காதல்போர் 12

eiOOLW357649-59af1510

காதல்போர் 12

இரண்டுநாட்கள் கழித்து,

“ரீச் ஆனதும் இன்ஃபோர்ம் பண்ணு. போய் அங்கிள் கூட இரு. முக்கியமான விஷயம், ஆல்ரெடி என் மாமா சம்பளம் வாங்காத உளவுத்துறை அமைச்சா என் அப்பாவுக்கு வேலை பார்க்குறாரு. நீயும் போய் எல்லாத்தையும் உளறி வச்சிடாத! இங்க நான் முடிக்க வேண்டிய வேலைகள் நிறையவே இருக்கு” பெட்டியில் விக்ரமின் உடைகளை அடுக்கியவாறு வேதா சொல்லிக்கொண்டே போக, அவனிடமோ பதிலே இல்லை.

நிமிர்ந்து தன் தோழனை பார்த்தவள் அவன் ஏதோ யோசனையில் இருப்பதை உணர்ந்து, “விக்கி…” என்றழைக்க, சிந்தனையிலிருந்து விடுபட்டவன், “ஆங்…” என்று கேட்டு மலங்க மலங்க விழித்தான்.

இருபக்கமும் சலிப்பாக தலையாட்டியவள், “என்னடா பிரச்சினை உனக்கு? நானும் பார்த்துக்கிட்டு இருக்கேன். காலையிலிருந்து ஒரு மார்க்கமாவே முகத்தை வச்சிருக்க” சற்று கடுப்பாகவே கேட்க, “அது வேதா, எப்போவும் மாஹிய கோவிலுக்கு பின்னாடி இருக்குற காட்டுல மீட் பண்ணுவேன். அவளும் நேரத்துக்கு வந்துடுவா. ஆனா நேத்து வரல. என்னாச்சுன்னு தெரியல” என்ற விக்ரமின் குரலில் அத்தனை சோகம்!

“ச்சு ச்சு ச்சு… ரொம்பதான்டா நீனு! இந்த கருமத்தெல்லாம் அனுபவிக்க வேண்டி வருமோன்னுதான் இந்த காதல் கன்றாவி பக்கமெல்லாம் நான் போறதே இல்லை. ஆனா, என் கிரகம்! உன் ரூபத்துல என்னை வாட்டுது” வேதா சலித்துக்கொள்ள, அவளை முறைத்தவன் உடைப்பெட்டியை கையில் தூக்கி, “அட ச்சீ பே! நான் என்ன அம்மா வீட்டுக்கு போறேன்” என்றுவிட்டு விறுவிறுவென அறையிலிருந்து வெளியேறினான்.

அவனுடைய பாவனையில் வாய்விட்டு சிரித்தவள், “டேய் டேய்! டேய்…” என்றழைத்தவாறு அவனருகில் ஓடி வந்து, “உன் ஆள மீட் பண்ணிட்டு சந்தீப்க்கு கோல் பண்ணு. அவன் உன்னை ஸ்டேஷனுக்கு கூட்டிட்டு போவான். வேணாம்னு சொல்லாத! மனசுக்கு ஏதோ ஒரு மாதிரி இருக்கு. என்னன்னு தெரியல. ப்ளீஸ், க்யார்ஃபுல்லா இரு” என்று இறுதியில் ஒரு மாதிரி குரலில் முடிக்க, சிரிப்புடன் அவளை அணைத்துக்கொண்டான் விக்ரம்.

தயாராகி வீட்டிலிருந்து வெளியேறுவதற்கு முன்  வீட்டாற்களிடம் விக்ரம் விடயத்தைச் சொல்ல, “சந்தீப் கூட போப்பா” என்ற பத்மாவதியின் அக்கறையில், “இல்லை பத்து, நான் கோவிலுக்கு போயிட்டு ஸ்டேஷனுக்கு போயிடுறேன்” என்றுவிட்டு வேதாவை பார்த்தவாறே விக்ரம் அங்கிருந்து நகர்ந்தான்.

