mp7

மது பிரியன் 7

 

விஜயரூபனை எவ்வாறு தொடர்பு கொள்வது? எனும் சிந்தனை வயப்பட்டு இருந்தவளுக்கு திடீரெனத் தாய் அடித்ததும் ஒன்றுமே புரியவில்லை.

தாய் ராஜமும், அவளிடம் எதையும் கேட்காமலேயே பனை பெருக்குமாற்றை எடுத்து அடிக்கத் துவங்கியிருந்தார்.

எதிர்பாரா தருணத்தில் தாயிடமிருந்து, இடிபோல விழுந்த அடிகளைப் புரியாமல் வாங்கியவள், “எதுக்கு இப்ப என்னை அடிக்கிறீங்கன்னு சொல்லிட்டு அடிங்கம்மா.  எதுவுமே நான் பண்ணலையே? எதுக்கு மாட்டை அடிக்கற மாதிரி அடிக்கறீங்க” அடி வாங்கியதை கைகளால் தடுத்தபடியே அஞ்சனா கேட்டாள்.

இதுவரை அடித்திறாத தாய் முதன் முறையாக, அதுவும் பெருக்குமாறு கொண்டு அடிப்பதை அதிர்ச்சியோடும், புரியாமலும், அடிப்பதை விலக்கியபடியே கேட்டாள்.

அஞ்சனா தவறவிட்டிருந்த திறன்பேசி, அவளின் அப்பத்தா மூலம் தாயாரிடம் வந்திருந்தது.  அதை எப்படி திறப்பது என்று தெரியாமல், வீட்டினுள் நுழைந்த மூத்த மகன் வசம் சென்று ராஜம் கொடுத்து, “இது யாருவுட்டு. புதுசா இருக்கு”

“யாரும் வீட்டுக்கு வந்தாங்களாம்மா?” என்றபடியே, ஆராய்ச்சிப் பார்வையோடு அதனை திறக்க முயன்றான் மகன்.

லாக் போடப்பட்டிருந்த திறன்பேசியில் தெரிந்த படத்தைக் கண்டு, ஒரு கனம் ஸ்தம்பித்து நின்றிருந்தான் அஞ்சனாவின் தமையன்.

மகனது அதிர்ந்த நிலையைக் கண்டு, எட்டிப் பார்த்த ராஜம், அவரும் திறன்பேசியிலிருந்த படத்தைப் பார்த்து திகைப்போடு மகனைப் பார்த்தார்.

படத்தில், சஞ்சய்யின் நெஞ்சோடு ஒய்யாரமாக, இதழில் சிரிப்போடு, முகம் கொள்ளா மகிழ்ச்சி ததும்பச் சாய்ந்திருந்தாள் அஞ்சனா.

மகனது கையில் இருந்த திறன்பேசியில் மகளுடன் வேறொருவனைக் கண்டதுமே, “ஆத்தாடி.  எங்குடியக் கெடுக்க வந்த கோடாரியே” கத்தியிருந்தார் ராஜம். 

சேலைத் தலைப்பில் வாயைப் பொத்தியபடியே, கண்களில் நீர்மல்க திறன்பேசியை மகனிடம் வாங்கியவர், தனக்கு தெரிந்தவனா? யார் என்ன என்பதை அறிய முயன்று பார்த்தார்.

லாக்கில் இருந்த திறன்பேசியை, அதற்குமேல் திறக்க முயன்று தோற்றனர்.  ஆனால் லாக் ஸ்கீரினில் இருந்த படம் மகள் கூறாத செய்திகளை தெளிவாகக் கூறிட, அப்போதே வேலையாட்களை வீட்டிற்கு அனுப்பிவிட்டு, அஞ்சனாவிடம் விசாரிக்குமாறு மகன் தாயிடம் கூற, கொதித்துப்போன அவளின் தாய், தேடி வந்து மகளை அடித்ததோடு, திட்டித் தீர்த்தார்.

“எதுக்கு அடிக்கிறேன்னா கேக்கற?  ஒன்னையெல்லாம் படிக்க அனுப்பிச்சா, என்ன காரியம் பண்ணிட்டு வந்திருக்க?” பல்லைக் கடித்தபடியே ராஜம் மகளிடம் கேட்டார்.

