MK 29

MK 29
மயங்கினேன்.!கிறங்கினேன்.!
அந்தக் காலைப் பொழுது விடியலே வெற்றிக்கு அத்தனை நல்லதாக அமையவில்லை. காரணம் அவனது மனைவி !
காலை எழுந்ததில் இருந்தே அவனைத் திட்டிக்கொண்டிருக்கிறாள் அவனின் இல்லாள்.
“கொஞ்சம் கூடப் பொறுப்புன்றதே உங்களுக்கு இல்லை தரு “டீவியை பார்த்தப்படியே திட்டித் தீர்க்க,
“எதுக்கு மா காலையிலே இன்னைக்கு கச்சேரி வச்சிருக்க?” புரியாது கணவன் முழிக்க,
“ஹான், வேண்டுதல் “
“வேண்டுதலா சரி மா. நீ கண்டினியூ பண்ணு. நான் வேலைக்குக் கிளம்புறேன்” உள்ளுக்குள் அடக்கிய சிரிப்பை மறைத்து வெளியில் சாதாரணமாகச் சொல்ல, கடுப்பாகினாள் இனியா.
“ஏன் யா, இங்க ஒருத்தி நான் கத்திட்டு இருக்கிறத பார்த்தா உங்களுக்கு எப்படி தெரியுது “புசு புசுவென மூச்சை இழுத்து விட்டப்படி கேட்க ,
“அப்படியே இழுத்து கட்டிக்கோ சொல்றது போலத் தான் தெரியுது “மனைவியைப் பார்த்து மையலாகச் சொல்ல,
“தெரியும் தெரியும். ஒழுங்கா வேலைக்குக் கிளம்பி போங்க” என்று முகச்சிவப்பை மறைத்து அவனை அறைக்குத் துரத்தி விட்டாள் பெண்.
ஏனென்றே தெரியாத செல்லச் சண்டைகள். இருவருக்கும் இடையில் எப்போதும் இது நடப்பது தான்.
குட்டி குட்டி சண்டைகள் இல்லையேன் வாழ்க்கை சலித்து விடும் அல்லவா! அதற்கே இந்தச் சண்டைகள் எல்லாம்.
அவன் குளித்து முடித்து வருவதற்குள் அவனுக்கான டிஃபன் பாக்ஸ் தயாராக டைனிங் டேபிள் மேல் இருந்தது. அதற்குப் பக்கத்திலே ஒரு டம்ளர் பாலும் ஓட்சூம் வைத்திருக்கப் புன்னகையோடு கிளம்பினான்.
‘ கோபமா இருக்காங்களாம்‘ சிரிப்போடு அதனை உண்ண தொடங்கினான்.
” இனி மா. நான் போய்ட்டு வரேன் டா” என்று அறைக்கு வெளியே இருந்து சொல்ல, அவளோ கதவைத் திறந்து வந்தவள் அவனது நெற்றியில் முத்தமிட்டு” போய்ட்டு வாங்க “சொல்லி முகத்தை உற்றென்று வைத்துக் கொண்டாள்.
” பாய் சில்” அவளது நெற்றியில் தன் இதழ் ஒற்றி சென்றான்.
ஸ்டூடியோக்குள் வந்த வெற்றியைப் பார்த்து வந்தான் கௌதம்.
” கல்யாண நாள் வாழ்த்துக்கள் மச்சான் “நண்பனை வாழ்த்த,
” தேங்க்ஸ் டா மச்சான்” சிரிப்போடு நிறுத்திக்கொள்ள,
” என்ன வெறும் சிரிப்போடு முடிக்கப் பாக்குற, பிரியாணி வேணும் மச்சான் “
” உன் தங்கச்சி உனக்கு அதைக் கொடுப்பா. போய் அவக்கிட்டயே கேளு “
” தங்கச்சிக்கிட்ட கேட்டுக்க எனக்குத் தெரியும். நீங்க உங்க ப்ரசை இங்கிட்டு தள்ளுங்க. நாங்க மதியம் உன்னோட செலவுல சாப்பிட்டுக்கிறோம்.அப்படியே என்னோட கேர்ள் ஃப்ரெண்ட்ஸ்க்கு உன்னோட காசுல செலவு செஞ்சிக்கிறேன்“
” அல்பம் புடிச்சவனே “
” கொடு டா. ரொம்ப தான் பண்றது “
” பிடிச்சு தொல “அவன் கையில் பர்ஸை திணித்து விட்டு ஸ்டூடியோக்குள் நுழைந்தான்.
