சூர்யநிலவு 17
சூர்யநிலவு 17
அத்தியாயம் 17
சித்திரை மாதத்து வெயில், பூமியை பொசுக்கி கொண்டிருக்க, இங்கே வெற்றியும் கோவத்தின் உச்சத்தில், ஆகாஷை பொசுக்கி கொண்டிருந்தான். ஆகாஷ் மதுவை காண கூட்டிச் செல்கிறேன் என்று வாக்களித்த பிறகே, வெற்றியின் வெட்பம் சற்று தணிந்தது.
வெற்றி! ஆகாஷை இழுத்து கொண்டு, மதுவை காண மிகவும் ஆர்வமாக சென்றான்.
வாகனம் நிற்கவும் வெற்றி மதுவை காணும் ஆவலில், ஆகாஷை மறந்து வீட்டிற்குள் நுழைந்தான்.
அங்கே கண்ட காட்சியில், நெருப்பை மிதித்தது போல் ஸ்தம்பித்து, சிலையாக அதே இடத்தில் தேங்கி நின்றான். அடுத்த அடியை எடுத்து வைக்க அவன் கால்கள் ஒத்துழைக்கவில்லை.
சோஃபாவில், பிரதாப்பின் கண்களில் கடலளவு காதலோடும், கைகளில் உணவு தட்டோடும் அமர்ந்திருக்க, அவனை மிக நெருங்கி அவன் தோளில் தலைசாய்த்து மதுநிலா.
“பேபி நீ ஒழுங்காவே சாப்பிட மாட்டேங்கிற. பாரு எப்படி இழச்சு போயிட்ட” என கடிந்து கொண்டே, உணவை ஊட்டி கொண்டிருந்தான்.
“நீ அரைமணி நேரத்துக்கு ஒருதடவை, எதையாவது தினிச்சுக்கிட்டே இருந்தா என்னோட வயிறு தாங்க வேண்டாமா?” என சிணுங்கி கொண்டே, அவன் ஊட்டும் உணவை உண்டு கொண்டிருந்தாள்.
“வர வர உனக்கு விளையாட்டு ரொம்ப ஜாஸ்தியாகிடுச்சு” என அவள் நெற்றியோடு, அவனின் நெற்றியை செல்லமாக முட்டினான்.
அவ்வளவு அந்யோனியமான காட்சி. அந்த நெருக்கம் உடலளவில் என்று சொல்வதை விட, மனதளவில் என்று சொன்னால் சரியாக இருக்கும்.
இந்த காட்சியை வெற்றியால் காண முடியவில்லை.’அவள் தனக்கு இல்லை.’ என மூளை சொன்னாலும், அதை ஏற்க முடியாமல் மனதில் சலனம்.
மூன்று வயது முதல், அவளை தன் மனைவியாக கண்ட மனம், இப்போது இன்னொருவனின் உரிமையாக காண முடியாமல் தவித்தது.
“ஏன் இங்கயே நின்னுட்ட வா” என்ற ஆகாஷின் குரலில் தன் நிலை அடைந்தான்.
பிரதாப், நிலாவின் பார்வையும் வாயிலை நோக்கி திரும்பியது. வெற்றியை நிச்சயம் எதிர்பார்க்கவில்லை.
நிலாவின் விழிகளில் ஒரு குற்ற உணர்வு. பிரதாப்பின் பின் சென்று மறைந்தாள்.
வெற்றி நிச்சயம் இப்படியொரு மதுவை எதிர்பார்க்கவில்லை. மனம் உடைந்து போனான்.
பிரதாப் அவளை முன்னே கொண்டுவந்து, தன் கையணைவில் வைத்து கொண்டு வெற்றியை உறுத்து விழித்தான்.
“ஏன் மது எதையும் எங்கிட்ட சொல்லாமல் என்னைவிட்டு போன?” என்ற கேள்வியோடு அவளை நெருங்கினான் வெற்றி.
வெற்றி அவளை நெருங்க முடியாமல், பிரதாப் அவனை தடுத்து உஷ்ண பார்வை வீசினான். அதிலிருந்தது என்ன?
