Uyir Vangum Rojave–EPI 9

Uyir Vangum Rojave–EPI 9
அத்தியாயம் 9
இங்க லவ்காக உயிர குடுக்கற பசங்களும் இருக்காங்க
உயிர குடுத்து லவ் பண்ணுற பசங்களும்
இருக்காங்க
(ரெமோ – சிவகார்த்திக்கேயன்)
நல்ல உறக்கத்தில் இருந்த வேந்தனுக்கு திடீரென விழிப்பு வந்தது. கண்களை திறந்தவன் அந்த மெல்லிய வெளிச்சத்தில் தன் முன்னே அமர்ந்திருந்த உருவத்தைப் பார்த்து கத்துவதற்கு வாயைத் திறந்தான். பின் ஆண்கள் பயப்படக் கூடாது என தனக்கு தானே அறிவுருத்திக் கொண்டு அந்த உருவத்தை மீண்டும் உற்றுப் பார்த்தான். தேவிதான் சிரிப்பை அடக்க கஸ்டப்பட்டுக் கொண்டு அவனையே பார்த்துக் கொண்டிருந்தாள்.
‘ஓ இவங்க தானா? நான் கூட எந்த மோகினி பிசாசோன்னு பயந்துட்டேன்’
அந்த அறையில் இருந்த கடிகாரத்தில் மணியைப் பார்த்தான் அவன். அரை இருளில் ஒன்றும் தெரியவில்லை.
“ மலர்,மணி இப்போ விடிகாலை ஒன்னு “ என்றாள் தேவி.
“ இந்த நேரத்துல இங்க என்ன செய்றீங்க மேடம்? எத்தனை மணிக்கு வந்தீங்க?”
“எத்தனை மணியாயிருந்தா என்ன மலர்? உங்களைப் பார்க்கனும்னு தோணுச்சு வந்துட்டேன். வந்து ஒன் ஹவர் ஆகுது. அண்ணனும் தங்கச்சியும் நல்ல தூக்கத்துல இருந்தீங்க. அதான் வெய்ட் பண்ணிகிட்டு இருக்கேன்”
இவர்கள் பேச்சு சத்தத்தில் சோபா பெட்டில் படுத்திருந்த லாவண்யா மெல்ல அசைந்தாள்.
அதைக் கண்டு கொள்ளாத தேவி அரை இருட்டில் இருந்த அறைக்குள் லைட்டைப் போட்டு வெளிச்சமாக்கினாள். கண்களைக் கசக்கி கொண்டு எழுந்து அமர்ந்த லாவண்யா,
“என்னண்ணா? ஏதாவது வேணுமா?” எனக் கேட்டாள்.
“வெளியே போய் உட்காரு. நான் உங்கண்ணா கிட்ட பேசனும்”
அதிகாரமாக கேட்டக் குரலில் அப்பொழுதுதான் தேவியைப் பார்த்தாள் அவள். உடனே சிலிர்த்துக் கொண்டவள்,
“என்னை வெளிய போக சொல்ல நீங்க யாரு?” கேட்டவாறே முறைத்தாள்.
“யாரா? உன் வருங்கால அண்ணி. மரியாதை குடுத்தினா உங்கண்ணனை போனா போகுதுன்னு கண்ணுல காட்டுவேன். இல்லைனா, அவர மறந்துற வேண்டியது தான். எப்படி வசதி?”நக்கலாக கேட்டாள் தேவி.
ஆவேசமாக பதில் சொல்ல வந்த லாவண்யாவைக் கண்ணால் அடக்கிய வேந்தன்,
“போம்மா. போய் வெளிய இருக்கற பெஞ்சுல உட்காரு. அண்ணன் பேசி முடிச்சுட்டு கூப்புடறேன்.” முடிச்சுட்டுவில் ஒரு அழுத்தம் கொடுத்தான்.
தேவியை முறைத்தவாறே வெளியேறினாள் லட்டு.
“இந்த அர்த்த ராத்திரியில என் கிட்ட என்ன பேசனும் மேடம்?”