எல்லாம் சரியாக இருக்கிறதா என்று ஒருமுறை பார்த்துக் கொண்டவன், சரியாக ஆறுமணிக்கு தனது குரலைக் கொண்டு அனைவரையும் உற்சாகப்படுத்த ஆரம்பித்தான்.
” எல்லாருக்கும் காலை வணக்கம். பரபரப்பான இந்த நேரத்தில் உங்களோடு நானும் பயணிக்கிறேன்னு நினைக்கும்போதே சந்தோஷமா இருக்கு. இது டிகிரி காஃபி வித் யுவர் ஆர்.ஜே வெற்றி. நீங்கள் கேட்டிட்டு இருப்பது 93.5 சிட்டி எஃவம் கேளுங்க கேளுங்க கேட்டுட்டே இருங்க” என்றவன் தெய்வப்பாடல் ஒன்றை போட்டு விட்டான்.
அது முடியும் தருவாயில் மீண்டும் தன் வசம் கொண்டு வந்தவன் ,” இன்னைக்கு என்ன நாள்னு தெரியுமா? கண்டிப்பா இந்த நாளுக்காகத் தான் இளைஞர்கள் பலர் காத்திட்டு இருந்திருப்பாங்க. ஏன்னா இன்னைக்கு காதலர்கள் தினம். பலர் தன் காதலை கூற உற்சாகத்தோடு இருப்பீங்க. அதுல சிலர் ஆல்ரெடி காதலர்களா இருப்பாங்க. அதையெல்லாம் கொண்டாட இருக்கீங்க இல்லையா. சோ உங்களுக்காக ஒரு பாடல்” என்று காதல் பாடலைப் போட்டுவிட்டான்.
மனசெல்லாம் மழையே
நனைகிறேன் உயிரே
என் நெஞ்சில்
வந்து தங்கி சாரல்
அடித்தாய் என்னாகும்
உயிரே உயிரே
என் கண்ணில்
வந்து நின்று என்னை
பறித்தாய் என்னாகும்
உயிரே உயிரே
அப்படியே அந்த ஒருமணிநேரத்தை தன் வசம் கொண்டு மக்களை மகிழ வைத்திருந்தான் வெற்றி.
வெளியில் வந்த வெற்றிக்கு, ரகிசர்களிடமிருந்து அத்தனை லெட்டர்கள் வந்திருந்தது.
அதைக் எடுத்து வந்து வெற்றியின் இடத்தில் போட்டான் கௌதம்.
“என்னடா இது?” சாய்வாக நாற்காலியில் அமர்ந்து கேட்க,
“ஹான், லெட்டர்ஸ்“
“அது எனக்குத் தெரியாதாக்கும். அதை எதுக்கு இங்க கொண்டு வந்த?”
” உனக்கு வந்த லெட்டர்ஸை வேற எங்க கொண்டு போய்க் கொடுக்கிறதாம் “என்று சொன்னவன் படாரென்று அதனை எல்லாத்தையும் எடுத்துக் கொண்டான்.
” என்ன டா பண்ற நீ?” நண்பனின் செயல் புரியாது சலித்தபடி கேட்டான்.
” உன்கிட்ட கொடுக்கிறதுக்கு பதிலா, இதை நான் என் சகோதரிக்கிட்ட கொடுத்தா தான் சரியா இருக்கும்” என்றவனை பார்த்து முறைக்கலானான் வெற்றி.