அவளை நீ கேள்வி கேட்க கூடாது என்ற கட்டளையா?
அவள் எனக்கு மட்டுமே சொந்தம். யாரும் அவளை நெருங்க கூடாது என்ற உரிமை உணர்வா?
சவாலில் ஜெயித்து விட்டேன் என்ற மமதையா?
வெற்றியும் பிரதாப்பும் ஒருவரை ஒருவர் முறைத்து நின்றனர். இருவர் நினைவும் சவால் விட்ட நாளிற்குச் சென்றது.
********************
அன்று மாணவர்களின் கரகோஷத்துடன், மேடை ஏறிய பிரதாப்பின் விழிகள், பிங்க் நிறப்புடவையை தேடி அலைபாய்ந்தது. மாணவர்கள் அவனை பாடச்சொல்லி கூச்சல் எழுப்ப ஆரம்பித்திருந்தனர்.
அவனது மனம் ஒரு நிலையில் இல்லாததால்,”ஹேய் கைஸ்! நிறைய ப்ரோக்ராம் இருக்குப்பா. அதை என்ஜாய் பண்ணுங்கள்” என நழுவ முயன்றான்.
அவன் திரும்பி நடக்க ஆரம்பிக்கவும், கூச்சல் அதிகமானது. அவர்களை அடக்க திரும்பிய அவனின் விழிகளில் விழுந்தாள், அந்த பிங்க் நிறப்புடவை அணிந்த அவனின் பிங்க் ரோஜா.
அளவான ஒப்பனையோடும், அவனை மயக்கும் மாய புன்னகையோடும், அவனின் தேவதை அவனை மயக்கி கொண்டு, அவனெதிரே எழிலோவியமாக அமர்ந்திருந்தாள்.
அவன் விழிகள் அவளிடம் பசைபோட்டு ஒட்டிக்கொண்டது. தானாக அவன் கரங்கள் மைக்கை வாங்கி துள்ளலோடு பாட ஆரம்பித்திருந்தது.
யார் இந்த தேவதை யார் இந்த தேவதை
ஒரு கோடி பூக்கள் உலகெங்கும் உண்டு
இந்த பெண்போல அழகான பூவொன்று உள்ளதா
யார் இந்த தேவதை யார் இந்த தேவதை
பாடல் முடியவும், இன்னுமொரு பாடல் என வேண்டுகோள் வைத்தனர். இந்த முறை மறுப்பு சொல்லமால். பிங்க் ரோஜாவை கண்களில் நிரப்பி கொண்டே,
கண்ணுக்குள்ளே உன்னை வைத்தேன் கண்ணம்மா
நான் கண்கள் மூட மாட்டேன் அடி செல்லம்மா
நான் கண்கள் மூட மாட்டேன் அடி செல்லம்மா
நீதான் என் சந்தோசம், பூவெல்லாம் உன் வாசம்
நீ பேசும் பேச்செல்லாம் நான் கேட்கும் சங்கீதம்
உன் புன்னகை நான் சேமிக்கிற செல்வமடி
நீ இல்லை என்றால் நானும் இங்கே ஏழையடி
என்று பாடி முடித்தான்.
அவன் மனதில் பொங்கி பெருகிய காதலை எல்லாம், ஒன்று திரட்டி பாடிக்கொண்டிருந்தான். இந்த பாடல் அவனது உணர்வுகளோடும், குரலோடும் கலந்து ஒன்றிப்போனது. அவனது பார்வை அவனின் பிங்க் ரோஜாவை விட்டு இம்மியும் நகரவில்லை. பெண்ணவளும் மயங்கி தான் போனாள் அந்த பாடலின் இனிமையில்.
அந்த கல்லூரி மேடை, பிரதாப்பின் பாடல்களால் அழகாகி கொண்டிருந்தது.
அவள் விழி மூடி ரசித்ததிலிருந்தே, அவளிற்கு பாடல்களில் ஆர்வம் இருப்பதை உணர்ந்து கொண்டான். அவனுடன் இணைந்து, முணுமுணுத்த அவளது இதழசைவில், அவளிற்கு பாடத் தெரியும் என்பதையும் புரிந்துகொண்டான்.
