவெளி விழுந்திருந்தது.
“மிதுரா, உனக்கு நான் தான் இந்த கம்பெனியோட ஒன் ஆஃப் தி சி.இ.ஓ னு இப்போ தெரியும் ரைட்.” எனக் கேட்க அப்போது தான் அவளே அதை உணர்ந்தாள். மெல்லிய தயக்கத்துடன் தலையாடியது
“கயல் கவிதையை நேசிச்சு தான் பெரிய குழியிலே விழுந்தேன். கயலோட நோக்கம் இந்த கம்பெனி, இதுல வர பணம், அதுக்காக தான் அவள் ராஜ்ஜை காதலிச்சா.” என அவன் இடைவெளிவிட அவள் மெதுவாக ஆமோதித்தாள்.
“இவ்வளவு நாள் தலைக்காட்டாத அவள் புதுசா இப்போ நம்ம கம்பெனிக்குள்ளே நுழைஞ்சுருக்கான அதுக்கு காரணம் உன்னோட உதவியும் சிற்பிகாவோட உதவியும் தான்…” அவன் அவள் மீது குற்றம் சாட்ட,
“வாட் நான்சன்ஸ்…” என இடையில் புகுந்து கத்தினாள்.
“திஸ் இஸ் நாட் எ நான்சென்ஸ். அந்த கயலோட சம்பந்தப்பட்டவங்க நீயும் சிற்பிகாவும். உங்க இரண்டு பேரையும் நான் நம்ப தயாரில்லை. சோ யூ கேன் கோ… இந்த மீட்டிங் ஹாலை விட்டும் என்னை விட்டும்” என தீரன் சொல்ல அவள் முகம் அவனையே வெறித்துப் பார்த்தது.
அவளால் இந்த காரணத்தை ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை.
“யூ ஆர் லையிங் தீரன்… ” என்றாள் அழுத்தமாக
“இது தான் உண்மை. எனக்கு உன்னைப் பார்க்க விருப்பமில்லை மிதுரா. ப்ளீஸ் இங்கேயிருந்து போ… உன்னைப் பார்க்கும் போதுலாம் சிவானியோட துரோகம் தான் எனக்கு நியாபகம் வருது.” கோபமாக கத்தினான் அவன்.
“தீரன் இது நியாயமில்லாத தண்டனை. நீங்க பொய் சொல்றீங்க… இது உண்மையில்லை. நான் நம்பமாட்டேன்” என அழுத்தமாக சொன்னவளோ வெளிவரத்துடித்த கண்ணீரை உள்ளடக்கியபடி,
“முதலிலே கம்பெனிக்கு ஏற்பட்ட ப்ரச்சனையை பார்க்கலாம் தீரன். அதுவரை இந்த விஷயத்தைப் பேசமாட்டேன். ஆனால் உண்மையான பதில் கிடைக்காம உங்களை விட்டுட்டு போகவும்மாட்டேன்” ஆலவேரின் உறுதியோடு சொன்னவள் அந்த அறையைவிட்டு வெளியே சென்றாள்.
அவளையே தீர்க்கமாக பார்த்துவிட்டு திரும்ப, நிவின் மோட்டார்ஸிடமிருந்து ஒரு மெயில் வந்து விழுந்தது இரண்டு கார்த்திக்கின் உட்பெட்டியிலும்.
ப்ராஜெக்ட் சரியான செக்யூரிட்டியில்லாமல் இருப்பதால் விலக முடிவெடுத்திருக்கிறோம் என்ற அந்த மெயிலையே திரும்பதிரும்ப வாசித்துக் கொண்டிருந்த இரண்டு கார்த்திக்கின் மனதில் பூதாகரமாய் எழும்பி நின்றது அந்த கேள்வி.
‘இந்த முறையும் கயலிடம் தோற்றுவிடுவோமோ?’.
