Uyir Vangum Rojave–EPI 13

ROSE-2dbc01c2

அத்தியாயம் 13

காதலுங்கிறது எந்த நேரத்துல யார் மேல வரும்னு யாருக்குமே தெரியாது

அது தெரிஞ்சா எந்த பொண்ணும் அந்த நேரத்துல வீட்ட விட்டு வெளிய வரவே மாட்டா

(சுஹாசினி – வசீகரா)

 

கார் வீட்டு வாசலை வந்து அடைந்தது. டிரைவர் இறங்கி வந்து அவர்கள் இருவருக்கும் கதவைத் திறந்து விட்டார். கீழே இறங்கிய வேந்தன் அந்த பெரிய பங்களாவை வெறிக்க நோக்கினான்.

‘ஹ்ம்ம். இனிமே இதுதான் என் வீடா? இல்ல இல்ல மாமனார் வீடு. நான் இனிமே வீட்டோட மாப்பிள்ளை’ நினைக்கவே தொண்டை வரை கசந்து வழிந்தது அவனுக்கு. அதற்குள் காரிலிருந்து இறங்கி இருந்த தேவி,

“என்ன யோசனை மலர்? நான் ரெண்டு தடவை கூப்பிட்டும் ஒரு சத்தத்தையும் காணோம்?”

“ஒன்னும் இல்ல மேடம். உங்க வீட்டைப் பார்த்து பிரமிச்சு போய் நின்னுட்டேன்”

“என் வீடு இல்ல, நம்ம வீடு. இதோட மேடம்னு கூப்பிடறத நிறுத்து மலர். அப்புறம் எனக்கு கெட்ட கோபம் வந்துரும்” குரலிலே கோபம் இருந்தது.

“முயற்சி பண்ணுறேன்” என பொதுவாக சொன்னான் வேந்தன்.

“ஹ்ம்ம், சரி. வீட்டுக்குள்ள போகனும். என்னை தூக்கிட்டு போ மலர்”

“என்னது! தூக்கனுமா?” அதிர்ச்சியானான் அவன்.

“எங்க ஊருல கல்யாணம் ஆன மனைவிய, ஹஸ்பண்ட் முதலிரவு ரூம் வரைக்கும் தூக்கிட்டு போவாங்க. நான் வீட்டுக்குள்ள வரைக்கும் தானே தூக்க சொல்லுறேன்.” கையை நீட்டிக் கொண்டு சிறு பிள்ளைப் போல் தூக்க சொல்லி நின்று கொண்டிருந்தாள் அவள்.

வேந்தனுக்கு சங்கோஜமாக இருந்தது. டிரைவர் வேறு இவர்களையே பார்த்தவாறு நின்றிருந்தான்.

இவன் தயங்குவதைப் பார்த்ததும் தேவிக்கு சுறுசுறுவென கோபம் ஏறியது.

“கண்டிஷன் நம்பர் ஓன் ஞாபகம் இருக்கா மலர்?” என கோபமாக கேட்டாள்.

“நல்லா ஞாபகம் இருக்கு” என்றவன், அவள் எதிர்ப்பார்க்காத தருணத்தில் அலேக்காக அவளை தூக்கி இருந்தான். அவளது கோப முகம் பட்டென சந்தோஷத்துக்கு தாவியது. வாகாக அவன் கழுத்தைக் கட்டிக் கொண்டு முகத்தை அவன் நெஞ்சில் சாய்த்துக் கொண்டாள். நான்கு காஸ் சிலிண்டர்களை தூக்கச் சொல்லி இருந்தால் கூட பாகுபலி போல் தூக்கியிருப்பான் அவன். இவள் ஒருத்தியை வீட்டு வாசல் வரை தூக்கி வருவதற்குள் மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்கி விட்டது வேந்தனுக்கு.

‘யப்பா! என்ன கணம்டா சாமி! வட்டி வட்டியா பாஸ்தா சாப்புடுவாளோ? இவ கணத்தைக் கூட தாங்கிறலாம் போல இருக்கு, இப்படி ஒட்டிக் கிட்டு வரததான் தாங்க முடியலை. உள்ளுக்குள்ள என்னென்னமோ பண்ணுது. சை இம்சைடா.’ என முனகிக் கொண்டான்.