ஆனால், பேன்ட் பாக்கெட்டில் கையை விட்டவாறு போகும் தன் தோழனையே பார்த்திருந்தவளின் மனமோ ஒரு நிலையிலே இல்லை. ஒருவேளை, நடக்கப்போவது முன்கூட்டியே தெரிந்திருந்தால் அவனை தனியாக விட்டிருக்க மாட்டாளோ, என்னாவோ?

அடுத்துவந்த நாட்கள் வேதாவும் அந்த சடங்கைப் பற்றி வாய்மொழி ஆதாரம் தேட, அதுவோ கிடைத்தபாடில்லை. மாஹியிடம் வெளிப்படையாக கேட்டவளுக்கு மற்றவர்களிடம் அவ்வாறு கேட்க முடியவில்லை. ‘எங்கு தான் பார்த்தது தெரிந்தால், இவர்கள் தனக்கெதிராக செய்யும் செயல் தன் திட்டத்திற்கு வினையாக முடிந்துவிடுமோ?’ என்ற பயம் அவளுக்கு!

அவளால் பத்மாவதி, அம்ரிதாவை கூட நம்ப முடியவில்லை.

அன்று,

“வாவ்! ரொம்ப அழகா இருக்கு அம்ரி, உனக்கு இதுல ப்ரைட் ஃப்யூச்சர் இருக்கு. எவ்வளவு தத்ரூபமா வரைஞ்சிருக்க” வேதாவின் வார்த்தைகள் அம்ரி வரைந்திருந்த ஓவியத்தை பார்த்து ஆச்சரியமாக வர, மென்புன்னகை புரிந்தாள் அவள்.

“நிஜமா எனக்கே ஷாக்கிங் ஆ இருக்கு, இது நானான்னு. இந்த பெயின்ட்டிங்ல எவ்வளவு அழகா இருக்கேன். யூ க்னோ வாட் அம்ரி, இன்னும் டூ மன்த்ஸ்ல மும்பையில பெயின்ட்டிங் காம்பெடீஷன் நடக்க போறதா கேள்விப்பட்டேன். அதுல நீ கலந்துக்கிட்டா கண்டிப்பா நீதான் ஜெயிப்ப” வேதா உற்சாகமாக சொல்ல, அம்ரிதாவின் முகத்தில் இருந்த புன்னகை மாயமாகி முகம் சுருங்கியது.

அவளுடைய முகமாற்றத்தை கவனித்த வேதாவுக்கோ எதுவும் புரியவில்லை.

‘என்ன?’ என்ற ரீதியில் அவள் அம்ரிதாவை கேள்வியாக நோக்க, வேதாவின் கையிலிருந்த ஓவியத்தை எடுத்தவள் தான் வரைந்த ஓவியங்களுடன் பத்தோடு பதினொன்றாக வைத்து, “இவங்கள பொருத்தவரைக்கும் ஒரு பொண்ணு அவ வீட்டை விட்டு வெளில போறான்னா அது அவளோட புகுந்த வீடா மட்டும்தான் இருக்கணும்” என்றுவிட்டு வலி நிறைந்த புன்னகை சிந்தினாள்.

அதைக் கேட்டதும் இந்த ஊரில் நடப்பது பற்றியும், தான் பார்த்த சடங்கை பற்றியும் கேட்பதற்காக வாய் வரை வந்த வார்த்தைகளை அப்படியே விழுங்கிக்கொண்டு, “நீங்க உருவாக்கின சம்பிரதாங்கள், கட்டுப்பாடுகள் தானே! என்ஜோய்” என்று கேலியாக உரைத்துவிட்டு அங்கிருந்து நகர்ந்தாள் வேதா.

‘இந்த ஊரில் மாற்றத்தை கொண்டு வருவது சாத்தியமா?’ என்று அவளுக்கே சந்தேகம்!

இதில் நான்கைந்து நாட்களாக ராவணும் அவளெதிரே வரவேயில்லை. என்னதான் அவனுடனான சந்திப்பு வேதாவுக்கு பிரச்சினை என்றாலும், ‘என்ன அந்த சேவேஜ காணோம்’ என்று நினைக்கும் மனதை மட்டும் வேதாவால் கட்டுப்படுத்த முடியவில்லை.

