மது பிரியன் 11
மது பிரியன் 11
மது பிரியன் 11
அஞ்சனாவின் தந்தை, மகளைத் திருமணம் செய்து கொடுத்தது முதலே மருமகனிடம் தான் எதிர்பார்த்த காரியத்தை எண்ணி, அவ்வப்போது பேசியபோதும், விஜய் பிடிகொடுக்காமல் போயிருந்தான்.
ஒரு நிலைக்குமேல் விஜய்யை வற்புறுத்தவும் முடியாமல், தான் எதிர்பார்த்துச் செய்த அனைத்தும், தவிடுபொடியானதை எண்ணித் தவித்துத்தான் போயிருந்தார் உலகநாதன் ஆரம்பத்தில்.
உலகநாதனுக்கு, பிடி கொடுக்காமல் போன மருமகனை எண்ணி, வருத்தம் இருந்தபோதும், மகளை நினைத்து அதற்குமேல் வற்புறுத்தாமல், விஜய்யின் போக்கில் விட்டுப் பிடிக்கும் எண்ணத்தோடு, பொறுமையோடு காத்திருந்தார்.
***
விஜய் சம்பவம் நடந்த அன்று அஞ்சனாவை அடித்துத் துன்புறுத்தியதும், “உனக்குல்லாம் விஜய்யிங்கற பேரு ஒரு கேடா. வில்லன் மாதிரி, மூஞ்சியும், முகரையையும் வச்சிக்கிட்டு, பேரைப் பாரு விஜயரூபனாம்.
கரிமேட்டுக் கருவாயன்னு வில்லன் பேரை வைக்காம, விஜய்யினு வச்சு, அந்தப் பேருல இருக்கறவங்களை எல்லாம் அசிங்கப்படுத்திட்டாய்ங்க உங்க வீட்ல” என தனது கோபத்தைக் காட்ட எண்ணி, வாயில் வந்ததையெல்லாம் விஜய்யை நோக்கி அஞ்சனா பேசியிருந்தாள்.
போதை மயக்கத்தோடு, அவளின் சீண்டல் பேச்சு வேறு விஜய்யிக்கு, முன்பைக் காட்டிலும் அதீத கோபத்தை உண்டாக்கிட, வெறியோடு, அங்கு கிடந்த அனைத்தையும் எடுத்து, அஞ்சனாவின் மீது விட்டெறிந்திருந்தான்.
“ஒழுங்கா ஒன்னும் செய்யத் துப்பில்லாவதவனுக்கு, குடி ஒரு கேடா உனக்கு. உன்னையெல்லாம் போலீஸ்ல புடிச்சுக் குடுத்து, என்னை கொடுமைப்படுத்தனதுக்கு, உண்டு இல்லைனு பண்ணலைனா, எம்பேரு அஞ்சனா இல்லைடா” வெகுண்டுபோய் கத்தினாள் அஞ்சனா.
“போடீ போக்கத்த நாயே. வந்துட்டா என்னைப் பேச. உன்னை மாதிரி கேவலமான தே.. பிறவிய, வெத்தலை பாக்கு வச்சு, நடு வீட்ல மரியாதையோட உக்காற வச்சதே எந்தப்பு.
இதுல, என்னைப் பேச உனக்கு என்ன அருகதைடீ இருக்கு. பத்தினி மாதிரி பேசிகிட்டு இருந்தே, பல்லையெல்லாம் தட்டிக் கையில குடுத்துருவேன்.
அங்க போயி என்னடீ சொல்லுவ நாயே. கட்டுனவன் கல்லுக்குண்டாட்டம் இருக்கும்போது, வேற ஒருத்தனோட ஊரு சுத்துனேன்னு சொல்லுவியாடீ.
போயிச் சொல்லு. எல்லாப் பயலும் சேந்து உன்னை சீரழிச்சி, கண்ணுக்குக் காணாம, காட்டுக்குள்ள தூக்கி விட்டெறியட்டும். அப்பத்தான் உன்னை மாதிரி தே..ளுக்கெல்லாம் புத்தி வரும்” என விஜய்யும், போதையுடன் வாயிக்கு வந்த வார்த்தைகளை, வரன்முறை தெரியாமல் பேசியதோடு, எட்ட நின்றவளை ஓங்கி அறை விட்டிருந்தான்.