” நீயெல்லாம் ஒரு நண்பனா. தங்கச்சி குடும்பத்துல கும்மியடிக்க பாக்குற “
” இதை அங்க கொடுத்தா தானே மச்சான், எங்களுக்கு ஒரு எண்டர்டெயின்மெண்ட் கிடைக்கும் “.
” அதுக்கு என் குடும்பம் தான் கிடைச்சதோ, இரு டா நீ ஒருநாள் குடும்பமா ஆகாமலா போகப் போற அப்போ இருக்கு” என வலக்கரத்தை பின்னால் கொண்டு வந்து முறுக்க,
” ஹீ ஹீ சும்மா ஃபன்னுக்கு தான் மச்சி. இந்தா உன்னோட லெட்டர்ஸ் பிடி” கொடுத்து விட்டு அவனிடமிருந்து கையை உருவிக்கொண்டவன் நகர்ந்துவிட்டான்.
வந்திருந்த லெட்டர்ஸை எல்லாம் ஒதுக்கி வைத்தவன், மனைவிக்குத் திருமண நாள் பரிசாக என்ன கொடுக்கலாம் என்று யோசனை செய்தான்.
என்ன யோசித்தும் அவனுக்கு பதில் மட்டும் கிடைத்தபாடில்லை.
அப்போது தான் அவனது மூளைக்கு ஒரு யோசனை தோன்ற, உடனடியாகச் செயல்ப்படுத்த வெளியே கிளம்பிவிட்டான் வெற்றி.
மாலைப் போல் வீடு வந்து சேர்ந்த வெற்றி, அவளுக்காக நடு வீட்டில் ஸ்விங் செட்டப் செய்தான்.
அது மாட்டவுமே, வீட்டின் அழகு கூடி போயிருந்தது.
முதலிலே மனைவியின் கைவண்ணத்தில் அழகாய் நேர்த்தியாய் இருக்க, அதற்கு மேலும் அழகு சேர்க்கும் விதமாக இந்த ஸ்விங் அமைந்திருந்தது.
இதை பார்த்ததும் இனியா எந்தமாதிரியான உணர்வுகளைக் காட்டுவாள் என்று பார்க்கக் காதல் கணவனாக ஆசை கொண்டான் வெற்றிமாறன்.
இதை மாட்டுவதற்குள் நிறைய வேலை செய்திருந்ததனால், குளித்து விட்டுச் செல்லலாம் என்று நினைத்து அறைக்குள் வந்தவன், குளியலறைக்குள் புகுந்து கொண்டான்.
அடுத்த சில மணி துளிகளில் குளித்து முடித்து வந்தவன், தலையைக் கோதியபடி கண்ணாடி முன்பு நின்று சட்டை போட்டுக் கொண்டிருந்த வெற்றியின் கண்களுக்குக் கண்ணாடியின் வழியாக ஜோடியாக இருந்த பீன் பேக் கண்ணில் பட்டது.
எல்லாப் பிரச்சனைகளும் முடிந்த பிறகு இனியா வீட்டை மாற்றி அமைக்கிறேன் என்று ஆரம்பித்தபோது முதல் வேளையாக வாங்கி போட்டது இந்தப் பீன் பேக்கை தான்.
‘எதற்கு‘ என்று கேட்டதற்கு ‘ஜோடியா தான் இருக்கணும் தரு‘ என்று அவளது பதிலில் இப்போதும் கூடப் புன்னகை மலர்ந்தது வெற்றிக்கு.
அதையே இரசித்து பார்த்துக் கொண்டிருந்தவனுக்கு பக்கத்தில் இருந்த பொருளின் மீது நிலைக்கொத்தி நின்றது.
பட்டெனத் திரும்பிப் பார்த்தவனுக்கு கண்கள் இரண்டும் பளிச்சிட்டன.
