Uyir Vangum Rojave–EPI 19

Uyir Vangum Rojave–EPI 19

அத்தியாயம் 19

நல்லா படிச்ச பொண்ணா இருக்கனும், தைரியமான பொண்ணா இருக்கனும் , சுதந்திரமா சிந்திக்க தெரிஞ்ச பொண்ணா இருக்கனும். நான் சொன்னதெல்லாம் இருந்தாலே அவ அழகாத்தான் இருப்பா.

(பிரித்விராஜ் – மொழி)

“மச்சி! எப்படிடா இருக்க? சாப்டியா மச்சி?” வேந்தன் தான் கார்த்திக்கிக்கு போன் செய்து பாசமாக பேசிக் கொண்டிருந்தான்.

‘இப்போ அரை மணி நேரத்துக்கு முன்ன தானே இவன் முன்னுக்கு உட்கார்ந்து மொக்குனேன். அதுக்குள்ள என்ன போன் பண்ணி பாச பிலிம் ஓட்டுறான். எலி ஏன் அம்மணமா ஓடுது?’

“நான் நல்லா தான் இருக்கேன். என்ன விஷயம் சொல்லு”

“அது வந்து மச்சி, ஹ்ம்ம் ஒன்னும் இல்ல விடு”

“டேய், சொல்லுடா. ரொம்பத்தான் தயக்கம்”

“ரோஜா ஒரு வாரமா என் கூட பேசறதில்லைடா.நானும் வலிய போய் பேசுறேன். ரெஸ்போன்சே இல்ல மச்சி.”

‘ஓ கதை அப்படி போகுதா? மேடம் கண்ணு எப்போதும் உன் பின்னாடியே போகுது. ஆனா வாய் மட்டும் பேசறது இல்லையோ? இன்னும் கொஞ்சம் இவன் வாய நோண்டுவோம்.’

“என்னடா சொல்லுற? அப்போ டைவர்ஸ் கன்பர்ம்ன்னு சொல்லு”

“அப்படி எல்லாம் சொல்லாதடா. இன்னும் நான் தான் ஊட்டி விடறேன். என்னை டேடி பேர் மாதிரி பிடிச்சிக்கிட்டு தான் தூங்குறா. ஆனா வாய மட்டும் திறக்க மாட்டிக்கிறா. ஒரு வாரமா நானும் பின்னாடியே போய் சாரி சொல்லுறேன் வாய் பூட்டு மட்டும் திறக்க மாட்டிக்கிதுடா. எனக்கு பைத்தியமே பிடிக்குது. பேசாம கால்ல விழுந்தறவா?”

‘அந்த அளவுக்கு இறங்கிட்டியா? இருந்தாலும் அன்னிக்கு நீ பேசனது கொஞ்சம் ஓவரு தான். அதுக்கு இப்படி எல்லாம் தண்டனை குடுக்கக் கூடாதே. இரு இன்னும் கொஞ்சம் தண்டனைய ஏத்தி விடறேன். நாரதர் வேலைய மூட்டைக் கட்டி வைக்கலாம்னா, நீங்களே ஏன்டா வான்டட்டா வந்து வலையில சிக்கறீங்க?’

“சேச்சே! நீ யாரு மச்சி?”

“ஏன்டா நான் யாருன்னே மறந்து போச்சா?”

“சொல்லி முடிக்க விடுடா. அதுக்குள்ள முந்திரிக்கொட்டை மாதிரி மூக்கை நுழைக்கறது. இதனால தான் நல்லா வாங்கி கட்டற”

“சரிடா. சொல்லு”

“நீ யாரு? ஆம்பிள்ளை சிங்கம். சிங்கம் சீண்டிப் பாக்கனுமே தவிர சிக்கி சின்னாபின்னாமாகக் கூடாது. நீ என்ன செய்யுற ரெண்டு மிட்நைட் ஷோக்கு டிக்கட் வாங்கிக்க. தமிழ் படமா வாங்கு. தமிழ் படம் தான் தியேட்டருல பார்த்ததே இல்லைன்னு மேடம் பேச்சு வாக்குல சொல்லி இருக்காங்க. அவங்க கிட்ட தைரியமா போய் படம் பார்க்க போகலாம் வான்னு கூப்பிடு.”

“அவள் வருவாளா?”

“அது பழைய படம் மச்சி. புது படமா வாங்கு”

“இம்சை புடிச்சவனே. ரோஜா படம் பார்க்க வருவாளா?”