அடித்த அடியில் வாயிலிருந்து ரத்தம் பீறிட்டு வர, கத்திக் கூப்பாடு போட்டாள் அஞ்சனா. விஜய்யோ, “மூச்சு விடக்கூடாது. சத்தமில்லாம, கிளம்பி உங்கொப்பன் வீட்டுக்கு போற வழியப் பாரு” என மீண்டும் அடிக்க வந்திருந்தான்.
வலி தாங்காமல், விஜய்யை வாயிக்கு வந்த வார்த்தைகளைக் கூறி, மீண்டும் கேவலமாகப் பேசினாள் அஞ்சனா. தனது வீட்டில் இருந்தபடியே தன்னைக் கேவலமாகப் பேசுபவளை அடிக்க எண்ணி வர, வலி தாங்க முடியாமல் ஓடினாள் அஞ்சனா.
ஆனால் அப்படியே விடும் நிலையில் விஜய்யின் நிலையில்லாமல் அவளின் வார்த்தையில் மூர்க்கனாக மாறியிருந்தவன், எட்டி அவளின் நீண்ட கூந்தலைப் பிடித்திருந்தான்.
ஓடியவளின் கூந்தல் விஜய்யின் கையில் இருக்க, அத்தோடு வலியோடு நின்றிருந்தாள். “டேய் எம்முடிய விடுடா. என்னால வலி தாங்க முடியலை” எனத் கத்திக் கதற, அதற்குமேல் விஜய்யிக்கு தனது செயலின் வீரியம் புரிந்து அஞ்சனாவின் முடியை விட்டிருந்தான்.
ஆனால் விட்டதும் அஞ்சனா வாயைத் திறந்து, “இன்னொருவாட்டி எம்மேல உங்கையி பட்டுச்சுன்னா, இனி நடக்கிறதே வேற” எனக் கத்தினாள்.
“ச்சீய் நாயே. உன்னைத் தொட்டாலே எனக்குப் பாவந்தான் சேரும். நான் வெளிய போயிட்டு வரதுக்குள்ள, இங்க இருந்து ஒரேடியாப் போயிரு. இல்லை. அவ்ளோதான்” என்றபடியே, வெளியில் சென்றுவிட்டிருந்தான் விஜய்.
அத்தோடு வெளியில் சென்றவன்தான். இரண்டு நாள்கள் கழித்தே வீட்டுப் பக்கம் வந்தான். ஆனால், வீட்டில் யாரும் இருப்பதற்கான அறிகுறியே இல்லாமல், வீடு திறந்து கிடந்தது.
இரண்டு தினங்களுக்கு முன் நடந்தது அனைத்தும் கனவுபோல இருந்தது விஜய்யிக்கு. நீண்ட நேரம் அமைதியாக அமர்ந்திருந்தவனைக் காண, அக்கம் பக்கம் இருப்பவர்கள் வந்து சென்றனர்.
வீட்டில் இருந்த சொற்ப பணம், அத்தோடு அவளுக்குப் போட்ட அனைத்து நகைகள் மற்றும், ஆடைகளை எடுத்துக் கொண்டு சென்றிருந்தாள் அஞ்சனா.
விஜய்யைப் பொருத்தவரையில் அவளிடம் என்ன இருந்தது, தற்போது என்ன வீட்டில் இல்லை என எதுவும் தெரியாமல் இருந்தான்.
அருகே குடியிருந்த ஒவ்வொருவரும், அஞ்சனாவின் வெளியேற்றத்தை எண்ணி வருந்தாமல், “விட்டது பீடைன்னு போயி, தலைய முழுகு தம்பி” என நேரில் அவனிடம் பேசிவிட்டு அகன்றார்கள்.
தங்களுக்குள், “இவன் ஒன்னுக்கும் உதவாதவனா இருந்திருப்பான்போல. ஆளு மட்டும் வாட்டசாட்டமா இருந்தா ஆச்சா. வந்த பொம்பளைய வசதியா இல்லைனாலும், வச்சு வாழ கெதியில்லாவனா இருந்திருப்பான்போல.