இரண்டு பெரிய பீன் பேக்கிற்கு நடுவில் குட்டியாக ஒரு பீன் பேக்.
பார்க்கப் பார்க்கக் கண்கள் தெவிட்டவில்லை அவனுக்கு. இப்போதே மனைவியைக் காண வேண்டும் என்று துடித்தது அவள் வசிக்கும் இதயம்.
ஆனால் அவள் தான் வேலைக்குச் சென்றுள்ளாளே, காத்திருக்க எண்ணினான்.
கிளம்பி வேலைக்குச் சென்றுவிட்டான் மனதை இங்கே விட்டுவிட்டு.
சரியாக ஒன்பது மணிக்கு அவனது நிகழ்ச்சி ஆரம்பமானது.
“காதலர் தினத்தன்று உங்களை எல்லாம் இந்த லவ் குரு ஷோவில் சந்திப்பது சந்தோஷமா இருக்கு. இன்னைக்கு நாம எதப்பத்தி பேசப் போறோம்னா, நீங்க யார்கிட்டயாவது எதையாவது சொல்லணும்னு நினைக்கிற விஷயத்தை இங்கே சொல்லலாம்” என்று ஆரம்பித்தவன் இறுதி கட்டத்தை நெருங்கி இருந்தான்.
இறுதி காலராக இனியா அவனது லைனில் வர, கௌதமும் உள்ளே நுழைந்து அவனுக்கான பரிசொன்றை கொடுத்துவிட்டு சென்றான்.
” வணக்கம் ! உங்கள் பெயர்? “
” நான் இனியா வெற்றிமாறன் “
” சொல்லுங்க இனியா. இன்னைக்கு நீங்க என்ன சொல்லப் போறீங்க? யாருக்கிட்ட சொல்ல நினைக்கிறீங்க?”
” நான் என்னோட ஹஸ்பண்ட் கிட்ட சொல்ல நினைக்கிறேன் “
” சரி சொல்லுங்க மிஸஸ். வெற்றிமாறன்” என்கையில் அவன் இதயம் படபடக்கத் தொடங்கியது.
” இன்னைக்கு எங்களோட ஃபர்ஸ்ட் இயர் ஆனிவெர்சரி. பட் இன்னுமே ரெண்டு பேரும் ஒருத்தருக்கு ஒருத்தர் விஷ் கூடப் பண்ணிக்கல்லை. ஆனா அவருக்குப் பரிசு ஒன்னும் கொடுக்கணும் நினைச்சு இங்கே சொல்றேன்” என்றதும் கேட்டுக்கொண்டிருந்த ரசிகர்கள் கூட ஆர்வமாகக் கேட்கத் தொடங்கினர்.
” சொல்லுங்க மிஸஸ். வெற்றிமாறன் ! உங்க ஹஸ்பண்ட் இதைக் கேட்டுட்டு இருக்கலாம் “
” வெட்டியா இனி ஊர் சுத்த முடியாது மிஸ்டர். இனி உங்களுக்குன்னு ஒரு பொறுப்பு வரப்போகுது. வாழ்க்கையில அடுத்த பதவிக்குக் காலெடுத்து வைச்சிருக்கீங்க.உங்களுக்கான பரிசு உங்கள் முன் இருக்கு” என்று லைனை கட் செய்து விட்டாள்.
உடனே பிரித்துப் பார்க்கத் தோன்றினாலும்,” லாஸ்ட் காலர் கிட்ட பேசினதுல ரொம்பவே சந்தோஷமா இருக்கு. இதோடு நான் கடைய சாத்திட்டு கிளம்ப வேண்டிய நேரம் வந்திடுச்சி. நீங்கள் கேட்டிட்டு இருப்பது 93.5 சிட்டி எஃவம் கேளுங்க கேளுங்க கேட்டுட்டே இருங்க” என்று பாடலொன்றை போட்டுவிட்டு வேகமாக அந்தப் பரிசைப் பிரித்துப் பார்த்தான்.