“ஸ்டாப் காலிங் மீ மேடம். நாம வாழ போற வாழ்க்கைக்கு இப்படி கூப்பிடறது நல்லாவே இல்லை”
அழுத்தமாக தேவியை நோக்கியவன்,
“உங்கள மேடம்னு தவிர வேற எப்படியும் என்னால கூப்பிட முடியாது மேடம்”
நாற்காலியில் இருந்து கோபமாக எழுந்தவள், குறுக்கும் நெடுக்கும் நடந்தாள். அவள் செய்கையிலே தெரிந்தது தன் கோபத்தைக் கட்டுப்படுத்த போராடுகிறாள் என்று.
பின் அவன் அருகே வந்து நின்றவள்,
“ஏன் மலர் என்னை வேணாம்னு சொன்ன? ஒரு பொண்ணே முன்னுக்கு வந்து உன்னை வேணும்னு சொல்லுறதனால நான் கேவலமா தெரியறனா உன் கண்ணுல? சொல்லு மலர். நான் கேவலமானவளா?”
“மேடம் அப்படி எல்லாம் இல்ல. “
“மேடம், மேடம், மேடம்!!! ஒரு தடவை சொன்னா கேட்க மாட்டீயா? “ நாற்காலியில் தொப்பென அமர்ந்தாள். தன் தலையைக் கையால் தாங்கிக் கொண்டாள் தேவி.
பின் தலையை உயர்த்தி அவனை ஆழமாகப் பார்த்தாள்.
அவளின் இரு கண்களும் அப்படியே அவனை உள்ளிழுப்பது போல் ஒரு மாயை உண்டானது வேந்தனுக்கு. மனதிலே ‘அடியே உன் கண்கள் ரெண்டும் மேட் இன் கியூபாவா , அதுவே உன் தேசம் என்றால் நான் தான் கேஸ்ட்ரோவா’ என பாடல் ஓடியது.
‘வேணாம்டா அவ கண்ணைப் பார்க்காதே. மனச திசை திருப்பு. உன் கனவு கன்னிய நினைச்சுக்கோ. ரித்வி, ரித்வி, ரித்வி’ என ஜெபம் செய்தவன் பின் தலையை உலுக்கிக் கொண்டான்.
பேசாமல் இந்த பிரச்சனை தீராது என முடிவெடுத்தவன்,
“இங்க பாருங்க. பார்த்தவுடனே வரதெல்லாம் காதல் இல்லை. பார்த்து பழகி ஒருத்தர ஒருத்தர் புரிஞ்சிகிட்டு வரது தான் காதல். நீங்க அமைதியா உட்கார்ந்து யோசிச்சு பார்த்தீங்கனா உங்களுக்கே புரியும். ஒரு சின்ன அக்சிடெண்ட்ல உங்களை காப்பாத்தனதால இந்த காதலும் கத்திரிக்காயும் என் மேல வந்துருச்சுனு நீங்க சொல்லுறத கேக்கவே காமெடியா இருக்கு. தயவு செஞ்சு என்னை மறந்துட்டு வேற வேலைய பாருங்க” கவனமாக மேடம் என கூப்பிடுவதை தவிர்த்தான். அவள் தான் எரியும் நெருப்பாய் தகித்துக் கொண்டு அமர்ந்திருக்கிறாளே. இன்னும் எரிய விட வேண்டாமெனும் நல்லெண்ணம்தான்.
“மலர், இது காதலா இல்லையாங்கற ஆராய்ச்சியெல்லாம் உனக்கு வேணாம். என் மனசுல என்ன இருக்குனு எனக்கு தெரியும். இப்ப நீ சொன்ன பாய்ன்டுக்கே நான் வரேன். நாமளும் பார்த்து பழகி காதல் பண்ணலாம். அது ஒன்னும் பிரச்சனை இல்லை. ஆனா என்ன, கல்யாணத்துக்கு பிறகு அத பண்ணலாம்.”
