Nammul orutthi 4

“வாட்?” என்று ஹாசினி தன்னையும் அறியாமல் சத்தமாக கேட்க, அத்தனை பேரும் அவளை நோக்கினர்.

ஆனாலும் சிந்து முகத்தில் எதையும் காட்டாமல் மென்னகையுடன் நின்றாள்.

அனைவரின் பார்வையை உணர்ந்த ஹாசினி, நொடியில் தன்னை மீட்டெடுத்து, “சாரி, ஏதோ நியாபகத்தில சத்தமா பேசிட்டேன்” என்றபடி அமைதியாக அம்மாவின் அருகில் போய் உட்கார்ந்து கொண்டாள்.

மூளையோ, “மாலில் திவ்யாகிட்ட பேசும் போது இந்த சிந்து அங்கத்தான் இருந்தாளா? அய்யோ… நானும் திவ்யாவும் பேசுனதை எல்லாம் கேட்டு இருப்பாளா? அச்சோ! அண்ணாவும் இவளும் ஓன்றரை வருஷமா லவ் பண்றாங்கன்னு அப்பா சொன்னாங்களே… சோ! கண்டிப்பா ஹரிஷ் தங்கச்சின்னு என்னைய கவனிச்சு பார்த்து இருப்பா! பேசுனது தெரிஞ்சிருக்குமோ? ஓஹ்! அதான் யாரோ பார்க்குற மாதிரியே ஃபீல் ஆச்சா! ஷிட்! இப்போ இவளுக்கு தெரியுமா? தெரியாதா” என என்னலாமோ யோசிக்க,

உள்ளத்தை பயம், குழப்பம் சூழ ஆரம்பித்தது. முகம் வாட ஆரம்பித்தது. பதற்றத்தில் நகம் கடிக்க ஆரம்பித்தாள்.

“ஏன் ஹாசினி? டென்ஷனா இருக்க”

“ஒண்ணுமில்லம்மா” வாய் அம்மாவுக்கு பதிலளித்தாலும், கண்கள் சிந்துவையே வட்டமடித்தது.

‘திவ்யாவும், நானும் பேசுனது கேட்டு இருக்குமா? ஒருவேளை கேட்டிருந்தா அண்ணாட்ட சொல்லிடுவாளா? இல்லையே! மூனு மாசத்துக்கு முன்னாடி நடந்தது… அண்ணாட்ட இது வரை எதுவும் சொல்லலியே? அப்போ கேட்டு இருக்க மாட்டா…’ ஒரு மனம் இவளுக்கு சாதகமாக யோசிக்க கொஞ்சம் ஆசுவாசமடைந்தாள்…

அந்த நிம்மதி கொஞ்சம் நேரம் கூட நீடிக்க விடாமல், இன்னொரு மனமோ அவளை பயம் காட்டியது ‘சப்போஸ் கேட்டிருந்து, கல்யாணத்துக்கு அப்புறம் சொல்லலாம்னு இருக்காளோ? நான் தான் பொண்ணு பார்க்க வர விடாம பண்ணேண்ணு தெரிஞ்சா வீட்ல தாங்க மாட்டாங்களே… அப்பா கொன்னே போட்டுருவாரே’

பயம் ஒருபக்கம், கேள்விகள் ஒருபக்கம் என ஹாசினியின் மனம் சுழன்று அடித்தது.

சிந்துவின் பார்வையை இவளால் எந்த ரகத்தில் சேர்க்க என்றே தெரியவில்லை.

இவள் சிந்துவை அலறவிடலாம் என்ற எண்ணத்தில் வந்தால், நடப்பதோ வேறு மாதிரி இருந்தது. இவள் மனம் அலறிக்கொண்டிருந்தது.

தவறு செய்பவர்கள், ஏமாற்றுபவர்களின் நிலை இது தான். ஒரு தவறை செய்து, அதை மறைக்க இன்னொன்று, பின் இன்னொன்று என்று எண்ணிக்கை கூடி கொண்டே தான் இருக்கும். விளைவு தன் நிம்மதியையும் இழந்து, குடும்ப நிம்மதியையும் இழக்க செய்கிறார்கள். இது போதாதென்று தன் தவறு வெளியில் தெரிந்துவிடுமோ என்று எந்த நேரமும் பயம் தான். அதுவே ஒருத்தனை கொஞ்சம் கொஞ்சமாக கொல்ல ஆரம்பித்துவிடும். இங்கு ஹாசினியின் நிலையும் அதுதான்.