“அது எனக்கு எப்படி தெரியும்? உன் சாமார்த்தியம் அது. சரி, அப்படி வந்தா எப்படி கூட்டிட்டுப் போவ?”

“காருல தான்”

“அப்படியே நானும் வரட்டா காரோட்ட? ஏன்டா, கொஞ்சமாச்சும் மூளை இருக்கா? பொண்டாட்டியா இப்படிதான் சமாதானப் படுத்துவியா? பைக்ல கூட்டிப் போ மச்சி. அப்பத்தான் டச்சிங், டச்சிங் ஆகி ஒரு சமரசம் ஆகும்.”

“என் ஓட்டை பைக்லயா? “

“இப்ப கேளு ஓட்டை பைக்லயான்னு? அப்பவே மேடம் வேற புது பைக் வாங்கி குடுத்தாங்கதானே. என்ன சொன்ன நீ? என்னை வேணும்னா நீ வாங்கி இருக்கலாம், ஆனா என் சுயமரியாதைய வாங்க முடியாதுன்னு, கீய என் மூஞ்சில வீசிட்டுப் போன. இப்ப வந்து குத்துதே குடையுதேன்னா.”

“அது வேற வாய்டா”

“வேணான்டா வேந்தா! உன் பழைய ஜோக்க கேக்குற மூட்ல நான் இல்ல”

“சரி மச்சி, அப்ப காதல் இல்ல. ஓவரா பேசுனேன். இப்ப வந்துருச்சி, அதான் அடக்கி வாசிக்கிறேன். அவள சமாதானப் படுத்த வழி கேட்டா, வலிக்க வலிக்க பேசுற” கடுப்பாகினான் வேந்தன்.

“சரி, எகிறாதே. அந்த பைக் இன்னும் காராஜ்ல தான் இருக்கு. கீ முனிம்மா கிட்ட இருக்கும் வாங்கிக்க. அப்படியே ரொமாண்டிக்கா பைக்ல கூட்டிப்போய் பாரேன். சண்டை எல்லாம் சமாதானமா ஆகிரும். அப்புறம் மச்சி, நைட்டுல நல்லா பைக் ஓட்டுவ தானே? மாலைக் கண்ணு பிரச்சனை எல்லாம் இல்லயே? ஏன் கேக்குறேன்னா, நமக்கு படியளக்கற தெய்வம் அவங்க. எங்கயாச்சும் இடிச்சு தள்ளிற போறே.”

“போடா டேய்! யாருகிட்ட! கண்ணை மூடிக்கிட்டே ‘தள்ளிப் போகாதே எனையும் தள்ளிப் போக சொல்லாதே’ன்னு பாடிகிட்டே ஓட்டுவேன்டா.”

“ஐயோ! அந்த பாட்டுல ரெண்டு பேரும் கீழ விழுந்துருவாங்கடா”

“அப்படியா. அந்த படம் போட்டப்பவும் எங்க வீட்டுல கரண்டு கட் ஆயிருச்சுடா. நான் முழுசா பாக்கல”

‘நீ எந்த படத்தையும் முழுசா பாத்துட்டாலும், பூமி அப் சைட் டவுனா சுத்திரும். போடா!’

“நீ சொன்ன மாதிரி, இன்னைக்கே போய் டிக்கட் வாங்குறேன், மறுபடியும் ரோஜாவின் ராஜா ஆகுறேன். பாய் மச்சி”

‘ஒரு ஐடியா சொன்னமே அதுக்கு நன்றி சொன்னியா நீ? அப்படியே கட் பண்ணிட்டு போற. இருடி! ரோஜாவின் ராஜாவா? ஹஹஹ! மேடம் இன்னைக்கு உனக்கு லாடம் கட்டப் போறாங்க. அவங்களுக்கு கூட்டமே பிடிக்காது. அதுவும் இருட்டுல கொஞ்சம் கண்ணு தெரியாம தடுமாறுவாங்க. அவங்கள படம் பார்க்க அதுவும் மிட்நைட் ஷோக்கா கூப்புடற? டண்டணக்கா தான். அவங்கள பார்த்து நீ எப்படி என் தங்கச்சி வாழ்க்கையில முடிவெடுக்கலாம்னா கேட்ட? மலரு டாலி, இன்னைக்கு நீ காலி.’ விசிலடித்துக் கொண்டே மற்ற வேலைகளை கவனிக்க சென்றான் கார்த்திக்.