அவளும் எவ்ளோ நாளு பொறுத்துப் பாப்பா. ஒருத்தன் கிடைக்கற வர ஒழுங்கா இருந்தவ, கிடைச்சதும் அவங்கூட, ஊறு மே.. சா. இப்போ, திண்ணக்கமா இவன் எதுக்கும் லாயக்குப் படமாட்டான்னு வெளியேறியிட்டா” என்பதுபோல பேசிக் கொண்டனர்.
அனைத்தையும் கேட்டவனுக்கு, இன்னும் திடமில்லாமல் தடுமாறினான் விஜய். அத்தோடு, தனக்கு அழைத்த சகோதரியிடம், அஞ்சனா சென்றதைக் கூற, பாரியும், அவளது கணவனும் உடனே கிளம்பி காரைக்குடி வந்து, நேரில் விஜய் மூலம் உண்மைச் செய்தி அறிந்து கொண்டனர்.
அத்தோடு, தங்களது வீட்டார், மற்றும் அஞ்சனாவின் வீட்டாருக்கு விசயத்தைத் தெரிவித்தனர். பாரியின் கணவர், அஞ்சனாவைக் காணவில்லை என விஜய்யை அழைத்துச் சென்று காவல்துறையில் புகார் கொடுக்கச் செய்திருந்தார்.
திடீரென்று மகள், வீட்டை விட்டு எங்கு சென்றாள் என்பது தெரியவில்லை எனும் செய்தி, பாரிஜாதம் மூலம் கிடைத்ததும், தங்களின் முக்கிய உறவினர்களோடு கிளம்பி காரைக்குடிக்கு வந்திருந்தனர் அஞ்சனாவின் குடும்பத்தினர்.
அஞ்சனாவின் வீட்டிலிருந்து வந்தவர்கள், அஞ்சனா இதுவரை பதிவிரதையாக இருந்ததுபோல பேசிவிட்டு, “உங்க பையன் இப்படி நல்லாத்தானே இருக்கான். அவன் எம்பொண்ணை நல்லா வச்சுப் பாத்துக்குவான்னுதான நம்பிக் கட்டிக் குடுத்தோம். இப்படி எங்க குடும்பத்து மானத்தையே கப்பலேத்தி, கரையேற முடியாதளவுக்கு களங்கத்தை ஏற்படுத்திட்டாரே உங்க பையன்” என பூரண சந்திரனிடம் பேச,
துவண்டு போய் அமர்ந்திருந்தார் பெரியவர். அவரால், எது உண்மை எது தவறு எனக் கணிக்க முடியாமல், கலங்கிப் போய் அமர்ந்திருந்தார். எது எப்படி ஆனாலும் போன மானம், மரியாதை போனதுதான்.
அத்தோடு, இந்த வயதிலேயே வாழ்வை இழந்து நின்ற மகனைக் கண்டு, கதிகலங்கிப் போயிருந்தார் மனிதர். இனி என்ன செய்து மகன் இச்சமுதாயத்தில் தலைநிமிர்வது எனக் கலங்கிப் போய் இருந்தார். அதேநிலையில்தான் இசக்கியும் இருந்தார்.
மகளைப் பற்றி முன்பே அறிந்திருந்தாலும், அதனைப் பற்றி மூச்சு விடாமல், விஜய்யை, அவனது ஆளுமைத் திறனை அசிங்கப்படுத்திக் கூறியதோடு, அவனால்தான் மகள் ஏதோ துன்பத்திற்கு ஆட்பட்டு, அவனால் கொல்லவோ, அல்லது மறைவாகவோ ஒளித்து வைக்கப்பட்டிருக்கிறாள் என ஆரம்பத்தில் சாதித்தனர், அஞ்சனாவின் வீட்டார்.
இரு குடும்பங்களுக்கிடையே வாக்குவாதம் தடித்தது. ஒருவருக்கொருவர் பழிபோட்டு, இருகுடும்பமும், முடிவுக்கு வருவதற்குள், காவல்துறையும் அவர்களிடம் மட்டுமன்றி, சுற்றத்திலும், விஜய்யின் அலுவலகத்திலும் அவனைப் பற்றி விசாரணையைத் தொடர்ந்தது.