அதன்பின் தன் யோசனையில் மூழ்கியவள், சுற்றத்தை கவனிக்கவில்லை.

இரண்டு குடும்பமாக சேர்ந்து, அடுத்த ஞாயிற்று கிழமை எளிமையான முறையில் நிச்சயத்தார்த்தை வைத்து கொள்ளலாம், நான்கு மாதம் கழித்து திருமணத்தை வைத்து கொள்ளலாம் என முடிவு செய்தனர்.

இவர்கள் கிளம்பும் நேரம் சிந்து ஹாசினியின் அருகில் வந்து, “நாம நிறைய பேசனும் ஹாசினி” என்று சொல்லி சிரிக்க, ஹாசினி தன் உணர்ச்சிகளை மறைக்க பெரிதும் பாடுபட்டாள்.

பதிலே சொல்லாமல், எதிலிருந்தோ தப்பித்து ஓடுவது போல் வேகமாக சென்று காரில் ஏறிக்கொண்டாள்.

கார் கிளம்பிய பின் சிந்துவிடம் வந்த அவள் தங்கை யமுனா, “அக்கா, இந்த ஹாசினி நாட் லுக்கிங் நார்மல்க்கா… நம்மளை பார்க்குற பார்வையே சரியில்லை… ஏதோ பிடிக்காம வந்த மாதிரி இருக்காங்க” ஆட்களை கணிப்பதில் யமுனா வல்லவள்.

சிந்துவிற்கு இதெல்லாம் புரிந்தாலும், தங்கையிடம் காட்டி கொள்ளாமல், “இல்லடி! மே பீ அவங்க மேரேஜ் தள்ளிப்போற டென்ஷன் போல… சரி வா… உள்ளே போலாம்” பேச்சை மாற்றி கொண்டு வீட்டின் உள்ளே சென்றாள்.

சிந்துவிற்கு உண்மையில் ஹாசினியின் ரகசியம் தெரியுமா? ஒருவேளை தெரிந்திருந்தால் அது ஹாசினியின் வாழ்க்கையில் என்ன மாதிரியான விளைவுகளை ஏற்படுத்தும்? தன் தவறு வெளிப்பட்டுவிடுமோ என்பதை மட்டுமே யோசிக்கும் ஹாசினி, தன் தவறை உணர்வாளா? எல்லா கேள்விகளுக்கும் காலம் தான் பதில் சொல்லும்…

ஓலா காரில், ஜன்னலில் தலைசாய்த்தபடி, ஹாசினி கண்மூடி அமைதியாக வர, லட்சுமியோ, “ஏங்க! இப்போவே லேட்… வீட்டில போய் நைட்டுக்கு ஏதும் செய்ய முடியாது… பேசாம போற வழியில ஹோட்டல்ல சாப்பிட்டுக்கலாம்” என சொல்ல, சரியென்று டிரைவரை ஹோட்டலில் நிறுத்த சொன்னார்கள்.

சாப்பிடுவதற்கான மனநிலை இல்லாவிட்டாலும், எதையும் காட்டிக் கொள்ளாமல் கடனெயென்று ஹாசினியும் இறங்கினாள்.

கூட்டம் நிரம்பி வழிய, கேசவன் இடம் இருக்கிறதா என பார்க்க உள்ளே செல்ல, ஹாசினி அம்மாவுடன் ஹோட்டல் வாயிலில் நின்றிருந்தாள். ஹரிஷ் ஆபிஸ் போன் கால் என்று சொல்லியபடி போனை எடுத்து கொண்டு நகர்ந்தான்.

