சில்லென்ற தீப்பொறி – 5
சில்லென்ற தீப்பொறி – 5
ஊருங் கலிமா உரனுடைமை முன்இனிதே
தார்புனை மன்னர் தமக்குற்ற வெஞ்சமத்துக்
கார்வரை யானைக் கதங்காண்டல் முன்இனிதே
ஆர்வ முடையவர் ஆற்றவும் நல்லவை
பேதுறார் கேட்டல் இனிது.
சில்லென்ற தீப்பொறி – 5
தோழி சுரபியுடன் வீட்டிற்கு வந்த நேரத்தில் இருந்து தனக்கு திருமணம் வேண்டாம் என்ற போராட்டத்தில் மகள் இறங்கி இருக்க, தந்தை சமாதானப்படுத்திக் கொண்டிருந்தார்.
“அப்பா சொல்றத கேளு பாப்பா, ஒரு தடவ மாப்பிள்ளை போட்டோவ பாரு டா! அப்புறம் புடிக்கலன்னு சொல்லு, நாங்க ஒத்துக்கறோம். பத்துநாள்ல கல்யாணத்தை வச்சிக்கிட்டு, புடிக்கலன்னு சொன்னா என்ன செய்யுறது நாங்க?” கெஞ்சலும் அதட்டலும் ஒருசேர கலந்து கட்டி மகளிடம் பேசியதின் பலன் பூஜ்ஜியமே.
“அதைதான் நானும் கேக்குறேன்! என்னை கேக்காம நீங்களா ஏன்பா முடிவு பண்ணீங்க? எனக்கு வேண்டாம்” அப்பனுக்கு தப்பாத மகளாக அதட்டலுடன் தனது மறுப்பினை தெரிவித்தாள்.
கண்ணெதிரே இருந்த காகித உறையில் மாப்பிள்ளையின் புகைப்படம் இருந்தும் அதை வெளியே எடுத்துப் பார்க்க ஆசைப்படவில்லை.
மகளின் கோபம் தந்தையின் அதட்டலை கட்டுக்குள் வைக்க, “எதுக்கு கல்யாணம் வேண்டாம்னு சொல்ற, சரியான காரணத்தை சொல்லு, நான் உன்னை வற்புறுத்தல…” இதுதான் இதை பற்றி பேசும் கடைசி பேச்சு என்பது போல் தீர்க்கமாக கேட்டார் ரெங்கேஸ்வரன்.
‘இனி வாய மூடிட்டு இருந்தா ஒன்னும் நடக்காது லக்ஸ் உன்னோட ஆசையை சொல்லிடு’ பெண்மனம் கூக்குரலிட,
மூளையோ, ‘இப்போதைக்கு வேண்டாம்னு நாம சொன்னா, உடனே சரின்னு ஒத்துகிட்டு, கல்யாணத்தை ஸ்டாப் பண்ணிடுவாங்களா? ம்ஹூம், அது புஸ்வானம் ஆகிடும். வேற மாதிரி பேசி இதுக்கு மூடுவிழா நடத்துவோம்’ மனதிற்குள் நிதர்சனத்தை புரிந்து கொண்டு, மனதிற்குள் பல யோசனைகளை ஓடவிட்டாள் லக்கி.
தன்னையே உற்று நோக்கிக் கொண்டிருந்த தந்தையையும் தோழியையும் பார்த்தவள், தன்னை ஓரளவு சமாதானபடுத்திக் கொண்டு,
“அப்பா என்னை பொறுத்தவரை, ஒருத்தரை ஒருத்தர் நல்லா புரிஞ்சுகிட்ட, காதல் கல்யாணம் தான் வாழ்க்கை முழுதும் சந்தோசத்தை கொடுக்கும்னு நினைக்கிறேன். ரெண்டு பேருக்குள்ள வர்ற அன்டர்ஸ்டாண்டிங்ல தான் லைஃப்ல வர்ற ஈகோ, அப் அண்ட் டவுன்ஸ் எதுவும் பெரிய விசயமா தெரியாது.
அதோட உங்களை இங்கே தனியா விட்டுட்டு, என்னால புருஷன் வீட்டுல போய் சந்தோசமா வாழ முடியாது. சோ, எனக்காக இல்ல, நமக்காக ஒருத்தரை நான் பார்த்து முடிவெடுக்கற வரைக்கும் எனக்கு கல்யாணம் வேண்டாம்” பெரிய தடைகல்லை எரிந்தவளைப் போல் இவள் முடிவினைக் கூற, மகளின் அன்பில் உள்ளம் பூரித்துப் போனார் தந்தை.
“இதுக்கெல்லாம் நம்ம மாப்பிள்ளை ஓகே சொல்லியாச்சு பாப்பா! உன்னோட சம்மதம்தான் இப்போதைக்கு தேவை” என்றவர் வாஞ்சையாய் மகளின் முகம் பார்த்து நின்றார்.