விஜய் அனைத்தையும் மறைக்காமல் கூறினான். அவனது அலுவலகத்தில் பணிபுரியும் பலரும், அஞ்சனா ஒரு புதியவனோடு சேர்ந்து ஊர் சுற்றியது பற்றிக் கூறினர்.
இரு ஊர் தலைவர்கள் முன்னிலையில் அனைத்தும் பகிரப்பட்டிருக்க, ஒருவாறு அஞ்சனாவின் தவறுதான் என முடிவுக்கு வந்த விஜய்யின் ஊர் மக்கள், “இப்டி ஏமாத்திக் கட்டிக் குடுத்து, ஒரு நல்ல மனுசனோட வாழ்க்கையையே நாசமாக்கிட்டீங்களே” என ஒருங்கே சேர்ந்து உலகநாதனிடம் நியாயம் கேட்டனர்.
அதற்குமேல் சுற்றியிருந்த மக்களும் அதையே கூற, உலகநாதனால் எதுவும் மகளுக்காகப் பேச முடியவில்லை. அத்தோடு, அவரும் அவரது ஊர் மக்களும் அமைதி காத்தனர்.
இரு ஊர் பொது மக்களும் அங்கிருந்தமையால், “போனவ போயி என்னமோ செஞ்சிட்டுப் போகட்டும். இப்போ இந்தக் பையனுக்கு ஒரு நியாயத்தைச் சொல்லிட்டுப் போங்க” என பாரியின் கணவர் பாயிண்டிற்கு வர,
இந்தத் திருமணம் இனி செல்லாது என ஊர் மக்களைக் கொண்டு பேசி முடிவு செய்ததோடு, திருமணம் செய்து அழைத்து வந்தவளை ஒழுங்காக வாழ வைக்காமல், கொடுமை செய்து வெளியில் அனுப்பிவிட்டதால், நஷ்ட ஈடாக பணம் தருமாறு கேட்டவர்களிடம், “உங்க வீட்டுப் புள்ளைய யாருங் கொடுமையெல்லாம் பண்ணலை. அவளா வேற ஒருத்தங்கூட வாழறேன்னு போன மாதிரித்தான் இங்க நடந்த விசயங்களை வச்சிப் பாக்கும்போது தெரியுது.
அதனால, விஜய்யுக்கும், இனி உங்க மகளுக்கும் எந்த வித ஒட்டும் ஒறவும் இல்லைங்கறதால, இங்க கிடக்கிற, நீங்க குடுத்த எல்லாப் பொருளையும் எடுத்துக்கிட்டு பேசாம நடையைக் கட்டுங்க” எனப் பேசி முடித்திருந்தனர்.
அக்கம் பக்கம் விசாரித்தபோது, விஜய்யிக்கு பெரும்பாலும் ஆதரவாகவும், அஞ்சனாவிற்கு ஆதரவில்லாத பேச்சுக்களுமே எழுந்தது. அஞ்சனாவின் செயல்பாடுகளைப் பற்றி, அனைவரிடமும் காவல்துறை விசாரித்து ஒரு முடிவுக்கு வந்திருந்தது.
அதன்படி, “தேடிக்கிட்டு இருக்கோம். அப்டி அந்தப் பொண்ணு கிடைச்சா, உங்களுக்கு தகவல் சொல்றோம்” என பெற்றவர்களிடம் பெண்ணைப் பற்றிக் கூற முனைய
அவர்களோ, “இனி அவளுக்கும் எங்களுக்கம் எந்தச் சம்பந்தமும் இல்லை. ஆகையினால, எந்த ருது கெடைச்சாலும், இனி அவளை எங்க வீட்டு வாசல்ல ஏத்தறதா நாங்க இல்லை. இத்தோட நாங்க அவளை குடி முழுகறோம்” எனக் கிளம்பியிருந்தனர்.
இறுதியாக, இனி வந்தாலும் அவளைத் தாங்கள் ஏற்றுக்கொள்ள மாட்டோம். எங்கு கண்டாலும், அவளை வெட்டிக் கூறுபோடுவோம் என தங்களது நிலையில் இருந்து இறங்காமல், அஞ்சனாவின் வீட்டார் தங்களுக்குள் பேசியபடி அங்கிருந்து அகன்றிருந்தனர்.