“என்னம்மா பண்ணேன்?” புரியாமலேயே கேட்டாள் அஞ்சனா. 

மூன்று வருடங்களாக யாருக்கும் தெரியாமல் காத்த ரகசியம் இன்று அனைவரும் அறிந்து கொதித்ததை அறியாமல் கேட்டாள்.

தாயின் திட்டலில் ஆரம்பத்தில் புரியாமல் விழித்தவள், தான் தன்னை அறியாமல் ஏதோ தவறு செய்திருக்கிறோம் என உணர்ந்தபோதும், அது என்னவென்று தெரியாமல் தவித்தாள்.

அதேநேரம் அங்கு வந்த மூத்த சகோதரன், “இது என்னது?” என அவளின் திறன்பேசியைக் காட்டிக் கேட்க, நடக்கும் களேபரங்களுக்கான காரணம் அனைத்தும் இமை திறந்து மூடும் முன் புரிய வர, பேசாமல் அமைதி காத்தாள்.

கையில் வைத்திருந்த திறன்பேசியின் லாக் ஸ்கிரீனில் அஞ்சனா, சஞ்சய் இருவரும் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை அவளிடம் காட்ட, அவளுக்குமே அதிர்ச்சி.

“வாயைத் திறந்து சொல்லுடீ.  இது யாரு” ராஜம் மகளின் கூந்தலைப் பிடித்து ஆட்டியபடியே கேட்டார்.

“ஆஹ்” வலி பொறுக்க முடியாதவள், கத்தினாலும் வாயைத் திறக்க மறுத்தாள்.

“இப்ப சொல்லப் போறியா?  இல்லை அடிச்சே கொல்லவா?”

“கொல்லுங்க”

“என்ன திமிர் இருந்தா, எங்ககிட்டயே இப்டிப் பேசுவ?”

“கட்டிட்டு வாழப்போறது நான்.  எங்கிட்ட ஒரு வார்த்தை கேக்காம, கருகருனு காட்டான் மாதிரி இருக்கறவனுக்கு முடிவு பண்ணது உங்க தப்பு.  இன்னும் நீங்கள்லாம் எந்த காலத்தில இருக்கீங்க” என்றவளை சற்றும் யோசிக்காமல், தாயிடமிருந்து ஒரு கையைப் பிடித்து இழுத்து, இரு கன்னங்களிலும் மாறி, மாறி அறைந்தான் அவளின் மூத்த சகோதரன்.

இடையே வந்து தாய் அவனைத் தடுத்து, மகளை அவளோடு இழுத்தபடியே, “அவளைத் தொட்டு அடிச்சா, நமக்குத்தான்டா அசிங்கம்” என மகனை தள்ளி விட்டவர், “அந்த கேடுகெட்டவ, படிக்கப் போறேன்னு சொல்லிட்டுப் போயி, மாப்பிள்ளை பாத்திட்டு வந்திருக்கா” மகனிடம் கூறியவர், அஞ்சனாவை நோக்கிப் பேசத் துவங்கினார்.

“உன்னைப் படிக்கத்தான அனுப்பி வச்சேன். எங்க மூஞ்சிலலாம் கரிய பூசணும்னு எத்தனை நாளா காத்திட்டுருந்தடீ? எத்தனை திண்ணக்கமா பதில் பேசற?  இதுலாம் யாரு குடுத்த தைரியம்டீ.  தொலைச்சுருவேன் தொலைச்சு.  நாங்க சொல்றதைக் கேட்டுட்டு ஒழுங்கா இருந்தா உசிரோட இருப்ப.  இல்லை நடக்கறதே வேற” மிரட்டலாகக் கூறியபடியே தனது இரு கைகளாலும், அஞ்சனாவை மாற்றி மாற்றி அடித்தார்.

அடியை வாங்கிக் கொண்டு அப்படியே நின்றவளை, “காட்டானாம்ல காட்டான்.  இவ பெரிய சீமையில பிறந்த சீமாட்டி.  அந்த மாப்பிள்ளைக்கு என்னானு கேக்கறேன்.  வெள்ளைத்தோலுன்னு ஒன்னையே நீ ஒசத்திய நினைச்சிட்டு, ஒன்னுமில்லாமப் போயிறாதடீ” என மகளின் வாயிலேயே தனது கையைக் கொண்டு சப்பென அடித்தார்.