‘என்னடா இவங்க? ஆம்பிள பேசுற டைலாக்கையெல்லாம் இவங்க பேசறாங்க. இதைப் பத்தி ஆண்கள் நாங்க கேள்வி கேட்டா, பெண்ணியம்னு சண்டைக்கு வந்துருவாங்க. ஏற்கனவே அந்த வோர்டுக்கு அர்த்தம் என்னன்னு புரியாம ஊருல பல பேரு குறும்படம் எடுத்து தள்ளுறானுங்க. எதுக்கு வம்பு, நாம அடக்கியே வாசிப்போம்’
“மேடம், நீங்க அழகா இருக்கீங்க. அதோட பணம், படிப்புன்னு எல்லாம் உங்க கிட்ட இருக்கு. உங்களை கல்யாணம் பண்ணிக்க கியூல நிப்பாங்க. அவசரப்பட்டு ஒரு பொருத்தமும் இல்லாத என்னை கல்யாணம் பண்ணிகிட்டு சாவகாசமா பீல் பண்ணாதீங்க. உங்க நல்லதுக்குத்தான் சொல்லுறேன்” என குழந்தைக்கு சொல்வதை போல் சொன்னான் வேந்தன்.
அமைதியாக அவனை ஆழ்ந்து பார்த்தாள் தேவி. பின் எழுந்து கட்டிலில் அவன் பக்கத்தில் சென்று அமர்ந்து கொண்டாள். திகைத்து விழித்த வேந்தனின் வலது கையை எடுத்து தன் கைகளுக்குள் பிடித்துக் கொண்டவள்,
“மலர், அழகு அந்தஸ்த்து பார்த்து வரது காதல் இல்லை. நேரம் காலம், ஜாதி மதம், ஸ்கின் கலர், ஹைட், வெய்ட் எதுவுமே பார்க்காம திடீர்ன்னு வரது தான் நிஜ காதல். பணமில்ல, அழகு இல்லன்னு உன்னை நீயே ஏன் தாழ்த்திக்குற? பல ஆண்களிடம் இல்லாத பரிவு, பாசம், அன்பு, கடமை உணர்வு இதெல்லாம் உன் கிட்ட கொட்டிக் கிடக்கு. உன் அன்பை நான் மட்டுமே அனுபவிக்கனும்னு ஒரு வெறியே எனக்குள்ள இருக்கு. புரிஞ்சுக்கோ மலர். ப்ளிஸ் மேரி மீ. என் வாழ்க்கையிலே ஒரே ஒரு தடவை தான் நான் இப்படி இறங்கி கெஞ்சியிருக்கேன். அதுக்கு அப்புறம் உன் கிட்ட தான் கெஞ்சுறேன். என்னைப் பார்த்தா பாவமா இல்லையா?” விழிகளை சுருக்கி முகத்தைப் பாவமாக வைத்துக் கொண்டு அவன் கண்களை நோக்கியபடியே கேட்டாள் தேவி.
நெருக்கத்தில் இருந்த அவள் முகம், இரண்டு இன்ச் இடைவெளியில் இருந்த அவள் சேரி பழ உதடுகள், கையைப் பிடித்திருந்த அவள் தொடுகை இவையாவும் வேந்தனை சுழற்றி அடித்து மயக்கியது. கொஞ்சம் கொஞ்சமாக அவளது ஆளுகைக்குள் சரண் புக நினைத்த மனதையும், உடலையும் ரித்வி, ரித்வி என ஜெபித்து கட்டுக்குள் கொண்டு வந்தான்.
‘யம்மா, பொல்லாத ராட்சசிடா இந்தப் பொண்ணு. கொஞ்ச நேரத்துல என்னையே கவுக்க பார்த்துச்சே. யார் செஞ்ச புண்ணியமோ நான் கரெக்டான நேரத்துல சுதாரிச்சிட்டேன்.’
சட்டேன முகத்தைத் திருப்பிக் கொண்டு தள்ளி அமர்ந்தவன்,
“நீங்க என்ன சொன்னாலும், ஒரு பணக்கார குடும்பத்துல என்னால டம்மி பீஸா வாழ முடியாது மேடம். தயவு செஞ்சு என்னை மன்னிச்சிருங்க.”
மேசை மேல் டாக்டர்கள் எழுதுவதற்காக இருந்த லெட்டர் பேட்டை எடுத்தவன், மட மடவென எதையோ கிறுக்கி தேவியிடம் நீட்டினான். கையில் வாங்கியள்,
“என்ன மலர் இது? லவ் லெட்டரா?” என கிண்டலாக கேட்டாள்.
