ராட்சசியே உன் ரட்சகன் நான் 1

ராட்சசியே உன் ரட்சகன் நான் 1

ராட்சசியே உன் ரட்சகன் நான் 1

(அனாமிகா 6)

 

தயங்கிய பார்வையும் தளர்ந்த நடையுமாக தன் கைபையை இறுக்கி பிடித்தபடி அந்த பழைய குடோனுக்குள் வந்தார் அவர்.

 

நாற்பது வயதை கடந்த தோற்றம், கலங்கி சிவந்த கண்கள், உயிர்ப்பற்ற முகம், தன்னை பார்த்ததும் நடுங்கி நின்றவரை நெற்றி சுருங்க அளவிட்டவன், அவரை அமரும்படி எதிரிலிருந்த பிரம்பு நாற்காலியை கைகாட்டினான்.

 

அடாசுகள் குவிந்துகிடந்த அந்த குடோனின் நடு பகுதியில் ஒற்றை இருக்கையில் முரட்டு தோற்றத்துடன் அசையாத கூர் பார்வையை தன்மீது பதித்திருந்தவனை பார்த்து மிரண்டவர், அவன் காட்டிய பிரம்பு நாற்காலியின் நுனியில் சங்கடமாக அமர்ந்து கொண்டார். 

 

“ம்ம் என்ன விசயமா என்னை பார்க்க வந்தீங்க?” அவன் சாதாரணமாக தான் கேட்டான். ஆனால் அவனது தடித்த குரல் அதை முரட்டு கேள்வியாக வெளியிட்டது.

 

“அஅது… ஒருத்தனை கொ… கொல்லணும்” என்றார் திக்கி திணறலாக.

 

“யாரை?” அவன் கேட்டதும் தன் கைபேசியில் இருந்த ஒரு இளைஞனின் நிழற்படத்தை கைகள் நடுங்க எடுத்து அவனிடம் காட்டினார்.

 

அதை வாங்கி பார்த்தவன், “இவன போட்டு தள்ளுற அளவுக்கு இவன் உங்களுக்கு என்ன செஞ்சான்?” என்று கேட்டான்.

 

“என்… என் ஒத்த பொண்ண சீரழிச்சு கொன்னு புட்டாங்க” என்று கதறி அழுதார் அவர். 

 

ஒரு தந்தையின் கண்ணீரையும் கதறலையும் பொறுமையாக பார்த்திருந்தான் அவன்.

 

“ஒன்னுந்தெரியாத சின்ன புள்ள, இப்ப‌ உசுரோட இல்லாம போச்சே” என்று தேம்பலுடன் வாய் பொத்திக் கொண்டு அழுதார்.

 

அவன் புருவங்கள் யோசனையில் சுருங்கின. “இந்த டிவி, நியூஸ்ல எல்லாம் வந்திட்டு இருக்கே அந்த பொண்ணு கேஸா இது? நீதி வேணும், நியாயம் வேணும்னு கேட்டு போராட்டம் எல்லாம் நடக்குதே அதுவா?” அவன் கேட்கவும், அவர் உடல் அழுகையில் குலுங்க ஆமென்று தலையசைத்தார்.

 

“போலீஸ்காரவங்களே இவனை வலைவீசி தேடுறதா அறிக்கை உட்டுட்டு இருக்காங்க, உங்களுக்கு இவன்தான்னு கன்பார்ம்மா தெரியுமா?” மேலும் சந்தேகமாக கேட்டான்.

 

“தெரியும்… என் பொண்ணு, இவனைதான் காதலிக்கிறதா, கல்யாணம் கட்டிகிட்டு வாழ போறதா, மெஸேஜ் பண்ணிட்டு எங்களை விட்டு போனா… அடுத்த ரெண்டு நாள்ல செத்து பொணமா தான் கிடச்சா அய்யோ” தலையில் அடித்துக்கொண்டு கூறினார்.

 

“உங்கள ஏமாத்திட்டு ஓடுனவளுக்காக நியாயம் செய்ய வந்திருக்கீங்களா?” அவன் கேள்வியில் இளக்காரம் தொக்கி இருந்தது.