வாசலிலேயே அவர்களை நிறுத்தி அப்படியே ஆரத்தி சுற்றினார் முனிம்மா. அப்பொழுது கூட அவள் கீழே இறங்கவில்லை.

“மலர், முதன் முதல்ல நம்ம வீட்டுக்கு வர, ரைட் லேக் வச்சு உள்ள வா”

‘இத்தாலியா இருந்தாலும் இந்தியன் கல்ச்சர மறக்கல. அதுவரைக்கும் எனக்கு சந்தோஷம் தான்’

உள்ளே வந்து நடு ஹாலில் அவளை இறக்கிவிட்டான். முனிம்மா பாலும், வாழைப்பழமும் எடுத்து வந்து கொடுத்தார்.

“இது எதுக்கு?” என கேட்டாள் தேவி.

“நீங்களே சொல்லுங்க தம்பி எதுக்குன்னு” என அவனிடம் அந்த பொறுப்பைக் கொடுத்துவிட்டு உள்ளே வெட்கத்துடன் விரைந்துவிட்டார் அவர்.

‘நாம என்ன நாலு கல்யாணமா பண்ணியிருக்கோம் இதெல்லாம் தெரிஞ்சு வச்சிக்க. மூஞ்சிய மூஞ்சிய பாக்குறாளே. எதையாச்சும் சொல்லி சமாளிப்போம்’

“அது வந்து, கல்யாணம் ஆன புதுமண தம்பதிங்க கண்டிப்பா பாலும் பழமும் சாப்பிடனும். பாலும் பழமும் வயித்துல ஒன்னு சேர்ந்தவுடனே ஒரு கலக்கு கலக்குமில்ல, அதே மாதிரி மாப்பிள்ளையும் பொண்ணும் ஒன்னு சேர்ந்து அவங்க வாழ்க்கைய ஒரு கலக்கு கலக்கனும்னு தான் இந்த சாங்கியம்.”

‘அப்பாடா, ஏதோ சொல்லி சமாளிச்சிட்டேன். அவ நம்பாத மாதிரியே பார்க்கறாளே. திரும்பவும் நோண்டி கேக்கறதுக்குள்ள பழத்தை உரிச்சி வாயில திணிச்சிற வேண்டியதுதான்’ நினைத்ததை சட்டென செயல் படுத்தினான். பாதி பழத்தை அவளிடம் கொடுத்தவன், மீதியை அவன் சாப்பிட்டான். பாலையும் அவளுக்குக் கொடுத்து மீதியைக் குடித்தான்.

“கொஞ்ச நேரம் இங்கயே உட்காரு மலர். நான் போய் சட்டை மாத்திட்டு வரேன்” என உள்ளே சென்றாள்.

அங்கிருந்த சோபாவில் அமர்ந்த வேந்தன், சுற்றிலும் பார்வையை சுழல விட்டான். ஆழ்ந்த ஊதா வண்ணத்தில் சுவற்றை பெய்ண்ட் செய்திருந்தார்கள். சோபாக்கள் அந்த வர்ணத்தை எடுத்துகாட்டும் விதமாக பால் கலரில் இருந்தது. சின்ன சின்ன தலையணைகள் அங்கங்கே ஆரஞ்சு, நீலம், மஞ்சள் போன்ற வர்ணங்களில் சோபாவில் வைக்கப்பட்டிருந்தது. அவன் அமர்ந்தது ரிக்லைனர் வசதி கொண்ட சோபா. அதில் உள்ள பட்டனை அமுத்தி வசதியாக சாய்ந்து அமர்ந்து கொண்டான் வேந்தன். இதை போல் எல்லாம் இன்டிரியர் செய்து கொடுக்கும் போது மற்றவர்களுக்கு வாங்கி போட்டிருக்கிறான். சொந்தமாக அனுபவித்தது கிடையாது. சோபாவின் சொகுசிலும், ஏசியின் குளிரிலும், இரவு முழுக்க தூங்காததாலும் அமர்ந்தபடியே தூங்கி விட்டான் அவன்.