“ஆனா அப்பா, எனக்கு பிடிக்கணுமே?”
“உனக்கு கண்டிப்பா பிடிக்கும்டா!” தந்தையின் சமாதானத்தில் மகளின் முகம் தெளிவடையவில்லை.
“சரி பாப்பா! உன் முடிவுக்கே வர்றேன். உனக்கு பிடிச்ச மாதிரியே உன் வாழ்க்கை அமைய நான் ஒரு யோசனை வச்சிருக்கேன். ஆனா, அதை சொல்றதுக்கு முன்னாடி, என்னோட முடிவு எதுவா இருந்தாலும் ஒத்துக்கறேன்னு பிராமிஸ் பண்ணினாதான் சொல்வேன்!” பீடிகையுடன் ரெங்கன் கூற, பிடி கொடுக்கவில்லை மகள்.
“என்னன்னு தெரியாம எப்படி பா ஒத்துக்கறது?
“ஓ, அப்ப… உனக்கு, என்மேல நம்பிக்கை இல்லைன்னு சொல்ல வர்ற?”
ஒரு நிமிடம் அதிர்ந்து, தந்தை தன்னை நன்றாக மடக்கி விட்டார் என்பதை மிக தாமதமாகவே உணர்ந்து,
“எதுக்கு இந்த பெரிய பேச்செல்லாம்? சரி ஒத்துக்கறேன். உங்க யோசனை என்னனு இப்போ சொல்லுங்க!” அமைதியாகவே கேட்டாள்.
“அப்பா ஆசைப்படி, நான் நிச்சயம் பண்ணின மாப்பிளையை கல்யாணம் பண்ணிக்கோ! உன் ஆசைப்படி கல்யாணத்துக்கு அப்புறம் எத்தனை நாளானாலும் சரி, வருசமானாலும் சரி அவரை காதலிச்சுக்கோ! அப்பறம் குடும்பம் நடத்து. இதுதான் என்னோட முடிவு!” மிகச் சாதாரணமாய் கூறிவிட்டு மகளை கர்வத்துடன் பார்த்தார்.
அவளும் தனது தந்தையின் சூட்சமத்தை நினைத்து பெருமைப்பட்டாலும் தன்னுடைய லட்சியத்தை அழகாக அடக்கிவிட்டு அதை நிறைவேற்ற முடியாமல் செய்து விட்டாரே என்று மிகுந்த கோபம் இருந்தது.
மனமெல்லாம் கொதிப்பில் அடங்காமல் இருக்க, உடனிருந்த தோழி அந்நேரம் அவளை அணைத்து ஆறுதல்படுத்தினாள். உடனிருந்த தோழி சுரபியின் அருகாமை அவளை அமைதியாகவும் இயல்பாகவும் இருக்க உதவியது.
சுரபியும், திருமண விசயத்தில் மகளின் எதிர்ப்பு, தந்தையின் மனதிற்கு எத்தகைய ஏமாற்றத்தை கொடுக்கும் என்பதை இதமாக பதமாக எடுத்து சொல்லிக்கொண்டே, தோழிக்கு தேவையானதை அருகிலிருந்து பார்த்துப் பார்த்து செய்தாள்.
சுரபி எவ்வளவோ சொல்லியும் மாப்பிள்ளையின் புகைப்படத்தை பார்க்கவே மாட்டேன் என்று உறுதியாக இருந்தாள் லக்கி. ஒரு நிலைக்கு மேல் பொறுமையை இழந்த சுரபி,
“இவ்ளோ வீம்பு வேணாம் லக்ஸ். இவர்தான்னு முடிவான பிறகும் போட்டோ பார்க்க மாட்டேன்னா எப்படி? ஆள் செம்ம ஹாண்ட்சம் டி! உங்கப்பா ரொம்ப பொருத்தமா தேடி பிடிச்சிருக்கார். பாரேன், எவ்ளோ அழகா சிரிக்கிறார்னு?”
மாப்பிள்ளையின் புகைப்படத்தை கையில் வைத்துக் கொண்டே சிரித்த சுரபி, “அவர் பேரை தெரிஞ்சுக்கற ஆசை கூட இல்லையா லக்ஸ்?” லக்கியின் முகம் பார்த்து கேட்டாள்.
“அதை தெரிஞ்சு நான் என்ன பண்ணப் போறேன்? பிடிக்கலன்னா வேற மாப்பிள்ளைய அப்பா பார்க்க போறாரா என்ன? அதான் கல்யாணத்துக்கு மண்டைய ஆட்டி தொலைச்சுட்டேனே!” கண்களும் மனமும் கடுகடுக்கத்தவளின் குரலில் திருமணத்தை பற்றிய அக்கறை துளியுமில்லை.