இவ்வாறு விக்ரம் ஊரை விட்டுச்சென்று ஒருவாரம் கழிந்தநிலையில், ‘அந்த இடியட் போய் ஒருவாரம் ஆயிருச்சு. ஆனா, வீட்டுக்கு போய் சேர்ந்துட்டான்னு ஒரு இன்ஃபோர்ம் பண்ணானா? கோல் பண்ணா எடுக்கவும் மாட்டேங்குறான்.  ச்சே! மனுஷன எப்போ பார்த்தாலும் பதட்டத்துலயே வைக்க வேண்டியது!’ விக்ரமிற்கு பல அர்ச்சனைகளை வழங்கியவாறு அறையிலிருந்து வெளியே வந்த வேதா, வீட்டிலிருந்தவர்கள் எங்கோ செல்வதற்கு தயாராகி பம்பரம் போல் வேலைப் பார்ப்பதைப் புரியாது பார்த்தாள்.

‘என்ன… நடமாடும் நகை கடை மாதிரி நம்ம அத்தை திரிஞ்சிக்கிட்டு இருக்காங்க. என்ன ஸ்பெஷல் இன்னைக்கு? வீட்டுல ஏதாச்சும் ஃபங்ஷனா? நாம இந்த வீட்டுல இருக்கிறோமுன்னு தான் பேரு, நம்மள எல்லாம் மனுஷியா மதிச்சி எதுவும் சொல்றதில்லை’ தனக்குள்ளேயே புலம்பியவாறு அம்ரிதாவின் அறைக்குள் நுழைந்தவள், அங்கு நிற வளையல்களை இதழ் முழுக்க புன்னகையுடன் அணிந்துக்கொண்டிருந்தவளை புன்னகையுடன் பார்த்தாள்.

“என்ன மேடம், அலங்காரம் எல்லாம் பலமா இருக்கு. உங்க த க்ரேட் சுஜீப்தான் இதுக்கெல்லாம் ஒத்துக்க மாட்டாரே!” வேதா கேலியாக சொல்ல, “இங்க விதவைங்க எல்லாரும் இந்த மாதிரி விஷேஷத்துக்கு போக மாட்டோம். ஆனா, அன்னைக்கு நீ என் மேல நிறம் பூசிவிட்டதுலயிருந்த இந்த விஷயத்துல ஏதோ மாறியிருக்கு. அம்மா கூட நான் இப்படி ஏதாச்சும் போட்டுக்கிட்டா எதுவும் சொல்றதில்லை. எனக்கும் பிடிச்சிருக்கு. ரொம்ப தேங்க்ஸ் தீ” என்று தழுதழுத்த குரலில் சொன்னாள்.

“அதெல்லாம் இருக்கட்டும், என்ன விஷேஷம்? வீட்டுல ஏதாச்சும் பூஜையா என்ன?” அவள் கேட்க,  “வேதா, உனக்கு விஷயமே தெரியாதா? இன்னைக்கு மாஹிக்கு கல்யாணம். அம்மா சொல்லல்லையா என்ன? போ, போய் நீயும் ரெடி ஆகு” என்று அம்ரிதா சொன்ன அடுத்தநொடி அவளுக்கோ தூக்கி வாரிப்போட்டது.

“வாட்!” அதிர்ச்சியில் வேதா எழுந்து நின்றுவிட, “அம்ரி சீக்கிரம், நேரமாச்சு. ஆங், முக்கியமான விஷயம். வீட்டு வேலைக்காரிய கூட்டிட்டு வந்தாலும் பரவாயில்லை. இந்த திமிர் பிடிச்ச பொண்ண மட்டும் கூட்டிட்டு வராதீங்கன்னு சுனில் பையா சொல்லியிருக்காரு. ஏய் வேதஷ்வினி, தயவு செஞ்சி அந்த பக்கம் வந்துடாத!” என்றுவிட்டு அம்ரிதாவை அழைத்துக்கொண்டு சென்றார் சீதா.