உள்ளே சென்ற கேசவனோ முகத்தை தொங்கவிட்டப்படி, “வேற ஹோட்டலுக்கு போய்டலாம்… உள்ளே இடம் இல்லை… வாங்க”

ஏற்கனவே கடுப்பில் இருந்த ஹாசினியோ இன்னும் எத்தனை வாட்டித்தான் அலைய வைப்பார்கள் என்று மனதில் நினைத்து, ஹோட்டலின் உள் பார்வையை செலுத்த, அங்கு ஆறு பேர் அமரும் ஒரு பெரிய மேஜையில், ஒரு வயதான தம்பதிகள் மட்டும் உட்கார்ந்து சாப்பிட, அவர்கள் பக்கத்தில் உள்ள நான்கு சேர்கள் ப்ரீயாக இருக்க, ‘இடத்தை வச்சுகிட்டே இந்த அப்பா அலைய விடுவார்…’ என்று நினைத்து

“ப்பா! அதோ அங்க இடம் இருக்கு… வாங்க”

அவள் காட்டிய இடத்தை பார்த்த கேசவனோ, “அங்க வேணாம் மா… வேற கார் புக் பண்ணு… லேட் ஆகுது”என்றபடி மணியை பார்க்க

“ப்பா! இங்க இடத்தை வச்சுட்டே, ஹோட்டல் ஹோட்டலா ஏன் சுத்தனும்” எரிச்சல் அப்பட்டமாக தெரிய

லட்சுமியும், “ஆமாங்க… அதான் இடம் இருக்குல… வாங்க உள்ளே போலாம்”

அப்போதும் கேசவன் மறுக்க, ஹாசினியும் எரிச்சலில் அப்போ டின்னரே வேணாம்… வீட்டுக்கு கார் புக் பண்ணலாம் என்று சொல்லியபடி போனை பார்த்து கொண்டே நகர,

மகள் நகர்ந்த பின், கேசவன் மனைவியிடம் தொடர்ந்தார்

“லட்சுமி, நான் ஒன்னு சொன்னா நீயும் புரிஞ்சிக்க மாட்டியா? அவள் சின்னப்புள்ள… அவளுக்கு ஒன்னும் தெரியாது… நீயும் சரியா தெரியாம பேசுற… அங்க உட்கார்ந்து இருக்குற அந்த இரண்டு பேர் யார்னு தெரியுதா… கடைசியா வரேன்னு சொல்லிட்டு வராம போனாங்கள்ள… அந்த பேங்க் மாப்பிள்ளை… அதான் தேவராஜ் ஓட அம்மா, அப்பா” சங்கடத்தில் முகம் கூம்ப மேலும் தொடர்ந்தார்.

இப்போது லட்சுமிக்கும் புரிய ஆரம்பித்தது.

“அய்யோ மன்னிச்சுடுங்க… நான் அவங்களை நேர்ல பார்த்தது இல்லல… அதான் தெரியாம பேசிட்டேன்”

“ஹ்ம்ம்… அன்னிக்கு அவங்க வரேன்னு சொல்லிட்டு வரலைன்னு சொன்னதும், ஒரு நல்ல வரன் காரணமேயில்லாமல் தட்டி போதுனு வருத்தத்தில், நானும் ப்ரோக்கர்ட்ட அவங்க அட்ரஸ் வாங்கி அவரை நேர்ல மீட் பண்ணி பேசுனேன்… அதை என்னால மறக்கவே முடியாது… அன்னிக்கு அவர் பார்த்த பார்வை இன்னும் நியாபகம் இருக்கு லட்சுமி, ஒரு காரணமும் சொல்லலை… இப்ப என் பையனுக்கு கல்யாணம் இல்லனு முடிச்சுட்டார்… அவர் ஏதும் காரணம் சொல்லியிருந்தா கூட நான் அவரை ‘சரிதான் போடானு’ சொல்லிட்டு வந்திருப்பேன். ஆனால் அவர் பார்த்த பார்வை இன்னும் நியாபகம் இருக்கு… சொல்லு! இவர் முன்னாடி எப்படி என்னால உட்கார்ந்து சாப்பிட முடியும்… அதான் இடம் இல்லைனு சொன்னேன்… இது ஹாசினிக்கு தெரிஞ்சா வருத்தப்படுவா… அதான் சொல்லலை… நீயும் சொல்லாத… வா… வீட்டுக்கே போய்டலாம்” என்றபடி மெல்லிய குரலில் பேச, கார் புக் ஆனதை சொல்ல வந்த ஹாசினிக்கோ இது அனைத்தும் தெளிவாக கேட்டது.