அவன் கண் விழித்த போது, எதிரே ஒரு வெள்ளை உடை தேவதை அவனையே பார்த்தபடி அமர்ந்திருந்தது.

‘செத்து சொர்க்கத்துக்கு போயிட்டமா? இது தான் ரம்பையோ? இருக்காதே அவங்க செக்சியா சேலைதானே கட்டியிருப்பாங்க.’ கண்களை நன்றாக தேய்த்து விட்டு மீண்டும் பார்த்தான். தேவிதான் அவனையே பார்த்தபடி அமர்ந்திருந்தாள்.

அப்பொழுதுதான் அவளை ஊன்றி கவனித்தான் வேந்தன். வெள்ளையர்கள் திருமணத்துக்கு அணியும் வெள்ளை உடையில் இருந்தாள் அவள். இடுப்புக்கு மேலே உடம்பை கவ்விப் பிடித்த உடை, இடுப்புக்கு கீழே குடை போல் விரிந்திருந்தது.

‘தேவதையை கண்டேன் காதலில் விழுந்தேன்

என் உயிருடன் கலந்து விட்டாள்
நெஞ்சுக்குள் நுழைந்தாள் மூச்சினில் நிறைந்தாள்

என் முகவரி மாற்றி வைத்தாள்’ மனதில் பாடல் ஓடியது. தலையைக் உலுக்கிக் கொண்டவன்,

‘காதல் எல்லாம் இல்ல. அழகா வெள்ளையா இருக்காளே, அதனால ஒரு அட்ராக்சன்னு வேணும்னா வச்சுக்கலாம். என்னை இந்த பாடு படுத்தி கல்யாணம் பண்ணியிருக்கா. அதனால இந்த அட்ராக்சன் கூட தப்பு.’ என ஆசையைத் தலைத் தட்டி அடக்கி வைத்தான்.
“எழுந்திட்டியா மலர்? இந்தா, இதை போய் போட்டுக்கிட்டு வா. கெஸ்ட் ரூம் முனிம்மா காட்டுவாங்க” என சொல்லி அவன் கையில் அட்டை பெட்டியைக் கொடுத்தாள்.

முனிம்மா காட்டிய ரூமில் அட்டைப் பெட்டியில் இருந்த டோமி ஹில்பிகர் பிராண்ட் கருப்பு வர்ண பேன்ட்டையும், வெள்ளை நிற முழுக்கை சட்டையையும் அணிந்து கொண்டு, முகம் கழுவி பிரஸ்சாக வந்தான் வேந்தன்.

அதற்குள் கார்த்திக்கும் வந்திருந்தான். வேந்தன் கேட்பதற்குள்,

“அவங்க எல்லாரையும் வீட்டுல பத்திரமா விட்டுட்டு, சாப்பிட வாங்கி குடுத்துட்டு தான் வரேன். இன்னும் ரெண்டு நாளுதானே. அதுக்குள்ள மேடம் வாங்குயிருக்கற வீட்டோட இண்டிரியர் வேலை எல்லாம் முடிஞ்சிரும். அப்புறம் அவங்க அங்க சேப்பா இருப்பாங்க. நீ வோரி பண்ணிக்காத மச்சி” என்றான்.

அவனுக்கு பதிலாக ஒரு தலை அசைப்பை மட்டும் கொடுத்தான் வேந்தன். வேந்தனை ஒரு அறைக்கு அழைத்து சென்றாள் தேவி. அங்கே அவளது அம்மாவின் புகைப்படம் பெரிதாக மாட்டப்பட்டிருந்தது. லேசாக கண் கலங்கியவள்,

