OVIYAPAAVAI-04
OVIYAPAAVAI-04
ஓவியம் 04
ரஞ்சனுக்கு இப்போது என்ன பேசுவதென்றேப் புரியவில்லை. எங்கள் வீட்டுப் பெண்ணை உனக்கு எப்படித் தெரியும் என்று கேட்கிறார்கள்.
நியாயமான கேள்வி. இதற்கு அவன் பதில் சொல்லத்தானே வேண்டும். ஆனால் என்ன பதில் சொல்வதென்று அவனுக்குப் புரியவில்லை. தான் சொல்லும் பதிலை அவர்கள் நம்ப வேண்டுமே!
“சொல்லுங்க தம்பி, எங்க வீட்டுப் பொண்ணை உங்களுக்கு எப்பிடித் தெரியும்?” மீண்டும் கேட்டார் ஜெயராம்.
“எனக்கு உங்க வீட்டுப் பொண்ணைத் தெரியாதுங்க.” ரஞ்சனின் குரல் இப்போது இறங்கி இருந்தது.
“நம்பும்படியா இல்லையே! தெரியாமலா இவ்வளவு துல்லியமா வரைஞ்சிருக்கீங்க?”
“அண்ணே! கேட்கிறவன் கேனையன்னா கேழ்வரகுல நெய் வடியுமாம், வேலையத்துப் போய் அவன்தான் கதை சொல்றான்னா அதை நீங்களும் உட்கார்ந்து கேட்டுக்கிட்டு இருக்கீங்க!” வீட்டின் இளஞ்சிங்கம் கர்ஜித்தது.
“பொறு சுரேஷ், அவரு என்னதான் சொல்றார் ன்னு கேட்பமே.” மூத்தவர் இளையவனை அடக்கினார்.
ரஞ்சனுக்கு மிகவும் தர்மசங்கடமாக இருந்தது. சூழ்நிலையை எப்படிக் கையாள்வது என்று அவனுக்குப் புரியவில்லை. மனதைத் திடப்படுத்திக் கொண்டு பேச ஆரம்பித்தான்.
“இங்கப்பாருங்க, உங்கக்கிட்டப் பொய் சொல்லணும்னு எனக்கு எந்தத் தேவையும் இல்லை, நான் சொல்றதை நீங்க நம்பணும்.”
“நீங்களும் நம்புற மாதிரி எதுவும் சொல்லலையே தம்பி.”
“உண்மையாவே உங்க தங்கைய மீடியாவுல பார்க்கிற வரைக்கும் எனக்கு அவங்களைத் தெரியாது.” ரஞ்சன் இதைச் சொல்லும் போது சுரேஷ் பல்லைக் கடித்தான்.
“அப்போ எப்பிடி சுமியோட முகத்தை வரைஞ்சீங்க?”
“அது சுமியோட முகம் இல்லைங்க, என்னோட கனவுல வந்த பொண்ணோட முகம், அது உங்க சுமியா ஆகிப்போச்சு.”
“என்னது?!” இப்போது ஜெயராமின் முகமும் கடுகடுத்தது.
“எனக்கு மட்டுமில்லை, எங்க வீட்டுல இருக்கிற அத்தனைப் பேரும் இப்பிடித்தான் ஆச்சரியப்பட்டாங்க, நீங்களே யோசிச்சுப் பாருங்க, இங்க இருக்கிற உங்க சுமியோட முகம் யூகே ல இருக்கிற எனக்கு எப்பிடிங்க தெரியும்?”
“அதுதான் எங்களுக்கும் புரியலை, ஆனா நீங்க சொல்ற கதை நம்புற மாதிரி இல்லையே?!”
“உங்க தங்கையோட இன்டர்வியூ என்னோட கண்ணுல படாமப் போயிருந்தா இன்னைக்கு, இந்த நிமிஷம் நான் இங்க இருந்திருக்க மாட்டேங்க, என்னோட வீட்டுல அடுத்த ஓவியத்துக்கு ஸ்கெட்ச் போட்டுக்கிட்டு இருந்திருப்பேன்.” சொல்லிவிட்டு ரஞ்சன் சிறிது நேரம் அமைதியாக இருந்தான்.