வலி தாளாமல் கதறியவளைக் கண்டு அங்கிருந்த யாரும் மனம் இளகவில்லை.

“ஒழுங்கா பாத்திருக்க மாப்பிள்ளைக்கு கழுத்த நீட்டிட்டு, பொண்ணா லட்சணமா, அவங்கூட ஒழுங்கா வாழற வழியப் பாரு.  இல்லை, உசிரோட செம்புச் சட்டியில வேக வச்சி, கொல்லையில புதச்சிருவேன்” அங்கிருந்து ஆவேசமாக அகன்றார் அஞ்சனாவின் தாய்.

“அதச் செய்யுங்க முதல்ல” திமிராய் அந்நேரத்திலும் பதில் கூறினாள் அஞ்சனா.

“வார்த்தைக்கு வார்த்தை என்னடீ பதில் பேசிட்டுருக்க?” என்று மீண்டும் வந்து வாயிலேயே இன்னும் இரண்டு அடி வைத்தார் ராஜம்.

அனைத்தையும் பார்த்துக் கொண்டிருந்த அப்பத்தா, “இந்த எழவுக்குத்தான ருதுவான உடனேயே எவனையாவது பாத்துக் கட்டிக் குடித்து, கடமையக் கழிங்கன்னேன்.  எம்பேச்சை யாரு கேட்டா?  இப்ப இந்தச் சிறுக்கி, எம்புட்டு வம்ச மானத்தையே காத்துல பறக்க விட்டுட்டாளே.  ஊருக்குள்ள விசயம் தெரிஞ்சா, இனி ஒரு பய நம்மளை மதிப்பானா?  நம்ம குலத்தை அசிங்கப்படுத்தன்னே வந்து புறந்திருக்காளே” அரற்றியபடியே அமர்ந்திருக்க, அஞ்சனா அவரை முறைத்துப் பார்த்தாள்.

கண்டிச் சிவந்து அவளின் நிறமே மாறிப் போயிருந்தது.  அதன்பின் அஞ்சனாவைப் பார்க்க யாரையும் அனுமதிக்கவில்லை.  அவளின் உடல்நலன் தேற, தனிப்பட்ட முறையில் மருத்துவச்சி ஒருவரை ஏற்பாடு செய்து தேற்றினர்.

உலகநாதன் வந்ததும், இன்னும் மகளுக்குப் பாதுகாப்பு கெடுபிடிகள் அதிகமானது.  ஊருக்குள் ஒரு ஈ, காக்காகூட அவர்கள் வைத்திருந்த அடியாட்களுக்குத் தெரியாமல் வர முடியாது எனும் நிலைக்கு காவல் அதிகரித்திருந்தது.

அதற்குமேல் அஞ்சனாவால் எதுவும் செய்ய முடியாமல், பெரியவர்கள், பெற்றோர்கள் நிச்சயித்த ஒரு நன்னாளில், விஜயரூபன் அஞ்சனாவின் கழுத்தில் தாலி கட்டி மனைவியாக்கியிருந்தான்.

மாவட்ட அதிகாரிகள் பலர் வந்திருக்க, ஆளுங்கட்சி தலைவர் ஒருவரின் முன்னிலையில் சீரும் சிறப்புமாய் திருமணம் இனிதே நடந்து முடிந்திருந்தது.

ஊரே வியந்து, அதிசயித்தது.

“அவனுக்கென்ன அவன் வீரன்.  அவந்தேன் அவளையும், அவ அழகையும் ஆழப் பிறந்திருக்கான்” பெருமை பேசிய விஜயனின் ஊர்மக்கள்.

“எதுக்கு இப்டி ஒரு மாப்பிள்ளைக்கு, இத்தனை பாதுகாப்பு கெடுபிடியோட, உலகநாதன் தன்னோட ஒரே பொண்ணை கட்டிக் குடுக்கறாரு.  எதுவும் பிரச்சனையோ” கேள்வியோடு உலகநாதனின் ஊர்மக்கள். 

அனைத்திற்கும் பதில் கூற அவர்கள் வாழத் துவங்க வேண்டுமே!

…………………………………………………..