“என்னோட ரிசிக்னேஷன் லெட்டர். எப்போ இந்த அளவுக்கு வந்துருச்சோ, இனிமே நான் உங்க கீழ வேலை செய்யுறது அவ்வளவு நல்லா இல்லை. ரெண்டு பேரும் ஒருத்தர ஒருத்தர் பார்த்துக் கிட்டு வேலை செய்ய முடியாது. அதனால் இத அக்சேப்ட் பண்ணிக்கீங்க மேடம்”
அந்த லெட்டரை சுக்கு நூறாக கிழித்து அவன் முகத்திலேயே விட்டடித்தாள் தேவி.
“என் வாழ்க்கைகுள்ள வான்னு கூப்பிட்டா, என் கம்பேனிய விட்டே போகவா பிளான் பண்ணுற? நோ வே மலர். சரி விடு. பிடிக்காதவங்கள போர்ஸ் பண்ணியா தாலி வாங்கிக்க முடியும். நீ இந்த வேலையிலேயே இரு. இனிமே நீயா என்னை தேடி வர வரைக்கும் நான் உன்னை டிஸ்டர்ப் பண்ண மாட்டேன். ஆனா என்னைக்கும் உனக்காக நான் காத்துக்கிட்டே இருப்பேன். வரேன் மலர்”
‘அப்படி சுலபமா உன்னை விட்டுருவேன்னு நினைச்சியா மலர் குட்டி? நான் சொன்ன அதே ரெண்டு வார கணக்குல உன்னை சத்தியமா மேரேஜ் பண்ணிக்குவேன். எந்த புயல் எப்படி தாக்கியதுன்னு நீ முழிக்கிறதுகுள்ள மிஸ்டர் ரோசாலியா தேவியா மாறியிருப்ப.வரட்டா? பாய் செல்லம்’ மனதில் நினைத்தவள், முகத்தை நார்மலாக வைத்திருந்தாள்.
தலை அசைத்து தேவியை வழி அனுப்பியவன்,
‘என்ன அமைதியா போறாங்க? புயலுக்கு முன் வர அமைதியோ? எதுக்கும் கொஞ்சம் கவனமா இருக்கனும். கொஞ்ச நாளைக்கு வெளிய தெருவ போகக் கூடாது’ என எண்ணிக் கொண்டான்.
தூக்கக் கலக்கத்திலும் செம்ம கோபத்திலும் வெளியேறிய லாவண்யா, காரிடாரில் இருந்த நீள பெஞ்சில் படுத்துக் கொள்ளலாம் என நினைத்தாள். அங்கே பெஞ்சின் ஒரு மூலையில் கார்த்திக் தலையை சுவற்றில் சாய்த்து கண் மூடி அமர்ந்திருந்தான். அவனை நோக்கி சென்றவள், அவன் தொடையில் தலை வைத்து அப்படியே படுத்துக் கொண்டாள்.
தொடையில் பாரத்தை உணர்ந்து தூக்கம் கலைந்து எழுந்தவன், மடியில் படுத்திருக்கும் லாவண்யாவைப் பார்த்து அதிர்ச்சியானான். கனவோ என கண்களை மீண்டும் ஒரு முறை கசக்கிவிட்டுப் பார்த்தான். அந்த உருவம் அப்படியே தான் இருந்தது.
‘இவ என்ன தெரிஞ்சு செய்யறாளா? இல்லை தெரியாமா செய்யறாளா? ஆனா ஒன்னு என்னை நல்லா வைச்சி செய்யுறா.’
சுகமாக உறங்கி கொண்டிருந்தவளை இமைக்காமல் பார்த்துக் கொண்டிருந்தான் கார்த்திக். முன்நெற்றியில் கற்றை குழல்கள் அசைந்து விளையாடுவதை காதலோடு பார்த்தான். பின் மெல்லிய குரலில்,
“ஒற்றை பார்வை உயிரை குடித்தது
கற்றை குழல் கைது செய்தது
மோதும் ஆடை முத்தமிட்டது
ரத்தம் எல்லாம் சுட்டு விட்டது
ஐ லவ் யூ, லவ் யூ சொல்லத்தானே
ஐயோ என்னால் முடியவில்லை” என பாடினான்.