ஆனால் இது எதுவும் கேட்காதது போலயே இருந்து விடுவோம் என முடிவெடுத்து, சத்தம் போடாமல் நகர்ந்தாள். அவளது பார்வையில் அந்த வயதான தம்பதி பட, அவர்கள் அழகாக சிரித்து பேசி கொண்டிருந்தார்கள்.

‘திவ்யா நல்ல ஷ்ட்ராங்கான பிட்டை போட்டு இருக்கா போல, இந்த மனுஷன் எங்க அப்பாவை கண்ணாலேயே விரட்டியிருக்கார்… நல்ல வேளை வேற ஏதும் சொல்லல…’ என்று நினைத்தப்படி ஏளன புன்னகையுடன் அவர்களை பார்த்தாள்… அந்த முட்டாள் பெண்ணிற்கு தனது தந்தையின் வார்த்தைகளில் இருந்த அவமானமும், வலியும் தெரியவில்லை…

‘ஹ்ம்ம்… இது என்னடா சாப்பிட வந்த இடத்திலேயும் வம்பு… எங்க போனாலும் என் சம்பந்தப்பட்ட யாராச்சு இருக்காங்க… சே… கடுப்பை கிளப்பிகிட்டு’

நினைத்தப்படி நடந்தாள். பின் தள்ளி சென்று போன் பேசி கொண்டிருந்த அண்ணாவையும் அழைத்து, வீடு வந்து சேர்ந்தார்கள்.

தனது ரூமூக்குள் நுழைந்த ஹாசினிக்கோ, மனதில்…

‘ஹ்ம்ம்… வெரி டஃப் டே… மார்னிங்ல இருந்து ஃபுல் ஷாக்… சே… சிந்து நாம நினைச்சதை விட ரொம்ப ஷார்ப் அண்ட் டேஞ்சர்… இப்போவே என்னவோ குற்றவாளி மாதிரி பார்க்குறா… இவளை வீட்டுக்குள்ளே வரவிட்டோம்… அவ்ளோ தான்… சமாதி கட்டிடுவா… பக்குவமாத்தான் ஹேண்டில் பண்ணணும்’

அறையில் குறுக்கும் நெடுக்குமாக நடந்தாலும் என்ன செய்வது என அவளுக்கு எதுவுமே தோன்றவில்லை. பயமாக இருந்தது. மனம் ஒரு நிலையில் இல்லை பெண்ணிற்கு…

தன் அம்மாவை வைத்து தான், சிந்துவை அடக்க வேண்டும் என தற்போதைக்கு முடிவெடுத்தாள். ஆனால் அதுவுமே எந்தளவுக்கு சரிவரும் என பேதை பெண்ணிற்கு தெரியவில்லை… குழப்பத்துடன் பெட்டில் சாய, மனமோ வழக்கம்போல் திவ்யாவை சாட ஆரம்பித்தது.

‘பாவி! எல்லாம் உன்னால தான்… அன்னிக்கு உன்னை மால்ல பார்க்க வந்ததே தப்பு… உன்கிட்ட உண்மையை சொன்னது அதைவிட தப்பு… இப்போ யார்னே தெரியாதவ… என்னைய முறைக்குறா… எல்லாம் என் நேரம்’

அதுவரை படுத்தவுடன் உறங்ககூடியவள், அன்று முதல் தன் உறக்கங்களை தொலைக்க ஆரம்பித்தாள்.

இரு நாட்கள் கழிந்த பின், சிந்துவிற்கு நிச்சய புடவை எடுக்க என்று ஹாசினி தன் அம்மாவுடன் ஒரு பிரபல துணிக்கடைக்கு செல்ல… அங்கே இவர்களுக்கு முன் சிந்து தன் தங்கை யமுனாவுடன் காத்து இருந்தாள்.

சிந்து வந்தது லட்சுமிக்கு கொஞ்சம் பிடிக்கவில்லையோ என்னவோ… அவரது முகம் பிடித்தமின்மையை காட்ட, ஹாசினிக்கு வாய்ப்பு தானாக கிடைத்தது.