 

“எங்கள ஏமாத்திட்டு போன பாவத்துக்கு தான் அவ பட்டு அழிஞ்சு செத்தும் போயிட்டாளே… அதேபோல அவள ஏமாத்தினவனும் துடிச்சு சாகணும். என்னைய மாதிரி இன்னொரு அப்பன் தன் பொண்ணை இந்த மிருகத்துக்கு பலி கொடுத்துட்டு தவிக்க கூடாது தம்பி. அவன் சாகணும் தம்பி… போலீஸு, கோர்ட்டு, கேஸு எதுவும் அவனுக்கு உதவாது, கொல்லணும் அவன” என்றார் ஆத்திரமாக.

 

“சரி விடுங்க, முடிச்சிடலாம்” என்றவன் அந்த நிழற்படத்தை தன் கைபேசிக்கு மாற்றிக்கொண்டான்.

 

“தம்பீ… பணம்…” அவர் தயக்கமாக இழுக்க,

 

“எவ்வளோ கொண்டு வந்திருக்கீங்க?” அவர் கைபையில் பார்வையை ஓட்டி கேட்டான்.

 

“அவசரத்துக்கு அம்பதாயிரம் தான் புரட்டிட்டு வந்திருக்கேன்… அந்த பாவி எங்கயாவது தப்பிச்சு போறத்துக்குள்ள அவன போட்டுடுங்க தம்பி. மீதி எவ்வளோ ஆனாலும் நான் பொரட்டி கொடுத்துறேன்” என்றவரை ஆழ பார்த்தவன், “பரவால்ல, இந்த காசுலயே அவனை முடிச்சிறேன் விடுங்க” என்றான்.

 

“என்ன ண்ணே, மேட்டரு முடிக்க அம்பதாயிரம் எங்க பத்தும்” அவனருகில் ஒருவன் அங்கலாய்த்து கேட்டபடி வந்தவன், அவன் திரும்பி பார்த்த பார்வையில் அப்படியே வாய் மூடி கொண்டான்.

 

“தம்பி, எவ்வளோ ஆகும்னு சொல்லுங்க நான் கொடுத்துறேன்” அவர் மேலும் தயங்கி சொல்ல, “இப்ப கைல இருக்கறதை கொடுத்துட்டு போங்க, எண்ணி ரெண்டு நாள்ல அவன் செத்துட்டான்னு டிவில நியூஸ் வரும் கிளம்புங்க” என்றான் கையை வெளியே காட்டி.

 

அவர் தயக்கத்துடன் தன் பணப்பையை கொடுத்துவிட்டு, கலவரத்துடனே அங்கிருந்து அகன்றார். 

 

“அண்ணே, உனக்கு மர கழண்டு போச்சா, ஒருத்தனை போடுறது என்ன லாலிபாப் சாப்பிடுற போல வேலையா, ரெண்டே நாள்னு டைம் பிக்ஸ் பண்ற, அவன் யாரு எவன்னு கண்டுபுடிக்கவே ரெண்டு நாள் பத்தாது. அப்புறம் எங்க ஸ்கெட்ச் போட்டு எப்போ தூக்கறது” என்று அங்கலாய்த்தான்.

 

“டேய் லெஃப்டு, பார்த்தல்ல அவ அப்பங்காரன் எப்படி கதறான்னு, இவன் செத்த சேதி கேட்டாதான்டா, அவருக்குள்ள எரியற நெருப்பு அடங்கும். அதுக்கு ரெண்டு நாளே அதிகம். இந்த நாய் இங்கதான் எங்கயாவது கேஸ் எப்படி போவுதுன்னு மோப்பம் புடிச்சு சுத்திட்டு கிடக்கும். நாம பார்த்து போட்டுல்லாம் உடுடா” என்றான்.

 

“அதில்ல ண்ணே, பிஸ்கோத்து காசுக்கு எல்லாம் பெரிய வேலை ஒத்துக்கிட்டா நம்ம கெத்து போயிடும் ண்ணே” மற்றொருவன் சொல்ல,

 

“அட ரைட்டு, காசுக்காக நாம செய்யுற வேலைக்கு நடுவுல இப்படி நியாயத்துக்காவும் ஒன்னு ரெண்டு செஞ்சாதான நம்ம இமேஜ் உசரும்” என்று கையை உயர்த்தி காட்டினான்.