“சரி, உனக்கு தேவையில்லன்னா விடு. ஆனா அவர் பேரே ரொம்ப அழகா இருக்கே! அவர் பேரு, பேரு…” தோழியை ஓரக்கண்ணில் பார்த்தவாறே சுரபி இழுக்க,
ஆர்வம் உந்தித் தள்ளியதில் சொல்லப் போகிறாயா இல்லையா என்று லக்கி அக்னி பார்வை பார்த்ததில், ‘அமிர்தசாகர்’ என அவசரகோலத்தில் கூறி முடித்தாள் சுரபி.
மண்டைக்குள் மணியடித்ததோ மூளைக்குள் மின்சாரம் பாய்ந்ததோ பெயரைக் கூறிய அடுத்த நொடியே, “சாச்சுவா?” சந்தோஷ அதிர்வில் எழுந்து நின்றாள் லக்கீஸ்வரி.
தோழியின் கையில் இருந்த போட்டோவை வெடுக்கென்று பிடுங்கி, அமிரை கூர்மையாக நோக்க, அவனும் சளைக்காத பார்வையில் சன்னச் சிரிப்புடன் நிழற்படத்தில் கம்பீரமாய் நின்றான்.
பதின்வயதில் பார்த்தவனுக்கும் இப்பொழுது உள்ளவனுக்கும் ஆயிரம் வித்தியாசங்கள் கூறிவிடலாம். “அடேயப்பா! ஓணானா ஒல்லியா இருக்கறப்பேவே, இந்த மைனருக்கு பேசத் தெரியாது. இப்படி தோரணையா மாப்பிள்ளை ஆனா இன்னுமில்ல உச்சாணிக் கொம்புல நிப்பான்” தன்னையும் மீறி லக்கி தன் அனுமானத்தை கூறிவிட,
“அடேயப்பா! இவ்வளவு தெரிஞ்சு வச்சுருக்கியா நீ? அதேபோல அவரும் உன்னை பத்தி என்ன சொல்றாருன்னு போயி கேட்டுட்டு வந்துடேன் லக்ஸ். அதோட உன்னோட மனசுல இருக்குறதையும் சொல்லிடு. இன்னைக்கு ஈவ்னிங் உங்க வீட்டுக்கு மாப்பிள்ளை வர்றாராம்” தோழி கூறியவுடன் அமிரை சந்திப்பதற்காக தன்னை தயார்படுத்திக் கொண்டாள் லக்கி.
தந்தை மற்றும் தோழியின் மூளைசலவையும், மாப்பிள்ளை தனது சிறுவயது தோழன் என்பதும் சேர்ந்து, லக்கியின் மனம் தன்னால் திருமணத்திற்கு ஒப்புதலை அளித்திருந்தது.
இவன் தனக்கு பொருத்தமாக இருப்பனா, எனது கோரிக்கைக்கு செவி சாய்ப்பானா என யோசித்தவளின் மனதில் தந்தை, மாப்பிள்ளையிடம் தெரியப்படுத்தி விட்டதாய் கூறியதும் நினைவிற்கு வந்து அமைதியடைந்தது.
திருமண வயது வந்து விட்டது. யாரேனும் ஒருவனுக்கு கழுத்தை நீட்டத்தான் வேண்டும். தானும் யாரையும் பரிசீலிக்காத நிலையில் தந்தையின் தேர்வை ஏற்றுக் கொண்டால் என்ன? தனக்கு கெடுதலா நினைத்து விடப் போகிறார் என்றே பல சமாதானங்ககளை தனக்குதானே சொல்லிக் கொண்டு திருமணத்திற்கு தயாரானாள்.
இங்கும் அரைகுறை மனதோடு திருமணத்திற்கு சம்மதித்த அமிர்தசாகரின் கைகளில் மணப்பெண்ணின் புகைப்படம் திணிக்கப்பட்டிருந்தது.
தொழில் நிமித்தம் பல இடங்களின் பல தரப்பட்ட நிலையில் பெண்களை சந்திப்பவன், அளவான போதையுடன், குறிப்பிட்ட இடைவெளியில் பெண்களிடம் இருந்து ஒதுங்கி விடுவான்.
‘எனக்கானவள், எனக்கு உண்மையாக இருக்கவேண்டுமென நான் நினைப்பதைப் போல, அவளுக்கானவனாய் நானும் அவள் ஒருத்திக்கென்றே வாழவேண்டும். காதலும் காமமும் மனைவியிடத்தில் மட்டுமே’ என்ற பண்பாட்டுக் கொள்கையை கடைப்பிடித்து வருபவன் அமிர்.
மணப்பெண் லக்கீஸ்வரி தான் என்று அறிந்து கொண்ட பிறகு, மனதிற்குள் மெல்லிய சிலிர்ப்பு தன்னால் ஓடி மறைந்தது. நிழலாய் தெரிந்த அவளது பிம்பத்தில் தன்னை தொலைத்தவனின் உள்ளம் சலுகையுடன் அவளை கடிந்து கொண்டது.