“ஒன் மோர் சாங்” என மீண்டும் ஒரு குரல் வர.
“நானே பாடினா போர் அடிச்சுடும், நீங்க யாராவது பாடுங்கள், நான் அதை கேட்டு ரசிக்கறேன்” என அவளை, தன் விழிகளால் விழுங்கி கொண்டே கூறினான்.
“என்னது நாங்க பாடுறதா? ஏன் எஸ்.பி உனக்கு இந்த கொலைவெறி?” என அவனிடம் சொல்லிவிட்டு, பக்கத்தில் இருந்த நண்பனிடம் “மச்சான் நம்மள பாட சொல்லி சாச்சுப்புட்டான் மச்சான், சாச்சுப்புட்டான்” என கூட்டத்தில் ஒரு குரல் தனித்து ஒலித்தது.
அனைவரும் கொல் என சிரித்துவிட்டனர். சிரிப்பினூடே,”என்ன கைஸ் அவ்ளோதானா உங்க தைரியம், மேடை ஏற இவளோ கஷ்டமா” என கிளப்பிவிட்டான்.
“இங்க விருந்தினரா வந்திருக்கவங்க கூட கலந்துக்கலாம். இது ஜஸ்ட் ஜாலிக்கு தான்.” என உசுப்பேற்றினான்.
அவன் எதிர்பார்த்தபடி அவனின் ரோஜா, தோழியின் வற்புறுத்தலால் மேடையேறினாள். பிரதாப்பின் அருகே அவனின் தேவதை, சொர்க்கத்தில் மிதந்தான்.
மேடை அருகிலிருந்த வெற்றிகோ உச்சகட்ட அதிர்ச்சி.’என்ன மதுவிற்கு பாட தெரியுமா?’ (நம்ம மைண்ட் வாய்ஸ்: உனக்கு அவளை பத்தி என்ன தெரியும், இது தெரியலையென வருத்தப்பட.)
இப்போது அனைவரும் “மதுநிலா” என கூச்சலிட்டனர். வெற்றியின் நண்பர்களின் புண்ணியத்தில், ஒரே நாளில் பிரபலமாகியிருந்தாள் மதுநிலா.
வெட்க புன்னகையுடன் பிரதாப்பை நெருங்க, அந்த மதிமுகத்தாளிடம், மதி மயங்கினான் இந்த சூரியனானவன். தெளியவே விரும்பாத, அவளின் மீதான ஆழ்ந்த மயக்கத்திற்குள் விரும்பியே மூழ்கினான். நிலா என்றே அவளின் பெயரை மனதில் பதிந்தான்.
விரிந்த புன்னகையுடன் மைக்கை அவளிடம் நீட்ட, அதை வாங்கிய அவள்,
எவனோ ஒருவன் வாசிக்கிறான்
இருட்டில் இருந்து நான் யாசிக்கிறேன்
தவம் போல் இருந்து யோசிக்கிறேன்
அதை தவணை முறையில் நேசிக்கிறேன்
என பாடிமுடித்தாள். அவளின் குரல் அனைவரையும் கட்டி போட்டது.
பிரதாப் அவளின் பாடலோடு ஐக்கியமாகியிருந்தான். அந்த குரல் அவனை மயக்கி, எங்கோ கொண்டு சென்றது. அந்த மாய உலகத்திலிருந்து, அவனால் வெளிவரவே முடியவில்லை. வெற்றியும் அவளின் பாடலை ரசித்திருந்தான்.
அவள் குரல் அந்த பாடலோடு உருகி கரைந்தது. அந்த பாடலின் வரிகள், அதை அவள் பாடிய முகபாவம், என அனைத்தையும் உள்வாங்கிய பிரதாப், அவளின் ஏக்கங்களைப் புரிந்து கொண்டான். இத்தனை வருடம் உடனிருந்த, வெற்றியால் உணரமுடியாத அவளின் உணர்வுகளை, சில நொடிகளில் உணர்ந்திருந்தான் இந்த கோகுல கிருஷ்ணன்.