 

“ரவுடி பயலுகளுக்கு என்ன இமேஜ் வேண்டி கிடக்கு கிங்கு?” முத்தானையால் தன் கையை துடைத்தபடியே அங்கே வந்த மங்கா அவனை கேட்டாள்.

 

“அதான் மங்கா, ஹீரோ இமேஜ் கிடைக்கணுமில” அவன் சட்டை காலரை தூக்கிவிட்டு எழுத்து கொண்டான்.

 

“அது ஹீரோ இல்ல ண்ணே, ஆன்டி ஹீரோ இமேஜ்” ரைட் சொல்லிவிட்டு சிரிக்க,

 

“இப்பத்திக்கு ஆன்டி ஹீரோ தான்டா மாஸ், இந்த கிங்கும் மாஸூ டா” என்றான் தோரணையாக தன் கண்களில் கூலர்ஸை மாட்டியபடி.

 

“ஓவர் சீனு உடம்புக்கு ஆகாது கிங்கு, சொல்லிபுட்டேன்” மங்கா பிரேக் போட,

 

“எக்காவ், உன் நாற வாய போய் கழுவு மொதல்ல, ரவுடியா பொறந்து ரவுடியா சாகற எண்ணமெலாம் இல்ல எனக்கு. அடுத்தடுத்து ஸ்டெப் ஸ்டெப்பா போயிட்டே இருக்கணும். என்னை தொரத்தி வரவன் எவனும் என் நிழலை கூட புடிக்க கூடாது” அழுத்தமாக சொன்ன கிங் பாண்டி, 

 

தன் மொபைலில் யாருக்கோ அழைப்பு விடுத்து, “ஒரு சொறி நாய தேடி புடிச்சு போட்டு தள்ளணும்டா, நம்ம நாய் புடிக்கிற வண்டிய எடுத்துட்டு மெயின்ரோட்டுக்கு வா” என்று அங்கிருந்து வெளியேறினான்.

 

***

 

“போராடுவோம் போராடுவோம்…”

 

“நீதி கிடைக்கும் வரை போராடுவோம்.”

 

“நீதி வேண்டும் நீதி வேண்டும்…”

 

“பெண்ணுக்கு நீதி வேண்டும்.”

 

ஐம்பதிற்கும் மேற்பட்ட தன்னார்வ, மகளிர் சங்க பெண்கள் அந்த மருத்துவமனை முன்னே, இறந்த பெண்ணுக்கு நீதி வேண்டி கோஷம் எழுப்பிக் கொண்டிருந்தனர்.

 

அந்த பெண்ணின் முடிவு அங்கிருந்த ஒவ்வொரு பெண்ணையும் கொதிக்கச் செய்திருந்தது. அந்த கொதிப்பு அவர்கள் கோஷத்தில் அனல் பரப்பிக் கொண்டிருந்தது. அதில் ஒருத்தி மட்டும் மௌனமாக அமர்ந்திருந்தாள்.

 

“ஏய் வேணி, இப்ப எதுக்கு இப்படி உக்கார்ந்து இருக்க, வந்து கோஷம் போடு வா, நம்மள மாதிரி ஒரு பொண்ணுக்கு நியாயம் கிடைக்க வேணாமா?” வேகாத வெயிலில் கத்தி கொண்டிருந்த துர்கா பொறுமையிழந்து அவளை அழைத்தாள்.

 

அவளருகே எழுந்து வந்த வேணி, “செத்து போனவளுக்கு எந்த நியாயத்தை வாங்கி கொடுக்க முடியும் நம்மால? அந்த பொண்ணு உசுர மீட்டு கொடுக்க முடியுமா? இல்ல இது போல இன்னொரு உசுரு போகாம காப்பாத்த தான் நம்மால முடியுமா?” கண்கள் சிவந்து கலங்கி அவள் கேட்டதில், துர்காவும் மற்ற தோழிகளும் அவளிடம் வந்தனர்.

 

“அதுக்காக எதுவுமே செய்யாம இருக்க சொல்றீயா, நம்மால முடிஞ்சவரை போராடி பார்ப்போம் வேணி” மற்றொருத்தி அவளுக்கு எடுத்துச் சொன்னாள்.