ஆனால், இங்கு வேதாவிடம்தான் அசைவே இல்லை. சொன்ன செய்தியில் உண்டான அதிர்ச்சியில் உறைந்துப் போய் நின்றிருந்தாள் அவள். ‘இதை எப்படி விக்ரம் தாங்கிக்கொள்வான்? முதலில் விடயம் அவனுக்கு தெரியுமா?’ என்ற கேள்விகள்தான் இப்போது அவளுக்குள்.

நடப்புக்கு வந்து வேகவேகமாக அலைப்பேசியை தேடி எடுத்து தன் தோழனுக்கு அவள் அழைக்க, அவனை அடைய முடிந்தால் தானே!

‘பிக் அப் விக்கி!’ தொடர்ந்து அவனுக்கு அழைத்தவள், அவன் எந்த அழைப்புக்களையும் ஏற்காததில் அடுத்து அழைத்தது என்னவோ தீப்திக்குதான்.

தீப்தி அழைப்பை ஏற்றதும்தான் தாமதம், “எங்கடி அவன்? ஊருக்கு வந்தானே, வந்து சேர்ந்ததை சொல்லணுங்கிற அறிவில்லையா? அவன…” என்று பல்லைக்கடித்தவள், “அவன்கிட்ட ஃபோன கொடு!” என்று கடுப்படிக்க, “ஸ்டாப்! ஸ்டாப்! யாரைப் பத்தி பேசுற நீ? எவன்கிட்ட கொடுக்க?” என்ற தீப்தியின் புரியாத கேள்வியில் யோசனையில் புருவத்தை நெறித்தாள் வேதா.

“விக்கி…” என்று யோசனையோடு  அவள் இழுக்க, “வாட்! விக்கியா? ஏய் வேத், என்ன பேசிக்கிட்டு இருக்க நீ? அவன்தான் ஊருக்கு வரவேயில்லையே… எப்போதான் வருவான் அவன்? அவன நினைச்சி அங்கிள் புலம்பிக்கிட்டு இருக்காரு. அவன் என்னடான்னா ஹிந்தி பொண்ணுங்க பின்னாடி திரிஞ்சிக்கிட்டு இருக்கானா? டூ பேட்” தீப்தி பேசிக்கொண்டே போக, ஆடிப்போய்விட்டாள் அவள்.

அழைப்பை துண்டித்தவளுக்கு தன்னை சுற்றி என்ன நடக்கிறது என்று சுத்தமாக புரியவில்லை. 

‘விக்கி ஊருக்கு போகல்லையா? அவன் இங்கிருந்து போய் ஒருவாரம் ஆச்சு. ஆனா, அவன் சென்னையில இல்லை. அவன கான்டேக்ட் பண்ணவும் முடியல. என்னாச்சு அவனுக்கு? ஒருவேள…’ தனக்குத்தானே பேசி பதட்டமானவள், ‘ச்சே ச்சே! அப்படியேல்லாம் நடந்திருக்காது. அவனுக்கு ஒன்னும் ஆகாது. அவனுக்கு எதுவும் ஆக நான் விட மாட்டேன். அவன் எனக்கு ரொம்ப முக்கியம். விக்கி எங்கடா இருக்க?’ என்று மானசீகமாக புலம்பியவளின் விழிநீர் அவளையும் மீறி விழியிலிருந்து வெளியேறி தரையை தொட்டது.

எவ்வளவுநேரம் அவள் கட்டிலில் சிலை போல் அமர்ந்திருந்தாள் என்று அந்த கடவுளுக்குதான் தெரியும். சரியாக, வாசலில் ஒரே சலசலப்பு!