அம்மாவிடம் பற்ற வைக்க ஆரம்பித்தாள், “இதெல்லாம் ஓவர் மா! நிச்சய புடவை செலக்ட் பண்ணுறதுக்கு எல்லாம் கல்யாண பொண்ணு வருவாங்களா? அதும் நீ அவங்களை கூப்பிடவே இல்லை… அண்ணாகிட்ட கடையை கேட்டுட்டு வந்து இருக்காங்க… இதெல்லாம் நல்லாவே இல்லை… அப்போ நம்ம இஷ்டத்துக்கு அண்ணிக்கு எதுவுமே வாங்க முடியாதா… அது சரி, லவ் மேரேஜ்ல பெத்தவங்க பங்கு ரொம்ப கம்மி போல”

ரகசிய குரலில் சொல்லிவிட்டு அம்மாவின் முகத்தை ஆராய, அதில் சிந்துவின் மீது அதிருப்தி தெரிய, மனதுக்குள் சிரித்தாள்.

சிந்துகிட்ட நேரடியாக மோத முடியாது. இப்படித்தான் மோத வேண்டும், முடிவெடுத்துக் கொண்டாள்

பின் சத்தமாக, “ஓகே மா! அண்ணியே இங்கே வந்துட்டாங்க… சோ! அவங்களே அவங்களுக்கு பிடிச்ச மாதிரி எடுத்துப்பாங்க… சோ நான் எதுக்கு… நான் போய் எனக்கு சுடிதார் பாக்குறேன்…” சொல்லிவிட்டு நகர, லட்சுமிக்கு மகளை போகாதே என்றும் சொல்ல முடியாமல்,

“சரி ஹாசினி… நீ போய் செலக்ட் பண்ணி வை… நானும் இப்போ வரேன்” சொல்லிவிட்டு புடவைகளை ஆராய,

சிந்துவிற்கு தன் அத்தையின் முகத்தை பார்த்தே ஓரளவிற்கு தான் இங்கு வந்தது பிடிக்கவில்லை என்பது புரிந்தது. அதிலும் ஹாசினி பேசிய பின் இன்னுமே அவர் முகம் பிடித்தமின்மையை காட்டியது. நிச்சய புடவை எடுக்கும் போது ஹாசினி ஏதும் சொதப்பிடக்கூடாது என தான் இங்கு வர, ஹாசினியோ அதையே பயன்படுத்தி கொண்டாள். இதே மாதிரி சின்ன சின்ன விஷயங்கள் எல்லா குடும்பத்திலும் இருப்பது தான். ஆனால் இதை ஊதி பெரிதாக்க என்று ஒருத்தர் இருக்கும் போது, நாம் இன்னும் உஷாராக இருக்க வேண்டும் என முடிவெடுத்தவளாக, தன் புடவையை தேர்ந்தெடுப்பதில் கவனம் செலுத்தினாள்.

சுடிதார் செக்‌ஷனில் ஹாசினிக்கோ, யமுனாவுடன் சிரித்து பேசியபடி புடவை எடுக்கும் சிந்துவே நினைவில் இருக்க, சுடிதார்களை மனம் போன போக்கில் பார்க்க, ஒரு சுடிதார் கண்ணை கவர்ந்தது. அதை எடுத்து, அங்குள்ள கண்ணாடி முன் தனக்கு வைத்து பார்க்க, அது அவளுக்கு அழகாக இருந்தது.

பின் பக்கத்தில் உள்ள கடை ஊழியரிடம்,

“இது ரொம்ப சூப்பரா இருக்கு… பட் எனக்கு கொஞ்சம் அல்டர் பண்ணணும்… ஹிப் சைஸ் மட்டும் குறைக்கனும்” என்று கண்ணாடி முன் நின்று காட்டினாள்.

“பாருங்க… இந்த இடுப்பு பக்கம் சுடி லுஸா இருக்கும் போல… சோ இங்க கொஞ்சம் டைட் வேணும்” என்றபடி சொல்ல,

பின்னால் ஒரு ஆண் பாடும் கூரல்…

பெண்ணே உந்தம் மெல்லிடை பார்த்தேன்…

அட்டா பிரம்மன் கஞ்சனடி

சற்றே நிமிர்ந்தேன்

தலைசுற்றி போனேன்

ஆஹா! அவனே வள்ளலடி…

இவளுக்கு அது தன்னை கிண்டல் அடித்து பாடுவது போல தோன்ற,

யாரென்று திரும்பி பார்த்தாள்!