“அதான் சொல்லிட்டியே, பாத்ரூம் வாசல்ல வச்சு. அப்புறம் என்ன சொல்ல முடியவில்லைன்னு கேவலமான குரல்ல ஒரு பாட்டு படிக்கற?”
“அடிப்பாவி! முழிச்சுக்கிட்டு தான் இருக்கியா? அப்போ என்ன உசுப்பேத்தறதுக்கு தானே இதெல்லாம் செய்யுற? உன்னை திருத்தவே முடியாதுடி”
படீரெனெ எழுந்து உட்கார்ந்தவள்,
“இப்ப என்னத்த உசுப்பேத்திட்டாங்க? உன் மேடம் நல்லா தூங்கிட்டு இருந்த என்னை வெளிய துரத்திட்டாங்க. இங்க வந்துப் பார்த்தா நீ உக்காந்து இருக்க. சரி தலைகாணி இல்லையே, ஆபத்துக்குப் பாவமில்லைன்னு தலைய சாச்சிட்டேன். அது தப்பா? கொஞ்சம் மெத்து மெத்துன்னு இருந்தாலாச்சும் நல்லா தூங்கிருப்பேன். என்னமோ மரக்கட்டையில தலைய வச்ச மாதிரி குத்துது.” என மல்லுக்கு நின்றாள்.
நாற்காலியில் இருந்து எழுந்து நின்றவன்,
“என் தொடை உனக்கு மரக்கட்டை மாதிரி இருக்கா? வேற ஒன்னும் இல்ல, உடம்பு முழுக்க இருக்கற கொழுப்பு தான் இப்படி பேச வைக்குது”
சிலிர்த்துக் கொண்டவள், பெஞ்சின் மேல் ஏறி நின்றாள்.
“இப்ப எதுக்கு பெஞ்சு மேல ஏறுற? உன்னை மன்னிச்சு விட்டுட்டேன் கீழ இறங்கு”
“உன் கிட்ட மன்னிப்போ மண்ணாங்கட்டியோ கேக்க பெஞ்சு மேல ஏறுல. சரி சமமா உள்ளவங்க கிட்ட தான் சண்டை போடனும்னு எங்கண்ணா சொல்லியிருக்காங்க. இதுல ஏறி நின்னா தான் உனக்கு சரி சமமா இருக்கேன். இப்ப வா, சண்டைய வச்சுக்கலாம்”
சிறு குழந்தை போல் பெஞ்சு மேல் கோபமாக ஏறி நின்றிருக்கும் லாவண்யாவை பார்க்க பார்க்க அள்ளி அணைத்துக் கொள்ளலாம் என பரபரத்தது அவனுக்கு.
‘மாமா இருக்கற லவ் மூட்டுல உன்னை அப்படியே கட்டிப் பிடிச்சுக்குவேன் ராஜாத்தி. உங்கண்ணன் ரூமுக்குள்ள இருக்கானே. சத்தம் கேட்டு வந்தானா, என்னை மொத்திட்டு தான் மறுவேலை பார்ப்பான். எதுக்கு ரிஸ்க்? அவன் இல்லாதப்போ, என் கிட்ட மாட்டாமயா போவ. அப்ப வச்சிக்கிறேன்’
“யாருக்கு உடம்புல கொழுப்புன்னு சொன்ன? எனக்கா? ஆமா, நீ சம்பாரிச்சி போட்டு, சமைச்சி, நிதமும் ஊட்டி விடற பாரு, அதுல தான் கொழுப்பு ஏறிப்போச்சு”
“ஓ, அந்த ஆசையெல்லாம் கூட உனக்கு இருக்கா? ஊட்டாமலே இத்தனை வருஷத்துல நல்ல புஷ்டியா தான் இருக்க. இன்னும் நான் ஊட்டி விட்டனா, போர்க்லிப்ட் லாரி வச்சு தான் உன்னை தூக்கனும்.”
“யாருடா புஷ்டியா இருக்காங்க? நானா நானா?” என கண்களை உருட்டிக் கேட்டாள் அவள்.