“மலர், மீட் மை மாம் ரோஸ்மேரி. இது அவங்க வெட்டிங் டிரஸ்தான். ஆனா இதை அவங்க போட்டதே இல்லை. அவங்க ஆசை எல்லாம் நான் நல்லபடி சந்தோஷமா இருக்கனும்னு தான். எங்க முறைப்படி தான் திருமணம் செஞ்சுக்கனும்னு நினைச்சேன். ஆனா இந்த விஷயத்துலயும் உன்னை காம்ரமைஸ் பண்ண வைக்க மனசு வரல. சோ, எங்க அம்மா முன்னுக்கு நாம மோதிரம் மாத்திக்கலாம்.” என்றவள் கரகரத்த குரலை செறுமி சரி செய்து கொண்டாள். பின் கார்த்திக்கை திரும்பி பார்த்தவள்,

“போய் அந்த ஆளை கூட்டிட்டு வா. ரூம் கீ செக்குரிட்டி கிட்ட இருக்கு. அந்த ரெண்டு பேரையும் கூடவே கூட்டிட்டு வா. இங்க வந்து ஏதாவது சத்தம் போட்டாரு, அப்புறம் எது நடந்தாலும் நான் பொறுப்பு இல்லை. சொல்லிடு மிஸ்டர் ராகவன் கிட்ட”

‘அடிப்பாவி! பெத்த அப்பனையே ஹவுஸ் அரெஸ்ட்ல வச்சிருக்கியா? அதான் மனுஷன் கண்ணுலயே படலையா? சரியான அடாவடியா இருக்காளே. லட்டு போட்டுக் குடுத்த திட்டம் எதுவும் இவ கிட்ட பலிக்குமான்னு தெரியலையே’ மெல்லிய பயத்துடன் அவளை ஏறிட்டுப் பார்த்தான்.

அவனைப் பார்த்து புன்னகைத்தவள், அவனது கைகளை ஆசையுடன் பற்றிக் கொண்டாள்.

‘கை கை கை கை கை வைக்கிறா வைக்கிறா

கைமாத்தா என் மனச கேக்குறா கேக்குறா’

மனம் குத்து டான்ஸ் போட்டது.

‘அய்யோ முத நாளுலயே இப்படி கண்ணை கட்டுதே. மீதி நாள எப்படி தான் சமாளிக்க போறேன்னோ தெரியலையே. இவ விஷயத்துல நான் இவ்வளவு வீக்கா?’ தன்னையே திட்டிக் கொண்டான் வேந்தன்.

அதற்குள் செக்குரிட்டி ஆட்கள் இரு பக்கமும் கூட வர ரூமின் உள்ளே வந்தார் ராகவன். அவர் கண்கள் நேராக மஞ்சள் கயிறு மினுமினுக்கும் அவள் கழுத்துக்கு தான் சென்றது. ஒரு சோக பெருமூச்சு ஒன்று வெளியானது அவரிடம். தோற்றுப் போனவராக அங்கிருந்த நாற்காலியில் அமர்ந்து கொண்டார்.

“இந்த கல்யாணத்தையாவது நீங்க பார்க்கனும்னு தான் வர வச்சேன். நீங்க கல்யாணத்தை நிறுத்த செஞ்ச முயற்சி எல்லாத்தையும் நான் முறியடிச்சப்பவே நீங்க எஸ்கேப் ஆகி இருக்கனும். இப்படி வான்டட்டா ஒரு வாரமா ஹவுஸ் அரெஸ்ட் ஆகிட்டீங்களே மிஸ்டர் ராகவன்.” என அவரைப் பார்த்து கிண்டலாக கேட்டாள் தேவி.

கண்கள் லேசாக கலங்கியது அவருக்கு. அவரது கலக்கத்தைப் பார்த்த தேவிக்கு உற்சாகம் பீறிட்டது.