நீண்ட நேரம் மதுரா தனது நிலையை எண்ணி வருந்தியபடியே அமர்ந்திருந்தாள்.  தான் பேசியது சற்று அதிகமோ என்று தோன்றினாலும், இனி அதைப்பற்றி எண்ண வேண்டாம் என அவளே அவளுக்குள் கூறிக் கொண்டு, இனி என்ன செய்யலாம் என யோசித்தாள்.

கணவன் வெளியே சென்றபிறகும் அவளது யோசனை ‘இந்நேரத்தில எங்க போறாரு’ என்ற அளவில் நின்றிருந்தது.

நீண்டநேரம் கழித்து பஞ்சவர்ணம் மதுராவை அழைத்து, “மதும்மா, தம்பி வெளிய போனவுக ஒரு மணித்தேரம் ஆகியும் இன்னும் வரலை.  வெளிக்கதவு பூட்டாமக் கிடக்கு.  நான் இங்க இருக்கவா.  இல்லை மேல போகட்டா”

நடப்பிற்கு வந்தவள், “நீங்க போயி படுங்கக்கா, அவுங்க இப்ப வந்திருவாங்க.  நான் கதவைப் பூட்டிக்கிறேன்” என்றாலும், கணவனுக்கு அழைப்பதா, வேண்டாமா என்கிற பட்டிமன்றம் மனதில் சென்றது.

அதன்பின் ஒரு முடிவாக, கணவனது எண்ணுக்கு அழைத்தாள் மதுரா.  நீண்ட நேரம் அழைப்பு சென்றது.  ஆனால் எடுக்கப்படவில்லை.

அதுவரை தனது நிலையை எண்ணி கழிவிரக்கத்தோடு இருந்தவள், விஜய்  அழைப்பை ஏற்காததை எண்ணி பயந்தாள். அதுவரை அவன்மீது இருந்த தனது இயலாமையினால் எழுந்த கோபம் சட்டென மாறி, உள்ளம் பதறியது.

‘என்னானு தெரியலையே.  ஏன் எடுக்க மாட்டிங்கறாரு’

விஜய் என்பவன் இனி தன் வாழ்வில் இல்லை என எண்ணும்போதே, அவளை பிணி பீடித்ததுபோல உள்ளம் நொந்தாள்.  அவன் இல்லாமல் இனி தன்னால் வாழ இயலாத நிலையை உணர்ந்தபோது, உலகமே தட்டாமாலை சுற்றியதுபோல இருந்தது.

அடுத்தடுத்து சற்று இடைவெளிவிட்டு அழைத்தாள்.  மூன்றாவது முறை அழைப்பை ஏற்றவன், “என்ன?” அவனது ஒற்றை வார்த்தை, அவனது மொத்த வருத்தங்களைத் தேக்கியிருந்தது.

“எங்க இருக்கீங்க?” அதில் அவளின் அவனது தேடல் உணர்ந்தான்.

“ஏன்?”

“வீட்டுக்கு வாங்க” கெஞ்சியது.

“…”

“உங்களைத்தாங்க. இப்ப எங்க இருக்கீங்க?” பதற்றத்தோடு கேட்டாள்.

“…”

“வாயத் திறந்து பேசுங்க.  ஏன் பேச மாட்டீங்கறீங்க?” அழுகையோடு கேட்டாள்.

“…” விஜய் எந்த பதிலும் இன்றி பேசாமல் இருப்பதைக் கண்டவளுக்கு, அழுகை பொங்கி வந்தது.  அழுகையோடு, “ஏங்க எங்கூட பேச மாட்டீங்கறீங்க?” மனைவி ஒரே விசயத்தை மாறி மாறி எப்படிக் கேட்டாலும் பதிலுரைக்காதவன், இரங்கிப் பேச முனைந்தான்.

“வரேன். வையி” வைத்துவிட்டான் மறுமுனையில்.

இந்த வாழ்வும் தனக்கு என்ன வைத்திருக்கிறதோ என்கிற இறுக்கத்தோடு வெகுதூரம் சென்றிருந்தவனுக்கு உயிர் விரயம் கூடியதாக உணர்ந்தான். அதேவேளையில் மதுரா தனக்கு அழைத்ததும், அவளின் தேடல் அவனை உயிர்பெற வைத்தது. 