அதில் இருந்தது ப்ரெக்னன்சி கிட். முன்பே தெரியும் என்றாலும் இந்த நொடி அவனால் வார்த்தையால் வர்ணிக்க இயலவில்லை.
உடனடியாக வீட்டிற்கு கிளம்பிவிட்டான்.
அங்கே அவனுக்காய் அவன் மனைவி புன்னகை முகமாகக் காத்திருந்தாள்.
அவளைப் பார்த்ததும், அணைத்து முத்தமிட்டான்.
” நம்ம காதல் பரிசு தரு” அவன் கைகளை அவளது வயிற்றில் மேல் வைக்க, மென்மையாகத் தொட்டு பார்த்தவன், பிள்ளைக்கொரு முத்ததை இட்டான்.
” பெஸ்ட் கிஃப்ட் டா “
” ரிப்பிடட் வேர்ட்ஸ் தரு “
” நீ கொடுக்கிறது எல்லாமே அப்படி இருக்க என்ன பண்றது சொல்லு “
” போங்க தரு” சிணுங்கி அவன் தோளிலே சாய்ந்து கொண்டாள்.
அதன்பின் திருமணநாளோடு இதையும் கொண்டாடினார்கள்.
அடுத்தநாளே குடும்பத்திற்கு இவ்விடயம் பகிரப்பட, அனைவருக்கும் இதில் மட்டற்ற மகிழ்ச்சி.
************
ஏழு மாதங்கள் ஆகிவிட்டன.
இன்றையபொழுது இருவருக்குமான முக்கிய நேரம்.
திருச்சியில் ஒரு பெரிய மண்டபத்தைப் பிடித்து அதில் வலைகாப்பு நிகழ்ச்சியை வைத்தார் பரமசிவம்.
மூத்தோர்கோளின் ஆசிர்வாதத்தோடு நிகழ்ச்சி தொடங்கப்பட, வெற்றி எங்கேயும் நகராது மனைவியோடு நின்றான்.
அனைவரும் வந்து குங்குமம் சந்தனம் வைத்து வளையலை மாட்டி ஆசிவதித்து செல்ல, மகளது மகிழ்ச்சியை கண்டு உள்ளுக்குள் மகிழ்ந்தார் காந்திமதி.
கௌதமும் மணியும் சேர்ந்து எல்லா வேலையையும் பார்த்துக் கொண்டனர்.
இறுதியாக வெற்றி தங்க வளையலிட்டு அவளது நெற்றியில் முத்தமிட, அழகாகக் கேமராவில் பதிந்தது.
ரோஷினி தன் மகளோடு விழாவில் கலந்து கொள்ள, ஒதுங்கி நின்றே அவளை வாழ்த்தினாள்.
கௌதமிற்கு என்றாவது ஒரு நாள் இந்தநிலை மாறுமென்ன நம்பிக்கை கொண்டு அவர்களுக்காய் காத்திருக்கிறான்.
“நல்ல நேரம் முடியுறதுக்குள்ள அம்முவை கூட்டிட்டு போங்க அண்ணா” விஜயா சொல்ல, கணவனை விழிகள் கலங்க ஏறிட்டாள்.
“போய்ட்டு வா டா” என்று அவள் தலைகோதி சொல்ல, ஏக்கத்துடனே பெற்றவர்களோடு சென்றாள்.
அடுத்த இரண்டு மணிநேரத்தில், வெற்றி அவர்கள் வீட்டிற்கு வந்துவிட்டான்.
சந்தோஷமாக அவனை அணைத்து கொள்ள, அவளது பெரிய வயிறு இடித்தது.
“இப்பவே உன் புள்ள என்னைய கட்டிக்க விடமாட்டேங்கிறான். இனி பிறந்து என்ன செய்யக் காத்திருக்கானோ தெரியல” கணவன் புலம்ப, அவன் முகத்தையே பூரித்து போய்ப் பார்த்தாள்.