அம்மாவின் படத்தின் முன் நின்றவள் வேந்தனையும் அருகில் நிற்க வைத்துக் கொண்டாள். கண் மூடி மனமுருக அவரிடம் பிரார்த்தித்தவள், மோதிரத்தை வேந்தனிடம் நீட்டினாள். அதை வாங்கியவன், மெல்ல அவள் கரம் பற்றி அதை அணிவித்தான். அந்த காட்சியை அழகாக புகைப்பட கருவியில் படம் பிடித்தான் கார்த்திக். சூழலின் இருக்கத்தைக் குறைக்க,

“வேந்தன் சார், எத்தனை இங்லீஸ் படம் பார்த்திருக்கீங்க. மோதிரம் மாத்துன உடனே கிஸ் குடுக்கனும்பா. இதெல்லாமா சொல்லிக் குடுப்பாங்க?” என வேந்தனை வம்பிழுத்தான். தேவியும் அவன் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தாள்.

‘சும்மாவே இந்த மானங்கெட்ட மனசு அவ பக்கம் சாய பாக்குது. இதுல கிஸ் வேறயா? ஏன்டா என்னை இப்படி கொல்லுறீங்க?’ மெல்ல குனிந்து அவள் கன்னத்தில் பட்டும் படாமலும் ஒரு முத்தத்தைப் பதித்தான் அவன். அவள் கன்னத்தின் மென்மையில் மனம் பாடல் படிக்க விழைந்தது. ஏற்கனவே இரு பாடல்கள் பாடி விட்டதால், வேண்டாம் என விட்டுவிட்டான் வேந்தன்.

அவனது மீசையின் உராய்வில் சிலிர்த்துப் போன தேவி, முகம் விகசிக்க அவனைப் பார்த்து மந்தகாச புன்னகை புரிந்தாள்.

“இது செல்லாது. ‘அவள்’ படம் லெவலுக்கு குடுப்பேன்னு பார்த்தா, அவல் மெல்லறவன் மாதிரி குடுக்கற” என அவனை இன்னும் கலாய்த்தான் கார்த்திக்.

அழகாக வெட்கப்பட்ட வேந்தனைப் பார்த்து தேவி விழுந்து விழுந்து சிரித்தாள். அவள் சிரிப்பதை ஆசையுடன் பார்த்துக் கொண்டிருந்தான் கார்த்திக்.

“கார்த்திக், தட்ஸ் இனாப். கிண்டல் பண்ணறத நிறுத்து” என்றவள் ஹாலுக்கு நடந்தாள். அவர்கள் அனைவரும் அங்கே வருவதற்கும், முனிம்மா சில லக்கேஜ் பெட்டிகளை வாசலில் கொண்டு வந்து வைக்கவும் சரியாக இருந்தது.

திரும்பி ராகவனைப் பார்த்தவள்,

“இனிமே நீங்க இங்க இருக்க வேணாம். என் ஹஸ்பென்டுக்கு மாமனார் வீட்டுல உட்கார்ந்திருக்கோம் என்கிற பீலிங் வரது எனக்கு பிடிக்கல. இது என் வீடு. இப்போ எங்க வீடு. அதுல மூணாம் மனுஷன் உங்களுக்கு இடமில்ல. குன்னூர்ல இருக்கற என் எஸ்டேட்டுக்கோ, இல்ல பெங்களூர்ல இருக்கற வீட்டுக்கோ கிளம்புங்க.  தெ சாய்ஸ் இஸ் யோர்ஸ்” என இரக்கமின்றி கூறினாள்.

அவளது அருகாமையில் மயங்கிய வேந்தனின் மனது, அவளின் இந்த செயலில் மீண்டும் கடினமானது.

“தேவி! இது என்னோட வீடு. என்னை இங்க இருந்து போக சொல்ல உனக்கு எந்த உரிமையும் இல்ல” கோபமாக கத்தினார் ராகவன்.

“ஸ்ஸ்ஸ். சத்தம், சத்தம்! கொஞ்சம் சத்தத்தைக் குறைங்க மிஸ்டர் ராகவன். ஏற்கனவே பி.பி இருக்கு. இப்போ ஹார்ட் அட்டாக் வந்துற போது. நான் வாழ்க்கைய ஆரம்பிக்கும் போது அபசகுனமா நீங்க வாழ்க்கைய முடிச்சிக்காதீங்க. என்ன சொன்னீங்க? உங்க வீடா? லுக் மிஸ்டர் ராகவன், இந்த வீடு, உங்க சொத்து எல்லாம் என் கைக்கு வந்து பல வருஷம் ஆச்சு. அதனால ஓவரா ஆடாம நடைய கட்டுங்க.” அவளது கண்ணசைவில் செக்குரிட்டிகள் அவரது கையைப் பிடித்துக் கொண்டனர்.