முந்தைய வாழ்க்கையைப்போல இதுவும் தனக்கு ஏமாற்றத்தையும், வலியையும், அவமானங்களையும், அவமதிப்புகளையும் வைத்திருக்கிறதோ என அஞ்சி நெடுந்தூரம், தனது இரண்டு சக்கர வாகனத்தில் சென்று, மணல் பரப்பாய் இருந்த ஓரிடத்தில் வண்டியை நிறுத்திவிட்டு, மணலில் படுத்து, இரவு வானைப் பார்த்தபடியே நினைவுகளை பின்னோக்கியிருந்தான் விஜய்.

வலித்தது.  மது தன்னை விட்டுச் சென்றுவிட்டால் எனும் நினைப்பே அவனுக்குள் கசந்தது.  ஆனால், அவளை நிறுத்தி வைக்கும் வழி அறியாமல் தவித்தான்.

எங்கு தவறினோம் என்று யோசித்தான்.

புரிந்தாலும், முடிந்ததை சரி செய்ய முடியாமல் முடங்கிப் போனான்.

வாழ்க்கை சிலருக்கு நல்லதையும் கெட்டதையும், சிலருக்கு சோதனையையும், வேதனையையும், சிலருக்கு அமைதியையும், பேரின்பத்தையும் வாரிக் கொடுப்பதன் ரகசியம் என்னவோ என்பது புரியாமல், யோசனையில் ஆழ்ந்திருந்தான்.

அதேநேரம், மதுராவின் அழைப்பு! முதல் அழைப்பு கேட்கவில்லை.  அடுத்தடுத்து தொடர்ச்சியான அழைப்பில் ‘யாரது’ எனும் யோசனையோடு எடுத்துப் பார்த்தவனுக்குள், சந்தோசம்.  ஆனாலும், எதற்காக அழைக்கிறாளோ என அஞ்சியபடியே எடுத்தான்.

அவளின் பேச்சில், அவளின் தேடல் உணர்ந்தான்.

மதுராவின் தேடல், அவனுக்கு இதமாய் இருந்தது.

பெற்றோர், தமக்கை தவிர தன்னைத் தேடவும் புதிதாக ஒரு ஜீவன்.

அவளிடம் எப்படிப் பேச என்கிற தயக்கம்.  அதனால் அமைதி காத்தான்.  அவளின் தேடல் அவனுக்குள் உறுதியாக, இறுதியாக வருவதாய் பதிலைக் கூறினான்.

ஜீவ ஊற்று அவனுக்குள் ஜீவனை வாரி இறைத்திட, உத்வேகத்தோடு வீட்டை நோக்கிக் கிளம்பினான்.

அவனது வருகையை எதிர்பார்த்துக் காத்திருந்தவளுக்கு, ஒவ்வொரு நொடியும் ஒரு யுகமாய்.

அத்தனை தெய்வங்களையும் பிராத்தனை செய்தாள்.

‘கடவுளே, எம்புருசன் நல்லபடியா சீக்கிரமா வீட்டுக்கு வந்திரணும்.  எந்தக் கஷ்டத்தையும் எங்களுக்குக் குடுத்திராத’ வேண்டுதல் நீடித்தது.

ஒன்னேகால் மணி நேரப் பயணத்திற்குப்பின் வீட்டை அடைந்தபோது, அவனுக்காக ஒரு ஜீவன் உறங்காமல் வாயிலில் விழி வைத்தபடியே காத்திருந்தது, அவனுக்குள் சிலிர்ப்பை உண்டு செய்தது.

அவளின் காத்திருப்பு, அவனது ஆழ்மனதை அசைத்தது.

விஜய்யின் வண்டிச் சத்தத்தைக் கேட்டதுமே, ஓடி வந்து கேட்டைத் திறந்தாள் மதுரா.

மதுராவின் ஓய்ந்துபோன தோற்றம் அவனால் என எண்ணியதும், மனம் வெம்பியது.

வண்டியை உரிய இடத்தில் நிறுத்திவிட்டு, விஜய் வீட்டு வாயிலருகே வருவதற்கும், அதற்குள் சுற்றுச்சுவர் கதவைச் சாத்திவிட்டு வந்தவள், கணவனையே ஏக்கத்தோடு பார்த்தபடியே வீட்டு வாயில் கதவை நோக்கி வந்தாள்.