இரவில் எப்பொழுதும் போல் குளித்து விட்டு சாப்பிட வந்தாள் தேவி. அவளுக்கு உணவை பிசைந்து ஊட்டிக் கொண்டே,

“ரோஜா! இன்னிக்கு மிட் நைட் ஷோ பார்க்க போகலாமா?” தயங்கி தயங்கி கேட்டான் வேந்தன்.

தேவியின் கண்களில் ஒரு கணம் மின்னல் தோன்றி மறைந்தது. ஆச்சரியமாக அவனைப் பார்த்தாள். திருமணம் முடிந்து இது நாள் வரை இருவரும் தனியாக, ஜாலியாக எங்கேயும் சென்றதில்லை.

அவளது அமைதியைப் பார்த்தவன்,

“நீ வர. நாம போறோம். அவ்வளவுதான்” ஊட்டி முடித்து விட்டு ரெடியாகி வர சென்று விட்டான் அவன். உள்ளுக்குள் ஒரு பயம் தான், அவள் வருவாளோ இல்லை குப்புறப் போர்த்தி படுத்து விடுவாளோ என. வராவிட்டால் டிக்கட்டை கிழித்து வீசி விட்டு தானும் சென்று படுத்து விடலாம் என தான் முடிவெடுத்திருந்தான்.

ஆச்சரியமே ஆச்சரியப் படும் விதமாக கிளம்பி, ஹாலில் அமர்ந்திருந்தாள் தேவி. அவள் சுடிதார் அணிந்து இன்றுதான் பார்க்கிறான். அடர் நீலத்தில், சிறு வெள்ளை ரோஜாக்கள் மேனி எங்கும் பூத்திருந்தது. வெள்ளை நிற துப்பட்டாவை தோளில் போடாமல் கையில் பிடித்துக் கொண்டு நின்றிருந்தாள். கையில் வாலட்டோ கைத்தொலைபேசியோ எதையும் எடுத்துக் கொள்ளவில்லை. அவனை நோக்கி நடந்து வந்தவளைப் பார்த்து வேந்தனின் மனம்,

‘மகுடி ஊதுவான் பாம்பாட்டி

என் சொந்த ஊரு பாப்பம்பட்டி

நடந்து வரா என் பொண்டாட்டி

இனிமே அவதான் என் கண்ணுக்குட்டி’

என கவிதை பாடியது.

அவளையே பார்த்தபடி அசையாது நின்றிருந்தனைப் பார்த்து தொண்டையை செருமினாள் தேவி. தன்னை மீட்டுக் கொண்டவன்,

“போகலாம ரோஜா?”

தலையசைப்பு மட்டுமே கிடைத்தது.

வாசலில் அவளை நிறுத்தியவன், காராஜிக்கு நடந்து சென்று பைக்கை எடுத்து வந்தான். பின் இறங்கி வந்து ஹேல்மெட்டை அவளுக்கு போட்டுவிட்டான். தேவிக்கு ஆச்சரியம் தாளவில்லை.

“இதிலையா போக போறோம்?”

‘அப்பாடா, வாய் பூட்டு திறந்துருச்சு. டேய் கார்த்திக்! உனக்கு மொட்டை அடிச்சு அலகு குத்தறன்டா. என்ன ஒரு பிரில்லியன்ட் ஐடியா குடுத்துருக்க’

“ஆமா ரோஜா. உனக்கு ஆட்சேபணை இல்லையே”

இல்லையென தலை வேகமாக ஆடியது. அவள் முகத்தில் பார்த்த குதூகலத்தில் வேந்தனுமே ஒரு கணம் ஆடிவிட்டான்.

‘இவ பைக்ல போறதுக்கு இப்படி சந்தோஷபடுறாளா? இல்ல என் கூட போகறதுக்கு சந்தோஷப்படுறாளா? என்ன காரணமா இருந்தாலும் சரி, இந்த பூரிப்பு என்னைக்கும் இவ முகத்துல நிலைக்கனும்’

பைக்கில் அவன் ஏறியதும், அவன் பின்னால் அமர்ந்து அவனை இருகக் கட்டிக் கொண்டாள் தேவி.

‘ஓட்டற முன்னுக்கு இப்படி கட்டிக்கிட்டாளே! நல்லதா போச்சு. வீணா ஸ்பீட் பிரேக்கர்ல ஏற வேணாம்’ உற்சாகமாக பைக் கிளம்பியது.