“மேடம், அவரு பாவம். வயசானவரு” என சப்போர்ட்டுக்கு வந்த வேந்தனை,

“யூ ஷட் அப் மலர்! உனக்கு ஒன்னும் தெரியாது. இந்த ஆளுக்கு மட்டும் என்னிக்கும் என்கிட்ட சப்போர்ட்டுக்கு வராதே. அப்புறம் என்னோட இன்னொரு சைடை நீ பார்க்க வேண்டி வரும்.” அவனையும் காய்ந்தாள்.

கார்த்திக் தான் செக்குரிட்டியின் பிடியில் இருந்து அவரை விடுவித்து,

“வாங்க சார். கல்யாணம் ஆன சின்ன சிறுசுங்க நடுவுல நமக்கு என்ன வேலை. நாம சுகமா குன்னூருல ரெஸ்ட் எடுப்போம். அட வாங்க சார்” என அவரை அழைத்து சென்றான். போவதற்கு முன் திரும்பி வேந்தனை முறைத்துவிட்டு தான் சென்றார் அவர்.

‘என்னை ஏன்யா முறைக்கிற? பண்ணதெல்லாம் நீ பெத்த பிசாசு. இதுல என்னை முறைச்சி என்ன புண்ணியம். இதுக்கு தான் எங்க அம்மா சொல்லும் ஒய்யார கொண்டையில தாழம்பூவாம், அதுக்குள்ளே இருக்குதாம் ஈரும் பேனும். இந்த சிச்சுவேஷனுக்கு இந்த பழமொழி சரி வருமா? காசா, பணமா. போட்டு தாக்குவோம்’ இவருக்குப் பரிதாப பட்டதற்கு தன்னையே நொந்து கொண்டான் வேந்தன்.

அவர்கள் வெளியேறியவுடன் பாத்ரூம் போவதாக சொல்லி கெஸ்ட் ரூமுக்கு சென்றான் வேந்தன். உள்ளே சென்று கதவை அடைத்தவன், அம்மாவுக்கு ஒரு போனைப் போட்டான்.

“வேந்தா! எப்படிடா இருக்க?”

“நல்லா இருக்கேன்மா. நீங்க எல்லாரும் எப்படி இருக்கீங்க?”

“இன்னிக்கு காலையில நீ எப்படி பார்த்தீயோ, அப்படியே தான்டா இருக்கோம். மருமக என்ன செய்யுறா?”

“என்ன செய்யலைன்னு கேளும்மா. அவங்க அப்பாவையே வீட்ட விட்டு துரத்திட்டாமா”

“அப்படியா? உன்னை துரத்துல இல்ல, அது வரைக்கும் சந்தோஷமா இருடா. எங்க வாழ்க்கைப்பட்ட முத நாளுலயே நீ வாழாவெட்டன் ஆகிட்டயோன்னு பயந்துட்டேன்”

“அம்மா!” பல்லைக் கடித்தான் வேந்தன். அந்த பக்கம் அவர் சிரிக்கும் சத்தம் கேட்டது.

“விடுடா. அவங்க அப்பா மகள் நடுவுல ஆயிரம் இருக்கும். நீ எதுக்கு அதுல தலை இடுற. உன் மேல ஆசையா பாசமா இருக்காளா, அதை மட்டும் பாருடா. இந்த மாதிரி துரத்தி கல்யாணம் பண்ணுற பொண்ணை எங்கயாச்சும் பார்த்திருக்கியா? அப்படி செஞ்சிருக்கானா அவளுக்கு உன் மேல எவ்வளவு பிரியம். அதை நினைச்சு சந்தோஷபடுடா. பொண்டாட்டி மனசு கோணாம நடந்துக்க”