‘பேபி! என்னால் முடிந்த அளவு உன்னை எதுக்காகவும் ஏங்கவிடாம பார்த்துகிறேன்.’ என மனதில் உறுதி எடுத்துக் கொண்டான். அது இப்போதைக்கு சாத்தியமில்லை, என விதி கூறியது அவனிற்கு கேட்கவில்லை பாவம்.
பிரதாப் மேடை ஏறிய சிறிது நேரத்தில், ஆகாஷிற்கு கைப்பேசி அழைப்பு வர. அதில் வந்த செய்தியில் ஆடிபோன அவன், பிரதாப்பை அழைத்து செல்ல வேண்டும் என்பதையும் மறந்து, அடித்து பிடித்து அந்த இடத்தை விட்டு ஓடியிருந்தான். அதனால் ‘மதுநிலா யார்?’ என்று அவனிற்கு தெரியாமலே போனது.
மீண்டும் ஒரு குரல்,”என்ன பாஸ்! எப்பவும் தனியாவே பாடுவீங்க. இப்ப தான் உங்களுக்கு பொருத்தமான ஆள் வந்தாச்சுல, அப்படியே ஒரு டூயட் பாடுறது”
‘குரலுக்கு பொருத்தமான ஆள்’ என சொன்னதை, பிரதாப்பின் மனம் தனக்கு பொருத்தமான உயிர் என பதிந்துகொண்டது.
ஆர்வமாக தன்னவளின் முகம் காண, அங்கோ தயக்கத்தின் அறிகுறி. முகம் சுருங்கி போக, ஒன்றும் பேசாமல், மேடையை விட்டு இறங்கி செல்ல, பிரதாப் ஒரு அடியை எடுத்து வைத்தான். எடுத்த அடியை வைக்க முடியாமல் தடை செய்தது, அவனின் பிங்க் ரோஜாவின் வார்த்தைகள்.
“என்ன மிஸ்டர்? சேர்ந்து பாட சொல்லவும் தெறிச்சு ஓடறீங்க. வீரமெல்லாம் தனியா பாடுறதுல மட்டும்தானா?” என ஒற்றை புருவம் உயர்த்தி, அறியா பிள்ளைபோல் அவனை வம்பிழுத்தாள். அவளை அறியாமலேயே அவனிடம், அவளின் குறும்பு வெளிப்பட்டிருந்தது. அதை அவள் உணர்ந்தாளோ என்னவோ? ஆனால் மேகா உணர்ந்துக்கொண்டாள்.
அவ்வளவு நேரம், மகிழ்ச்சியின் மொத்த கலவையாக இருந்த அவனின் முகம், தன் தயக்கத்தை கண்டு சுருங்கிப் போனதை தாங்க முடியாமல், எது செலுத்தியது என்று தெரியாமல், அவள் செவ்விதழ் உதிர்த்திருந்தது அந்த வார்த்தை முத்துக்களை.
அந்த வார்த்தைகள் சொன்ன செய்தியால், அவனிற்கு மட்டும் சாக்லேட் மழை பொழிந்தது, அந்த நடு மேடையில்.
ஆயிரம் வாட்ஸ் பல்பின், பிரகாசம் மீண்டிருந்தது அந்த முகத்தில். அதை பார்த்த அவனின் தேவதை முகத்திலும் சந்தோசம்.
‘அவன் முகம் வாடினால், ஏன் எனக்கு பதறுகிறது?
அவன் முகமலர்ச்சியில், ஏன் என் மனம் மலர்கிறது?
ஏன் அவனிடம் வம்புப்பேச பிடித்திருக்கிறது?’ என ஆராயாமல் போனால் அந்த பேதை பெண்.
இந்த பார்வை பரிமாற்றத்தையும், பிரதாப்பின் முக உணர்ச்சிகளையும், பார்த்திருந்த வெற்றிக்கு நெருப்பு மழை பெய்தது. சும்மாவே இவர்களுக்கு ஆகாது, இதில் பிரதாப்பின் பார்வை, மதுவை விழுங்கி கொண்டிருந்ததை பார்த்த, வெற்றியின் கோவம் பலமடங்கு பெருகியது.