பாதி வழியில் அவன் காதோரமாய்,

“மலர் ! இன்னும் வேகமா போ .” என கிசுகிசுத்தாள் தேவி.

எப்பொழுதும் 80 மேல் ஓட்டாதவன், காதல் மயக்கத்திலும் காதலியின் நெருக்கத்திலும் பைக்கை 120ல் பறக்க விட்டான். உற்சாகமாக கைகளை உயர்த்தி ,

“மலர்! ஐம் சோ ஹெப்பி!!!” என கத்தியவள் மீண்டும் அவனை இருக அணைத்துக் கொண்டாள். நாற்பது நிமிடங்களில் வர வேண்டிய இடம், அவனது வேகத்தில் பதினைந்தே நிமிடத்தில் வந்திருந்தது. தியேட்டரைப் பார்த்தவள்,

“தமிழ் படமா?” ஆச்சரியமாகக் கேட்டாள்.

“ஆமா! வா போகலாம்.”

பார்க் செய்து விட்டு நுழைந்தார்கள். அவ்வளவு நேரம் நன்றாக போய்க் கொண்டிருந்த அவர்கள் டைம், இப்பொழுது மக்கர் செய்ய ஆரம்பித்திருந்தது. முக்கியமாக வேந்தனுக்கு.

அங்கே இருந்த இளைஞர்கள் தேவியை ஆர்வமாக பார்க்க ஆரம்பித்து விட்டனர். அவர்களுக்குள்ளாகவே இவர்களை பார்த்து கமெண்ட் வேறு அடித்துக் கொண்டார்கள்.

“மச்சி, அங்க பாருடா வெள்ளைக்காரி. யப்பா! என்ன ஒரு அழகுடா சாமி.”

“அதே தான் மச்சி. ஆனா அவ பக்கத்துல பாரேன், கரேல்ன்னு ஒரு குரங்கு. ஹ்ம்ம். பணம் இருந்த வெள்ளைக்காரியும் மடங்குவா மச்சி.”

என்னவோ வேந்தன் தான் பணக்காரன். அவன் பணத்துக்காக வந்தவள் தான் தேவி என்பது போல் பேசி வயிறு எரிந்தார்கள் அவர்கள். வேந்தன் முகம் போன போக்கைப் பார்த்து தேவிக்கு சிரிப்பை அடக்க முடியவில்லை. கஸ்டப்பட்டு கட்டுப்படுத்தினாள்.

பக்கத்தில் நடந்து வந்த தேவியின் கையை இருகப் பற்றிக் கொண்டான்.

“பொறுக்கி பசங்களா இருக்கானுங்க. என் பக்கத்திலேயே இரு ரோஜா”

அவர்கள்  நுழையும் போது, பின்னால் வந்த அந்த குறும்பு பட்டாளம், தேவியைப் பார்த்து,

‘செவத்த புள்ள மனசுக்குள்ள

நானும் இருப்பேனா

அடி ஏன்டி புள்ள

உன்னை நினைச்சா உறங்க நினைப்பேனா’

என கோரசாக பாடினார்கள்.

வெறியான வேந்தன்,

“டேய்! என்னங்கடா, லந்தா? அடிச்சி தூக்கிருவேன். யாருகிட்ட? டகிலு பிகிலு வாங்கிரும். நான் பார்க்கத்தான் பனி, பாஞ்சா புலி. இனிமே என் பொண்டாட்டியா சைட் விட்டீங்க அப்புறம் அவ்வளவுதான்” திரும்பி கை நீட்டி மிரட்டினான்.

“ஓ வைப்பா அண்ணா? சாரிண்ணா. நாங்க இப்போ பார்க்க போறோமே அந்தப் படப் பாட்ட தான்ண்ணா படிச்சோம். அண்ணிய பார்த்து இல்ல. நீங்க போங்க அண்ணா. அண்ணிய யாரும் டிஸ்டர்ப் பண்ணாம நாங்க பார்த்துக்குறோம். ஸ்நாக்ஸ் ஏதாச்சும் வேணுமாண்ணா?” வேந்தனின் ஆர்ம்சை பார்த்து மிரண்டவர்கள் ஆயிரெத்தெட்டு அண்ணா போட்டு அவனை சமாதானப் படுத்தினார்கள்.