 

வேணி முகத்தில் ஓர் ஏளன சாயல் வந்து போனது. “ஒரு நாள் பூரா கொடி புடிச்சு கோஷம் போட்டா, செத்து போன புள்ளக்கி இப்புட்டுதென் நம்மாள செய்ய முடிஞ்சது செஞ்சுட்டோம்ன்ற திருப்தி போதும்ல நமக்கு. அப்புறம் வேற புள்ளயும் இப்படி செத்து கிடக்கும் அதுக்கும் கோஷம் போட்டு போராடினா போச்சு அம்புட்டு தான” அவள் ஆத்திரமாக கேட்க,

 

“ஏய் உனக்கு இருக்குற ஆத்திரம்‌, கோபம் எல்லாம் இங்க இருக்கிற எல்லாருக்கும் தான் இருக்கு. அதான் இப்படி போராடிட்டு இருக்கோம், நம்ம போராட்டத்துனால தான் போலீஸ் சீக்கிரம் இந்த கேஸை கைல எடுத்து இருக்காங்க. ரெண்டு நாள்ல விசாரிச்சு அவனையும் கண்டுபுடிச்சு இருக்காங்க, அவனும் சீக்கிரம் போலீஸ்ல சிக்குவான் பாரேன். அந்த‌ பொண்ணு சாவுக்கு காரணமானவங்களை ஜெயில்ல புடிச்சு போட்டு நிச்சயம் தண்டனை வாங்கி கொடுக்கலாம்.” 

 

“அவன தேடி புடிக்கவே நாம போராட்டம் பண்ண வேண்டியதா இருக்கு. இதுல, அவனுக்கெலாம் ஜெயிலு, தண்டனை ஒரு கேடு. அவன வெறிநாய விட்டு துரத்தி துரத்தி கடிக்க வச்சு சாவடிக்கணும். இனி எந்த பயலுக்கும் பொண்ணுங்கள தப்பா பார்க்க கூட பயம் வரணும். அப்படி ஏதாவது செய்யணும்டி” என்றாள் அவள் ஆதங்கம் தாளாமல்.

 

“நடக்குறதா பேசுடி, முதல்ல அவன் போலீஸ்ல மாட்டட்டும். நாம இன்னும் எல்லாரையும் திரட்டி போராடி பெரிய தண்டனையா வாங்கி கொடுக்கலாம். நீ ஆத்திரப்படாம இரு” துர்கா அவளை தட்டிக்கொடுத்து கோஷத்தை தொடர, அவளும் தன் நெஞ்சம் கொதிக்க கோஷமிட்டாள்.

 

ஆனால் அவளின் நெஞ்ச கொதிப்பு ஆற்றுவதாக இல்லை. அங்கே பெற்ற மகளின் சடலத்தை வாங்க மறுத்து, மருத்துவமனை வாயிலில் அழுது கரையும் பெற்றவர்களைப் பார்த்து, இயலாமையில் அவள் கண்கள் மேலும் கலங்கின.

 

அந்த நேரம், “காப்பாத்துங்க… ஆ… ஆ…” என்று அங்கே பெரிதாக கேட்ட அலறல் குரல், அவர்கள் அனைவரையும் திரும்ப செய்தது.

 

உடலெங்கும் இரத்தம் வழிய, கிழிந்து தொங்கிய ஆடையோடு உயிரை பிடித்தபடி தட்டு தடுமாறி, அந்த சாலையில் ஓடிவந்து கொண்டிருந்தான் அவன்.

 

இரத்தம் தோய்ந்த கோர பற்கள் கொண்ட மூன்று வெறி நாய்கள் அவனை பின்னோடு துரத்தி வந்து பிடித்து இழுத்து குதறின. 

 

ஓய்ந்து போய் உட்கார்ந்திருந்த அந்த பெண்ணின் அப்பா, நிமிர்ந்து அவனை உற்று பார்த்தவர் முகத்தில் குரூரமான ஒளி பரவியது.

 

“இவன்தான்… இவன் தான் என் பொண்ண நாசம் பண்ணது… அந்த நாயிங்க அவனை கடிச்சு கொதரட்டும்… யாரும் அவனை காப்பாத்தாதீங்க…” என்று கத்தி சொன்னவர் அங்கேயே மடங்கி அமர்ந்து கதறி அழுதார்.