அறையிலிருந்து வேதா வெளியேறி வாசலைப் பார்க்க, அங்கு சீதாவும் அம்ரிதாவும் சோக முகமாய் வந்துக்கொண்டிருந்தார்கள் என்றால், பக்கத்திலிருந்த சுஜீப்போ “அந்த மெஹ்ரா குடும்பத்தோட மானமே போச்சு. எவன் போய் சொன்னானோ தெரியல. ச்சே! கொஞ்சம் வெளியில விட்டதுக்கு அந்த பொட்டச்சி பண்ண காரியத்தை பார்த்தீங்கல்ல, இதுல முழு சுதந்திரமும் கொடுத்தா கிழிஞ்சிரும்” என்று கத்தியவாறு வந்து ஹோல் சோஃபாவில் அமர்ந்தார்.

வேதாவோ அவர்களை கேள்வியாக நோக்க, அவளை கவனித்த அம்ரிதா வேகமாக அவளிடம் ஓடி வந்து, “தீ, உங்களுக்கொன்னு தெரியுமா, கல்யாணம் நின்னு போச்சு. மாஹி ஏதோ ஒரு பையன காதலிச்சா, அது மாப்பிள்ளை வீட்டுக்கு தெரிஞ்சிப் போய்தான் கல்யாணத்தை நிறுத்திட்டாங்கன்னு பேசுறாங்க. பாவம் அவ! அவ மேல அப்படி ஒரு பழிய போட எப்படிதான் மனசு வந்திச்சோ?” என்று வருத்தம் தேய்ந்த குரலில் பேசிக்கொண்டே போக, அமைதியாகவே அவள் சொல்வதை கேட்டிருந்தாள் வேதா.

‘இங்க என்னதான் நடக்குது?’ என்ற கேள்விதான் அவளுக்குள் மீண்டும் மீண்டும் எழுந்துக்கொண்டிருந்தது.

அறையிலிருந்து யோசித்துக்கொண்டிருந்தவளுக்கு ஏதோ மூச்சு முட்டுவது போல் இருக்க, தோட்டத்துக்கு வந்தவளின் விழிகளில் சரியாக சிக்கினான் சந்தீப்.

அவனும் வேதாவை பார்த்ததும், “தீ, நான் வீட்டுக்கு கிளம்புறேன். கார் சாவியை பையாக்கிட்ட கொடுத்துருங்க” என்று சொன்னவாறு சாவியை அவளிடம் நீட்ட, அதை வாங்கியவாறு, “சந்தீப், நான் ஒன்னு கேக்கலாமா?” என்று கேட்டாள் வேதா.

அவனோ அவளை கேள்வியாக நோக்க, “அது சந்தீப்… ஒருவாரத்துக்கு முன்னாடி ஸ்டேஷன்ல ட்ரோப் பண்றதுக்கு உன்னை கூப்பிட சொல்லிதான் விக்கிகிட்ட நான் சொல்லியிருந்தேன். அவன் உன்னை கூப்பிட்டா என்ன?” வேதா முகத்தில் எதையும் காட்டாது சாதாரணமாக கேட்க, “இல்லையே தீ, நானே உங்ககிட்ட அவர பத்தி கேக்கணும்னு நினைச்சேன். அவர் ஏன் அவ்வளவு அவசரமா உங்க ஊருக்கு கிளம்பி போனாரு. ஏதாச்சும் பிரச்சினையா?” புரியாது கேட்டான் அவன்.

“அப்படி… அப்படி எல்லாம் இல்லை. நீ கிளம்பு! நான் மாமாகிட்ட சாவிய கொடுத்துக்குறேன்” என்றுவிட்டு தோட்டத்தில் போடப்பட்டிருந்த பென்ச்சில் அமர்ந்தவளுக்கோ தலையே சுற்ற ஆரம்பித்துவிட்டது.

‘வாட் த ஹெல் இஸ் காய்ங் ஆன் ஹியர்? ஒன்னுமே புரியல. ஊருக்கும் போகல. இங்கேயும் இல்லை. அப்போ விக்கி எங்கதான் இருக்கான்? ஷீட்!’ என்று நெற்றியை எரிச்சலாக நீவி விட்டுக்கொண்டவளின் மூளையில் அந்த ஒருத்தியின் நினைவுதான் வந்தது.