தேவியும் அவன் கையைப் பிடித்து இழுக்கவும், பேசாமல் முறைப்புடன் உள்ளே சென்றான்.

“மலர், இருட்டுல எனக்கு லேட்டாதான் கண்ணு தெரியும்.” என அவன் கையை இருக பற்றியவள் தோளை அணைத்த நிலையிலேயே இடம் தேடி அமர வைத்தான்.

“மலர்! எனக்கு சில தமிழ் வோர்ட்ஸ் புரியாது.”

“நான் எக்ஸ்பிலேன் பண்ணுறேன்” இது தான் சாக்கேன அவள் அருகிலேயே நெருங்கி அமர்ந்து கொண்டான்.

படம் ஓட ஆரம்பித்ததும், வேந்தன் அவள் காதருகில் கதையை சொல்லிக் கொண்டே வந்தான். பின் படம் பாட்டுக்கு ஓட, இவர்கள் தங்களுக்குள் குசுகுசுவென வேறு ஏதேதோ பேசிக் கொண்டும் சிரித்துக் கொண்டும் அமர்ந்திருந்தனர்.

“மலர், எனக்கு கூட்டம்னா அலர்ஜி தெரியுமா? ரொம்ப நேரம் என்னால இருக்க முடியாது. மூச்சு முட்டும், மயக்கம் வரும். இருட்டான இடங்களும் அப்படிதான். என் கண்ணு இருட்டுக்கு சீக்கிரமா அட்ஜஸ்ட் பண்ணிக்காது. தடுமாறுவேன். அதனாலெயே இதெல்லாம் தவிர்த்திருவேன்”

“என்னது? அப்புறம் எப்படி படம் பார்க்க வர ஒத்துக்கிட்ட?”

“முதன் முதலா நீ கூப்பிடவும் நோ சொல்ல முடியலை. அதோட நீ இருக்கறப்ப எனக்கு என்ன பயம். மயங்கிட்டா என்னை தூக்கிக்க மாட்டியா? ” புன்னகைத்தாள் அவள்.

அவள் புன்னகையில் மயங்கியவன், இன்னும் அவளை நெருங்கி கன்னத்தில் அழுந்த முத்தமிட்டான். அதில் மயங்கியவள், அவன் தோளில் வெட்கத்துடன் தலை சாய்த்துக் கொண்டாள்.

“அண்ணா! மேய்ன் பிக்சர் ஓடுறப்ப, இப்படி நீ தனியா படம் ஓட்டுற பார்த்தியா? இதெல்லாம் நல்லா இல்ல. கன்னி பசங்க சாபம் உன்னை சும்மா விடாது” இவர்கள் சீட்டுக்கு மேலிருந்து குரல் மட்டும் வந்தது.

இப்பொழுது தேவிக்கு சிரிப்பை அடக்கவே முடியவில்லை. அவள் வாய் விட்டு சிரிப்பதை ஆசையுடன் பார்த்திருந்தான் வேந்தன்.

அதே நேரம் அங்கே இந்துவின் வீட்டில்,

“ஏன்டி அனு இந்த அநியாயம் பண்ணுற? அன்னிக்கு என் புருஷன்தான் எனக்கு மட்டும்தான்னு உங்க அண்ணா கிட்ட வாயடிக்க மட்டும் தெரிஞ்சுச்சு இல்ல. இப்ப அந்த புருஷன் கூட தான் இருக்கனும்னு சொன்னா சின்ன புள்ளை மாதிரி என் ரூமுலயே வந்து படுத்துக்குற. தக்காளி”

“ம்மா! நீ இல்லாம என்னால தூங்க முடியாதும்மா” விட்டால் அழுது விடுவாள் போல நின்றிருந்தாள் அவள். லட்டு அவள் ரூமில் படித்துக் கொண்டிருந்தாள். வீரா அப்பொழுதுதான் நாய்களுக்கு உணவு கொடுத்து அவிழ்த்து விட்டுவிட்டு உள்ளே வந்து கொண்டிருந்தான். இரண்டு நாட்களுக்கு முன் தான் அனுவை ஹாஸ்பிட்டலில் இருந்து அழைத்து வந்திருந்தார்கள்.

வீரா அவளுக்கு சத்தான பழங்கள், உணவு , மாத்திரை என தடபுடல் படுத்திவிட்டான். இவனே வலிய போய் பேசினாலும் அவளிடம் ஆம் இல்லை என இரு பதில் தான் வரும். அதற்கே அகமகிழ்ந்து போய்விடுவான் அவன்.