“இப்ப எதுக்கு கண்ணை உருட்டி சந்திரமுகி மாதிரி பச்சை பையனை பயம் காட்டுற? வீட்டுல போய் நாங்கள்லாம் நிம்மதியா தூங்கறது இல்லையா? ப்பா!! பயமா இருக்கு”
“டேய் கார்த்தி!! நீ ஓவரா போறடா. இத்தனை வருஷ கேப்புல எதை பழகியிருக்கயோ இல்லையோ நல்லா பேசக் கத்துக்கிட்டு இருக்கடா. ஒரு வீட்டுல ஒருத்தர் தான் ஓவரா பேசனும். இன்னொருத்தர் அடங்கி போகனும். ஒழுங்கா அடக்க ஒடுக்கமா இரு. இல்லாட்டி பின் விளைவுகள் பயங்கரமா இருக்கும்”
“இப்ப என்ன சொல்ல வர? நான் அடங்கி போனா என்னைக் கல்யாணம் பண்ணிக்கிறீயா?”
“சேச்சே, ஏதோ சின்ன வயசுல தெரியாம நீதான் என் ஹஸ்பன்டுன்னு சொல்லிட்டேன். உன் முகரையெல்லாம் யார் கட்டிக்குவா? என் ரேஞ்சுக்கு பல எலிஜிபள் பேச்சுலர்ஸ் க்யூ கட்டி நிப்பாங்க. மைன்ட் இட்”
“எலிஜிபள் பேச்சுலர்ஸ்? உன் ரேஞ்சுக்கு? குட் ஜோக். எலி பிடிக்கறவன் வேணும்னா போனா போகுதுன்னு கட்டிக்குவான். போடி! “
லாவண்யா கடுப்பில் கவுன்ட்டர் கொடுப்பதற்குள், கார்த்திக்கின் போன் இசைத்தது. அவளை பேச வேண்டாம் என சைகை செய்தவன், போனை காதில் வைத்தான்.
“சொல்லு டாலி. நீ இன்னும் தூங்கலையா? மணி பாருடா ரெண்டு ஆக போகுது. இப்படி என்னையே நினைச்சிக்கிட்டு தூங்காம இருந்தா ஹெல்த் ஸ்பொய்ல்ட் ஆகிரும்டா”
அந்த பக்கம் என்ன பதில் வந்ததோ,
“பப்புக்கா? இப்ப ஒரு கடுப்பான டீலிங்ல மாட்டிக்கிட்டு இருக்கன்டா. நாளைக்கு போலாமா? ஸ்யூர் ஹனி. யூ எஞ்சாய். சீ யூ டுமோரோ. உம்மா உம்மா உம்மா” என பேசி முடித்துப் போனை போக்கேட்டில் போட்டான்.
அவன் பேசி கொண்டிருந்த சைக்கிள் கேப்பில், அவளது படிப்பாளி தோழிக்கு மேசேஜ் தட்டி விட்டாள் பாடத்தில் டவுட் என்று. அந்த படிப்ஸ் தினமும் படித்து விட்டு மூன்று மணிக்கு தான் தூங்கும். மற்றவர்கள் சந்தேகம் கேட்டாள் அல்வா சாப்பிடுவது போல் சந்தோஷமாக சொல்லிக் கொடுப்பாள் அவள். கார்த்திக் போனை வைக்கவும் லாவண்யாவுக்கு போன் வரவும் சரியாக இருந்தது.
“ஹலோ, சொல்லுடா சூரியா செல்லம்”
“லாவண்யா நான் சிந்தாமணி பேசுறேன்டி. சூரியா இல்ல. பாடத்துல எதுவோ டவுட்டுன்னு சொன்னியே?”
“ஆமாண்டா டார்லி. உன் போனுக்காக தான் தூங்காம வெயிட் பண்ணிக்கிட்டு இருந்தேன். தினமும் வீட்டுல எல்லாரும் தூங்கனதும் நாம பேசுற டைம் தான இது”
“என்னடி, என்னன்னமோ பேசுற?”
“எனக்கு எப்பவுமே உன் நினைப்பா தான் இருக்கு. படிப்பு முடிஞ்ச கையோட சீக்கிரமா கல்யாணம் பண்ணிக்கலாம்.”
“அடியே, இந்த அர்த்த ராத்திரிலே என்னடி உளறல்? ஏன்டி லாவண்யா, அவளா நீ???? இத்தனை நாளா பழகறேன் எனக்கு இது தெரியாம போச்சே. அபச்சாரம், அபச்சாரம்.”