அவளின் அவனுக்கான ஏக்கத்தை, அவளின் தனக்கான வேண்டுதலை அவனது உள்ளம் உணர்ந்ததோ!

யாருமில்லா இரவு வேளையில், இரவும், வானத்து நட்சத்திரங்களும் சாட்சியாக இருக்க, எதிர்பார்ப்போடு மதுராவை நோக்கி இரு கைகளையும் தன்னிடம் வாவென நீட்டினான்.

அதுவரை பயத்தோடும், கணவன் தனக்கு பூரண சொந்தமா, எத்தனை சதவீதம் அவன் மீதான உரிமை தனக்கு எனும் குழப்பத்தோடும், இனி தனது எதிர்காலம் எப்படியோ எனும் பதற்றத்தோடும், குழப்பங்கள் பல தனக்குள் விளைவித்துச் சென்றவன் எங்கு போனானோ? எப்போது வருவான்? எனும் ஏக்கத்தோடும், அவன் எந்தக் குறையுமின்றி வந்துவிட வேண்டும் என்கிற பிரார்த்தனையோடும் காத்திருந்தவள், கணவனைக் கண்டபிறகே சற்று நிம்மதியாக மூச்சு விட்டாள்.

தான் பேசிய பேச்சிற்கு, தன்னை எப்படி நடத்துவானோ என்கிற பயமும் ஒரு ஓரத்தில் இருக்க ஒதுங்கியே நின்றிருந்தாள். ஆனால், கணவனின் எதிர்பாரா செயலில், செந்தாமரையானது மதுவின் முகம்.  கைகளை தன்னை நோக்கி நீட்டியவாறு நின்றவனை நோக்கி, சற்றும் தாமதிக்காது, ஓடிச் சென்று தஞ்சமடைந்திருந்தாள்.  தன்னவன் மார்பில் முகம் புதைத்து, இருகைகளாலும் அவனைக் கட்டிக் கொண்டு, சந்தோசத்தில் விசும்பத் துவங்கியிருந்தாள்.

விசும்பல், அழுகையாக மாறியது. வேண்டுதலை நிறைவேற்றிய இறைவனுக்கு நன்றியை மனதோடு கூறிக் கொண்டவள், அவனது கரங்களுக்குள் தானிருப்பதை எண்ணி மகிழ்ந்தாலும், இழந்த ஒன்று கிடைத்த, மகிழ்ச்சியில் உண்டாகும் ஆனந்தக் கண்ணீராக அது மாறியது.

அழுதவளின் முதுகைத் தட்டிக் கொடுத்தவாறே சமாதானம் செய்தவன், வாயில் கதவை அடைத்துவிட்டு, தங்களின் அறைக்குள் அழைத்துச் சென்றான்.

அடைமழைபோல அடைஅழுகை அழுதாள் மதுரா.

அதில் அவள்  தன்னவனைப் பேசிய அதீத பேச்சுகளினால் விளைந்த அவன் மனவருத்தத்தைக் கரைத்தாள்.  தனது பயத்தைப் போக்க முயன்றாள்.

ஓரளவு அழுகை குறைந்தபோதும், நின்றபாடில்லை.

விஜய்யை விட்டு விலகவும் இல்லை.  அவன் விலக்கவும் இல்லை.

பத்து நிமிடம் பொறுத்திருந்தவன், “இதுக்குத்தான் வீட்டுக்கு வரச் சொன்னியா மது?”

சட்டென அழுகையை நிறுத்திவிட்டு, கணவனைப் பார்த்தவள், “எல்லாருக்குமே, அவங்க புருசன் தனக்கு மட்டுமே உரிமையா, சொந்தமா, எல்லாமுமா அவளுக்கு மட்டுமே இருக்கணும்னு நினைக்கற மாதிரித்தான நானும் நினைச்சிட்டு இருந்தேன்.  திடீர்னு இப்டிச் சொன்னா எப்டி ஏத்துக்க முடியும்” மீண்டும் விட்ட அழுகையைத் தொடர்ந்தவாறே, தன் பக்க நியாயத்தைக் கேட்டாள்.

“எப்பவும் நான் உனக்கு மட்டுந்தான் மது” மெல்லிய குரலில், அவளின் தலையோடு தனது தலையை செல்லமாக முட்டியவாறு கூறினான்.