உள்ளே வந்தவனுக்கு கலங்கிய மனைவியின் முகம்தான் முதலில் கண்ணுக்கு தெரிந்தது.

“என்ன அத்தை பிரச்சனை?” இந்துவின் வற்புறுத்தலால் அம்மாவை விடுத்து அத்தை என கூப்பிட பழகி இருந்தான்.

“அது வந்து தக்காளி மாப்பிள்ளை…” தயங்கினார் அவர்.

‘முருகா! இவங்களும் இவங்க தக்காளியும். யாராச்சும் தக்காளிய இவங்க கிட்ட இருந்து பிடுங்குங்கப்பா’ வீராவின் மைன்ட் வொய்ஸ் தான் அது.

நேற்றிலிருந்து நடக்கும் போராட்டாம் தானே. சிரிப்பு வந்தது அவனுக்கு.

“விடுங்க அத்தை. உங்க கூடவே படுக்கட்டும். எதுக்கும் அனும்மாவை பேஜார் பண்ணாதீங்க” அன்பாக சொன்னான்.

‘ரெண்டும் ரெண்டாப்பை, ரெண்டும் கழண்டாப்பை. கரெக்டா தான் கடவுள் கோத்து விட்டுருக்காரு. இதுங்க ரெண்டு குடும்பம் நடத்தி, பேரப்பிள்ளைங்கள என் கண்ணுல காட்டுன மாதிரிதான்’ புலம்பியவாறே படுக்க சென்றார் அவர்.

கார்த்திக்கின் உதவியால் ரெஜிஸ்டர் மேரேஜ் சீக்கிரமாகவே நடந்திருந்தது. ரிசப்ஷன் அடுத்த வாரத்துக்கு நாள் குறிக்கப்பட்டிருந்தது. இந்து, வேந்தனுக்கும் தேவிக்கும் சேர்த்தே ரிசப்ஷன் வைக்கலாம் என்றார். கணவன் மனைவி இருவருமே வேண்டாம் என்றுவிட்டனர்.

கதவு அருகிலே நின்றுக் கொண்டிருந்த அனுவைப் பார்த்து வீரா,

“போ அனும்மா. அம்மா கூட போய் படு. இதுக்கெல்லாமா அழுவாங்க? கண்ணை துடை. நிம்மதியா தூங்கு போ. என்னைக்கு என் கிட்ட வரனும்னு தோணுதோ அன்னிக்கு வா, அது வரைக்கும் ரூம் கதவு பூட்டாமலேயே உனக்காக திறந்திருக்கும்” என்றான்.

விடிகாலை மூன்று மணிவாக்கில், ரூம் கதவு மெல்ல திறந்து மூடியது. ஐம்புலன்களும் அலர்ட் ஆகியது வீராவுக்கு. அவன் செய்யும் வேலையில் எப்பொழுதும் எச்சரிக்கை உணர்வுடனே இருக்க வேண்டும். தூக்கத்திலும் கூட. மெல்லிய காலடி சத்தத்தில், வருவது அனுதான் என புரிந்துக் கொண்டான். சந்தோஷ சாரல் உள்ளுக்குள்ளே வாரி அடித்தது. என்னதான் செய்கிறாள் என பார்ப்போம் என கண்களை மூடி தூங்குவதைப் போல் பாசாங்கு செய்தான். மெல்லிய இருட்டில், அவன் அருகில் வந்து நின்று அவன் தூங்குவதையே சிறிது நேரம் பார்த்தாள் அனு. பின் மெல்ல கை நீட்டி, வேந்தன் அடித்து காயமாக்கி இருந்த உதட்டை மென்மையாக தடவிக் கொடுத்தாள். பின் சட்டென கையை உருவிக் கொண்டாள்.

அந்த பக்கமாக வந்து கட்டிலில் ஏறியவள் அவன் அருகில் வந்து சப்பளமிட்டு அமர்ந்து கொண்டாள். அவனையே பார்த்தவாறு பத்து நிமிடங்கள் அமர்ந்திருந்தாள்.