அந்த கோபத்தினால், வெற்றி உதிர்க்க போகும் வார்த்தைகள், அவன் வாழ்க்கை பாதையை, மாற்றப்போவதை அறியாமல் போனான் அந்த லூசு வெற்றி.
அவள் தன்னுடன் ஜோடியாக பாட, சம்மதம் தெரிவிக்கவும் அவன் தேர்ந்தெடுத்த பாடல்,
நீ காற்று நான் மரம்
என்ன சொன்னாலும் தலையாட்டுவேன்
நீ மழை நான் பூமி
எங்கு விழுந்தாலும் ஏந்தி கொள்வேன்
பாடலின் தொடக்கத்தில், மதுநிலாவின் விழியை சிறையெடுத்த பிரதாப்பின் விழிகள், பாடல் முடிந்த பின்பே, அதுவும் விருப்பம் இல்லாமல் விடுவித்தது. அந்த பாடலோடு இருவர் குரலும் பின்னி பிணைந்து, அனைவரையும் அதில் கரைய வைத்தது.
அனைவரின் கரகோஷத்தால், அந்த கல்லூரிக்கு மட்டும் நிலநடுக்கம் ஏற்பட்டது போல் இருந்தது.
வெற்றிக்கு, பிரதாப்பின் பார்வை, அவனது மனதை படம்பிடித்து காட்டியது. அதற்கு மேலும் பொறுக்க முடியாத வெற்றி, மேடை ஏறி மதுவை அடைந்தான். தன் உரிமையை நிலைநாட்ட, அவள் தோள்களில் கை போட்டு தன் தோளோடு சேர்த்து அணைத்தான்.
அவள் கரத்தோடு தன் கரத்தை இணைத்து, மைக்கை தன் அருகே கொண்டு சென்று,”இவ மதுநிலா. நான் கல்யாணம் செய்யப்போற, என் மாமா மகள்.” என பிரதாப்பை, பார்த்துக்கொண்டே அறிவித்தான் வெற்றிச்செல்வன்.
வெற்றி மேடை ஏற, பிரதாப்பின் பார்வை அவனை பின்தொடர்ந்தது. வெற்றி, மதுவை நெருங்கவும் பிரதாப்பின் பார்வை கூர்மையடைந்தது. வெற்றி, நிலாவின் தோளணைத்து அவள் கரம் பற்ற, பிரதாப்பிற்கு கொலைவெறியே உண்டானது. அடுத்த வெற்றியின் அறிவிப்பால், பிரதாப் அதிர்ச்சியில் உறைந்தான். பிரதாப்பின் பார்வை மங்கியது கண்ணீரால்.
பிரதாப்பின் கலங்கிய கண்கள் மதுவை நோக்கியது, அங்கே மறுப்பின் சாயல் இல்லை. இப்போது அவன் இதயத்தில், ஆயிரம் எரிமலைகள் வெடித்து சிதறின. பிரதாப் உடைந்துதான் போனான்.
வெற்றி மேடையில் இப்படி பண்ணுவான், என்பதை எதிர்பார்க்காத மது, பல்லை கடித்து பொறுத்துக்கொண்டு, புன்னகை செய்திருந்தாள். மேகாவாலும் எதுவும் செய்யமுடியாமல் திகைத்து நின்றாள்.
வெற்றி, மதுவின் பற்றிய கரத்தை விடாமலே, மேடையை விட்டு அவளை இறக்கியிருந்தான். மேடையிலிருந்து இறங்கவும், மது அவனிடமிருந்து விலகப்பார்க்க, அதை அனுமதிக்காத வெற்றி, தன் கையணைவிலேயே அவளை வைத்திருந்தான்.
எக்காரணம் கொண்டும், பிரதாப்பிடம் தோற்க கூடாது என்பதில் உறுதியாக இருந்தான்.