õõõõõ
மதுராவிற்கு, சமீபமாய் கணவனது நடவடிக்கையில் மாற்றம் தெரிந்தது. எப்போதும் தன்னைச் சுற்றி வந்தவன், ஏதோ சிந்தனை வயப்பட்டு இருப்பதும், தான் என்ன விசயம் என்று கேட்டாலும், சமாளிப்பதுமாய் இருந்தது சங்கடத்தைத் தந்தது.
படுக்கையில் தானாகச் சென்று அவனது அருகாமையில் உறங்கினாலும், தன்னைப் பொருட்படுத்தாது இருந்தவன் புதிதாகக் தெரிந்தான் மதுராவிற்கு.
உறக்கத்தின் இடையே எழும்போதும், உறங்காமல், உறக்கம் வராமல் புரண்டவனைக் கண்டு, “என்னங்க தூக்கம் வரலையா?” என்றால்,
“ஆமா மது. நீ தூங்கு” என அவளிடமிருந்து, எண்ணத்தை வேறு திசையில் திருப்பிக் கொண்டவனை, ஆச்சர்யமாக உணர்ந்தாள் மதுரா.
இதுபோன்ற சந்தர்ப்பங்களில் எல்லாம், “தூக்கம் வரலையா மது” என தன்னோடு ஆர்வமாக மனைவியை இழுத்தணைத்துக் கொள்பவன், அந்நேரமே தன்னை சல்லாபத்திற்கு நெருங்கிய தருணங்களை எண்ணிப் பார்த்தாள் மது.
விஜய் உணராமலேயே, அவனைக் கழுகாக கண்காணித்துக் கொண்டிருந்தாள் மது. “இப்டி இருக்க மாட்டாங்களே. இப்ப என்னாச்சு திடீர்னு” என அவ்வப்போது வாய்விட்டுப் புலம்பவே துவங்கியிருந்தாள் மதுரா.
ஒரு முறை பஞ்சவர்ணமும், “மதும்மா, தம்பிக்கு என்ன பிரச்சனை. ஏன் எப்பவுமே ஏதோ யோசனையிலேயே இருக்கு. என்ன ஏதுன்னு கேளும்மா” என்றிருந்தார் என்றால், விஜய் எப்படி நடந்து கொண்டிருப்பான் என்பது புரிந்திருக்கும்.
காலையில் பணிக்குக் கிளம்புபவன், மதுராவின் வருகைக்காகக் காத்திருந்து, அச்சாரத்தைப் பெற்றுக்கொண்டே, அலுவலகம் செல்வது என்னும் சமீபத்திய வழக்கு, மறந்துபோய், சிந்தனை வயப்பட்ட நிலையிலேயே நடந்து கொண்டான் விஜய்.
ஆனால், விஜய்யை தானாகவே நிறுத்தி வைத்து, அவன் கேளாமலேயே, அச்சாரத்தைக் கொடுத்த பின்பு, அலுவலகம் அனுப்பி வைத்தவளை, அவளின் செயலை உள்வாங்கும் நிலையில் விஜய், தற்சமயம் இல்லையென்பதைக் கண்கூடாகக் கண்டவள், பீதியாகியிருந்தாள்.
வீட்டிற்கு, அதன்பின் யாரும் விஜய்யைத் தேடி வந்திருக்கவில்லை. ஆனால், அலுவலகம் சென்று வழமைபோல வந்து, தன்னிடம் வம்பு வளர்ப்பதும், வெளியே அழைத்துச் செல்வதுமாக இருந்தவன், நேரமில்லை என்று கூறி தவிர்ப்பதாகத் தோன்றியது மதுராவிற்கு.
பதினைந்து தினங்களாகவே, நாளுக்கு நாள் ஒதுங்கியவனை, அன்று இரவில் “என்னங்க, நானும் பத்து, பதினைஞ்சு நாளாவே உங்களைப் பாத்திட்டே இருக்கேன். என்ன பிரச்சனை?” என்றிருந்தாள் மதுரா.