மகளும் தந்தையுமாக இணைந்து நின்ற நிழற்படத்தில், மகளை மட்டும் தனியாகப் பிரித்து, வருங்கால மனைவி என்ற உரிமையோடு ரசித்துக் கொண்டிருந்தான் அமிர். கண்கள் ரசிக்க, விரல்கள் அவனையும் மீறி அவளின் புகைப்படத்தில் ஊர்வலம் வந்தது.
குடும்ப பெண்ணுக்கும் நவீன மாடர்ன் யுவதிக்கும் இடைப்பட்டவளாக இருந்தாள் லக்கீஸ்வரி. ஸ்ட்ராபெரிபிங்க் நிற லெஹங்காவில், முதுகு வரையிலான கூந்தலை வெகு இயல்பாக விரித்து விட்டிருந்தாள்.
கழுத்தில் மெல்லிய பிளாட்டின ஹாரம் ஒன்று கீழிறங்கி பாரபட்சமின்றி அவளை உரசிக் கொண்டிருந்தது. மேலாடையில் இருந்து தப்பித்து வெளியே வந்த இரண்டங்குல இடையின் இடைவெளிக்கே கிறுகிறுத்த நிலைக்கு சென்றிருந்தான்.
‘இந்த ஃபோட்டோவ இன்னும் எத்தனை பேருக்கு அனுப்பி வச்சுருக்காளோ? ஃபர்ஸ்ட் அவகிட்ட சொல்லி இதை டெலீட் பண்ணச் சொல்லணும்’ மனதோடு தனது வருங்காலத்தை கடிந்து கொண்டவன், இன்னும் அவளை நேரில் பார்த்திருக்கவில்லை. பார்க்கும் முன்பே உரிமையும் அதிகாரமும் அவளிடத்தில் ஓங்கி நின்றது.
ஆளைப் பார்க்கவில்லை, பேசிப் பழகவில்லை எப்படி இந்த பெண் தந்தையின் சொல்லுக்கு தலையாட்டினாள் என்று அவனுக்கு ஆச்சரியமாக இருந்து. தனது கட்டிலில் புரண்டு கொண்டு, பேச்சின்றி ஒரு நெடிய மூச்சை இழுத்தான்.
‘உன்னை அவாய்ட் பண்றதுக்கு சான்ஸ் கொடுக்காம நிக்கிறியே மின்னி? அழகா இருந்து இம்சிக்கிற… என் கண்ணுக்கு மட்டும்தான் இப்படி தெரியறியா?’ மனதிற்குள் கேள்விகளை அடுக்கிக்கொண்டே மணமகளை சந்திக்க மணமகன் மிடுக்கோடு தயாரானான்.
***
“ஹாய் சாச்சு! ஹவ் ஆர் யூ?” நண்பனாக நினைத்து லக்கி கேட்க, அதற்கே முகத்தில் அதிருப்தி காட்டினான் அமிர்தசாகர்.
“டூ யூ லைக் மீ?”
அவளின் கேள்விக்கு பதிலாக, பிடித்திருக்கிறதா என்று கணீர் குரலில் கேட்டவனை விக்கித்துப் பார்த்தாள் லக்கீஸ்வரி.
வீட்டை சுற்றியுள்ள பெரிய தோட்டத்தில் ஒட்டிய விருந்தினர் அறையில் அவனையும் அவளையும் தவிர அங்கே வேறு எவருமில்லை.
“நம்ம அமிரை பார்த்து பேச, உனக்கு துணை எதுக்கு?” தந்தையின் சலுகை பேச்சில் இவளும் தனியாகவே வந்து நின்றாள்.
ஆண்மைக்கே உரிய கம்பீரமும், அலட்டலான குரலும் சேர்ந்து அவளை ஒருநொடியில் தடுமாற வைத்தது என்னவோ உண்மைதான்.
வந்து நின்றவளிடம் உட்கார், எப்படி இருக்கிறாய் போன்ற சம்பிரதாய விசாரிப்புகளை கூட செய்யாமல் கேள்வி கேட்டால் என்னவென்று சொல்வது?
அவள் என்ன நேர்முகத் தேர்விற்கா வந்திருக்கிறாள், இப்படி அதட்டலாக கேட்கிறானே? முதல் பேச்சிலேயே முகம் சுணங்கிப் போனாள் லக்கி.
“என்ன கல்யாணம் பண்ணிக்கச் சொல்லி உன்னை யாரும் வற்புறுத்தலயே? நீயா விருப்பபட்டு தானே இந்த கல்யாணத்துக்கு சம்மதிச்ச?” நேர்காணல் தொடர்ந்தவனை வெறுமையாக பார்த்து நின்றாள்.