“இல்லை.  நீங்க சும்மா என்னை சமாதானப்படுத்தச் சொல்றீங்க” முகத்தைத் திருப்பிக் கொண்டாள்.

“இப்டித் நீ திருப்பிக்கறதுக்கு நான் அங்க வெறுந்தரையிலேயே படுத்திருந்திருப்பேன்ல”

அப்போதுதான் அவன் எங்கு சென்றான் என்பதைக் கேட்கத் தோன்ற, “எங்க போனீங்க?”

தான் தனது வண்டிபோன போக்கில் நெடுந்தூரம் போனதையும், அதன்பின் தான் செய்ததையும் கூறினான்.

பயந்துபோய் விசாரித்தவளிடம், அவள் பயம் போக்கினான்.

பிறகு, “இனி என்ன செய்யலாம்னு சொல்லு, அதுமாதிரியே பண்ணிக்கலாம் மது”

“எனக்குப் பயமா இருக்கு!”

“எதுக்கு?”

“எங்க அம்மா, அப்பாவுக்கு பின்னாடி, உங்களைத்தான் எனக்கே எனக்குன்னு கடவுள் குடுத்த உறவா நினைச்சிட்டுருந்தேன்”

“…”

“ஆனா..” என்றதுமே அழுகை முட்டிக் கொண்டு வர மீண்டும் அழத் துவங்கினாள் மதுரா.

அவளின் கையை ஆதரவாகப் பற்றி, தனது வலக்கையில் அவளது கையை வைத்து அதன்மேல் இடக்கையை கொண்டு பாதுகாப்பாய் பொத்தி வைத்தவாறு, “என் ஆயுள் உள்ளவரை நான் உனக்கு மட்டுந்தான் சொந்தம் மது!”

“ஆனாலும்..” இழுத்தபடியே அழுதாள்.

“என்ன ஆனாலும்…”

எதுவும் பதில் கூற முடியாமல் அழுதாள். 

“நாளைக்கு பேசிக்கலாம். இன்னும் இப்படியே அழுதுட்டு இருக்காம கொஞ்ச நேரம் தூங்கு மது.  தலைவலின்னு சொன்ன?  அது எப்டி இருக்கு?”

கணவனது கேள்வியில் மனம் குளுமையை உணர்ந்தாலும், அவனை யாரும் உரிமை கொண்டாடிக் கொண்டு வந்துவிட்டால் எனும் பயம் விலகாது இருந்தது.  ஆனாலும் கணவனது கேள்விக்குப் பதில் கூறினாள்.

“அது உங்களைப் பாத்ததுமே போயிருச்சு” சிரிக்க முயன்றபடியே கூறினாள்.

“நேரமாகுது.  வா தூங்கலாம்” மதுராவை தன் கைவளைவில் வைத்தபடியே, தட்டிக் கொடுக்க, அன்றைய அசதி ஒருபுறம், கணவனது அருகாமை தந்த சுகம் மறுபுறம் என உறங்கத் துவங்கினாள் மது.

அவள் உறங்கினாலும், விஜய்யால் உறங்க முடியவில்லை.  மதுராவின் மனவருத்தம் எத்தகையது என்பதை அவனால் முற்றிலுமாகப் பெண்ணது நிலையில் இருந்து புரிந்து கொள்ள முடியவில்லை. ஆனால் அவள் தன்னை வெறுக்கவில்லை என்பது புரிந்தது.  தன்னைத் தேடுகிறாள் என்பதும் புரிந்தது.

விஜய் திரும்பிப் படுக்க முடியாதபடி, அவனது மேலாடையை இறுகப் பற்றியபடி உறங்கியவளின் பயத்தை சிறு குழந்தையின் பயமாக உணர்ந்து கொண்டவனுக்கு, வருத்தமாக உணர்ந்தான்.

ஆதரவற்ற நிலையில் வளர்ந்தவளாதலால், தனது ஆதரவும் இல்லாமல் போய்விடுமோ எனப் பயப்படுகிறாளோ எனத் தோன்ற, தனக்கு அசௌகரியமாக உணர்ந்தாலும், அதேநிலையில் உறங்க முயன்றான்.

அவரவர் நிலையில், அருகருகே ஒருவரின் ஆதரவை நாடிய உள்ளங்கள், இணையும் நாளும் விரைந்திடுமோ?

………………………………………………………