மதுவை கூர்ந்து கவனித்த பிரதாப்பால், அவள் மனதை எளிதாக அறிய முடிந்தது. ஒரு முடிவை எடுத்த பிரதாப்பின் முகம் தெளிவடைந்தது, மந்தகாச புன்னகை வந்தமர்ந்தது.
“எஸ்.பி ஒன்லி ஒன் மோர் சாங்” என குரலை தொடர்ந்து, பிரதாப்பின் இதழில் மர்மப்புன்னகை. அவன் பாட ஆரம்பித்திருந்தான்
உன்னைப் பார்த்த பின்பு நான் நானாக இல்லையே
என் நினைவு தெரிந்து நான் இதுபோல இல்லையே
எவளோ எவளோ என்று நெடுநாள் இருந்தேன்
இரவும் பகலும் சிந்தித்தேன்
இப்போது பிரதாப்பின் பார்வை வெற்றிக்கு சவால் விட்டது,”அவளை நான் சிறையெடுப்பேன். அவள் எனக்கு மட்டுமே சொந்தம்” என்று.
**************
வேற எந்த அசம்பாவிதமும் நிகழாமல், கல்லூரி விழா இனிதே முடிவுற்றது.
மது தனியாக இருக்கும் சந்தர்ப்பத்தை பயன்படுத்தி, பிரதாப் அவளை நெருங்கினான்.
”ஹாய் பேப்! ரொம்ப நல்லா பாடின. ஐ லவ் யுவர் வாய்ஸ் வெரி மச்” என சத்தமாகவும்,‘ஐ டூ லவ் யு நிலா’ என மனதினுள், தனக்கு தானே கூறிக்கொண்டான்.
“ஹாய் நீங்களும் ரொம்ப நல்லா பாடுனீங்க. மெஸ்மெரைசிங் வாய்ஸ்” என்றாள் புன்னகையுடன்.
இவர்களை கவனித்திருந்த வெற்றி, உடனே அங்கே ஆஜரானான். பிரதாப்பால் சிரிப்பை அடக்கவே முடியவில்லை. வெற்றியை நோக்கி இகழ்ச்சி புன்னகை குடுத்து,
“ஓகே பேப்! அப்பறம் மீட் பண்ணுறேன். பாய் டியர்” என கொளுத்திப் போட்டு சென்றுவிட்டான்.
கனகச்சிதமாக வெற்றியின் மனதில் வெடி வெடிக்க ஆரம்பித்தது.
“நீ எதுக்கு அவன் கூட பேசுற? இனிமே அவன் கூட பேசாத. இருட்டாயிடுச்சு வா, நான் உன்னை ஹாஸ்டல்ல விடுறேன்.” என கட்டளையாக கூறினான்.
அவனின் பேச்சு மதுவிற்கு கோபத்தை ஏற்றியது, கரங்களை கட்டிக்கொண்டு நீ பேசிமுடி ராஜா என காத்திருந்தாள்.
“போதும் வெற்றி! ரொம்ப சீன் போடாத. நான் யாருகூட பேசணும், பேசக்கூடாதுனு நான் தான் முடிவு பண்ணனும். கிட்டத்தட்ட எட்டு வயசிலிருந்து என்னை நான் தான் பார்த்துக்குறேன். புதுசா ரொம்ப அக்கறையை காமிக்காத. நாங்க தனியா போய்க்குவோம்” என பற்களை கடித்துக்கொண்டே, தாழ்ந்த குரலில் கூறிவிட்டு மேகாவை அழைத்து சென்றுவிட்டாள்.
இதுவரை அமைதியாக இருக்கும், மதுவையே கண்டு வந்த வெற்றிக்கு அவளின் திடீர் கொந்தளிப்பு, திகைப்பை வர வைத்தது.
எந்த ஒரு விஷயமும், மனதில் போட்டு புதைக்க, புதைக்க அதன் கனம் தாளாமல் ஒரு நாள் நிச்சயம் வெடித்துவிடும். இப்போது மதுவும் அந்த ஸ்டேஜ்ஜை அடைந்துவிட்டால். அவள் மனதில் இதுவரை அழுத்தி வைத்த பாரம் வெடித்தது. அவளை அறியாமலேயே, அவளின் மன குமுறல் வெளிவந்தது.