ஜெயராமும் இப்போது எதுவும் பேசவில்லை. அவர் முகமும் சிந்தனையைக் காட்டியது.
“நம்ம எல்லாரோட காதுலயும் இந்தப் பய பூ சுத்துறான் ண்ணே!” சுரேஷ் மீண்டும் சீறினான்.
“இல்லைங்க, நான் உண்மையைத்தான் சொல்றேன், இவ்வளவு தூரம் மெனக்கெட்டு ஃப்ளைட் புடிச்சு வந்து உங்கக்கிட்ட இப்பிடியெல்லாம் கேவலமாத் திட்டு வாங்கணும்னு எனக்கு என்ன ஆசையா? சொல்லுங்க?” சுரேஷை ஒரு உஷ்ணப் பார்வைப் பார்த்துவிட்டுப் பேசினான் ரஞ்சன்.
“எனக்கு எந்தத் தேவையும் இல்லைங்க, என்னோட அம்மா கூட சொன்னாங்க, போகாதே போகாதேன்னு… ஆனா என்னால ஆர்வத்தை அடக்க முடியலைங்க, என்னோட கனவுல வந்த முகமொன்னு எங்கேயோ உலகத்துல ஒரு மூலையில இருக்குதுன்னு தெரிஞ்சப்போ…” ஒரு தவிப்போடு ரஞ்சன் சொல்ல ஜெயராம் அவனையேப் பார்த்திருந்தார்.
“எங்கம்மா சொன்னாங்க, ஒருவேளை அந்தப் பொண்ணுக்குக் கல்யாணம் ஆகிக்கூட இருக்கலாம்னு… எது எப்பிடி இருந்தாலும் எனக்கு அந்த முகத்தைப் பார்க்கணுங்க, இது எப்பிடிச் சாத்தியம் ன்னு நானுமேப் பல முறைத் திகைச்சுப் போயிட்டேன்… ஆனா, இதுதான் உண்மை.” சொல்லிவிட்டு ரஞ்சன் எழுந்து போய்விட்டான்.
அந்த வீடு இப்போது அமைதியாக இருந்தது. பிள்ளைகள் இருவரும் பள்ளிக்கூடம் போயிருந்தார்கள். வீட்டின் மூத்தவர்கள் நால்வரும் மாத்திரம் இப்போது ஹாலில் இருந்தார்கள். சுமித்ரா அவள் அறையில் கொதித்துக் கொண்டிருந்தாள்.
“ராஸ்கல்! என்னமாக் கதை விடுறான்! இந்த அண்ணனும் வேலை மெனக்கெட்டு அதை உட்கார்ந்து கேட்டுக்கிட்டு இருக்கு!” வாய்விட்டுப் புலம்பியவள் பாத்ரூமிற்குள் போனாள்.
அவன் தொட்ட இடம் இன்னும் குறுகுறுத்தது. நேராக ஷவருக்கு கீழ் நின்றது பெண். சில்லென்று வந்த குளிர்ந்த நீரை அள்ளி முகத்தில் வீசியடித்தவள் அதை நன்கு தேய்த்துக் கழுவினாள்.
எவ்வளவு தேய்த்த போதும் அவன் கொடுத்த முத்தம் இன்னும் அங்கேயே ஒட்டிக்கொண்டு இருந்தாற் போல இருந்தது. மீண்டும் மீண்டும் அவனையும் அவன் ஞாபகங்களையும் நீரினால் கழுவிக் கொண்டிருந்தவள் வெளியே நடந்த பேச்சுவார்த்தையைக் கவனிக்கவில்லை.
“தம்பி… எனக்கென்னவோ அந்தப் பையன் பொய் சொல்ற மாதிரித் தெரியலை.” மூத்தவரின் மனைவி மஞ்சுளாதான் பேச்சை ஆரம்பித்தார்.
“என்ன ண்ணி சொல்றீங்க? பைத்தியக்காரன் மாதிரி பேசிட்டுப் போறான், நீங்களும் அவனுக்கு சப்போர்ட்டா பேசுறீங்க?!”