“அம்மா! இதெல்லாம் புதுசா கல்யாணம் ஆன பொண்ணுங்களுக்கு அவங்க அம்மா சொல்லுவாங்க. என் கால கொடுமை, எனக்கு நீங்க சொல்லுறீங்க. விட்டா பால் சொம்பு தூக்கிட்டு போய் அவ காலுல நமஸ்காரம் பண்ணுன்னு சொல்லுவீங்க போல”

“யாரு கிட்ட யாரு சொன்னா என்னடா? நமக்கு தேவை குடும்பத்துல அன்பும் சந்தோஷமும் நிறைஞ்சி இருக்கறது தான். நான் ஆம்பிள்ளை, நான் தான் பெரியவன், எனக்கு கீழ தான் என் பொண்டாட்டி இப்படி எல்லாம் நினைக்கறத எப்ப நீங்க எல்லாம் விடறீங்களோ அப்பத்தான்டா சென்னையில மழை கொட்டுறது நிக்கும்”

“எதுக்கும் எதுக்கும் முடிச்சு போடுறீங்க இந்து மேடம்?” என சிரித்தான் வேந்தன்.

அவரும் மறுபக்கத்தில் சிரித்தார்.

“நீ சந்தோஷமா இருந்தா தான்டா நாங்களும் சந்தோஷமா இருப்போம். சரி சரி, லேட்டாகுது. நீ போய் உன் பொண்டாட்டிய பாரு. புவனா நோத்தே, தி யாமோ”

“என்னம்மா, நல்லா பேசிகிட்டு இருந்தீங்க. திடீர்ன்னு சட்டி பானை உடைக்கிற மாதிரி சத்தம் வருது”

“ஹிஹிஹி. அப்படினா இத்தாலில குட்டு நைட், ஐ லவ் யூவாம். உன் தங்கச்சிய டாச்சர் பண்ணி கத்துக்கிட்டேன்.”

“அம்மா! நீ இங்கிலீஸ் பேசுனாலே எல்லாரும் தெறிச்சுப் போயிருவாங்க, இதுல இத்தாலி வேறய? வேணாம்மா, மீ பாவம். விட்டுரு”

“என்னையா கிண்டல் பண்ணுற. இருடா உனக்கு ஒரு பாட்ட எடுத்து விடுறேன்

‘அடடா நடந்து வரா இதயத்த கிழிக்க வரா

 தமிழன ஆட்டிப் படச்சு 
 உலுக்கி குலுக்க ஓடி வா
 ரெடியா இருடா அது டேஞ்சரஸ் பார்ட்டி
 கடவுள் ஆடர் அவ உனக்குப் பொண்டாட்டி’’ என பாடினார்.

“அவ டேஞ்சரஸ் பார்ட்டி தான்மா. கதவை தட்டுறா. நாளைக்கு போன் பண்ணுறேன் மா”

“சரிடா வேந்தா”

கதவைத் திறந்தவன் அவளைப் பார்த்து மெல்லிய புன்னகை ஒன்றை சிந்தினான். பிறகு இருவரும் ஒன்றாக அமர்ந்து இரவு உணவை உண்டார்கள்.

“வா மலர். நம்ம ரூமுக்கு போலாம். இன்னிக்கு நமக்கு பர்ஸ்ட் நைட் வேற” என கையைப் பிடித்து மேல் மாடிக்கு அழைத்து சென்றாள்.

“இது தான் உன் ரூம். இங்க நீ குளிக்கலாம், ட்ரெஸ் சேஞ்ச் பண்ணலாம், ஆபிஸ் வொர்க் செய்யலாம் ஏன் தியானம் கூட பண்ணலாம். ஆனா நைட் மட்டும் என் கூட தான் இருக்கனும் நம்ம ரூமுல” அவனது ரூமை மூடியவள் அதற்கு பக்கத்தில் இருந்த தனது அறைக்கு அழைத்து சென்றாள்.