அதை புரிந்துகொண்டானா வெற்றி? அதுதான் இல்லை. அவள் தன்னை எதிர்த்து பேசியது மட்டுமே மனதில் நிறைந்தது.
அவனை மேலும் சிந்திக்கவிடாமல், ஆகாஷை தேடிக்கொண்டிருந்த பிரதாப், அவன் கண்களில் தென்பட்டான். சும்மா இருந்திருக்கலாம் விதி யாரைவிட்டது பிரதாப்பிடம் சென்று,
“மது நான் கல்யாணம் பண்ணிக்க போற பெண். அவளை நீ பார்க்குற பார்வை சரி இல்லை. அவள் உன்கூட பழகுற மத்த பெண்கள் மாதிரியில்லை.” என்றான் திமிராக.
நமட்டு சிரிப்புடன் அவனை பார்த்த பிரதாப்,”ஆல் தி பெஸ்ட் வெற்றி. நிலா எனக்கு தான் சொந்தம். நான் நிச்சயம் அவள் மனசை கவர்ந்து அவளை கைப்பிடிப்பேன். முடிஞ்சா தடுத்து பார்” என சவாலுடன் அந்த இடத்தை விட்டு சென்றான்.
பிரதாப்பின் பார்வை வெற்றியை அலைக்கழித்தது. அதன் பிறகு இருவரும் நேரில் சந்தித்து கொள்ளவில்லை.
*************
ஏற்கனவே பரீட்சைகள் முடிவுற்ற நிலையில், ப்ராஜெக்ட் மட்டுமே பாக்கியிருந்தது. வெற்றிக்கு அது கடைசி வருட படிப்பு என்பதால், அதை முடித்தவுடன் டெல்லியில் மேற்படிப்பிற்கு சென்றுவிட்டான்.
தன் நண்பர்களிடம் ஆகாஷ், பிரதாப்பை பற்றி விசாரிப்பான். ஆனால் அவர்களை பற்றி எந்த தகவலும் இல்லை.
வெற்றி மேற்படிப்பை முடித்து வருவதற்கு முன், அவளின் பேஷன் டிசைனிங் சென்னையில் முடித்து, லண்டன் பறந்திருந்தாள்.
சூர்யாவின் மிரட்டலால் சற்று அரண்டு போயிருந்தாள் மது. வீட்டில் திருமண பேச்சை எடுக்கவும், வெற்றியின் மேல் இருந்த வெறுப்பு, சூர்யாவின் மேலிருந்த பயம் எல்லாம் சேர்ந்து,
”இப்போ எனக்கு திருமணம் வேண்டாம். எனக்கு லண்டன் ……. கல்லூரியில் ஸ்காலர்ஷிப்போட இடம் கிடைச்சிருக்கு. பார்ட் டைம் ஜாப் பண்ணிட்டே படிக்கலாம்னு இருக்கேன். ஒரு இந்தியன் பெண்கூட ரூம் ஷேர் பண்ண இடமும் கிடைச்சிடுச்சு” என அவர்கள் தடை சொல்லக்கூடிய அணைத்து வழிகளையும் அடைத்தாள்.
அவள் உறுதியை கண்டு குடும்பத்தினர் இறங்கிவந்து,”நீ திரும்பி வரவும் திருமணம்” என்ற நிபந்தனையுடன் அவளை அனுப்பி வைத்தனர்.
வெற்றி டெல்லியிலிருந்து வரும் முன் மது லண்டன் சென்றியிருந்தாள். அவர்களுக்கிடையே இருந்த இடைவெளி வளர்ந்துகொண்டே இருந்தது.
இதில் அவன் எதிர் பார்க்காதது, ஆகாஷ் பிரதாப் மதுவின் பழக்கம்.
இங்கே இருந்தவர்கள் லண்டனில் சந்திப்பார்கள், என கனவா கண்டான்???
அன்று கல்லூரி விழாவில் அவர்களை சந்தித்தது. அதன் பின் இன்று மதுவுடன் தான், நேரில் சந்திக்கிறான்.