“அப்பிடியில்லை தம்பி, ஆரம்பத்துல சுமி விஷயத்தைச் சொன்னப்போ நானும் நம்பலை, ஆனா… அந்தப் பையன் முகத்தைப் பார்க்கும் போது… எதுவும் தப்பா இருக்கிற மாதிரி தெரியலை.” இப்போது தன் மனைவியை யோசனையாகப் பார்த்தார் ஜெயராம்.
“என்ன சொல்றே மஞ்சுளா? அதுக்காக, அந்தப் பையனுக்கு நம்ம சுமியை கட்டிக் குடுக்கலாம் ன்னு சொல்லுறியா?”
“நான் அப்பிடிச் சொல்லலைங்க, அந்தப் பையனைப் பார்க்கும் போது அவங்கிட்டத் தப்பு இருக்காதுன்னு தோணுது.”
“அக்கா சொல்றது சரின்னுதான் எனக்கும் தோணுது, நம்பவே மாட்டோம் ன்னு தெரிஞ்சும் எதுக்கு வந்து திட்டு வாங்கணும்?!” இது பல்லவி, இளையவனின் மனைவி.
“இப்பத்தைய இளவட்டங்கள் எல்லாம் அப்பிடித்தான் இருக்கு பல்லவி, ஒருத்தனையும் நம்ப முடியாது.”
“ஏங்க? உங்களுக்கும் எனக்கும் அவ்வளவு வயசாகிப் போயிடுச்சா என்ன?! நாம இப்பிடித்தான் நடந்துக்கிறோமா என்ன?”
“நான் என்ன சொல்றேன், நீ என்னப் பேசுறே?” இளையவனும் அவன் மனைவியும் மல்லுக் கட்டினார்கள்.
“வீட்டுல வயசுக்கு வந்த பொண்ணை வெச்சிருக்கிற ஒரு அண்ணனா உங்களோட சந்தேகம் நியாயம்தான், ஆனா கொஞ்சம் ஓவரா சந்தேகப்படுறீங்களோன்னு தோணுது.” பல்லவியின் பேச்சில் மஞ்சுளாவின் முகத்தில் புன்னகை அரும்பியது.
“பையன் நல்லவனா இருந்தா சுமியை கட்டிக் குடுக்கிறது தப்பில்லைன்னுதான் நானும் சொல்லுவேன்.”
“என்னம்மா சொல்றே நீ?!” ஜெயராம் இப்போது திடுக்கிட்டுப் போனார்.
“ஆமா பெரியத்தான், பையனை பார்த்தாலே நல்ல வசதியான, பெரிய இடம் மாதிரித்தான் தோணுது, யூகே ல வேற இருக்காங்கன்னு சொல்லுறாரு, நல்ல வரனா இருந்தா பார்க்கிறதுல தப்பில்லைத்தானே?”
“என்ன பேசுற பல்லவி நீ?” சுரேஷ் இப்போது மீண்டும் எகிறினான்.
“அத்தான், இப்பிடிக் கோபப்படுறதுல எந்த அர்த்தமும் இல்லை, எனக்கு சுமியோட வாழ்க்கைதான் முக்கியம், அது நல்லா இருக்கணும், அவளுக்கொரு நல்ல புருஷன் கிடைக்கணும், அது இந்தப் பையனால கிடைக்கும் ன்னா எதுக்கு நாம வேணாம் ன்னு சொல்லணும்?”
“பல்லவி சொல்றது சரிதானே தம்பி?” கொழுந்தனாரிடம் கேட்டார் மஞ்சுளா.
ஜெயராம் இப்போதும் அமைதியாகவே அமர்ந்திருந்தார். அவருக்குத் தன் வீட்டுப் பெண்களைப் பற்றி நன்றாகத் தெரியும்.
மஞ்சுளா வீட்டின் மூத்த மருமகளுக்குரிய அத்தனைக் குணங்களையும் கொண்டவள். பல்லவி வயதில் கொஞ்சம் சிறியவள் என்பதால் படபடவென பேசினாலும் அண்ணிமார் இருவருக்கும் சுமித்ரா மேல் பாசமும் அக்கறையும் உண்டு.