ஹெட்செட் போட்டு, சுடிதார்களை பார்வையிட்டப்படி ஒருவன் பாடி கொண்டிருந்தான்.

‘ஓஹ்… இவன் அந்த லிப்ட் பார்ட்டில,

ஹ்ம்ம்… எந்த டைம்ல அந்த பீனிக்ஸ் மால் கால்ல வச்சேனோ… சுத்தி சுத்தி அடிக்குது…’ புலம்பிய மைண்ட் வாய்சை அமைதிப்படுத்தி அவனை பார்க்க,

அவனோ அவன் போக்கில் சுடிதார் பார்த்து கொண்டிருந்தான்… இவளும் அவனை கண்டு கொள்ளாமல் இருக்க முடிவு செய்து திரும்பி நின்று கொண்டாள்.

சில நிமிட காத்திருப்புக்கு பின், கடை ஊழியர் இவளிடம் வந்து, “மேம்… நீங்க சொன்ன மாதிரி ஹிப் சைட்… அல்டர் பண்ணியிருக்கோம்… கரக்ட்டா பாருங்க”

இவளும் வாங்கி கண்ணாடி முன் நின்று வைத்து பார்க்க… மறுபடியும் பாடும் கூரல்!

லாலாக்கு டோல் டப்பிமா…

கண்ணே கண்ணம்மா…

உன் இடுப்பை சுற்றி திரும்பி பாரம்மா…

அவ்ளோதான் ஹாசினியின் பொறுமை,

ஏற்கனவே கடுப்பில் இருந்தவள்… அவனை விடக்கூடாது என்ற முடிவில்… அவனருகில் போய்

“ஹலோ மிஸ்டர்… என்ன கிண்டலா… ஒரே பாடுறீங்க”

திடீரென்று ஒரு பெண்ணின் குரல் கேட்க… காதில் போட்டிருந்த ஹெட்செட்டை கழற்றி நிமிர்ந்து பார்த்தான் அவன்.

தன் முன்னால் நின்ற ஹாசினியை பார்த்த பின் தானாகவே அவன் உதடுகள், “ஓஹ்… ஜெனிலியா!” என்று முனுமுனுத்தது.

சில பேருக்கு சிலரை மறக்காது… அதே போல்தான் அவனுக்கு, லிப்டில் தன்னை முறைத்து நின்ற பெண் அவனுக்கு மறக்கவில்லை போல,

“இவள் என்ன… எப்போ பார்த்தாலும் முறைச்சுட்டு நிக்கிறா” என்று நினைத்தப்படி

“என்ன மேடம் பிரச்சனை உங்களுக்கு”

“என்னைய கிண்டல் அடிச்சு பாடினீங்க தானே… ஏன்” அடக்கப்பட்ட கோவம் தெரிந்தது.

“வாட்… நான் கிண்டல் அடிச்சு பாடினேனா? நான் ஹெட்செட் போட்டு இருக்குறது தெரிலயா உங்களுக்கு… நான் அதுல வர சாங்க்ஸ் சும்மா பாடுனேன்… உங்களை டீஸ் பண்ற இண்டென்ஷன் எனக்கு இல்லை” முயன்று பொறுமையாக பதிலளித்தான்.

“ஓஹ் அது எப்படி… டைமிங் சாங்க்ஸா பாடுவீங்க… கேட்டா சும்மா பாடுனேன்னு சொல்றீங்க” எரிச்சல் வெளிப்பட்டாலும் அமைதியான குரலில் பேசி கொண்டிருந்தாள்.

“உங்களுக்கு என்ன தான் பிரச்சனை மேம்… அன்னிக்கு லிப்ட்லயும் என்னை முறைச்சீங்க… இங்கயும் என்கிட்ட மோதுறீங்க”

அவன் லிப்ட் என்றவுடன், ஓஹ்… இவனுக்கும் நியாபகம் இருக்கா என்ற எண்ணமும் சேர… அதோடு தன்னை சுற்றியுள்ள பிரச்சனைகளும் நினைவு வர… வார்த்தையை விட்டாள் பெண்.