“மாஹி…” அவளுடைய இதழ்கள் முணுமுணுக்க, அன்று இங்கிருந்து செல்லும் போது விக்ரம் மாஹியை சந்திக்கச் செல்வதாக சொன்ன வார்த்தைகள்தான் அவளின் நியாபகத்திற்கு வந்தன.

‘ஆமா, அவளுக்கு கண்டிப்பா தெரிஞ்சிருக்கும். மாஹிக்கிட்டதான் என்னோட அத்தனை கேள்விகளுக்கும் பதில் இருக்கு’ என்று தரையை வெறித்தவாறு நினைத்துக்கொண்டவள், அடுத்தநாள் திடுதிப்பென சென்று நின்றது என்னவோ ராவணுடைய வீட்டின் முன்தான்.

வாசலில் நின்றிருந்த அடியாற்களின்  பார்வை அவள் மேல் கேள்வியாக படிய, ஒருசிலரின் பார்வையோ கோபமாக படிந்தது.

வேதாவோ யாரையும் கண்டுக்கொள்ளாது விறுவிறுவென நடந்து வீட்டுக்குள் நுழைய, அதிர்ந்தவர்கள், “ஏய் நில்லு!” என்று கத்தியவாறு அவள் பின்னால் வேகமாக வந்தனர். சரியாக, அழைப்பொன்றை பேசியவாறு வெளியே வந்த ராவணும் வீட்டுக்குள் நுழையப்போன வேதாவும் எதிரெதிரே சந்திக்க, சற்றும் தன் வீட்டில் அவளை அவன் எதிர்ப்பார்க்கவில்லை என்பது அவனுடைய அதிர்ந்த முகத்திலே அப்பட்டமாக தெரிந்தது.

ஆனால், நொடியில் முகபாவனையை மாற்றியவன், “வாவ் மிர்ச்சி! வெல்கம் வெல்கம். ஒருவாரம் பார்க்காததால என்னை தேடி வீட்டுக்கே வந்துட்ட. அன்னைக்கு அந்த ராவண் சீதாவ அவனோட இடத்துக்கு தூக்கிட்டு வந்தான். ஆனா, இன்னைக்கு சீதாவே ராவணோட இடத்துக்கு வந்திருக்கா” கேலியாக சொல்லிச் சிரிக்க, உதட்டை பிதுக்கியவள், “உன் இடத்துக்கு வந்திருக்குறது சீதா இல்லை சேவேஜ். வேலு நாச்சியார். கேள்விப்பட்டிருக்கியா?” பதிலடி கொடுத்துவிட்டு அவனைத் தாண்டி வீட்டுக்குள் நுழைந்தாள்.

அவனோ அவளைப் புரியாது பார்க்க, வீட்டுக்குள் நுழைந்த வேதா அவள் பாட்டிற்கு, “மாஹி… மாஹி…” என்று கத்த, ஹோல் சோஃபாவில் அமர்ந்திருந்த சுனிலுக்கோ கோபம் தாறுமாறாக எகிறியது.

“நான் மாஹிய பார்க்கணும்” வேதா சொல்ல, அவரோ அவளைத் தாண்டி தன் மகனைதான் எட்டிப்பார்த்தார்.

ராவணோ தலையசைக்க, மாடியிலிருந்த அறையை காட்டியவர், மீண்டும் சோஃபாவில் கால் மேல் கால் போட்டு அமர்ந்து அவளை கூர்ந்து கவனிக்க, வேகமாக அறைக்குள் நுழைந்தவளுக்கு அங்கு மூலையில் முட்டியை கட்டிக்கொண்டு தலைவிரி கோலமாக அமர்ந்திருந்த மாஹியை பார்த்ததும் தூக்கி வாரிப்போட்டது.

“மாஹி…” என்று வேதா அழைத்ததும்தான் தாமதம், சட்டென நிமிர்ந்த மாஹி, வேதாவை பார்த்ததுமே அழுத அழுகையில் ஆடிப்போய்விட்டாள் அவள்.

Leave a Reply

error: Content is protected !!