மஞ்சுளா வீட்டின் கடைக்குட்டியைத் தன் பெண் போலவே பாவிப்பாள். பல்லவி கொஞ்சம் சுமித்ராவை அதட்டுவாள், இருந்தாலும் நாத்தனார் மேல் பாசம் நிறைய உண்டு. அந்த வீட்டுப் பெண்களுக்குப் பொறாமைப் படத் தெரியாது.
பெண்களுக்கு இயல்பிலேயே சூட்சும புத்தி அதிகம் உண்டு என்று நம்புபவர் ஜெயராம். ஆண்களுக்குப் புரியாத பல சங்கதிகள் பெண்களுக்குச் சட்டென்று புரிந்துவிடும்.
தன் வீட்டின் இரு பெண்களும் அந்தப் பையனுக்கு ஆதரவாகப் பேசவும் பெரியவர் கொஞ்சம் நிதானித்தார். அவசரப்பட்டு எந்த முடிவையும் எடுக்க வேண்டாம் என்று தோன்றி இருக்கும் போலும். எழுந்து உள்ளே போய்விட்டார்.
அண்ணன் எதுவும் பேசாமல் உள்ளே போகவும் சுரேஷும் எதுவும் பேசவில்லை. மனைவியைப் போல படபடவென பேசினாலும் அண்ணன் மேல் அலாதி மரியாதை வைத்திருக்கும் தம்பி அவன்!
“என்னக்கா, பெரியத்தான் எதுவும் பேசாமப் போறாங்க?!”
“இப்போதைக்கு அவசரப்பட்டு எந்த முடிவும் எடுக்க வேணாம்னு நினைச்சிருப்பாங்க பல்லவி.”
“நல்லதுதான், இவங்க துள்ளுற மாதிரி இல்லைக்கா, இது பொம்பிளைப் பிள்ளை விஷயம்.”
“அதைச் சொல்லு, சுமி இந்த விஷயத்தை வந்து சொன்னதுல இருந்து என்னவோ வயித்துல நெருப்பைக் கட்டின மாதிரித்தான் நான் திரியுறேன்.”
“ம்… வீம்புக்கு எதையாவது பேசிட்டு யாருக்கு வேணும்னாலும் கட்டிக் குடுக்கலாம், ஆனா கட்டின இடத்துல நாளைக்கு இது ஒரு பிரச்சினையா ஆகிடுச்சுன்னா…” பல்லவி சொல்லி முடித்திருக்கவில்லை. அதற்குள் மஞ்சுளா பதறினார்.
“சொல்லாத பல்லவி, அப்பிடி எதுவும் நடந்திடக் கூடாது!”
“அதைத்தான் நானும் சொல்றேன் க்கா, நீ அப்பிடிப் பண்ணிட்டே, இப்பிடிப் பண்ணிட்டே, நான் அதனாலேயே உனக்கு எங்கப் பொண்ணைக் குடுக்க மாட்டேன்னு சொல்றதெல்லாம் ரொம்ப ஓவர் க்கா.”
“குடும்பத்து ஆளுங்க எப்பிடி இருப்பாங்களோத் தெரியாதே பல்லவி?”
“எனக்கென்னவோ எல்லாம் நல்லாத்தான் இருக்கும்னு தோணுதுக்கா.”
“எனக்கும் அந்தப் பையனைப் பார்க்கும் போது எந்தத் தப்பான எண்ணமும் வரலை.”
“ம்…”
“ஆனா சுமி என்ன சொல்லுவாளோத் தெரியாதேம்மா?”
“அவ என்னத்தைக்கா சொல்லுறது? சின்னப் பொண்ணு, அவளுக்கென்னத் தெரியும்? நாம எடுத்துச் சொன்னாப் புரிஞ்சுக்கப் போறா.”
“அதுவும் சரிதான்.”
இவர்கள் இங்கேப் பேசிக் கொண்டிருக்கும் போது ரஞ்சன் கெஸ்ட் ஹவுஸிற்குள் நுழைந்தான். லலித் இவனைத்தான் வாசலில் பார்த்தபடி நின்றிருந்தான்.
“என்ன ரஞ்சன்? சொல்லாமக் கொள்ளாமப் போயிட்டீங்க?”