“ரைட்… நீங்களே சொல்றீங்க… லிப்ட்ல நான் முறைச்சேன்… அப்புறம் இங்கயும் நான் முறைக்கேன்னு… சோ… என்னைய பாலோவ் பண்றீங்களா… என் முகத்தையே பார்த்துகிட்டு இருக்கீங்களா… வெக்கமா இல்லை… இங்க கேர்ள்ஸ் செக்‌ஷனில் பையனுக்கு என்ன வேலை… சை” கோவமாக பேசினாலும், அடுத்தவர் கவனம் கவராமல் பேசினாள்…

அவள் கூறிய வார்த்தைகளில் கோவமடைந்த அவனும், “மேம்… நீங்க யாருன்னே எனக்கு தெரியாது… நான் எதுக்கு பாலோவ் பண்ணணும்… அண்ட் இன்னும் கொஞ்ச நாள்ல கல்யாணம் ஆகப்போற பையன் நான்… என்னோட வுட்பீக்காக சுடிதார் எடுக்க வந்தேன்… அதான் கேர்ள்ஸ் செக்‌ஷனில் நிக்கிறேன்… புரிஞ்சதா? தேவதை மாதிரி எனக்காக பொண்ணு வெயிட் பண்ணும் போது நான் எதுக்கு மற்றவங்களை பார்க்கனும்… ரைட்… பார்த்து பேசுங்க… அதோட பாலோ பண்ற அளவுக்கு நீங்க ஓர்த் இல்ல” நக்கலாக கூறினான்.

அவன் கூறும் விஷயங்கள் புரிந்தாலும், அவனது கடைசி வார்த்தைகளில் எரிச்சலடைந்த அவளும், “போடா” என்றபடி அவன் பதிலுக்கு காத்திராமல் வேகமாக நடந்தாள்.

“ஷிட்… மேரேஜ் பண்ணிக்க போற பொண்ணுக்காக பர்ஸ்ட் பர்ஸ்ட் ஒரு சுடி எடுக்கலாம்னு பார்த்தா… இவள் யாருன்னே தெரியல… என் மூட் ஸ்பாயில் பண்ணிட்டா… சே” என்று முணங்கியபடி அவனும் நடந்தான்.

அவனின் வார்த்தைகள் கடந்து செல்லும் அவள் செவிகளிலும் விழ, ஒரு நிமிடம் அவளது இதயம் அவனுக்காக யோசித்தது…

‘யார் மேலயோ உள்ள கோவத்தை நான் இவன் மேல காட்டுகிறேனா…’ அவன் வுட்பீக்கு ஆசையா டிரெஸ் எடுக்க வந்து இருக்கான்… தப்பா பேசிட்டேனா… ஒரு வேளை என்னை டீஸ் பண்ணி பாடலியா…’ ஒரு நிமிடம் மனம் அவனுக்காக யோசிக்க, திரும்பி பார்த்தாள் அவனை. ஆனால் அவன் அங்கு இல்லை. கிளம்பிவிட்டான் போல…

சரி, இதுல நம்ம தப்பு இல்லை என அவன் பற்றிய எண்ணங்களை உதாசீனப்படுத்திவிட்டு நடக்க ஆரம்பித்தாள்.

அங்கு அதற்குள் சிந்துவிற்கு நிச்சய புடவை தேர்ந்தெடுத்து வைத்திருக்க… இவளை பார்க்குமாறு அழைக்க, இவள் வேண்டாமென்று மறுத்து விட்டாள். அவள் அம்மாவை தவிர வேறு யாரும் புடவையை பாரு என்று ஹாசினியை சொல்லவில்லை. அது பெண்ணின் எரிச்சலை தீண்டிவிட, “ம்மா லேட்டாகுது… போலாம்” என்று சொல்ல

புடவைக்கு பணம் செலுத்தி விட்டு, வீடு கிளம்பினர்.

சிந்துவும் கடையிலேயே தனது அத்தையிடமும், நாத்தனாரிடமும் சொல்லிவிட்டு கிளம்பினாள்.

ஹாசினி அதன் பின் மௌனத்தை குத்தகைக்கு எடுத்து கொண்டாள்.

யாருக்கும் காத்திராமல் நிச்சய நாளும் வந்தது.