“வீரா ! எனக்கு உங்களை ரொம்ப பிடிச்சிருக்கு. எனக்காக அந்த கடையில சண்டை போட்டது, கார்ல ஏத்திக்கிட்டு போறப்ப எனக்கு தெரியாதுன்னு நெனைச்சிக்கிட்டு என்னை சைட் அடிச்சது, செடிக்கு தண்ணி ஊத்தறப்ப அங்க இங்க நின்னு பார்த்தது, நான் மயங்கனப்ப அப்படியே ரெண்டு கையால என்னை அலேக்கா தூக்கி கிட்டு ஓடுனது எல்லாமே எனக்கு பிடிச்சது. ஆனாலும் என் மனச திறந்து காட்ட எனக்கு பயம். ஊரே என்னைப் பத்தி தப்பா பேசுது. அப்படி இருக்கறப்ப நான் எப்படி உங்களைப் பிடிச்சிருக்குன்னு சொல்லுவேன். நீங்களும் என்னை தப்பா நினைக்க மாட்டீங்களா? அந்த பயம்தான் எனக்கு. நான் தப்பானவ இல்ல வீரா. அந்த மதன் கட்டிப்பிடிச்சப்ப என்னால அழத்தான் முடிஞ்சதே தவிர எதிர்த்து நின்னு அறைய முடியல. நான் ஏன் இவ்வளவு பலவீனமா இருக்கேன்? உடல் பலம் தான் இல்ல, மனபலமாச்சும் வேணாமா? அதுக்கூட என் கிட்ட இல்லையே. இப்படி வீரமா இருக்கற உங்களுக்கு இந்த சோதா பொண்டாட்டி சரியா இருப்பேனா? எனக்கு ரொம்ப பயமா இருக்கு வீரா. இருந்தாலும் உங்கள விட முடியலை. எனக்கு நீங்க தான் வேணும். போக போக என்னோட இந்த பயந்தாங்கொள்ளி குணத்தைப் பார்த்து வெறுத்துருவீங்களா? இப்ப கூட நீங்க தூங்கறப்ப தான் பேசுறேன் பார்த்தீங்களா? உங்க பொண்டாட்டி தைரியம் அவ்வளவுதான். “ மெதுவாக பேசியவள், கசந்த முறுவல் ஒன்றை வெளியிட்டாள்.

பின் சரிந்துப் படுத்தவள், அவனின் வலது கரத்தை மெல்ல நகர்த்தி தன் கன்னத்தை அதன் மேல் வைத்துப் படுத்துக் கொண்டாள். அவள் இழுத்த இழுப்புக்கு தன் கையை விட்டான் வீரா. அவளது உள்ளத்து குமுறல் அவனை புரட்டிப் போட்டிருந்தது.

படுத்தவாறே மிக மெல்லிய குரலில் அனு பாட ஆரம்பித்தாள் அனு.

‘என் நெஞ்சில் ஒரு பூ பூத்ததன்
பேர் என்னவென கேட்டேன்
என் கண்ணில் ஒரு தீ வந்ததன்
பேர் என்னவென கேட்டேன்
என்ன அது இமைகள் கேட்டது
என்ன அது இதயம் கேட்டது
காதலென உயிரும் சொன்னதன்பே’

உயிக்காதலை சுமந்து உருக்கமாக அவள் பாடிய பாடலும், தன் கைகளில் உணர்ந்த கண்ணீர் துளியும் வீராவை பாடாய் படுத்தியது. இப்பொழுது எழுந்தால், பயந்து விடுவாள் என முயன்று அப்படியே படுத்திருந்தான். ஒரு பத்து நிமிடம் அப்படி இருந்தவள், மீண்டும் எழுந்து சென்றுவிட்டாள். அவள் சென்றவுடன் எழுந்து அமர்ந்தவன், அவள் கண்ணீர் கரை படிந்த தன் கைக்கு அழுத்தமாக முத்தமிட்டான்.

 

உயிரை வாங்குவாள்…

 

(இங்க என் இடத்துல இன்னும் நெட் கிடைக்கல. வெள்ளத்துனால இன்னும் நெட்வொர்க் சரியாகல. ஹாட்ஸ்போட் யூஸ் பண்ணி எபி போடறேன். மூனு எபியும் இன்னிக்கே தந்துடறேன். அடுத்த வாரம் எல்லாம் ஓகேயானா எப்போவும் போல சந்திக்கலாம். டேக் கேர் டியர்ஸ். இன்னொரு புயலும் வெள்ளமும் வரும்னு சொல்றாங்க! எங்களுக்காக வேண்டிக்கோங்க டியர்ஸ்.)

Leave a Reply

error: Content is protected !!