“இல்லை… நீங்க நல்லா அசந்து தூங்கிட்டு இருந்தீங்க, அதான் எதுக்கு டிஸ்டர்ப் பண்ணணும்னு நானேக் கிளம்பிட்டேன்.”
“என்ன சொல்றாங்க உங்க சுமித்ரா?” சிரிப்பை வாய்க்குள் மறைத்தபடி கேட்டான் லலித். ரஞ்சனுக்கும் அவன் கேலி புரிய புன்னகைத்தான்.
அவள் பெயரைச் சொன்னதும் இவன் முகமெல்லாம் மத்தாப்பைக் கொளுத்திப் போட்டாற் போல ஆகிப் போனது.
“அடேயப்பா! அம்மணி பெயரைச் சொன்னதும் ஐயாவோட முகமே மலர்ந்து போச்சு!”
“ஹா… ஹா…” ரஞ்சன் இப்போது வாய்விட்டுச் சிரித்தான். இன்னும் அவள் இதழ் தேன் இவன் இதழ்களில் இனித்தது.
அந்த இன்பத்தை இப்போதும் அனுபவிப்பவன் போல சில நொடிகள் கண்மூடி நின்றிருந்தான் ரஞ்சன். லலித்துக்கும் ஏதோ புரிந்திருக்கும் போலும்! எதுவும் பேசாமல் இவனையேப் பார்த்திருந்தான்.
“லலித், வீடொன்னு பார்த்திடுங்க, இப்போதைக்கு வாடகையா இருந்தாலும் பரவாயில்லை, கூடிய சீக்கிரமே அம்மா, அப்பா இங்க வருவாங்க.”
“சரி ப்பா, ஃப்ரெண்ட்ஸ் கிட்டச் சொல்லிடுறேன்.”
“ஒரு வில்லன்னு சொன்னீங்க… ரெண்டு வில்லனுங்க வீட்டுல இருக்கானுங்க.” இவன் பேச்சில் உள்ளேப் போகத் திரும்பிய லலித் சட்டென்று நின்றான்.
“என்ன சொல்றீங்க ரஞ்சன்?! அவங்க எல்லாருமா இன்னைக்கு வீட்டுல இருந்தாங்க?!”
“ஆமா.”
“ஐயையோ! ஏதாவது பிரச்சினை ஆகிடுச்சா என்ன?!”
“சின்னவரு பாய்ஞ்சுக்கிட்டு வந்தாரு… ஆனாப் பெரியவரு கொஞ்சம் நிதானமாப் பேசினாரு.”
“என்னப் பேசினாரு?”
“உங்களை நம்பி எப்பிடிப் பொண்ணு குடுக்கிறது எங்கிற மாதிரி பேசினாரு.”
“நீங்க பொண்ணு கேட்டீங்களா என்ன?!” லலித்தின் குரல் ஆச்சரியத்தில் தெறித்து வந்து வீழ்ந்தது.
“ஆமா… எதுக்கு சும்மா டைமை வேஸ்ட் பண்ணணும்?”
“அதுக்காக இப்பிடியாச் சட்டுன்னு போய் கேட்பீங்க?!”
“கேட்கணும்னு நினைச்சுப் போகலை லலித், அவளை இன்னொரு தடவைப் பார்த்தா நல்லா இருக்கும்னு தோணுச்சு, அதான் போனேன்…”
“ம்…”
“டரெயினுக்கு போய்க்கிட்டு இருந்தா, நம்மளை யாருன்னு தெரிஞ்சிருக்காதுன்னு தைரியமா நானும் போய் ஏறிட்டேன்.”
“கண்டு பிடிச்சிட்டாங்களா?!”
“ம்…” ரஞ்சன் இப்போது சிரித்தான்.
“அப்போ… மேடம் உங்களைப் பத்தி ஆராய்ஞ்சிருக்காங்க!”
“ஆமா… அப்பிடித்தான் தோணுது.”
“சூப்பர்! என்ன சொன்னாங்க?!” ஆவலோடு கேட்டான் லலித்.
“வாய்க்கு வந்தபடி நல்லாத் திட்டினா.”