அவர்களிருவரும் கடைப்பிடித்த அமைதியான அணுகுமுறையெல்லாம் இப்போது சிதறிப் போனது. இதுவரை அவர்கள் வெளிப்படுத்திராத அந்த கோப முகத்தைப் பார்த்து அந்த அலுவலகமே மிரண்டு போய் அமர்ந்திருந்தது.
மிதுராவோ தன் தோழி கலங்கமற்றவள் என நிரூபிப்பதற்கான முயற்சியில் இறங்கியிருந்தாள்.
செக்யூரிட்டி ரிஜிஸ்தர் மற்றும் ஆக்சஸ் சர்வீஸிற்கு சென்றவள் ஞாயிற்றுக்கிழமை மட்டும் அலுவலகத்திற்கு வந்தவர்களின் பட்டியலை தரும்படி கேட்டுவிட்டு திரும்ப வர அந்த அலுவலக அறையே காலியாக இருந்தது.
எல்லாரும் உணவருந்த சென்றுவிட்டனர். தீரன்,ராஜ்,அபி உட்பட.
அங்கே தனித்து அமர்ந்திருந்த சிற்பிகாவையும் அதிதியையும் பார்த்து சாப்பிடபோகலாம் என அழைக்க சிற்பிகா சுரத்தில்லாமல் எழுந்து வந்தாள்.
கேன்டீனிற்கு வந்த மிதுராவோ தன் வாலட்டை எடுத்துக் கொண்டு உணவு வாங்க போக, அதிதியோ அவளின் முன்பு ல்ன்ச்பாக்ஸை வைத்துவிட்டு தன்னுடைய லன்ச்பாக்ஸை பிரித்தாள்.
அதைக் கண்டு மௌனமாக சிரித்துக் கொண்ட மிதுரா மெதுவாக சாப்பிட முனைய சிற்பிகா அசைந்தாளில்லை.
“சிற்பி, தனியா சொல்லணுமா? ஒழுங்கா சாப்பிடுடி…” அதட்டலாய் வந்தது மிதுராவின் வார்த்தைகள்.
“மிது என் மேலே உனக்கு சந்தேகம் வரலையா? நான் ஏன் சன்டே ஆஃபிஸ்க்கு வந்தேனு உனக்கு கேள்வி தோணலையா?” சங்கடமாக கேட்டபடி தலைகுனிந்து அமர்ந்திருந்தாள் சிற்பிகா.
“காரணம் சொன்னப்புறம் நம்புறதா உண்மையான நட்பு? எனக்கு தெரியும் என்னோட சிற்பி எந்த தப்பும் பண்ணியிருக்க மாட்டா…” என்றாள் அவள் தோளை தட்டிக் கொடுத்து. சிற்பியின் முகத்தில் இழந்த பிரகாசம் மீண்டும் திரும்பியது.
இருவருடைய அந்த நட்பைக் கண்டு அதிதியின் முகத்தில் சந்தோஷமும் பொறாமையும். தான் மட்டும் தனித்துவிடப்பட்டதைப் போன்ற பிரம்மை.
‘இரண்டு வருட தனிமை வாழ்க்கையில் தனக்காக தோள் கொடுக்க, கவலைப்பட எந்த உறவையும் சம்பாதிக்கவில்லையே’ என்ற வருத்தத்தோடு சாப்பிடத் துவங்கினாள்.
தணலில் பட்ட இலையாய் அந்நாளை கடத்தியவர்கள் இரவு ஏழு மணி அடிக்கவும் வெளியே வந்தனர்.
சிற்பியை வண்டி ஏற்றிவிட்ட மிதுராவும் அதிதியும் தங்களுடைய பேருந்தின் அருகே வந்து நின்றனர்.
காலையில் முட்டி மோதியது போல இப்போதும் முட்டிக் கொள்ளாமல் மிதுரா விட்டுக் கொடுத்துவிட்டு விலகி நிற்க அதிதியோ ஒரு வியப்பு பார்வையோடு உள்ளே நுழைந்தாள்.