காதில் விழாதளவிற்கு, சிந்தனை வேறொங்கோ இருந்தது விஜய்யிக்கு. அதனால் மனைவியின் பேச்சை உள்வாங்காமல் இருந்தான். ஆனால் மதுரா, “ஏங்க உங்களைத்தான்” என பிடித்து உலுக்கி, நிகழ்விற்கு கொண்டு வந்தாள்.
‘என்ன’ என்பதுபோல திருதிருவெனத் தன்னைப் பார்த்த கணவனிடம், “ஏங்க, என்னாச்சி. பித்துப் புடிச்ச மாதிரி ஏதோ நினைப்புல, கூப்பிடறதுகூடக் காதுல விழுகாம உக்காந்திருக்கீங்க. என்னானு சொன்னாத்தானே தெரியும்” என்றிட
“ஆபிஸ்ல கொஞ்சம் அதிகப்படியான வேலை. அதான்” என சமாளித்தான் விஜய்.
“சமாளிக்க எதாவது சொல்லி, இப்ப மறைச்சுட்டு, பின்னாடி எதாவது பெருசா வந்தா, அப்போ ஒன்னும் பண்ண முடியாது. அதனால, சின்ன விசயமா இருக்கும்போதே, உங்க சீனியர் ஆஃபிசர்கிட்ட, இந்த விசயத்தைக் கொண்டு போயிட்டா, பிரச்சனை பெருசாகாமத் தடுத்திரலாம்ல” என கணவனது சொல்லை உண்மையென எண்ணிப் பேசியிருந்தாள் மதுரா.
மனைவியின் பேச்சைக் கேட்டவனுக்கோ, அலவலகம் செல்லும் வழியில் பன்னிரெண்டு நாள்களுக்கு முன் தனது வாகனத்தை இடைமறித்துச் சந்தித்தவரையும், அவரின் பேச்சையும் அசைபோட்டான்.
“நான் சென்னையில இருந்து இங்க கோயில் கும்பாபிசேகத்துக்கு வந்திருக்கேன். என்னை உங்களுக்குத் தெரிய வாய்ப்பில்ல. ஆனா உங்களைப் பத்தி, அஞ்சு சொல்லிக் கேட்டதை வச்சித்தான், உங்களைத் தேடி வீட்டுக்கு வந்தேன்” புதிய பெண்மணி.
அஞ்சு எனும் பெயரைக் கேட்டதும், ஆவேசமாகக் கோபம் எழ, “யாரையும் எனக்கு நீங்க சொல்ற பேருல தெரியாது. நீங்க என்னைத் தப்பா நினைச்சு, பேசிட்டு இருக்கீங்க” என்று அப்பெண்மணிக்கு பதில் கூறியவன், சட்டென தனது வாகனத்தில் அங்கிருந்து அகன்றிருந்தான் விஜய்.
இரண்டு நாள்கள் கழித்து, தனது அலுவலகத்தின் அருகே இருந்த டீக்கடையில் டீ அருந்த வந்தவனிடம், “சார்” என்றழைப்பில் திரும்ப, அதிர்ச்சியாகிப் போனான்.
இரண்டு தினங்களுக்கு முன், வழியில் தன்னைச் சந்தித்த அதே பெண்மணி. “சாரி நான் சொல்றதைக் காது குடுத்துக் கேளுங்க சார்” எனக் கெஞ்சியது அந்தப் பெண்மணி.
அலுவலகப் பணியில் இருந்த பலரும், ஆங்காங்கே நின்றபடி தன்னையே கவனிப்பதை உணர்ந்தான் விஜய். ஆகையினால், “உனக்குப் பணம் எதுவும் வேணுனா சொல்லு, தரேன். அதவிட்டுட்டு, யாருக்காகவோ வந்து எங்கிட்ட பேசாதே” என கையில் இருந்த பிளாஸ்டிக் கோப்பையில் இருந்த டீயை, அருந்தாமல் அப்படியே குப்பைத் தொட்டியில் விட்டெறிந்துவிட்டு, அந்தப் பெண்ணின் பதிலுக்குக் காத்திராமல் அங்கிருந்து அலுவலகம் நோக்கி அகன்றான் விஜய்.
***