“ஐயையோ!”
“நல்ல வேளை… ட்ரெயின் ல கூட்டமில்லை, இல்லைன்னா மானம் போயிருக்கும்.”
“ஹா… ஹா… அப்புறம் என்னாச்சு?!”
“அப்புறம்… பேசி… ஃபைன் கட்டி…” அந்த நிமிடங்களை ரசித்துச் சொன்னான் ஓவியன்.
“ஃபைனா?! டிக்கெட் எடுக்கலையா என்ன?!”
“பொண்ணைப் பார்த்ததும் அதெல்லாம் எங்க ஞாபகம் வந்திச்சு!”
“ஹா… ஹா… இந்த வேகம் சரி வராதுப்பா, நான் இன்னைக்கே வீடு பார்க்கிற வேலையை ஆரம்பிக்கிறேன், நீங்க உங்கப்பா, அம்மாவை கூடிய சீக்கிரமே வரச்சொல்லுங்க.” லலித் சொன்ன விதத்தில் ரஞ்சன் இப்போது சிரித்தான்.
அதேவேளை, தனது ரூமில் தனித்திருந்த சுமித்ராவின் அருகில் வந்தமர்ந்தார் மஞ்சுளா. பல்லவி ஏதோ வேலையிருப்பதாகச் சொல்லிவிட்டு அவர்களது ரூமிற்குப் போய் விட்டாள்.
“அண்ணீ…” சுமித்ராவின் அந்தக் குரலில் மஞ்சுளா கொஞ்சம் அதிர்ந்து போனார்.
“சுமிம்மா, என்னாச்சு?”
“எனக்கு இந்தக் கல்யாணம் வேணாம்” சட்டென்று சொன்னாள் சுமித்ரா.
“ஏன் சுமி?”
“எனக்குப் பிடிக்கலை.” வார்த்தைகளில் அத்தனை வெறுப்பு.
“ஓ… என்ன பிடிக்கலைன்னு நான் தெரிஞ்சுக்கலாமா சுமி?”
“அவன் நல்லவன் கிடையாது.” கோபமாகச் சொன்னது பெண்.
“சுமி! இது என்ன புதுப் பழக்கம்? மத்தவங்களை மரியாதை இல்லாமப் பேசுறது!” அண்ணி கடிந்து கொள்ளவும் அவர் மடியில் தலை வைத்துப் படுத்துக் கொண்டாள் சுமித்ரா.
ஜெயராமை மணமுடித்து மஞ்சுளா அந்த வீட்டுக்கு வரும்போது சுமித்ரா சிறு பெண். அந்தக் குட்டி நாத்தனார் மேல் மஞ்சுளாவிற்கு எப்போதுமேப் பாசம் அதிகம்.
ஒரு கட்டத்தில் தாயை இழந்த அந்தப் பெண்ணைத் தாய் போல பார்த்துக் கொண்டவரும் அவர்தான். சுமித்ராவும் தன் மூத்த அண்ணியிடம் எதையும் என்றைக்கும் மறைத்ததில்லை.
“என்னாச்சு? எதுக்கு சுமி இன்னைக்கு இப்பிடியெல்லாம் பேசுது?” மஞ்சுளா கேட்டதுதான் தாமதம், ட்ரெயினில் நடந்த அனைத்தையும் தன் அண்ணியிடம் கொட்டியது பெண். இப்போது மஞ்சுளா மலைத்துப் போனார்.
“நீ ஏதாவது தப்பாப் பேசினாயா சுமி?”
“நான் எப்பிடிப் பேசி இருந்தாலும் இப்பிடி நடந்துக்கிறது சரியா ண்ணி?” இளையவளின் பேச்சு நியாயமாக இருக்க மஞ்சுளா இப்போது மௌனித்தார்.
“அதனாலதான் சொல்றேன்… எனக்கு எதுவுமேப் பிடிக்கலை.” இளையவள் உறுதியாகச் சொல்ல மஞ்சுளாவின் முகம் சிந்தனையில் ஆழ்ந்தது. மடியில் படுத்திருந்த பெண்ணின் தலையைத் தடவிய படி அப்படியே அமர்ந்திருந்தார்.