‘ஆஹா என்ன ஒரு கரிசனம்? இந்த கேள்வியை நமக்கு பிள்ளை பிறந்த பிறகு கேட்டிருந்தால் மிக பொருத்தமாய் இருந்திருக்கும். நாளும், முகூர்த்தமும் குறித்து விட்டு பேச்சைப் பார் இவனுக்கு’ இல்லாத பிள்ளையை கூட கற்பனை செய்தவளுக்கு இந்த திருமணத்தில் விருப்பமில்லைதான். இதை இவளும் நம்பத்தான் செய்கிறாள்.
ஆனாலும் இவனை வேண்டாமென்று சொல்வதற்கு சரியான காரணம்தான் கிட்டவில்லை. முதல் பார்வையிலேயே ஈர்ப்பவனாய் அல்லவா கண்களுக்கு தெரிந்து தொலைக்கிறான்.
அதோடு தந்தையின் நண்பரின் மகன், சிறுவயதில் இருந்தே தன்னுடன் பழகிய தனக்கு பிடித்த அத்தம்மாவின் மகன் எனும் அத்தான் போன்ற அங்கீகாரங்கள் வேறு அவனை மறுக்க காரணங்களை தேடியது.
ஆறடி உயரம், திரண்ட தோள் புஜங்கள், கம்பீரத் தோற்றம் போன்று பெண்களை கவர்வதற்கான அனைத்து அம்சங்களுடன் ஒரு சிலரை மட்டுமே பார்த்திருக்கிறாள்.
அந்த வரிசையில் இனி இவனைத்தான் முதலில் சேர்க்க வேண்டுமென்ற எண்ணம் அப்பொழுதே எழுந்து, அவனுக்கு தன் மனதில் முதலிடம் கொடுத்து சிறப்பித்து விட்டாள்.
“ஹலோ இப்பவே பார்த்துட்டா எப்படி? கல்யாணத்துக்கு அப்புறம் மொத்தமா சுருட்டிக்கோ!’ கேலிப் புன்னைகையோடு அமிர் கூற,
அவன் மீது ஒட்டியிருந்த தன் பார்வையை வேறு வழியின்றி திருப்பிக் கொண்டாள் லக்கி. அவனது கூர்மையான பார்வையில் கேட்க வேண்டிய அனைத்து கேள்விகளும் மறந்தே போய், மணப்பெண்ணுக்குரிய இயல்பான நாணம் வந்து ஒட்டிக் கொண்டது.
அவள் மனதை அறிந்து கொண்ட திருப்தியில் அவனும் முழுமனதாக சம்மதிக்க, திருமண ஏற்பாடுகள் தடையின்றி நடந்தது.
திருமணத்திற்கு பிறகு வீட்டோடு மாப்பிள்ளையாக தங்கியிருக்க வேண்டும், தொழிலை ஏற்றுக் கொண்டு நடத்த வேண்டுமென்ற ரெங்கேஸ்வரனின் அதிகப்படியான கோரிக்கைகளை வெகு ஜாக்கிரதையாக சொல்லாமல் மறைத்திருந்தார் நடேசன்.
ஏற்கனவே தன்னிடம் கேட்காமல் திருமணம் பேசியதற்கே குத்தாட்டம் போடுபவன், இதனையும் சொன்னால் என்ன அவதாரம் எடுப்பானோ என்ற பீதியில், சொல்லாமலேயே மறைத்து விட்டார்.
ரெங்கேஸ்வரன் கேட்டதற்கும் சொல்லி விட்டதைப் போன்ற மழுப்பலான பதிலை தந்துவிட, அவரும் அமிரிடம் இதை பற்றி வாயைத் திறக்கவில்லை.
‘திருமணம் முடிந்தாலும் மாப்பிள்ளையோடு என்னுடன்தான் நீ இருப்பாய்’ என்ற ஒப்பந்தத்தை கூறியே மகளிடம் சம்மதம் வாங்கியிருந்தார் அவர். அதனால் அனைத்து காரியங்களும் சுமூகமாகவே நடைபெற்றன.
திருமண நாள் நெருங்க நெருங்க வெளியில் சாதாரணமாக இருப்பது போல் காட்டிக் கொண்டாலும் தனிமையில் அமிர்தசாகரை நினைத்துக் குழம்பிக் கொண்டிருந்தாள் லக்கீஸ்வரி.
புன்னைகை சிந்தினாலும் கண்டிப்பு பார்வையும், அதட்டல் மொழியும் அவளுக்குள் பெரும் உதறலை ஏற்படுத்திக் கொண்டிருந்தது. இவன் எப்பேற்பட்டவன், எப்படி இவனை, தன் வழிக்கு கொண்டு வருவது என்று மனதினுள் பலமுறை ஒத்திகை பார்த்துக் கொண்டாள்.
‘சிறுவயதில் பார்த்து பழகியவன் வேறு, இப்போதுள்ள அமிர் வேறு! சாதரணமாய் பேர் சொல்லி அழைத்தாலும் முகம் சுளித்துக் கொள்கிறானே? இவனை எப்படி அணுகுவது’ என்ற பெரும் குழப்பத்தில் தத்தளித்துக் கொண்டிருந்தாள்.