“என்ன மா?”
“லவ் யூ தரு” என்று அவனது இதழைச் சிறைப்பிடித்தாள்.
அவளது காதலில் மயங்கிப் போய்க் கிடப்பவன், இந்த எதிர்பாரா முத்தத்தில் கிறங்கி தான் போனான்.
அப்படியே நாட்கள் அழகாய் நகர்ந்தது.
ஒன்பதாம் மாத முடிவில் இனியாவிற்கு வலி வந்துவிட, மருத்துவமனையில் பிரசவ வலியில் கதறிக்கொண்டிருந்தாள்.
அவளது வலியில் இங்கே வெற்றி துடிதுடித்துக்கொண்டிருந்தான் வெற்றி.
“ம்மா, குழந்தை ஏன் மா இன்னும் வெளியே வரல. அங்க அவ அழுத்திட்டு இருக்கிறதை கேட்க முடியல மா” கலங்கிய குரலில் அன்னையிடம் கேட்க,
“கொஞ்சம் பொறுத்துக்கோ டா. குழந்தை வெளியே வந்திடும் “
அவளது அழுகையின் சத்தம் அதிகமாக அதிகமாக வெற்றியால் நிதானமாக இருக்க முடியவில்லை. அங்கேயும் இங்கேயும் நடந்தவண்ணமாக இருக்க, “தரு” என்ற பெருங்குரலோடு குழந்தையின் அழுகுரலும் சேர்ந்து கொண்டது.
அவர்களது மகவு உலகிற்கு வந்துவிட்டது.
பூக்குவியலாய் அவனது ஆண் மகவை தூக்கி கொண்டு வந்து செவிலியர் கொடுக்க, வாங்க மறுத்துவிட்டான் வெற்றி.
“பிள்ளைய பாருங்க சார் “
“இல்ல நான் என் சில்லோட பார்த்துக்கிறேன்” படப்படத்த மனதோடு கூற, செவிலியர் சிரித்தார்.
“குழந்தையை என்கிட்ட கொடுங்க” என விஜயா முன் வர, வெற்றி அவரை முறைத்தான்.
“எதுக்கு டா முறைக்கிற?”
“நான் தான் முதல்ல குழந்தையைத் தூக்குவேன்“
“சரி அப்போ தூக்க வேண்டியது தானே “
“அவளோட சேர்ந்து தான் குழந்தையை வாங்குவேன் “சட்டமாக நிற்க, தலையில் அடித்துக் கொண்டார் விஜயசாந்தி.
“நான் பெத்த இரண்டுமே சரியில்லை” என்றதும் அங்கே ஒரு சிரிப்பலை.
அடுத்த ஒரு மணிநேரத்தில் இனியாவை அறைக்கு மாற்றச் செய்திட, அவள் கண் முழித்ததும் கணவனைத் தான் முதலில் தேடினாள்.
அவன் வரவும், “நாம அப்பா அம்மா ஆகிட்டோம் தரு” சந்தோஷமாகக் கூறவும் அவளது நெற்றியில் மென்மையாக முத்தமிட்டான்.
“ரொம்ப வலிச்சிதா டா?”
“வலிய விட ஒரு வித சந்தோஷம் நமக்குன்னு ஒரு குழந்தை வரபோகுதுன்னு.”
“குழந்தையைப் பார்த்தீங்களா?”
“இல்லையே உன்னோட சேர்ந்து தான் பார்க்கணும்னு காத்திட்டு இருக்கேன்” கணவனைக் காதலாகப் பார்த்தாள்.
குழந்தையைச் சுத்தப்படுத்தி வந்து கொடுக்க, இருவருமாகச் சேர்ந்து அவர்களது செல்வத்தை வாங்கினர்.
” நம்ம பிள்ளை” என்று மனைவியை ஆதரவாக அணைத்து கொண்டான்.