“என்ன முத்தம் முத்தமா வேணுமா? எனக்கு வெட்கமா இருக்கு டியர். சரி, சரி. ஒன்னே ஒன்னுதான். ஒகேவா. உம்மா” என அழுத்தமாக முத்தம் ஒன்றை கொடுத்தாள்.
“அடச்சீ, கருமம் கருமம். எங்கம்மா அப்பவே சொன்னுச்சு, உன் அழகுக்கு பொண்ணுங்க கூட ஆசைப்படுங்கன்னு. அது கரெக்டா போச்சு. இனிமே உன் கிட்ட சேரவே மாட்டேன்டி. இன்னையிலிருந்து நீ யாரோ நான் யாரோ. போனை வைடி.” என போனை வைத்திருந்தாள் அந்த பாவப்பட்ட ஜீவன்.
லாவண்யாவுக்கு சிரிப்பை அடக்க முடியவில்லை. கஸ்டப்பட்டு சாதாரணமாக இருக்க போராடினாள். சிரிப்பில் மலர்ந்திருக்கும் அவள் முகத்தைப் பார்க்க பார்க்க வெறியானான் கார்த்திக்.
“யாருடி அந்த சூரியா?”
“ஹ்ம்ம், ஜோதிகாவோட ஹஸ்பென்ட்” என இடக்காக பதில் சொன்னாள் அவள்.
“லட்டு!! ஒழுங்கா சொல்லு யாரவன்? உன் கிட்ட ஏற்கனவே சொல்லியிருக்கேன். உன் வாழ்க்கையில நான் ஒருத்தன் தான்னு. உன் மண்டைக்குள்ள ஏறுச்சா இல்லையா?”
“ஹலோ! என்னை கன்ட்ரோல் பண்ண நீ யாரு? உனக்கு மட்டும் இடுப்பை சுத்தி கேர்ள்பிரண்டுக இருப்பாளுக. நான் மட்டும் உன்னை மட்டும் நினைச்சுகிட்டு இருக்கனுமா? இது எந்த ஊரு நியாயம்?” இடுப்பில் கையை வைத்துக் கொண்டு கேட்டாள் லாவண்யா.
அவள் தோள்களை பற்றியவன்,
“என் விஷயத்தை விடு. நம்ப விஷயத்துக்கு வா. வேற எவன்னாச்சும் நம்ப லைன்ல க்ரோஸ் பண்ணான், கொன்னுருவேன்டி” என உக்கிரமாக பேசினான்.
அந்த நேரத்தில் தான் தேவி கதவைத் திறந்து கொண்டு வெளியே வந்தாள். அவர்கள் இருவரையும் நெருக்கத்தில் கண்டவள் கண்கள் சுவாரசியமாக இடுங்கியது. பின் தெரியாததைப் போல் வெளியே நடக்க ஆரம்பித்து விட்டாள்.
லாவண்யாவின் தோளிலிருந்து கையை விலக்கியவன், ஒரு முறைப்புடன் தேவியை பின் தொடர்ந்தான்.
ஒரு வாரத்தில் ஹாஸ்பிட்டலில் இருந்து வீட்டுக்கு அனுப்பப்பட்டான் வேந்தன். மூன்று நாட்கள் அப்படியே ஓய்வாக வீட்டில் இருந்தவன், நான்காம் நாள் லட்டுவை ஸ்பெசல் கிளாசுக்காக காலேஜ் விடுவதற்கு வந்திருந்தான். இறக்கி விட்டு விட்டு வெளியேறும் முன் போன் அடித்தது. வீட்டு நம்பரை பார்த்து அழைப்பை ஏற்றான்.
அங்கே பதட்டமாக அனு,
“அண்ணா! கீரை வாங்க போன அம்மாவ காணோம்னா. போய் ஒரு மணி நேரமாச்சுன்னு, நான் கீழ போய் பார்த்தேன். எங்க தேடியும் காணோம். எனக்கு பயமா இருக்குண்ணா.” என அழுதாள் அவள்.
“என்னது? அம்மாவ காணோமா?”
உயிரை வாங்குவாள்…