திருமண நாளும் இனிதே விடிந்தது. மணமேடையில் இருவரும் சந்தித்துக் கொண்டனர். தங்க ஜரிகை ஊடுருவிய அரக்கு வண்ணபட்டுப் புடவை அவளது மாம்பழ மேனியை மேலும் பொலிவு கூட்டிக் காட்டியது.
அதற்கு பொருத்தமான நகை அலங்காரம் என்று மேலும் மேலும் அழகு கூடி இருந்தாலும் அவளது முகத்தில் இருந்து எந்த ஒரு உணர்வையும் அமிரால் கணிக்க முடியவில்லை.
‘ஆசையாக ஒரு பார்வையாவது பார்க்கிறாளா பார், பெரிய இடத்துப் பெண் என்னும் திமிரை என்னிடம் காட்ட நினைக்கிறாளோ?’ அடங்காத ஆசை மனதிற்குள் கோப சாயத்தை பூசிக் கொண்டு, அவளது அருகாமையில் தன்னைத் தொலைத்து, அவளை வைத்த கண் வைத்தபடி பார்த்துக் கொண்டிருந்தான் அமிர்.
லக்கீஸ்வரிக்கும், அவனது பார்வையை சந்திக்க பெரும் அவஸ்தையாக இருந்தது. ‘எப்பவும் இதே முறைப்பு தானா? எங்கப்பாவுக்கு என்ன ரசனையோ? இவன்கிட்ட போயி என்னை மாட்டிவிட நினைக்கிறாரே’ எண்ணி குழம்பிய நேரத்தில்,
இருவரின் பார்வையும் முட்டி மோதி, இருவருக்குள்ளும் எள்ளும் கொள்ளும் வெடித்த போது, கெட்டிமேளம் முழங்க, பெரும் ஆராவாரத்துடன் மாங்கல்ய தாரணம் நடந்து முடிந்தது.
ஆசை, வெட்கம், மகிழ்ச்சி என எந்த உணர்விலும் ஊடுருவாமல் மஞ்சள் கயிற்றில் கோர்த்த தங்கத் தாலியில் மூன்று முடிச்சிட்டு தங்கள் உறவினை பிணைத்துக் கொண்டனர் புதுமணத் தம்பதியினர்.
ஐயர் சொன்ன மந்திரத்தை, திரும்பச் சொன்ன இருவரையும் அக்கினியை சுற்றி வரச் சொல்லவும் ஆசையாகவும் வேகமாகவும் அமிர் எழுந்து கொள்ள, அவனது இந்த துள்ளலை குறைக்க எண்ணிய லக்கியோ சற்றே பின்னடைந்தாள்.
இவனை தனது வழிக்கு கொண்டு வருவதற்கான முதல் வாய்ப்பாக இதனை எடுத்துக் கொண்டாள்.
ஐயரோ, ”அவா சுண்டு விரலை, உங்க சுண்டு விரலால பிடிச்சிண்டு மூனு முறை அக்னியை சுத்தி வாங்கோ!” என்றவுடன், தன் இயல்பாய் மனைவியின் முழுக் கையையும் தனது கைக்குள் அடக்கிக் கொண்டான் அமிர்.
இவளும் இதையே தன்னை, அவனிடம் உணர்த்திவிடும் ஒரு வாய்ப்பாக இருக்கட்டும் என எண்ணி, அவளது நகத்தால் அவனது உள்ளங்கையில் அழுத்தினாள்.
மனைவி அழுத்தியதும் அவளது கைகளை இன்னும் இறுக்கி பிடித்தான் அமிர். சிறுபிள்ளைகளின் சீண்டு மூட்டி விடும் நிகழ்ச்சி வெகு ஜோராய் நடந்தது. மூன்று சுற்று முடித்து இருவரும் அமரும்போது மெல்லிய குரலில்,
“எதுக்கு இவ்வளவு படபடப்பு மின்னி, என்னை பார்த்தா ரொம்ப பயமா இருக்கா? நான், அவ்வளவு மோசமானவன் இல்ல” எனக்கூறி அவனது கையை விரித்து அவளுக்கு காண்பிக்க, அவளது கீறலால் ஏற்பட்ட உள்ளங்கை சிவப்பைக் கண்டதும் சற்று திணறி விட்டாள்.
“சாரி சாச்சு!” இறங்கிய குரலில் இவள் கிசுகிசுக்க,
இவனோ, ‘ஹூங்’ என்று முறைத்தான். ‘ஐயோ, இவனுக்குதான் இப்படி அழைத்தால் பிடிக்காதே’ என எண்ணிக் கொண்டு,
“சாரி சாகர்” எனக் கூறி மீண்டும் மன்னிப்பை வேண்ட, அதற்கும் அதே ஹூங்காரம் தான் பதிலாய் வந்தது கணவனிடத்தில்.