“நம்ம ரூம். நல்லா இருக்கா? உனக்கு பிடிக்காட்டி வேற மாதிரி மாத்திக்கலாம். இண்டிரியர்ல நீதான் புலியாச்சே”

‘மத்த விஷயத்துல நான் புலி தான். உன் முன்னுக்கு மட்டும் எலி ஆகிடறேன். இல்ல நீ ஆக்கிடறே.’

“என்ன யோசனை மலர். குளிச்சிட்டு வா.” என அவனை அனுப்பினாள்.

அவன் திரும்பி வரும் போது, பால்கனி சுவரில் சாய்ந்து கடலை வெறித்துக் கொண்டிருந்தாள் தேவி. இவனும் அவள் அருகில் சென்று நின்று கொண்டான்.

“இந்த இருட்டுல என்ன பார்க்கறீங்க மேடம்?”

“ஒன்னும் இல்ல. சும்மா இருட்டை வெறிக்கறது எனக்கு ஒரு பொழுது போக்குதான். இப்ப தான் நீ இருக்கியே, இனிமே இப்படி நிக்க மாட்டேன்னு நினைக்கிறேன். மலர், இப்பவே இதுக்கு ஒரு முடிவு கட்டுறேன். இனிமே என்னை மேடம்னு கூப்பிடக்கூடாது. ரோஸ்னு கூப்பிடு”

“ரோஸ்சா? ஹ்ம்ம். வேணும்னா ரோஜான்னு கூப்பிடவா?”

“ரோஜா? என் பேருக்கு தமிழ் அர்த்தம் அதுதான். உன் உதட்டு வழி கேட்ட கிக்கா தான் இருக்கு. அப்படியே கூப்பிடு. எங்க இன்னொரு தரம் சொல்லு”

“ரோஜா!”

“இன்னொரு தடவை”

“ரோஜா!”

அவனை நெருங்கி அணைத்தாற் போல் நின்று கொண்டாள் அவள். அவனது கையை எடுத்து தன் இடுப்பில் வைத்துக் கொண்டவள்,

“மலர், என்னிக்கும் நீ என்னை பிரிய கூடாதுன்னு தான் இப்படி ஒரு இக்கட்டுல வைச்சி உன்னை கல்யாணம் செஞ்சுகிட்டேன். அது எனக்கே கில்டியா இருக்கு. கண்டிப்பா என்னை புரிஞ்சுக்க உனக்கு டைம் தேவை படும். அது வரைக்கும் நாம எதையும் போர்ஸ் பண்ணிக்க வேண்டாம். நடக்கறது எல்லாம் நேச்சுரலாவே நடக்கட்டும். ஆனாலும் எனக்கு ஒரு உதவி செய்வியா மலர்?”

அவளது நெருக்கம் அவனுக்குள்ளேயும் ஒரு போதையை ஏற்படுத்தி இருந்தது. அவள் உயிரையே கேட்டாலும் எடுத்துக் கொள் என்கிற மனநிலையில் இருந்தான்.

“சொல்லு ரோஜா. என்ன வேணும்?”

“நமக்கு ஒரு பேபி வர வரைக்கும் என்னை உங்க பேபி மாதிரி பாத்துக்கனும். முடியுமா?” குரல் குழைந்து ஒலித்தது.

“நமக்கு பேபி வந்தாலும், உன்னையும் பேபி மாதிரி பார்த்துக்குவேன்” வாயை விட்டான் அவன். பிறகு தான் லாவண்யா சொன்னது ஞாபகம் வந்தது.

“அண்ணா! அவங்க போட்ட கண்டிஷன்ல அவங்களுக்கே ஆப்பு வர மாதிரி ஒரு கண்டிஷனும் இருக்கு. அதை வச்சே உன்னை அவங்க கிட்ட இருந்து பிரிக்கிறேன். நீ கவலைப் படாம கல்யாணம் பண்ணிக்க. வெள்ளெலி வாலை புடுங்கி, நான் எறியறேன்” வீர மங்கையாய் சபதம் போட்ட தங்கையின் முகம் கண் முன்னே வந்து போனது அவனுக்கு.

 

உயிரை வாங்குவாள்….