காலையில் அமர்ந்த அந்த இருக்கையிலே சென்று அதிதி அமர இவள் தான் எப்போதும் இருக்கைக்கு சென்றமர்ந்துவிட்டு பேருந்தின் வாயிலையே பார்த்துக் கொண்டிருந்தாள்.
இரண்டு கார்த்திக்கும் அவளது எதிர்பார்ப்பை இம்முறை பொய்யாக்காமல் உள்ளே நுழைந்தனர்.
ராஜ் எப்போதும் அமரும் இருக்கைக்கு அமர போக தீரனோ வேகமாக அதிதியின் அருகில் அமர்ந்துக் கொண்டான்.
தீரனையே ஏமாற்றமாய் பார்த்துக் கொண்டிருந்தது மிதுராவின் விழிகள்.
ராஜ் அவனை கேள்வியாய்ப் பார்க்க “ஐ நீட் திஸ் ப்ளேஸ்” என்றான் தீரன் கெஞ்சலாக…
அவனையும் அவனருகிலிருந்த அதிதியையும் எக்ஸ்ரே கண்களோடு பார்த்த ராஜ், மிதுராவின் அருகே அமர்ந்தான்.
மிதுராவின் முகத்தில் சருகுகளின் வாட்டம்.
அவளது வருத்தத்தைக் கண்ட ராஜ்ஜோ
“மிது, ஆஃபிஸ் டென்ஷன் ஆஃபிஸோட… அங்கே பார்த்த கோபமான ராஜ் இல்லை. மிதுரா கிட்டே பாசம் காட்டுற ராஜ் தான் இப்போ உன் முன்னாடி இருக்கேன். எப்பவும் போல பேசு மிது” என்றவனின் வாயசைவைப் படித்தவளோ சம்மதமாக தலையாட்டினாள்.
காதலின் வெம்மையில் வெந்துக் கொண்டிருந்த மனதிற்கு பாசத்தின் நிழல் தேவைப்பட அவள் ராஜ்ஜிடம் எப்போதும் போல பேசித் துவங்கினாள்.
முன்னால் அமர்ந்திருந்த தீரனோ அவர்களிருவரையும் ஒரு பார்வை பார்த்துவிட்டு திரும்பிக் கொண்டான்.
அவன் பார்வையில் ஆயிரம் அர்த்தங்கள்.
என்னைப் போல் ஏமாந்துவிடாதே என்று ராஜ்ஜுக்கு எச்சரிக்கையா?
இல்லை பிரிவின் வேதனையை மிதுராவிற்கு உணர்த்தும் வேகமா?
தெரியவில்லை…
ராஜ்ஜிடம் பேசிக் கொண்டபடியே மிதுரா தன் அலைப்பேசியை எடுத்து மெதுவாக கவிதையை கிறுக்கினாள்.
நீ என்னை ஏமாற்றவில்லை
நான் தான் என்னை
ஏமாற்றி கொண்டேன்
இல்லாத உன் காதலை
இருப்பதாக நினைத்து….
அவள் ஸ்டேட்டஸில் போட்ட அந்த கவிதையைப் படித்தவனது உள்ளமோ பட்டென்று திரும்பி அவளைப் பார்த்தது. மிதுராவும் அவனைப் பார்த்தாள். ராஜ்ஜின் கண்களும் அவர்களைப் பார்த்தது.
காதலை தேக்கி வைத்து மிதுரா பார்த்துக் கொண்டிருக்க தீரனோ தயங்கி திணறிக் கொண்டிருந்தான்.
இந்த காட்சியை கண்டு ராஜ்ஜின் முகத்திலே பெரிய மாற்றம். அவன் எண்ணம் எதையோ வட்டமிட்டுவிட்டு இறுதியில் தீரனைப் பார்த்து கடுப்பாக முறைத்துவிட்டு ஜன்னல் பக்கம் திரும்பிக் கொண்டது.
ராஜ்ஜின் முகமாற்றத்தை இருவரின் காதல்விழிகளும் கவனிக்கவே இல்லை…