எப்படி அழைத்தால் இவனை அமைதிபடுத்தலாம் என்ற சிந்தனையுடன் மற்ற சடங்குகளில் தன்னை பிணைத்துக் கொண்டாள் லக்கி.
தனது சிறுபிள்ளைத்தனமான செயலுக்கு மன்னிப்பு கேட்கவேண்டும், அதோடு தனது மனதில் உள்ளதையும் மறைக்காமல் கூறி விட வேண்டுமென்று மனதிற்குள் பல ஒத்திகைகளை பார்த்துக் கொண்டாள்.
அதன்பின் மடமடவென்று திருமண சடங்குகள் முடிந்து, மாலையில் திருமண வரவேற்பும் எந்த குறையுமின்றி இனிதே நடந்தேறியது.
நேரம் வேகமாக நகர்வது போல் உணர்ந்தாள் லக்கீஸ்வரி. அவளின் தோழி சுரபியும், திருமணத்திற்கு வந்திருந்த தனது பெற்றோருடன் உடனே சென்று விட்டாள்.
அதே நேரம் அமிர்தசாகருக்கோ நேரம் நத்தை போல் ஊர்ந்து செல்வதாகத் தோன்றியது. தன்போக்கில் வேலைகளை, நாட்களை கடத்திக் கொண்டிருப்பவனுக்கு மாமனார் வீடு எங்கும் செல்ல முடியாத சிறைச்சாலையை போல் எண்ண வைத்தது.
எப்படியாவது பேசி, மனைவியை நாளையே தன்னுடன் அழைத்து செல்லும் முடிவை எடுத்து விட்டு, அவளை சந்திக்கும் தருணத்திற்காகவே காத்துக் கொண்டிருந்தான்.
இருவரின் மனநிலையும் வேறுவேறாக இருந்த போதிலும் இருவரும் அழகே உருவான திருமண இரவை வெகு ஆர்வமாகவே வரவேற்றனர்.
பால் நிறத்தை நிறைவுடன் அள்ளி தெளித்துக் கொண்டிருந்த நிலவுடன், மயக்கும் இரவின் தனிமையில் இருவரும் சந்தித்துக் கொண்டனர்.
வெண்பட்டில் கம்பீரமாய் அந்த அறைக்குள் நுழைந்த அமிர்தசாகருக்கு, வெகு பாந்தமாய் செய்யப்பட்ட அறையின் அலங்காரமும், மிதமாய் மிதந்து வந்த சந்தனவாசமும் மனதை கிறங்கடிக்க செய்தது.
எளிய அலங்காரத்தில் தோகையை விரித்தாடும் மயில் போல் வந்து நின்ற லக்கீஸ்வரியை பார்த்தவனின் உள்ளம் துள்ளிக் குதித்தது.
இமைக்க மறந்து அவளையே பார்த்துக் கொண்டிருந்தவனின் மோகப் பார்வையை சற்றும் மதிக்காமல், கடனே என்று நின்று கொண்டிருந்தாள்.
அவள் நின்றிருந்த நிலை அவனுள் ஏதோ உறுத்த, அதை உடைத்து எறியச் செய்யுமாறு மனம் அறிவுரை கூறியது.
‘பழக்கமில்லாதவன் கூட இருக்கறதே பெரிய கஷ்டம். பாவம் சின்னபொண்ணு வேற… வெட்கம், இத்யாதி இத்யாதின்னு அவளுக்கும் இருக்கும். நீ தான் போய் அவளை மெல்ல அழைத்து வாயேன்’ அமிரை உந்தித் தள்ளியது அவனது உள்மனம்.
மனம் கூறியதை உடனே நிறைவேற்ற எழுந்தவன், அவளை நோக்கி மயக்கும் புன்னைகையில் முன்னேற, லக்கியோ மூச்சை உள்ளிழுத்துக் கொண்டு, அவன் அருகில் வந்ததும் நகர உட்பட, அவளது கைகளை இழுத்து, தன் கைவளைவிற்குள் கொண்டு வந்தான் அமிர்.
கணவனின் இந்த செயலை எதிர்பார்க்காதவள், கால் தடுமாறி அவன் மேல் மோத, அவனது வடிவான முகத்தையும் தோற்றத்தையும் மிக அருகில் பார்த்தவளின் மனம் சற்றே தடுமாற நின்றது.
அந்த சந்தர்ப்பத்தை விட விரும்பாத அமிர், தனது இறுகிய அணைப்பில் அவளை கொண்டுவர, விதிவிதிர்த்துப் போனாள் லக்கி.
அவனை வெகு வேகமாக தன்னிடமிருந்து தள்ளி விட்டுவிட்டு கட்டிலின் ஒரு விளிம்பில் சட்டமாய் அமர்ந்து கொண்டாள். இந்த விலகலை சற்றும் எதிர்பார்க்காதவன், சில நிமிடம், வெகுச் சில நிமிடத்திலே தன்னை சுதாரித்துக் கொண்டான்.