அதன் பின்னரே, மொத்த குடும்பத்தையும் குழந்தையைப் பார்க்க அனுமதித்தான் வெற்றி.
மூன்று நாட்கள் கழித்து, இருவரையும் வீட்டிற்கு அழைத்து வந்தனர்.
பதினாறு நாட்கள் கழித்து, குழந்தைக்கு அர்ஜூனன் என்று பெயர் வைத்தனர்.
அந்த விழாவிற்கு பலராமனோடு இசையாழினியும் வந்திருந்தாள்.
அங்கே அவளைக் கண்ட மொத்த குடும்பமும் சாதரணமாகத் தான் நடந்து கொண்டனர்.
அதுவே ஒருவித குற்றவுணர்ச்சியை தான் அவளுக்கு கொடுத்தது.
பலராமன் தான் கண்ணாலே அவளுக்குத் தைரியத்தை வாரி வழங்கினான்.
அவன் கொடுத்த தைரியத்தில், இனியாவிடமும் வெற்றியிடமும் மன்னிப்பை வேண்ட, புன்னகையோடு அதனை ஏற்றுக்கொண்டனர்.
பின், அவர்களது திருமணப் பத்திரிக்கையைக் கொடுத்துக் கண்டிப்பாக வர வேண்டும் என்று அன்பு கட்டளையிட்டு சென்றனர்.
***********
குழந்தை பிறந்ததும் வேலையை விட்டு நிற்கச் சொல்லிப் பெண்கள் அனைவரும் கட்டளையிட, அன்றிரவே கணவனிடம் பேசினாள்.
“குழந்தையைப் பார்த்துக்கிறதுக்காக நான் வேலையை விட்டு நிக்கலாம்னு இருக்கேன் தரு “
“அதெல்லாம் வேண்டாம் சில் “
“அப்புறம் எப்படி குழந்தையைப் பார்த்துக்கிறது சொல்லுங்க“
“நாம பார்த்துக்கலாம் சில் “
“எப்படி தரு?”
“நம்ம குழந்தையை அம்மா மட்டும் தான் பார்த்துக்கணும்னு இருக்கா என்ன, அப்பாவும் பார்த்துக்கலாம் டா “
“ஆனாலும்” அவள் இழுக்க,
“இந்த ஆனாலும் வேணாம் ஆவன்னாவும் வேணாம். நம்ம குழந்தையை நாம சேர்த்தே வளர்த்திக்கலாம் டா. கூடத் தம்பியைப் பார்த்துக்க என்னோட மாமியாரை கூப்பிட்டுக்கலாம். சிம்ப்பிள்” என்று அவளை அணைக்க போகத் தன்னை விட்டு அவர்கள் இருவரும் பேசுவதா என்று குழந்தை வீரிட்டு அழுதது.
” இப்போவே உன்மகன் வேலைய காட்றான் பார்த்தியா” சுகமாய் அலுத்து கொள்ள, கிளுக்கி சிரித்தாள் இனியா.
அவனைத் தூக்கியதும் தன் பொக்க வாய்யை காட்டி சிரிக்க, இருவரையும் சேர்த்தே அணைத்து கொண்டான் வெற்றிமாறன்.
ரம்மியமான பொழுதாக அமைந்திருந்தது அந்தக் குடும்பத்திற்கு. நெற்றியில் மகனுக்கும் மனைவிக்கும் முத்தமிட்டு மனைவியின் கரத்தோடு கைகோர்த்து கொள்ள, கணவனின் நேசத்தில் அவனோடு புதைந்து கொண்டாள்.அந்த அறையே அவர்களது காதலில் மின்னலுற்றது.
ஒருவரது காதலில் ஒருவர் கரைந்து, திக்குமுக்காடி ஒருவருக்குள் ஒருவர் மயங்கி அது தரும் காதலில் கிறங்கி போய் ஒன்றிணைந்து வாழ்ந்தனர் . இனி தித்தித்திப்பு மட்டுமே…