 

சாலையோரத்தில் இருந்த கற்களை எடுத்து வீசி அந்த நாய்களை துரத்த முயன்ற சிலரும் அவர் சொன்னதில் தயங்கி நிற்க, அந்த வெறிநாய்களிடம் தப்பிக்க முடியாமல் சிக்கியவனின் கதறல் அந்த இடத்தை நடுங்க செய்தது.

 

அங்கே காவலுக்கு இருந்த காவலர்கள் அந்த நாய்களை சுட்டு தள்ள குறி வைக்க, “சார்… அது கிங்கோட நாய்ங்க சார்” என்று ஏட்டு சொன்னதும் அவர்களும் சற்று தயங்கினர்.

 

அதற்குள் சிக்கி கொண்டவன் நிலை குற்றுயிராக மாற, மேலும் தாமதிக்காமல் ஒரு காவலர் சுட குறி பார்க்கவும், அங்கே நாய்களை பிடுக்கும் வண்டி வரவும் சரியாக இருந்தது. அதிலிருந்து மூன்று பேர் வேகமாக இறங்கி கைகளில் சங்கிலியுடன் நாய்களை பிடிக்க விரைந்தனர். அந்த நாய்கள் அவர்களை பார்த்தும் குறைத்துக்கொண்டு வர, ஒற்றை சீட்டி சத்தத்தில் அவைகள் சமத்தாக வண்டிக்குள் ஏறிக் கொண்டன.

 

அங்கே இரத்த சகதியில் உயிர் துடித்து கொண்டிருந்தவன் மேல் அனைவரின் கவனமும் இருக்க, வேணியின் கவனம் மட்டும் ஒற்றை சீட்டியில் நாய்களை அடக்கியவன் மேல் இருந்தது.

 

உயரமான ஒல்லியான தேகம், முறுக்கேறிய நரம்பு கைகள், காக்கி நிற உடையில் பாதி முகத்தை மறைத்து அணிந்திருந்த தொப்பியை தாண்டியும், அவளால் அவனை அடையாளம் கண்டு கொள்ள முடிந்தது. வந்தது போலவே அந்த நாய்கள் வண்டியை ஓட்டிக்கொண்டு சென்றும் விட்டான் அவன்.

 

அவள் முகம் இப்போது தீவிரம் காட்டியது. அவனை பற்றி அவள் இங்கு சொன்னாலும் யாரும் நம்ப போவதுமில்லை என்று புரிய, அவள் முகம் மறுபடி இறுகி போனது.

 

மறுநாள், வெறிநாயால் கடிப்பட்டு கொடூரன் மரணம் என்று தலைப்பு செய்திகளில் அந்த சம்பவம் காட்சிகளாக ஒலிப்பரப்பானது.

 

“அய்யோ நான் சொல்றதை நம்புங்களேன், அது ஆக்ஸிடென்ட் இல்ல கொலை. அந்த ரௌடி தான் நாய விட்டு அவனை கொலை பண்ணான். அந்த நாய்ங்க கூட அவனோடது தான். 

 

தப்பானவன கொலை செஞ்சாலும் கொலை கொலை தான, தண்டனை தண்டனை தான” வேணி பேச பேச, இன்ஸ்பெக்டர் தன் நெற்றியை பிடித்துக் கொண்டார்.

 

“எம்மா, காலங்காத்தால வந்து உயிர வாங்காதமா, நேத்து அங்க நானுந்தான் இருந்தேன். அது தெரு நாய்ங்க தான். அதுங்கள கார்ப்பரேஷன்ல புடிச்சுட்டு போய் விஷ ஊசி போட்டு கொன்னு பொதைச்சி ஆச்சு, நீ கண்டதை உளறி எங்க நேரத்தை வீணாக்காம கிளம்புமா” என்று இன்ஸ்பெக்டர் அவளை விரட்ட,

 

அதற்குமேல் என்ன சொல்வது என்று தெரியாமல், முகம் சுருங்க அங்கிருந்து வெளியேறினாள் வேணி.

 

அவளுக்குள் அத்தனை கோபம். தன் முன்னால் கொலை நடந்தும் அதைப்பற்றி தெரிந்தும் கண்டு கொள்ளாமல் இருக்கும் அந்த இன்ஸ்பெக்டர் மீது காட்ட முடியாத கோபம். இத்தனைக்கும் காரணமான அந்த ரௌடியின் மீது தீரா கோபம்.

 

***

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!