“என்ன ஆச்சு மின்னி? ஏதும் பிரச்சனையா?” மிக மெல்லிய குரலில் கேட்டவாறே அவளது அருகில் உட்கார்ந்தான்.
அவனது அருகாமையில் வெடவெடத்துப் போனவள், தைரியத்தை வரவழைத்துக் கொண்டு, அவனை உற்றுப் பார்த்து,
“அதென்ன பாக்குற நேரமெல்லாம் மின்னின்னு கூப்பிட்டுட்டு இருக்கீங்க? என் பேர் மறந்து போச்சா?” என்றபடியே அவனில் இருந்து விலக முற்பட, அவனிற்கோ மனைவியை விலக்கும் எண்ணம் இல்லவே இல்லை.
“இப்ப எதுக்கு விலகிப் போற? நான் இப்படி கூப்பிடுறது ஒன்னும் புதுசில்லையே? முன்ன சீண்டுறதுக்குன்னு கூப்பிட்டது இப்ப ஆசையா கூப்பிடுறேன். இனியும் அப்படிதான் கூப்பிடுவேன். நீதான் பழக்கப்படுத்திக்கணும்” உத்தரவிட்டவனின் கைகள் மேலும் முன்னேற முற்பட, அதை தடுத்து நிறுத்தினாள்.
“இதோட உன் ஆசை விளையாட்ட எல்லாம் ஸ்டாப் பண்ணு சாச்சு! அவசர அவசரமா நடந்த இந்த கல்யாணத்துல எனக்கு சுத்தமா இஷ்டமில்ல. நமக்குள்ள நல்லா அண்டர்ஸ்டாண்டிங் வந்த பிறகுதான் எல்லாமே. அது வரைக்கும் எதுவும் கிடையாது, எதுவும்…” படபடப்புடன் அழுத்தம் திருத்தமாய் கூறிவிட்டு, கணவனை முறைத்தாள்.
அவளது இந்த வார்த்தை அவனுள் அமிலத்தை ஊற்றியது போல் இருந்தாலும், மனைவியின் ஸ்பரிசத்தில் மயங்கி நின்ற அந்த சில நிமிடம் அவனுள் இளகலை ஏற்படுத்தியிருக்க, முதன் முறையாக தனது சுபாவத்தில் இருந்து வேறுபட்டு, மிக மென்மையாகவே பதிலளித்தான்.
“ஓகே மின்னி! உன்னோட டென்சன் புரியுது. அதுக்காக இப்படியே இருக்கலாம்னு நினைக்காதே! எனக்கும் ஆசைகள் நிறையவே இருக்கு. அன்ட் ஒரு சின்ன அட்வைஸ். நீ, வா, போ இதெல்லாம் வேணாம். பேர் சொல்லி கூப்பிட்டாலும் எனக்கு மரியாதை முக்கியம்.
இதை நீ மறந்திருக்க மாட்டேன்னு நினைக்கிறேன். நம்ம ரெண்டு பேருக்குமே களைப்பா இருக்கும். அதுனால நல்லா தூங்குவோம். குட்நைட்” எனக் கூறிவிட்டு கட்டிலின் ஒரு ஓரத்திற்கு சென்று படுத்து உறங்கியும் போனான்.
லக்கீஸ்வரி முற்றிலும் எதிர்பார்த்திருந்த சூழல் வேறு. இப்பொழுது நடந்ததோ வேறு. கணவனின் பேச்சு மனைவியின் மனதில் மெல்லிய பயத்தையும் படபடப்பையும் உண்டு பண்ணியது.
‘நான் என்ன சொன்னேன்னு கூட யோசிக்கல… அவனுக்கு என்ன வேணும், அவனோட நினைப்பு இதை சொல்லிட்டு தூங்கிட்டான். இனி வாழ்க்கை முழுசும் இப்படிதான் போகப்போகுதா?’ மனதிற்குள் பல எண்ணங்கள் சூழ்ந்து புதுபெண்ணின் மனதிலும் வயிற்றிலும் புளியைக் கரைத்தது.
அமைதியாக அவனுக்கு மறுபுறம் சென்று யோசனையின் நடுவில் உறங்க முயற்சி செய்ய அதில் ஓரளவு வெற்றியும் கண்டாள்.
அமிர்தசாகரின் அடுத்தடுத்த அணுகுமுறையால், தான் மேலும் மேலும் அதிர்வடைய போவதை அறியாமல் சலனமின்றி உறங்கினாள் அவனது மின்னி.
தங்க ணமர்புடையார் தாம்வாழ்தல் முன்இனிதே
அங்கண் விசும்பின் அகல்நிலாக் காண்பினிதே
பங்கமில் செய்கைய ராகிப் பரிந்துயார்க்கும்
அன்புடைய ராதல் இனிது.